கடவுளுடைய ஆலயம்—அதன்மீது ‘உங்கள் இதயத்தை ஊன்ற வையுங்கள்!’
“மனுபுத்திரனே, நான் காண்பிக்கும் அனைத்தின்மீதும் உன் இதயத்தை ஊன்ற வை. . . . நீ காணும் யாவற்றையும் இஸ்ரவேல் வீட்டாருக்குத் தெரிவி.”—எசேக்கியேல் 40:4, NW.
1. பொ.ச.மு. 593-ல் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடைய நிலை என்ன?
வருடம் பொ.ச.மு. 593. அது இஸ்ரவேலர் நாடுகடத்தப்பட்ட 14-ம் வருடம். பாபிலோனில் வாழும் யூதர்களுடைய நேசத்துக்குரிய தாயகமோ இப்போது வெகு தூரத்தில்! எருசலேம் ஜூவாலித்து எரிவதைக் கண்டதுதான் அவர்களுடைய கண்களில் நிறைந்திருக்கும் கடைசிகாட்சி! வலிமைமிக்க அதன் மதிற்சுவரோ இப்போது மடிந்த நிலையில், ஒய்யாரமான கட்டடங்களோ இடிபாடுகளுக்கு மத்தியில்! ஒருகாலத்தில் அந்நகரத்திற்கு மணிமகுடமாகவும் பூமி முழுவதற்கும் மெய் வணக்கத்தின் ஒரே மையமாகவும் திகழ்ந்த யெகோவாவின் ஆலயமோ தரைமட்டம்! இப்பொழுது, பாபிலோனிய சிறையிருப்பில் இஸ்ரவேலர் கழிக்கவேண்டியதோ வெகு காலம்! வாக்குப்பண்ணப்பட்ட விடுதலையை அனுபவிக்க இன்னும் 56 ஆண்டுகள் உருண்டோட வேண்டும்!—எரேமியா 29:10.
2. எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்தைப் பற்றிய நினைவுகள் ஏன் எசேக்கியேலை துக்கப்படுத்தியிருக்கும்?
2 நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், காட்டு மிருகங்கள் சஞ்சரிக்கும் இடமாக மாறி, சிதிலங்களாக காட்சியளிக்கும் கடவுளுடைய ஆலயத்தைப் பற்றிய நினைவலைகள் உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு மிகவும் மனவாட்டத்தை உண்டாக்கியிருக்கும். (எரேமியா 9:11) பூசி என்ற அவருடைய தகப்பனே அங்கு ஆசாரியராக சேவித்தார். (எசேக்கியேல் 1:3) எசேக்கியேலும் அதே சிலாக்கியத்தில் மனமகிழ்ந்திருப்பார். ஆனால் பொ.ச.மு. 617-ல் வாலிபராக துள்ளித்திரிந்த காலத்திலேயே எருசலேமின் சீமான்களோடு அவரும் சிறைபிடித்துச் செல்லப்பட்டார். இப்பொழுதோ அவருக்கு ஏறக்குறைய 50 வயது. இனி ஒருக்காலும் எருசலேமை காணவோ ஆலயத்தைத் திரும்ப கட்டுவதில் அங்கம் வகிக்கவோ முடியாதென எசேக்கியேல் ஒருவேளை எண்ணியிருக்கலாம். அப்படியானால், மகிமையான ஆலயத்தை தரிசனத்தில் கண்டபோது எசேக்கியேலுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்!
3. (அ) ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் நோக்கம் என்ன? (ஆ) அந்தத் தரிசனத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் யாவை?
3 எசேக்கியேல் புத்தகத்தில் ஒன்பது அதிகாரங்களைக் கொண்ட இந்த விரிவான தரிசனம், சிறையிருப்பிலிருந்த யூதேயர்களுக்கு விசுவாசத்தை பலப்படுத்தும் ஒரு வாக்குறுதியை கொடுத்தது. அது தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்பதே! அந்த நூற்றாண்டுகள் முதற்கொண்டு, நம்முடைய நாள் வரையும்கூட, யெகோவாவை நேசிப்போருக்கு இத்தரிசனம் உற்சாகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது. எப்படி? சிறையிருப்பிலிருந்த யூதேயர்களுக்கு இந்தத் தீர்க்கதரிசன காட்சி எதை அர்த்தப்படுத்தியது என்பதை ஆராய்வோமாக. அதில் நான்கு முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன: ஆலயம், ஆசாரியத்துவம், அதிபதி, தேசம்.
