யெகோவாவின் நாளில் யார் தப்பிக்க முடியும்?
“சூளையைப்போல எரிகிற நாள் வரும்.”—மல்கியா 4:1.
1. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் அழிவை மல்கியா எவ்வாறு விவரிக்கிறார்?
வெகு சீக்கிரத்தில் நிகழப்போகிற பயங்கரமான நிகழ்ச்சிகளை எழுதி வைக்கும்படி தீர்க்கதரிசியான மல்கியாவை கடவுள் ஏவினார். இந்த நிகழ்ச்சிகள் பூமியிலுள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கும். மல்கியா 4:1 இவ்வாறு முன்னுரைக்கிறது: “இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அழிவு எவ்வளவு முழுமையானதாக இருக்கும்? ஒரு மரம் திரும்ப தழைக்க முடியாதபடி அதன் வேர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கு சமமாக இருக்கும்.
2. சில வேதவசனங்கள் யெகோவாவின் நாளை எவ்வாறு விவரிக்கின்றன?
2 ‘மல்கியா தீர்க்கதரிசி முன்னுரைக்கும் அந்த “நாள்” எது?’ என நீங்கள் கேட்கலாம். அது ஏசாயா 13:9 குறிப்பிடும் நாள்தான். அங்கு இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, தேசத்தைப் பாழாக்கி அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது.” செப்பனியா 1:15 பின்வரும் இந்த விவரிப்பை அளிக்கிறது: “அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.”
“மிகுந்த உபத்திரவம்”
3. ‘யெகோவாவின் நாள்’ என்பது என்ன?
3 மல்கியா தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றத்தில் ‘யெகோவாவின் நாள்’ என்பது ‘மிகுந்த உபத்திரவத்தின்’ காலப்பகுதியாகும். “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:21) முக்கியமாக 1914 முதற்கொண்டு இந்த உலகம் சந்தித்துள்ள உபத்திரவத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! (மத்தேயு 24:7-12) இரண்டாம் உலக யுத்தத்தில் மாத்திரமே 5 கோடிக்கும் அதிகமானோர் மரித்திருக்கின்றனரே! என்றாலும், இப்படிப்பட்ட துயரங்களை பல மடங்கு மிஞ்சிவிடும் நிகழ்ச்சிகள் வரப்போகிற அந்த ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ நிகழும். யெகோவாவின் நாளைப் போலவே அந்த மிகுந்த உபத்திரவமும் அர்மகெதோனில் முடிவடையும்; அப்போது இந்தத் துன்மார்க்க ஒழுங்குமுறையின் கடைசி நாட்களுக்கு முடிவு வரும்.—2 தீமோத்தேயு 3:1-5, 13; வெளிப்படுத்துதல் 7:14; 16:14, 16.
4. யெகோவாவின் நாள் முடிவடைகையில் என்ன நடந்திருக்கும்?
4 யெகோவாவின் நாள் முடிவடைகையில் சாத்தானின் உலகமும் அதை ஆதரிப்போரும் துடைத்தழிக்கப்பட்டிருப்பர். முதலாவதாக அனைத்து பொய் மதங்களும் அழிக்கப்படும். அதற்கு பிறகு, சாத்தானின் அரசியல், பொருளாதார அமைப்புகள் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும். (வெளிப்படுத்துதல் 17:12-14; 19:17, 18) அப்போது, “தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது” என எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். (எசேக்கியேல் 7:19) அந்த நாளைப் பற்றி செப்பனியா 1:14 இவ்வாறு கூறுகிறது: “கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது.” யெகோவாவின் நாளைப் பற்றிய பைபிளின் விவரிப்பைக் கவனிக்கையில் கடவுள் நியாயமாய் எதிர்பார்ப்பவற்றை செய்ய நாம் தீர்மானமாயிருக்க வேண்டும்.
5. யெகோவாவின் நாமத்திற்கு பயப்படுகிறவர்கள் எதை அனுபவிக்கிறார்கள்?
