அதிகாரம் 14
“இதுதான் ஆலயத்தைப் பற்றிய சட்டம்”
முக்கியக் குறிப்பு: ஆலயத்தைப் பற்றிய தரிசனத்திலிருந்து எசேக்கியேல் காலத்தில் வாழ்ந்தவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களும், இன்று நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களும்
1, 2. (அ) ஆலயம் சம்பந்தமான எசேக்கியேலின் தரிசனத்தைப் பற்றி முந்தின அதிகாரத்தில் என்ன தெரிந்துகொண்டோம்? (ஆ) இந்த அதிகாரத்தில் என்ன இரண்டு கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயம், பல நூற்றாண்டுகளுக்குப் பின் அப்போஸ்தலன் பவுல் விளக்கிய மாபெரும் ஆன்மீக ஆலயம் அல்ல. இதைப் பற்றி முந்தின அதிகாரத்தில் பார்த்தோம். தூய வணக்கத்துக்கான நெறிமுறைகளின் முக்கியத்துவத்தைத் தன் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவே கடவுள் அந்தத் தரிசனத்தைக் கொடுத்தார் என்பதையும் பார்த்தோம். அந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால்தான் அவர்களால் கடவுளோடு திரும்பவும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். தன்னுடைய நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே, ஒரே வசனத்தில் இரண்டு முறை, “இதுதான் ஆலயத்தைப் பற்றிய சட்டம்” என்று யெகோவா சொன்னார்.—எசேக்கியேல் 43:12-ஐ வாசியுங்கள்.
2 இந்த அதிகாரத்தில், இன்னும் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம். (1) அந்தத் தரிசனத்திலிருந்து, தூய வணக்கத்துக்காக யெகோவா கொடுத்த நெறிமுறைகளைப் பற்றிய என்ன முக்கியமான பாடங்களை அன்றுள்ள யூதர்கள் கற்றுக்கொண்டார்கள்? இந்தக் கேள்விக்கான பதில், இரண்டாவது கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நமக்கு உதவும். (2) மோசமான இந்தக் கடைசி நாட்களில், அந்தத் தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பூர்வ காலத்தில் அந்தத் தரிசனம் என்ன கற்றுத்தந்தது?
3. யெகோவாவின் ஆலயம் ஒரு உயரமான மலைமீது இருப்பதைப் பற்றிய தரிசனம் மக்களை ஏன் வெட்கப்பட வைத்தது?
3 முதல் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, அந்தத் தரிசனத்தில் காட்டப்பட்ட ஆலயத்தின் சில முக்கியமான அம்சங்களை இப்போது பார்க்கலாம். உயரமான மலை: தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த மலையைப் பற்றி யூதர்கள் கேட்டபோது, தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். (ஏசா. 2:2) ஆனால், யெகோவாவின் ஆலயம் ஒரு உயரமான மலைமீது இருப்பது அவர்களுக்கு எதைக் கற்றுத்தந்தது? தூய வணக்கம் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, மேன்மையான நிலையில் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. தூய வணக்கம் எப்போதுமே உயர்ந்த நிலையில்தான் இருக்கிறது. ஏனென்றால், தூய வணக்கத்துக்கான ஏற்பாட்டைச் செய்த நம் கடவுளான யெகோவா “மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.” (சங். 97:9) ஆனால், அதைத் தூய்மையாக வைப்பதில் மக்கள் தங்களுடைய பங்கைச் செய்யவில்லை. பல நூற்றாண்டுகளாக, தூய வணக்கம் அடிக்கடி தாழ்ந்த நிலைக்குப் போகவும், கறைபடியவும் அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், கடவுளுடைய பரிசுத்தமான ஆலயம் உயர்த்தப்பட்டு அதற்குரிய மகிமையையும் சிறப்பையும் அடைந்ததைப் பார்த்தபோது, நல்மனமுள்ள ஆட்கள் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வெட்கப்பட்டார்கள்.
4, 5. எசேக்கியேல் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், ஆலயத்தின் உயரமான வாசல்களிலிருந்து என்ன பாடத்தைக் கற்றிருப்பார்கள்?
4 உயரமான வாசல்கள்: தனக்குக் கிடைத்த தரிசனத்தின் ஆரம்பத்தில், ஒரு தேவதூதர் வாசல்களை அளப்பதை எசேக்கியேல் பார்த்தார். அந்த வாசல்களின் உயரம், சுமார் 100 அடியாக இருந்தது. (எசே. 40:14) அவற்றின் நுழைவாசல்களில் காவல் அறைகள் இருந்தன. ஆலயத்தின் வடிவமைப்பைப் பற்றி ஆராய்ந்து பார்த்தவர்கள் அதிலிருந்து என்ன தெரிந்திருப்பார்கள்? யெகோவா எசேக்கியேலிடம், “ஆலயத்துக்கு உள்ளே போகிற வழிகளை . . . பற்றி நான் சொல்வதைக் கவனித்துக் கேள்” என்று சொன்னார். ஏனென்றால், “உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத” ஆட்களை கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்குள் மக்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அதன்மூலம் ‘அவர்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதாக’ யெகோவா சொன்னார்.—எசே. 44:5, 7.