ஆலயம் உயிர்பெற்றது
4. எசேக்கியேல் தன்னுடைய தரிசனத்தின் ஆரம்பத்தில் எங்கு கொண்டு செல்லப்படுகிறார், அங்கே அவர் என்ன பார்க்கிறார், யார் அவருக்கு வழிகாட்டுகிறார்?
4 முதலில், எசேக்கியேல் ‘மகா உயரமான ஒரு மலைக்கு’ கொண்டு செல்லப்படுகிறார். அந்த மலைக்கு தெற்கே மதில்சூழ்ந்த பட்டணத்தைப் போன்ற ஒரு மாபெரும் ஆலயம். ‘வெண்கல தோற்றமுடைய’ ஒரு தேவதூதன் அந்தத் தீர்க்கதரிசியை உள்ளும் புறமும் கூட்டிச்சென்று அந்த இடங்களை காட்டுகிறார். (எசேக்கியேல் 40:2, 3) தரிசனம் தொடர்கையில், ஒரேமாதிரியான மூன்று ஜோடி கதவுகளைக் கொண்ட அந்த ஆலயத்தின் காவலர் அறைகள், வெளிப்பிரகாரம் உட்பிரகாரம், சாப்பாட்டு அறைகள், பலிபீடம், பரிசுத்த மற்றும் மகா பரிசுத்த அறைகளைக் கொண்ட ஆலயப்பிரகாரம் ஆகியவற்றை தேவதூதன் கவனமாய் அளப்பதை எசேக்கியேல் காண்கிறார்.
5. (அ) எசேக்கியேலுக்கு யெகோவா என்ன உறுதியளிக்கிறார்? (ஆ) ஆலயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய ‘ராஜாக்களின் பிரேதங்கள்’ யாவை, அவற்றை நீக்குவது ஏன் முக்கியமாய் இருந்தது?
5 பின்பு, யெகோவாவே தரிசனத்தில் தோன்றுகிறார். அவர் ஆலயத்தில் நுழைகிறார்; அங்கே தாம் வாசம்பண்ணப் போவதாக எசேக்கியேலிடம் உறுதியளிக்கிறார். ஆனால் தம்முடைய ஆலயம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்கிறார். அவர் உரைப்பதாவது: “இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.” (எசேக்கியேல் 43:2-4, 7, 9) தெளிவாகவே, ‘ராஜாக்களின் பிரேதங்கள்’ விக்கிரகங்களைக் குறிக்கின்றன. எருசலேமின் கலகக்கார ஆட்சியாளர்களும் மக்களும் கடவுளுடைய ஆலயத்தை விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தி, அவற்றை ராஜாக்களாக்கியிருந்தனர். (ஒப்பிடுக: ஆமோஸ் 5:26, பொ.மொ.) அவை உயிருள்ள கடவுட்களோ ராஜாக்களோ அல்ல, அவை யெகோவாவின் கண்களில் உயிரற்ற, அசுத்தமான பொருட்கள். அவை கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்.—லேவியராகமம் 26:30; எரேமியா 16:18.
6. ஆலயத்தை அளவிடுவது எதைக் குறித்துக் காட்டியது?
6 தரிசனத்தின் இந்த பகுதியின் நோக்கம் என்ன? இது, கடவுளுடைய ஆலயத்தில் தூய்மையான வணக்கம் முழுமையாக திரும்ப நிலைநாட்டப்படும் என்பதற்கான உறுதியை நாடுகடத்தப்பட்டோருக்கு அளித்தது. மேலும், ஆலயத்தை அளவிடுவது, தரிசனத்தின் நிறைவேற்றம் நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு தெய்வீக உத்தரவாத்தை அளித்தது. (ஒப்பிடுக: எரேமியா 31:39, 40; சகரியா 2:2-8.) எல்லாவித விக்கிரகாராதனையும் அடியோடு ஒழிக்கப்படும். யெகோவா மறுபடியும் தம்முடைய வீட்டை ஆசீர்வதிப்பார்.
ஆசாரியத்துவமும் அதிபதியும்
7. லேவியர்கள் மற்றும் ஆசாரியர்கள் சம்பந்தமாக என்ன தகவல் கொடுக்கப்படுகிறது?
