திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ‘தேசத்தில்’ ஒருமித்து வாழ்பவர்கள்
“நீங்களோ கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்.” —ஏசாயா 61:6.
1, 2. (அ) இஸ்ரவேலில் யூத மதத்துக்கு மாறியவர்களின் நிலைமை என்னவாக இருந்தது? (ஆ) ‘திரள்கூட்டத்தின்’ அங்கத்தினர்கள் என்ன மனப்பான்மையை நவீன காலங்களில் காண்பித்திருக்கின்றனர்?
பண்டைய காலங்களில் இஸ்ரவேலர் உண்மையாயிருந்தபோது யெகோவாவின் மகிமைக்கென்று ஒரு சாட்சியாக உலக காட்சியில் செயல்பட்டனர். (ஏசாயா 41:8, 9; 43:10) அநேக அந்நியர் அதற்குப் பிரதிபலித்து, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களோடு கூட்டுறவுகொண்டு யெகோவாவை வணங்க முன்வந்தனர். உண்மையில், ரூத் நகோமியிடம் கூறியதை அவர்கள் இஸ்ரவேலிடம் கூறினர்: “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) நியாயப்பிரமாண உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தனர், ஆண்கள் விருத்தசேதனம் செய்துகொண்டனர். (யாத்திராகமம் 12:43-48) பெண்களில் சிலர் இஸ்ரவேலரை விவாகம் செய்துகொண்டனர். எரிகோவின் ராகாப் மற்றும் மோவாபின் ரூத் ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்களாக ஆனார்கள். (மத்தேயு 1:5) இப்படி யூத மதத்துக்கு மாறியவர்கள் இஸ்ரவேல சபையின் பாகமாக இருந்தனர்.—உபாகமம் 23:7, 8.
2 இஸ்ரவேலில் இருந்த யூத மதத்துக்கு மாறியவர்களைப் போன்று, ‘திரள் கூட்டத்தார்’ அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரிடம் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.” (வெளிப்படுத்துதல் 7:9; சகரியா 8:23) அவர்கள், இப்படிப்பட்ட அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவாவின் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யாக இருக்கிறார்கள் என ஏற்றுக்கொண்டு, அவர்களோடு அவ்வளவு நெருக்கமாக வேலை செய்வதால், அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் “வேறே ஆடுகளும்,” ‘ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய்’ இருக்கின்றனர். (மத்தேயு 24:45-47, NW; யோவான் 10:16) தங்கள் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்கள் அனைவரும் பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்ட பின்பு, திரள்கூட்டத்தாருக்கு என்ன நேரிடும்? அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தக் ‘கடைசி நாட்கள்’ முழுவதின்போது யெகோவா அந்தக் காலத்துக்காக தயாரிப்பு செய்து வைத்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:1.
ஒரு ஆவிக்குரிய ‘தேசம்’
3. பேதுருவால் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட ‘புதிய வானங்கள்’ யாவை, அவை எப்போது ஸ்தாபிக்கப்பட்டன?
3 1,44,000 அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கியுள்ள பரலோக ஆட்சிசெய்யும் ஏற்பாடு அப்போஸ்தலனாகிய பேதுருவால் முன்னுரைக்கப்பட்டது. அவர் சொன்னார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) 1914-ல் கிறிஸ்து பரலோக ராஜ்யத்தில் ராஜாவாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபோது இந்தப் ‘புதிய வானங்கள்’ ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் ‘புதிய பூமியைப்’ பற்றியென்ன?
4. (அ) என்ன எதிர்பாராத சம்பவம் 1919-ல் நடைபெற்றது? (ஆ) ‘ஒருமிக்கப் பிறந்த ஜனம்’ மற்றும் ‘பிள்ளைப்பேற்றினால் கொண்டுவரப்பட்ட தேசம்’ யாவை?
