நாங்கள் என்றென்றும் யெகோவாவின் பெயரில் நடப்போம்!
‘நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் [“யெகோவாவுடைய பெயரை,” NW] பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’—மீகா 4:5.
1. மீகா 3 முதல் 5 அதிகாரங்களில் என்ன செய்திகள் உள்ளன?
யெகோவா தம் ஜனங்களிடம் ஏதோ சொல்லவிருக்கிறார்; அதற்கு மீகாவை தீர்க்கதரிசியாக பயன்படுத்துகிறார். தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கடவுளுடைய நோக்கம். விசுவாச துரோகத்துக்காக இஸ்ரவேலை அவர் தண்டிக்கவிருக்கிறார். என்றாலும் தம் பெயரில் நடப்பவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீகாவின் தீர்க்கதரிசனத்தில் 3 முதல் 5 அதிகாரங்களில் இச்செய்திகள் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.
2, 3. (அ) இஸ்ரவேலின் தலைவர்கள் எந்த குணத்தை வெளிக்காட்ட வேண்டும், ஆனால் அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? (ஆ) மீகா 3:2, 3-லுள்ள உருவகங்களை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
2 கடவுளுடைய தீர்க்கதரிசி இவ்வாறு அறிவிக்கிறார்: “யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.” ஆம், அதுவே அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் உண்மையில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மீகா சொல்கிறார்: “ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள் மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும் வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும் வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.”—மீகா 3:1-3.
3 பாதுகாப்பற்ற ஏழை ஜனங்களை அந்தத் தலைவர்கள் ஒடுக்கவும் செய்கிறார்களே! இங்கு பயன்படுத்தப்பட்ட உருவகங்கள் மீகா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு எளிதில் புரிந்தன. உணவுக்காக அடிக்கப்பட்ட செம்மறியாடு முதலாவதாக தோலுரிக்கப்பட்டு, பின்னர் எலும்புகள் முறிக்கப்பட்டு வேக வைக்கப்படுகிறது. சில சமயங்களில் மஜ்ஜைகளை எடுப்பதற்கு வசதியாக எலும்புகள் பிளக்கப்படுகின்றன. மீகா விவரிப்பதைப் போலவே இறைச்சியும் எலும்புகளும் ஒரு பெரிய கொப்பரையில் வேக வைக்கப்படுகின்றன. (எசேக்கியேல் 24:3-5, 10) மோசமான தலைவர்களின் கைகளில் ஜனங்கள் சிக்கி தவிப்பதை விவரிப்பதற்கு எத்தனை பொருத்தமான உதாரணம் இது!
நாம் நீதியைக் கடைப்பிடிக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்
4. யெகோவாவுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது?
4 அன்பான மேய்ப்பராகிய யெகோவாவுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் நியாயம் செய்யாததன் மூலம் மந்தையை காப்பாற்றும் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற தவறுகிறார்கள். அதற்குப் பதிலாக, அடையாளப்பூர்வ ஆடுகளை தங்களுடைய சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்; அவர்களுக்கு நீதி கிடைக்க வழிசெய்யாமல் விட்டுவிடுகிறார்கள்; மீகா 3:10-ல் கூறப்படுவதைப் போல அவர்களை ‘இரத்தப்பழிகளுக்கு’ ஆளாக்குகிறார்கள். இந்த நிலைமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடிகிறது?
5. தம் ஜனங்களைக் கவனிக்கும் பொறுப்பு உடையவர்களிடம் யெகோவா என்ன எதிர்பார்க்கிறார்?
5 தம் ஜனங்களைக் கவனிக்கும் பொறுப்பு உடையவர்கள் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்களைப் பொருத்ததிலும் இதையே உண்மையென நாம் காண்கிறோம். மேலும், இது ஏசாயா 32:1-ல் சொல்லப்பட்டதற்கு இசைவாக உள்ளது; அங்கு நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.” ஆனால் மீகாவின் நாளில் என்ன காண்கிறோம்? ‘நன்மையை வெறுத்து தீமையை விரும்புகிறவர்கள்’ நியாயத்தைப் புரட்ட வகை தேடுகிறார்கள்.
யாருடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது?
6, 7. மீகா 3:4-ல் என்ன முக்கியமான ஒரு குறிப்பு வலியுறுத்தப்படுகிறது?
6 மீகாவின் காலத்தில் வாழ்ந்த பொல்லாதவர்கள் யெகோவாவின் தயவை எதிர்பார்க்க முடியுமா? முடியவே முடியாது! மீகா 3:4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.” இது மிக முக்கியமான ஒரு குறிப்பை வலியுறுத்திக் காட்டுகிறது.
7 தொடர்ந்து பாவம் செய்து வந்தால் நம் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்க மாட்டார். இரட்டை வாழ்க்கை வாழ்ந்து, நம் தவறுகளை மறைத்து, அதே சமயத்தில் கடவுளை உண்மையோடு வணங்குவதாக பாசாங்கு செய்தால் நிச்சயமாக அவர் பதிலளிக்க மாட்டார். சங்கீதம் 26:4-ல், தாவீது இவ்வாறு பாடினார்: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.” அப்படியானால், தம் வார்த்தையை வேண்டுமென்றே மீறுபவர்களின் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
கடவுளுடைய ஆவியால் பலப்படுத்தப்படுவது
8. மீகாவின் காலத்திலிருந்த பொய் தீர்க்கதரிசிகள் எதைக் குறித்து எச்சரிக்கப்பட்டார்கள்?
8 இஸ்ரவேலின் ஆவிக்குரிய தலைவர்களிடம் எப்பேர்ப்பட்ட மோசமான செய்கைகள் பொதுவாக காணப்படுகின்றன! கடவுளுடைய ஜனங்கள் ஆவிக்குரிய விதத்தில் அலைந்து திரிவதற்கு பொய்த் தீர்க்கதரிசிகள் காரணமாகிறார்கள். பேராசை பிடித்த தலைவர்கள், ‘சமாதானம்’ என்று வாயளவில் சொல்கிறார்கள்; ஆனால் தங்கள் வாய்க்கு உணவைக் கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு தயார் ஆகிறார்கள். யெகோவா சொல்வது என்னவென்றால், “தரிசனங்காணக்கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின் மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள் மேல் பகல் காரிருளாய்ப் போகும். தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, . . . தங்கள் வாயை [“மீசையை,” NW] மூடுவார்கள்.”—மீகா 3:5-7.
9, 10. ‘மீசையை மூடுதல்’ எதை அர்த்தப்படுத்துகிறது, அத்தகைய செயலை ஏன் மீகா செய்ய தேவையில்லை?
9 ஏன் “மீசையை மூடுவார்கள்”? இது மீகாவின் காலத்தில் வாழ்ந்த பொல்லாதவர்கள் வெட்கத்தினால் செய்த செயலாகும். இந்தத் தீயவர்கள் வெட்கப்படத்தான் வேண்டும். அவர்களைப் பொறுத்தமட்டில், ‘தேவன் உத்தரவு’ கொடுக்கவில்லை. (மீகா 3:7ஆ) கர்வமிக்க பொல்லாதவர்களின் ஜெபங்களை யெகோவா துளியும் காதுகொடுத்து கேட்பதில்லை.
10 மீகாவோ தன் ‘மீசையை மூட’ தேவையில்லை. ஏனெனில் அவர் வெட்கப்படவில்லை. அவருடைய ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார். மீகா 3:8-ஐ கவனியுங்கள். அங்கு, உண்மையுள்ள அந்தத் தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்: “நானோ, . . . கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.” மீகா உண்மையோடு ஊழியம் செய்த அந்த நீண்ட காலப்பகுதி முழுவதிலும், எப்பொழுதுமே ‘கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினால் பராக்கிரமத்துடன்’ இருந்திருக்கிறார். அதற்காக அவர் எவ்வளவு நன்றியுடன் இருக்கிறார்! ‘யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க’ அது அவருக்கு சக்தி அளித்திருக்கிறது.
11. கடவுளுடைய செய்தியை அறிவிப்பதற்கு மனிதர்கள் எவ்வாறு பலப்படுத்தப்படுகிறார்கள்?
