யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யோவேல் மற்றும் ஆமோஸ் புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
‘பெ த்துவேலின் குமாரனாகிய யோவேல்.’ தன்னைப் பற்றிய இந்த ஒரு விவரத்தை மட்டுமே யோவேல் தருகிறார். (யோவேல் 1:1) அவரது பெயரைத் தாங்கிய இப்புத்தகத்தில் கடவுளுடைய செய்தியைத் தவிர பிற விஷயங்களைப்பற்றி யோவேல் அதிகமாகச் சொல்வதில்லை. ஆகவே, அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலப்பகுதியைக்கூட உத்தேசமாகவே கணிக்க முடிகிறது; அதாவது யூதாவின் ராஜாவாக உசியா அரியணையேறி ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, சுமார் பொ.ச.மு. 820-ல் அவர் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. யோவேல் தன்னைப்பற்றி சொல்லத் தயங்குவது ஏன்? செய்தியைச் சொல்பவரைவிட செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அவர் விரும்புவதே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
உசியாவின் காலத்தில் ‘மேய்ப்பராகவும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவருமாயிருந்த’ யூதா தேசத்து ஆமோசும்கூட தீர்க்கதரிசியாக நியமிப்பு பெறுகிறார். (ஆமோஸ் 7:14) யோவேல், யூதாவிலே தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஆமோசோ வடக்கேயுள்ள பத்துக்கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்கிருந்து யூதாவிற்குத் திரும்பிவந்த பிறகு, அதாவது சுமார் பொ.ச.மு. 804-ல் ஆமோஸ் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது. இப்புத்தகம் எளிய நடையிலும் தத்ரூபமாக விவரித்தும் எழுதப்பட்டுள்ளது.
“அந்த நாளினிமித்தம் ஐயோ!”—ஏன்?
பச்சைப்புழு, வெட்டுக்கிளி, கரப்பான் பூச்சி ஆகியவை படையெடுத்து வருவதாக தரிசனத்தில் யோவேல் காண்கிறார். படையெடுத்து வரும் இவற்றை, “ஏராளமான பலத்த ஒரு ஜாதி” என்றும் ‘பராக்கிரமசாலிகள்’ என்றும் குறிப்பிடுகிறார். (யோவேல் 1:4, NW; யோவேல் 2:2-7) “அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது” என்று சொல்லி யோவேல் பெருமூச்சு விடுகிறார். (யோவேல் 1:15) “உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” என்று சீயோனின் குடிகளுக்கு யெகோவா ஆலோசனை கொடுக்கிறார். அவர்கள் அப்படிச் செய்தால், யெகோவா ‘தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்,’ அதாவது, அவர்களுக்கு கருணை காட்டுவார்; அதோடு, ‘வடதிசைச் சேனையை’ அதாவது பூச்சிகளின் தாக்குதலை அவர்களிலிருந்து வெகுதூரத்திற்கு விரட்டியடிப்பார். இருந்தாலும், தம்முடைய மகா நாள் வருவதற்கு முன்பாக, யெகோவா ‘மாம்சமான யாவர்மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவார்’; அதோடு, ‘வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைக் காட்டுவார்.’—யோவேல் 2:12, 18-20, 28-31.
‘உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடித்து’ போருக்குத் தயாராகுங்கள் என்று தேசங்களுக்கு அறைகூவல் விடுக்கப்படுகிறது. ‘யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வரும்படி’ அவற்றிற்கு ஆணையிடப்படுகிறது; அங்கே அவை நியாயந்தீர்க்கப்பட்டு அழிக்கப்படும். ஆனால் ‘யூதாவோ சதாகாலமாக குடியேற்றப்பட்டிருக்கும்.’—யோவேல் 3:10, 12, 20.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:15; 2:1, 11, 31; 3:14—“கர்த்தருடைய நாள்” என்பது என்ன? கர்த்தருடைய நாள் என்பது, யெகோவா தமது விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் சமயமாகும். அந்த நாளில் அவர்கள் அழிக்கப்படுவார்கள், ஆனால் மெய் வணக்கத்தாரோ இரட்சிக்கப்படுவார்கள். உதாரணமாக, பொ.ச.மு. 539-ல் பூர்வ பாபிலோன் அதுபோன்ற ஒரு நாளைச் சந்தித்தது; அப்போது மேதியரும் பெர்சியரும் பாபிலோனைத் தோற்கடித்தார்கள். (ஏசாயா 13:1, 6) யெகோவாவின் மற்றொரு “நாள்” சீக்கிரத்தில் வரவிருக்கிறது; அப்போது பொய்மத உலக பேரரசாகிய “மகா பாபிலோன்”மீது அவர் தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.—வெளிப்படுத்துதல் 18:1-4, 21.
