துன்பம் இல்லாத ஒரு புதிய உலகம்
“முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.”—ஏசாயா 65:17, 18.
அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளால் முன்னறிவிக்கப்பட்டன. எதிர்காலத்தில் வாழ்க்கை இந்தப் பூமியில் எப்படி இருக்கும் என்பதை அவை ஓரளவு விவரிக்கின்றன. எப்பொழுது? கடவுள் தற்போதைய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவந்த பின். சீக்கிரத்தில் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையை நீக்கி எந்த ஒரு துன்பமும் இல்லாத புதிய உலகத்தால் மாற்றியமைப்பது கடவுளுடைய நோக்கம் என்பதை அநேக பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன.
கடந்தகால சரித்திரமுழுவதிலும் மனித வாழ்க்கையை ஒப்பிடும்போது புதிய உலகில் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்! அது போர், குற்றச்செயல், வறுமை, அநீதி ஆகியவற்றிலிருந்து முற்றிலும் நீங்கியதாயிருக்கும் என்று கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. நோயும் மரணமும் என்றுமாக நீங்கிவிட்டிருக்கும். இந்தளவுக்கு போதாததாய் நிரூபித்திருக்கும் அரசாங்கங்கள், மதங்கள், அல்லது பொருளாதார முறைகள் இனிமேலும் இராது. துயரத்தின் கண்ணீருக்குப் பதிலாக ஆனந்தக் கண்ணீர் இருக்கும், ஏனென்றால் துன்மார்க்கமும் துன்பமும் என்றுமாய்க் கடந்துவிட்டிருக்கும்.
பைபிள் தீர்க்கதரிசனங்களில் முன் நிழலாய்க் காண்பிக்கப்பட்டிக்கிறது
அப்படிப்பட்ட நிலைமைகள் பைபிள் தீர்க்கதரிசனங்களின் இந்த ஒருசில வசனங்களில் எவ்விதம் முன் நிழலாய்க் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்:
இனிமேலும் போர் இல்லை: “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9) “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
எல்லாருக்கும் நீதி: “நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்.”—ஏசாயா 28:17.
பயத்திலிருந்து விடுதலை: “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” (மீகா 4:4) “அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.”—எசேக்கியேல் 34:27.
பசி பட்டினி நீக்கப்பட்டிருக்கும்: “பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு ஏராளமாயிருக்கும்.” (சங்கீதம் 72:16, NW) “வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்.”—எசேக்கியேல் 34:27.
இனிமேல் முதுமையும் நோயும் இல்லை: “அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.” (யோபு 33:25) “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
மரணமும், துக்கமும், வேதனையும் என்றும் இராது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
கடந்த காலத்தால் பாதிக்கப்படாது
கடவுளுடைய வரவிருக்கும் புதிய உலகம் பூமியின் குடிகள் வாழ்க்கையை மகிழ்ந்து களிப்பதில் இன்பமற்ற முன்னாள் நினைவுகளாலுங்கூட தடைப்படாதளவுக்கு திருப்தியளிப்பதாயிருக்கும். அந்தப் புதிய சகாப்தத்தில் அனுதின வாழ்வாக இருக்கப்போகும் ஊக்கமூட்டும் எண்ணங்களும் செயல்களும் கடந்த கால கெட்ட நினைவுகளை படிப்படியாக துடைத்தழித்திடும். கடவுளுடைய வாக்குறுதி என்னவென்றால்: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” கடவுள் நித்திய காலத்திற்கு அறிமுகப்படுத்தும் காரியங்களில் மக்கள் “என்றென்றைக்கும் மகிழு”வார்கள். “பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.”—ஏசாயா 65:17, 18; 14:7.
இன்று, பைபிள் சொல்வதுபோல், “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.” ஆனால் புதிய உலகில் நிலைமை மாற்றப்படும். அந்தச் சமயத்தில், “விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல இருக்கும்.” (நீதிமொழிகள் 13:12) இருதயங்கள் துன்பத்தாலும் நிறைவேறாத நம்பிக்கைகளாலும் இனிமேலும் பாரமடையா. மாறாக, கடவுள் மனித குடும்பத்துக்கு அளிக்கப்போகும் ஏராளமான மகத்தான காரியங்களால் அவை திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்படும்.