4 மகா பாபிலோனுக்கு சிறைபட்டுப் போயிருந்த அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரை யெகோவா 1919-ல் மீட்டுக்கொண்டு வந்தார். (வெளிப்படுத்துதல் 18:4) இந்த வியப்பூட்டும் சம்பவம் கிறிஸ்தவமண்டலத் தலைவர்களுக்கு முழுவதும் எதிர்பாராத ஒன்றாயிருந்தது. அதைக் குறித்து, பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி [“ஜனம்,” NW] ஒருமிக்கப் பிறக்குமோ?” (ஏசாயா 66:8) அபிஷேகம்செய்யப்பட்ட சபை விடுதலையாக்கப்பட்ட ஒரு ஜனமாக திடீரென தேசங்களுக்கு முன் தோன்றியபோது, அது உண்மையிலேயே ‘ஒருமிக்கப் பிறந்த’ ஜனமாயிருந்தது. ஆனால் அந்தத் ‘தேசம்’ என்பது என்ன? ஒரு அர்த்தத்தில், அது பண்டைய இஸ்ரவேல் தேசத்திற்கு சமமதிப்புள்ள ஆவிக்குரிய தேசமாயிருந்தது. அது புதிதாகப் பிறந்த “ஜனம்” செயல்படுவதற்கு கொடுக்கப்பட்ட பிராந்தியமாக இருந்தது, அது ஏசாயா புத்தகத்தின் பரதீஸ் தீர்க்கதரிசனங்கள், நவீன-நாளில் ஆவிக்குரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கும் இடமாகும். (ஏசாயா 32:16-20; 35:1-7; ஒப்பிடுக: எபிரெயர் 12:12-14.) சரீரப்பிரகாரமாக ஒரு கிறிஸ்தவர் எங்கேயிருந்தாலும், அவர் அந்தத் ‘தேசத்தில்’ இருக்கிறார்.
5. 1919-ல் என்ன மையம் தோன்றியது? விளக்குங்கள்.
5 பேதுருவால் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட ‘புதிய பூமியோடு’ இதற்கு என்ன சம்பந்தம் இருந்தது? திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ‘தேசத்தில்’ 1919-ல் பிறந்த அப்புதிய “ஜனம்,” அபிஷேகம்செய்யப்பட்டும் அபிஷேகம்செய்யப்படாமலும் யெகோவாவைத் துதிக்கும் நபர்கள் அடங்கிய ஒரு உலகளாவிய அமைப்பாக வளர்ச்சியடைய வேண்டும். இந்த அமைப்பு அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகுக்குள் செல்லும். இந்தவிதத்தில் அந்த ஜனம் நீதியுள்ள மனித சமுதாயத்தின், அதாவது சாத்தானின் உலகம் அழிந்தபிறகு இருக்கப்போகும் புதிய பூமியின் மையமாகக் கருதப்படும்.a 1930-களின் மத்திபத்துக்குள், அபிஷேகம்செய்யப்பட்டோர் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட தேசத்துக்குள் ஒரு தொகுதியாக கூட்டிச்சேர்க்கப்பட்டிருந்தனர். அச்சமயத்திலிருந்து, வேறே ஆடுகளாகிய திரள்கூட்டத்தைக் கூட்டிச்சேர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது, அதன் எண்ணிக்கை இன்று ஏறக்குறைய 50 லட்சத்தை எட்டியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:15, 16) அந்தத் ‘தேசத்தில்’ மக்கள்தொகை அளவுக்குமீறி மிகுந்துள்ளதா? இல்லை, அதன் எல்லைகள் தேவைக்கு ஏற்றாற்போல் விரிவுபடுத்தப்படலாம். (ஏசாயா 26:15) அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோர் ‘தேசத்தை,’ “பலனால்”—ஆரோக்கியமுள்ள, ஊக்கமூட்டும் ஆவிக்குரிய உணவினால்—நிரப்புகையில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியடைவதைக் காண்பது உண்மையிலேயே கிளர்ச்சியூட்டுவதாய் உள்ளது. (ஏசாயா 27:6) ஆனால் கடவுளுடைய ஜனங்களின் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ‘தேசத்தில்’ இந்த வேறே ஆடுகளின் ஸ்தானம் என்ன?
