யெகோவாவின் ஊழியர்களுடைய நம்பிக்கை மெய்யானது
“யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப் போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும் . . . அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.”—மீகா 5:7.
1. எந்த விதத்தில் ஆவிக்குரிய இஸ்ரவேலர் புத்துணர்ச்சியின் ஊற்றுமூலமாக திகழ்கிறார்கள்?
மழையையும் பனியையும் உருவாக்கிய மாபெரும் படைப்பாளர் யெகோவா. பனிக்காகவோ மழைக்காகவோ மனிதனை நம்பியிருப்பது வீண். “யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப் போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப் போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்” என மீகா தீர்க்கதரிசி எழுதினார். (மீகா 5:7) இன்று ‘யாக்கோபிலே மீதியாக’ இருப்பவர்கள் யார்? அவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர், ‘தேவனுடைய இஸ்ரவேலில்’ மீதியானவர்கள். (கலாத்தியர் 6:16) பூமியிலுள்ள ‘அநேக ஜனங்களுக்கு’ அவர்கள் “கர்த்தராலே வருகிற” புத்துணர்ச்சி அளிக்கும் “பனியைப் போலவும்,” “பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப் போலவும்” இருக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று உண்மையிலேயே ஜனங்களுக்கு கடவுளிடமிருந்து வருகிற புத்துணர்ச்சிக்குக் காரணராய் இருக்கிறார்கள். ராஜ்ய அறிவிப்பாளர்களாக, மெய்யான நம்பிக்கை அளிக்கும் தம்முடைய செய்தியை ஜனங்களிடம் சொல்ல யெகோவா அவர்களை உபயோகிக்கிறார்.
2. துன்பங்கள் நிறைந்த இந்த உலகில் வாழ்ந்தாலும் நமக்கு ஏன் மெய்யான நம்பிக்கை உள்ளது?
2 இந்த உலகில் மெய்யான நம்பிக்கை இல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை. பிசாசாகிய சாத்தான் ஆளும் இந்த உலகில், ஆட்டம் காணும் அரசியல், ஒழுக்க சீர்குலைவு, குற்றச்செயல், பொருளாதார நெருக்கடிகள், பயங்கரவாதம், போர்கள் போன்றவற்றை நாம் எதிர்பார்க்கிறோம். (1 யோவான் 5:19) எதிர்காலத்தைப் பற்றி அநேகர் கவலைப்படுகிறார்கள். நாமோ யெகோவாவை வணங்குவதால் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நமக்கு அசைக்க முடியாத எதிர்கால நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் இருப்பதால் அது மெய்யானது. யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது; ஏனெனில் அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கும்.
3. (அ) ஏன் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கவிருந்தார்? (ஆ) மீகா சொன்னவை நம் நாளுக்கும் ஏன் பொருந்துகின்றன?
3 கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட மீகா தீர்க்கதரிசனம் யெகோவாவின் பெயரில் நடப்பதற்கு நம்மை பலப்படுத்துகிறது, மெய்யான நம்பிக்கைக்கு அஸ்திவாரத்தை அளிக்கிறது. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் மீகா தீர்க்கதரிசனம் உரைக்கையில் கடவுளின் உடன்படிக்கைக்கு உட்பட்டிருந்த ஜனங்கள், இஸ்ரவேல் என்றும் யூதா என்றும் இரண்டு தேசங்களாக பிரிந்திருந்தார்கள்; இவ்விரண்டு தேசத்தாருமே கடவுளுடைய உடன்படிக்கையை புறக்கணித்து வந்தார்கள். அதனால் ஒழுக்க சீர்குலைவு, மத விசுவாச துரோகம், மிதமிஞ்சிய பொருளாசை ஆகியவற்றில் சிக்கிக்கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக யெகோவா எச்சரித்தார். யெகோவாவின் எச்சரிப்புகள் மீகாவின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கென்றே கொடுக்கப்பட்டவை என்பது உண்மைதான். எனினும் மீகாவின் காலத்தில் இருந்த அதே நிலைமைதான் இன்றும் நிலவுகிறது; எனவே அவர் சொன்னவை நம் நாளுக்கும் பொருந்தும். ஏழு அதிகாரங்கள் உள்ள மீகா புத்தகத்தில் காணப்படும் சில சிறப்புக் குறிப்புகளை நாம் ஆராய்கையில் இது தெளிவாகும்.