2:1-10, 28—பூச்சிகளின் படையெடுப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது? யோவேல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கானான் தேசத்தின்மீது பூச்சிகள் பெருந்திரளாகப் படையெடுத்து வந்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஆகவே, யோவேல் குறிப்பிடுகிற அந்தத் தாக்குதல், பொ.ச. 33-ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தைப் பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பு ஆகும். அப்போது, கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்கள்மீது யெகோவா தமது ஆவியை ஊற்ற ஆரம்பித்தார்; அவர்கள், பொய்மதத் தலைவர்களுக்கு கடும் வேதனையளிக்கும் செய்தியை அறிவிக்கத் துவங்கினார்கள். (அப்போஸ்தலர் 2:1, 14-21; 5:27-33) இன்று இதுபோன்ற வேலையில் பங்குகொள்வது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.
2:32—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வது [“பெயரில் கூப்பிடுவது,” NW]’ என்பதன் அர்த்தம் என்ன? கடவுளுடைய பெயரில் கூப்பிடுவது என்பது, அந்தப் பெயரை அறிவதையும் அதற்கு மிகுந்த மதிப்பு கொடுப்பதையும் அப்பெயரைத் தாங்கியிருப்பவர்மீது நம்பிக்கை வைப்பதையும் அவரைச் சார்ந்திருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—ரோமர் 10:13, 14, NW.
3:14—‘நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கு’ என்பது என்ன? இது கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய அடையாளப்பூர்வ இடமாகும். யூதேயாவின் ராஜாவான யோசபாத்தின் [“யெகோவாவே நியாயாதிபதி” என்று அர்த்தம்] காலத்திலே, சுற்றியிருந்த தேசத்தாருடைய ராணுவ சேனைகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதன்மூலம் யூதாவை கடவுள் விடுவித்தார். ஆகவே, அந்தப் பள்ளத்தாக்கு ‘யோசபாத்தின் பள்ளத்தாக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. (யோவேல் 3:2, 12) நம் நாளில், இது அடையாள அர்த்தமுடைய இடத்தைக் குறிக்கிறது. அந்த இடத்தில் தேசங்கள் எல்லாம் திராட்சை ஆலையில் மிதிக்கப்படுகிற திராட்சைப் பழங்களைப்போல நசுக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 19:15.
நமக்குப் பாடம்:
1:13, 14. உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலும் யெகோவாவை மெய்க் கடவுளாக ஏற்றுக்கொள்வதும் இரட்சிப்புக்கு அத்தியாவசியமானவை.
2:12, 13. உண்மையான மனந்திரும்புதல் இருதயப்பூர்வமானதாய் இருக்க வேண்டும். இது ‘வஸ்திரங்களைக் கிழிப்பதை’ அல்ல, ஆனால் ‘இருதயங்களைக் கிழிப்பதை’ உட்படுத்துகிறது.
2:28-32. ‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறவர்கள்’ மட்டுமே ‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளில் இரட்சிக்கப்படுவார்கள்.’ மாம்சமான யாவர்மீதும் யெகோவா தமது ஆவியை ஊற்றுகிறார், அதோடு இளையோர் முதியோர், ஆண் பெண் என எல்லாரும் கடவுளுடைய தீர்க்கதரிசனச் செய்தியை அறிவிக்கும் வேலையில், அதாவது “தேவனுடைய மகத்துவங்களை” அறிவிக்கும் வேலையில் பங்குகொள்கிறோம்; இதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! யெகோவாவின் நாள் நெருங்கி வருவதால், ‘பரிசுத்த நடக்கையையும் தேவபக்தியையும்’ வெளிக்காட்டும் செயல்களில் நாம் அதிகமதிகமாய் ஈடுபட வேண்டும் அல்லவா?—2 பேதுரு 3:10-12.