அந்தத் ‘தேசத்தில்’ அந்நியர் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்
6. கடவுளுடைய ஜனங்களின் ‘தேசத்தில்’ அந்நியர்கள் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றனர்?
6 இஸ்ரவேல் தேசத்தில் இருந்த யூத மதத்துக்கு மாறியவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்ததுபோல, திரள்கூட்டத்தார் இன்று திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ‘தேசத்தில்’ யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றனர். தங்கள் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் பொய் வணக்கத்தை முழுவதுமாய் தவிர்க்கின்றனர், இரத்தத்தின் புனிதத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர். (அப்போஸ்தலர் 15:19, 20; கலாத்தியர் 5:19, 20; கொலோசெயர் 3:5) அவர்கள் யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்புகூருகின்றனர், அயலாரை தங்களைப் போலவே நேசிக்கின்றனர். (மத்தேயு 22:37; யாக்கோபு 2:8) பண்டைய இஸ்ரவேலில் யூத மதத்துக்கு மாறியவர்கள் சாலொமோனின் ஆலயத்தைக் கட்டுவதற்கு உதவினர், மெய் வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்கு ஆதரவளித்தனர். (1 நாளாகமம் 22:2; 2 நாளாகமம் 15:8-14; 30:25) இன்று திரள்கூட்டத்தார்கூட கட்டட பணிகளில் பங்குகொள்கின்றனர். உதாரணமாக, அவர்கள் சபைகளையும் வட்டாரங்களையும் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றனர், ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளைக்காரியாலய வசதிகள் போன்ற கட்டட கட்டுமானப் பணிகளை நிறைவேற்றித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
7. பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின் எருசலேமில் ஆலய சேவைகளை செய்துமுடிப்பதற்கு போதுமான லேவியர்கள் இல்லாதபோது என்ன நடந்தது?
7 பொ.ச.மு. 537-ல் இஸ்ரவேலர் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபோது, ஆலயம் இருந்த இடத்தில் அவர்கள் தங்கள் சேவையை ஒழுங்கமைக்க ஆரம்பித்தனர். என்றபோதிலும் திரும்பிவந்த லேவியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. எனவே—நிதனீமியர்கள்—முன்பு லேவியர்களுக்கு உதவியாளர்களாக இருந்த விருத்தசேதனம்செய்யப்பட்ட பரதேசிகள்—ஆலய சேவையில் கூடுதலான சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டனர். என்றபோதிலும், அவர்கள் அபிஷேகம்செய்யப்பட்ட ஆரோனிய ஆசாரியர்களுக்குச் சமமானவர்களாக இல்லை.b—எஸ்றா 7:24; 8:15-20; நெகேமியா 3:22-26.
8, 9. கடைசி நாட்களின்போது பரிசுத்த சேவைசெய்யும் வேலையில் வேறே ஆடுகள் எவ்வாறு அதிகரிக்கப்பட்ட பங்கை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்?
8 இன்றுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த மாதிரியைப் பின்பற்றியிருக்கின்றனர். ‘முடிவு காலம்’ முன்னேறி வருகையில், அபிஷேகம்செய்யப்பட்டோரில் மீதியானோர் கடவுளுடைய ஜனங்களின் ‘தேசத்தில்’ குறைந்துகொண்டே வந்திருக்கின்றனர். (தானியேல் 12:9; வெளிப்படுத்துதல் 12:17) இதன் காரணமாக திரள்கூட்டத்தார் இப்போது ‘பரிசுத்த சேவை’ செய்வதில் பெரும்பகுதியை செய்துமுடிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:15) தங்களுடைய அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அவர்கள் ‘அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்துகின்றனர்.’ அவர்கள் ‘நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருக்கின்றனர்,’ “இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதையறிந்து செய்கின்றனர்.—எபிரெயர் 13:15, 16.
