எரேமியா
24 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன. 2 ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அவை முதன்முதலாகப் பழுத்த அத்திப் பழங்களைப் போல மிகவும் நன்றாக இருந்தன. இன்னொரு கூடையில் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருந்தன. அவை சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போயிருந்தன.
3 யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். ஒரு கூடையில் மிகவும் நல்ல அத்திப் பழங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னொரு கூடையில் சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருக்கின்றன”+ என்று சொன்னேன்.
4 அப்போது யெகோவா என்னிடம், 5 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவிலிருந்து கல்தேயர்களின் தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன். 6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+ 7 யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்ளும் இதயத்தை நான் அவர்களுக்குத் தருவேன்.+ அவர்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+
8 சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவும்,+ அவனுடைய அதிகாரிகளும், எருசலேமின் அழிவில் தப்பித்தவர்களும், அதாவது இந்தத் தேசத்திலும் எகிப்திலும்+ வாழ்கிறவர்களும், கெட்டுப்போன அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். 9 அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 10 அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.”