யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
எரேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
பேரழிவுகளைப்பற்றிய செய்தியை தன்னுடைய சொந்த ஜனங்களிடம் எரேமியா அறிவித்தபோது, அவர்கள் நிச்சயம் ஆடிப்போயிருப்பார்கள்! மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே வணக்கத்தின் மையமாய்த் திகழ்ந்த மகிமைபொருந்திய தேவாலயம் தீக்கிரையாகிவிடும், எருசலேம் நகரமும் யூதா தேசமும் பாழாக்கப்படும், அதன் குடிமக்கள் நாடுகடத்தப்படுவார்கள். இச்செய்திகளும் நியாயத்தீர்ப்பைப்பற்றிய பிற செய்திகளும் எரேமியா புத்தகத்தில் காணப்படுகின்றன; இப்புத்தகம், பைபிளில் உள்ள இரண்டாவது பெரிய புத்தகமாகும். கடவுளுக்கு உண்மையாய் சேவை செய்த 67 வருட காலப்பகுதியில் எரேமியா பெற்ற அனுபவத்தையும் இப்புத்தகம் விவரிக்கிறது. இதிலுள்ள தகவல்கள் காலவரிசைப்படி அல்லாமல் பொருள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
பைபிளிலுள்ள இந்த எரேமியா புத்தகம் நமக்கு ஏன் ஆர்வத்திற்குரியது? அதிலுள்ள நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரான யெகோவாமீது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. (ஏசாயா 55:10, 11) ஒரு தீர்க்கதரிசியாக எரேமியா செய்த வேலையும் அவருடைய செய்திக்கு மக்கள் காட்டிய மனப்பான்மையும் நம் காலத்து சூழ்நிலைக்கு ஒத்திருக்கின்றன. (1 கொரிந்தியர் 10:11) அதுமட்டுமல்ல, தம் மக்களிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்ற பதிவு, அவருடைய பண்புகளைச் சிறப்பித்துக் காட்டுகிறது; இப்பதிவு நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.—எபிரெயர் 4:12.
“என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்”
பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு 40 வருடங்களுக்கு முன், அதாவது யூதாவின் ராஜாவாகிய யோசியா அரசாண்ட 13-ஆம் வருடத்தில் தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்படுகிறார். (எரேமியா 1:1, 2) யோசியா அரசாண்ட மீதி 18 வருடங்களிலேயே அவர் பெரும்பாலும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்; யூதா மக்கள் செய்த தீமைகளை அம்பலப்படுத்துகிறார், அவர்களுக்கு எதிராக யெகோவா நிறைவேற்றப்போகும் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கிறார். ‘நான் எருசலேமை மண்மேடுகளாக்கிப் போடுவேன்’ என்றும் ‘யூதாவின் பட்டணங்களை குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்’ என்றும் யெகோவா அறிவிக்கிறார். (எரேமியா 9:11) ஏன்? ஏனென்றால், “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்” என்று அவர் சொல்கிறார்.—எரேமியா 2:13.
மனந்திரும்புகிற மீதியானோர் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதைப்பற்றிய செய்தியையும் எரேமியா அறிவிக்கிறார். (எரேமியா 3:14-18; 12:14, 15; 16:14-21) என்றாலும், அவருடைய செய்திக்கு வரவேற்பு கிடைப்பதில்லை. ‘கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தன்’ எரேமியாவை அடித்து, இரவு முழுக்க தொழுமரத்தில் மாட்டிவைக்கிறார்.—எரேமியா 20:1-3.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:11, 12—“வாதுமை மரத்தின் கிளை,” யெகோவா தம் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்ற விழித்திருப்பதோடு ஏன் சம்பந்தப்பட்டிருக்கிறது? வாதுமை மரம் இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் பூக்கும் மரங்களில் ஒன்று. தம் நியாயத்தீர்ப்புகளைப்பற்றி தம் மக்களை எச்சரிப்பதற்காக யெகோவா அடையாள அர்த்தத்தில் “முந்தி எழுந்து [தம் தீர்க்கதரிசிகளை] அனுப்பிக்கொண்டிருந்தார்”; அவை நிறைவேறும்வரையாக விழித்துக்கொண்டிருந்தார்.—எரேமியா 7:25, NW.
