லூக்கா எழுதியது
8 பின்பு, அவர் நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்.+ பன்னிரண்டு பேரும்* அவரோடு இருந்தார்கள். 2 பேய்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபட்ட பெண்கள் சிலர் அவரோடு இருந்தார்கள்; ஏழு பேய்களிடமிருந்து விடுபட்ட மகதலேனா என்ற மரியாள், 3 ஏரோதுவின் அரண்மனை மேற்பார்வையாளரான கூசாவின் மனைவி யோவன்னாள்,+ சூசன்னாள் எனப் பல பெண்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய உடைமைகளைக் கொண்டு அவருக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் பணிவிடை செய்துவந்தார்கள்.+
4 அவருடன் நகரம் நகரமாகப் போனவர்களோடு மக்களும் பெரிய கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். அப்போது, அவர் ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்;+ 5 “விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் போனான்; அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.+ 6 வேறு சில விதைகள் பாறை நிலத்தில் விழுந்தன; அவை முளைத்த பின்பு அங்கே ஈரம் இல்லாததால் காய்ந்துவிட்டன.+ 7 இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் அவற்றோடு கூடவே வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன.+ 8 மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைத்து, 100 மடங்கு பலன் தந்தன”+ என்றார். இவற்றைச் சொன்ன பின்பு, “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று உரத்த குரலில் சொன்னார்.
9 இந்த உவமையின் அர்த்தம் என்னவென்று சீஷர்கள் அவரிடம் கேட்டார்கள்.+ 10 அதற்கு அவர், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆனால், மற்றவர்களுக்கு அவை உவமைகள் மூலம் சொல்லப்படுகின்றன.+ அவர்கள் கண்ணால் பார்த்தும் பார்க்காதபடிக்கும், காதால் கேட்டும் புரிந்துகொள்ளாதபடிக்கும்+ அவை உவமைகள் மூலம் சொல்லப்படுகின்றன. 11 இந்த உவமையின் அர்த்தம் இதுதான்: விதை கடவுளுடைய செய்தி.+ 12 பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்; ஆனால், அவர்கள் நம்பிக்கை வைக்காமலும் மீட்புப் பெறாமலும் இருப்பதற்காகப் பிசாசு வந்து அவர்களுடைய இதயத்திலிருந்து அந்தச் செய்தியை எடுத்துவிடுகிறான்.+ 13 பாறை நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கும்போது சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் வேர் இல்லை; அதனால் கொஞ்சக் காலத்துக்கு விசுவாசம் வைக்கிறார்கள், சோதனைக் காலம் வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார்கள்.+ 14 முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்; ஆனால், கவலைகளும் செல்வங்களும்+ சுகபோகங்களும்+ அவர்களைத் திசைதிருப்பி, முற்றிலும் நெருக்கி, முழு வளர்ச்சி அடையாதபடி செய்துவிடுகின்றன.+ 15 நல்ல நிலத்தைப் போல் இருப்பவர்களோ நேர்மையான நல்ல இதயத்தோடு அந்தச் செய்தியைக் கேட்டு,+ அதைத் தங்களுக்குள் பதிய வைத்துக்கொண்டு, சகித்திருந்து பலன் கொடுக்கிறார்கள்.+
16 யாருமே விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தால் மூடி வைக்க மாட்டார்கள், கட்டிலின் கீழும் வைக்க மாட்டார்கள்; உள்ளே வருகிறவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும்படி அதை விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்.+ 17 மூடி வைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, மறைத்து வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது, அம்பலமாகாமலும் போகாது.+ 18 அதனால், நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள். இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து அவன் தன்னிடம் இருப்பதாக நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார்.
19 அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ அவரைப் பார்க்க வந்தார்கள், ஆனால் கூட்டமாக இருந்ததால் அவருக்குப் பக்கத்தில் போக முடியவில்லை.+ 20 அப்போது, “உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரர்களும் உங்களைப் பார்க்க வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். 21 அதற்கு அவர், “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிற இவர்கள்தான் என் அம்மா, என் சகோதரர்கள்”+ என்று சொன்னார்.