அதன் சுருக்கம் வெளிப்படுத்தும் விஷயம்
4. மீகா 1 முதல் 3 அதிகாரங்கள் என்ன தகவலை அளிக்கின்றன?
4 மீகா புத்தகத்தில் அடங்கியுள்ள விஷயங்களை சுருக்கமாக காண்போம். முதலாம் அதிகாரத்தில் இஸ்ரவேல், யூதா ஆகியவற்றின் கலகத்தனத்தை யெகோவா வெட்டவெளிச்சமாக்குகிறார். அவற்றின் கெட்ட செயல்களின் விளைவாக இஸ்ரவேல் அழிக்கப்படும், யூதாவுக்கு வரவிருக்கும் தண்டனை எருசலேமின் வாசலையே எட்டிவிடும். இரண்டாம் அதிகாரத்தில், பணமும் பலமும் படைத்தவர்கள் உதவியற்ற ஏழை எளியோரை அடக்கி ஒடுக்குவது வெளிப்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் கடவுள் கொடுக்கும் வாக்குறுதியும் உள்ளது. கடவுளுடைய ஜனங்கள் ஒற்றுமையாய் ஒன்று சேர்க்கப்படுவார்கள். மூன்றாம் அதிகாரத்தில், தேசத் தலைவர்களுக்கும் கடமையில் தவறிய தீர்க்கதரிசிகளுக்கும் எதிராக யெகோவாவின் கண்டன தீர்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. தலைவர்கள் நியாயத்தை புரட்டுகிறார்கள், தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். இருந்தாலும், வரவிருக்கும் யெகோவாவின் கடும் நியாயத்தீர்ப்பை அறிவிக்க பரிசுத்த ஆவியால் மீகா பலப்படுத்தப்படுகிறார்.
5. மீகா 4-ம் 5-ம் அதிகாரங்களின் சாராம்சம் என்ன?
5 கடைசி நாட்களில் யெகோவாவால் போதிக்கப்படுவதற்காக மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்ட அவருடைய ஆலயத்திற்கு எல்லா தேசத்தாரும் வருவது நான்காம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்படுகிறது. என்றாலும் அதற்கு முன்பு, யூதா பாபிலோனுக்கு நாடு கடத்தப்படும், ஆனால் யெகோவா அதை விடுவிப்பார். ஐந்தாம் அதிகாரத்தில், யூதாவிலுள்ள பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. அவர் தம் ஜனங்களை மேய்த்து அடக்கி ஒடுக்கும் தேசத்தாரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.
6, 7. மீகா தீர்க்கதரிசனத்தில் 6-ம் 7-ம் அதிகாரங்களில் என்ன குறிப்புகள் உள்ளன?
6 மீகா 6-ம் அதிகாரத்தில், யெகோவாவின் குற்றச்சாட்டுகள் அவருடைய ஜனங்களுக்கு எதிரான வழக்கு போல் பதிவாகியுள்ளன. தம் ஜனங்கள் தமக்கு எதிராக கலகம் செய்யும் அளவுக்கு யெகோவா அவர்களுக்கு என்ன செய்துவிட்டார்? அப்படி எதுவும் செய்யவில்லையே. அவர் எதிர்பார்ப்பவை உண்மையில் மிக நியாயமானவை. தம்முடன் நடக்கையில் தம்மை வணங்குவோர் நியாயம் செய்து, தயவையும், அடக்கத்தையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இஸ்ரவேலும் யூதாவும் அவ்வாறு செய்வதற்கு பதிலாக கலகம் செய்திருப்பதால் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.
7 மீகா தன்னுடைய தீர்க்கதரிசனத்தின் கடைசி அதிகாரத்தில், தன் காலத்தில் வாழ்ந்தவர்களின் அக்கிரமத்தை வெளிப்படையாக கண்டிக்கிறார். ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. யெகோவாவுக்கு ‘காத்திருக்க’ அவர் தீர்மானமாய் இருக்கிறார். (மீகா 7:7) தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுவார் என்ற நம்பிக்கையை உறுதியளிப்பதுடன் அந்தப் புத்தகம் முடிவடைகிறது. இந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை சரித்திரம் காட்டுகிறது. யெகோவா தம்முடைய ஜனங்களை சிட்சித்த அந்தக் காலம் முடிந்த பிறகு, பொ.ச.மு. 537-ல் மீதியானோரை அவர்களது தாயகத்தில் இரக்கத்துடன் திரும்பவும் நிலைநாட்டினார்.