9 கூடுதலாக, ஒவ்வொரு வருடமும் திரள்கூட்டத்தார் இலட்சக்கணக்கில் அதிகரித்துக்கொண்டு வருவதால், கண்காணிப்பு செய்வதற்கு தேவை எப்போதும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு சமயம் இது அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களால் மட்டுமே கையாளப்பட்டு வந்தது. இப்போது, பெரும்பாலான சபைகள் அதோடுகூட வட்டாரங்கள், மாவட்டங்கள், கிளைக்காரியாலயங்கள் ஆகியவற்றின் கண்காணிப்பு கட்டாய நிலையின் காரணமாக வேறே ஆடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1992-ல் இவர்களில் சிலருக்கு நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் குழுக்களின் கூட்டங்களில் ஆஜராகி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத உதவியாளர்களாக சேவிக்கும் சிலாக்கியமும் கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், வேறே ஆடுகள் தங்கள் அபிஷேகம்செய்யப்பட்ட உடன் கிறிஸ்தவர்களிடம் பற்றுமாறாமல் நிலைத்திருக்கின்றனர், அவர்களை யெகோவாவின் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக கருதி அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை சிலாக்கியமாக உணருகின்றனர்.—மத்தேயு 25:34-40.
‘ஒரு ஷேக்கைப் போல’
10, 11. சில பெலிஸ்தர்களின் மாதிரியைப் பின்பற்றி, கடவுளுடைய ஜனங்களின் முன்னாள் எதிரிகள் சிலர் எவ்வாறு இருதயத்தில் மாற்றத்தைக் கொண்டிருந்தனர்? என்ன விளைவோடு?
10 உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வேறே ஆடுகளை உத்தரவாதமுள்ள ஸ்தானங்களில் உபயோகித்திருக்கும் விதம் சகரியா 9:6, 7-ல் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டது. அங்கே நாம் வாசிக்கிறோம்: “நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப் [“ஷேக்கைப்,” NW] போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப் போல இருப்பான்.”c இன்றுள்ள சாத்தானின் உலகத்தைப் போன்று பெலிஸ்தர்கள் யெகோவாவின் ஜனங்களுடைய வெளிப்படையான எதிரிகளாக இருந்தனர். (1 யோவான் 5:19) பெலிஸ்தர்கள் இறுதியில் ஒரு ஜனமாக அழிக்கப்பட்டதுபோல, இந்த உலகமும் அதன் மதம், அரசியல் மற்றும் வணிக அம்சங்களோடுகூட விரைவில் யெகோவாவின் அழிவுண்டாக்கும் கடும் சீற்றத்தை அனுபவிக்கும்.—வெளிப்படுத்துதல் 18:21; 19:19-21.
11 இருப்பினும், சகரியாவின் வார்த்தைகளின்படி, சில பெலிஸ்தர்களின் இருதயங்களில் மாற்றம் ஏற்பட்டது. இன்றுள்ள சில உலகப்பிரகாரமான ஜனங்கள் யெகோவாவோடு பகைமையில் நிலைத்திருக்கமாட்டார்கள் என்பதை இது முன்நிழலாகக் குறிப்பிட்டது. அவர்கள் மதசம்பந்தமான விக்கிரக ஆராதனையோடுகூட அதன் வெறுக்கத்தக்க சடங்குகள் மற்றும் அருவருப்புண்டாக்கும் பலிகள் ஆகியவற்றை நிறுத்திவிட்டு யெகோவாவின் கண்களில் சுத்தமாக்கப்பட்டவர்களாயிருப்பர். நம்முடைய நாளில் இப்படிப்பட்ட திருந்திய “பெலிஸ்தர்கள்” திரள்கூட்டத்தாரில் காணப்படுகின்றனர்.
