இன்றும் விறுவிறுப்புடன் செயல்படுகிறார் நம் தலைவர்
“அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுச் சென்றார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.”—வெளி. 6:2.
1, 2. (அ) கிறிஸ்து 1914-ல் அரியணையேறியது முதற்கொண்டு என்ன செய்து வருவதாக பைபிள் சித்தரிக்கிறது? (ஆ) அது முதற்கொண்டு கிறிஸ்து என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்?
கிறிஸ்து, 1914-ல் யெகோவாவுடைய மேசியானிய அரசாங்கத்தின் ராஜாவாக அரியணையேறினார். அவரை இப்போது நம் மனக் கண்ணில் எப்படிக் கற்பனை செய்கிறோம்? அரியணையில் அமர்ந்து, ஆழ்ந்து யோசித்தபடி பூமியிலுள்ள தம்முடைய சபையில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது நோட்டமிடுகிற ஒரு ராஜாவாக கற்பனை செய்கிறோமா? அப்படியானால், நம்முடைய எண்ணத்தை மாற்றுவது அவசியம். சங்கீதங்களும் வெளிப்படுத்துதல் புத்தகமும் அவரைக் குதிரையின்மேல் அமர்ந்து ‘ஜெயிக்கிறவராகவும், . . . ஜெயித்து முடிப்பதற்காகவும் புறப்பட்டுச் செல்கிற’ துடிப்பாற்றல் மிக்க ராஜாவாகச் சித்தரிக்கின்றன.—வெளி. 6:2; சங். 2:6-9; 45:1-4.
2 அரியணையேறிய கிறிஸ்து முதல் கட்ட நடவடிக்கையாக, ‘ராட்சதப் பாம்பின் மீதும் அதனுடைய தூதர்களின் மீதும்’ வெற்றிக் கண்டார். கிறிஸ்து தமது தூதர்களின் மீது அதிகாரம் பெற்ற தலைமைத் தூதரான மிகாவேலாக, சாத்தானையும் அவனது பேய்களையும் பரிசுத்தமான பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளினார். (வெளி. 12:7-9) பிறகு, யெகோவாவுடைய ‘உடன்படிக்கையின் தூதனாக’ ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிட தம் தகப்பனோடு வந்தார். (மல். 3:1) அப்போது, ‘மகா பாபிலோனின்’ வெறுக்கத்தக்க பாகமான கிறிஸ்தவமண்டலத்தை அவர் நியாயந்தீர்த்தார்; ஏனெனில், அதனிடம் கொலை குற்றமும் உலக அரசியலோடு சேர்ந்து ஆன்மீக ரீதியில் கள்ள உறவுகொண்ட குற்றமும் இருந்ததை அவர் கண்டார்.—வெளி. 18:2, 3, 24.
பூமியிலுள்ள தம் அடிமையைச் சுத்திகரிக்கிறார்
3, 4. (அ) யெகோவாவின் ‘தூதனாக’ கிறிஸ்து என்ன வேலையைச் செய்து முடித்தார்? (ஆ) ஆலயத்தைச் சோதனையிட்டபோது எதைக் கண்டார்கள், சபையின் தலைவராக இயேசு என்ன நியமிப்பைச் செய்தார்?
3 யெகோவாவும் அவரது ‘தூதனும்’ அந்த ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிட வந்தபோது, அதன் பூமிக்குரிய முற்றத்தில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் பாகமல்லாத உண்மை கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதி இருப்பதையும் கண்டார்கள். பரலோக நம்பிக்கையுள்ள இந்தக் கிறிஸ்தவர்கள்கூட, அதாவது ‘லேவியின் புத்திரர்’கூட சுத்திகரிக்கப்பட வேண்டியிருந்தது. “அவர் [யெகோவா] உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும் படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்” என்று மல்கியா தீர்க்கதரிசி முன்னுரைத்தபடியே இது நடந்தது. (மல். 3:3) இந்த அடையாளப்பூர்வ இஸ்ரவேலரைச் சுத்திகரிப்பதற்காக, யெகோவா தமது ‘உடன்படிக்கையின் தூதனான’ கிறிஸ்து இயேசுவைப் பயன்படுத்தினார்.