8. மீகா புத்தகத்தில் அடங்கியுள்ள குறிப்புகளை நீங்கள் எப்படி சுருக்கி கூறுவீர்கள்?
8 மீகா மூலம் எப்பேர்ப்பட்ட அருமையான விஷயத்தை யெகோவா வெளிப்படுத்துகிறார்! தேவ ஆவியால் ஏவப்பட்ட இந்தப் புத்தகத்தில் எச்சரிக்கும் உதாரணங்கள் உள்ளன; தம்மை வணங்குவதாக சொல்லிக்கொண்டு அதே சமயத்தில் தமக்கு உண்மையாய் இராதவர்களிடம் யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்று அவை காட்டுகின்றன. இன்று நடக்கும் சம்பவங்களை இப்புத்தகம் முன்னுரைக்கிறது. இந்தக் கஷ்ட காலங்களில் நம் நம்பிக்கை பலப்படும் விதத்தில் நடந்துகொள்வதற்குத் தேவையான கடவுளுடைய புத்திமதியை இது கொடுக்கிறது.
உன்னத பேரரசராகிய யெகோவா பேசுகிறார்
9. மீகா 1:2-ன்படி யெகோவா என்ன செய்யவிருந்தார்?
9 மீகா புத்தகத்தை இன்னும் விரிவாக இப்போது ஆராய்வோம். “சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் [“உன்னத பேரரசராகிய யெகோவா,” NW], தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்” என மீகா 1:2-ல் வாசிக்கிறோம். நீங்கள் மீகாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், அவ்வார்த்தைகள் உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் அவை உங்கள் கவனத்தைக் கவருவதற்குக் காரணம் யெகோவா தம் பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார்; இஸ்ரவேலிடமும் யூதாவிடமும் மட்டுமல்ல சகல ஜனங்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். மீகாவின் காலத்தில் ஜனங்கள் உன்னத பேரரசராகிய யெகோவாவை நீண்ட காலமாகவே புறக்கணித்திருந்தார்கள். விரைவில் அந்த நிலை மாறவிருந்தது. இறுதியான நடவடிக்கை எடுக்க யெகோவா தீர்மானித்திருந்தார்.
10. மீகா 1:2-லுள்ள வார்த்தைகள் நமக்கு ஏன் முக்கியமானவை?
10 இன்றும் அதுவே உண்மை. யெகோவா மறுபடியும் தம் பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசுவதாக வெளிப்படுத்துதல் 14:18-20 காட்டுகிறது. சீக்கிரத்தில், யெகோவா இறுதியான நடவடிக்கை எடுப்பார்; மீண்டும் மனிதகுலத்தை உலுக்கும் அதிமுக்கிய சம்பவங்கள் நடந்தேறும். இச்சமயத்தில், ‘பூமி முழுவதிலுமுள்ள திராட்சப்பழங்களுக்கு’ ஒப்பான பொல்லாதவர்கள் யெகோவாவின் கோபாக்கினை என்னும் பெரிய ஆலையிலே நித்திய அழிவை சந்திப்பார்கள்; அப்போது சாத்தானின் உலக ஒழுங்குமுறை சர்வ நாசமடையும்.
11. மீகா 1:3, 4-லுள்ள வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
11 யெகோவா செய்யப் போவதை கவனியுங்கள். மீகா 1:3, 4 சொல்வதாவது: “இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறது போலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.” யெகோவா தம் பரலோக வாசஸ்தலத்தை விட்டு வந்து சொல்லர்த்தமாகவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மலைகளையும் சமவெளிகளையும் மிதிப்பாரா? இல்லை. அவர் அப்படி மிதிக்க தேவையில்லை. தம் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அவர் தம் கவனத்தை பூமியினிடம் திருப்பினாலே போதுமானது. அத்துடன், மேற்கூறப்பட்ட காரியங்களால் பாதிக்கப்படப் போவது சொல்லர்த்தமான பூமி அல்ல, ஆனால் அதில் வசிப்பவர்களே. யெகோவா நடவடிக்கை எடுக்கையில், உண்மையற்றோருக்கு ஏற்படும் பாதிப்பு படுபயங்கரமாக இருக்கும்; அது, மெழுகாய் உருகிவிட்ட பர்வதங்கள் போலவும், பூமியதிர்ச்சியால் பிளந்துவிட்ட சமவெளிகள் போலவும் இருக்கும்.