12. நவீன காலங்களில் “எக்ரோன்” எவ்வாறு “எபூசியனைப் போல” ஆகியிருக்கிறது?
12 தீர்க்கதரிசனத்தின்படி, முக்கிய பெலிஸ்திய பட்டணமாகிய எக்ரோன் “எபூசியனைப் போல” ஆகிவிடும். எபூசியர்களும்கூட ஒரு சமயம் இஸ்ரவேலருக்கு எதிரிகளாய் இருந்தனர். தாவீதால் கைப்பற்றப்படும் வரை எருசலேம் அவர்கள் கைகளில் இருந்தது. இருப்பினும், இஸ்ரவேலரோடு செய்த யுத்தங்களில் தப்பிப்பிழைத்த சிலர் இறுதியில் யூத மதத்துக்கு மாறினார்கள். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் அடிமைகளாக சேவித்தனர், ஆலயத்தைக் கட்டும் பணியில் பங்குகொள்ளும் சிலாக்கியத்தையும்கூட பெற்றிருந்தனர். (2 சாமுவேல் 5:4-9; 2 நாளாகமம் 8:1-18) உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் கண்காணிப்பின்கீழ் இன்று யெகோவாவை வணங்குவதற்காகத் திரும்பும் “எக்ரோனியர்கள்”கூட அந்தத் ‘தேசத்தில்’ சேவைசெய்யும் சிலாக்கியங்களைக் கொண்டிருக்கின்றனர்.
13. பண்டைய உலகில் ஷேக்குகள் என்னவாக இருந்தனர்?
13 பெலிஸ்தன் யூதாவிலே ஷேக்கைப் போல இருப்பான் என்று சகரியா சொல்கிறார். அல்லுப் என்ற எபிரெய சொல் “ஷேக்” என்று மொழிபெயர்க்கப்படும்போது, “ஆயிரம்பேருக்குத் தலைவன்” (அல்லது “சில்லியார்க்”) என்று பொருள்படுகிறது. அது ஒரு உயர்பதவியாக இருந்தது. பண்டைய ஏதோம் தேசம் 13 ஷேக்குகளை மட்டுமே கொண்டிருந்ததாக தெரிகிறது. (ஆதியாகமம் 36:15-19) இஸ்ரவேலைக் குறித்து பேசும்போது “ஷேக்” என்ற சொல் பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டில்லை, ஆனால் “ஆயிரத்துக்கு அதிபதி” (NW) என்ற சொற்றொடர் அடிக்கடி காணப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தின் பிரதிநிதிகளை மோசே வரவழைத்தபோது, அவர் “இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்”களை அழைத்தார்.d இப்படிப்பட்டவர்கள் 12 பேர் இருந்தனர், மோசேக்கு மட்டும் கீழ்ப்பட்ட நிலையில் இருந்தனர். (எண்ணாகமம் 1:4-16) அதே போல், இராணுவ அமைப்பில், ஆயிரங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள் படைத்தலைவர் அல்லது ராஜாவுக்கு மட்டுமே அடுத்த நிலையில் இருந்தனர்.—2 சாமுவேல் 18:1, 2; 2 நாளாகமம் 25:5.
14. இன்று எவ்வாறு “பெலிஸ்தன்” ஒரு ஷேக்கைப் போல் ஆகியிருக்கிறான்?
