மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 4: பொ.ச.மு. 1513–607 மற்ற அனைத்திலிருந்தும் மாறுபட்டதாய்ப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு தேசம்
இடியோடும் மின்னலோடும்கூட, அது உகந்ததோர் பிறப்பாக இருந்தது. காலம் பொ.ச.மு. 1513-ஆகவும், இடம் இன்று எகிப்தாக இருக்கும் அந்நாளைய அரேபியாவிலுள்ள சீனாய் மலையாகவும் இருந்தது. ஒரு மனிதனின் பிறப்பாக இருப்பதற்குப் பதிலாக அது ஒரு தேசத்தின் பிறப்பாக இருந்தது!
ஓராண்டுக்கும் சற்று குறைவாக இதற்கு முன்னர் அவர்கள் உலக வல்லரசு எகிப்துக்கு அடிமைப்பட்டிருந்த ஒருவேளை முப்பது இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட கோத்திரத் தலைவனின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு சமுதாயமாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் சுதந்திரமான ஜனமாக—ஏதோ ஒருவகையான தேசமாக அல்ல, அவர்களுடைய கடவுள் தீர்மானித்திருந்தபடியே ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு தேசமாக இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன்னொருபோதும் அல்லது இனியொருபோதுமுள்ள எந்தத் தேசத்திலிருந்தும் மாறுபட்டவர்களாய்த் தனியே பிரித்து வைக்கப்பட்ட ஒரு தேசமாக இருப்பார்கள்.
‘சர்ச்சும் அரசும்’—ஆனால் ஒரு வித்தியாசத்தோடு
மதத்தை அரசாங்கத்தோடு கலந்து இணைக்க நிம்ரோது செய்த முயற்சி கேட்டில் விளைவடைந்திருந்தது. இப்பொழுது சீனாய் மலையில் சம்பவித்துக்கொண்டிருக்கும் காரியம், ஒரு சில அம்சங்களில் இதுபோன்ற ஓர் இணைப்பாக இருந்தது. இது அதைவிட மேன்மையாக இருக்குமா?
ஒரு தேசத்துக்குச் சட்டங்கள் அவசியம். ஆகவே இஸ்ரவேலர், பத்துக் கற்பனைகள் என்று பொதுவாக அறியப்பட்டிருக்கும் பத்து அடிப்படை சட்டங்களும், கூடுதலாக 600 விதிமுறைகளும் கொடுக்கப்பட்டனர். (யாத்திராகமம் 20:1–17) அது மெய் மதத்துக்கு எப்பொழுதும் பொருந்துவதாயிருந்தது நம்முடைய 20-ம் நூற்றாண்டிலும் அவ்விதமாக இருப்பதுமான அடிப்படைச் சத்தியங்களை ஆதாரமாகக் கொண்ட சட்டத்தொகுப்பாக இருந்தது.
இந்தச் சட்டங்கள் ஏற்கெனவே இருந்துவந்த ஹமுராபி சட்டத் தொகுப்பின் அடிப்படையில் அமைந்திருந்தனவா? சில ஆட்கள் அவ்விதமாக நினைக்கக்கூடும். ஏனென்றால் பாபிலோனிய அரச பரம்பரையின் முதல் அரசனாகிய ஹமுராபி, இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆவதற்கு முன்பாக, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருந்தான். 1902-ல் அவனுடைய சட்டத் தொகுப்பு, பாபிலோனிலுள்ள மார்துக் ஆலயத்தில் முதலில் இருந்த நடுக்கல்லில் பார்த்து எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனினும் பழைய ஏற்பாட்டுக் காலங்களிலிருந்த பத்திரங்கள் என்ற புத்தகம் பின்வருமாறு முடிக்கிறது: “அநேக ஒற்றுமைகள் இருந்தபோதிலும் பாபிலோனிலிருந்து எபிரெயர் நேரடியாக இரவல் வாங்கியதாக ஊகிப்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. இரண்டு சட்டத் தொகுப்புகளும் எழுத்தில் சிறிதே வித்தியாசப்படும் இடங்களிலும்கூட, ஆவியில் அவை வெகுவாக வித்தியாசமாக இருக்கின்றன.”
