இருதயத்தை ஆராய்கிறவரான யெகோவாவைத் தேடுங்கள்
“என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.”—ஆமோஸ் 5:4.
1, 2. யெகோவா “இருதயத்தைப் பார்க்கிறார்” என பைபிள் கூறும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது?
‘மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்று சாமுவேல் தீர்க்கதரிசியிடம் யெகோவா தேவன் கூறினார். (1 சாமுவேல் 16:7) யெகோவா எவ்வாறு “இருதயத்தைப் பார்க்கிறார்”?
2 பைபிளில் இருதயம் என்பது ஒருவரின் விருப்பங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள், பாசங்கள் போன்றவற்றைக் குறிக்க பெரும்பாலும் அடையாள அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. ஆகவே, கடவுள் இருதயத்தைப் பார்க்கிறார் என்று பைபிள் கூறும்போது அவர் வெறும் வெளித்தோற்றத்தைப் பாராமல், ஒருவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதற்கே கவனம் செலுத்துகிறார் என்று அர்த்தப்படுத்துகிறது.
இஸ்ரவேலை கடவுள் ஆராய்கிறார்
3, 4. ஆமோஸ் 6:4-6-ன்படி, பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலில் நிலைமை எப்படி இருந்தது?
3 இருதயங்களை ஆராய்கிறவர் ஆமோஸின் நாட்களிலிருந்த பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலைப் பார்த்தபோது எதைக் கவனித்தார்? ‘தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின் மேல் சவுக்கியமாய்ச் சயனித்த’ ஆண்களைப் பற்றி ஆமோஸ் 6:4-6 குறிப்பிடுகிறது. அவர்கள் ‘மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்றார்கள்.’ அதுமட்டுமல்ல, ‘கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்தார்கள்.’
4 மேலோட்டமாக பார்த்தால் இது ரம்மியமான ஒரு காட்சியாக தோன்றலாம். பணக்காரர்கள் சொகுசான தங்கள் வீடுகளில் சகல சௌகரியங்களையும் அனுபவித்தார்கள், சுவைமிக்க உணவையும் பானத்தையும் ருசித்தார்கள், இசைக் கருவிகளின் இசையில் மயங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்குத் ‘தந்தக் கட்டில்களும்’ இருந்தன. தந்த வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களை இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியாவில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். (1 இராஜாக்கள் 10:22) அவற்றில் அநேகம் மரச் சாமான்களிலும் நிலக்கால்களிலும் பதிக்கப்பட்டிருந்தன.
5. ஆமோஸின் நாட்களிலிருந்த இஸ்ரவேலரைக் கடவுளுக்கு ஏன் பிடிக்கவில்லை?
5 இஸ்ரவேலர் அறுசுவை உணவை உண்டு, ருசியான திராட்சரசத்தை அருந்தி, இனிமையான இசையை ரசித்து சொகுசாக வாழ்ந்தது யெகோவா தேவனுக்குப் பிடிக்கவில்லையா? அப்படியல்ல. மனிதன் அனுபவிப்பதற்காக சகலவித நன்மைகளையும் நிறைவாய் கொடுப்பதே அவர்தான்! (1 தீமோத்தேயு 6:17) அந்த மக்களின் தவறான ஆசைகள், இருதய நிலை, கடவுளிடம் பயபக்தியில்லாமை, சக இஸ்ரவேலரிடம் அன்பில்லாமை ஆகியவைதான் அவருக்கு பிடிக்கவில்லை.
6. ஆமோஸின் நாட்களில் இஸ்ரவேலரின் ஆன்மீக நிலை என்ன?