5 ‘உடலில் விருத்தசேதனம் செய்யாதவர்கள்’ கடவுள் கொடுத்திருந்த ஒரு தெளிவான கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போயிருந்தார்கள். அது ஆபிரகாமின் காலத்திலேயே கொடுக்கப்பட்ட கட்டளை. (ஆதி. 17:9, 10; லேவி. 12:1-3) ஆனால், ‘உள்ளத்தில் விருத்தசேதனம் செய்யாதவர்கள்’ அதைவிட மோசமான நிலைமைக்குப் போயிருந்தார்கள். அவர்கள் யெகோவாவின் வழிநடத்துதலுக்கும் ஆலோசனைக்கும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல், கலகத்தனமாக நடந்துகொண்டார்கள். அப்படிப்பட்ட ஆட்களை யெகோவாவின் பரிசுத்த ஆலயத்துக்குள் அனுமதித்திருக்கவே கூடாது. வெளிவேஷம் போடுகிறவர்களை யெகோவா வெறுக்கிறார். ஆனால், அவருடைய ஆலயத்தில் வெளிவேஷக்காரர்களை மக்கள் அனுமதித்தார்கள். தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்தில் இருந்த வாசல்களும், காவல் அறைகளும் இந்த முக்கியமான பாடத்தைக் கற்றுத்தந்தன: இனிமேலும் அப்படிப்பட்ட வெளிவேஷக்காரர்கள் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்! கடவுளுடைய ஆலயத்துக்குள் நுழைவதற்கான உயர்ந்த நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் செலுத்தும் வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிப்பார்.
6, 7. (அ) சுற்றுச் சுவரைப் பயன்படுத்தி என்ன விஷயத்தை யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சொன்னார்? (ஆ) யெகோவாவின் மக்கள் அவருடைய பரிசுத்தமான ஆலயத்தை முன்பு எப்படி அசுத்தப்படுத்தியிருந்தார்கள்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6 சுற்றுச் சுவர்: ஆலய வளாகத்தையும் அதைச் சுற்றியிருந்த முழுப் பகுதியையும் உள்ளடக்கிய இந்தச் சுவர், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருந்தது. இந்தச் சுற்றுச் சுவரின் ஒவ்வொரு பக்கமும் 500 அளவுகோலாக, அதாவது 5,100 அடியாக இருந்தது. (கிட்டத்தட்ட 1.6 கி.மீ.) (எசே. 42:15-20) ஆனால், ஆலய வளாகத்தின் ஒவ்வொரு பக்கமும் 500 முழமாக, அதாவது 850 அடியாக மட்டுமே இருந்தது. அதனால், ஆலயத்துக்கும் சுற்றுச் சுவருக்கும் இடையில் பரந்து விரிந்த ஒரு பகுதி இருந்தது.a எதற்காக?
7 யெகோவா இப்படிச் சொன்னார்: “இப்போது, எனக்குத் துரோகம் செய்வதை அவர்கள் விட்டுவிடட்டும். அவர்களுடைய ராஜாக்களுடைய உடல்களை என் முன்னாலிருந்து தூரமாக வீசியெறியட்டும். அப்போது, நான் அவர்களோடு என்றென்றும் இருப்பேன்.” (எசே. 43:9) ‘ராஜாக்களின் உடல்கள்’ சிலைகளைக் குறித்திருக்கலாம். அப்படியானால், பரந்து விரிந்த இடத்தைச் சுற்றியிருந்த அந்தச் சுவரைப் பயன்படுத்தி இந்த விஷயத்தைச் சொல்ல யெகோவா நினைத்திருக்கலாம்: “இப்படிப்பட்ட எல்லா அசுத்தத்தையும் தூரமாக விலக்கிவிடுங்கள். அவை ஆலயத்தின் பக்கமே நெருங்கக் கூடாது.” இப்படி, தங்களுடைய வணக்கத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் யெகோவா தன்னுடைய பிரசன்னத்தினால் அவர்களை ஆசீர்வதிப்பார்.
8, 9. பொறுப்பிலுள்ள ஆண்களுக்குக் கடுமையான ஆலோசனையை யெகோவா கொடுத்ததிலிருந்து மக்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கலாம்?