வித்தியாசமான ஆட்சி
கடவுளைச் சார்ந்திராத திருப்தியற்ற மானிட ஆட்சியைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, புதிய உலகம் முற்றிலும் வித்தியாசமான ஓர் ஆட்சியைக் கொண்டிருக்கும். மனிதரிடமிருந்து ஆளும் அதிகாரம் எடுத்துவிடப்படும். அவர்கள் கடவுளைச் சார்ந்திராமல் ஆளுவதற்கு ஒருபோது அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பைபிள் தீர்க்கதரிசனம் பின்வருமாறு கூறுகிறது: “அந்த ராஜாக்களின் [இப்பொழுது அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் [மானிட அரசர் இனிமேலும் இல்லாததால்] வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது [இப்பொழுது இருக்கும்] அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
இயேசு பூமியின் புதிய ஆட்சிக்காக ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.
அதுதான் மனிதவர்க்கத்தின் புதிய அரசாங்கமாக இருக்கும்—கிறிஸ்துவின் கரங்களில் தம்முடைய ராஜ்யத்தின் மூலமான கடவுளுடைய பரலோக ஆட்சி. பூமியில், கடவுளுடைய உண்மையுள்ள மானிட ஊழியர்கள் கடவுளுடைய வழிநடத்துதலின்படி காரியங்களை நிர்வகிப்பர். (ஏசாயா 32:1) இந்தப் புதிய ஏற்பாட்டை அப்போஸ்தலனாகிய பேதுரு, “அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்” என்று பேசினான். (2 பேதுரு 3:13) அந்த ராஜ்ய ஆட்சிதானே பைபிளின் மைய போதனை.
‘சிருஷ்டி விடுதலையாக்கப்படுகிறது’
இந்தப் புதிய ஆட்சி பூமியின் இயற்கை ஆற்றல்களையும் முழு கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரும். பூமியதிர்ச்சி, சூறாவளிகள், வெள்ளம் அல்லது வறட்சி போன்ற ‘இயற்கையின் செயல்கள்’ இனிமேலும் துயரத்தை ஏற்படுத்தாது. இந்தச் சக்திகள் மீது அதிகாரம் செலுத்துவதில் இயேசுதாமே தம்முடைய வல்லமையை வெளிக்காட்டினார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவும் அவருடைய சீஷர்களும் இருந்த படகு ஒரு புயலில் கவிழ்ந்திடும் நிலையில் இருந்தபோது, அவர் காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தினார். ஆச்சரியமடைந்த அந்தச் சீஷர்கள், “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே,” என்றார்கள்.—மத்தேயு 8:23–27.
எனவே பூமியும், அதன் மானிட சிருஷ்டிப்பும் இணையில்லா சுதந்திரத்தைக் காணும். “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும். . . . ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது.”—ரோமர் 8:20, 22.
மனித ஆட்சி சீக்கிரத்தில் முடிவடையும் என்றும் கடவுளுடைய புதிய அரசாங்கம் பூமியின் எல்லா விவகாரங்களையும் வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக்கொள்ளும் என்றும் நாம் நிச்சயமாயிருக்கலாமா? நாம் நிச்சயமாயிருக்கலாம், ஏனென்றால் சர்வலோகப் பேரரசர் தம்முடைய வாக்கைக் கொடுத்திருக்கிறார்: “என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் . . . அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.”—ஏசாயா 46:10, 11.
“குறிக்கப்பட்ட காலம்”
அது எவ்விதம் நிறைவேறும்? அது எப்பொழுது நடைபெறும்? கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குறிக்கப்பட்ட காலம் உண்டு.” (பிரசங்கி 3:1) போதும்! என்று கடவுள் சொல்லுவதற்கும் துன்மார்க்கத்துக்கும் துன்பத்துக்கும் முடிவைக் கொண்டுவருதற்குமான ஒரு குறிக்கப்பட்ட காலத்தை இது உட்படுத்துகிறது. தானியேல் “குறிக்கப்பட்ட முடிவு காலத்தைக்” குறிப்பிட்டு பேசினான். (தானியேல் 8:19) இயேசுவுங்கூட ‘குறிக்கப்பட்டக் காலத்தைப்’ பற்றி பேசினார்.—மாற்கு 13:32, 33.
