யெகோவாவை பின்பற்றி நீதியிலும் நியாயத்திலும் நடவுங்கள்
“யெகோவாவாகிய நான் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிறேன் . . . இவைகளே எனக்குப் பிரியம்.”—எரேமியா 9:24, தி.மொ.
1. என்ன மகத்தான எதிர்பார்ப்பை யெகோவா அளித்தார்?
யெகோவா தம்மை எல்லாரும் அறிந்துகொள்ளும் நாள் வரும் என்று வாக்குறுதியளித்தார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் அவர் இவ்வாறு அறிவித்தார்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, சங்காரம் செய்வாருமில்லை; சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9, தி.மொ.) அது என்னே மகத்தான எதிர்பார்ப்பு!
2. யெகோவாவை அறிந்துகொள்வதில் என்ன அடங்கியுள்ளது? ஏன்?
2 ஆனால், யெகோவாவை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் என்ன? அதிமுக்கியத்துவம் வாய்ந்தது எது என்பதை யெகோவா எரேமியாவுக்கு வெளிப்படுத்தினார்: “யெகோவாவாகிய நான் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிறேன் என்று என்னை அறிந்துகொள்ளும் புத்தி தனக்கு இருக்கிறதைப்பற்றியே பெருமை பாராட்ட வேண்டும். இவைகளே எனக்குப் பிரியம்.” (எரேமியா 9:24, தி.மொ.) இவ்வாறு, யெகோவாவை அறிந்துகொள்வது என்பதில், யெகோவா நீதியையும் நியாயத்தையும் காட்டும் விதத்தை அறிந்துகொள்வது உள்ளடங்கியிருக்கிறது. அதற்குப் பிறகு, நாம் அந்த குணங்களை காண்பித்தோம் என்றால் அவர் நம்மில் மகிழ்ச்சி அடைவார். நாம் அதை எப்படி காட்டமுடியும்? யெகோவா காலங்காலமாய் அபூரண மனிதர்களோடு தாம் செயல்தொடர்பு கொண்ட பதிவை தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் பாதுகாத்திருக்கிறார். அதை படிப்பதன் மூலம், யெகோவா நீதியையும் நியாயத்தையும் காட்டும் வழியை அறிந்து, அதற்கு இசைவாய் அவரைப் பின்பற்ற முடியும்.—ரோமர் 15:4.
நீதியானவர் ஆயினும் இரக்கமானவர்
3, 4. சோதோம் கொமோராவை யெகோவா அழித்தது ஏன் நியாயம்?
3 சோதோம் கொமோராவின் மீதான தெய்வீக நியாயத்தீர்ப்பே, யெகோவாவுடைய நீதியின் அநேக அம்சங்களை விளக்கிக் காட்டுகிற மிகச்சிறந்த உதாரணம். யெகோவா தேவைப்பட்ட தண்டனை வழங்கியது மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த நபர்களுக்கு இரட்சிப்பையும் அளித்தார். அந்த பட்டணங்களை அழித்தது உண்மையிலேயே நியாயமானதாய் இருந்ததா? ஆபிரகாம் சோதோமின் அக்கிரமத்தைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்த காரணத்தால் அவர் முதலில் அவ்வாறு நினைக்கவில்லை. வெறும் பத்து நீதிமான்கள் காணப்பட்டாலே தாம் அந்தப் பட்டணத்தை அழிக்கப்போவதில்லை என்று யெகோவா ஆபிரகாமுக்கு உறுதியளித்தார். யெகோவாவின் நீதி ஒருபோதும் அவசரப்பட்டோ இரக்கமற்றோ இருப்பதில்லை என்பது தெளிவாயிருக்கிறது.—ஆதியாகமம் 18:20-32.