தேசம் வித்தியாசமாக இருப்பதில் இது ஒரு வழியாக மாத்திரமே இருந்தது. மேலுமாக, ஆரம்பத்தில் அது எந்த மனித அரசனையும் கொண்டிருக்கக்கூடததாக இருந்தது. அது பரலோகங்களிலுள்ள காணக்கூடாத அரசரால் வழிநடத்தப்பட, இவ்விதமாக உண்மையில் வித்தியாசமான ஒன்றாக இதை ஆக்கியது, மற்ற எல்லாத் தேசங்களையும் போலிருக்கவில்லை. சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின்னர்தானே மனித அரசர்களின் ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போதும்கூட தேசம் ஈடிணையற்றதாகவே இருந்தது. அதன் அரசன், உதாரணமாக எகிப்திலிருந்த பார்வோன்களைப் போல கடவுளாக அல்லது கடவுளின் சந்ததியானாக, உரிமைப் பாராட்டவில்லை. இஸ்ரவேலின் அரசர்கள் வெறுமென பிரதிநிதித்துவ முறையில் “யெகோவாவுடைய சிங்காசனத்தில்” வீற்றிருந்தார்கள்.—1 நாளாகமம் 29:23.
சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் செயலாட்சி துறையை உட்படுத்திய இஸ்ரவேலின் அரசாங்க வேலைகள் இன்றுள்ள அரசாங்கங்கள் சிலவற்றை நமக்கு நினைப்பூட்டக்கூடும். ஆனால் மறுபடியுமாக, அங்கு மிகப் பெரிய வித்தியாசமிருந்தது. ஏசாயா 33:22 விளக்குகிறது: “யெகோவா நம்முடைய நியாயாதிபதி [நீதித்துறை] யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர் [சட்டமியற்றும் வல்லமை] யெகோவா நம்முடைய ராஜா [செயலாட்சி அதிகாரி].” அரசாங்கத்தின் எல்லா மூன்று கடமைகளும் இஸ்ரவேலின் கடவுளில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தேசத்தின் அரசனோ, அதன் நியாயாதிபதிகளோ அதன் ஆசாரியர்களோ தன் விருப்பப்படி ஆளுகிறவர்களாக இருக்க முடியாது. அனைவருமே அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த கடவுளின் சட்டங்களாலும் கட்டளைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருந்தனர். இன்றைய அரசியலிலும் மதத்திலுமுள்ள ஆட்களின் சர்வாதிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாயிருந்தது.
இதன் காரணமாக நிம்ரோதுவினுடைய நாளில் சர்ச்சும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டது, மனித அரசாங்கத்தோடு பொய் மதத்தின் கலப்பாக இருக்கையில், சீனாய் மலையில் சம்பவித்தது தெய்வீக அரசாங்கத்தோடு மெய் மதத்தின் கலப்பாக இருந்தது. இது மேம்பட்ட பலன்களை உறுதி செய்தது.
கலப்புவிசுவாச இயக்கங்கள் பொருத்தமற்றவையாக விலக்கப்படுகின்றன
விசுவாசக்குறைவு, இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்துதிரிவதில் விளைவடைந்தது. இப்பொழுது பொ.ச.மு. 1473-ல் கடைசியாக அவர்களுடைய கடவுள் அவர்களுக்கு வாக்களித்திருந்த கானானிற்குள் பிரவேசிக்க இருந்த சமயத்தில், அவர்கள் அவருடைய சேவைக்காக தனியே பிரித்து வைக்கப்பட்ட ஒரு தேசமாக அவருடைய மகிமையை பிரதிபலிக்க வேண்டிய அவர்களுடைய கடமை அவர்களுக்கு நினைப்பூட்டப்பட்டது. கானானியர்களோடு நெருங்கி அளவளாவுதல் இருக்கக்கூடாது. “யெகோவாவுடையவர்களல்லாத அவர்களுடைய அயலாரிடம் பகைமையையும், யெகோவாவுக்கு அருந்தனிப் பண்பை வற்புறுத்தியதையும்” பற்றி குறிப்புரை ஏடுகள் கூறுவதற்கு காரணம் இதுவே.
