நெகேமியா
12 சலாத்தியேலின்+ மகன் செருபாபேலுடனும்+ யெசுவாவுடனும்+ எருசலேமுக்குத் திரும்பி வந்த குருமார்களும் லேவியர்களும் இவர்கள்தான்: செராயா, எரேமியா, எஸ்றா, 2 அமரியா, மல்லூக், அத்தூஸ், 3 செக்கனியா, ரெகூம், மெரெமோத், 4 இத்தோ, கிநேதோ, அபியா, 5 மியாமின், மாதியா, பில்கா, 6 செமாயா, யோயாரிப், யெதாயா, 7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா. இவர்கள் யெசுவாவின் காலத்தில் தங்களுடைய சகோதரர்களுக்கும் குருமார்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
8 திரும்பி வந்த லேவியர்கள் இவர்கள்தான்: யெசுவா, பின்னூய், கத்மியேல்,+ செரெபியா, யூதா, நன்றிப் பாடல்களைப் பாடுவதில் தன் சகோதரர்களுக்குத் தலைமைதாங்கிய மத்தனியா.+ 9 இவர்களுடைய சகோதரர்களான பக்புக்கியாவும் உன்னியும் இவர்களுக்கு எதிரில் நின்றுகொண்டு காவல்காத்தார்கள்.* 10 யெசுவாவுக்குப் பிறந்தவர் யொயகீம், யொயகீமுக்குப் பிறந்தவர் எலியாசிப்,+ எலியாசிபுக்குப் பிறந்தவர் யொயதா.+ 11 யொயதாவுக்குப் பிறந்தவர் யோனத்தான், யோனத்தானுக்குப் பிறந்தவர் யதுவா.
12 யொயகீமின் காலத்திலிருந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களான குருமார்கள் இவர்கள்தான்: செராயா+ குடும்பத்துக்கு மெராயா, எரேமியா குடும்பத்துக்கு அனனியா, 13 எஸ்றா+ குடும்பத்துக்கு மெசுல்லாம், அமரியா குடும்பத்துக்கு யெகோனான், 14 மெலிகு குடும்பத்துக்கு யோனத்தான், ஷெபனியா குடும்பத்துக்கு யோசேப்பு, 15 ஆரீம்+ குடும்பத்துக்கு அத்னா, மெராயோத் குடும்பத்துக்கு எல்காய், 16 இத்தோ குடும்பத்துக்கு சகரியா, கிநேதோன் குடும்பத்துக்கு மெசுல்லாம், 17 அபியா+ குடும்பத்துக்கு சிக்ரி, மினியாமீன் குடும்பத்துக்கு . . . ,* மொவதியா குடும்பத்துக்கு பில்தாய், 18 பில்கா+ குடும்பத்துக்கு சம்முவா, செமாயா குடும்பத்துக்கு யெகோனத்தான், 19 யோயாரிப் குடும்பத்துக்கு மத்னாய், யெதாயா+ குடும்பத்துக்கு உசீ, 20 சல்லாய் குடும்பத்துக்கு கல்லாய், ஆமோக் குடும்பத்துக்கு ஏபேர், 21 இல்க்கியா குடும்பத்துக்கு அஷபியா, யெதாயா குடும்பத்துக்கு நெதனெயேல்.
22 குருமார்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது போலவே எலியாசிப், யொயதா, யோகனான், யதுவா+ ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன. பெர்சிய ராஜாவான தரியுவின் ஆட்சிக் காலம் வரையாக அப்படிப் பதிவு செய்யப்பட்டன.
23 எலியாசிப்பின் மகன் யோகனானின் காலம்வரையாக வாழ்ந்த லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அந்தக் காலத்தின் சரித்திரப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. 24 லேவியர்களின் தலைவர்களான அஷபியா, செரெபியா, கத்மியேலின்+ மகன் யெசுவா+ ஆகியவர்களுக்கு எதிரில் அவர்களுடைய சகோதரர்களான காவலர்கள் உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீது கொடுத்த அறிவுரைகளின்படி+ கடவுளுக்குப் புகழும் நன்றியும் செலுத்த தொகுதி தொகுதியாக நின்றார்கள். 25 மத்தனியா,+ பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்+ ஆகியவர்கள் நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் சேமிப்பு அறைகளைக் காவல்காத்தபடி நின்றார்கள்.+ 26 இவர்கள் யோத்சதாக்குக்குப் பிறந்த யெசுவாவின்+ மகனான யொயகீமின் காலத்திலும், ஆளுநரான நெகேமியாவும் நகலெடுப்பவரான எஸ்றா+ என்ற குருவும் வாழ்ந்த காலத்திலும் சேவை செய்தார்கள்.
27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 28 பாடகர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்* மாகாணத்திலிருந்தும்,* எருசலேமின் சுற்றுவட்டாரத்திலிருந்தும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலிருந்தும்,+ 29 பெத்-கில்காலிலிருந்தும்,+ கெபா+ மற்றும் அஸ்மாவேத்தின்+ நாட்டுப்புறங்களிலிருந்தும் வந்து கூடினார்கள். ஏனென்றால், பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காகக் கிராமங்களை அமைத்திருந்தார்கள். 30 குருமார்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மைப்படுத்தியதோடு, ஜனங்களையும்+ நுழைவாசல்களையும்+ மதிலையும்+ தூய்மைப்படுத்தினார்கள்.