8 பொறுப்பிலுள்ள ஆண்களுக்குக் கடுமையான ஆலோசனை: மக்கள் மத்தியில் பெரிய பொறுப்பிலிருந்த ஆண்களுக்கு கடுமையான, அதே சமயத்தில் அன்பான ஆலோசனையையும் யெகோவா கொடுத்தார். மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டபோது, தன்னைவிட்டு வழிவிலகிப்போன லேவியர்களை யெகோவா வன்மையாகக் கண்டித்தார். ஆனால், அவருடைய “ஆலய வேலைகளைக் கவனித்துக்கொண்ட” சாதோக்கின் மகன்களை அவர் பாராட்டினார். இப்படி, ஒவ்வொரு தொகுதியினருடைய செயல்களுக்கு ஏற்றபடி அவர்களிடம் நீதியோடும் இரக்கத்தோடும் அவர் நடந்துகொண்டார். (எசே. 44:10, 12-16) லேவியர்களைக் கண்டித்தது போல இஸ்ரவேல் தலைவர்களையும் யெகோவா கடுமையாகக் கண்டித்தார்.—எசே. 45:9.
9 இதன்மூலம், உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற... கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிற... ஆண்கள், தங்களுடைய கடமைகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பற்றி தனக்குக் கணக்குக்கொடுக்க வேண்டும் என்பதை யெகோவா தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இவர்களுக்கும்கூட ஆலோசனையும் திருத்தமும் கண்டிப்பும் தேவைப்பட்டன. யெகோவா கொடுக்கும் எந்த ஆலோசனையையும் மனதார ஏற்றுக்கொள்வதன் மூலம், அவருடைய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டியிருந்தது.
10, 11. சிறையிருப்பிலிருந்து திரும்பிய சிலர் எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள் என்பதை எது காட்டுகிறது?
10 தாய்நாட்டுக்குத் திரும்பியவர்கள், எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கடைப்பிடித்தார்களா? அன்று கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆண்களும் பெண்களும் இந்த அருமையான தரிசனத்தைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று நமக்குத் திட்டவட்டமாக எதுவும் தெரியாது. ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்... தூய வணக்கத்தை எப்படிக் கருதினார்கள்... என்பதைப் பற்றி பைபிளில் போதுமான தகவல்கள் இருக்கின்றன. எசேக்கியேலின் தரிசனத்தில் அடங்கியிருக்கும் நியமங்களை அவர்கள் கடைப்பிடித்தார்களா? பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட கலகத்தனமான தங்கள் முன்னோர்களைப் போல இல்லாமல், இவர்கள் ஓரளவுக்கு அவற்றைக் கடைப்பிடித்தார்கள்.
11 தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா, குருவாகவும் நகலெடுப்பவராகவும் இருந்த எஸ்றா, ஆளுநரான நெகேமியா போன்ற உண்மையுள்ள ஆண்கள் யெகோவா கொடுத்த நியமங்களை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க கடுமையாக உழைத்தார்கள். (எஸ்றா 5:1, 2) அவர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்கள், ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தில் உள்ள நியமங்களைப் போல இருந்தன. தூய வணக்கம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், பொருளாதார தேவைகளையும், சுயநல ஆசைகளையும்விட தூய வணக்கத்துக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார்கள். (ஆகா. 1:3, 4) தூய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். உதாரணத்துக்கு, மற்ற நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்திருந்தவர்கள், அந்தப் பெண்களை அனுப்பிவிட வேண்டும் என்று எஸ்றாவும் நெகேமியாவும் திட்டவட்டமாகச் சொன்னார்கள். ஏனென்றால், அந்தப் பெண்கள் தூய வணக்கத்தைச் செலுத்துவதற்குத் தடையாக இருந்தார்கள். (எஸ்றா 10:10, 11-ஐ வாசியுங்கள்; நெ. 13:23-27, 30) சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் மறுபடியும் சிலை வழிபாட்டில் ஈடுபட்டார்களா? முன்பு அவர்களை அடிக்கடி பாவத்தில் சிக்க வைத்த சிலை வழிபாட்டை அவர்கள் அடியோடு வெறுக்கக் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. குருமார்களையும், தலைவர்களையும் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுக்கும் யெகோவாவிடமிருந்து ஆலோசனையும் கண்டிப்பும் கிடைத்தது என்பதை எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். (நெ. 13:22, 28) அந்த ஆலோசனைக்கு நிறைய பேர் மனத்தாழ்மையோடு கட்டுப்பட்டு நடந்தார்கள்.—எஸ்றா 10:7-9, 12-14; நெ. 9:1-3, 38.
12. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
12 அதனால், தன்னுடைய மக்களை யெகோவா ஆசீர்வதித்தார். பல வருஷங்களாக அனுபவிக்காத ஆன்மீகச் செழுமையையும், ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் மக்கள் ஓரளவுக்கு அனுபவித்தார்கள். (எஸ்றா 6:19-22; நெ. 8:9-12; 12:27-30, 43) ஏனென்றால், தூய வணக்கம் சம்பந்தமான யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள். எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள பாடங்கள் பலருடைய மனதைத் தொட்டன. சுருக்கமாகச் சொன்னால், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து இரண்டு முக்கியமான விதங்களில் நன்மை அடைந்தார்கள். (1) தூய வணக்கத்துக்கான நெறிமுறைகள் பற்றிய நடைமுறையான பாடங்களை அது அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது; அந்த நெறிமுறைகளின்படி வாழ்வது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தது. (2) அது, எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்தது. அதாவது, தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்பதை அந்தத் தரிசனம் அவர்களுக்குக் காட்டியது; தூய வணக்கத்தில் ஈடுபடும்வரை தன்னுடைய மக்களை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதிப்பார் என்பதையும் அது காட்டியது. ஆனால், அந்தத் தரிசனம் நம் காலத்தில் நிறைவேறுமா என்பதைத்தான் நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும்.
எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
13, 14. (அ) ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்துக்கு நம் காலத்திலும் ஒரு நிறைவேற்றம் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) என்ன இரண்டு வழிகளில் அந்தத் தரிசனம் இன்று நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது? (“வெவ்வேறு ஆலயங்கள், வெவ்வேறு பாடங்கள்” என்ற பெட்டி 13அ-வையும் பாருங்கள்.)
13 ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம் நமக்கும் பொருந்துகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியுமா? கண்டிப்பாக! எசேக்கியேல் பார்த்த தரிசனத்துக்கும், ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்துக்கும் இருக்கிற ஒற்றுமையைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். “மிகவும் உயரமான ஒரு மலைமேல்” கடவுளுடைய பரிசுத்தமான ஆலயம் இருப்பதை எசேக்கியேல் பார்த்தார். “யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்” என்று ஏசாயா சொன்னார். “கடைசி நாட்களில்” இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்று ஏசாயா குறிப்பாகச் சொன்னார். (எசே. 40:2; ஏசா. 2:2-4; மீகா 4:1-4-ஐயும் பாருங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனங்கள், கடைசி நாட்களில், குறிப்பாக 1919-லிருந்து நிறைவேற ஆரம்பித்தன. அப்போதிலிருந்து, தூய வணக்கம் உயர்த்தப்பட்டு மீண்டும் நிலைநாட்டப்பட்டு வருகிறது. கடவுளுடைய ஆலயம் மிகவும் உயரமான மலைமேல் உயர்த்தப்பட்டதுபோல் அது இருக்கிறது.b
14 அப்படியானால், தூய வணக்கம் சம்பந்தமாக எசேக்கியேல் பார்த்த தரிசனம் இன்று நமக்கும் பொருந்துகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். அன்று வாழ்ந்த, சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு அந்தத் தரிசனம் பிரயோஜனமாக இருந்தது போல நமக்கும் இரண்டு வழிகளில் பிரயோஜனமாக இருக்கிறது. (1) தூய வணக்கத்துக்கான யெகோவாவின் நெறிமுறைகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதற்கான நடைமுறையான பாடங்களைக் கற்றுத்தருகிறது. (2) தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையையும் யெகோவாவின் ஆசீர்வாதங்கள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியையும் தருகிறது.
இன்று தூய வணக்கத்துக்கான நெறிமுறைகள்
15. ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
15 எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள குறிப்பிட்ட சில அம்சங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். தரிசனத்தில் காட்டப்பட்ட பிரமாண்டமான ஆலயத்துக்கு எசேக்கியேலோடு நாமும் போவதாகக் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால், நாம் பார்ப்பது மாபெரும் ஆன்மீக ஆலயம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய வணக்கம் சம்பந்தமாக நமக்குப் பொருந்துகிற சில பாடங்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
16. எசேக்கியேலின் தரிசனத்தில், ஒரு தேவதூதர் எல்லாவற்றையும் அளப்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்.)
16 தேவதூதர் எல்லாவற்றையும் அளக்கிறார்: செம்பு உடலில் இருந்த தேவதூதர் ஆலயத்தை முழுமையாக அளப்பதை எசேக்கியேல் பார்க்கிறார். அதன் சுவர்கள், வாசல்கள், காவல் அறைகள், பிரகாரங்கள், பலிபீடம் உட்பட எல்லாவற்றையும் அவர் அளக்கிறார். ஆலயத்தைப் பற்றிய இத்தனை விவரங்களைப் படிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கலாம். (எசே. 40:1–42:20; 43:13, 14) ஆனால், அவற்றிலிருந்து நாம் என்ன முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை யோசித்துப் பாருங்கள். இத்தனை விவரங்களைக் கொடுப்பதன் மூலம் தன்னுடைய நெறிமுறைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை யெகோவா அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார். அந்த நெறிமுறைகளை ஏற்படுத்தியது யெகோவாதான், மனிதர்கள் கிடையாது. கடவுளை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. ஆலயத்தை முழுமையாக அளப்பதன் மூலம் தூய வணக்கம் கண்டிப்பாகத் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற உறுதியை யெகோவா அளிக்கிறார். அந்த அளவுகள் எந்தளவு துல்லியமாக இருந்ததோ அந்தளவுக்குக் கடவுளுடைய வாக்குறுதிகளும் துல்லியமாக நிறைவேறும். இதன்மூலம், கடைசி நாட்களில் தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்பதை எசேக்கியேல் உறுதிப்படுத்தினார்.
