சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள்
உண்மையிலேயே உலகின் உச்சியில் இருக்கும் ஓர் உணர்வோடு கம்பீரமான மலையின் செங்குத்தான உச்சியில் நின்றுகொண்டிருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். என்னே மகிழ்ச்சித்தரும் சுயாதீனமான உணர்வு!
என்றபோதிலும், உங்கள் சுயாதீனம் உண்மையில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. ஈர்ப்புச் சட்டம் உங்கள் ஒவ்வொரு அசைவையும் வெகுவாக கட்டுப்படுத்துகிறது. ஓர் அடி எடுத்து வைப்பது விபத்தில் விளைவடையக்கூடும். மறுபட்சத்தில், அதே ஈர்ப்புச் சட்டமானது, விண்வெளிக்குள் செல்வது அறியாது மிதந்துசெல்வதிலிருந்து உங்களைத் தடைசெய்வதை அறிவது எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கிறது. ஆகவே சட்டம் உங்களுடைய நன்மைக்காகவே இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. அந்த மலைஉச்சியில் உங்கள் அசைவுகளின்மீது அது வைக்கும் வரம்புகளை ஏற்றுக்கொள்வது பிரயோஜனமாயும், உயிர்காப்பதாயும்கூட இருக்கிறது.
ஆம், சில சமயங்களில் சட்டங்களும் அவற்றுக்குக் கீழ்ப்படிவதும் நம்முடைய சுயாதீனத்தைக் கட்டுப்படுத்தக்கூடும், ஆனால் கீழ்ப்படிதலை இது விரும்பத்தகாததாக ஆக்குகின்றதா?
கீழ்ப்படிதலைக் கடவுள் எவ்வாறு நோக்குகிறார்
மகத்தான சிருஷ்டிகராக யெகோவா “ஜீவஊற்”றாக இருக்கிறார். இந்தக் காரணத்துக்காகவே அவருடைய சிருஷ்டிகள் அனைத்தும் சரியாகவே அவருக்குக் கீழ்ப்பட்டிருக்க கடமைப்பட்டிருக்கின்றனர். சரியான மனநிலையை வெளிப்படுத்துகிறவராய் சங்கீதக்காரன் எழுதினார்: “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.”—பிரசங்கி 12:1; சங்கீதம் 36:9; 95:6, 7.
ஆரம்பத்திலிருந்தே யெகோவா தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து கீழ்ப்படிதலைத் தேவைப்படுத்தியுள்ளார். ஆதாமும் ஏவாளும் பரதீஸில் தொடர்ந்து வாழ்ந்திருப்பது அவர்களுடைய கீழ்ப்படிதலின்பேரில் சார்ந்திருந்தது. (ஆதியாகமம் 2:16, 17) அதேவிதமாகவே தேவதூதர்களிடமிருந்து, அவர்கள் மனிதர்களைவிட உயர்வான உயிர் வகைகளாக இருந்தபோதிலும் கீழ்ப்படிதல் எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆவி சிருஷ்டிகளில் சில “நோவாவின் நாட்களில் தேவன் நீடியபொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போன”படியால், அவர்கள் “அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்தில் தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக” ஒப்புக்கொடுக்கப்பட்டதன்மூலம் தண்டிக்கப்பட்டார்கள்.—1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 2:4.
எளிமையாகச் சொன்னால், கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு கீழ்ப்படிதலை இன்றியமையாததாக அவர் கருதுகிறார். நாம் வாசிக்கிறோம்: “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.”—1 சாமுவேல் 15:22.
அது கற்றுக்கொள்ளப்படவேண்டும் —ஏன் மற்றும் எவ்வாறு
கீழ்ப்படிதல் கடவுளோடு நீதியுள்ள நிலைநிற்கைக்கு வழிநடத்துகிறது, ஆகவே நாம் அதைக் கற்றுக்கொள்வது எத்தனை அவசரமானதாக இருக்கிறது! ஓர் அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வதைப் போன்று, நாம் இளைஞராயிருக்கும்போதே கீழ்ப்படியும் பழக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம். அதன் காரணமாகவே பிள்ளைகளை அவர்களுடைய சிறுபிரயாயம் முதற்கொண்டு பயிற்றுவிப்பதை பைபிள் அழுத்திக் கூறுகிறது.—யோசுவா 8:35.
