யோசுவா
8 பின்பு யெகோவா யோசுவாவிடம், “பயப்படாதே, திகிலடையாதே.+ போர்வீரர்கள் எல்லாரையும் உன்னோடு கூட்டிக்கொண்டு ஆயி நகரத்துக்கு எதிராகப் போ. இதோ, அந்த நகரத்தையும், தேசத்தையும், அதன் ராஜாவையும், ஜனங்களையும் உன் கையில் கொடுத்துவிட்டேன்.+ 2 எரிகோ நகரத்துக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தது போலவே+ ஆயி நகரத்துக்கும் அதன் ராஜாவுக்கும் செய். ஆனால், அங்கே கைப்பற்றுகிற பொருள்களையும் மிருகங்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்த நகரத்தின் பின்னால் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த வீரர்களை ஏற்பாடு செய்” என்று சொன்னார்.
3 அதனால், யோசுவாவும் போர்வீரர்கள் எல்லாரும் ஆயி நகரத்தோடு போர் செய்யப் போனார்கள். பலம்படைத்த வீரர்களில் 30,000 பேரை யோசுவா தேர்ந்தெடுத்து, அவர்களை ராத்திரி நேரத்தில் அனுப்பினார். 4 அப்படி அனுப்பும்போது, “இந்த நகரத்துக்குப் பின்னால் போய்ப் பதுங்கியிருங்கள். நகரத்தைவிட்டு ரொம்பத் தூரம் போய்விடாதீர்கள். எல்லாரும் தயாராயிருங்கள். 5 நானும் என்னோடு இருக்கிற வீரர்களும் நகரத்துக்குப் போவோம். முன்பு போல அவர்கள் எங்களை எதிர்த்து வரும்போது,+ நாங்கள் திரும்பி ஓடுவோம். 6 அப்போது அவர்கள், ‘முன்பு போலவே திரும்பி ஓடுகிறார்கள்’+ என்று சொல்லி எங்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். ஆனால், நாங்கள் நகரத்தைவிட்டு அவர்களை ரொம்பத் தூரம் வர வைத்துவிடுவோம். 7 அப்போது, பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து நீங்கள் எழுந்துவந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவா அதை உங்கள் கையில் கொடுப்பார். 8 நீங்கள் நகரத்தைப் பிடித்தவுடன், அதைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும்.+ யெகோவா சொன்னபடியே செய்ய வேண்டும். உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டளைகளைக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்.
9 பின்பு யோசுவா அவர்களில் சிலரை அனுப்பினார். அவர்கள் போய், ஆயி நகரத்துக்கு மேற்கே, பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையே, ஓர் இடத்தில் பதுங்கிக்கொண்டார்கள். ஆனால், யோசுவா அன்றைக்கு ராத்திரி மற்ற வீரர்களோடு தங்கினார்.
10 விடியற்காலையில், யோசுவா எழுந்து வீரர்களை ஒன்றுகூட்டினார். பின்பு அவரும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயி நகரத்துக்கு அவர்களை நடத்திக்கொண்டு போனார்கள். 11 அந்த வீரர்கள் எல்லாரும்+ ஆயி நகரத்துக்கு முன்னால் அணிவகுத்துப் போய், அதன் வடக்கே முகாம்போட்டார்கள். அந்த நகரத்துக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. 12 அவர் ஏற்கெனவே சுமார் 5,000 வீரர்களைப் பிரித்தெடுத்து ஆயி நகரத்துக்கு மேற்கே, பெத்தேலுக்கும்+ ஆயிக்கும் இடையில், பதுங்கியிருக்க வைத்திருந்தார்.+ 13 அப்படிப் பதுங்கியிருந்த படை அந்த நகரத்துக்கு மேற்கே இருந்தது.+ மற்ற படை அந்த நகரத்துக்கு வடக்கே முகாம்போட்டிருந்தது.+ யோசுவா அன்றைக்கு ராத்திரி பள்ளத்தாக்கின் நடுவே போனார்.
14 ஆயி நகரத்தின் ராஜா இதைப் பார்த்தபோது, இஸ்ரவேலர்களோடு போர் செய்ய விடியற்காலையிலேயே தன்னுடைய வீரர்களைக் கூட்டிக்கொண்டு, பாலைநிலத்தைப் பார்த்தபடி இருக்கிற ஓர் இடத்துக்கு வேகமாக வந்தான். ஆனால், அவனைத் தாக்குவதற்காக நகரத்துக்குப் பின்னால் வீரர்கள் பதுங்கியிருந்த விஷயம் அவனுக்குத் தெரியவில்லை. 15 ஆயி நகரத்து வீரர்கள் தாக்கியபோது, யோசுவாவும் அவரோடு இருந்த இஸ்ரவேல் வீரர்களும் வனாந்தரத்துக்குப் போகும் பாதையில் ஓடினார்கள்.+ 16 அப்போது, அவர்களைத் துரத்திக்கொண்டு போகும்படி ஆயி நகரத்திலிருந்த ஆண்கள் எல்லாருக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் யோசுவாவைத் துரத்திக்கொண்டே தங்கள் நகரத்தைவிட்டுத் தூரமாகப் போக வேண்டியதாகிவிட்டது. 17 ஆயி நகரத்திலும் பெத்தேல் நகரத்திலும் இருந்த அத்தனை ஆண்களும் நகரவாசலை அப்படியே திறந்துபோட்டுவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள்.