‘ஆனால் ஒரு நிமிடம் நில்லுங்கள்’ என்று எவராவது எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும், ‘ஏன் இந்தச் சகிப்புத்தன்மை இல்லாமை? கானானியர்கள் முற்றிலும் கபடமற்றவர்களாகவே இருக்கக்கூடும். தவிர, அனைத்து மதங்களும், ஒரே கடவுளையே அணுகுவதற்குரிய வித்தியாசமான பாதைகளாக மாத்திரமே இருக்கிறதல்லவா?’ ஒப்புக் கொள்வதற்கு முன்பாக, ஜலப்பிரளயத்துக்கு முன்னால் வன்முறை நிறைந்த பூமியிலும் கோபுரம் கட்டப்பட்ட சமயமாகிய நிம்ரோதுவின் நாட்களிலும், எகிப்திலிருந்த பலதெய்வ வணக்கமுறை சூழ்நிலையிலும், ஒரு சில ஆட்கள் அனுபவித்த எதிர்மறையான பாதிப்புகளை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களில் சிலரும்கூட ஒருவேளை கபடமற்றவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் தங்களுடைய சிருஷ்டிகரால் தெளிவாகவே ஏற்றுக் கொள்ளப்படாத மதங்களை அப்பியாசிப்பதால் வரும் பின்விளைவுகளை அறுவடைச் செய்வதிலிருந்து இது அவர்களைப் பாதுகாக்கவில்லை. கானானியர்களின் மதம் இந்த மற்ற மதங்கள் இருந்தது போல அத்தனை மோசமானதாக இருந்ததா? பக்கம் 14-ல் “கானானில் மதம்—மெய்யா அல்லது பொய்யா?” என்ற பெட்டியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளைச் சிந்தித்துப் பின்னர் நீங்களே முடிவு செய்யுங்கள்.
இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடத்தல்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தப் பிறகு, மோசயின் வாரிசான யோசுவா, பொய் மதத்தை எதிர்ப்பதில் முன்நின்று வழிநடத்தினான். ஆனால் அவனுடைய மரணத்துக்குப் பின்பு இஸ்ரவேலர் முன்சென்று தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்வதை அசட்டை செய்துவிட்டார்கள். அவர்கள் சமயசமரச கொள்கையோடு அவர்களோடு கூட்டுவாழ்வு நடத்த தலைப்பட்டனர். இது அவர்களுக்கு அனுகூலமாயில்லை. கானானியர் அவர்களுக்குப் பக்கத்தில் முள்ளாக இருந்து தொடர்ந்து அவர்களுக்குத் தொல்லைக் கொடுத்து அடிக்கடி அவர்கள் மெய் வணக்கத்திலிருந்து விலகிச் செல்லக் காரணமாயிருந்தார்கள்.—எண்ணாகமம் 33:55; நியாயாதிபதிகள் 2:20–22.
அதற்குப் பின் சுமார் 300 ஆண்டுகளுக்குக் கடவுளால் நியமனம் செய்யப்பட்ட 12 நியாயாதிபதிகள், பொய் மதத்தின் அடிமைத்தனத்திற்குள் சறுக்கி விழுந்துகொண்டிருந்த இஸ்ரவேலரை விடுவிக்க காட்சியில் அவ்வப்போது தோன்றினார்கள். இவர்களில் பாராக், கிதியோன், யெப்தா மற்றும் சிம்சோன் போன்ற நன்கு அறியப்பட்ட மனிதர்கள் அடங்குவர்.
