யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஆகாய், சகரியா புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
வருடம் பொ.ச.மு. 520. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தவர்களில் எருசலேமுக்குத் திரும்பி வந்த யூதர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போட்டு பதினாறு வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும், ஆலய கட்டுமானப் பணி இன்னும் முடிந்தபாடில்லை; அதோடு, அதற்குத் தடையும் போடப்பட்டுள்ளது. எனவே, தம்முடைய வார்த்தையை அறிவிக்கும்படி ஆகாய் தீர்க்கதரிசியை யெகோவா நியமிக்கிறார்; இரண்டு மாதங்களுக்குப் பிறகு சகரியா தீர்க்கதரிசியையும் அவர் நியமிக்கிறார்.
ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகள் அறிவிக்கிற செய்திகளின் நோக்கம் ஒன்றுதான்: ஆலயத்தைத் திரும்பக் கட்டும் வேலையை மீண்டும் தொடரும்படி மக்களை ஊக்குவிப்பது. இந்த இரு தீர்க்கதரிசிகளின் முயற்சிகளும் வெற்றிபெறுகின்றன. ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆலய கட்டுமானப் பணி முடிவடைகிறது. இந்த இரு தீர்க்கதரிசிகளும் அறிவித்த செய்திகள் அவர்களுடைய பெயரைத் தாங்கிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. பொ.ச.மு. 520-ல் ஆகாய் புத்தகமும் பொ.ச.மு. 518-ல் சகரியா புத்தகமும் எழுதி முடிக்கப்பட்டன. அந்தத் தீர்க்கதரிசிகளைப் போலவே, நமக்கும்கூட கடவுள் ஒரு வேலையைக் கொடுத்துள்ளார். ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமே அந்த வேலை. இந்தப் பொல்லாத உலகின் முடிவுக்கு முன்பாக அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும். ஆகாய், சகரியா புத்தகங்களிலிருந்து நாம் எவ்வாறு ஊக்குவிப்பைப் பெறலாமென இப்போது பார்க்கலாம்.
“உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்”
ஆகாய் தீர்க்கதரிசி, மனதைத் தூண்டுகிற நான்கு செய்திகளை 112 நாட்களுக்குள் அறிவிக்கிறார். முதல் செய்தி: “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் . . . நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஆகாய் 1:7, 8) அதற்கு மக்கள் கீழ்ப்படிகிறார்கள். இரண்டாம் செய்தி ஒரு வாக்குறுதியாகும்: யெகோவாவாகிய நான் “இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்.”—ஆகாய் 2:7.
ஆலயத்தைத் திரும்பக் கட்டும் பணியை அலட்சியம் செய்ததால், ‘ஜனங்கள்’ யெகோவாவுக்கு முன்பாக அசுத்தமாகி விட்டதோடு, ‘அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும்’ யெகோவாவுக்கு முன்பாக அசுத்தமாகி விட்டன. என்றாலும், பழுதுபார்க்கும் வேலை ஆரம்பமாகிற நாள்முதல் யெகோவா அவர்களை ‘ஆசீர்வதிப்பார்’ என்பதே அவருடைய மூன்றாம் செய்தி. ஆகாய் சொல்கிற நான்காம் செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, யெகோவா “ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து” ஆளுநரான செருபாபேலை “முத்திரை மோதிரமாக” வைப்பார்.—ஆகாய் 2:14, 19, 22, 23.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:6—“குடித்தும் பரிபூரணமடையவில்லை” அதாவது போதையேறவில்லை என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன? திராட்சரசத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதையே அது காட்டுகிறது. யெகோவாவின் ஆசீர்வாதம் இல்லாததால், அவர்கள் தயாரித்த திராட்சரசம், போதை ஏறுமளவுக்குப் போதுமானதாக இருக்காது.
2:6, 7, 21, 22—அசையப்பண்ணுவது யார் அல்லது எது, அதன் விளைவு என்ன? ராஜ்ய செய்தி உலகெங்கும் பிரசங்கிக்கப்படுவதன் மூலமாக யெகோவா ‘சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுகிறார்.’ இந்தப் பிரசங்க வேலையால், யெகோவாவின் ஆலயத்திற்கு ‘சகல ஜாதிகளிலும் உள்ள விரும்பப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்’; அவர்கள் இந்த ஆலயத்தை மகிமையினால் நிரப்பியிருக்கிறார்கள். “சேனைகளின் கர்த்தர்” சீக்கிரத்திலேயே ‘வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவார்.’ ஆம், இந்தப் பொல்லாத உலகின் பாகமான அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகுமளவுக்கு அசைவிக்கப்படும்.—எபிரெயர் 12:26, 27.