18 அப்போது யெகோவா யோசுவாவிடம், “உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயி நகரத்துக்கு நேராக நீட்டு,+ அந்த நகரத்தை உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதன்படியே, யோசுவா தன் கையிலிருந்த ஈட்டியை நகரத்துக்கு நேராக நீட்டினார். 19 உடனே, பதுங்கியிருந்த வீரர்கள் சட்டென்று எழுந்து நகரத்துக்குள்ளே ஓடிப்போய் அதைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியதுமே அதைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+
20 ஆயி நகரத்தின் ஆண்கள் திரும்பிப் பார்த்தபோது, நகரத்திலிருந்து புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த பிறகு, எந்தப் பக்கத்திலும் தப்பியோட அவர்களுக்குத் தைரியம் வரவில்லை. வனாந்தரத்தின் திசையில் ஓடிக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள் திரும்பி, தங்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்கள்மேல் பாய்ந்தார்கள். 21 பதுங்கியிருந்தவர்கள் நகரத்தைக் கைப்பற்றியதையும் நகரத்திலிருந்து புகை மேலே எழும்புவதையும் யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பி, ஆயி நகரத்தின் ஆண்களைத் தாக்கினார்கள். 22 நகரத்துக்குத் தீ வைத்தவர்களும் அந்த ஆண்களைத் தாக்க வந்தார்கள். இதனால், இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்த இஸ்ரவேலர்களுக்கு நடுவில் ஆயி நகரத்தின் ஆண்கள் மாட்டிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவரைக்கூட தப்பவிடாமல் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.+ 23 ஆனால், ஆயி நகரத்தின் ராஜாவை+ உயிரோடு பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
24 இஸ்ரவேல் வீரர்கள் தங்களைத் துரத்திக்கொண்டு வந்த ஆயி நகரத்தின் ஆண்கள் எல்லாரையும் அந்த வனாந்தரத்திலேயே கொன்றுபோட்டார்கள். ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் வெட்டிப்போட்ட பிறகு ஆயி நகரத்துக்குத் திரும்பிப்போய் அங்கே இருந்தவர்களையும் வெட்டிப்போட்டார்கள். 25 அன்றைக்குக் கொல்லப்பட்ட ஆண்களும் பெண்களும் மொத்தம் 12,000 பேர். 26 ஆயி நகரத்து ஜனங்கள் எல்லாரும் அழிக்கப்படும்வரை+ யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டே இருந்தார்,+ தன் கையை மடக்கவே இல்லை. 27 யோசுவாவுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளின்படியே,+ அந்த நகரத்தில் கைப்பற்றிய மிருகங்களையும் பொருள்களையும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
28 பின்பு யோசுவா ஆயி நகரத்தைச் சுட்டெரித்து அதை வெறும் மண்மேடாக்கினார்.+ அது இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது. 29 ஆயி நகரத்தின் ராஜாவைக் கொன்று, அவனுடைய உடலை அன்று சாயங்காலம்வரை மரக் கம்பத்தில்* தொங்கவிட்டார். சூரியன் மறையப்போகும் வேளையில், சடலத்தை மரக் கம்பத்திலிருந்து கீழே இறக்கச் சொல்லி யோசுவா கட்டளை கொடுத்தார்.+ இஸ்ரவேலர்கள் அந்த நகரத்தின் வாசலில் உடலை வீசியெறிந்து, கற்களை அதன்மேல் பெரிய குவியலாகக் குவித்துவைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது.
30 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு ஏபால் மலையில்+ யோசுவா பலிபீடம் கட்டினார். 31 “இரும்புக் கருவிகளால் வெட்டப்படாத கற்களைக்கொண்டு பலிபீடம் கட்ட வேண்டும்”+ என்று மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டபடியே யோசுவா செய்தார். யெகோவாவின் ஊழியராகிய மோசே இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார். அந்தப் பலிபீடத்தின் மேல் யெகோவாவுக்குத் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் ஜனங்கள் செலுத்தினார்கள்.+
32 இஸ்ரவேலர்களின் முன்னால் மோசே எழுதியிருந்த திருச்சட்டத்தை+ யோசுவா அந்தக் கற்கள்மேல் எழுதினார்.+ 33 அப்போது, எல்லா இஸ்ரவேலர்களும் அவர்களுடைய பெரியோர்களும் அதிகாரிகளும் நியாயாதிபதிகளும் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்த மற்ற தேசத்து ஜனங்களும்+ யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியின் இரண்டு பக்கங்களிலும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களாகிய குருமார்களைப் பார்த்தபடி அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கிடைப்பதற்காக யெகோவாவின் ஊழியராகிய மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ அவர்களில் பாதிப் பேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் பாதிப் பேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள்.+ 34 அதன்பின், திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லாவற்றையும் யோசுவா சத்தமாக வாசித்தார்.+ திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களையும்+ சாபங்களையும்+ மற்ற எல்லா வார்த்தைகளையும் வாசித்தார். 35 மோசே கொடுத்த கட்டளைகளை இஸ்ரவேல் சபையாராகிய ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், அவர்களோடு வாழ்ந்த மற்ற தேசத்து ஜனங்கள்+ என எல்லாருக்கும்+ முன்னால் ஒரு வார்த்தைகூட விடாமல் வாசித்தார்.+