6 ‘தங்கள் மஞ்சங்களின் மேல் சயனித்துக் கொண்டு, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளைத் தின்று, மதுபானத்தைக் குடித்து, கீதவாத்தியங்களை உண்டுபண்ணிக் கொண்டிருக்கும்’ ஆட்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘தீங்கு நாட்கள் தூரமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?’ என அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் இஸ்ரவேலின் நிலைமையை எண்ணி அதிக துயரப்படுவதற்கு பதிலாக, ‘யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற் போனார்கள்.’ (ஆமோஸ் 6:3-6) யோசேப்பு, அதாவது இஸ்ரவேல், பொருளாதார செழுமையை அனுபவித்த போதிலும், ஆன்மீக ரீதியில் படு மோசமான நிலையில் இருந்ததைக் கடவுள் பார்த்தார். இருந்தாலும், அந்த ஜனங்கள் கொஞ்சம்கூட கவலைப்படாமல் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதேபோன்ற மனப்பான்மையை இன்று அநேகர் காண்பித்து வருகிறார்கள். கடினமான காலங்களில் வாழ்கிறோம் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், நேரடியாக தாங்களே பாதிக்கப்பட்டால் தவிர மற்றவர்களின் நிலைமையைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை, ஆன்மீக விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இஸ்ரவேல்—சீரழிந்துவந்த தேசம்
7. தெய்வீக எச்சரிக்கைகளை இஸ்ரவேலர் கேட்காவிட்டால் என்ன நடக்கவிருந்தது?
7 வெளித்தோற்றத்தில் செழுமையாக இருந்தாலும் சீரழிவை நோக்கிச் செல்லும் ஒரு தேசத்தையே ஆமோஸ் புத்தகம் சித்தரிக்கிறது. தெய்வீக எச்சரிக்கைகளைக் கேட்டு தங்கள் நோக்குநிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களை எதிரிகளின் கைகளில் யெகோவா விட்டுவிடுவார். அப்போது, அழகான தந்தக் கட்டில்களில் புரளும் அவர்களை அசீரியர்கள் வந்து கைதிகளாக இழுத்துச் செல்வார்கள். அவர்கள் சொகுசாக அனுபவித்தவையெல்லாம் காணாமல் போய்விடும்!
8. இஸ்ரவேல் எப்படி ஆன்மீக ரீதியில் மோசமடைந்தது?
8 இஸ்ரவேலர் இவ்வளவு மோசமான நிலைக்கு எப்படி வந்தார்கள்? பொ.ச.மு. 997-ல், சாலொமோன் ராஜாவுக்குப் பிறகு அவரது மகன் ரெகொபெயாம் ராஜாவானதும் யூதாவையும் பென்யமீனையும் விட்டுப் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேல் பிரிந்தபோது இந்நிலை உருவாக ஆரம்பித்தது. “நேபாத்தின் குமாரன்” முதலாம் யெரொபெயாம் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலின் முதலாவது ராஜாவானான். (1 இராஜாக்கள் 11:26) யெகோவாவை வணங்குவதற்காக தனது ராஜ்யத்தின் குடிமக்கள் எருசலேமுக்குச் செல்வது மிகவும் கடினமென யெரொபெயாம் அவர்களை நம்ப வைத்தான். ஆனால், உண்மையில் ஜனங்களுடைய நலனில் அவனுக்கு அக்கறை இருக்கவில்லை. தன் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தினால்தான் அவன் அந்த முயற்சி எடுத்தான். (1 இராஜாக்கள் 12:26, 27) அதாவது, வருடாந்தர பண்டிகைகளின்போது யெகோவாவை வணங்குவதற்காக இஸ்ரவேலர் எருசலேமிலிருந்த ஆலயத்திற்குத் தொடர்ந்து போய் வந்தால் எங்கே அவர்கள் யூதா ராஜ்யத்திடமே தங்கள் பற்றுறுதியைக் காட்ட ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தினால்தான் அப்படிச் செய்தான். ஜனங்கள் அங்குச் செல்வதைத் தடுப்பதற்காக தாணில் ஒன்றும் பெத்தேலில் ஒன்றுமாக இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்து வைத்தான். இவ்வாறு கன்றுக்குட்டி வணக்கம் இஸ்ரவேல் ராஜ்யத்தின் தேசிய மதமானது.—2 நாளாகமம் 11:13-15.
9, 10. (அ) முதலாம் யெரொபெயாம் ராஜா என்ன பண்டிகைகளை ஏற்பாடு செய்தான்? (ஆ) இரண்டாம் யெரொபெயாம் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலில் ஆசரிக்கப்பட்ட பண்டிகைகளைக் கடவுள் எப்படிக் கருதினார்?
9 இந்தப் புதிய மதத்தை அதிகாரப்பூர்வமான மதம் போல யெரொபெயாம் தோன்றச் செய்தான். அதற்காக எருசலேமில் ஆசரிக்கப்பட்டதைப் போன்ற பண்டிகைகளை ஏற்பாடு செய்தான். ‘யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கு ஒப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையைக் கொண்டாடி, பெத்தேலிலே தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டான்’ என்று 1 இராஜாக்கள் 12:32-ல் வாசிக்கிறோம்.