2:10, 11—விசுவாசமற்ற இஸ்ரவேலரின் செயல்கள் மிகவும் அசாதாரணமானவையாய் இருக்கக் காரணம் என்ன? மேற்கே கித்தீம் வரையிலும் கிழக்கே கேதார் வரையிலும் உள்ள புற மதத்தவருக்குத் தங்களுக்கென தெய்வங்கள் இருக்க, பிற தேசத்து தெய்வங்களையும் அவர்கள் கொண்டுவந்திருக்கலாம். அவர்கள் தங்களுடைய தெய்வங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக பிற தேசத்து தெய்வங்களை வைத்த சரித்திரமே இல்லை. மறுபட்சத்தில், இஸ்ரவேலரோ உயிருள்ள கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய மகிமையை உயிரற்ற விக்கிரகங்களுக்குச் செலுத்தினார்கள்.
3:11-22; 11:10-12, 17—சமாரியா பொ.ச.மு. 740-ல் வீழ்ச்சியடைந்தபோதிலும் எரேமியா ஏன் அந்தப் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைப்பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்தார்? இதற்குக் காரணம், பொ.ச.மு. 607-ல் எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவு, யூதாவுக்கு எதிராக மட்டுமல்ல இஸ்ரவேலின் முழு தேசத்துக்கும் எதிராக யெகோவா நிறைவேற்றிய நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இருந்தது. (எசேக்கியேல் 9:9, 10) அதுமட்டுமல்ல, பத்துக் கோத்திர ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் அது திரும்பப் புதுப்பிக்கப்படுவதற்கான நம்பிக்கை எருசலேமைச் சார்ந்திருந்தது; ஏனெனில், கடவுளுடைய தீர்க்கதரிசிகள் சொன்ன செய்திகள் தொடர்ந்து இஸ்ரவேலர்களையும் உட்படுத்தின.
4:3, 4—இந்தக் கட்டளையின் அர்த்தம் என்ன? விசுவாசமற்ற யூதர்கள் தங்களுடைய நிலமாகிய இருதயத்தைப் பண்படுத்தி, மென்மையாக்கி, சுத்தப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய இருதயத்தின் “நுனித்தோலை” நீக்கிப்போட வேண்டியிருந்தது, அதாவது, கெட்ட எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உள்நோக்கங்களையும் நீக்கிவிட வேண்டியிருந்தது. (எரேமியா 9:25, 26; அப்போஸ்தலர் 7:51) இதற்காக, அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப் பாணியை மாற்றுவது அவசியமாய் இருந்தது; கெட்ட காரியங்கள் செய்வதை விட்டு விலகி கடவுளுடைய ஆசீர்வாதத்தை அளிக்கும் காரியங்களைச் செய்வது அவசியமாய் இருந்தது.
4:10; 15:18—கலகம் செய்த தம் மக்களை யெகோவா என்ன அர்த்தத்தில் மோசம் போக்கினார்? எரேமியாவின் காலத்தில், “கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற” தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். (எரேமியா 5:31; 20:6; 23:16, 17, 25-28, 32) அவர்கள் தவறான செய்திகள் அறிவிப்பதை யெகோவா தடுக்கவில்லை.
16:16—யெகோவா, ‘மீன் பிடிக்கிற அநேகரையும்’ ‘வேட்டைக்காரராகிய அநேகரையும் அழைத்தனுப்புவது’ எதைக் குறிக்கிறது? யெகோவா நியாயத்தீர்ப்பு வழங்கவிருந்த விசுவாசமற்ற யூதர்களைத் தேடிப்பிடிக்க விரோதிகளின் படையை அனுப்புவதை இது குறிக்கலாம். என்றாலும், எரேமியா 16:15 சொல்வதை வைத்துப் பார்க்கையில் மனந்திரும்பிய இஸ்ரவேலரைக் கண்டுபிடிப்பதையும் இது குறிக்கலாம்.
20:7—யெகோவா எவ்விதத்தில் எரேமியாவைவிட ‘பலத்தவராய் இருந்து’ அவரை இணங்கச் செய்தார்? யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கையில் மக்களின் பாராமுகத்தையும் மறுப்பையும் துன்புறுத்தலையும் சந்தித்ததால், அந்த வேலையைத் தொடர்ந்து செய்ய தன்னால் இயலாதென எரேமியா நினைத்திருக்கலாம். என்றாலும், அந்த எண்ணத்தைப் போக்க யெகோவா தம் பலத்தைப் பயன்படுத்தி வேலையைத் தொடர எரேமியாவுக்கு சக்தியளித்தார். இவ்வாறு, ஒரு தீர்க்கதரிசியாக தன்னால் எதைச் செய்ய முடியாதென எரேமியா நினைத்தாரோ அதைச் செய்ய அவரைப் பயன்படுத்துவதன் மூலம் அவரை இணங்க வைத்தார்.