4 இரண்டு தேவதூதர்கள் சோதோமை கவனமாய் ஆராய்ந்து பார்த்தபோது அதன் ஒழுக்க சீரழிவைப் பற்றி விவரமான அத்தாட்சி கிடைத்தது. லோத்துவின் வீட்டில் இரண்டு மனுஷர் தங்குவதற்காக வந்திருப்பதை அந்தப் பட்டணத்து மனிதராகிய ‘வாலிபர் முதல் கிழவர் மட்டும்’ கேள்விப்பட்டபோது, கும்பலாக சேர்ந்து ஓரினப்புணர்ச்சி மூலம் கற்பழிக்கும் நோக்கத்துடன் அவருடைய வீட்டை திடீரெனத் தாக்கினர். அவர்களுடைய ஒழுக்கக்கேடு உண்மையிலேயே மிகவும் மோசமாக தரங்கெட்டிருந்திருந்தது! சந்தேகமின்றி, அந்த பட்டணத்தின் மீதான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நீதியான தீர்ப்பாய் இருந்தது.—ஆதியாகமம் 19:1-5, 24, 25.
5. கடவுள் எப்படி லோத்தையும் அவருடைய குடும்பத்தையும் சோதோமிலிருந்து காப்பாற்றினார்?
5 சோதோம், கொமோராவின் அழிவை எச்சரிக்கும் உதாரணமாக எடுத்துக் கூறிய பிறகு, அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்.’ (2 பேதுரு 2:6-9) சோதோமின் தேவபக்தியற்ற ஜனங்களோடு சேர்ந்து நீதிமானாயிருந்த லோத்தும் அவருடைய குடும்பமும் அழிந்து போயிருந்தால் நீதி பூர்த்தி செய்யப்பட்டிருக்காது. இவ்வாறு யெகோவாவின் தூதர்கள் வரப்போகும் அழிவைக் குறித்து லோத்துவை எச்சரித்தார்கள். லோத்து தாமதித்தபோது, ‘யெகோவா அவன் மேல் இரக்கம் வைத்திருந்தபடியால்’ தேவதூதர்கள் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதியாகமம் 19:12-16, தி.மொ.) இந்த துன்மார்க்க ஒழுங்குமுறைக்கு வரவிருக்கிற அழிவில், நீதியான நபர்கள்மீது யெகோவா இதே அக்கறை காண்பிப்பார் என்று நாம் நிச்சயமாய் இருக்கமுடியும்.
6. பொல்லாத ஒழுங்குமுறைக்கு வரப்போகும் அழிவைக் குறித்து நாம் ஏன் அளவுக்குமீறி கவலைப்படக்கூடாது?
6 இந்த ஒழுங்குமுறையின் முடிவு ‘நீதியைச் சரிக்கட்டும்’ காலமாக இருந்தாலும், நாம் அளவுக்கு மீறி கவலைப்படுவதற்கு காரணம் எதுவுமில்லை. (லூக்கா 21:22) கடவுள் அர்மகெதோனில் நிறைவேற்றப்போகும் நியாயத்தீர்ப்பு ‘அனைத்தும் நீதியாய்’ நிரூபிக்கும். (சங்கீதம் 19:9) ஆபிரகாம் அறிந்துகொண்டபடி, நம்முடைய நீதியைக் காட்டிலும் யெகோவாவின் நீதி அதிக உயர்வானதாய் இருப்பதால் மானிடர்களாகிய நாம் அதில் முழு நம்பிக்கை வைக்கமுடியும். ஆபிரகாம் இவ்வாறு கேட்டார்: ‘சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ?’ (ஆதியாகமம் 18:25; ஒப்பிடுக: யோபு 34:10.) அல்லது ஏசாயா அதை பொருத்தமாய் கூறியபடி, ‘நியாயவழியைக் கற்றுக்கொள்ள . . . அவர் [யெகோவா] யாரோடே ஆலோசனை பண்ணினார்?’—ஏசாயா 40:14, தி.மொ.
மனிதரை இரட்சிக்க நீதியான செயல்
7. கடவுளுடைய நீதிக்கும் அவருடைய இரக்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
7 கடவுளுடைய நீதி தவறுசெய்வோரை தண்டிக்கும் விதத்தில் மட்டுமே வெளிக்காட்டப்படுவதில்லை. யெகோவா தம்மை ‘நீதிபரர், இரட்சகர்’ என்றும் விவரிக்கிறார். (ஏசாயா 45:21) கடவுளுடைய நீதி, நியாயம் ஆகியவற்றுக்கும் பாவத்தின் பாதிப்புகளிலிருந்து மனிதவர்க்கத்தை இரட்சிக்க அவருக்கு இருக்கும் விருப்பத்துக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வசனத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “கடவுளுடைய நீதி அவருடைய இரக்கத்தை வெளிக்காட்டவும் இரட்சிப்பை நிறைவேற்றவும் நடைமுறையான வழிகளை நாடுகிறது” என்று தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, 1982-ன் பதிப்பு சுட்டிக்காட்டுகிறது. கடவுளுடைய நீதியை இரக்கத்தோடு சமநிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை; மாறாக, இரக்கம் கடவுளுடைய நீதியின் வெளிக்காட்டாக இருக்கிறது. மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக மீட்பின் கிரய பலியை கடவுள் ஏற்பாடு செய்திருப்பது, தெய்வீக நீதியின் இந்த அம்சத்துக்கு முதன்மைவாய்ந்த உதாரணம்.