17. ஆலயத்தின் சுற்றுச் சுவர் இன்று நமக்கு என்ன விஷயத்தை ஞாபகப்படுத்துகிறது?
17 சுற்றுச் சுவர்: ஆலயத்தையும் அதைச் சுற்றியிருந்த பகுதி முழுவதையும் உள்ளடக்கிய ஒரு சுவரை எசேக்கியேல் பார்த்ததைப் பற்றி நாம் ஏற்கெனவே சிந்தித்தோம். அந்தச் சுவர், கடவுளுடைய மக்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை ஞாபகப்படுத்தியது. அசுத்தமான மதப் பழக்கவழக்கங்களால் கடவுளுடைய ஆலயம் ஒருபோதும் கறைபடாதபடி அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது; தூய வணக்கத்திலிருந்து அவற்றைத் தூரமாக விலக்கிவிட வேண்டியிருந்தது. (எசேக்கியேல் 43:7-9-ஐ வாசியுங்கள்.) இன்று இந்த ஆலோசனை நமக்கு ரொம்பவே தேவை. பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய மக்கள் ஆன்மீக விதத்தில் மகா பாபிலோனில் அடிமைகளாக இருந்தார்கள். 1919-ல் அவர்கள் விடுதலையான பிறகு, கிறிஸ்து தன்னுடைய உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமித்தார். முக்கியமாக அந்த வருஷத்திலிருந்து, கடவுளுடைய மக்கள் சிலை வழிபாடு மற்றும் பொய் மதங்களோடு சம்பந்தப்பட்ட போதனைகளையும் பழக்கவழக்கங்களையும் ஒதுக்கித்தள்ள கடினமாக முயற்சி செய்திருக்கிறார்கள். தூய வணக்கத்தை அசுத்தப்படுத்தும் எல்லாவற்றையும் தூரமாக விலக்கிவிட நாம் கவனமாக இருக்கிறோம். ராஜ்ய மன்றங்களில், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதன் மூலமும் நம்முடைய வணக்கத்தைத் தூய்மையாக வைக்கிறோம்.—மாற். 11:15, 16.
18, 19. (அ) ஆலயத்தின் உயரமான வாசல்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) யெகோவாவுடைய உயர்ந்த நெறிமுறைகளின் தரத்தைக் குறைக்க நினைப்பவர்களுக்கு நாம் எப்படிப் பதிலளிக்க வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.
18 உயரமான வாசல்கள்: எசேக்கியேல் பார்த்த உயரமான வாசல்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இந்த உயரமான வாசல்கள், யெகோவாவின் ஒழுக்க நெறிகள் எந்தளவு உயர்ந்தவை என்பதைச் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்குக் கற்றுத்தந்தது. நமக்கும் அதே பாடத்தைக் கற்றுத்தருகிறது. ஏனென்றால், நாம் யெகோவாவை அவருடைய மாபெரும் ஆன்மீக ஆலயத்தில் வணங்குகிறோம். அப்படியென்றால், இன்று நாம் போலித்தனமாக இல்லாமல் உண்மையிலேயே நல்ல நடத்தையுள்ளவர்களாக இருப்பது ரொம்பவே முக்கியம். (ரோ. 12:9; 1 பே. 1:14, 15) இந்தக் கடைசி நாட்களில், ஒழுக்க விஷயங்களில் தன்னுடைய நெறிமுறைகளை தன்னுடைய மக்கள் நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு யெகோவா படிப்படியாக உதவியிருக்கிறார்.c உதாரணத்துக்கு, மனம் திருந்தாமல் தொடர்ந்து தவறு செய்கிறவர்கள் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். (1 கொ. 5:11-13) அதோடு, யெகோவாவை வணங்க நினைக்கும் ஒருவர் அவருடைய அங்கீகாரம் இல்லாமல் ஆன்மீக ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்பதை நுழைவாசல்களில் இருந்த காவல் அறைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, இரட்டை வாழ்க்கை வாழ்கிற ஒருவர் ராஜ்ய மன்றத்துக்குள் வர முடியும்; ஆனால் யெகோவா விரும்புவதைச் செய்தால் மட்டுமே அவருடைய அங்கீகாரத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியும். (யாக். 4:8) ஆம், சீர்கெட்ட... ஒழுக்கங்கெட்ட... இந்தக் காலத்தில் அசுத்தமான விஷயங்களிலிருந்து தூய வணக்கத்தை யெகோவா பாதுகாத்து வருகிறார்.