7 ஆசாரியத்துவமும் சுத்திகரிக்கப்படும் அல்லது தூய்மைப்படுத்தப்படும். விக்கிரகாராதனைக்கு பணிந்துவிட்டதால் லேவியர் கண்டிக்கப்படுவர். ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த சாதோக்கின் குமாரர்களோ சுத்தத்தை காத்துக் கொண்டதற்காக பாராட்டப்படுவர், பலனளிக்கப்படுவர்.a என்றபோதிலும், கடவுளுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டில்—தனிப்பட்ட நபர்களாக அவர்களுடைய உண்மைத்தன்மையின் அடிப்படையில்—இருதொகுதியினரும் ஊழிய ஸ்தானங்களை அனுபவிப்பர். மேலும், யெகோவா இவ்வாறு ஆணையிட்டார்: “அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.” (எசேக்கியேல் 44:10-16, 23) ஆகவே, ஆசாரியத்துவம் மீண்டும் ஸ்தாபிக்கப்படும், ஆசாரியர்கள் உண்மையோடு சகித்திருந்ததற்கு பலனளிக்கப்படுவர்.
8. (அ) பூர்வ இஸ்ரவேலில் இருந்த அதிபதிகள் யார்? (ஆ) எசேக்கியேல் தரிசனத்தின் அதிபதி என்ன வழிகளில் தூய வணக்கத்தில் சுறுசுறுப்பாக இருந்தார்?
8 அதிபதி என அழைக்கப்படுபவரையும் தரிசனம் அறிமுகப்படுத்துகிறது. மோசேயின் காலத்திலிருந்தே தேசத்தில் அதிபதிகள் இருந்தனர். அதிபதி என்பதற்கான எபிரெய பதம் நாஸி (na·siʼʹ); இது, ஒரு தகப்பனுடைய குடும்பத்தின் அல்லது ஒரு கோத்திரத்தின் அல்லது ஒரு தேசத்தின் தலைவரை குறிக்கலாம். எசேக்கியேலின் தரிசனத்தில், இஸ்ரவேல் ஆட்சியாளர்கள் மக்களை ஒடுக்கியதற்காக ஒரு வகுப்பாராக கண்டனம் செய்யப்படுகின்றனர். அதேசமயத்தில் பட்சபாதமில்லாமலும் நேர்மையாகவும் இருக்க புத்திமதி கொடுக்கப்படுகின்றனர். ஆசாரிய வகுப்பைச் சேராதபோதிலும், அந்த அதிபதி தூய வணக்கத்தில் ஒரு பிரதான பாகம் வகித்து சேவிக்கிறார். அவர் ஆசாரியரல்லாத கோத்திரத்தாரோடு வெளிப்பிரகாரத்தின் வழியாக வந்துபோகிறார். கிழக்கு வாசலின் மண்டபத்தில் உட்கார்ந்துகொண்டு, அந்தப் பலிகளில் சிலவற்றை மக்களுக்காக செலுத்துகிறார். (எசேக்கியேல் 44:2, 3; 45:8-12, 17) இவ்வாறு, திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசம் முன்மாதிரியான தலைவர்களால்—கடவுளுடைய மக்களை ஒழுங்கமைப்பதில் ஆசாரியத்துவத்தை ஆதரிப்போரும் ஆவிக்குரிய காரியங்களில் சிறந்த முன்மாதிரி வகிப்போருமாகிய ஆண்களால்—ஆசீர்வதிக்கப்படும் என எசேக்கியேலின் ஜனங்களுக்கு இத்தரிசனம் உறுதியளித்தது.
தேசம்
9. (அ) தேசம் எவ்வாறு பிரிக்கப்படும், ஆனால் சுதந்தரம் யாருக்கு கிடைக்காது? (ஆ) பரிசுத்த பங்கு எது, அதில் என்ன இருந்தது?