2:9—எவ்விதங்களில், ‘முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்’? குறைந்தபட்சம் மூன்று விதங்களில் அது பெரிதாயிருக்கும்: அந்த ஆலயம் எத்தனை ஆண்டுகள் நிலைத்திருந்தது, அங்கு போதித்தவர் யார், யெகோவாவை வழிபடுவதற்காக எவ்வளவு பேர் அங்கு வந்தார்கள் ஆகிய விதங்களில் பெரிதாயிருக்கும். சாலொமோன் கட்டிய பிரமாண்டமான ஆலயம் பொ.ச.மு. 1027-ல் இருந்து பொ.ச.மு. 607 வரையாக, 420 ஆண்டுகள் நிலைத்திருந்தது; ‘பிந்தின ஆலயமோ’ பொ.ச.மு. 515-ல் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து பொ.ச. 70-ல் அது அழிக்கப்படும் வரையாக 580 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்தது. அதுமட்டுமல்ல, ‘பிந்தின ஆலயத்தில்’ மேசியாவான இயேசு கிறிஸ்து போதித்தார்; ‘முந்தின ஆலயத்தை’விட இந்த ஆலயத்திற்கு அதிகமான மக்கள் யெகோவாவை வழிபடுவதற்காகத் திரண்டு வந்தார்கள்.—அப்போஸ்தலர் 2:1-11.
நமக்குப் பாடம்:
1:2-4. பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு வருகையில், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதற்கு’ முக்கியத்துவம் கொடுக்காமல் நம்முடைய சொந்தக் காரியங்களைத் தேடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது.—மத்தேயு 6:33.
1:5, 7. ‘நம் வழிகளைச் சிந்தித்துப் பார்ப்பதும்,’ நாம் வாழ்கிற விதம் கடவுளுடன் உள்ள நம் பந்தத்தை பலப்படுத்துகிறதா, பலவீனப்படுத்துகிறதா என்பதை எண்ணிப் பார்ப்பதும் நல்லது.
1:6, 9-11; 2:14-17. ஆகாயின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்களுடைய சொந்த காரியங்களுக்காகப் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், தங்களுடைய உழைப்பின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை. அவர்கள் ஆலய கட்டுமானப் பணியை விட்டுவிட்டதால் கடவுளுடைய ஆசீர்வாதம் அவர்கள்மீது இருக்கவில்லை. நமக்குப் பணவசதி இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்” என்பதை நினைவில் வைத்து, ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து கடவுளுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்ய வேண்டும்.—நீதிமொழிகள் 10:22.
2:15, 18 (NW). இந்நாள்முதல் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்படி யூதர்களுக்கு யெகோவா அறிவுறுத்தியபோது கடந்த காலத்தில் அசட்டையாக இருந்துவிட்டதன்மீது அல்ல, ஆனால் ஆலயத்தைத் திரும்பக் கட்டும் பணியில் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்படியே அவர் சொன்னார். அவ்வாறே நாமும் இந்நாள்முதல் யெகோவாவை வணங்குவதிலேயே நம் இருதயத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.
‘பராக்கிரமத்தினால் அல்ல, என்னுடைய ஆவியினால்’
‘யெகோவாவிடத்தில் திரும்புங்கள்’ என்று யூதர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கும் வேலையை சகரியா ஆரம்பிக்கிறார். (சகரியா 1:3) அதைத் தொடர்ந்து அவர் பார்க்கிற எட்டுத் தரிசனங்கள், ஆலயத்தைத் திரும்பக் கட்டும் வேலைக்கு யெகோவாவின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. (“சகரியா கண்ட எட்டு உருவக தரிசனங்கள்” என்ற பெட்டியைக் காண்க.) ஆலயத்தைத் திரும்பக் கட்டும் இப்பணி ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, [யெகோவாவின்] ஆவியினால்’ நிறைவேறும். (சகரியா 4:6) கிளை என்னும் பெயருள்ள ஒருவரே, “கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; . . . அவர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்.”—சகரியா 6:12, 13.