3:4-8, 19. கடவுளுடைய மக்களுக்கு கொடுமைகள் இழைத்ததன் காரணமாக, யூதாவைச் சுற்றியுள்ள தேசங்கள் நியாயந்தீர்க்கப்படும் என யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் உரைத்தபடியே, தீரு நகரத்தின் முக்கியப் பகுதியை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தரைமட்டமாக்கினார். பிற்பாடு, இதன் தீவு நகரை மகா அலெக்ஸாண்டர் கைப்பற்றியபோது, அதன் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும் பிரபலமான ஆட்களும் கொல்லப்பட்டார்கள்; அதன் 30,000 குடிகள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். பெலிஸ்தரும்கூட அலெக்ஸாண்டராலும் அவருக்குப்பின் அரியணை ஏறியவர்களாலும் இதே கதிக்கு ஆளானார்கள். பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிற்குள்ளாக ஏதோம் பாழாக்கப்பட்டது. (மல்கியா 1:3) நிறைவேறிய இந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரான யெகோவாமீது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. இன்று தம்முடைய வணக்கத்தாரை துன்புறுத்துகிற தேசங்களுக்கு எதிராக யெகோவா எப்படி நடவடிக்கை எடுப்பார் என்பதையும் அவை காட்டுகின்றன.
3:16-21. “வானமும் பூமியும் அதிரும்,” அப்போது தேசங்கள் யெகோவாவிடமிருந்து வரும் தண்டனைத் தீர்ப்பைப் பெறும். ‘ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமாய் இருந்து’ அவர்களை பரதீஸ் பூமியில் வாழ வைப்பார். இந்தத் துன்மார்க்க உலகத்தின்மீது யெகோவா தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான நாள் சமீபித்து வருவதால் நாம் அவரோடு நெருக்கமாயிருக்க திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும், அல்லவா?
“உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு”
இஸ்ரவேலைச் சுற்றியிருந்த எதிரி தேசங்களுக்கும் அதோடு யூதா, இஸ்ரவேல் தேசங்களுக்கும் ஆமோஸ் ஒரு செய்தியை அறிவிக்கிறார். கடவுளுடைய மக்களுக்கு இழைத்த கொடுமைகளின் காரணமாக சிரியா, பெலிஸ்தியா, தீரு, ஏதோம், மோவாப் ஆகிய தேசத்தார் அழிக்கப்படுவார்கள். யூதாவின் குடிகளும் ‘கர்த்தருடைய வேதத்தை வெறுத்ததினிமித்தம்’ அழிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். (ஆமோஸ் 2:4) இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யத்தைக் குறித்து என்ன சொல்லலாம்? அங்குள்ள பேராசை பிடித்தவர்கள் ஏழைகளை ஒடுக்குகிறார்கள், ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள், கடவுளுடைய தீர்க்கதரிசிகளை அவமரியாதையாக நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட பாவங்களின் நிமித்தம் அவர்களை ஆமோஸ் இவ்வாறு எச்சரிக்கிறார்: யெகோவா ‘பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பார்; . . . மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பார்.’—ஆமோஸ் 3:14, 15.
ஏற்கெனவே பல்வேறு தண்டனைகளைப் பெற்றிருந்தாலும் அந்த விக்கிரகாராதனைக்காரரான இஸ்ரவேலர் சற்றும் வளைந்துகொடுக்காதவர்களாய் இருக்கிறார்கள். அதனால், அவர்களிடம் ஆமோஸ் இவ்வாறு கூறுகிறார்: “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.” (ஆமோஸ் 4:12) இஸ்ரவேலரைப் பொறுத்தவரை, யெகோவாவின் நாள் என்பது, அவர்கள் ‘தமஸ்குவுக்கும் அப்பால் [அதாவது, அசீரியாவுக்கு] நாடுகடத்தப்படவிருப்பதை’ அர்த்தப்படுத்தும். (ஆமோஸ் 5:27, NW) பெத்தேலைச் சேர்ந்த ஒரு ஆசாரியர் ஆமோசை எதிர்க்கிறார், ஆனால் ஆமோஸ் அதற்கெல்லாம் பயந்து நடுங்குவதில்லை. “என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்” என்று ஆமோசிடம் யெகோவா சொல்கிறார். (ஆமோஸ் 8:2) பாதாளமானாலும்சரி உயர்ந்த மலைகளானாலும்சரி எதுவும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியாது. (ஆமோஸ் 9:2, 3) இருந்தாலும், அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவார்கள் என்ற உறுதி அளிக்கப்படுகிறது. “என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.—ஆமோஸ் 9:14.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
4:1—‘பாசானின் மாடுகள்’ யாரைச் சித்தரிக்கின்றன? உயர்ந்த பீடபூமியான பாசான், கலிலேயாக் கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; உயர்ந்தரக மாடுகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பெயர்போன இடமாக அது விளங்கியது. அங்குள்ள பசுமையான அடர்ந்த புல்வெளிகளே அதற்கு ஒரு காரணம். ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய சமாரிய பெண்களை பாசானின் மாடுகளுக்கு ஆமோஸ் ஒப்பிட்டார். இப்பெண்கள், செல்வத்தின் மீதான தங்களுடைய மோகத்தைத் திருப்தி செய்துகொள்வதற்காக தரித்திரரை வஞ்சிக்கும்படி ‘தங்களுடைய எஜமான்களை,’ அதாவது கணவர்களை கட்டாயப்படுத்தினார்கள்.