9 எசேக்கியேல் தரிசனத்தில் கடைசியாக வருவது இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிய விவரிப்பு. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு பங்கு வீதம் அது பிரிக்கப்படும். அதிபதிக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் ஆசாரியர்களுக்கோ எந்தப் பங்கும் கிடையாது, ஏனென்றால் யெகோவா கூறினார்: “நானே அவர்கள் சுதந்தரம்.” (எசேக்கியேல் 44:10, 28; எண்ணாகமம் 18:20) அதிபதிக்கு ஒதுக்கப்படும் நிலம், பரிசுத்த பங்கு என அழைக்கப்படும் விசேஷ பகுதியின் இருபக்கங்களிலும் கொடுக்கப்படும் என்று அத்தரிசனம் காண்பித்தது. இது மூன்று பங்காக பிரிக்கப்பட்ட சதுர நிலம்—மேற்பகுதி மனந்திரும்பிய லேவியருக்கும், நடுப்பகுதி ஆசாரியருக்கும் என பிரிக்கப்பட்டது. அதன் கீழ்ப்பகுதியோ, நகர் பகுதியாகவும் இரு பக்கங்களிலும் விளைநிலங்களாகவும் விடப்பட்டது. சதுரவடிவ பங்கின் மத்தியில், ஆசாரியருடைய நிலத்தில் யெகோவாவின் ஆலயம் இருக்கும்.—எசேக்கியேல் 45:1-7.
10. நாடுகடத்தப்பட்டிருந்த உண்மையுள்ள யூதேயர்களுக்கு தேசத்தை பிரிப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம் எதை அர்த்தப்படுத்தியது?
10 இவையெல்லாம் சிறைபட்டோருடைய இதயத்தை எவ்வளவாய் உந்துவித்திருக்கும்! ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசத்தில் ஒரு பங்குண்டு என்று உறுதியளிக்கப்பட்டது. (மீகா 4:4-ஐ ஒப்பிடுக.) அங்கு தூய வணக்கம் மகிமைப்படுத்தப்பட்டு முக்கிய பாகத்தை வகிக்கும். ஆசாரியர்களைப்போல அதிபதியும், மக்களால் நன்கொடையாக கொடுக்கப்படும் நிலத்தில் வாழ்வதை எசேக்கியேலின் தரிசனத்தில் கவனியுங்கள். (எசேக்கியேல் 45:16) ஆகவே புதுப்பிக்கப்பட்ட தேசத்தில், முன்னின்று வழிநடத்த யெகோவா நியமிக்கும் ஆட்களுடைய வேலைக்காக மக்கள் நன்கொடை செலுத்தி, கீழ்ப்படிதலோடு அவர்களை ஆதரிக்க வேண்டும். மொத்தத்தில் இத்தேசம், ஒழுங்கமைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் பாதுகாப்புக்கும் அடையாளமாய் திகழ்ந்தது.
11, 12. (அ) திரும்ப நிலைநாட்டப்பட்ட தாயகத்தை ஆசீர்வதிப்பார் என்பதை தீர்க்கதரிசனமாக எவ்வாறு யெகோவா தம்முடைய மக்களுக்கு உறுதிப்படுத்தினார்? (ஆ) நதிக் கரைகளின் நெடுக இருந்த மரங்களால் அடையாளப்படுத்தப்படுவது என்ன?
11 அவர்கள் தேசத்தை யெகோவா ஆசீர்வதிப்பாரா? இதயத்திற்கு இதமளிக்கும் விவரிப்பின் மூலம் இக்கேள்விக்கு தீர்க்கதரிசனம் பதிலளிக்கிறது. ஆலயத்திலிருந்து ஒரு நதி புறப்படுகிறது. அது விசாலமாகிக்கொண்டே சென்று சவக்கடலில் சேரும்போது விசை நீரோட்டமாக மாறுகிறது. உயிரற்ற தண்ணீருக்கு அது ஜீவனளிக்கிறது, அதன் கரைநெடுக மீன்பிடி தொழில் செழித்தோங்குகிறது. வருடம் முழுக்க கனிதந்து, போஷாக்கையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் அநேக கனி மரங்கள் அதன் இருகரைகளிலும் இருக்கின்றன.—எசேக்கியேல் 47:1-12.