10 என்றாலும், இத்தகைய பொய் மதப் பண்டிகைகளை யெகோவா அங்கீகரிக்கவே இல்லை. இதை இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சிக் காலத்தில், அதாவது பொ.ச.மு. சுமார் 844-ல், ஆமோஸ் மூலம் யெகோவா திட்டவட்டமாகத் தெரிவித்தார். (ஆமோஸ் 1:1) ஆமோஸ் 5:21-24-ல் கடவுள் இவ்வாறு சொன்னார்: “உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் தகன பலிகளையும் போஜன பலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்க மாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திர பலிகளையும் நான் நோக்கிப் பார்க்க மாட்டேன். உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரக்கடவது.”
இன்று காணப்படும் ஒற்றுமைகள்
11, 12. பூர்வ இஸ்ரவேலின் வணக்கத்திற்கும் கிறிஸ்தவமண்டலத்தின் வணக்கத்திற்கும் இடையே என்ன ஒற்றுமைகள் உள்ளன?
11 ஆகவே, இஸ்ரவேலில் நடைபெற்ற பண்டிகைகளில் பங்குகொண்டவர்களின் இருதயங்களை யெகோவா ஆராய்ந்தார் என்பதும் அந்தப் பண்டிகைகளையும் பலிகளையும் அவர் வெறுத்தார் என்பதும் தெளிவாக இருக்கிறது. அதைப் போலவே இன்று கிறிஸ்தவமண்டலத்தின் புறமத கொண்டாட்டங்களான கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்றவற்றை அவர் வெறுக்கிறார். யெகோவாவின் வணக்கத்தாரைப் பொறுத்தவரை, நீதிக்கும் அநீதிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது, ஒளிக்கும் இருளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.—2 கொரிந்தியர் 6:14-16.
12 கிறிஸ்தவமண்டலத்தாரின் வணக்கத்திற்கும் கன்றுக்குட்டிகளை வணங்கிய இஸ்ரவேலரின் வணக்கத்திற்கும் இடையே இன்னும் சில ஒற்றுமைகள் உள்ளன. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலர் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை ஏற்றுக்கொண்டாலும், அவர்களுடைய வணக்கம் கடவுள் மீதுள்ள உண்மையான அன்பினால் தூண்டப்பட்டதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், யெகோவாவை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்க வேண்டும் என கிறிஸ்தவமண்டலம் கற்பித்திருக்குமே; ஏனெனில் அப்படிப்பட்ட வணக்கமே கடவுளைப் பிரியப்படுத்துகிற வணக்கமாகும். (யோவான் 4:24) அதோடு, “நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டுவர” கிறிஸ்தவமண்டலம் அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய ஒழுக்க தராதரங்களின் மதிப்பையே அது எப்போதும் குறைத்திருக்கிறது. அதோடு, வேசித்தனத்திற்கும் வினைமையான மற்ற பாவங்களுக்கும் இடமளித்திருக்கிறது; அதுமட்டுமா, ஒத்த பாலினத்தவர் திருமணங்களை ஆசீர்வதிக்கும் அளவிற்குக்கூட சென்றிருக்கிறது!
‘நன்மையை விரும்புங்கள்’
13. ஆமோஸ் 5:15-லுள்ள வார்த்தைகளுக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
13 தாம் அங்கீகரிக்கிற விதத்தில் தம்மை வணங்க ஆசைப்படுவோரிடம், ‘தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்’ என்று யெகோவா கூறுகிறார். (ஆமோஸ் 5:15) அன்பும் வெறுப்பும் நம் அடையாளப்பூர்வ இருதயத்தில் தோன்றும் பலமான உணர்ச்சிகளாகும். இருதயம் திருக்குள்ளதாக இருப்பதால், அதைப் பாதுகாக்க நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 4:23; எரேமியா 17:9) அதில் தவறான ஆசைகள் வளர இடங்கொடுத்தால் நாம் தீமையை விரும்பி, நன்மையை வெறுக்க ஆரம்பித்து விடுவோம். அப்படிப்பட்ட ஆசைகளைத் திருப்திப்படுத்த தொடர்ந்து பாவம் செய்து வந்தோமானால், எவ்வளவுதான் பக்திவைராக்கியம் காட்டினாலும் கடவுளுடைய தயவு மறுபடியும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது. எனவே ‘தீமையை வெறுத்து, நன்மையை விரும்புவதற்கு’ யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிப்போமாக.