தற்காலத்தவரில் சிலர் பிள்ளைகளிடமிருந்து கீழ்ப்படிதலைத் தேவைப்படுத்துவது மனம் சம்பந்தப்பட்ட கற்பழிப்புக்கு ஒப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். பிள்ளைகள், புறம்பேயிருந்து வயதுவந்தவர்களின் குறுக்கீடு இல்லாமல், தங்கள் சொந்த தனிப்பட்ட கருத்துக்களையும் தராதரங்களையும் வளர்த்துக்கொண்டு வாழ்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஆனால் 1960-களில் அநேக பெற்றோர் இந்தக் கருத்தை உடையவர்களாக இருந்தபோது, உளவியல் விரிவுரையாளரும், பதிப்பாசிரியரும், பேராசிரியருமான வில்ஹெம் ஹான்சன் இதை ஒப்புக்கொள்ள மறுத்தார். அவர் எழுதினார்: “வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்திலிருக்கும் ஒரு பிள்ளைக்கு, அதனுடைய பெற்றோரோடு அதன் உறவு இன்னும் முடிவானதாக இருக்கும் ஒரு சமயத்தில், பெற்றோர் தடைசெய்வது ‘கெட்ட’தாகவும் அவர்கள் சிபாரிசு செய்வது அல்லது போற்றுவது ‘நல்ல’தாகவும் இருக்கிறது. ஆகவே கீழ்ப்படிதல் மாத்திரமே பிள்ளையை ஒழுக்கப் பாதையிலும் முதன்மையான பண்புகளுக்கும் வழிநடத்திச் செல்கிறது. இதன்பேரில்தானே நன்னெறி ஒழுங்கினிடமாக அவனுடைய உறவு சார்ந்திருக்கிறது.”—நீதிமொழிகள் 22:15-ஐ ஒப்பிடவும்.
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வதற்கான அவசியத்தைக் கடவுளுடைய வார்த்தை வலியுறுத்திக் கூறுகிறது. நாம் வாசிக்கிறோம்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவன் சொந்தமாக தெரிந்துகொள்வதற்குரியதல்லவென்றும் தன் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பது மனிதனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23, தி நியூ இங்லீஷ் பைபிள்) மனிதர்கள் சொந்த தராதரங்களின்படி தங்கள் சொந்த வாழ்க்கைப் போக்கைத் திட்டமிட்டு அவ்விதமாக செய்தமைக்காக வினைமையான கஷ்டங்களை எதிர்ப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள் சரித்திரத்தில் ஏராளமாக இருக்கின்றன. இது ஏன் அடிக்கடி சம்பவிக்கிறது? ஏனென்றால் மனிதர்கள் உதவியின்றி தங்கள் வாழ்க்கைப் போக்கைத் திட்டமிடுவதற்கு அறிவிலும் ஞானத்திலும் புரிந்துகொள்ளுதலிலும் குறைவுபடுகிறார்கள். அதைவிட மோசமானது, தவறான தீர்மானங்களைச் செய்யும் சுதந்தரிக்கப்பட்ட மனச்சாய்வு அவர்களுக்கு இருக்கிறது. ஜலப்பிரளயத்துக்குப் பின் உடனடியாக யெகோவா மனிதனைக் குறித்துச் சொன்னார்: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.”—ஆதியாகமம் 8:21.
ஆகவே எவருமே யெகோவாவுக்குக் கீழ்ப்படியும் மனச்சாய்வை சுதந்தரித்துக்கொள்வதில்லை. நாம் அதை நம்முடைய பிள்ளைகளின் மனதில் ஆழப்பதியவைத்து நம்முடைய வாழ்க்கை முழுவதிலுமாக தொடர்ந்து அதைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் தாவீது ராஜாவின் இருதய நிலையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். அவர் எழுதினார்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.”—சங்கீதம் 25:4, 5.
கீழ்ப்படிந்திருப்பதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுங்கள்
இயேசுவின் தாயும் வளர்ப்புத் தகப்பனும் இயேசுவின் பிறப்பைச் சுற்றியிருந்த சூழ்நிலைமைகளை நன்றாகவே அறிந்திருந்தனர். ஆகவே யெகோவாவுடைய நோக்கங்களின் நிறைவேற்றத்தில் அவர் முக்கியமான பங்கை வகிக்கவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். (லூக்கா 1:35, 46, 47 ஒப்பிடவும்.) அவர்களுடைய விஷயத்தில் “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்,” என்ற வார்த்தைகள் ஈடிணையற்ற ஒரு பொருளை உடையதாக இருந்தன. (சங்கீதம் 127:3) அவர்கள் தங்களுக்கிருந்த மாபெரும் உத்தரவாதத்தை முழுமையாக உணர்ந்திருந்தனர், ஆகவே எகிப்துக்கு ஓடிப்போகும்படியும் பின்னால் கலிலேயாவுக்குச் செல்லும்படியும் அவர்கள் சொல்லப்பட்டபோது அத்தகைய தெய்வீக கட்டளைகளுக்கு அவர்கள் உடனடியாக கீழ்ப்படிந்தார்கள்.—மத்தேயு 2:1-23.