எருசலேமின் அழிவை நினைத்து இன்னும் உபவாசம் இருக்க வேண்டுமா எனக் கேட்பதற்காக பெத்தேலிலிருந்து ஆட்கள் ஆசாரியர்களிடம் அனுப்பப்படுகிறார்கள். வருடத்திற்கு நான்கு முறை உபவாசமிருந்து துக்கங்கொண்டாடிய நிலை, “மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் [அதாவது, விழாக்கோலமாகவும்] மாறிப்போகும்” என்று சகரியாவிடம் யெகோவா சொல்கிறார். (சகரியா 7:2; 8:19) அதை அடுத்து சகரியா இரண்டு அறிவிப்புகளைச் செய்கிறார்; பிற தேசத்தாருக்கும் பொய்த் தீர்க்கதரிசிகளுக்கும் எதிரான நியாயத்தீர்ப்பின் செய்திகளும், மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும், பிற தேசங்களில் சிதறி இருக்கும் கடவுளுடைய மக்கள் தாயகம் திரும்புவது பற்றிய செய்தியும் அவற்றில் அடங்கியுள்ளன.—சகரியா 9:1; 12:1.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:1—ஏன் ஒரு மனிதன் எருசலேமை நூலினால் அளக்கிறான்? இவ்வாறு செய்வது, எருசலேமைச் சுற்றி ஒரு பாதுகாப்பான மதில் கட்டப்படுவதைக் குறிக்கலாம். எருசலேம் விரிவாக்கப்படும் என்றும் அதன்மீது யெகோவாவின் பாதுகாப்பு இருக்கும் என்றும் அந்த மனிதனிடம் தூதன் அறிவிக்கிறார்.—சகரியா 2:3-5.
6:11-13—பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் தலையில் கிரீடம் வைக்கப்பட்டதால் அவர் அரசரும் ஆசாரியருமாய் ஆகிவிட்டாரா? இல்லை, யோசுவா தாவீதின் அரச பரம்பரையில் வந்தவரல்ல. என்றாலும், மேசியாவுக்கு முன்நிழலாகவே அவர் முடிசூட்டப்பட்டார். (எபிரெயர் 6:20) “கிளையை” பற்றிய தீர்க்கதரிசனம், பரலோகத்தில் அரசராகவும் ஆசாரியராகவும் இருக்கும் இயேசு கிறிஸ்துவிடத்தில் நிறைவேறியது. (எரேமியா 23:5) தாயகம் திரும்பிய யூதர்களுக்கு திரும்பக் கட்டிய ஆலயத்தில் யோசுவா பிரதான ஆசாரியராய்ச் சேவை செய்ததுபோல, யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தில் நடைபெறுகிற உண்மை வழிபாட்டிற்கு இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராய் இருக்கிறார்.
8:1-23—இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள பத்து அறிவிப்புகள் எப்போது நிறைவேறுகின்றன? ஒவ்வொரு அறிவிப்பிலும், ‘சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ என்ற சொற்றொடர் காணப்படுகிறது; அதோடு, அவை ஒவ்வொன்றும் தமது மக்களுக்கு கடவுள் சமாதானத்தை அருளுவதைக் குறித்த வாக்குறுதிகளாகவும் இருக்கின்றன. அவற்றில் சில பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறைவேறின; ஆனால், அவை எல்லாமே பொ.ச. 1919 முதற்கொண்டு நிறைவேறி வந்திருக்கின்றன அல்லது தற்போது நிறைவேறி வருகின்றன.a
8:3—எருசலேம், “சத்திய நகரம்” என்று அழைக்கப்படுவதேன்? பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன் அது “ஒடுக்கிய நகரமாக” இருந்தது; அங்கு ஊழல்செய்த தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் உண்மையற்ற மக்களுமே நிறைந்திருந்தார்கள். (செப்பனியா 3:1, பொது மொழிபெயர்ப்பு; எரேமியா 6:13; 7:29-34) என்றாலும், ஆலயம் மறுபடியுமாகக் கட்டப்பட்டு மக்கள் யெகோவாவை வழிபட ஆரம்பித்தபோது, தூய வழிபாட்டைக் குறித்த சத்தியங்கள் அங்கு பேசப்பட்டன; அதனால், எருசலேம் “சத்திய நகரம்” என அழைக்கப்பட்டது.
11:7-14 (பொ.மொ.)—சகரியா “இனிமை” என்னும் கோலையும் “ஒன்றிப்பு” என்னும் கோலையும் முறித்துப்போடுவது எதை அர்த்தப்படுத்துகிறது? ‘கொலையுண்கிற மந்தையிடத்தில்,’ அதாவது தங்களுடைய தலைவர்களால் அநியாயமாக நடத்தப்பட்ட செம்மறியாட்டைப் போன்ற மக்களிடத்தில் அனுப்பப்படுகிற ‘மேய்ப்பனாக’ சகரியா சித்தரிக்கப்படுகிறார். ஒரு மேய்ப்பனாக அவர், கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களிடத்திற்கு அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முன்நிழலாக இருக்கிறார்; அந்த மக்களோ இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. “இனிமை” என்னும் கோலை முறித்துப்போடுவது, கடவுள் தாம் யூதர்களோடு செய்த நியாயப்பிரமாண உடன்படிக்கையை ரத்து செய்துவிடுவார் என்பதையும், அவர்களிடம் முன்புபோல் இனிமையாக நடந்துகொள்ள மாட்டார் என்பதையும் அடையாளப்படுத்தியது. “ஒன்றிப்பு” என்னும் கோலை முறித்துப்போடுவது, யெகோவாவை ஆராதிப்பதன் அடிப்படையில் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலிருந்த சகோதர பிணைப்பு துண்டிக்கப்படுவதை அர்த்தப்படுத்தியது.