14, 15. (அ) இஸ்ரவேலில் நற்காரியங்களைச் செய்து வந்தவர்கள் யார், ஆனால் அவர்களில் சிலர் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? (ஆ) இன்று முழுநேர ஊழியம் செய்பவர்களை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
14 என்றாலும், இஸ்ரவேலர் அனைவருமே யெகோவாவின் பார்வையில் தவறானதைச் செய்து கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, ஓசியாவும் ஆமோஸும் ‘நன்மையை விரும்பினார்கள்’; தீர்க்கதரிசிகளாக உண்மையோடு கடவுளுக்குச் சேவை செய்தார்கள். மற்றவர்கள் நசரேயர்களாக வாழ தீர்மானித்தார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்த காலம் பூராவும் திராட்சையில் தயாரிக்கப்பட்ட எதையும் அவர்கள் சாப்பிடவில்லை; முக்கியமாய் திராட்சரசத்தைத் தொடவே இல்லை. (எண்ணாகமம் 6:1-4) அப்படி நற்காரியங்களைச் செய்தவர்களின் சுய தியாக வாழ்க்கையை மற்ற இஸ்ரவேலர் எவ்வாறு கருதினார்கள்? இந்தக் கேள்விக்கான அதிர்ச்சியூட்டும் பதில், அந்தத் தேசம் எந்தளவு சீரழிந்திருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்தீர்கள், தீர்க்கதரிசிகளிடம் ‘தீர்க்கதரிசனம் உரைக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டீர்கள்” என ஆமோஸ் 2:12 (NW) சொல்கிறது.
15 சொல்லப்போனால், நசரேயர்களும் தீர்க்கதரிசிகளும் வைத்த முன்மாதிரியைப் பார்த்து அந்த இஸ்ரவேலர் வெட்கப்பட்டு தங்கள் வழிகளை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தாதபடி உத்தமர்களை தடுப்பதற்கே முயன்றார்கள். பயனியர்களாக, மிஷனரிகளாக, பயணக் கண்காணிகளாக அல்லது பெத்தேல் அங்கத்தினர்களாக இருக்கிற சக கிறிஸ்தவர்கள் முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டு சராசரி வாழ்க்கை வாழும்படி ஒருபோதும் அவர்களை வற்புறுத்தாதிருப்போமாக. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் முழுநேர ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க உற்சாகப்படுத்துவோமாக!
16. ஆமோஸின் நாட்களில் இருந்ததைவிட மோசேயின் நாட்களில் இஸ்ரவேலர் ஏன் நல்ல நிலையில் இருந்தார்கள்?
16 ஆமோஸின் நாட்களில் அநேக இஸ்ரவேலர் பொருள் சம்பந்தமாகத் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தாலும் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கவில்லை. (லூக்கா 12:13-21) அவர்களுடைய முன்னோர் வனாந்தரத்தில் இருக்கையில் 40 வருடங்களுக்கு மன்னாவை மட்டும் சாப்பிட்டார்கள். கொழுத்த எருதின் கறியை அவர்கள் ருசிக்காவிட்டாலும், தந்தக் கட்டில்களில் புரளாவிட்டாலும், மோசே அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக் கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; . . . இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை.” (உபாகமம் 2:7) இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருக்கையில் தேவைப்பட்ட அனைத்தும் அவர்களுக்கு எப்போதும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் அன்பும் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு இருந்தது!
17. யெகோவா ஏன் பூர்வ இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து வந்தார்?