14 மனந்திரும்பிய பெலிஸ்தன் உண்மையில் ஒரு ஷேக்காக இஸ்ரவேலில் இருப்பான் என்று சகரியா தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. ஏனென்றால் அவர் இயற்கையாகப் பிறந்த இஸ்ரவேலனல்லாத காரணத்தால் அது சரியானதாக இருக்காது. ஆனால் அவர் ஒரு ஷேக்கைப் போல் இருப்பார், ஒரு ஷேக்குக்கு ஒப்பாக இருக்கும் அதிகாரத்தையுடைய ஸ்தானத்தை வகிப்பார். அது அவ்வாறே நிரூபித்திருக்கிறது. அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதாலும், அவர்களுள் உயிரோடிருப்பவர்களில் அநேகர் வயதின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், நன்கு-பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் வேறே ஆடுகள் தேவைக்கு ஏற்ப உதவிசெய்கின்றனர். அவர்கள் தங்கள் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களை மாற்றீடு செய்ய விரும்புவதில்லை. ஆனால் கடவுளுடைய அமைப்பு ஒரு ஒழுங்கமைக்கப்பட்டவிதத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்காக, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை அந்தத் ‘தேசத்தில்’ தேவைப்படும் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. அப்படிப்பட்ட படிப்படியான வழிமுறை மற்றொரு தீர்க்கதரிசனத்தில் காணப்படுகிறது.
ஆசாரியர்களும் பண்ணையாட்களும்
15. (அ) ஏசாயா 61:5, 6-ன் (NW) நிறைவேற்றத்தின்படி, ‘யெகோவாவின் ஆசாரியர்கள்’ யாவர், அவர்கள் எப்போது இந்த ஸ்தானத்தில் முழுமையான அர்த்தத்தில் சேவிக்கின்றனர்? (ஆ) இஸ்ரவேலின் பண்ணை வேலையை செய்யும் “மறுஜாதியார்” யாவர், ஆவிக்குரிய அர்த்தத்தில் இந்த வேலை எதை உட்படுத்துகிறது?
15 ஏசாயா 61:5, 6 வாசிக்கிறது: “மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள். நீங்களோ கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மை பாராட்டுவீர்கள்.” இன்று, ‘யெகோவாவின் ஆசாரியர்கள்’ என்பவர்கள் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். ஒரு இறுதியான, முழுமையான அர்த்தத்தில், அவர்கள் ‘யெகோவாவின் ஆசாரியர்களும் நமது தேவனுடைய பணிவிடைக்காரருமாய்’ பரலோக ராஜ்யத்தில் சேவிப்பார்கள். (வெளிப்படுத்துதல் 4:9-11, NW) பண்ணை வேலைக்கு உத்தரவாதமுள்ளவர்களாயிருக்கும் “மறுஜாதியார்” யாவர்? இவர்கள் தேவனுடைய இஸ்ரவேலின் ‘தேசத்தில்’ வாசம்பண்ணும் வேறே ஆடுகளாய் இருக்கின்றனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மேய்த்தல், பண்ணை வேலை, திராட்சத்தோட்டத்து வேலை யாவை? முக்கியமான ஆவிக்குரிய அர்த்தத்தில் இது ஜனங்களுக்கு உதவிசெய்து, போஷித்து பராமரித்து அறுவடை செய்வதிலுள்ள இந்த வேலைகள் சம்பந்தப்பட்டவையாய் இருக்கின்றன.—ஏசாயா 5:7; மத்தேயு 9:37, 38; 1 கொரிந்தியர் 3:9; 1 பேதுரு 5:2.
16. கடவுளுடைய ஜனங்களின் ‘தேசத்தில்,’ இறுதியில் யார் எல்லா வேலைகளையும் கையாளுவர்?
16 தற்போது சிறு எண்ணிக்கையான ஆவிக்குரிய இஸ்ரவேலர் பூமியில் மீந்திருக்கின்றனர், அவர்கள் ஆவிக்குரிய மேய்க்கும் வேலை, பண்ணை வேலை, திராட்சத்தோட்டத்து வேலை ஆகியவற்றில் பங்குகொள்கின்றனர். அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபை முழுவதுமாக இறுதியில் கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது, இவ்வேலை அனைத்தும் வேறே ஆடுகளிடமாக விடப்படும். அந்தத் ‘தேசத்தின்’ மானிட கண்காணிப்பும்கூட அப்போது தகுதிவாய்ந்த வேறே ஆடுகளின் கைகளில் இருக்கும், இவர்கள் எசேக்கியேலின் புத்தகத்தில் அதிபதி வகுப்பார் என்ற பெயரால் குறிப்பிட்டுக் காட்டப் பட்டிருக்கின்றனர்.—எசேக்கியேல், அதிகாரங்கள் 45, 46.e
‘தேசம்’ சகித்துக்கொண்டிருக்கிறது
17. இந்தக் கடைசி நாட்கள் முழுவதுமாக என்ன தயாரிப்புகளை யெகோவா செய்துகொண்டு வந்திருக்கிறார்?