8, 9. (அ) ‘ஒரே நீதிச்செயல்’ என்ற விவரிப்பில் எது சேர்த்துக்கொள்ளப்பட்டது? ஏன்? (ஆ) யெகோவா நம்மிடமிருந்து எதைத் திரும்பக் கேட்கிறார்?
8 யெகோவாவின் தராதரங்கள் பிரபஞ்சம் முழுவதற்கும் உரியவை, அவர்தாமே அவற்றுக்குக் கீழ்ப்படிகிறார்; ஆகவேதான் மீட்கும் பொருள், அதாவது கடவுளுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அருமையான உயிர் விலையுயர்ந்த கிரயமாய் இருந்தது. (மத்தேயு 20:28) ஆதாமின் பரிபூரண உயிர் இழக்கப்பட்டு விட்டது, ஆகையால் ஆதாமின் சந்ததியாருக்கு உயிரை மீட்டளிப்பதற்கு ஒரு பரிபூரண உயிர் தேவைப்பட்டது. (ரோமர் 5:19-21) இயேசுவின் உத்தமம்வாய்ந்த போக்கை ‘ஒரே நீதிச்செயல்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கிறார்; இதில் மீட்கும் பொருள் செலுத்தியதும் உட்படும். (ரோமர் 5:18, தி.மொ.) அது ஏன் அப்படி? ஏனெனில் யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காண்கையில், மனிதவர்க்கத்தை மீட்பது அவருக்கு தாமே பெரும் இழப்பாக இருந்தபோதிலும் அதுவே சரியான மற்றும் நியாயமான காரியமாய் இருந்தது. ஆதாமின் சந்ததியார், கடவுள் முறிக்க விரும்பாத “நெரிந்த நாணலை” போல் அல்லது அவர் அணைக்க விரும்பாத “மங்கியெரிகிற திரியை” போல் இருந்தனர். (மத்தேயு 12:20) ஆதாமின் சந்ததியார் மத்தியிலிருந்து அநேக உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் தோன்றுவார்கள் என கடவுள் நம்பிக்கை வைத்திருந்தார்.—ஒப்பிடுக: மத்தேயு 25:34.
9 அன்பையும் நீதியையும் வெளிக்காட்டுகிற இந்த மிக உயர்வான செயலுக்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? ‘நியாயம் செய்ய வேண்டும்’ என்பதே யெகோவா நம்மிடமிருந்து கேட்கும் காரியங்களில் ஒன்று. (மீகா 6:8) நாம் இதை எப்படி செய்யலாம்?
நீதியைத் தேடுங்கள், நியாயத்தை நாடுங்கள்
10. (அ) நாம் நீதியைக் காட்டுவதற்கு ஒரு வழி எது? (ஆ) நாம் எப்படி கடவுளுடைய நீதியை முதலாவது தேட முடியும்?
10 முதலாவதாக, நாம் கடவுளுடைய ஒழுக்க தராதரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஏனெனில் கடவுளுடைய தராதரங்கள் நீதியானவை, நியாயமானவை; ஆகையால், அவற்றுக்கு இசைவாய் வாழும்போது நாம் நியாயமாய் நடக்கிறோம். அதைத்தான் யெகோவா தம் ஜனங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். “நன்மைசெய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்” என்று யெகோவா இஸ்ரவேலரிடம் கூறினார். (ஏசாயா 1:17) இயேசு மலைப்பிரசங்கத்தில் அதுபோன்ற புத்திமதியை கொடுத்தார்; “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று போதித்தார். (மத்தேயு 6:33) ‘நீதியை அடையும்படி நாடு’ என்று பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார். (1 தீமோத்தேயு 6:11) நடத்தைக்கான கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய வாழ்ந்து, புதிய ஆளுமையை தரித்துக்கொள்ளும்போது, நாம் மெய் நீதியையும் நியாயத்தையும் நாடுகிறோம். (எபேசியர் 4:23, 24) வேறு வார்த்தைகளில் சொன்னால், கடவுளுடைய வழியில் காரியங்களை செய்வதன் மூலம் நாம் நீதியைத் தேடுகிறோம்.