பின்னர் பொ.ச.மு. 1117-ல் சவுல் இஸ்ரவேலின் முதல் மானிட அரசனாக முடிசூட்டப்பட்டபோது அரசாங்க அமைப்பு முறையில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. அவனுக்குப்பின் சிங்காசனத்தில் உட்கார்ந்த தாவீது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலின் எல்லாச் சத்துருக்களையும் கடைசியாகக் கீழ்ப்படுத்தி, தேசத்தைக் கடவுள் நியமித்திருந்த எல்லைக்கு விஸ்தரித்தான். அவனுடைய குமாரனாகிய சாலொமோனின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரவேல் மகிமையின் உச்சியை அடைந்து அதனைச் சுற்றியிருந்த எல்லாத் தேசத்திலிருந்தும் அதைத் தனியே பிரித்து வைத்த செழுமையை அனுபவித்தது.
ஆனால் பொ.ச.மு. 998-ல் அல்லது பொ.ச.மு. 997-ல் சாலொமோனின் மரணத்தின்போது பேரிடர் தாக்கியது. தேசம் பிரிந்துபோனது. வடக்கேயிருந்த பத்து கோத்திரம் அதன் பின் இஸ்ரேல் என்றும் யூதா மற்றும் பென்யமீன் தென்திசை கோத்திரங்களாக யூதா என்றும் அழைக்கப்படலாயிற்று. திப்னியைத் தவிர, பின்வந்த வடராஜ்யத்தினுடைய 19 ராஜாக்களும் மெய் தேவனைப் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைப் பாராட்டிய போதும் மெய் மதத்தை அப்பியாசிக்கவில்லை. (1 இராஜாக்கள் 16:21, 22) அவர்கள் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடந்தார்கள். இந்த நிலை ஆகாப் ராஜாவின் நாட்களில் வினைமையான விளைவுகளுக்கு வழிநடத்தியது. (1 இராஜாக்கள் 18:19–40 பார்க்கவும்.) பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேல் அசீரியர்களால் வீழ்த்தப்பட்டபோது விளைவுகள் இன்னும் வினைமையானவையாக இருந்தன.
இதற்கிடையில் சாலொமோனின் குமாரன் ரெகொபெயாமில் ஆரம்பித்து யூதாவின் 19 ராஜாக்களில் வெகு சிலரே மெய் வணக்கத்தை அப்பியாசித்தனர். நல்ல ராஜாக்களுக்கும் கெட்ட ராஜாக்களுக்குமிடையே தேசம் ஊசலாடிக் கொண்டிருந்தது போலவே அதன் ஜனங்களும் மெய் மதத்துக்கும் பொய் மதத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தனர். பாகால் வணக்கம் உட்பட, சுற்றிலுமிருந்த தேசங்களுடைய பொய் மதக் கோட்பாடுகளும் கீழ்த்தரமான பழக்கவழக்கங்களும் அதனுடைய ஜனங்கள் வீடுகளில் அதிகமதிகமாக தெளிவாக உணரப்படலாயிற்று. இந்தக் காரியங்கள் “இஸ்ரவேலின் விசுவாசத்தில் மேலுமாக நிலைப்பெற்றதாகிவிட்டபோது, ஜனங்கள் தங்கள் தனிப்பட்ட பக்தியையும் தேசங்களுக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டிய தங்கள் பணியையும் இழக்க ஆரம்பித்தனர்” என்பதாக தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறது. இது தேசத்திற்கு அழிவைக்கொண்டுவந்தது.