12 சிறைபட்டோர் நெஞ்சார நேசித்த, திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய முந்தைய தீர்க்கதரிசனங்களை இந்த வாக்குறுதி எதிரொலித்து உறுதிப்படுத்தியது. திரும்ப நிலைநாட்டப்பட்டு மறுபடியும் குடியேற்றப்படும் இஸ்ரவேலை, யெகோவாவின் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகள் பல முறை பரதீஸிய வார்த்தைகளில் விவரித்திருக்கின்றனர். பாழான ஸ்தலங்கள் மறுபடியும் செழிப்படைவது அந்தத் தீர்க்கதரிசனங்களில் அடிக்கடி தோன்றும் ஒரு குறிப்பாகும். (ஏசாயா 35:1, 6, 7; 51:3; எசேக்கியேல் 36:35; 37:1-14) ஆகவே, புதுப்பிக்கப்பட்ட ஆலயத்திலிருந்து யெகோவாவின் உயிரளிக்கும் ஆசீர்வாதங்கள் நதியைப்போல பாய்ந்தோடும் என அவர்கள் எதிர்பார்க்கலாம். அதன் விளைவாக, ஆவிக்குரிய விதத்தில் மரித்திருந்த ஒரு தேசம் உயிர்ப்படையும். ஆவிக்குரிய முதிர்ச்சிவாய்ந்த விசேஷித்த ஆண்களால்—தரிசனத்தின் கரைகளில் காணப்பட்ட மரங்களைப்போல நீதியாயும் உறுதியாயும் இருந்து, பாழான தேசத்தைத் திரும்ப கட்டுவதில் முன்னின்று வழிநடத்துகிற ஆண்களால்—திரும்ப நிலைநாட்டப்பட்ட மக்கள் ஆசீர்வதிக்கப்படுவர். ‘நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவற்றைக் கட்டும்’ ‘நீதியின் பெரிய விருட்சங்களைப்’ பற்றி ஏசாயாவும் எழுதியிருந்தார்.—ஏசாயா 61:3, 4, NW.
எப்பொழுது தரிசனம் நிறைவேற்றமடைகிறது?
13. (அ) திரும்ப நிலைநாட்டப்பட்ட தம்முடைய மக்களை எந்த அர்த்தத்தில் யெகோவா ‘நீதியின் பெரிய விருட்சங்களால்’ ஆசீர்வதித்தார்? (ஆ) சவக்கடலை பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
13 சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் ஏமாற்றம் அடைந்தனரா? இல்லவே இல்லை! திரும்ப நிலைநாட்டப்பட்ட மீதியானோர் பொ.ச.மு. 537-ல் தங்கள் தாயகத்திற்கு வந்து சேர்ந்தனர். காலப்போக்கில், ‘நீதியின் பெரிய விருட்சங்களைப்’ போன்ற இவர்களுடைய தலைமையில்—வேதபாரகனாகிய எஸ்றா, தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா, பிரதான ஆசாரியனாகிய யோசுவா ஆகியோருடைய தலைமையில்—நெடுங்காலம் பாழாய்கிடந்த இந்த இடங்கள் திரும்ப கட்டப்பட்டன. உதாரணமாக, அதிபதிகளாகிய நெகேமியா, செருபாபேல் ஆகியோர் நியாயத்தோடும் நீதியோடும் தேசத்தில் ஆட்சிபுரிந்தனர். யெகோவாவின் ஆலயம் திரும்ப நிலைநாட்டப்பட்டது. ஜீவனுக்கான அவருடைய ஏற்பாடுகள்—அவருடைய உடன்படிக்கையின்படி வாழ்வதால் வரும் ஆசீர்வாதங்கள்—மறுபடியும் வழிந்தோட ஆரம்பித்தன. (உபாகமம் 30:19; ஏசாயா 48:17-20) அவற்றில் ஓர் ஆசீர்வாதமே அறிவு. ஆசாரியத்துவம் மறுபடியும் செயல்பட ஆரம்பித்தது; ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தைப் பற்றி மக்களுக்கு போதித்தனர். (மல்கியா 2:7) அதன் விளைவாக, சவக்கடல் உயிர்பெற்று மீன்பிடி தொழில் செழித்தோங்குவதாக சித்தரித்துக் காட்டப்பட்டபடி, மக்கள் ஆவிக்குரிய விதத்தில் மறுபடியும் புத்துயிர் பெற்று பலன்தரும் யெகோவாவின் ஊழியர்களானார்கள்.
14. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்ததும் நிறைவேறிய எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தைக் காட்டிலும் பெரிய நிறைவேற்றம் ஏன் நிகழ வேண்டும்?)