22 ஒருநாள் அவர் தன்னுடைய சீஷர்களோடு ஒரு படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குப் போகலாம் வாருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். அதனால், அவர்கள் படகை ஓட்டிக்கொண்டு போனார்கள்.+ 23 படகு போய்க்கொண்டிருந்தபோது அவர் தூங்கிவிட்டார். அந்தச் சமயத்தில், புயல்காற்று பயங்கரமாக வீசியது; படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்ததால், மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.+ 24 அப்போது அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, போதகரே, நாம் சாகப்போகிறோம்!” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் எழுந்து, காற்றையும் கொந்தளிக்கிற கடலையும் அதட்டினார். உடனே அவை அடங்கின; அமைதி உண்டானது.+ 25 அப்போது அவர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். அவர்களோ பயத்தோடும் பிரமிப்போடும், “இவர் உண்மையில் யார்? காற்றையும் கடலையும்கூட அதட்டுகிறார், அவையும் இவருக்கு அடங்கிவிடுகின்றனவே” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.+
26 கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியில் அவர்கள் கரைசேர்ந்தார்கள்.+ 27 அவர் படகிலிருந்து இறங்கியபோது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒருவன் அவருக்கு எதிரில் வந்தான்; பேய் பிடித்திருந்த அவன் பல காலமாக உடை உடுத்தாமல் இருந்தான். அதோடு, வீட்டில் தங்காமல் கல்லறைகளின் நடுவில் தங்கியிருந்தான்.+ 28 இயேசுவைப் பார்த்ததும் அவன் கத்திக் கூச்சல்போட்டு, அவர் முன்னால் மண்டிபோட்டு, “இயேசுவே, உன்னதமான கடவுளின் மகனே, உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னைப் பாடுபடுத்தாதீர்கள்” என்று கத்தினான்.+ 29 ஏனென்றால் அவனைவிட்டு வெளியே போகச் சொல்லி அந்தப் பேய்க்கு அவர் கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ தடவை* அவனைப் பிடித்திருந்தது;+ அவன் சங்கிலிகளாலும் கால்விலங்குகளாலும் அடிக்கடி கட்டிப்போடப்பட்டு காவல் வைக்கப்பட்டிருந்தும் அவற்றை உடைத்தெறிந்துபோட்டான். அந்தப் பேய் அவனை ஒதுக்குப்புறமான இடங்களுக்கு ஓடிப்போக வைத்தது. 30 இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “லேகியோன்”* என்று சொன்னான். ஏனென்றால், நிறைய பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன. 31 ‘எங்களை அதலபாதாளத்துக்குப் போகச் சொல்லிக் கட்டளையிடாதீர்கள்’+ என்று அவரிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தன. 32 அப்போது மலையில் ஏராளமான பன்றிகள்+ கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்ததால், அந்தப் பன்றிகளுக்குள் புகுந்துகொள்ள அனுமதி கொடுக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்டன; அவரும் அனுமதி கொடுத்தார்.+ 33 அப்போது, அந்தப் பேய்கள் அவனைவிட்டு வெளியேறி பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன; அந்தப் பன்றிகள் ஓட்டமாக ஓடி செங்குத்தான பாறையிலிருந்து ஏரிக்குள் குதித்து மூழ்கிப்போயின. 34 அவற்றை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் இதைப் பார்த்து, ஓடிப்போய் நகரத்திலும் நாட்டுப்புறத்திலும் இருந்தவர்களிடம் சொன்னார்கள்.