கானானியர்களிடமிருந்து தனியே பிரிந்திருக்கும்படியான கட்டளை, இஸ்ரவேலரை பாதுகாக்கவும் அவர்களுடைய வணக்கத்தின் தூய்மையைக் காத்துக்கொள்ளவுமே கொடுக்கப்பட்டது. மெய் மதத்தை அப்பியாசிக்கும் ஒரு தேசமாக, அவர்கள் அவ்விதமாகச் செய்யாதவர்களிலிருந்து தெளிவாக வித்தியாசப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மன உறுதியற்றவர்களாக ஆனார்கள். கடைசியாக, பொ.ச.மு. 607-ல் எருசலேம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது, தப்பிப் பிழைத்தவர்கள் சிறைப்பிடித்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். மெய் மதத்தைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட துயரமான விளைவுகளை அவர்கள் 70 ஆண்டுகளுக்கு அனுபவித்தார்கள். ஜலப்பிரளயத்துக்குப் பின்னால் பொய் மதத்துக்குப் பிறப்பிடமாக இருந்த பாபிலோன் மற்ற அனைத்து தேசங்களிலிருந்தும் மாறுபட்டதாய், தனியே பிரித்து வைக்கப்பட்டிருந்த தேசத்தின் மீது வெற்றிகொண்டது.
தேவைப்பட்டது—திறமையுள்ள ஓர் அரசன்
இஸ்ரவேலர் மெய் வணக்கத்தை அப்பியாசித்தவரையிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அவர்கள் அனுபவித்துக் களித்தார்கள். தெய்வீக அரசாங்கம் மெய் மதத்தோடு ஒருங்கிணைந்தது எல்லா வகையான நன்மைகளையும் அவர்ளுக்குக் கொண்டுவந்தது. என்றபோதிலும் வெற்றி வரம்புக்குட்பட்டதாக இருந்தது. ஒரு தேசத்தால் வரம்புக்குட்பட்ட காலத்தில் அனுபவிக்கப்பட்டு வந்த சமாதானமும் பாதுகாப்பும் முழுமையாக ஒவ்வொரு தேசத்தாலும் அனுபவிக்கப்படவேண்டுமானால், இன்னும் அதிகம் தேவைப்பட்டது. ஓர் அரசன்—முழு வெற்றியை அடைய நீதியான அரசாங்கத்தையும் மெய் மதத்தையும் அளிக்கும் திறமையுள்ள ஒருவரே மிகவும் தேவைப்பட்டார். அது என்ன அல்லது அது யாராக இருக்கக்கூடும்?
எருசலேமின் வீழ்ச்சிக்கு சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின், குறுகிய வாழ்வுடையவராயிருந்தபோதிலும் தமக்கும் தம்முடைய தேசத்துக்கும் ஒரு பெயரை உண்டுபண்ணும் ஒரு மனிதன் பிறந்தார். அவருடைய காலடி பாபிலோனிலும் எகிப்திலும்கூட பதியும், இங்கே இவர் மகா பெரிய இரட்சகராக வரவேற்கப்படுவார். அவரைக்குறித்து சுமார் 23 நூற்றாண்டுகளுக்குப் பின்பு, தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பின்னறிவோடு இவ்விதமாகச் சொல்லும்: “ரோம பேரரசும், ஓர் உலக மதமாக கிறிஸ்தவம் பரவியதும் . . . அனைத்தும் ஓரளவு [அவருடைய] சாதனையின் பலன்களாகவே இருந்தன என்று சொல்வது பொய்யாகாது.”
பிரபலமான இந்த உலக அரசர் தேவைப்படுவதை நிறைவு செய்கிறவராக இருப்பாரா? “யோக்கியதை இல்லாத பழங்கதை கற்பனைக் கடவுட்கள்” என்ற எமது அடுத்தப் பகுதி பதிலளிக்கும். (g89 2/22)
[பக்கம் 13-ன் பெட்டி]
“ஒரு தேசத்தின் அழிவு அதனுடைய மக்களின் வீடுகளில் ஆரம்பமாகிறது.”
அஷான்தி (கானாவில்) ஒரு முதுமொழி
[பக்கம் 14-ன் பெட்டி]
இந்த பெட்டி தமிழில் இல்லை
[பக்கம் 12-ன் படம்]
பாகால் கடவுளின் ஓர் உருவமைப்பு, இந்த வழிபாடே இஸ்ரவேலரை மெய் வணக்கத்திலிருந்து விலகிச் செல்லச் செய்தது
[படத்திற்கான நன்றி]
Louvre Museum, Paris