11 கடும் நியாயத்தீர்ப்பு பற்றிய கடவுளின் செய்தியை அறிவிக்க மீகாவுக்கு மனித பலத்தைவிட மிகுந்த பலம் தேவைப்படுகிறது. யெகோவாவின் ஆவி அல்லது வல்லமை வாய்ந்த செயல் நடப்பிக்கும் சக்தி தேவைப்படுகிறது. அப்படியானால் நம்மைக் குறித்து என்ன சொல்லலாம்? பரிசுத்த ஆவியைத் தந்து யெகோவா பலப்படுத்தினால் மட்டுமே பிரசங்க வேலையை நம்மால் நிறைவேற்ற முடியும். தெரிந்தே பாவம் செய்தால், பிரசங்கிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைவது நிச்சயம். அப்படி பாவம் செய்கையில், இந்த வேலையை நிறைவேற்றுவதற்குத் தேவையான பலத்தைக் கேட்டு ஜெபிக்கையில் கடவுள் பதிலளிக்க மாட்டார். ‘யெகோவாவின் ஆவி’ நம்மிடம் இல்லாவிட்டால், நம் பரம தகப்பனின் நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவிக்க நிச்சயமாய் நம்மால் முடியாது. பதிலளிக்கப்படும் ஜெபங்களினாலும் பரிசுத்த ஆவியின் உதவியினாலுமே கடவுளுடைய வார்த்தையை மீகாவைப் போல தைரியமாக பேச நம்மால் முடிகிறது.
12. இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் எப்படி தொடர்ந்து ‘வசனத்தை முழு தைரியத்தோடும் சொன்னார்கள்’?
12 ஒருவேளை உங்களுக்கு அப்போஸ்தலர் 4:23-31-லுள்ள பதிவு நினைவுக்கு வரலாம். உங்களை இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களில் ஒருவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாயை அடைக்க துன்புறுத்துவோர் வெறித்தனமாக அலைகிறார்கள். ஆனால் இந்த உண்மையுள்ளவர்கள் தங்கள் உன்னத பேரரசரிடம், “கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும்” என்று ஜெபிக்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஜெபம்பண்ணுகிறபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைகிறது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய் பேசுகிறார்கள். ஆகவே நாம் ஊழியத்தில் ஈடுபடுகையில், ஜெபத்தில் யெகோவாவை அணுகி, பரிசுத்த ஆவியின் மூலம் அவர் தரும் உதவியில் சார்ந்திருப்போமாக.
13. எருசலேமுக்கும் சமாரியாவுக்கும் என்ன ஏற்படும், ஏன்?
13 இப்போது மீகாவின் நாளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மீகா 3:9-12-ன்படி, இரத்தப்பழியுள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு செய்கிறார்கள்; ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; பொய் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள். யூதாவின் தலைநகரான எருசலேம் “மண்மேடுகளாய்ப் போம்” என்று கடவுள் அறிவித்திருப்பதில் ஆச்சரியமில்லை! இஸ்ரவேலில்கூட பொய் வணக்கமும் ஒழுக்க சீர்குலைவும் தலைவிரித்தாடுகின்றன. எனவே சமாரியாவை ‘வெளியான மண்மேடாக’ கடவுள் ஆக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்க மீகா தேவ ஆவியால் வழிநடத்தப்படுகிறார். (மீகா 1:6) அசீரிய சேனைகள் சமாரியாவை தாக்குவது சம்பந்தமாக முன்னுரைக்கப்பட்ட அழிவு பொ.ச.மு. 740-ல் உண்மையில் நடந்தேறுவதைக் காண அந்த தீர்க்கதரிசி உயிரோடிருக்கிறார். (2 இராஜாக்கள் 17:5, 6; 25:1-21) எருசலேமுக்கும் சமாரியாவுக்கும் எதிரான இந்த முக்கியமான செய்திகள் யெகோவாவின் பலத்தால் மட்டுமே அறிவிக்க முடிந்தவை என்பதில் சந்தேகமில்லை.