14 எசேக்கியேல் தரிசனத்தில் நிறைவேறிய நிகழ்ச்சிகள் இவை மாத்திரம்தானா? இல்லை, இதைவிட மகத்தான ஒன்று சுட்டிக்காட்டப்படுகிறது. எசேக்கியேல் கண்ட அந்த ஆலயத்தை விவரிக்கப்பட்டவாறு கட்ட முடியாது என்பதை கவனியுங்கள். உண்மைதான், யூதர்கள் அத்தரிசனத்தை மெய்யான ஒன்றாக எடுத்துக்கொண்டு அதிலுள்ள விவரங்கள் சிலவற்றை பொருத்தினார்கள்.b ஆனால், முந்தைய ஆலயம் இருந்த இடமான மோரியா மலையில்கூட அதைக் கட்ட முடியாதளவுக்கு அது மிகப் பெரிதாக இருந்தது. அதோடு, எசேக்கியேல் பார்த்த ஆலயம் நகரத்திற்குள் இல்லை, ஆனால் சிறிது தூரம் தள்ளி ஒரு தனி நிலப்பரப்பில் இருந்தது. மறுபட்சத்தில் இரண்டாவது ஆலயமோ, முந்தின ஆலயம் இருந்த அதே இடத்தில், எருசலேம் நகரத்திலேயே கட்டப்பட்டது. (எஸ்றா 1:1, 2) மேலும், சொல்லர்த்தமான எந்த நதியும் எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்படவில்லை. ஆகவே, எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் சிறிய நிறைவேற்றத்தையே பூர்வ இஸ்ரவேலர் கண்டனர். இந்தத் தரிசனத்திற்கு பெரிய, ஆவிக்குரிய நிறைவேற்றம் ஒன்று இருக்கவேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
15. (அ) யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயம் எப்பொழுது செயல்பட துவங்கியது? (ஆ) கிறிஸ்து பூமியிலிருந்த காலத்தில் எசேக்கியேல் தரிசனம் நிறைவேறவில்லை என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
15 தெளிவாகவே, யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தில் எசேக்கியேல் தரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும். இந்த ஆலயத்தைப் பற்றி எபிரெயர் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுல் விரிவாக கூறுகிறார். பொ.ச. 29-ல் இயேசு கிறிஸ்து அதன் பிரதான ஆசாரியராக அபிஷேகம் பண்ணப்பட்டபோது அந்த ஆலயம் செயல்பட ஆரம்பித்தது. ஆனால் எசேக்கியேல் தரிசனம் இயேசுவின் நாளில் நிறைவேற்றமடைந்ததா? நிச்சயமாகவே இல்லை. முழுக்காட்டுதல், பலிக்குரிய மரணம், மகா பரிசுத்த ஸ்தலமாகிய பரலோகத்திற்குள் நுழைவது ஆகியவற்றின் மூலம் பாவநிவாரண நாளின் தீர்க்கதரிசன உட்கருத்தை பிரதான ஆசாரியராக இயேசு நிறைவேற்றினார். (எபிரெயர் 9:24) ஆனால் பிரதான ஆசாரியனைப் பற்றியோ பாவநிவாரண நாளைப் பற்றியோ எசேக்கியேல் தரிசனத்தில் ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பது அக்கறைக்குரிய விஷயம். ஆகவே, இத்தரிசனம் பொ.ச. முதல் நூற்றாண்டை சுட்டிக்காட்டுகிறது என நினைப்பதற்கு சாத்தியமில்லை. அப்படியானால், இது எந்தக் காலப்பகுதிக்குப் பொருந்துகிறது?
16. எசேக்கியேல் தரிசனத்தின் சூழமைவு வேறெந்த தீர்க்கதரிசனத்தை நினைப்பூட்டுகிறது, எசேக்கியேல் தரிசனத்தின் முக்கிய நிறைவேற்றத்தின் காலத்தைப் பகுத்துணர இது எவ்வாறு உதவுகிறது?