12, 13. இரண்டு பேதுரு 3:10-12-க்கு இசைவாக எது நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது?
12 மீகா 1:3, 4-ல் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள், பூமிக்கு வரவிருக்கும் நாசகரமான சம்பவங்களை முன்னுரைத்த மற்றொரு தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு நினைப்பூட்டலாம். 2 பேதுரு 3:10-ல் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.” மீகா தீர்க்கதரிசனத்தைப் போலவே, பேதுருவின் வார்த்தைகளும் சொல்லர்த்தமான வானங்களையும் பூமியையும் குறிப்பதில்லை. அவை தேவபக்தியற்ற இந்த உலக ஒழுங்குமுறைக்கு வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைக் குறிக்கின்றன.
13 மீகாவைப் போலவே, வரவிருக்கும் பேரழிவின் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கால நம்பிக்கையுடன் இருக்கலாம். எப்படி? பேதுருவின் கடிதத்தில் அடுத்து வரும் வசனங்களில் காணப்படும் புத்திமதியைப் பின்பற்றுவதன் மூலம். “நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்” என அந்த அப்போஸ்தலன் சொல்கிறார். (2 பேதுரு 3:11, 12) கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை வளர்த்துக்கொண்டு, நம் நடத்தை பரிசுத்தமாய் இருப்பதையும் நம் வாழ்க்கை தேவபக்தியுள்ள செயல்களால் நிறைந்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டால், நம் எதிர்கால நம்பிக்கை வீண்போகாது. நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு யெகோவாவின் நாள் நிச்சயம் வரும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
14. இஸ்ரவேலும் யூதாவும் ஏன் தண்டிக்கப்பட தகுந்தவை?
14 தம் பூர்வ கால ஜனங்கள் ஏன் தண்டிக்கப்பட தகுந்தவர்கள் என்பதை யெகோவா விளக்குகிறார். “இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?” என மீகா 1:5 குறிப்பிடுகிறது. யெகோவாவின் துணையாலேயே இஸ்ரவேலும் யூதாவும் உருவாயின. ஆனாலும், அவருக்கு விரோதமாக அவை கலகம் செய்திருக்கின்றன; அந்தக் கலகம் அவற்றின் தலைநகரங்களான சமாரியாவையும் எருசலேமையும்கூட எட்டிவிட்டது.
அக்கிரம செயல்கள் நிறைந்துள்ளன
15, 16. மீகாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ன அக்கிரம செயல்களை செய்தார்கள்?
15 மீகாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் செய்த அக்கிரமத்திற்கு ஓர் உதாரணம் மீகா 2:1, 2-ல் பின்வருமாறு வெகு தெளிவாக சித்தரிக்கப்படுகிறது: “அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து, வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!”
16 பேராசை பிடித்தவர்கள் அடுத்தவர்களின் வயல்களையும் வீடுகளையும் எப்படி அபகரிக்கலாம் என இரவு முழுவதும் தூங்காமல் திட்டமிடுகிறார்கள். விடிந்ததும் தங்கள் திட்டங்களை செயல்படுத்த விரைகிறார்கள். யெகோவாவின் உடன்படிக்கை அவர்கள் நினைவில் இருந்தால் அப்படிப்பட்ட அக்கிரம செயல்களை செய்ய மாட்டார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் ஏழைகளை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. அதன்படி, எந்தக் குடும்பமும் தன் சொத்து சுதந்தரத்தை நிரந்தரமாக இழக்கக் கூடாது. என்றாலும், அந்தப் பேராசை பிடித்தவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. லேவியராகமம் 19:18-ல் கூறப்பட்டுள்ளபடி, “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற வார்த்தைகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
17. கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொள்பவர்கள் பொருட்களை நாடித் தேடுவதற்கே வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கையில் என்ன நடக்கலாம்?