5 யெகோவாவின் நாளில், சாத்தானின் உலகிற்கு என்ன ஏற்படும் என்பதை முன்னறிவித்த பிறகு மல்கியா 4:2-ல் யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.” அந்த “நீதியின் சூரியன்” இயேசு கிறிஸ்துவே. அவரே ஆவிக்குரிய அர்த்தத்தில் ‘உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்.’ (யோவான் 8:12) இரண்டு விதமான சுகப்படுத்துதல்களுடன் இயேசு உதிக்கிறார்: ஒன்று, நாம் இப்போது அனுபவித்து வரும் ஆவிக்குரிய சுகப்படுத்துதல்; இரண்டு, புதிய உலகில் அனுபவிக்கப் போகும் முழுமையான சரீர சுகப்படுத்துதல். யெகோவா கூறுவது போலவே சுகமாக்கப்பட்டவர்கள் ‘கொழுத்த கன்றுகளைப்போல வளருவார்கள்,’ விடுதலை பெற ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் உள்ள கன்றுகளைப் போல துள்ளுவார்கள்.
6. யெகோவாவின் ஊழியர்கள் என்ன வெற்றி கொண்டாட்டத்தை அனுபவித்து மகிழ்வர்?
6 யெகோவா எதிர்பார்ப்பவற்றை செய்ய தவறுகிறவர்களுக்கு என்ன நடக்கும்? மல்கியா 4:3 இவ்வாறு கூறுகிறது: கடவுளுடைய ஊழியர்களாகிய நீங்கள் “துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” கடவுளை வணங்கும் மனிதர்கள் சாத்தானின் உலகை அழிப்பதில் பங்குகொள்ள மாட்டார்கள். மாறாக, யெகோவாவின் நாளுக்கு பிறகு நடைபெறும் மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு அடையாள அர்த்தத்தில் ‘துன்மார்க்கரை மிதிப்பார்கள்.’ பார்வோனும் அவனுடைய சேனைகளும் சிவந்த சமுத்திரத்தில் அழிக்கப்பட்ட பிறகு ஒரு பெரிய கொண்டாட்டம் நடைபெற்றது. (யாத்திராகமம் 15:1-21) அதைப் போலவே, மிகுந்த உபத்திரவத்தில் சாத்தானும் அவனுடைய உலகமும் துடைத்தழிக்கப்பட்ட பிறகு வெற்றி கொண்டாட்டம் இருக்கும். யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்கும் உண்மையுள்ளோர், “இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்” என முழங்குவர். (ஏசாயா 25:9) யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்பட்டு, சமாதானம் நிலவுவதற்காக இந்தப் பூமி சுத்திகரிக்கப்படுகையில் எவ்வளவு சந்தோஷம் வியாபித்திருக்கும்!
இஸ்ரவேலைப் பின்பற்றும் கிறிஸ்தவமண்டலம்
7, 8. மல்கியாவின் நாளில் இஸ்ரவேலின் ஆவிக்குரிய நிலைமையை விவரியுங்கள்.
7 யெகோவாவை சேவிக்காதோர் அல்ல, அவரை சேவிப்போரே அவருடன் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைப் பெறுகின்றனர். மல்கியா தன் புத்தகத்தை எழுதிய சமயத்திலும் அவ்வாறே இருந்தது. பொ.ச.மு. 537-ல், 70 வருட பாபிலோனிய சிறையிருப்பிற்குப் பிறகு மீதியான இஸ்ரவேலர் திரும்ப நிலைநாட்டப்பட்டனர். என்றாலும், அடுத்த நூறு வருடங்களுக்குள் திரும்ப நிலைநாட்டப்பட்ட அந்தத் தேசம் மறுபடியும் விசுவாச துரோகத்திலும் துன்மார்க்கத்திலும் சிக்கி வழிவிலகிப் போனது. ஜனங்களில் பெரும்பாலானோர் யெகோவாவின் பெயரை அவமதித்தனர்; அவருடைய நீதியுள்ள சட்டங்களை அசட்டை செய்தனர்; குருடான, முடமான, வியாதிப்பட்ட மிருகங்களை பலியிட்டு அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினர்; தங்கள் இளவயதின் மனைவிகளை விவாகரத்து செய்தனர்.
8 அதனால் யெகோவா அவர்களிடம், “நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் . . . நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று கூறினார். (மல்கியா 3:5, 6) ஆனாலும் தங்களுடைய தவறான வழிகளைவிட்டு மனந்திரும்புகிறவர்களிடம் யெகோவா, “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என்ற அழைப்பை விடுத்தார்.—மல்கியா 3:7.
9. மல்கியாவின் தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு முதல் நிறைவேற்றத்தை அடைந்தன?