17 இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தாம் அழைத்து வந்ததையும், அவர்களது எதிரிகளைத் துரத்தியடிக்க அவர்களுக்குத் தாம் உதவியதையும் ஆமோஸின் நாட்களில் இருந்தவர்களுக்கு யெகோவா நினைப்பூட்டினார். (ஆமோஸ் 2:9, 10) யெகோவா ஏன் இஸ்ரவேலரை எகிப்து தேசத்திலிருந்து விடுவித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து வந்தார்? தங்கள் சிருஷ்டிகரை ஒதுக்கிவிட்டு, சொகுசான வாழ்க்கையில் அவர்கள் மிதக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை! மாறாக, அவர்கள் சுதந்திரமாகவும் ஆன்மீக ரீதியில் சுத்தமுள்ளவர்களாகவும் தம்மை வணங்க வேண்டும் என்பதற்காகவே அழைத்து வந்தார். ஆனால் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலின் குடிகள் தீமையை வெறுக்கவில்லை, நன்மையையும் விரும்பவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் விக்கிரகங்களுக்கே மகிமையைச் செலுத்தினார்கள், யெகோவா தேவனை மகிமைப்படுத்தவில்லை. எவ்வளவு வெட்கக்கேடு!
யெகோவா கணக்குக் கேட்கிறார்
18. ஆன்மீக ரீதியில் யெகோவா நம்மை ஏன் விடுவித்திருக்கிறார்?
18 இஸ்ரவேலரின் வெட்கக்கேடான நடத்தையைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. “உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்” என்று சொன்னபோது தாம் செய்யப் போவதை தெளிவாக்கினார். (ஆமோஸ் 3:2) நவீனகால எகிப்தின், அதாவது தற்போதைய துன்மார்க்க உலகின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருப்பதை இந்த வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்ட வேண்டும். நம்முடைய சுயநல ஆசைகளை நாடிச் செல்வதற்காக யெகோவா நம்மை விடுவிக்கவில்லை. மாறாக, சுத்தமான வணக்கத்தில் ஈடுபடும் சுதந்திர ஜனமாக, அவரை இருதயப்பூர்வமாய் மகிமைப்படுத்துவதற்காகவே நம்மை விடுவித்திருக்கிறார். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கணக்குக் கொடுக்க வேண்டும்.—ரோமர் 14:12.
19. ஆமோஸ் 4:4, 5-ன்படி, இஸ்ரவேலிலிருந்த பெரும்பான்மையர் எதை விரும்பினார்கள்?
19 வருத்தகரமாக, இஸ்ரவேலிலிருந்த பெரும்பான்மையர் ஆமோஸின் வலிமைமிக்க செய்தியைக் கேட்கவில்லை. அவர்களுடைய இருதய நிலை ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டிருப்பதை ஆமோஸ் அம்பலப்படுத்தினார்; “பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப் பண்[ணுங்கள்] . . . இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம்” என அவர் சொன்னது ஆமோஸ் 4:4, 5-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் சரியான ஆசைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் இருதயங்களைக் காத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களில் அநேகர் தீமையை விரும்ப ஆரம்பித்தார்கள், நன்மையையோ வெறுக்க ஆரம்பித்தார்கள். கன்றுக்குட்டி வணக்கத்தாரான அந்த முரட்டு ஜனங்கள் திருந்தவே இல்லை. யெகோவா அவர்களிடம் கணக்குக் கேட்பார், அப்போது அவர்கள் தங்களுடைய பாவத்திலேயே மடிய வேண்டியிருக்கும்!
20. ஆமோஸ் 5:4-க்கு இசைவாக ஒருவர் எவ்வாறு வாழ முடியும்?
20 யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பது இஸ்ரவேலில் வாழ்ந்த எவருக்குமே சுலபமாக இருந்திருக்காது. எதிர்நீச்சல் போடுவது கடினம் என்பது இளைஞர், முதியோர் என இன்றுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நன்றாக தெரியும். என்றாலும், அன்றிருந்த சில இஸ்ரவேலருக்கு கடவுளிடம் அன்பும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலும் இருந்ததால் மெய் வணக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆமோஸ் 5:4-ல், “என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” என்ற கனிவான அழைப்பை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். அதேவிதமாக இன்றும், பைபிளிலுள்ள திருத்தமான அறிவைப் பெற்று மனந்திரும்பி தமது சித்தத்தைச் செய்பவர்களுக்கும் தம்மைத் தேடுபவர்களுக்கும் அவர் இரக்கம் காட்டுகிறார். இப்படிப்பட்ட போக்கைப் பின்தொடருவது அத்தனை சுலபமல்ல, ஆனால் அவ்வாறு செய்வது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்—யோவான் 17:3.
ஆன்மீக பஞ்சத்தின் மத்தியிலும் செழுமை
21. மெய் வணக்கத்தைப் பின்பற்றாதவர்கள் எத்தகைய பஞ்சத்தை எதிர்ப்படுகிறார்கள்?