நமக்குப் பாடம்:
1:8. சில சமயங்களில் துன்புறுத்தலிலிருந்து யெகோவா தம் மக்களை விடுவிக்கலாம்; ஒருவேளை பாரபட்சமற்ற நீதிபதிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ, பகைமைமிக்க அதிகாரிகளுக்குப் பதிலாக நேர்மையானவர்களை நியமிப்பதன் மூலமோ, தம்மை வணங்குவோருக்கு சகித்திருக்க பலத்தை அளிப்பதன் மூலமோ அவர்களை விடுவிக்கலாம்.—1 கொரிந்தியர் 10:13.
2:13, 18. விசுவாசமற்ற இஸ்ரவேலர் இரண்டு தீமைகளைச் செய்தார்கள். ஆசீர்வாதத்திற்கும் வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் நம்பகமான ஊற்றுமூலராய் இருக்கிற யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள். அதோடு, எகிப்து மற்றும் அசீரியாவின் ராணுவ பலத்தை நாடுவதன் மூலம் அவர்கள் அடையாள அர்த்தமுள்ள தண்ணீர் தொட்டிகளை தங்களுக்கென வெட்டிக்கொண்டார்கள். நம் காலத்திலும் மக்கள் மெய்க் கடவுளை விட்டுவிட்டு மனித தத்துவங்களையும் கொள்கைகளையும் நாடுவது ‘ஜீவத்தண்ணீர் ஊற்றை’ விட்டுவிட்டு ‘வெடிப்புள்ள தொட்டிகளை’ வெட்டுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.
6:16. கலகம் செய்த தம் மக்கள் நின்று, தங்களை ஆராய்ந்து, தங்களுடைய முற்பிதாக்களின் ‘பாதைகளில்’ திரும்பி வரும்படி யெகோவா அறிவுரை கூறுகிறார். நாம் எந்த வழியில் நடக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறாரோ அந்த வழியிலேயே நடக்கிறோமா என்பதை அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும், அல்லவா?
7:1-15. ஆலயத்திற்கு ஒருவித பாதுகாக்கும் சக்தி இருப்பதாகக் கருதி அதன்மேல் நம்பிக்கை வைத்த யூதர்களை அது பாதுகாக்கவில்லை. நாம் தரிசித்து நடக்காமல் விசுவாசித்து நடக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 5:6.
15:16, 17. எரேமியாவைப் போலவே நம்மாலும் மனச்சோர்வை எதிர்த்துப் போராட முடியும். பைபிளை தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வத்தோடு படித்து மகிழ்வது, ஊழியத்தில் யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பேசுவது, கெட்ட சகவாசங்களை ஒழித்துக் கட்டுவது ஆகியவற்றின் மூலம் மனச்சோர்வை நாம் எதிர்த்துப் போராடலாம்.
17:1, 2. யூதாவின் ஜனங்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களுடைய பலிகளை யெகோவா அருவருப்பாகக் கருதினார். ஒழுக்க சுத்தம் இல்லாதிருந்தால் நம் ஸ்தோத்திர பலிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
17:5-8. மனிதர்களும் மனித ஸ்தாபனங்களும் கடவுளுடைய சித்தத்திற்கும் பைபிள் நியமங்களுக்கும் இசைவாகச் செயல்படும்போது மட்டுமே நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க முடியும். இரட்சிப்பையும், உண்மையான சமாதானம் மற்றும் பாதுகாப்பையும் பெற நாம் யெகோவாவில் மாத்திரம் நம்பிக்கை வைப்பதே ஞானமான செயல்.—சங்கீதம் 146:3.
20:8-11. அலட்சிய மனப்பான்மையோ எதிர்ப்போ துன்புறுத்தலோ, ராஜ்ய பிரசங்க வேலையில் நம்முடைய பக்திவைராக்கியத்தைத் தணித்துப்போட நாம் அனுமதிக்கக்கூடாது.—யாக்கோபு 5:10, 11.
‘உங்கள் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்துங்கள்’
எரேமியா, யூதாவின் கடைசி நான்கு ராஜாக்களுக்கு எதிராகவும், பொய்த் தீர்க்கதரிசிகள், பொறுப்பற்ற மேய்ப்பர்கள், ஊழல்மிக்க ஆசாரியர்கள் ஆகியோருக்கு எதிராகவும் நியாயத்தீர்ப்பின் செய்திகளை அறிவிக்கிறார். உண்மையுள்ள மீதியானோரை நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு யெகோவா இவ்வாறு கூறுகிறார்: ‘அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைப்பேன்.’ (எரேமியா 24:5, 6) அதிகாரம் 25-ல் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தீர்க்கதரிசனங்கள், பின்னால் வரும் அதிகாரங்களில் விவரமாக விளக்கப்பட்டுள்ளன.