11. பாவம் ஆளாமலிருப்பதற்கு எதிராக நாம் ஏன் மற்றும் எப்படி போராட வேண்டும்?
11 நாம் நன்றாக அறிந்திருக்கிறபடி, நியாயமானதையும் சரியானதையும் செய்வது அபூரண மனிதருக்கு எப்போதுமே சுலபமாயிருப்பதில்லை. (ரோமர் 7:14-20) பாவம் ஆளாமலிருப்பதற்கு போராட வேண்டுமென்று பவுல் ரோம கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார், அப்போதுதான் தங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்ட சரீரங்களை “நீதிக்குரிய ஆயுதங்களாக” அவர்கள் கடவுளுக்கு அளிக்கமுடியும்; கடவுள் தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவை பயனுள்ளதாய் இருக்கும். (ரோமர் 6:12-14) அதேபோல், கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக படித்து பொருத்துவதன் மூலம், நாம் ‘கர்த்தருக்கேற்ற போதனையை’ உட்கிரகித்துக்கொள்ள முடியும், ‘நீதியில் சிட்சை’ பெறமுடியும்.—எபேசியர் 6:4; 2 தீமோத்தேயு 3:16, 17, NW.
12. யெகோவா நம்மை நடத்த வேண்டுமென்று நாம் விரும்பும் விதமாக மற்றவர்களை நடத்த வேண்டுமென்றால், நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?
12 இரண்டாவதாக, யெகோவா நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதேபோல் நாம் மற்றவர்களை நடத்தும்போது நீதியைக் காட்டுகிறோம். இரண்டு தராதரங்களை வைத்திருப்பது சுலபம். மற்றவர்களுக்கு கண்டிப்பான தராதரம், ஆனால் நமக்கோ கண்டிப்புக்குறைவான தராதரம். நம்முடைய குறைகளுக்கு நாம் தயக்கமின்றி சாக்குப்போக்கு சொல்கிறோம்; ஆனால் நம்முடைய தவறுகளோடு ஒப்பிடுகையில் மற்றவர்களுடைய தவறுகள் அற்பமாய் இருந்தாலும் அவற்றின் பேரில் குறைகூற விரைகிறோம். இயேசு குத்திக்காட்டும் விதத்தில் கேட்கிறார்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத்தேயு 7:1-3) யெகோவா நம் தவறுகளை கூர்ந்து கவனிப்பாரேயானால், நம்மில் எவருமே அவர் முன்பு நிற்கமுடியாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. (சங்கீதம் 130:3, 4) யெகோவாவின் நீதி நம் சகோதரர்களின் பெலவீனங்களை கவனியாது விடும்படி அனுமதிக்கிறது என்றால், அவர்களை குற்றவாளிகளாகத் தீர்க்கிறதற்கு நாம் யார்?—ரோமர் 14:4, 10.
13. ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு ஒரு நீதியான மனுஷன் ஏன் கடமைப்பட்டிருப்பதாக உணருகிறான்?
13 மூன்றாவதாக, நாம் பிரசங்க வேலையில் ஊக்கமாய் ஈடுபடும்போது தேவ நீதியை காட்டுகிறோம். “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என்று யெகோவா நமக்கு புத்திமதி கூறுகிறார். (நீதிமொழிகள் 3:27) கடவுள் நமக்கு அபரிமிதமாய் அருளியிருக்கிற ஜீவனைத்தரும் அறிவை நாமே வைத்துக்கொள்வது சரியானதாக இருக்காது. பெரும்பாலான ஆட்கள் நம் செய்தியை வேண்டாமென்று தள்ளிவிடலாம்; ஆனால் கடவுள் அவர்களுக்கு தொடர்ந்து இரக்கத்தை காண்பிக்கும் வரையில், ‘மனந்திரும்புவதற்கான’ வாய்ப்பை நாம் தொடர்ந்து அளித்துக்கொண்டே இருப்பதற்கு விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (2 பேதுரு 3:9) இயேசுவைப்போல், நாம் எவரையாவது நீதி மற்றும் நியாயத்தினிடமாக திருப்புவதற்கு உதவி செய்ய முடிகையில் மகிழ்ச்சியடைகிறோம். (லூக்கா 15:7) ‘நீதிக்கென்று விதை விதைப்பதற்கான’ சாதகமான காலம் இதுவே.—ஓசியா 10:12.