4:6—‘பல்லுகளுக்கு ஓய்வு’ என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? இது ‘அப்பக்குறைவு’ என்ற வார்த்தைக்கு இணையான சொற்றொடராக பயன்படுத்தப்பட்டிருப்பதால் பஞ்ச காலத்தைக் குறிக்கிறது; அப்போது உணவு கிடைக்காததால் பற்கள் ஓய்வெடுக்கின்றன.
5:5—இஸ்ரவேலர் ‘பெத்தேலைத் தேடக்கூடாது’ என சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன? யெரொபெயாம் பெத்தேலில் கன்றுக்குட்டி வணக்கத்தை ஆரம்பித்திருந்தார். அப்போது முதற்கொண்டு, அந்நகரம் பொய் வணக்கத்தின் மையமாயிற்று. கில்காலும் பெயர்செபாவும்கூட விசுவாசதுரோக வழிபாட்டுத்தலங்களாக இருந்திருக்க வேண்டும். கடவுள் முன்னறிவித்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், இஸ்ரவேலர் அத்தகைய இடங்களுக்குப் புனித யாத்திரை செல்வதை நிறுத்தி, யெகோவாவைத் தேடுவது அவசியமாக இருந்தது.
7:1—“ராஜாவினுடைய புல்லறுப்பு” என்பதன் அர்த்தம் என்ன? தனது குதிரை வீரர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவளிப்பதற்காக ராஜா வசூலித்த வரியை இது குறிக்கலாம். “இரண்டாம் கந்தாயத்துப் புல் [அதாவது இரண்டாம் விதைப்பின் புல்] முளைக்கத் தொடங்குகையில்,” ஜனங்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருந்தது. அதன் பிறகு, அவர்கள் தங்களுடைய பயிரை அறுவடை செய்யலாம். என்றாலும், அவர்கள் அறுவடை செய்வதற்கு முன்பே, வெட்டுக்கிளிகள் கூட்டமாய் வந்து மற்ற தாவரங்களோடுகூட பயிர்களையும் தின்று தீர்த்தன.
8:1, 2—“[“கோடைக்காலத்தின்,” NW] பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை” எதை அர்த்தப்படுத்தியது? இது யெகோவாவின் நாள் சமீபித்துவிட்டதை அர்த்தப்படுத்தியது. அறுவடை காலம் முடியும் தறுவாயில், அதாவது வேளாண்மை ஆண்டு முடியும் தறுவாயில் கோடைக்கால பழங்கள் சேகரிக்கப்படுகின்றன. ‘கோடைக்காலத்தின் பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையை’ பார்க்கும்படி ஆமோசிடம் யெகோவா காண்பித்தது, இஸ்ரவேலரின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதையே அர்த்தப்படுத்தியது. ஆகவே, ஆமோசிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்க மாட்டேன்.”
நமக்குப் பாடம்:
1:3, 6, 9, 11, 13; 2:1, 4, 6. இஸ்ரவேல், யூதா மற்றும் சுற்றியிருந்த ஆறு தேசங்களின் மீதும் தமக்கிருந்த கோபத்தைக் குறித்து யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “நான் அதின் ஆக்கினையைத் திருப்ப மாட்டேன்.” யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது.—ஆமோஸ் 9:2-5.
2:12. கடினமாய் உழைக்கும் பயனியர்கள், பயணக் கண்காணிகள், மிஷனரிகள், பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரிடம் முழுநேர சேவையை விட்டுவிட்டு “சாதாரண வாழ்க்கை” வாழும்படி நாம் சொல்லவே கூடாது. மறுபட்சத்தில், அவர்களுடைய சிறந்த வேலையைத் தொடர்ந்து செய்யும்படி உற்சாகப்படுத்த வேண்டும்.