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் எரேமியாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிக்க வேண்டும் என்பதே அவருடைய செய்தி. சிதேக்கியா ராஜாவிடம் எரேமியா இவ்வாறு கூறுகிறார்: ‘உங்கள் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்துங்கள்.’ (எரேமியா 27:12) என்றாலும், ‘இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் [இஸ்ரவேலை] சேர்த்துக்கொள்வார்.’ (எரேமியா 31:10) நல்ல காரணத்திற்காகவே, ரேகாபியருக்கு ஒரு வாக்குறுதி அளிக்கப்படுகிறது. எரேமியா ‘காவற்சாலையின் முற்றத்திலே காவல்வைக்கப்படுகிறார்.’ (எரேமியா 37:21) எருசலேம் அழிக்கப்படுகிறது, அதன் குடிமக்கள் பெரும்பாலோர் சிறைப்பிடித்துச் செல்லப்படுகிறார்கள். சிறைப்பிடித்துச் செல்லாமல் விடப்பட்ட அற்பசொற்ப ஆட்களில் எரேமியாவும் அவருடைய செயலரான பாருக்கும் அடங்குவர். பயந்துபோன சிலர் எரேமியாவின் சொல் கேளாமல் எகிப்துக்குச் செல்கிறார்கள். பிற தேசங்களுக்கு எதிராக எரேமியா உரைத்த செய்திகளை 46-51 அதிகாரங்கள் விவரிக்கின்றன.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
22:30—இக்கட்டளை, இயேசு கிறிஸ்து ராஜாவாக தாவீதின் சிங்காசனத்தில் அமர்வதற்கான உரிமையை ரத்துசெய்துவிட்டதா? (மத்தேயு 1:1, 11) இல்லை. யோயாக்கீன் ராஜாவுடைய வாரிசாக யாராவது ‘தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளுவதை’ தடைசெய்ததையே இது குறிக்கிறது. இயேசு, யூதாவிலிருந்து அல்ல பரலோகத்திலிருந்தே அரசாளவிருந்தார்.
23:33—“கர்த்தராலே சுமரும் பாரம்” என்பதன் அர்த்தம் என்ன? எரேமியாவின் காலத்தில், எருசலேமின் அழிவைக் குறித்து தீர்க்கதரிசி உரைத்த முக்கிய செய்திகள், அந்நகரத்தில் வாழ்ந்த அவருடைய சகமனிதருக்குப் பாரமாயிருந்தன. அதே சமயத்தில், அச்செய்திகளை காதில் வாங்கிக்கொள்ளாமற்போன ஜனங்களோ யெகோவாவுக்குப் பாரமாய் இருந்தார்கள்; அதனால், அவர்களை அவர் புறக்கணித்துவிடுவார். அவ்வாறே, கிறிஸ்தவமண்டலத்திற்கு வரவிருக்கும் அழிவைக் குறித்த பைபிளின் செய்தி கிறிஸ்தவமண்டலத்திற்குப் பாரமாயிருக்கிறது. அதுமட்டுமல்ல, அச்செய்திக்கு காதுகொடுக்காத ஜனங்களும் கடவுளுக்குப் படு பாரமாய் இருக்கிறார்கள்.
31:33—கடவுளுடைய நியாயப்பிரமாணம் எவ்வாறு இருதயங்களில் எழுதப்படுகிறது? கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை ஒருவர் நெஞ்சார நேசிக்கையில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு யெகோவாவின் சித்தத்தைச் செய்ய விரும்புகிறார்; இதனால், கடவுளுடைய நியாயப்பிரமாணம் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறதெனச் சொல்லலாம்.
32:10-15—ஒரே காரியத்திற்காக எழுதப்பட்ட இரண்டு பத்திரங்களின் நோக்கம் என்ன? திறந்திருந்த பத்திரம் எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக இருந்தது. முத்திரை போடப்பட்ட பத்திரமோ, திறந்திருந்த பத்திரத்தின் திருத்தமான தன்மையைக் குறித்து சந்தேகம் எழுந்தால் அதை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக இருந்தது. தன்னுடைய சொந்தக்காரனும் சக வணக்கத்தானுமாக இருந்தவரிடம்கூட, கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நியாயமான சட்டப்பூர்வ காரியங்களைச் செய்ததன் மூலம் எரேமியா நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
33:23, 24—இங்கு பேசப்படும் ‘இரண்டு வம்சங்கள்’ அதாவது குடும்பங்கள் எவை? ஒன்று தாவீது ராஜாவின் பரம்பரையில் வந்த அரச குடும்பம்; மற்றொன்று, ஆரோனின் சந்ததியில் வந்த ஆசாரிய குடும்பம். எருசலேமும் யெகோவாவின் ஆலயமும் அழிக்கப்பட்டதோடு, இந்த இரண்டு குடும்பங்களையும் யெகோவா வெறுத்துவிட்டார் என்றும் பூமியில் இனி ஒரு ராஜ்யமும் இருக்கப்போவதில்லை அல்லது அவருடைய வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் ஜனங்கள் நினைத்தார்கள்.