16 பதிலை கண்டுபிடிக்க தரிசனத்திற்கே மறுபடியும் நம் கவனத்தைத் திருப்பலாம். எசேக்கியேல் இவ்வாறு எழுதினார்: “தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.” (எசேக்கியேல் 40:2) இந்தத் தரிசனத்திற்கு பின்னணியாக சேவித்த “மகா உயரமான ஒரு மலை,” மீகா 4:1-ஐ நமக்கு நினைப்பூட்டுகிறது: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.” இத்தரிசனம் எப்போது நிறைவேற தொடங்குகிறது? தேசங்கள் பொய் கடவுட்களை இன்னமும் வணங்கிவருகையில் ஆரம்பமாகிறது என மீகா 4:5 காட்டுகிறது. உண்மையில், தூய வணக்கம் ‘கடைசி நாட்களில்,’ அதாவது நம்முடைய காலத்தில் உயர்த்தப்பட்டிருக்கிறது; கடவுளுடைய ஊழியர்களின் வாழ்க்கையில் அதற்குரிய சரியான இடத்தில் அது திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
17. எசேக்கியேல் தரிசனத்தின் ஆலயம் சுத்திகரிக்கப்பட்ட காலத்தை எவ்வாறு மல்கியா 3:1-5-ல் உள்ள தீர்க்கதரிசனம் தீர்மானிக்க நமக்கு உதவுகிறது?
17 இந்த நிலைநாட்டப்படுதலை எது சாத்தியமாக்கியது? யெகோவா ஆலயத்திற்கு வந்து, தம்முடைய வீடு விக்கிரகாராதனையிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டுமென வற்புறுத்துவதே எசேக்கியேல் தரிசனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்பதை நினைவில் வையுங்கள். கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயம் எப்போது சுத்திகரிக்கப்பட்டது? மல்கியா 3:1-5-ல், ‘உடன்படிக்கையின் தூதனாகிய’ இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து யெகோவா ‘தம்முடைய ஆலயத்துக்கு வரும்’ ஒரு காலத்தை முன்னறிவிக்கிறார். அதன் நோக்கம்? “அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.” முதல் உலக யுத்தத்தின் சமயத்தில் இந்தச் சுத்திகரிப்பு ஆரம்பமானது. அதன் விளைவு? யெகோவா தம்முடைய வீட்டில் தங்கியிருந்து, 1919 முதற்கொண்டு தம்முடைய மக்களின் ஆவிக்குரிய ‘தேசத்தை’ ஆசீர்வதித்திருக்கிறார். (ஏசாயா 66:8) அப்படியானால், எசேக்கியேலின் ஆலய தீர்க்கதரிசனம் முக்கியமாய் இந்தக் கடைசி நாட்களில் நிறைவேறுகிறது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
18. ஆலய தரிசனம் எப்பொழுது கடைசி நிறைவேற்றத்தை அடையும்?
18 திரும்ப நிலைநாட்டுதல் பற்றிய மற்ற தீர்க்கதரிசனங்களைப் போலவே எசேக்கியேல் கண்ட தரிசனத்திற்கும் மற்றொரு நிறைவேற்றம், அதாவது கடைசி நிறைவேற்றம் இருக்கிறது—அது பரதீஸில் நிறைவேற்றமடையும். அந்தச் சமயத்தில்தான் நேர்மை இருதயமுள்ள மனிதவர்க்கம் கடவுளுடைய ஆலய ஏற்பாட்டின் முழு நன்மையையும் பெறும். அப்போது கிறிஸ்து, 1,44,000 பேராகிய பரலோக ஆசாரியர்களுடன் சேர்ந்து தம்முடைய கிரய பலியின் மதிப்பை செயற்படுத்துவார். கிறிஸ்துவின் ஆட்சிக்கு கீழ்ப்படியும் எல்லா மனித பிரஜைகளும் பரிபூரணத்திற்கு உயர்த்தப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:5, 6) இருப்பினும், எசேக்கியேலின் தரிசனம் முக்கியமாய் நிறைவேற ஆரம்பிக்கும் காலம் பரதீஸாக இருக்க முடியாது. ஏன்?
தரிசனம் நம்முடைய நாளின்மீது கவனத்தை திருப்புகிறது
19, 20. தரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம், பரதீஸில் அல்ல, ஆனால் இன்றே ஏன் நிறைவேற வேண்டும்?