3:8. சிங்கம் கெர்ச்சிப்பதைக் கேட்டு ஒருவர் பயப்படுவதைப்போல, ‘நீ போய் என் ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லு’ என்று யெகோவா சொன்னதைக் கேட்டதும் ஆமோஸ் பிரசங்கிப்பதற்குத் தூண்டப்பட்டார். (ஆமோஸ் 7:15) ராஜ்ய செய்தியை பக்தி வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதற்கு தேவபயம் நம்மைத் தூண்ட வேண்டும்.
3:13-15; 5:11. செல்வச் செழிப்பில் மிதந்து மெத்தனமாக இருந்த ஜனங்களிடம் சாதாரண மேய்ப்பனான ஆமோஸ், யெகோவாவின் உதவியோடு “சாட்சி” கொடுத்தார். நம்முடைய பிராந்தியம் எவ்வளவு சவால்மிக்கதாய் இருந்தாலும், ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு அதுபோல நமக்கும் யெகோவா பயிற்சியளித்து உதவுவார்.
4:6-11; 5:4, 6, 14. யெகோவாவிடம் ‘திரும்புவதற்கு’ இஸ்ரவேலர் மீண்டும் மீண்டும் மறுத்தபோதிலும், அவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது: “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.” இந்தத் துன்மார்க்க உலகத்தை யெகோவா பொறுமையோடு எவ்வளவு காலம் அனுமதிக்கிறாரோ அது வரையாக, அவரிடம் திரும்பும்படி ஜனங்களை நாம் அறிவுறுத்த வேண்டும்.
5:18, 19. “கர்த்தருடைய நாளை [வாஞ்சையோடு] விரும்பி” அதற்கு உண்மையிலேயே தயாராகாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனம்! அவ்வாறு செய்கிற ஒருவனுடைய சூழ்நிலை, சிங்கத்திடமிருந்து தப்பியோடுகையில் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், கரடியிடமிருந்து தப்பியோடுகையில் பாம்பு கடித்ததுபோலவும் இருக்கும். ஆகவே, நாம் ஆன்மீக ரீதியில் ‘விழித்திருந்து’ எப்போதும் நம்மைத் தயாராக வைத்துக்கொள்வது ஞானமானது.—லூக்கா 21:36.
7:12-17. கடவுளுடைய செய்தியை நாம் பயமின்றி தைரியமாக அறிவிக்க வேண்டும்.
9:7-10. விசுவாசதுரோகிகளாக மாறிய இஸ்ரவேலர் எத்தியோப்பியரைப் போல் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறமுடியாத நிலைக்குச் சென்றார்கள்; உண்மையுள்ள கோத்திரப் பிதாக்கள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் சந்ததியாராக இவர்கள் இருந்தபோதிலும் இத்தகைய நிலைக்குச் சென்றார்கள். பாரபட்சமற்ற கடவுளுக்கு முன்பாக நல்ல பெயரைச் சம்பாதிப்பதற்கு குறிப்பிட்ட ஒரு வம்சத்தில் பிறக்க வேண்டுமென்ற அவசியமில்லை; மாறாக ‘அவருக்குப் பயந்து நீதியைச் செய்கிறவர்களாய்’ இருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 10:34, 35.
நாம் செய்ய வேண்டியது
சாத்தானிய உலகத்தின்மீது கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாள் சமீபித்துவிட்டது. கடவுள் தமது ஆவியை தம் வணக்கத்தார்மீது ஊற்றி, வரவிருக்கும் தமது நாளைப்பற்றி மனிதகுலத்திற்கு எச்சரிக்க அவர்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறார். யெகோவாவை அறிந்துகொள்ளவும் ‘அவருடைய பெயரில் கூப்பிடவும்’ மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும், அல்லவா?—யோவேல் 2:31, 32.
“தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” என ஆமோஸ் அறிவுரை வழங்குகிறார். (ஆமோஸ் 5:15) யெகோவாவின் நாள் சமீபித்து வருவதால், அவரிடம் நெருங்கி வருவதும் இந்தத் துன்மார்க்க உலகம் மற்றும் அதன் கீழ்த்தரமான கூட்டுறவுகளிலிருந்து விலகியிருப்பதும் ஞானமான போக்காகும். அதற்கு உதவும் காலத்திற்கேற்ற பாடங்களை யோவேல் மற்றும் ஆமோஸ் புத்தகங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம், அல்லவா?—எபிரெயர் 4:12.
[பக்கம் 12-ன் படம்]
“கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது” என யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்தார்
[பக்கம் 15-ன் படங்கள்]
ஆமோசைப்போல நாமும் கடவுளுடைய செய்தியை பயமின்றி தைரியமாய் அறிவிக்க வேண்டும்