இயேசுவின் பெற்றோர், சிட்சையின் சம்பந்தமாகவும் தங்கள் உத்தரவாதத்தை உணர்ந்தவர்களாக இருந்தனர். உண்மைதான், இயேசு மனிதனாவதற்கு முன்பிருந்த அவருடைய வாழ்க்கையின்போது, அவர் எப்போதும் கீழ்ப்படிதலுள்ளவராகவே இருந்திருக்கிறார். ஆனால் பூமியில் இருந்தபோது, முற்றிலும் புதிய சூழ்நிலைமைகளின்கீழ் கீழ்ப்படிந்திருக்க அவர் கற்றுக்கொண்டார். ஒரு காரியமானது, பரிபூரணமான ஒரு பிள்ளைக்கும்கூட அறிவுரைகள் மற்றும் கல்வியின் வடிவில் சிட்சை தேவையாக இருப்பதன் காரணமாக அவர் அபூரணமான பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டியதாக இருந்தது. இதை அவருடைய பெற்றோர் கொடுத்தார்கள். மறுபட்சத்தில் தண்டனையின் வடிவில் சிட்சை அவசியமற்றதாக இருந்தது. இயேசு எப்போதும் கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார்; இரண்டு தடவைகள் அவருக்குச் சொல்லவேண்டியதாக இருக்கவில்லை. நாம் வாசிக்கிறோம்: “பின்பு அவர் அவர்களுடனே [அவருடைய பெற்றோர்] கூடப்போய் நாசரேத்தூரில் சேர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.”—லூக்கா 2:51.
யோசேப்பும் மரியாளும் முன்மாதிரியின் மூலம் எவ்விதமாக இயேசுவுக்குக் கற்பிப்பது என்பதையும்கூட அறிந்திருந்தார்கள். உதாரணமாக, “அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்,” என்பதாக நாம் வாசிக்கிறோம். (லூக்கா 2:41) தன் குடும்பத்தைத் தன்னோடு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதன் மூலம் யோசேப்பு அவர் அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் அக்கறையாக இருந்ததையும், யெகோவாவின் வணக்கத்தை அவர் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்டதையும் காண்பித்தார். அதேவிதமாகவே, பெற்றோர் வணக்க விஷயங்களில் தங்களுடைய சொந்த கீழ்ப்படிதலின் மூலமாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இன்று கீழ்ப்படிதலைக் கற்பிக்கலாம்.
யோசேப்பு மற்றும் மரியாளின் பங்கில் அவர்கள் நீதியின் வழியில் நேர்த்தியாக சிட்சித்ததன் காரணமாக, “இயேசுவானவர் ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” கிறிஸ்தவ பெற்றோர் இன்று பின்பற்றுவதற்கு என்னே நேர்த்தியான ஒரு முன்மாதிரி!—லூக்கா 2:52.
“எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்”
“பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:20) இயேசு தம்முடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கலாம், ஏனென்றால் அவர்கள் இயேசுவிடமோ—அவருடைய ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளிடமோ—யெகோவாவின் சித்தத்துக்கு மாறாக எதையும் கேட்பது சாத்தியமற்றதாயிருந்தது.
அநேக பெற்றோர் இன்று தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வெற்றிகரமாக கற்றுக்கொடுத்து வருகிறார்கள். பிள்ளைகளை வளர்த்து முடித்து இப்பொழுது உவாட்ச்டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயத்தில் சேவித்துவரும் மூன்று தகப்பன்மார் சொல்வதைக் கேளுங்கள்.