19 விக்கிரக ஆராதனையிலிருந்தும் ஆவிக்குரிய வேசித்தனத்திலிருந்தும் சுத்திகரிக்க வேண்டிய ஓர் ஆலயத்தை எசேக்கியேல் பார்த்தார். (எசேக்கியேல் 43:7-9) பரதீஸில் யெகோவாவின் வணக்கத்திற்கு இது நிச்சயமாகவே பொருந்தாது. கூடுதலாக, தரிசனத்தில் வரும் ஆசாரியர்கள், பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகோ அல்லது ஆயிர வருட ஆட்சியின்போதோ அல்ல, மாறாக பூமியில் மீந்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரிய வகுப்பாருக்கே படமாக இருக்கின்றனர். ஏன்? ஆசாரியர்கள் உட்பிரகாரத்தில் சேவிப்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். கிறிஸ்துவின் உதவி ஆசாரியர்கள் பூமியிலிருக்கையில் அனுபவிக்கும் விசேஷித்த ஆவிக்குரிய நிலைநிற்கைக்கு இந்த உட்பிரகாரம் படமாக இருக்கிறது என்பதை காவற்கோபுர பத்திரிகையின் முந்தைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் காண்பித்திருக்கின்றன.c இத்தரிசனம் ஆசாரியர்களின் அபூரணத்தை வலியுறுத்துவதையும் கவனியுங்கள். தங்கள் சொந்த பாவங்களுக்காக பலிகளைச் செலுத்தும்படி அவர்களுக்கு சொல்லப்படுகிறது. ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க ரீதியில் அசுத்தமாகிவிடும் ஆபத்தைக் குறித்து அவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். ஆகவே, அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டோரை குறிப்பதில்லை. அவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: ‘எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்.’ (1 கொரிந்தியர் 15:52; எசேக்கியேல் 44:21, 22, 25, 27) எசேக்கியேல் தரிசனத்தில் வரும் ஆசாரியர்கள், மக்களோடு சேர்ந்து நேரடியாக அவர்களுக்கு சேவை செய்கின்றனர். பரதீஸில் அவ்வாறு இருக்காது; அப்போது ஆசாரிய வகுப்பு பரலோகத்தில் இருக்கும். ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘திரள் கூட்டத்தாரோடு’ சேர்ந்து இன்று பூமியில் நெருக்கமாய் வேலை செய்வதையே இத்தரிசனம் அழகாக விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9; எசேக்கியேல் 42:14.
20 ஆகவே, ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேல் தரிசனம் இன்று நிறைவேறிவரும் ஓர் ஆவிக்குரிய சுத்திகரிப்பின் ஆரோக்கியமான விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? இது இறையியல் சார்ந்த ஏதோ புரியாத புதிர் அல்ல. ஒரே மெய் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அனுதினமும் வணங்கும் விதத்துடன் இத்தரிசனம் அதிக தொடர்புடையது. எப்படி என்பதை நம்முடைய அடுத்த கட்டுரையில் காண்போம்.
[அடிக்குறிப்புகள்]
a இது, தனிப்பட்ட விதமாய் எசேக்கியேலின் இதயத்தை தொட்டிருக்கலாம், ஏனெனில் அவர் சாதோக்கின் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது.
b உதாரணமாக, மீண்டும் கட்டப்பட்ட ஆலயத்தில் பலிபீடம், ஆலயத்தின் இரட்டைக் கதவுகள், சமையல் பகுதிகள் ஆகியவை எசேக்கியேல் தரிசனத்தில் உள்ளவாறே கட்டப்பட்டன என பூர்வ மிஸ்னா கூறுகிறது.
c காவற்கோபுரம், ஜூலை 1, 1996, பக்கம் 16; ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 1, 1972, பக்கம் 718 ஆகியவற்றை காண்க.
நினைவிருக்கிறதா?
◻ ஆலயத்தையும் அதன் ஆசாரியத்துவத்தையும் பற்றி எசேக்கியேல் கண்ட தரிசனத்தின் ஆரம்ப நிறைவேற்றம் என்ன?
◻ தேசத்தைப் பங்கிடுதல் பற்றிய எசேக்கியேல் தரிசனம் எவ்வாறு முதலில் நிறைவேறியது?
◻ பூர்வ இஸ்ரவேலில் உண்மையுள்ள அதிபதிகளாக செயல்பட்டவர்கள் யார், ‘நீதியின் பெரிய விருட்சங்களாக’ செயல்பட்டவர்கள் யார்?
◻ எசேக்கியேல் ஆலய தரிசனம் ஏன் கடைசி நாட்களில் முக்கிய நிறைவேற்றத்தைக் காண வேண்டும்?