35 நடந்ததைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்; பேய்கள் பிடித்திருந்த அந்த மனிதன் உடை உடுத்தி, புத்தி தெளிந்து இயேசுவின் காலடியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 36 நடந்ததை நேரில் பார்த்தவர்கள், பேய் பிடித்தவன் எப்படிக் குணமானான் என்பதை அவர்களுக்குச் சொன்னார்கள். 37 கெரசேனர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மிகவும் பயந்துபோனதால் தங்களைவிட்டுப் போகும்படி இயேசுவைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவர் திரும்பிப் போவதற்காகப் படகில் ஏறினார். 38 பேய்களிடமிருந்து விடுதலையான அந்த மனிதன், தானும் அவரோடு வருவதாகக் கெஞ்சிக்கொண்டே இருந்தான். 39 ஆனால் அவர், “நீ உன் வீட்டுக்குப் போ, கடவுள் உனக்குச் செய்ததை எல்லாருக்கும் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பினார்.+ அவனும் அங்கிருந்து போய், இயேசு தனக்குச் செய்த எல்லாவற்றையும் நகரம் முழுவதும் அறிவித்தான்.
40 இயேசு திரும்பி வந்தபோது, மக்கள் எல்லாரும் அவருக்காக ஆவலோடு காத்திருந்ததால்+ அவரை அன்புடன் வரவேற்றார்கள். 41 அப்போது, ஜெபக்கூடத் தலைவரான யவீரு வந்தார். அவர் இயேசுவின் காலில் விழுந்து, தன்னுடைய வீட்டுக்கு வரச் சொல்லிக் கெஞ்சினார்.+ 42 ஏனென்றால், சுமார் 12 வயதுள்ள அவருடைய ஒரே மகள் சாகும் நிலையில் இருந்தாள்.
இயேசு போய்க்கொண்டிருந்தபோது மக்கள் கூட்டம் அவரை நெருக்கித்தள்ளியது. 43 ஒரு பெண் 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்; யாராலும் அவளைக் குணமாக்க முடியவில்லை.+ 44 அவள் அவருக்குப் பின்னால் போய் அவருடைய மேலங்கியின் ஓரத்தைத்+ தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது. 45 அப்போது இயேசு, “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார். எல்லாரும் மறுத்தபோது பேதுரு அவரிடம், “போதகரே, மக்கள் உங்களைச் சுற்றிலும் நெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 46 ஆனால் இயேசு, “யாரோ என்னைத் தொட்டார்கள்; என்னிடமிருந்து வல்லமை+ வெளியேறியது எனக்குத் தெரியும்” என்று சொன்னார். 47 தான் இனியும் மறைந்திருக்க முடியாது என்பதை அந்தப் பெண் உணர்ந்து, நடுக்கத்தோடு அவர் முன்னால் வந்து மண்டிபோட்டாள்; அவரைத் தொட்டதற்கான காரணத்தையும் தான் உடனடியாகக் குணமானதையும் பற்றி அங்கிருந்த எல்லா மக்களுக்கு முன்பாகவும் சொன்னாள். 48 இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது; சமாதானமாகப் போ”+ என்று சொன்னார்.
49 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, ஜெபக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! போதகரை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்”+ என்று சொன்னான். 50 இயேசு அதைக் கேட்டு யவீருவிடம், “பயப்படாதே, விசுவாசம் வை; அவள் பிழைப்பாள்”+ என்று சொன்னார். 51 அவர் யவீருவின் வீட்டுக்கு வந்தபோது பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் அந்தச் சிறுமியின் அப்பாவையும் அம்மாவையும் தவிர வேறு யாரையும் தன்னோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை. 52 மக்கள் எல்லாரும் அவளுக்காக அழுதுகொண்டும் நெஞ்சில் அடித்துக்கொண்டும் இருந்தார்கள். அதனால் அவர், “அழாதீர்கள்.+ அவள் சாகவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள்”+ என்று சொன்னார். 53 அவள் இறந்துவிட்டாள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் எல்லாரும் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். 54 ஆனால், அவர் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திரு!”+ என்றார். 55 அப்போது அவளுக்கு உயிர்+ திரும்ப வந்தது, உடனே எழுந்துகொண்டாள்;+ சாப்பிட அவளுக்கு ஏதாவது கொடுக்கும்படி அவர் கட்டளையிட்டார். 56 அவளுடைய பெற்றோர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள். ஆனால், நடந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.+