21 மெய் வணக்கத்தை ஆதரிக்காதவர்களுக்கு என்ன காத்திருந்தது? படுமோசமான பஞ்சம், அதாவது ஆன்மீக பஞ்சம் காத்திருந்தது! “நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்” என சர்வத்துக்கும் ஆண்டவரான யெகோவா சொன்னார். (ஆமோஸ் 8:11) கிறிஸ்தவமண்டலம் அப்பேர்ப்பட்ட ஆன்மீக பஞ்சத்தில்தான் தவித்துக் கொண்டிருக்கிறது. என்றாலும், நல்மனமுள்ளவர்கள் யெகோவாவுடைய ஜனங்களின் ஆன்மீக செழுமையைப் பார்த்து, அவரது அமைப்பிற்குள் திரள்திரளாக ஓடி வருகிறார்கள். மெய்க் கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவமண்டலத்தாருக்கும் இடையே இருக்கும் நிலைமை யெகோவாவின் வார்த்தையில் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.”—ஏசாயா 65:13.
22. என்ன காரணத்தினால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்?
22 யெகோவாவின் ஊழியர்களாக நமக்கு கிடைத்திருக்கும் ஆன்மீக ஏற்பாடுகளையும் பயன்களையும் நாம் தனிப்பட்ட விதமாக போற்றுகிறோமா? ஆம், பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிக்கும்போதும், சபை கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கூடிவரும்போதும் செம்மையான இருதய நிலையின் காரணமாக மகிழ்ச்சியால் கெம்பீரிக்க வேண்டும் போல் உணருகிறோம். ஆமோஸ் தீர்க்கதரிசனம் உட்பட, ஆவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையை தெளிவாக புரிந்துகொண்டிருப்பதால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
23. கடவுளை மகிமைப்படுத்துகிறவர்கள் எதை அனுபவிக்கிறார்கள்?
23 ஆகவே, கடவுளிடம் அன்புகூர்ந்து அவரை மகிமைப்படுத்த விரும்பும் எல்லாருக்கும் நம்பிக்கை அளிக்கும் செய்தி ஆமோஸ் தீர்க்கதரிசனத்தில் உள்ளது. நமது தற்போதைய பொருளாதார நிலை என்னவாக இருந்தாலும், குழப்பமிக்க இந்த உலகில் நாம் எத்தகைய சோதனைகளை எதிர்ப்பட்டாலும், கடவுளை நேசிக்கும் நாம் தெய்வீக ஆசீர்வாதங்களையும் தரமான ஆன்மீக உணவையும் அனுபவித்துக் களிக்கிறோம். (நீதிமொழிகள் 10:22; மத்தேயு 24:45-47) அப்படியானால், சகலவித நன்மைகளையும் நமக்கு நிறைவாய் கொடுக்கிற கடவுளுக்கே எல்லா மகிமையும் சேருவதாக! நமது இருதயப்பூர்வமான துதிகளை என்றென்றும் அவருக்குச் செலுத்துவோமாக! இருதயத்தை ஆராய்கிறவரான யெகோவாவைத் தேடுவது பெருமகிழ்ச்சி தரும் ஒரு சிலாக்கியமாகும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• ஆமோஸின் நாட்களில் இஸ்ரவேலில் நிலைமை எப்படி இருந்தது?
• பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலின் நிலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் என்ன ஒற்றுமைகள் உள்ளன?
• முன்னறிவிக்கப்பட்ட எந்தப் பஞ்சம் இப்போது நிலவி வருகிறது, இதில் பாதிக்கப்படாதவர்கள் யார்?
[பக்கம் 21-ன் படங்கள்]
அநேக இஸ்ரவேலர் சொகுசாக வாழ்ந்தார்கள், ஆனால் ஆன்மீக செழுமையை அவர்கள் அனுபவிக்கவில்லை
[பக்கம் 23-ன் படம்]
தொடர்ந்து நற்காரியங்களில் ஈடுபடும்படி முழுநேர ஊழியர்களை உற்சாகப்படுத்துங்கள்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
யெகோவாவின் சந்தோஷமுள்ள ஜனங்கள் மத்தியில் ஆன்மீக பஞ்சத்திற்கே இடமில்லை