46:22—எகிப்து பாம்பைப் போல் சீறி வரும் என ஏன் சொல்லப்படுகிறது? திடீரென ஆபத்து நேரிட்டதால், பாம்பைப் போல சீறிவிட்டுப் பின்வாங்குவதையோ ஒரு தேசமாக எகிப்திற்குத் தலைகுனிவு ஏற்படுவதையோ இது குறிக்கலாம். எகிப்தின் பார்வோன்கள் பாம்பு தெய்வமான ஊவாட்சிட் மூலமாக தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமென கருதி, பாம்பின் புனித உருவத்தைக் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதையும்கூட இந்த ஒப்புமை காட்டுகிறது.
நமக்குப் பாடம்:
21:8, 9; 38:19. மனந்திரும்பாத எருசலேம் வாசிகள் செத்துமடிவதற்கே தகுதியுள்ளவர்களாயிருந்தும், கடைசி நேரத்தில்கூட யெகோவா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆம், ‘அவருடைய இரக்கங்கள் மிகுதியானவை.’—2 சாமுவேல் 24:14; சங்கீதம் 119:156.
31:34. யெகோவா தாம் மன்னித்தவர்களின் பாவங்களை மனதில் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்ற விஷயம் எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!
38:7-13; 39:15-18. யெகோவாவுக்கு நாம் உண்மையோடு செய்யும் சேவையை அவர் மறப்பதில்லை; ‘பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்வதும்’ அந்தச் சேவையில் உட்படுகிறது.—எபிரெயர் 6:10.
45:4, 5. யூதாவின் கடைசி நாட்களைப் போலவே, இந்தப் பொல்லாத உலகின் ‘கடைசி நாட்களும்,’ செல்வம், புகழ், சொத்துபத்துகள் போன்ற “பெரிய காரியங்களை” தேடுவதற்கான காலமல்ல.—2 தீமோத்தேயு 3:1; 1 யோவான் 2:17.
எருசலேம் தீப்பற்றி எரிகிறது
வருடம் பொ.ச.மு. 607. அது சிதேக்கியா ராஜாவுடைய ஆட்சியின் 11-ஆம் வருடம். பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் கடந்த 18 மாதங்களாக எருசலேமைச் சுற்றி முற்றுகை போட்டிருந்தார். நேபுகாத்நேச்சாருடைய ஆட்சியின் 19-ஆம் வருடம் ஐந்தாம் மாதம் ஏழாம் நாள், காவல் சேனாதிபதியாகிய நெபுசராதான் எருசலேமுக்கு ‘வருகிறார்.’ (2 இராஜாக்கள் 25:8) அவர் ஒருவேளை நகரத்தின் மதில்களுக்கு வெளியேயிருந்த தன்னுடைய கூடாரத்தை விட்டு வெளியே வந்து, சூழ்நிலையைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடுகிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மாதத்தின் பத்தாம் நாளில் அவர் எருசலேமுக்கு ‘வருகிறார்’ அதாவது எருசலேமில் நுழைகிறார். ‘நகரத்தைத் தீக்கொளுத்துகிறார்.’—எரேமியா 52:7, 12.
எருசலேமின் வீழ்ச்சியைப்பற்றிய விளக்கமான பதிவை எரேமியா அளிக்கிறார். அவருடைய விவரிப்பு புலம்பல் பாடுவதற்கு ஏற்றதாய் அமைந்துள்ளது. இப்பாடல்கள், பைபிளில் உள்ள புலம்பல் புத்தகத்தில் காணப்படுகின்றன.
[பக்கம் 8-ன் படம்]
எருசலேமுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியும் எரேமியா உரைத்த செய்திகளில் உட்பட்டிருந்தது
[பக்கம் 9-ன் படம்]
யெகோவா எவ்விதத்தில் எரேமியாவைவிட ‘பலத்தவராய் இருந்தார்’?
[பக்கம் 10-ன் படம்]
“சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.”—எரேமியா 24:5