19 முடிவு வருவதற்கு முன் இந்த உலகம் சீர்கெட்டுப்போகும் என்று பைபிள் முன்னதாகவே சொன்னது. “பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:13) யெகோவாவின் உயர்ந்த நெறிமுறைகள் ரொம்பவே கெடுபிடியானவை... தவறானவை... நம் காலத்துக்கு ஒத்துவராதவை... என்றெல்லாம் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு இன்று நிறைய பேர் ஏமாந்துபோகிறார்கள். நீங்களும் அவர்களைப் போல ஏமாந்துபோவீர்களா? உதாரணத்துக்கு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சம்பந்தமான கடவுளுடைய நெறிமுறைகள் தவறு என்று யாராவது உங்களை நம்ப வைக்க முயற்சி செய்தால், நீங்கள் அவர்கள் சொல்வதை ஒத்துக்கொள்வீர்களா? அல்லது, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்கள் ‘ஆபாசமாக நடக்கிறார்கள்’ என்று பைபிளில் யெகோவா தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருப்பதை ஒத்துக்கொள்வீர்களா? இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையை நாம் ஆதரிக்கக் கூடாது என்று கடவுள் நம்மை எச்சரிக்கிறார். (ரோ. 1:24-27, 32) இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் எதிர்ப்படும்போது, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயத்தின் உயரமான வாசல்கள் நம் கண் முன் வர வேண்டும். இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சரி, யெகோவா தன்னுடைய நீதியான நெறிமுறைகளின் தரத்தைக் குறைப்பதில்லை, அதாவது அவற்றை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம் பரலோகத் தகப்பனுடைய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு, சரியானதைச் செய்ய நாம் தீர்மானமாக இருக்கிறோமா?
நாம் தூய வணக்கத்தில் ஈடுபடும்போது “புகழ்ச்சிப் பலியை” செலுத்துகிறோம்
20. ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்தவர்கள் எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து உற்சாகமூட்டும் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்?
20 பிரகாரங்கள்: ஆலயத்தின் விசாலமான வெளிப்பிரகாரத்தைப் பார்த்தபோது, யெகோவாவைச் சந்தோஷமாக வணங்குவதற்கு அங்கு நிறைய பேர் கூடிவர முடிவதை நினைத்து எசேக்கியேல் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் அதைவிட பெரிய ஆலயத்தில் கடவுளை வணங்குகிறோம். யெகோவாவுடைய ஆன்மீக ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் “திரள் கூட்டமான” வணக்கத்தார் எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து உற்சாகமூட்டும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். (வெளி. 7:9, 10, 14, 15) எசேக்கியேல் பார்த்த பிரகாரங்களைச் சுற்றிலும் சாப்பாட்டு அறைகள் இருந்தன. கடவுளை வணங்க வந்தவர்கள், தாங்கள் கொண்டுவந்த சமாதான பலிகளை அங்கு சாப்பிட்டார்கள். (எசே. 40:17) ஒருவிதத்தில் அவர்கள் யெகோவாவோடு சேர்ந்து சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது. அவரோடு இருந்த சமாதானமான பந்தத்துக்கு அது அடையாளமாக இருந்தது. திருச்சட்டத்தின் கீழ் இருந்த யூதர்கள் பலிகளைச் செலுத்தியது போல, நாம் இன்று பலிகளைச் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, தூய வணக்கத்தில் ஈடுபடும்போது நாம் “புகழ்ச்சிப் பலியை” செலுத்துகிறோம். உதாரணத்துக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, கூட்டங்களில் பதில் சொல்வது, ஊழியத்தில் பேசுவது போன்றவற்றைச் செய்வதன் மூலம் அந்தப் பலியைச் செலுத்துகிறோம். (எபி. 13:15) அதேசமயத்தில், யெகோவா தருகிற ஆன்மீக உணவைச் சாப்பிட்டு பலம் பெறுகிறோம். “வேறு எந்தவொரு இடத்திலும் ஆயிரம் நாட்கள் இருப்பதைவிட, உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள் இருப்பது மேல்!” என்று கோராகுவின் மகன்கள் யெகோவாவைப் புகழ்ந்து பாடியதைப் போல நாமும் உணருகிறோம்.—சங். 84:10.
21. எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள குருமார்களிடமிருந்து பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எதைத் தெரிந்துகொள்ளலாம்?