4 இருந்தாலும், இந்தப் பரலோக நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள், விசுவாசக் குடும்பத்தாருக்குச் சரியான சமயத்தில் ஆன்மீக உணவை அளிக்க தங்களால் முடிந்ததையெல்லாம் செய்ததை இயேசு கண்டார். ஆம், 1879 முதற்கொண்டு, சாதகமான சூழ்நிலையிலும் சரி சாதகமற்ற சூழ்நிலையிலும் சரி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பைபிள் சத்தியங்களை இந்தப் பத்திரிகையின்மூலம் பிரசுரித்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்’ தமது வீட்டாரைச் சோதனையிட “வரும்போது” அவர்களுக்கு ஓர் அடிமை ‘ஏற்ற வேளையில் . . . உணவளித்துக்கொண்டிருப்பதைக் காண்பார்’ என இயேசு முன்னறிவித்திருந்தார். அவர் அந்த அடிமையைச் சந்தோஷமானவன் என்று சொல்லி, பூமியிலுள்ள “தன்னுடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்.” (மத். 24:3, 45-47) கிறிஸ்தவச் சபையின் தலைவரான அவர், பூமியில் கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கவனிப்பதற்கு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்தியிருக்கிறார். அவர், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் ‘வீட்டாருக்கும்’ அவர்களது தோழர்களான ‘வேறே ஆடுகளுக்கும்’ ஓர் ஆளும் குழுவின் வாயிலாக வழிநடத்துதலை அளித்திருக்கிறார்.—யோவா. 10:16.
பூமியின் பயிரை அறுவடை செய்தல்
5. மேசியானிய ராஜா என்ன செய்வதை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார்?
5 ‘எஜமானருடைய நாளின்போது’ அதாவது மேசியானிய ராஜா 1914-ல் அரியணையேறிய பின் செய்யவிருந்த வேறொன்றையும் அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் கண்டார். “ஒரு வெள்ளை மேகத்தையும், அதன்மீது மனிதகுமாரனைப் போன்ற ஒருவர் அமர்ந்திருப்பதையும் பார்த்தேன்; அவரது தலையில் தங்கக் கிரீடமும் அவரது கையில் கூர்மையான அரிவாளும் இருந்தன” என்று யோவான் எழுதினார். (வெளி. 1:10; 14:14) யெகோவாவிடமிருந்து வந்த ஒரு தேவதூதர் அறுவடை செய்பவரான இவரிடம் அரிவாளை நீட்டும்படி சொன்னதை யோவான் கேட்டார்; ஏனென்றால், “பூமியின் பயிர் நன்றாக முற்றிவிட்டது.”—வெளி. 14:15, 16.
6. காலப்போக்கில் என்ன நடக்குமென இயேசு சொன்னார்?
6 இந்த ‘பூமியின் பயிரை’ அறுவடை செய்வது கோதுமையையும் களைகளையும் பற்றி இயேசு சொன்ன உவமையை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஒரு நிலத்தில் கோதுமை விதைகளை விதைத்து, நல்ல கோதுமையை நிறைவாகச் சாகுபடி செய்ய வேண்டுமென எதிர்ப்பார்க்கிற ஒரு மனிதனுக்கு இயேசு தம்மை ஒப்பிட்டார்; இந்தக் கோதுமை, ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளை,’ அதாவது அந்த அரசாங்கத்தில் இயேசுவோடு ஆட்சி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைக் கிறிஸ்தவர்களை, குறிக்கிறது. ஆனால் இருள் கவ்வியபோது, எதிரியான “பிசாசு” அந்த நிலத்தின் மீது களைகளை விதைத்தான்; இந்தக் களைகள் ‘பொல்லாதவனின் பிள்ளைகளை’ குறிக்கின்றன. ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டமான’ அறுவடைக் காலம் வரும்வரை கோதுமைப் பயிர்களையும் களைகளையும் சேர்த்தே வளரவிடுங்கள் என விதைத்தவர் தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டார். அந்த அறுவடைக் காலம் வரும்போது, கோதுமையை களைகளிலிருந்து தனியாகப் பிரிப்பதற்கு அவர் தம்முடைய தூதர்களை அனுப்புவார்.—மத். 13:24-30, 36-41.
7. ‘பூமியின் பயிரை’ கிறிஸ்து எவ்வாறு அறுவடை செய்கிறார்?