9 அந்த வார்த்தைகள் பொ.ச. முதல் நூற்றாண்டிலும் நிறைவேறின. மீந்திருந்த சில யூதர்கள் யெகோவாவை சேவித்து ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய புதிய ‘தேசத்தின்’ பாகமாயினர்; காலப்போக்கில் புறதேசத்தாரும் அந்தத் தேசத்தோடு சேர்க்கப்பட்டனர். ஆனால் இஸ்ரவேலராக பிறந்தவர்களில் பெரும்பாலானோர் இயேசுவைப் புறக்கணித்தனர். ஆகவே, அந்த இஸ்ரவேல் தேசத்தாரிடம், “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என இயேசு கூறினார். (மத்தேயு 23:38; 1 கொரிந்தியர் 16:22) மல்கியா 4:1-ல் முன்னறிவித்திருந்தபடியே “சூளையைப்போல எரிகிற நாள்” பொ.ச. 70-ல் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் மீது வந்தது. அப்போது எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டன; பஞ்சம், பதவி போராட்டம், ரோம சேனைகளின் தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் மாண்டனர் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், யெகோவாவை சேவித்தோர் அந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்தனர்.—மாற்கு 13:14-20.
10. சாதாரண மக்களும் குருமாரும் எந்த விதத்தில் முதல் நூற்றாண்டு இஸ்ரவேலரைப் பின்பற்றுகின்றனர்?
10 மனிதவர்க்கம், முக்கியமாக கிறிஸ்தவமண்டலம், முதல் நூற்றாண்டு இஸ்ரவேல் தேசத்தையே பின்பற்றியுள்ளது. கிறிஸ்தவமண்டலத்தின் தலைவர்களும் சாதாரண மக்களும், கடவுளைப் பற்றி இயேசு போதித்த சத்தியங்களுக்கு பதிலாக தங்களுடைய சொந்த மத கோட்பாடுகளை பின்பற்றவே விரும்புகின்றனர். இதில் குருமார்களே பெரும் குற்றவாளிகள். அவர்கள் யெகோவாவின் பெயரை உபயோகிக்க மறுத்து, தங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அதை முற்றிலுமாக நீக்கிவிட்டிருக்கின்றனர். புறமத போதகங்களான நித்திய நரக வேதனை, திரித்துவம், ஆத்துமா அழியாமை, பரிணாமம் போன்ற வேதப்பூர்வமற்ற போதகங்களால் அவர்கள் யெகோவாவை அவமதிக்கின்றனர். மல்கியாவின் நாளிலிருந்த ஆசாரியர்களைப் போல இவர்களும், நியாயமாய் யெகோவாவுக்கு சேர வேண்டிய புகழைக் கொடுக்காமல் அதைத் திருடுகின்றனர்.
11. இந்த உலக மதங்கள் உண்மையில் யாரை சேவிக்கின்றன என்பது எவ்வாறு தெளிவானது?
11 கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பமானபோது இந்த உலகின் மதங்கள் உண்மையில் யாரை சேவித்தன என்பது தெளிவானது; கிறிஸ்தவ மதங்கள் என சொல்லிக்கொண்டவையே இதில் முன்னணியில் இருந்தன. இரண்டு உலக யுத்தங்களின்போதும், தங்கள் மதத்தவரை கொல்ல வேண்டியிருந்தாலும் தேசிய பிரச்சினைகளுக்காக போருக்குச் செல்லும்படி தங்களை பின்பற்றினோரை தூண்டுவித்தன. யெகோவாவுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கும் அவருக்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கடவுளுடைய வார்த்தை தெளிவாக காட்டுகிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதல்
12, 13. கடவுளுடைய ஊழியர்கள் நம் நாட்களில் என்ன தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியுள்ளனர்?
12 முதல் உலக யுத்தம் முடியும் தறுவாயில், 1918-ல், கிறிஸ்தவமண்டலம் உட்பட பொய் மதங்கள் அனைத்தையுமே கடவுள் கண்டனம் செய்திருந்ததை யெகோவாவின் ஊழியர்களால் உணர முடிந்தது. அப்போது முதல், நேர்மை இருதயமுள்ள அனைவருக்கும் இந்த அழைப்பு கொடுக்கப்பட்டது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.” (வெளிப்படுத்துதல் 18:4, 5) யெகோவாவை சேவிக்க விரும்பியவர்கள் பொய் மதத்தின் தடயங்கள் நீங்க சுத்திகரிக்கப்பட ஆரம்பித்தனர். மேலும், ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தியை உலகம் முழுவதிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தனர்; இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறை அழிவதற்கு முன் இந்த வேலை செய்து முடிக்கப்பட வேண்டும்.—மத்தேயு 24:14.