ஆம், கடவுள் மனித விவகாரங்களில் தலையிடுவதற்கும் கடவுளைச் சார்ந்திராத மனித ஆட்சியில் துயர்தரும் அனுபவத்தை நீக்கிப்போடுவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தை வைத்திருக்கிறார். “சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (பிரசங்கி 3:17) துன்பத்தை அனுமதித்திருப்பதற்குக் கடவுள் குறித்திருக்கும் காலம் விரைவில் முடிவடையப் போகிறது என்பதற்கு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் அத்தாட்சியளிக்கிறது. அந்தக் குறிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மானிட குடும்பத்துக்கு மிகுந்த துன்பத்தைக் கொண்டுவந்திருக்கும் திருப்தியளிக்காத மானிட ஆட்சியின் ஒழுங்குமுறயை இல்லாதபடிக்கு அழித்திடுவார்.—மத்தேயு 24:3–14; 2 தீமோத்தேயு 3:1–5, 13; வெளிப்படுத்துதல் 19:11–21.
கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, அவருடைய ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தாதவர்களுக்கு மாறாக கீழ்ப்படிகிறவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் கவனியுங்கள்: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” “துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” “செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்.”—சங்கீதம் 37:10, 11, 28, 29, 37, 38; நீதிமொழிகள் 2:21, 22; மத்தேயு 5:5-ஐயும் பார்க்கவும்.
ஆனால் ஏற்கெனவே மரித்துவிட்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களைப் பற்றியதென்ன? அவர்கள் ஒரு புதிய உலகத்திலிருந்து எவ்விதம் நன்மையடைவார்கள்? ஓர் உயிர்த்தெழுதல் மூலம், இதே பூமியில் மீண்டும் உயிர் பெறுவதன் மூலம். அவர்கள் பிரேதக்குழிகளிலிருந்து திரும்ப வந்து, என்றென்றும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” (அப்போஸ்தலர் 24:15) லாசரு மற்றும் நாயீன் ஊரைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன் போன்ற மரித்தவர்களை உயிர்த்தெழுப்பினதன் மூலம் இயேசு இதை நடப்பித்துக் காண்பித்தார்.—யோவான் 11:38–44; லூக்கா 7:11–16.
“ஈடு செய்தல்”
துன்பத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து ஒரு நீதியான புதிய உலகத்தை நிலைநாட்டுவது கடவுளுடைய நோக்கம் என்பதை அறிய வருவது இருதயத்துக்கு என்னே மகிழ்ச்சியூட்டும் ஒன்றாயிருக்கிறது! துன்மார்க்கமும் துன்பமும் என்றுமாய்க் கடந்த கால காரியங்களாகிவிட்டிருக்க, பரதீஸான சூழலில் பரிபூரண ஆரோக்கியத்திலும் மகிழ்ச்சியிலும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு—ஆம், என்றென்றுமாக—உயிர்வாழ்வதைக் குறித்து எண்ணிப்பாருங்கள்!
கடவுள் மனிதவர்க்கத்துக்கு “ஈடு செய்யும்” இந்தக் காரியம்—நித்தியத்திற்கு—கடவுள் துன்பத்தை அனுமதித்திருக்கும் ஒரு சில ஆயிர ஆண்டுகளைக் காட்டிலும் மதிப்பில் உயர்ந்தது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? இது தனிப்பட்டவர்களாக நம்முடைய வாழ்நாள் காலத்தில், 70, 80 அல்லது அதைவிட குறைந்த ஆண்டுகளாக நாம் சகித்துவந்திருக்கும் துன்பங்களைப் பார்க்கிலும் மதிப்பில் ஒப்பற்றவிதத்தில் உயர்ந்ததல்லவா?