14. மீகா 3:12-லுள்ள தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது, இது நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
14 யெகோவாவின் கடுமையான நியாயத்தீர்ப்பிலிருந்து யூதா நிச்சயமாக தப்பிக்க முடியாது. மீகா 3:12-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வகையில், சீயோன் ‘வயல்வெளியைப் போல உழப்படும்.’ நாம் வாழும் 21-வது நூற்றாண்டின் கண்ணோட்டத்தில் பார்த்தால் யூதாவையும் எருசலேமையும் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் அழித்தபோது இவையெல்லாம் நடந்தேறியது நமக்குத் தெரிந்ததுதான். மீகா தீர்க்கதரிசனம் உரைத்து பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகு இது நடந்தது, ஆனால் சொன்னது சொன்னபடி நடக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவ்வாறே, தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை, முன்னுரைக்கப்பட்ட அந்த ‘யெகோவாவின் நாளில்’ முடிவடையும் என்று நாமும் திடநம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.—2 பேதுரு 3:11, 12.
யெகோவா காரியங்களை சீர்படுத்துகிறார்
15. மீகா 4:1-4-லுள்ள தீர்க்கதரிசனத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் எப்படி விவரிப்பீர்கள்?
15 முன்பு நடந்தவற்றை எண்ணிப் பார்க்கையில், சிலிர்ப்பூட்டும் நம்பிக்கையின் செய்தியை அடுத்ததாக மீகா அறிவிப்பதைக் காண்கிறோம். மீகா 4:1-4-ல் எத்தகைய உற்சாகமளிக்கும் வார்த்தைகளை நாம் காண்கிறோம்! மீகா சொல்வதில் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். . . . அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார் [“சீர்படுத்துவார்,” NW]; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”
16, 17. இன்று மீகா 4:1-4 எவ்வாறு நிறைவேறி வருகிறது?
16 இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் ‘திரளான ஜனங்களும்,’ ‘பலத்த ஜாதிகளும்’ யார்? இந்த உலகிலுள்ள தேசங்களையும் அரசாங்கங்களையும் இவர்கள் குறிப்பதில்லை. மாறாக, அந்தத் தீர்க்கதரிசனம் சகல தேசங்களிலிருந்தும் வெளியே வந்து, யெகோவாவின் உண்மை வணக்கம் எனும் மலையில் ஐக்கியப்பட்டவர்களாய் பரிசுத்த சேவை செய்யும் தனி நபர்களுக்குப் பொருந்துகிறது.
17 மீகாவின் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக, முழுமையான கருத்தில் பூமி எங்குமுள்ள மக்கள் யெகோவாவின் தூய்மையான வணக்கத்தைப் பின்பற்றுவார்கள். இப்பொழுது, “நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வு உடையவர்கள்” யெகோவாவின் வழிகளில் நடக்க கற்பிக்கப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 13:48, NW) ராஜ்யத்தின் சார்பாக நிலைநிற்கை எடுக்கும் விசுவாசிகளை ஆவிக்குரிய விதத்தில் யெகோவா நியாயந்தீர்த்து காரியங்களை சீர்படுத்துகிறார். ‘திரள் கூட்டத்தினரின்’ பாகமான அவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருப்பதால், யெகோவாவை வணங்கும் உடன் சாட்சிகளுடனும் மற்றவர்களுடனும் அவர்கள் இன்றும் சமாதானத்தோடு வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவராய் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது!
யெகோவாவின் பெயரில் நடக்க தீர்மானமாய் இருப்பது
18. ‘அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும் அத்திமரத்தின் நிழலிலும் உட்காருவது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
18 பயம் ஆக்கிரமித்திருக்கும் இன்றைய பூமியில் அநேகர் யெகோவாவின் வழிகளை கற்று வருவது நமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படி கடவுளை நேசிக்கும் அனைவரும் யுத்தத்தை இனி கற்றுக்கொள்ளாத காலத்தை, ஒவ்வொருவரும் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் உட்காரும் காலத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம். அத்திமரங்கள் பொதுவாக திராட்சத் தோட்டத்தில் நடப்படுகின்றன. (லூக்கா 13:6) தன் சொந்த திராட்சச் செடியின் நிழலிலும் அத்திமரத்தின் நிழலிலும் உட்காருவது, சமாதானமான, செழிப்பான, பாதுகாப்பான நிலைமையை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவுடன் உள்ள நம் உறவு இப்போதே நமக்கு மன சமாதானத்தையும் ஆவிக்குரிய பாதுகாப்பையும் அளிக்கிறது. ராஜ்ய ஆட்சியில் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எந்த பயமும் இல்லாமல் முழுமையான பாதுகாப்பை அனுபவிப்போம்.