17 ஜனங்கள், கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொண்டு அதே சமயத்தில் ஆவிக்குரிய இலக்குகளை புறக்கணித்து, பொருட்களை நாடித் தேடுவதற்கே வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கையில் என்ன நடக்கலாம் என்பதையே இது காட்டுகிறது. “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என தன் நாளில் இருந்த கிறிஸ்தவர்களை பவுல் எச்சரித்தார். (1 தீமோத்தேயு 6:9) வாழ்க்கையில் ஒருவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கையில், உலகப் பொருளாகிய பொய்க் கடவுளை வணங்குகிறார் என்று அர்த்தம். அந்தப் பொய்க் கடவுள் எதிர்கால நம்பிக்கைக்கு உறுதியளிப்பதில்லை.—மத்தேயு 6:24.
18. மீகாவின் நாட்களில், பொருள் சம்பந்தமாக நாட்டமுடையவர்களுக்கு என்ன ஏற்படவிருந்தது?
18 பொருட்களை நம்புவது வீண் என்ற பாடத்தை மீகாவின் நாளில் அநேகர் கசப்பான அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டனர். மீகா 2:4-ல் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “அந்நாளில் உங்கள் பேரில் ஒப்புச் சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னை விட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் [“அவிசுவாசிகளுக்கு,” NW] பகிர்ந்து கொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள்.” வீடுகளையும் வயல்களையும் கொள்ளையடிப்பவர்கள் தங்கள் சொந்த குடும்ப சொத்தை இழப்பார்கள். அந்நிய தேசத்திற்கு நாடுகடத்தப்படுவார்கள்; அவர்களுடைய சொத்துக்கள் “அவிசுவாசிகளுக்கு,” அல்லது புறதேசத்தாருக்கு கொள்ளைப் பொருளாகும். செழுமையான எதிர்காலம் வரவிருப்பதாக கட்டிய மனக்கோட்டைகளெல்லாம் நொறுங்கி தரைமட்டமாகிவிடும்.
19, 20. யெகோவாவை நம்பிய யூதர்களின் அனுபவம் என்ன?
19 என்றாலும், யெகோவாவை நம்புவோரின் எதிர்பார்ப்புகள் வீண் போவதில்லை. ஆபிரகாமுடனும் தாவீதுடனும் தாம் செய்த உடன்படிக்கைக்கு யெகோவா உண்மையுள்ளவராக இருக்கிறார்; மீகாவைப் போலவே, கடவுளை நேசித்து, அவரைவிட்டு பிரிந்து செல்லும் சகமனிதர்களின் செயலுக்காக வருந்துகிறவர்களிடம் இரக்கம் காட்டுகிறார். அந்த நேர்மை மனம்படைத்தவர்களின் நிமித்தம் கடவுள் உரிய நேரத்தில் தம் மக்களை மீண்டும் நிலைநாட்டுவார்.
20 பொ.ச.மு. 537-ல், பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பின், யூதர்களில் மீதியானோர் தாயகம் திரும்புகையில் அது சம்பவிக்கிறது. அப்பொழுது, மீகா 2:12-லுள்ள வார்த்தைகள் ஆரம்ப நிறைவேற்றத்தைக் கண்டிருக்கின்றன. “யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே [“ஆண்களினாலே,” NW] இரைச்சல் உண்டாகும்” என்று யெகோவா சொல்கிறார். யெகோவா எப்பேர்ப்பட்ட அன்புள்ள கடவுள்! தம் ஜனங்களை சிட்சித்த பிறகு, அவர்களில் மீதியானோர் தங்களுடைய முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட தேசத்திற்குத் திரும்பி வந்து தம்மை சேவிக்க அவர் அனுமதிக்கிறார்.
நம் நாளில் குறிப்பிடத்தக்க இணைப் பொருத்தங்கள்
21. இன்றைய நிலைமைகள் எப்படி மீகாவின் நாட்களிலிருந்த நிலைமைகளுக்கு ஒத்திருக்கின்றன?