12:11—‘மெகிதோன் பள்ளத்தாக்கிலிருந்த ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பல்’ எதைக் குறிக்கிறது? ‘மெகிதோன் பள்ளத்தாக்கிலே’ எகிப்து தேசத்து பார்வோன் நேகோவுடன் போரிட்டதில் யூதாவின் ராஜாவாகிய யோசியா கொல்லப்பட்டார்; அவரது மரணத்தின் நினைவாய் பல ஆண்டுகளுக்குப் ‘புலம்பல்’ பாடப்பட்டது. (2 நாளாகமம் 35:25) ஆகவே, ‘ஆதாத்ரிம்மோனின் புலம்பல்’ யோசியாவுடைய மரணத்தின் நினைவாகப் பாடப்பட்ட துயரப் பாடலைக் குறிக்கலாம்.
நமக்குப் பாடம்:
1:2-6; 7:11-14. மனந்திரும்புதலுடன் சிட்சையை ஏற்றுக்கொண்டு, முழு ஆத்துமாவோடு யெகோவாவைச் சேவிப்பதன்மூலம் அவரிடத்திற்குத் திரும்பி வருவோர்மீது அவரும் பிரியம் வைத்து, அவர்களிடம் திரும்புகிறார். மறுபட்சத்தில், அவருடைய செய்தியை ‘கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொள்பவர்கள்’ உதவிக்காக அவரை நோக்கிக் கூப்பிடுகையில் அவரும் கேளாமலிருக்கிறார்.
4:6, 7. ஆலயத்தை வெற்றிகரமாகத் திரும்பக் கட்டி முடிப்பதற்கு இடையூறாக வந்த எந்தவொரு தடையும் யெகோவாவின் ஆவியால் சமாளிக்க முடியாதளவுக்கு மிகப் பெரியதல்ல. கடவுளுக்குச் செய்யும் சேவையில் எத்தகைய பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டாலும்சரி, யெகோவாமீது விசுவாசம் வைப்பதன்மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும்.—மத்தேயு 17:20.
4:10. செருபாபேலும் அவருடைய மக்களும் யெகோவாவுடைய கண்காணிப்பின்கீழ், அவரது உயர்ந்த நோக்கங்களுக்கு இணங்க ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். யெகோவாவின் எதிர்பார்ப்புகளுக்கு இசைய வாழ்வது அபூரண மனிதருக்கு மிகக் கடினமானதல்ல.
7:8-10; 8:16, 17. யெகோவாவின் ஆதரவைப் பெறுவதற்கு, நாம் நியாயத்தைக் கடைப்பிடித்து, அன்போடும் தயவோடும் நடந்து, இரக்கம் காட்டி, ஒருவருக்கொருவர் உண்மையைப் பேச வேண்டும்.
8:9-13. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் செய்வதற்கு ‘நம் கைகளைத் திடப்படுத்தும்போது,’ அவர் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளித்து, தம்மோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு உதவுவார். இவை நமக்கு அவர் அருளும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
12:6. யெகோவாவின் மக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், ‘எரிகிற தீவட்டியைப்’ போல், பக்திவைராக்கியத்தைக் காட்டுவதில் நிகரற்று விளங்க வேண்டும்.
13:3. மெய்க் கடவுள் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் நமக்குள்ள பற்று, எந்தவொரு நபர் மீதும் நமக்குள்ள பற்றை விஞ்சுமளவுக்கு இருக்க வேண்டும். அந்நபர் நமக்கு எந்தளவு நெருக்கமானவராக இருந்தாலும்கூட.