17 ஆம், திரள்கூட்டத்தார் பயப்படவேண்டிய அவசியமில்லை! யெகோவா அவர்களுக்காக ஏராளமான தயாரிப்புகளை செய்திருக்கிறார். அபிஷேகம்செய்யப்பட்டவர்களை கூட்டிச்சேர்த்து முத்திரையிடுவதே இப்பூமியில் இந்தக் கடைசி நாட்களில் அதிமுக்கியமான வளர்ச்சியாக இருந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:3) இது நிறைவேறிவரும் சமயத்தின்போது, திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ஆவிக்குரிய தேசத்தில் யெகோவா வேறே ஆடுகளை அவர்களோடு கூட்டுறவுகொள்ளும்படி கொண்டுவந்திருக்கிறார். அவர்கள் அங்கே ஆவிக்குரியப்பிரகாரமாய் போஷிக்கப்பட்டு கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். கூடுதலாக, கண்காணிப்பு உட்பட பரிசுத்த சேவையில் நன்றாக போதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் யெகோவாவுக்கும் அவர்களுடைய அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களுக்கும் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
18. ஆவிக்குரிய இஸ்ரவேலின் ‘தேசத்தில்’ என்ன சம்பவங்களினூடாக வேறே ஆடுகள் பற்றுமாறாமல் நிலைத்திருப்பர்?
18 மாகோகின் கோகு கடவுளுடைய ஜனங்கள்மீது தன் இறுதி தாக்குதலை செய்யும்போது, ‘மதிலில்லாத கிராமங்களில்’ வேறே ஆடுகள் அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரோடு சேர்ந்து உறுதியாக நிலைநிற்பர். தேசங்களின் அழிவைத் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகுக்குள் பிரவேசிக்கையில் வேறே ஆடுகள் அந்தத் ‘தேசத்தில்’ இன்னும் இருப்பர். (எசேக்கியேல் 38:12; 39:12, 13; தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 7:9, 14) அவர்கள் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தால், அந்த மகிழ்ச்சி நிரம்பிய இடத்தை அவர்கள் விட்டுச்செல்ல வேண்டியதேயில்லை.—ஏசாயா 11:9.
19, 20. (அ) ‘அத்தேசத்தின்’ குடிமக்கள் புதிய உலகில் என்ன மகத்தான கண்காணிப்பை அனுபவிப்பர்? (ஆ) நாம் எதைப் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்?
19 பண்டைய இஸ்ரவேல் மனித ராஜாக்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது, லேவிய ஆசாரியர்களைக் கொண்டிருந்தது. புதிய உலகில் கிறிஸ்தவர்கள் இன்னுமதிக மகத்தான கண்காணிப்பைக் கொண்டிருப்பர்: யெகோவா தேவனின்கீழ், அவர்கள் பெரிய பிரதான ஆசாரியரும் ராஜாவுமாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உடன் ஆசாரியர்களும் ராஜாக்களுமான 1,44,000 பேருக்கும் கீழ்ப்பட்டிருப்பர்—அவர்களில் சிலரை பூமியில் தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அவர்கள் முன்பு அறிந்திருந்தனர். (வெளிப்படுத்துதல் 21:1) ஆவிக்குரிய தேசத்திலுள்ள உண்மையுள்ள குடிமக்கள் சொல்லர்த்தமாக திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கும் பரதீஸிய பூமியில் வாழ்வர், புதிய எருசலேம் மூலமாக வரும் குணமாக்கும் ஆசீர்வாதங்களில் பெருமகிழ்ச்சியடைவர்.—ஏசாயா 32:1; வெளிப்படுத்துதல் 21:2; 22:1, 2.