21 குருமார்கள்: குருமார்களும் லேவியர்களும் உட்பிரகாரத்துக்குள் நுழைவதற்கு வாசல்கள் இருந்ததை எசேக்கியேல் பார்த்தார். அவை, மற்ற கோத்திரத்தார் வெளிப்பிரகாரத்துக்குள் நுழைவதற்கான வாசல்களைப் போலவே ஒரே உயரத்திலும் வடிவத்திலும் இருந்தன. இப்படி ஒரே மாதிரி இருந்தது, தூய வணக்கத்துக்காக யெகோவா ஏற்படுத்தியிருக்கும் நெறிமுறைகளை குருமார்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டியது. இந்தக் காலத்தில், கடவுளுடைய மக்கள் மத்தியில் குருமார் வம்சம் என்று எதுவும் கிடையாது. ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம், “நீங்கள் . . . ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக’ . . . இருக்கிறீர்கள்” என்று சொல்லப்படுகிறது. (1 பே. 2:9) இஸ்ரவேலில் இருந்த குருமார்கள் ஒரு தனி பிரகாரத்தில் யெகோவாவை வணங்கினார்கள். இன்று, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களுடைய சக வணக்கத்தாரிடமிருந்து எந்த விதத்திலும் பிரிந்திருப்பதில்லை. ஆனாலும், யெகோவாவின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாக அவரோடு விசேஷ பந்தத்தை அனுபவிக்கிறார்கள். (கலா. 4:4-6) அதேசமயத்தில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, பூர்வ காலத்திலிருந்த குருமார்களைப் போலவே தங்களுக்கும் ஆலோசனையும் கண்டிப்பும் தேவை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். கிறிஸ்தவர்களான நாம் எல்லாருமே, ‘ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாக’ இருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.—யோவான் 10:16-ஐ வாசியுங்கள்.
22, 23. (அ) எசேக்கியேலின் தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள தலைவரிடமிருந்து இன்றுள்ள மூப்பர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) எதிர்காலத்தில் என்ன நடக்கலாம்?
22 தலைவர்: தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த தலைவர், முக்கியமான ஒரு நபராக இருந்தார். அவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர் கிடையாது. ஆலயத்தில் அவர் குருமார்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியிருந்தது. ஆனாலும், மக்களுக்கு அவர் கண்காணியாகச் செயல்பட்டார். பலிகள் செலுத்துவதில் மக்களுக்கு அவர் உதவினார். (எசே. 44:2, 3; 45:16, 17; 46:2) இன்று, சபையில் பொறுப்பில் இருக்கும் சகோதரர்களுக்கு அவர் நல்ல உதாரணமாக இருக்கிறார். சொல்லப்போனால் பயணக் கண்காணிகள் உட்பட கிறிஸ்தவ மூப்பர்கள் எல்லாரும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். (எபி. 13:17) கூட்டங்களிலும் ஊழியத்திலும் கடவுளுடைய மக்கள் தங்களுடைய புகழ்ச்சிப் பலிகளைச் செலுத்துவதற்கு மூப்பர்கள் உதவி செய்கிறார்கள். (எபே. 4:11, 12) இஸ்ரவேலின் தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர்களை யெகோவா எப்படிக் கண்டித்தார் என்பதையும் மூப்பர்கள் அந்தத் தரிசனத்தில் கவனிக்கலாம். (எசே. 45:9) அதனால், ஆலோசனையும் திருத்தமும் தங்களுக்குத் தேவையில்லை என்று மூப்பர்கள் நினைப்பது கிடையாது. அதற்குப் பதிலாக, யெகோவாவினால் திருத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் உயர்வாக நினைக்கிறார்கள். ஏனென்றால், மிகச் சிறந்த மேய்ப்பர்களாகவும் கண்காணிகளாகவும் ஆவதற்கு இது அவர்களுக்கு உதவுகிறது.—1 பேதுரு 5:1-3-ஐ வாசியுங்கள்.
23 வரப்போகும் பூஞ்சோலை பூமியிலும் தகுதியுள்ள, அன்பான கண்காணிகளை யெகோவா நியமிப்பார். அக்கறையுள்ள, திறமையுள்ள மேய்ப்பர்களாக இருப்பதற்கு இன்று மூப்பர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களில் பலர், பூஞ்சோலை பூமியிலும் மேய்ப்பர்களாக பயன்படுத்தப்படலாம். (சங். 45:16) புதிய உலகில் அவர்கள் நமக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கப்போவதை நினைக்கும்போதே நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய மற்ற தீர்க்கதரிசனங்களைப் போலவே எசேக்கியேலின் இந்தத் தரிசனத்தையும் ஏற்ற காலத்தில் யெகோவா நமக்கு இன்னும் தெளிவாகப் புரிய வைப்பார். ஒருவேளை, இதுவரை நாம் யோசித்தே பார்க்காத இன்னும் நிறைய பாடங்கள் அந்தத் தரிசனத்தில் இருக்கலாம், எதிர்காலத்தில் அது எப்படியெல்லாம் நிறைவேறும் என்பதை இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.