13:8, 9. யெகோவாவால் நிராகரிக்கப்பட்ட விசுவாசதுரோகிகள் தேசத்தில் எக்கச்சக்கமாய் பெருகி இருந்தனர், அதாவது அங்கிருந்த இரண்டு பங்கு மக்கள் விசுவாசதுரோகிகளாய் இருந்தனர். அதில் மீதியான மூன்றாம் பங்கினர் மட்டுமே அக்கினியால் புடமிடப்பட்டதுபோல புடமிடப்பட்டனர். நம் நாளில், தங்களைக் கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிற பெரும்பான்மையோர் கிறிஸ்தவமண்டலத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்; அவர்களை யெகோவா நிராகரித்துவிட்டார். கடவுளுடைய ‘நாமத்தைத் தொழுதுகொள்கிற’ சிறுபான்மையோரான அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமே புடமிடப்படுவதற்கு இணங்கினார்கள். அவர்களும், அவர்களுடைய சக விசுவாசிகளும் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பதைப் பெயரளவில் அல்லாமல் செயலில் நிரூபிக்கிறார்கள்.
பக்திவைராக்கியத்துடன் செயல்படத் தூண்டுதல்
ஆகாயும் சகரியாவும் அறிவித்த செய்திகள் இன்று நம்மை எப்படிப் பாதிக்கின்றன? அவர்கள் அறிவித்த செய்தி ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதில் கவனம் செலுத்துவதற்கு யூதர்களை எவ்வாறு தூண்டியது என்பதைச் சிந்திக்கையில், பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு நாமும் தூண்டுதலைப் பெறுகிறோம், அல்லவா?
மேசியா, ‘கழுதையின்மேல்’ ஏறிவருவார், ‘முப்பது வெள்ளிக்காசுக்காக’ காட்டிக்கொடுக்கப்படுவார், வெட்டப்படுவார் என்றும் அவருடைய ‘ஆடுகள் சிதறிப்போகும்’ என்றும் சகரியா தீர்க்கதரிசனம் உரைத்தார். (சகரியா 9:9; 11:12; 13:7) மேசியாவைக் குறித்து சகரியா சொன்ன இத்தகைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைத் தியானிப்பது நம் விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்துகிறது! (மத்தேயு 21:1-9; 26:31, 56; 27:3-10) ஆம், யெகோவாவுடைய வார்த்தையின் மீதும் நம் இரட்சிப்புக்காக அவர் செய்துள்ள ஏற்பாடுகள் மீதும் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை பலப்படுகிறது.—எபிரெயர் 4:12.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம், ஜனவரி 1, 1996, பக்கங்கள் 9-22-ஐ பார்க்கவும்.
[பக்கம் 11-ன் பெட்டி]
சகரியா கண்ட எட்டு உருவக தரிசனங்கள்
1:8-17: ஆலயம் கட்டிமுடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது; எருசலேமும் யூதாவிலுள்ள மற்ற நகரங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் காட்டுகிறது.
1:18-21: ‘யூதாவைச் சிதறடித்த நான்கு கொம்புகளுக்கு,’ அதாவது யெகோவாவின் வழிபாட்டை எதிர்த்த அனைத்து அரசாங்கங்களுக்கும் முடிவு வரும் என வாக்குக் கொடுக்கிறது.
2:1-13: எருசலேம் விரிவாக்கப்படும் என்பதைத் தெரிவிக்கிறது; அத்துடன் யெகோவா ‘அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாய்,’ அதாவது பாதுகாப்பாய், இருப்பார் என்பதையும் தெரிவிக்கிறது.
3:1-10: ஆலயப் பணியை எதிர்ப்பதில் பின்னாலிருந்து செயல்பட்டவன் சாத்தானே என்பதைக் காட்டுகிறது; அதோடு, பிரதான ஆசாரியனாகிய யோசுவா தப்புவிக்கப்படுவதையும் அவருடைய அக்கிரமம் நீக்கப்படுவதையும் காட்டுகிறது.
4:1-14: ஆலயக் கட்டுமானப் பணிக்கு எதிராக இருந்த மலைபோன்ற தடைகள் தகர்க்கப்படும் என்றும் ஆளுநராகிய செருபாபேலின் தலைமையில் ஆலயம் கட்டிமுடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறது.
5:1-4: தண்டியாமல் விடப்பட்ட துன்மார்க்கருக்குச் சாபம் விடப்படுகிறது.
5:5-11: துன்மார்க்கத்திற்கு வரும் முடிவை முன்னறிவிக்கிறது.
6:1-8: தேவதூதர்களின் கண்காணிப்பும் பாதுகாப்பும் இருக்கும் என வாக்குறுதி அளிக்கிறது.
[பக்கம் 8-ன் படம்]
ஆகாயும் சகரியாவும் அறிவித்த செய்திகளின் நோக்கம் என்ன?
[பக்கம் 10-ன் படம்]
கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் எவ்வாறு ‘எரிகிற தீவட்டியைப்போல்’ இருக்கிறார்கள்?