‘நியாயமான பிரபுக்கள்’
14. நீதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூப்பர்கள் என்ன பங்கை வகிக்கின்றனர்?
14 நாம் அனைவருமே நீதியான வழியில் நடக்க வேண்டும்; ஆனால் கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களோ இந்த விஷயத்தில் விசேஷ பொறுப்பை உடையவர்களாய் இருக்கின்றனர். இயேசுவின் ராஜாதிகாரம் ‘நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தப்படுகிறது.’ அதைப்போலவே, தெய்வீக நீதியே மூப்பர்களுக்கான தராதரம். (ஏசாயா 9:7) ஏசாயா 32:1-ல் தீர்க்கதரிசனமாய் விவரிக்கப்பட்டுள்ளதை அவர்கள் மனதில் வைத்திருக்கின்றனர்: “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.” பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட கண்காணிகளாக, அல்லது ‘தேவனுடைய உக்கிராணக்காரர்களாக’ மூப்பர்கள் கடவுளுடைய வழியில் காரியங்களை செய்ய வேண்டும்.—தீத்து 1:7.
15, 16. (அ) இயேசுவின் உவமையிலுள்ள உண்மையான மேய்ப்பனை மூப்பர்கள் எவ்வாறு பின்பற்றுகின்றனர்? (ஆ) ஆவிக்குரியப்பிரகாரமாய் காணாமற் போனவர்களைக் குறித்து மூப்பர்கள் எப்படி உணருகிறார்கள்?
15 யெகோவாவின் நீதி தயவாகவும், இரக்கமாகவும் சரியாகவும் இருந்திருக்கிறது என்பதை இயேசு காண்பித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, பிரச்சினைகளில் இருந்தோருக்கு உதவியளிக்கவும், ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்’ அவர் முயற்சித்தார். (லூக்கா 19:10) காணாமல் போன ஆட்டை கண்டுபிடிக்கும்வரை அயராது தேடிய இயேசுவின் உவமையிலுள்ள மேய்ப்பனைப் போல், மூப்பர்கள் ஆவிக்குரியப்பிரகாரமாய் வழிதவறிப் போனவர்களை தேடிச்சென்று மறுபடியும் மந்தைக்குள் வழிநடத்துவதற்கு முயலுகின்றனர்.—மத்தேயு 18:12, 13.
16 வினைமையான பாவம் செய்தவர்களை கண்டனம் செய்வதற்குப் பதிலாக, மூப்பர்கள் முடியுமானால் அவர்களை குணப்படுத்தி மனந்திரும்ப வைப்பதற்கு நாடுகின்றனர். அவர்கள் வழிதவறிச் சென்ற ஒருவருக்கு உதவி செய்ய முடிகையில் சந்தோஷப்படுகின்றனர். இருப்பினும், தவறுசெய்தவர் மனந்திரும்ப மறுக்கையில் அது அவர்களை விசனப்படுத்துகிறது. கடவுளுடைய நீதியான தராதரங்கள் மனந்திரும்பாத நபரை சபைநீக்கம் செய்யும்படி தேவைப்படுத்துகின்றன. அப்போதும்கூட, கெட்ட குமாரனின் தகப்பனைப் போல், தவறுசெய்த நபர் எப்போதாவது ஒரு நாள் ‘புத்தி தெளிந்து’ திரும்பவும் வருவார் என அவர்கள் நம்புகின்றனர். (லூக்கா 15:17, 18) இவ்வாறு, மூப்பர்கள் சபைநீக்கம் செய்யப்பட்ட சிலரை சென்று சந்திப்பதற்கு முதற்படி எடுக்கின்றனர். அப்போது, மறுபடியும் யெகோவாவின் அமைப்புக்குள் எப்படி வர முடியும் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுகின்றனர்.a
17. தவறுசெய்த ஒருவரின் விஷயத்தைக் கையாளுகையில் மூப்பர்கள் என்ன இலக்கை வைத்திருக்கின்றனர், அந்த இலக்கை அடைவதற்கு என்ன பண்பு அவர்களுக்கு உதவும்?