13 இவ்வாறு மல்கியா 4:5-ல் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அங்கே யெகோவா கூறியதாவது: “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” அந்தத் தீர்க்கதரிசனம் முழுக்காட்டுபவனாகிய யோவான் செய்த வேலையில் முதல் நிறைவேற்றத்தைக் கண்டது, எலியா அவருக்கே முன்நிழலாக இருந்தார். நியாயப்பிரமாணத்திற்கு எதிரான பாவங்களிலிருந்து மனந்திரும்பிய யூதர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுத்தபோது எலியா செய்ததைப் போன்ற வேலையையே யோவான் செய்தார். அதைவிட முக்கியமாக, யோவான் மேசியாவிற்கு முன்னோடியாக இருந்தார். என்றாலும், யோவானின் வேலை மல்கியா தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றமே. யோவானை இரண்டாவது எலியாவாக இயேசு அடையாளம் காட்டியபோதிலும், “எலியா” செய்ததைப் போன்ற வேலை எதிர்காலத்தில் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டினார்.—மத்தேயு 17:11, 12.
14. இந்த ஒழுங்குமுறை அழிவதற்கு முன் என்ன முக்கியமான வேலை நடந்தேற வேண்டும்?
14 எலியாவின் இந்த மிகப் பெரிய வேலை ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு’ (NW) முன்பாக நடைபெறும் என மல்கியா தீர்க்கதரிசனம் காட்டியது. அந்த நாள், வேகமாக நெருங்கி வரும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தில், அர்மகெதோனில் முடிவடையும். அப்படியென்றால், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும், முடிசூட்டப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கீழ் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ஆயிர வருட ஆட்சி ஆரம்பிப்பதற்கும் முன்பாக எலியா செய்ததைப் போன்ற வேலை நடைபெறும். அந்தத் தீர்க்கதரிசனம் கூறியதைப் போலவே, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை யெகோவா அழிப்பதற்கு முன்பு நவீன நாளைய எலியா வகுப்பார், சுத்தமான வணக்கத்தை நிலைநாட்டுவதில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றனர், யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துகின்றனர், செம்மறியாடு போன்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களை போதிக்கின்றனர். இதைச் செய்வதில், பூமியில் வாழும் நம்பிக்கையுடைய லட்சக்கணக்கான உடன் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.
யெகோவா தம் ஊழியர்களை ஆசீர்வதிக்கிறார்
15. யெகோவா தம் ஊழியர்களை எவ்வாறு நினைவில் வைக்கிறார்?
15 தம்மை சேவிப்போரை யெகோவா ஆசீர்வதிக்கிறார். மல்கியா 3:16 கூறுவதாவது: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” ஆபேலுடைய காலத்திலிருந்தே, நித்திய ஜீவன் பெறப்போகிறவர்களின் பெயர்களை கடவுள் ஒரு புத்தகத்தில் எழுதுவதைப் போல தம் நினைவில் எழுதி வருகிறார். அவர்களிடம் யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.”—மல்கியா 3:10.
16, 17. யெகோவா தமது மக்களையும் அவர்களுடைய வேலையையும் எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?
16 யெகோவாவை சேவிப்பவர்களை அவர் உண்மையில் ஆசீர்வதித்திருக்கிறார். எப்படி? அவருடைய நோக்கங்களைப் பற்றி இன்னும் அதிக புரிந்துகொள்ளுதலை அளிப்பது ஒரு வழியாகும். (நீதிமொழிகள் 4:18; தானியேல் 12:10) அவர்கள் செய்யும் பிரசங்க வேலையில் மிகுந்த பலன்களை அள்ளி கொடுப்பது மற்றொரு வழியாகும். பெரும் எண்ணிக்கையான நேர்மை இருதயமுள்ளவர்கள் உண்மை வணக்கத்தில் அவர்களோடு சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள் . . . அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 10) இந்தத் திரள் கூட்டம் மகத்தான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது, யெகோவாவை ஆர்வத்தோடு சேவிப்போர் உலக முழுவதிலும் 93,000-த்திற்கும் அதிகமான சபைகளில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்!