21 மீகா புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் நாம் கவனித்த விதமாகவே இன்றும் காரியங்கள் நடப்பதைக் கண்டு நீங்கள் வாயடைத்துப் போகவில்லையா? மீகாவின் காலத்தைப் போலவே, இன்றும் கடவுளை சேவிப்பதாக அநேகர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனாலும் யூதாவையும் இஸ்ரவேலையும் போலவே அவர்கள் தங்களுக்குள் பிரிவுற்று, சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேக செல்வ சீமான்கள் ஏழை எளியோரை ஒடுக்கியிருக்கிறார்கள். அதற்கும் மேலாக, பைபிள் வெளிப்படையாக கண்டனம் செய்யும் செயல்களை மதத் தலைவர்கள் கண்டும் காணாமல் விடுகிறார்கள். கிறிஸ்தவமண்டலம், பொய் மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனின்’ பாகமான மற்ற மதங்களுடன் சேர்ந்து சீக்கிரத்தில் நாசமடையப் போவதைக் குறித்து ஆச்சரியமில்லை! (வெளிப்படுத்துதல் 18:1-5) இருந்தாலும், மீகாவின் காலத்தைப் போலவே, இன்றும் யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்கள் பூமியில் மீந்திருக்கிறார்கள்.
22. எந்த இரண்டு தொகுதியினர் தங்கள் நம்பிக்கையைக் கடவுளுடைய ராஜ்யத்தின்மீது வைத்திருக்கிறார்கள்?
22 அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள ஊழியர்கள் 1919-ல் கிறிஸ்தவமண்டலத்துடன் இருந்த தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ராஜ்ய நற்செய்தியை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க ஆரம்பித்தார்கள். (மத்தேயு 24:14) முதலில், ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீந்திருப்பவர்களை அவர்கள் தேடிக் கண்டுபிடித்தார்கள். பிறகு, ‘வேறே ஆடுகளை’ கூட்டிச் சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு தொகுதியினரும் ‘ஒரே மேய்ப்பனின்’ கீழ் ‘ஒரே மந்தை’ ஆனார்கள். (யோவான் 10:16) இன்று அவர்கள் 234 நாடுகளில் கடவுளை சேவித்தாலும் உண்மையுள்ள இந்த ஊழியர்கள் அனைவரும் நிஜமாகவே “ஒன்றாக” (பொது மொழிபெயர்ப்பு) செயல்படுகிறார்கள். எனவே, ஆட்டு மந்தைக்கு ஒப்பான இந்த அமைப்பில், இப்போது ‘ஆண்களினாலே’ மட்டுமல்லாமல் பெண்கள், பிள்ளைகள் ஆகியோராலும் ‘இரைச்சல்’ உண்டாகிறது. இந்த உலக ஒழுங்குமுறையின் மீதல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின்மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; அந்த ராஜ்யம் சீக்கிரத்தில் பூமியை பரதீஸாக மாற்றும்.
23. உங்கள் நம்பிக்கை நிறைவேறும் என ஏன் உறுதியோடிருக்கிறீர்கள்?
23 யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாரைக் குறித்து மீகா இரண்டாம் அதிகாரத்தின் கடைசி வசனம் இவ்வாறு கூறுகிறது: “அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.” அந்த வெற்றிப் பவனியில் யெகோவா முன்னே செல்ல, உங்கள் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து, நீங்களும் செல்வதைக் காண்கிறீர்களா? அப்படியானால், வெற்றி உறுதி, உங்கள் நம்பிக்கை நிறைவேறும் என நிச்சயமாக இருக்கலாம். மீகா தீர்க்கதரிசனத்திலிருந்து மேலும் சிறப்புக் குறிப்புகளைக் கலந்தாலோசிக்கையில் இது இன்னும் தெளிவாகும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• மீகாவின் நாட்களில் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க யெகோவா ஏன் தீர்மானித்தார்?
• கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொள்பவர்கள் பொருட்களை நாடித் தேடுவதற்கே வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கையில் என்ன நடக்கலாம்?
• மீகா 1, 2 அதிகாரங்களை கலந்தாலோசித்த பிறகு உங்கள் நம்பிக்கை நிறைவேறுமென நீங்கள் ஏன் உறுதியோடிருக்கிறீர்கள்?
[பக்கம் 9-ன் படம்]
மீகாவின் தீர்க்கதரிசனம் நம்மை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தலாம்
[பக்கம் 10-ன் படங்கள்]
பொ.ச.மு. 537-லிருந்த யூத மீதியானோரைப் போல ஆவிக்குரிய இஸ்ரவேலரும் அவர்களுடைய தோழர்களும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்கள்