17 தவறுசெய்தவர்களின் விஷயங்களை கையாளுகையில் மூப்பர்கள் விசேஷமாய் யெகோவாவின் நீதியைப் பின்பற்றுவது அவசியம். பாவிகள் இயேசுவினிடத்தில் “நெருங்கிவந்தனர்.” ஏனெனில் அவர் அவர்களைப் புரிந்துகொண்டு உதவுவார் என அவர்கள் நம்பினர். (லூக்கா 15:1, பொது மொழிபெயர்ப்பு; மத்தேயு 9:12, 13) உண்மையில், இயேசு தவறுகளை கவனியாமல் விட்டுவிடவில்லை. பலவந்தமாய் பணம் வசூலிப்பதற்கு பேர்போனவனாயிருந்த சகேயு இயேசுவோடு ஒரு தடவை சேர்ந்து சாப்பிட்ட பிறகு, மனந்திரும்பி, மற்றவர்களுக்கு கொடுத்திருந்த எல்லா கஷ்டங்களுக்கும் ஈடுசெய்யும்படி தூண்டப்பட்டான். (லூக்கா 19:8-10) நீதி விசாரணைகளின்போது அதே இலக்கை இன்று மூப்பர்கள் வைக்கின்றனர், அதாவது, தவறுசெய்தவரை மனந்திரும்புவதற்கு வழிநடத்துகின்றனர். இயேசுவைப் போல் அவர்கள் அணுகக்கூடியவர்களாக இருந்தால், தவறுசெய்த அநேகர், அவர்களிடம் உதவி நாடி வருவதை சுலபமாக காண்பர்.
18. ‘காற்றுக்கு ஒதுக்காக’ இருப்பதற்கு எது மூப்பர்களுக்கு உதவும்?
18 தெய்வீக நீதியை செயல்படுத்துவதற்கு, மூப்பர்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் இருதயமுள்ளவராக இருக்க வேண்டும். ஏனெனில் அது கொடூரமானதாகவோ உணர்ச்சியற்றதாகவோ இருக்காது. இஸ்ரவேலருக்கு நீதியைக் கற்பிக்க எஸ்றா தன் மனதை மட்டுமல்ல, தன் இருதயத்தை தயாராக்கியிருந்தது கவனிக்கத்தக்கது. (எஸ்றா 7:10) சரியான வேத நியமங்களை பொருத்துவதற்கும் ஒவ்வொரு தனி நபரின் சூழ்நிலைகளை கருத்தில் எடுத்துக்கொள்வதற்கும் புரிந்துகொள்ளும் இருதயம் மூப்பர்களுக்கு உதவும். உதிரப்போக்கால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணை இயேசு குணமாக்கியபோது, சட்டத்தின் அர்த்தத்தையும் அதன் உட்கருத்தையும் புரிந்துகொள்வதையே யெகோவாவின் நீதி அர்த்தப்படுத்துகிறது என்பதை காண்பித்தார். (லூக்கா 8:43-48) மாம்ச பெலவீனங்களாலோ, நாம் வாழும் இந்த பொல்லாத ஒழுங்குமுறையினாலோ போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீதியை இரக்கத்தோடு காட்டும் மூப்பர்களை ‘காற்றுக்கு ஒதுக்காக’ ஒப்பிடலாம்.—ஏசாயா 32:2.
19. தெய்வீக நீதி கடைப்பிடிக்கப்பட்டதற்கு ஒரு சகோதரி எவ்வாறு போற்றுதல் காண்பித்தார்?