20 யெகோவாவின் மகத்தான பரலோக ரதம் அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தடுக்கப்பட முடியாமல் முன்னேறிக்கொண்டு செல்கையில், நமக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பங்கை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் அதிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம். (எசேக்கியேல் 1:1-28) அந்த நோக்கங்கள் இறுதியில் நிறைவேற்றமடையும்போது, யெகோவாவின் வெற்றிகரமான பரிசுத்தப்படுத்துதல் என்னே மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! வெளிப்படுத்துதல் 5:13-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வல்லமைமிக்க கீதம் அப்போது எல்லா சிருஷ்டிப்புகளாலும் பாடப்படும்: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக”! நம்முடைய இருப்பிடம் பரலோகத்தில் இருந்தாலும்சரி அல்லது பூமியில் இருந்தாலும்சரி, அச்சிறப்புவாய்ந்த துதிபாடல் குழுவில் நம்முடைய குரல்களையும் சேர்க்க, நாம் அங்கே இருப்பதற்கு மிகுந்த ஆவலுள்ளவர்களாய் இருக்கிறோமல்லவா?
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி 1953-ல் பிரசுரித்திருக்கும் “புதிய வானங்களும் புதிய பூமியும்” (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கங்கள் 322-3-ஐ காண்க.
b ஒரு முழுமையான கலந்தாலோசிப்புக்காக, “யெகோவாவின் ஏற்பாடு, ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்” என்ற கட்டுரையை காவற்கோபுரம், ஜூலை 15, 1992, இதழில் காண்க.
c உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி 1972-ல் பிரசுரித்திருக்கும் பரதீஸ் மனிதவர்க்கத்துக்கு திரும்ப நிலைநாட்டப்படுதல்—தேவாட்சியின் மூலம்! என்ற ஆங்கில புத்தகத்தின் பக்கங்கள் 264-9-ஐ காண்க.
d எபிரெயு மொழி: ராஷே, அல்பே, இஸ்ராஇல் ஆகியவை செப்டுவஜன்ட்டில் கிலியார்கோய் இஸ்ரேல் “இஸ்ரவேலின் சில்லியார்க்குகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
e உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி 1971-ல் பிரசுரித்திருக்கும் “நானே யெகோவா என்று ஜாதியார் அப்பொழுது அறிந்துகொள்வார்கள்—எப்படி?” என்ற ஆங்கில புத்தகம் பக்கங்கள் 401-7-ஐ காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எந்தத் ‘தேசம்’ 1919-ல் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது, அது எவ்வாறு குடிமக்களால் நிரப்பப்பட்டது?
◻ கடவுளுடைய திரும்பவும் நிலைநாட்டப்பட்ட ஜனங்களின் ‘தேசத்தில்’ வேறே ஆடுகளுக்கு எவ்வாறு அதிகரிக்கப்பட்ட உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
◻ திரள்கூட்டத்தின் அங்கத்தினர்கள் எந்தவிதத்தில் “எபூசியனைப் போல்” இருக்கின்றனர்? “யூதாவிலே ஷேக்கைப் போல” இருக்கின்றனர்?
◻ எவ்வளவு காலம் உண்மையுள்ள வேறே ஆடுகள் அந்தத் ‘தேசத்தில்’ நிலைத்திருப்பர்?
[பக்கம் 23-ன் படம்]
நவீன-நாளைய பெலிஸ்தன் “யூதாவிலே ஷேக்கைப் போல” இருப்பான்
[பக்கம் 24-ன் படங்கள்]
அபிஷேகம்செய்யப்பட்டோரும் வேறே ஆடுகளும் ஆவிக்குரிய தேசத்தில் ஒன்றாக சேவிக்கின்றனர்