19. யெகோவாவின் பெயரில் நடப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
19 கடவுளுடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க நாம் யெகோவாவின் பெயரில் நடக்க வேண்டும். இது மீகா 4:5-ல் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது: ‘சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் [“யெகோவாவுடைய பெயரை,” NW] பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’ யெகோவாவின் பெயரில் நடப்பது அவர் நம்முடைய கடவுள் என சொல்லிக் கொள்வதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கெடுப்பது, ராஜ்ய பிரசங்க வேலையில் கலந்துகொள்வது போன்றவை முக்கியமான காரியங்களே. இருந்தாலும் இவை மட்டுமே போதாது. நாம் யெகோவாவின் பெயரில் நடக்கிறோம் என்றால் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருக்கிறோம், முழு இருதயத்துடன் நேசித்து உண்மையாய் அவரை சேவிக்க முயலுகிறோம். (மத்தேயு 22:37) அதோடு, அவருடைய வணக்கத்தார் என்ற நிலையில் என்றென்றைக்கும் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நடக்க உண்மையிலேயே தீர்மானமாக இருக்கிறோம்.
20. மீகா 4:6-13-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டது?
20 இப்போது மீகா 4:6-13-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை தயவுசெய்து கவனியுங்கள். “சீயோன் குமாரத்தி,” “பாபிலோன் வரைக்கும்” நாடு கடத்தப்படவிருக்கிறாள். பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் எருசலேம் வாசிகளுக்கு அதுவே சம்பவித்தது. இருந்தபோதிலும், மீதியானோர் யூதாவுக்கு திரும்புவார்கள் என்றும், சீயோன் மீண்டும் நிலைநாட்டப்படுகையில் அது பகைவர்களை நொறுக்கிப் போடும்படி யெகோவா அனுமதிப்பார் என்றும் மீகா தீர்க்கதரிசனம் காட்டுகிறது.
21, 22. மீகா 5:2 எப்படி நிறைவேறியது?
21 முக்கியமாய் இன்னும் நிகழவிருப்பவை மீகா 5-ம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்படுகின்றன. உதாரணமாக, மீகா 5:2-4-ல் கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். கடவுளால் நியமிக்கப்பட்ட ஓர் அரசர், அதாவது ‘அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்து புறப்பட்டவர்,’ பெத்லகேமிலிருந்து வருவார் என மீகா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். அவர் “கர்த்தருடைய பலத்தோடு” ஒரு மேய்ப்பராக ஆட்சி செய்வார். மேலும், இந்த அரசர் இஸ்ரவேலில் மட்டுமல்ல, “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.” இவரை அரசராக அடையாளம் கண்டுகொள்வது பொதுவாக உலகத்தாருக்கு கஷ்டமாக இருக்கலாம், ஆனால் நமக்கோ அது கண்டுகொள்ள முடியாத ரகசியம் அல்ல.
22 பெத்லகேமில் பிறந்தவர்களிலேயே யார் மிக முக்கியமான நபராக இருந்தார்? யார், “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்”? அவர் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே! மேசியா எங்கு பிறப்பார் என்று மகா ஏரோது பிரதான ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் விசாரித்தபோது அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே” என்று பதிலளித்தார்கள். மீகா 5:2-லுள்ள வார்த்தைகளையும் அவர்கள் மேற்கோள் காட்டினார்கள். (மத்தேயு 2:3-6) பொது ஜனங்கள் சிலருக்கும் அது தெரிந்திருந்தது; ஏனெனில், “தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா” என அவர்கள் கேட்பதாக யோவான் 7:42-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு மெய்யான புத்துணர்ச்சி
23. மீகா 5:7-ன் நிறைவேற்றமாக இப்போது என்ன நடக்கிறது?