17 மேலும், யெகோவாவின் சாட்சிகள் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை சரித்திரம் கண்டிராத அளவிற்கு விநியோகித்திருப்பதிலும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. இப்போது காவற்கோபுரம் 144 மொழிகளிலும், விழித்தெழு! 87 மொழிகளிலும், ஒவ்வொரு மாதமும் 9 கோடி பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன. 1968-ல் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகம் 117 மொழிகளில், 10.7 கோடிக்கும் அதிகமான பிரதிகள் வெளியிடப்பட்டது. 1982-ல் வெளியிடப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் 131 மொழிகளில், 8.1 கோடிக்கும் அதிக பிரதிகள் அச்சிடப்பட்டது. 1995-ல் வெளிவந்த நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் இதுவரை 154 மொழிகளில், ஏறக்குறைய 8.5 கோடி பிரதிகள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 1996-ல் வெளியான கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு இதுவரை 244 மொழிகளில், ஏறக்குறைய 15 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது.
18. எதிர்ப்பின் மத்தியிலும் நாம் ஏன் ஆவிக்குரிய செழுமையை அனுபவிக்கிறோம்?
18 சாத்தானின் உலகம் மிகக் கடுமையாக, தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறபோதிலும் இந்த ஆவிக்குரிய செழுமையை நாம் அனுபவித்திருக்கிறோம். இது, ஏசாயா 54:17-ஐ உண்மையென நிரூபிக்கிறது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.” மல்கியா 3:17 தங்களிடமே பெரியளவில் நிறைவேறுவதை அறிவது யெகோவாவின் ஊழியர்களுக்கு எவ்வளவாக ஆறுதலளிக்கிறது! அது கூறுவதாவது: “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
சந்தோஷத்தோடு யெகோவாவை சேவித்தல்
19. யெகோவாவை சேவிப்போர் அவரை சேவிக்காதோரிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?
19 யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கும் சாத்தானின் உலகத்தாருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் நாளுக்கு நாள் மிகவும் தெளிவாகி வருகிறது. மல்கியா 3:18 இவ்வாறு முன்னுரைத்தது: “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.” யெகோவாவை சேவிப்போர் மிகுந்த சந்தோஷத்துடன் அதை செய்வதே அநேக வித்தியாசங்களில் ஒன்றாகும். அவர்களுடைய மகத்தான நம்பிக்கையே இதற்கான காரணங்களுள் ஒன்று. “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்” என யெகோவா கூறுகையில் அவர்களுக்கு அவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.—ஏசாயா 65:17, 18; சங்கீதம் 37:10, 11, 29; வெளிப்படுத்துதல் 21:4, 5.
20. நாம் ஏன் சந்தோஷமான ஜனங்களாயிருக்கிறோம்?
20 யெகோவாவின் உண்மையுள்ள ஜனங்கள் அவருடைய மகா நாளை தப்பிப்பிழைத்து, புதிய உலகிற்குள் பிரவேசிப்பர் என்ற யெகோவாவின் வாக்குறுதியை நாம் நம்புகிறோம். (செப்பனியா 2:3; வெளிப்படுத்துதல் 7:13, 14) புதிய உலகம் வருவதற்கு முன்பே சிலர் முதிர்வயதினாலோ, வியாதியினாலோ, விபத்தினாலோ மரிக்க நேரிட்டாலும்கூட நித்திய ஜீவனைப் பெற அவர்களை உயிர்த்தெழுப்புவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (யோவான் 5:28, 29; தீத்து 1:3) ஆகவே, நம் எல்லாருக்கும் அநேக பிரச்சினைகளும் சவால்களும் இருக்கிறபோதிலும் யெகோவாவுடைய நாள் நெருங்கி வருகையில் பூமியிலுள்ள மற்ற எல்லாரிலும் அதிக சந்தோஷமுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு நல்ல காரணங்கள் உள்ளன.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• ‘யெகோவாவின் நாள்’ எது?
• உலக மதங்கள் எவ்வாறு பூர்வ இஸ்ரவேலை பின்பற்றுகின்றன?
• எந்தத் தீர்க்கதரிசனங்களை யெகோவாவின் ஊழியர்கள் நிறைவேற்றுகின்றனர்?
• யெகோவா தம் மக்களை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?
[பக்கம் 21-ன் படம்]
முதல் நூற்றாண்டில் எருசலேம் ‘சூளையைப் போல எரிந்தது’
[பக்கம் 23-ன் படங்கள்]
யெகோவா தம்மை சேவிப்போரின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்
[பக்கம் 24-ன் படங்கள்]
அவர்களுடைய மகத்தான நம்பிக்கை காரணமாக யெகோவாவின் ஊழியர்கள் உண்மையில் சந்தோஷமுள்ளவர்கள்