ஒரு நெடுங்கால நோக்கு
காரியங்களைப்பற்றிய தம்முடைய நெடுங்கால நோக்கில், சர்வலோகப் பேரரசராகத் தம்முடைய ஆட்சி உரிமையையும் தம்முடைய ஆட்சியின் சரியான தன்மையையும் சார்ந்த விவாதத்தை முதலில் தீர்ப்பது அவசியம் என்பதை சிருஷ்டிகர் அறிந்திருக்கிறார். தெரிவு செய்யும் சுயாதீனத்தைச் தகுந்த விதத்திலும் தகாத விதத்திலும் பயன்படுத்தும் காரியத்தைத் தீர்ப்பதும் அவசியமாயிருந்தது. தம்முடைய சிருஷ்டிப்பு பரிபூரணமானது என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டியதாயிருந்தது, அதாவது தம்முடைய நீதியுள்ள சட்டங்களுக்கு உண்மையுள்ளவர்களாய்க் கீழ்ப்படிகிறவர்கள் துன்புறுத்தலிலும் உலக ஆட்சியாளர்களின் சோதனைகளிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும், அவருடைய சொந்த குமாரனாகிய இயேசு பூமியில் இருந்த போது இதற்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்.
அனைத்து விவாதங்களையும் தீர்த்துவைத்த பின்பு, சமாதானமாயிருக்கும் சர்வலோகத்தைக் கெடுத்திடுவதற்குக் கடவுள் துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் மீண்டும் அனுமதிக்க மாட்டார். “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.”—நாகூம் 1:9.
கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்ததைக், கடவுள், ஓர் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு மாதிரி வழக்கு போன்று நித்திய எதிர்காலம் முழுவதும் பயன்படுத்தக்கூடும். கடவுளுடைய சர்வலோக அரசுரிமைக் குறித்தோ அல்லது சுயாதீனத்தைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தோ விவாதம் மறுபடியும் எப்பொழுதாவது எழும்புமானால், மாதிரியாக அமையும் அந்தத் தீர்ப்பு செயல் எதிர்காலத்தில் எந்த ஒரு சமயத்திற்கும், சர்வலோகத்தில் எந்த ஓர் இடத்திற்கும் பொருத்தப்படக்கூடும்.
நீங்கள் எதைத் தெரிந்துகொள்வீர்கள்?
இன்று நமக்கு முன்பு ஒரு தெரிவு இருக்கிறது. நம்முடைய சுயாதீனத்தை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுத்தலாம்: கடவுளுடைய நோக்கங்களை அசட்டை செய்து, அபூரண மானிட ஆட்சியில் திருப்தி காண்பவர்களாய் அதற்கு வரும் முடிவில் பங்குகொள்கிறவர்களாக இருக்கலாம், அல்லது கடவுளுடைய நோக்கங்கள் என்ன, அவருடைய ராஜ்யத்தின் பற்றுமாறாத குடிமக்களாக அவரைப் பிரியப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன என்பவற்றைக் கற்றுக்கொள்வதற்கு நம்முடைய தெரிவு செய்யும் சுயாதீனத்தை நாம் பயன்படுத்தலாம்.
இயேசு தம்முடைய ஜெபத்தில் கடவுளிடம் சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) எனவே புதிய உலகில் நமக்கு ஜீவன் வேண்டுமென்றால், கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் தகுதிகளைப் பற்றியும் கற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும். பைபிள் அதை எவ்விதம் சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்: “நீங்கள் கர்த்தரோடிருந்தால் [யெகோவாவோடிருந்தால், NW], அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டுவிடுவீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.”—2 நாளாகமம் 15:2.
இந்தப் பழைய உலகிற்குக் காலம் கடந்தோடுகிறது; புதிய ஒன்று வரவிருக்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) நீங்கள் எதைத் தெரிந்துகொள்வீர்கள்—கடந்துபோகும் பழைய உலகத்தையா அல்லது வந்துகொண்டிருக்கும் புதிய உலகத்தையா?
கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் . . . ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் [யெகோவாவில், NW] அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.”—உபாகமம் 30:19, 20.
தங்களுடைய சித்தத்தை கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக அமைத்துக்கொள்கிறவர்களுக்கு கடவுள் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ விரும்புகிறீர்களா? இதைப் பற்றி நீங்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ள இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போர் அல்லது உலகில் எந்த இடத்திலும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் எந்தக் கட்டணமுமின்றி உங்களுக்கு உதவியளிக்க மகிழ்ச்சியாயிருப்பார்கள். (g90 10/8)
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
மரித்தோர் பிரேதக்குழியிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் கடவுளுடைய புதிய உலகில் வாழும் வாய்ப்பை உடையவர்களாயிருப்பார்கள்