23 அசீரியர்களின் படையெடுப்பால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானதல்ல, கீழ்ப்படியாத தேசங்களின்மீது கடவுள் நியாயத்தீர்ப்பை கொண்டு வருவார் என மீகா 5:5-15 குறிப்பிடுகிறது. மனந்திரும்பிய யூத மீதியானோரை அவர்களுடைய தாயகத்தில் மீண்டும் நிலைநாட்டப் போவதாக மீகா 5:7 வாக்குறுதி அளிக்கிறது; ஆனால் அந்த வார்த்தைகள் நம் நாளுக்கும் பொருந்துகின்றன. “யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப் போலவும், . . . பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப் போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்” என மீகா அறிவிக்கிறார். ஆவிக்குரிய யாக்கோபினரில் அல்லது இஸ்ரவேலரில் மீதியானவர்கள், ஜனங்களுக்கு மத்தியில் கடவுளின் ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்பதை முன்னுரைக்க இந்த அருமையான அடையாள பாஷை பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சி அளிக்க உதவுவதில், பூமியில் வாழும் நம்பிக்கையுடைய இயேசுவின் ‘வேறே ஆடுகள்,’ இன்றைய ‘ஆவிக்குரிய இஸ்ரவேலில்’ மீதியானோருடன் தோளோடு தோள் சேர்ந்து உழைப்பதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். (யோவான் 10:16; கலாத்தியர் 6:16; செப்பனியா 3:9) இவ்விஷயத்தில், மற்றொரு முக்கியமான குறிப்பையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். ராஜ்யத்தை அறிவிப்போராக, மற்றவர்களுக்கு மெய்யான புத்துணர்ச்சி அளிப்பதற்கு நமக்கிருக்கும் சிலாக்கியத்தை நாமனைவரும் மனதார போற்ற வேண்டும்.
24. மீகா 3 முதல் 5 அதிகாரங்களிலுள்ள என்ன குறிப்புகள் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன?
24 மீகா தீர்க்கதரிசனத்தில் 3 முதல் 5 அதிகாரங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? ஒருவேளை பின்வரும் குறிப்புகளை கற்றுக்கொண்டிருப்பீர்கள்: (1) தம் ஜனங்கள் மத்தியில் முன்நின்று நடத்துகிறவர்கள் நீதியைக் கடைப்பிடிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். (2) நாம் தெரிந்தே பாவம் செய்து வந்தால் நம் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்க மாட்டார். (3) பரிசுத்த ஆவியால் யெகோவா நம்மை பலப்படுத்தினால் மட்டுமே பிரசங்க வேலையை நம்மால் நிறைவேற்ற முடியும். (4) தெய்வீக தயவைப் பெற, நாம் யெகோவாவின் பெயரில் நடக்க வேண்டும். (5) ராஜ்யத்தை அறிவிப்போராக, மக்களுக்கு மெய்யான புத்துணர்ச்சி அளிப்பதற்கு இருக்கும் சிலாக்கியத்தை நாம் மனதார போற்ற வேண்டும். வேறு பல குறிப்புகளும் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கலாம். இந்தத் தீர்க்கதரிசன பைபிள் புத்தகத்திலிருந்து இன்னும் எதை நாம் தெரிந்துகொள்ள முடியும்? விசுவாசத்தைப் பலப்படுத்தும் மீகா தீர்க்கதரிசனத்தின் கடைசி இரண்டு அதிகாரங்களிலிருந்து நடைமுறையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள அடுத்த கட்டுரை நமக்கு உதவும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• தம் ஜனங்கள் மத்தியில் முன்நின்று நடத்துகிறவர்களிடம் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்?
• யெகோவாவுக்கு செய்யும் நம் சேவையில் ஜெபமும் பரிசுத்த ஆவியும் ஏன் முக்கியம்?
• ஜனங்கள் ‘யெகோவாவின் பெயரில்’ எப்படி நடக்கிறார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
கொப்பரையைப் பற்றிய மீகாவின் உதாரணத்தை உங்களால் விளக்க முடியுமா?
[பக்கம் 16-ன் படங்கள்]
மீகாவைப் போல் நாம் தைரியமாக ஊழியம் செய்து வருகிறோம்