31 அதன்பின், நான் யூதாவின் தலைவர்களைக் கூப்பிட்டு மதில்மேல் ஏறும்படி சொன்னேன். அதோடு, நன்றிப் பாடல்கள் பாடுகிறவர்களையும் அவர்களோடு ஊர்வலம் போகிறவர்களையும் இரண்டு பெரிய குழுக்களாகப் பிரித்தேன். முதலாவது குழுவினர் ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ நேராக வலது பக்கமாக மதில்மேல் நடந்து போனார்கள். 32 ஒசாயாவும் யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களுக்குப் பின்னால் நடந்து போனார்கள். 33 அவர்களோடு அசரியா, எஸ்றா, மெசுல்லாம், 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியவர்கள் போனார்கள். 35 எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு அவர்களோடு போன குருமார்களின் வம்சத்தார் இவர்கள்தான்: ஆசாபுக்குப்+ பிறந்த சக்கூரின் மகனான மிகாயாவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின் கொள்ளுப்பேரனும் செமாயாவின் பேரனும் யோனத்தானின் மகனுமான சகரியா, 36 அவருடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி. இவர்கள் உண்மைக் கடவுளின் ஊழியரான தாவீதின் இசைக் கருவிகளைப்+ பிடித்துக்கொண்டு போனார்கள். நகலெடுப்பவரான எஸ்றா+ இவர்களுக்கு முன்பாக நடந்து போனார். 37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.
38 நன்றிப் பாடல்கள் பாடும் இரண்டாவது குழுவினர் எதிர்த் திசையில் மதில்மேல் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் ஜனங்களில் பாதிப் பேரும் நடந்து போனோம். நாங்கள் ‘அடுப்புகளின் கோபுரத்தை’+ கடந்து, ‘அகன்ற மதில்’+ வரைக்கும் போய், 39 அங்கிருந்து ‘எப்பிராயீம் நுழைவாசலை’+ கடந்து ‘பழைய நுழைவாசலுக்கும்,’+ அதன்பின் ‘மீன் நுழைவாசலுக்கும்,’+ ‘அனானெயேல் கோபுரத்துக்கும்,’+ ‘மேயா கோபுரத்துக்கும்,’ ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ போனோம். அதன்பின், ‘காவல் நுழைவாசலில்’ வந்து நின்றோம்.
40 கடைசியில், நன்றிப் பாடல்கள் பாடும் இரண்டு பாடகர் குழுவினரும் உண்மைக் கடவுளின் ஆலயத்துக்கு முன்னால் வந்து நின்றார்கள். அவர்களோடு நானும் துணை அதிகாரிகளில் பாதிப் பேரும், 41 எக்காளங்களை வைத்திருந்த எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகிய குருமார்களும், 42 மாசெயா, செமாயா, எலெயாசார், உசீ, யெகோனான், மல்கீயா, ஏலாம், ஏத்சேர் ஆகியவர்களும் நின்றோம். பாடகர்கள் இஸ்ரகியாவின் தலைமையில் சத்தமாகப் பாடினார்கள்.
43 அன்று அவர்கள் பிரமாண்டமான அளவில் பலிகளைச் செலுத்தி மகிழ்ந்தார்கள்.+ உண்மைக் கடவுள் அவர்களைச் சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டுபோனார். பெண்களும் பிள்ளைகளும்கூட மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ எருசலேம் ஜனங்களின் சந்தோஷக் குரல் ரொம்பத் தூரம்வரை கேட்டது.+
44 காணிக்கைகளும்,+ முதல் விளைச்சலும்,+ பத்திலொரு பாகமும்+ வைக்கப்படுகிற சேமிப்பு அறைகளைக்+ கவனிக்க அன்று ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள், திருச்சட்டத்தின்படி குருமார்களுக்கும் லேவியர்களுக்கும்+ நகரங்களின் வயல்களிலிருந்து வந்து சேர வேண்டிய பங்குகளைச்+ சேகரித்து, அங்கே வைக்க வேண்டியிருந்தது. குருமார்களும் லேவியர்களும் சேவை செய்வதைப் பார்த்து யூதா ஜனங்கள் எல்லாரும் சந்தோஷத்தோடு அவற்றைக் கொடுத்தார்கள். 45 குருமார்களும் லேவியர்களும் தங்கள் கடவுளுடைய வேலைகளையும் தூய்மைச் சடங்குகளையும் செய்தார்கள். பாடகர்களும் வாயிற்காவலர்களும்கூட, தாவீதும் அவருடைய மகன் சாலொமோனும் கொடுத்திருந்த அறிவுரைகளின்படி தங்களுடைய வேலைகளைச் செய்தார்கள். 46 தாவீதும் ஆசாபும் வாழ்ந்த பூர்வ காலத்தில், கடவுளைப் புகழ்ந்தும் அவருக்கு நன்றி சொல்லியும் பாடிய பாடகர் குழுக்களுக்குத் தலைவர்கள் இருந்தார்கள்.+ 47 செருபாபேலின்+ காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், பாடகர்களுக்கும்+ வாயிற்காவலர்களுக்கும்+ தினசரித் தேவையின்படி பங்குகள் கொடுத்தார்கள். லேவியர்களுக்குத் தர வேண்டிய பங்கையும் கொடுத்தார்கள்.+ லேவியர்கள் ஆரோனின் வம்சத்தாருக்குத் தர வேண்டிய பங்கைக் கொடுத்தார்கள்.