தேயோ எவ்விதமாக தானும் தன் மனைவியும் ஐந்து மகன்களை வளர்த்தார்கள் என்பதைப்பற்றி பேசுகிறார். அவர் சொல்கிறார்: “ஆரம்பத்திலிருந்தே வளர்ந்த பெரியவர்களாகிய நாமும்கூட தவறிழைக்கிறோம் என்பதை நம்முடைய பிள்ளைகள் அறியச்செய்வது முக்கியமாகும். விசனகரமாக, நாம் அவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறவர்களாகவும், நம்முடைய பரம தகப்பனிடம் இடைவிடாமல் மன்னிப்புக்காகவும் உதவிக்காகவும் கேட்கவேண்டியவர்களாகவும் உள்ளோம். இளைஞரின் கவலைகளோடு அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் விதமாகவே நாங்கள் பெரியவர்களின் கவலைகளோடு போராடிக்கொண்டிருப்பதை நாங்கள் திட்டமிட்டு எங்களுடைய பிள்ளைகள் காணும்படி அனுமதித்தோம்.”
ஒரு பிள்ளை கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளவேண்டுமாயின், அவனுக்கும் அவன் பெற்றோருக்குமிடையே அன்புள்ள உறவு அத்தியாவசியமாகும். ஹெர்மன் தன் மனைவியைப் பற்றி சொல்கிறார்: “அவள் பையன்களின் தாயாக மட்டுமல்லாமல், அவர்களுடைய நண்பராகவும் இருந்தாள். இதை அவர்கள் போற்றினார்கள், ஆகவே கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருப்பது அவர்களுக்குக் கடினமாயில்லை.” பின்னர், பெற்றோர்-பிள்ளை உறவை எவ்விதமாக மேம்படுத்துவது என்பதன்பேரில் ஓர் ஒத்தாசையான குறிப்பைக் கூட்டினார்: “பல ஆண்டுகளாக நாங்கள் வேண்டுமென்றே பாத்திரம் கழுவும் இயந்திரம் இல்லாமல் இருந்தோம். ஆகவே பாத்திரங்களைக் கையால் கழுவி துடைத்தாகவேண்டும். எங்கள் மகன்களுக்கு மாறி மாறி துடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. சாதாரணமான பேச்சுத் தொடர்புக்கு இதைவிட மேம்பட்ட ஒரு சமயம் இருக்கவில்லை.”
அன்புள்ள பெற்றோர்-பிள்ளை உறவு ஒரு கிறிஸ்தவன் யெகோவாவுடன் கொண்டிருக்கவேண்டிய உறவுக்கு மாதிரியாக அமைகிறது. ரடால்ப் இப்படிப்பட்ட ஓர் உறவை அமைத்துக்கொள்ள தங்கள் இரண்டு பையன்களுக்கு அவரும் அவருடைய மனைவியும் எவ்விதமாக உதவினார்கள் என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்: “ஒழுங்கான ஒரு குடும்ப படிப்பு எங்களுக்கு அடிப்படையாக இருந்தது. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு ஆராய்ச்சிக்காக பொருத்தமான பல தலைப்புகளை நியமித்தோம். நாங்கள் எங்கள் பைபிள் வாசிப்பையும்கூட ஒன்றாக சேர்ந்து செய்து பின்னர் பொருளைக் கலந்தாலோசித்தோம். யெகோவா பிள்ளைகளிடமிருந்து மாத்திரமல்ல, பெற்றோரிடமிருந்தும் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார் என்பதை எங்கள் மகன்களால் காணமுடிந்தது.”
கிறிஸ்தவ பெற்றோர் “போதகசிட்சையே ஜீவவழி” என்ற ஏவப்பட்டெழுதப்பட்ட வாக்கியம் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பொருந்துகிறது என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்கு எல்லா காரியத்திலேயும் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டிய கடமை இருக்கையில், பெற்றோரும்கூட யெகோவா அவர்களிடம் தேவைப்படுத்தும் எல்லா காரியங்களிலும் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றோர்-பிள்ளை உறவை பலப்படுத்திக்கொள்வதைத் தவிர பெற்றோரும் பிள்ளைகளும் கடவுளோடு தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்ள விரும்புவர்.—நீதிமொழிகள் 6:23.
கீழ்ப்படிதலை உடன்பாடாக கருதுங்கள்
பிள்ளைகளை வளர்ப்பது பற்றி கடவுளுடைய வார்த்தை இப்படிப்பட்ட நடைமுறையான ஆலோசனையை வழங்குவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! (பெட்டியைப் பார்க்கவும்.) நீதியின் வழியில் தங்களை சிட்சிக்கும் பெற்றோரிடமிருந்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் முழு கிறிஸ்தவ கூட்டுறவுக்கும் சந்தோஷத்துக்கு உண்மையான காரணமாக இருக்கிறார்கள்.