19 வினைமையான பாவத்தைச் செய்த ஒரு சகோதரி தெய்வீக நீதியை நேரடியாக அறிந்து போற்றுதல் காண்பித்தார். “வெளிப்படையாகச் சொன்னால், மூப்பர்களிடம் செல்வதற்கு நான் பயப்பட்டேன்” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். “ஆனால் அவர்கள் என்னை இரக்கத்தோடும் கண்ணியத்தோடும் நடத்தினார்கள். மூப்பர்கள் கொடூரமான நீதிபதிகளைப் போல் இல்லாமல் தகப்பன்மாரைப் போல் இருந்தனர். நான் என் வழிகளை திருத்திக்கொள்வதற்கு உறுதியாயிருந்தால் யெகோவா என்னைத் தள்ளிவிட மாட்டார் என்பதை புரிந்துகொள்ள அவர்கள் உதவி செய்தனர். ஒரு அன்பான தகப்பன் சிட்சிப்பதுபோல் அவர் எப்படி நம்மை சிட்சிக்கிறார் என்பதை நான் நேரடியாக கற்றுக்கொண்டேன். யெகோவா என் வேண்டுதல்களைக் கேட்பார் என்ற நம்பிக்கையோடு என் இருதயத்தை அவரிடம் திறந்தேன். நடந்ததை நினைத்துப் பார்க்கையில், ஏழு வருடங்களுக்கு முன்பு மூப்பர்களோடு கூடிபேசியது யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதம் என்பதாக உண்மையில் சொல்லமுடியும். அதுமுதற்கொண்டு, அவரோடு நான் வைத்திருக்கும் உறவு அதிக பலமுள்ளதாய் இருந்திருக்கிறது.”
நீதியைக் கடைப்பிடித்து நியாயத்தைச் செய்யுங்கள்
20. நீதியையும் நியாயத்தையும் புரிந்துகொண்டு நடப்பதன் நன்மைகள் யாவை?
20 ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதியானதை கொடுப்பதைக் காட்டிலும் தெய்வீக நீதி அதிகத்தை அர்த்தப்படுத்துவதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். யெகோவாவின் நீதி, விசுவாசத்தை காண்பிப்போருக்கு நித்திய ஜீவனை அருளும்படி உந்துவித்திருக்கிறது. (சங்கீதம் 103:10; ரோமர் 5:15, 18) கடவுள் இவ்விதத்தில் நம்மை நடத்துகிறார்; ஏனெனில் அவருடைய நீதி நம் சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துக்கொள்கிறது; அது கண்டனம் செய்வதற்குப் பதிலாக இரட்சிக்க நாடுகிறது. உண்மையில், யெகோவாவின் நீதியில் அடங்கியிருப்பவற்றை நன்றாக புரிந்துகொள்வது நம்மை அவரிடமாக நெருங்க இழுக்கிறது. அவருடைய ஆளுமையின் இந்த அம்சத்தை பார்த்து பின்பற்ற முயற்சி செய்தோமென்றால், நம் வாழ்க்கையும் மற்றவர்களுடைய வாழ்க்கையும் செழுமையாய் ஆசீர்வதிக்கப்படும். நாம் தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்து வந்தோமென்றால் நம் பரலோக தகப்பன் அதை கவனியாமல் விடமாட்டார். யெகோவா நமக்கு இவ்வாறு வாக்குறுதியளிக்கிறார்: ‘நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது; இப்படிச் செய்கிற மனுஷன் . . . பாக்கியவான்.’—ஏசாயா 56:1, 2.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1992, பக்கங்கள் 20-2-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் நீதியைக் குறித்து சோதோம் கொமோராவின் அழிவு நமக்கு எதைக் கற்பிக்கிறது?
◻ மீட்கும் பொருள், கடவுளுடைய நீதி மற்றும் அன்பின் மிகச் சிறந்த வெளிக்காட்டாக ஏன் உள்ளது?
◻ நாம் நீதியைக் காட்டக்கூடிய மூன்று வழிகள் யாவை?
◻ மூப்பர்கள் தெய்வீக நீதியை என்ன விசேஷமான விதத்தில் பின்பற்றலாம்?
[பக்கம் 15-ன் படங்கள்]
பிரசங்க வேலையின் மூலம் நாம் தேவ நீதியை காட்டுகிறோம்
[பக்கம் 16-ன் படம்]
மூப்பர்கள் தேவ நீதியை காட்டுகையில், பிரச்சினைகளில் உள்ளோர் அவர்களுடைய உதவியை நாடுவது சுலபம்