தூய வணக்கத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
24, 25. தன்னுடைய மக்கள் தூய வணக்கத்தில் ஈடுபடும்போது அவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதை எசேக்கியேலின் தரிசனம் எப்படிக் காட்டுகிறது?
24 முடிவாக, இந்தத் தரிசனத்தில் எசேக்கியேல் பார்க்கிற ஒரு முக்கியமான விஷயத்தை நம் மனதுக்குக் கொண்டுவரலாம். தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த அந்த ஆலயத்துக்கு யெகோவா வருகிறார். தூய வணக்கத்துக்கான நெறிமுறைகளை உண்மையோடு பின்பற்றும்வரை தன்னுடைய மக்களோடு என்றென்றும் இருப்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். (எசே. 43:4-9) யெகோவாவின் பிரசன்னத்தினால் அவருடைய மக்களுக்கும் அவர்களுடைய தேசத்துக்கும் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
25 தீர்க்கதரிசன அர்த்தம் அடங்கிய இரண்டு காட்சிகளை இந்தத் தரிசனம் விவரிக்கிறது. கடவுளிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களுக்கு அவை அடையாளமாக இருக்கின்றன. (1) பரிசுத்த இடத்திலிருந்து பாய்ந்தோடும் ஆறு, தேசத்துக்கு வாழ்வளிக்கிறது, அதை வளமாக்குகிறது; (2) தேசம் ஒழுங்காகவும் சரிசமமாகவும் பிரிக்கப்படுகிறது, ஆலயம் அதன் நடுவில் இருக்கிறது. இன்று அந்தத் தரிசனத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? நம் காலத்தில் யெகோவா வணக்கத்துக்காக ஒரு மாபெரும் ஆன்மீக ஆலயத்தைச் சுத்திகரித்து அங்கீகரித்திருக்கிறார். இது எசேக்கியேல் பார்த்த ஆலயத்தைவிட மிகவும் பரிசுத்தமான ஒரு ஏற்பாடாக இருக்கிறது. (மல். 3:1-4) தீர்க்கதரிசன அர்த்தம் அடங்கிய அந்த இரண்டு ஆசீர்வாதங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 19 முதல் 21 வரையான அதிகாரங்களில் பார்ப்போம்.
a “முன்பு, எனக்கும் அவர்களுக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டும் இருக்கும்படி என்னுடைய ஆலயத்தின் வாசலுக்குப் பக்கத்திலேயே அவர்களுடைய ஆலயத்தின் வாசலையும், என்னுடைய ஆலயத்தின் கதவு நிலைகளுக்குப் பக்கத்திலேயே அவர்களுடைய ஆலயத்தின் கதவு நிலைகளையும் வைத்தார்கள். எல்லா அருவருப்பான காரியங்களையும் செய்து என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தார்கள்” என்று யெகோவா சொன்னார். (எசே. 43:8) இப்படிச் சொல்வதன் மூலம் தன்னுடைய பரிசுத்தமான ஆலயத்தை முன்பு மக்கள் எப்படி அசுத்தப்படுத்தினார்கள் என்பதை யெகோவா சுட்டிக்காட்டினார். அன்றிருந்த எருசலேமில், யெகோவாவின் ஆலயத்துக்கும் மக்கள் குடியிருந்த பகுதிக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டும்தான் இருந்தது. யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போனபோது அவருடைய ஆலயத்துக்கு எதிரிலேயே அசுத்தத்தைக் கொண்டுவந்தார்கள், அதாவது சிலை வழிபாட்டில் ஈடுபட்டார்கள். யெகோவாவினால் அதைக் கொஞ்சம்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
b தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமாக இந்தக் கடைசி நாட்களில் நிறைவேறியிருக்கும் மற்ற தீர்க்கதரிசனங்களோடு, ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம் நன்றாக ஒத்துப்போகிறது. உதாரணத்துக்கு, இந்த வசனங்களுக்கு இடையில் இருக்கிற ஒற்றுமையைப் பாருங்கள்: எசேக்கியேல் 43:1-9 மற்றும் மல்கியா 3:1-5; எசேக்கியேல் 47:1-12 மற்றும் யோவேல் 3:18.
c கி.பி. 29-ல் இயேசு ஞானஸ்நானம் எடுத்து தலைமைக் குருவாக தன்னுடைய சேவையை ஆரம்பித்தபோது, ஆன்மீக ஆலயம் உருவானது. ஆனாலும், இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப் பிறகு, பல நூற்றாண்டுகளுக்கு தூய வணக்கம் ஏறக்குறைய இல்லாமலேயே போய்விட்டது. 1919-லிருந்துதான் உண்மை வணக்கம் உயர்த்தப்பட்டிருக்கிறது.