கடவுளுக்குக் கீழ்ப்படிதல் ஜீவனை அர்த்தப்படுத்துவதன் காரணமாக—கணநேரமும்கூட—நம்முடைய தனிப்பட்ட சுயாதீனத்தின்மீது கடவுளுடைய கட்டளைகள் வைக்கும் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவிடும் எண்ணத்தையும்கூட நாம் தவிர்க்கவேண்டும். உதாரணமாக ஈர்ப்புச் சட்டத்தை நாம் தற்காலிகமாக ஒதுக்கிவிடுவதைக் கற்பனை செய்துபாருங்கள். நம்முடைய சுயாதீனத்தைத் தடைசெய்ய எதுவுமில்லாமல் மலை உச்சியிலிருந்து வானிற்குள் மேலெழுந்து போகும்போது ஏற்படும் பூரிப்பு நம்மை எவ்வளவு கிளர்ச்சியடையச் செய்யும்! ஆனால் காரியங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் என்ன நடக்கும்? நமக்குக் காத்திருக்கும் கீழ்நோக்கிய வீழ்ச்சியைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள்!
சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வது சமநிலையான ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் நம்முடைய வரம்புகளை அறிந்துகொள்ளவும் உதவிசெய்கிறது. அது வற்புறுத்திக் கேட்பவர்களாகவும் மற்றவர்களுடைய உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருப்பதைத் தவிர்க்க நமக்கு உதவிசெய்கிறது. அநிச்சயத்தின் போராட்டத்தைத் தவிர்க்க அது நமக்கு உதவிசெய்கிறது. சுருங்கச் சொன்னால் அது மகிழ்ச்சியில் விளைவடைகிறது.
ஆகவே நீங்கள் வயதுவந்த ஒருவராக இருந்தாலும், ஒரு பிள்ளையாக இருந்தாலும், “நன்மை உண்டாயிருப்பதற்கும்,” “பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,” சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:1-3) சிட்சையை ஏற்றுக்கொள்ளாதிருப்பதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளத் தவறி என்றுமாக வாழும் எதிர்பார்ப்பை யார் ஆபத்துக்குள்ளாக்க விரும்புவார்?—யோவான் 11:26.
[பக்கம் 31-ன் பெட்டி]
பெற்றோர்களே, நீதியில் சிட்சிப்பதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுங்கள்
1. வேதப்பூர்வமான சட்டங்கள் மற்றும் நியமங்களின் அடிப்படையில் சிட்சை கொடுங்கள்.
2. வெறுமென கீழ்ப்படிதலை வற்புறுத்துவதன் மூலமாக அல்ல, ஆனால் கீழ்ப்படிதல் ஏன் ஞானமான ஒரு போக்காக இருக்கிறது என்பதை விளக்குவதன் மூலம் சிட்சைகொடுங்கள்.—மத்தேயு 11:19பி.
3. கோபத்தோடு அல்லது கூச்சலோடு சிட்சை கொடாதிருங்கள்.—எபேசியர் 4:31, 32.
4. அன்புள்ள மற்றும் அக்கறையுள்ள உறவின் பாச உணர்வுக்குள் சிட்சை கொடுங்கள்.—கொலோசெயர் 3:21; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8; எபிரெயர் 12:5-8.
5. பிள்ளைகளுக்குச் சிறுபிராயம் முதற்கொண்டு சிட்சைகொடுங்கள்.—2 தீமோத்தேயு 3:14, 15.
6. திரும்பத் திரும்பவும் உறுதியாகவும் சிட்சை கொடுங்கள்.—உபாகமம் 6:6-9; 1 தெசலோனிக்கேயர் 2:11, 12.
7. முதலாவது உங்களைச் சிட்சித்துக்கொண்டு இவ்விதமாக முன்மாதிரியின் மூலம் கற்பியுங்கள்.—யோவான் 13:15; மத்தேயு 23:2, 3 ஒப்பிடவும்.
8. யெகோவாவின்மீது முழுமையாகச் சார்ந்திருந்து ஜெபத்தில் அவருடைய உதவிக்காக மன்றாடி சிட்சை கொடுங்கள்.—நியாயாதிபதிகள் 13:8-10.
[பக்கம் 30-ன் படம்]
“போதகசிட்சையே ஜீவவழி”