7 யோவானுக்குக் காட்டப்பட்ட தரிசனத்தின் நிறைவேற்றமாக, இயேசு உலகளாவிய அறுவடை வேலையை நடத்தி வருகிறார். ‘பூமியின் பயிரை’ அறுவடை செய்வது, இயேசுவின் உவமையிலுள்ள ‘கோதுமையை,’ அதாவது ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளான’ 1,44,000 பேரில் மீதிபேரைக் கூட்டிச் சேர்ப்பதோடு ஆரம்பமானது. முதல் உலகப் போருக்குப் பிறகு, உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் பொய்க் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் முன்பைவிட மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது; அந்தளவுக்கு வித்தியாசம் தெரிந்ததால், ‘பூமியின் பயிரின்’ இரண்டாம் கட்டமான அறுவடைக்கு, அதாவது வேறே ஆடுகளைக் கூட்டிச் சேர்ப்பதற்கு அது வழிவகுத்தது. இவர்கள், ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்’ அல்லர், மாறாக அந்த அரசாங்கத்திற்கு மனமுவந்து கீழ்ப்படியும் குடிமக்களான ‘திரள் கூட்டத்தினர்’. இவர்கள் ‘சகல ஜனங்களிலும் ஜாதியாரிலும், பாஷைக்காரரிலுமிருந்து’ அறுவடை செய்யப்படுகிறார்கள். இவர்கள், கிறிஸ்து இயேசுவாலும் ‘பரிசுத்தவான்களான’ 1,44,000 பேராலும் ஆளப்படும் மேசியானிய அரசாங்கத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.—வெளி. 7:9, 10; தானி. 7:13, 14, 18.
சபைகளில் அவரது தலைமைவகிப்பு
8, 9. (அ) முழு சபையின் நடத்தையை மட்டுமல்ல, அதிலுள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறையையும் கிறிஸ்து கூர்ந்து கவனிக்கிறார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) பக்கம் 26-ல் காட்டப்பட்டுள்ளபடி, ‘சாத்தானுடைய ஆழங்களான’ எவற்றை நாம் தவிர்க்க வேண்டும்?
8 முதல் நூற்றாண்டிலிருந்த ஒவ்வொரு சபையின் ஆன்மீக நிலையைக் கிறிஸ்து கூர்ந்து கவனித்தார் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். நம் நாளில், ‘பரலோகத்திலும் பூமியிலும் . . . எல்லா அதிகாரத்தையும்’ பெற்று அரசராக ஆட்சி செய்கிற நம் தலைவரான கிறிஸ்து, பூமியிலுள்ள சபைகள்மீதும் கண்காணிகள்மீதும் தலைமைவகிப்பைச் சுறுசுறுப்புடன் நிறைவேற்றி வருகிறார். (மத். 28:18; கொலோ. 1:18) யெகோவா, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுடைய “சபையின் நன்மைக்கென்று எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.” (எபே. 1:22) ஆகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய 1,00,000-க்கும் மேலான சபைகள் ஒவ்வொன்றிலும் நடக்கிற எதுவும் அவரது பார்வையிலிருந்து தப்பாது.
9 பண்டைய தியத்தீரா சபைக்கு இயேசு பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்: ‘தீ ஜுவாலை போன்ற கண்களைக் கொண்ட, . . . கடவுளுடைய மகன் சொல்வது இதுதான்: “உன் செயல்கள் . . . எனக்குத் தெரியும்.”’ (வெளி. 2:18, 19) அந்தச் சபையினருடைய ஒழுக்கக்கேடான, தன்னிச்சையான வாழ்க்கைமுறையைக் கண்டித்து, அவர் இவ்வாறு சொன்னார்: “உள்ளார்ந்த உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்கிறவர் நானே. . . . உங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்குத் தக்கவாறு பலன் அளிப்பேன்.” (வெளி. 2:23) இந்த வார்த்தைகள், கிறிஸ்து முழு சபையின் நடத்தையை மட்டுமல்ல அதிலுள்ள ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறையையும் கவனிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. “‘சாத்தானுடைய ஆழங்கள்’ . . . என்னவென்று அறியாதிருந்த” தியத்தீரா கிறிஸ்தவர்களை இயேசு பாராட்டினார். (வெளி. 2:24) அவ்வாறே இன்றும், இளைஞரானாலும் சரி முதியோரானாலும் சரி இன்டர்நெட், வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ், அல்லது எதையும் நியாயப்படுத்தும் மனிதரின் போக்குகள் மூலம் ‘சாத்தானுடைய ஆழங்களில்’ மூழ்கிவிடாதவர்களை அவர் பாராட்டுகிறார். இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்ற தங்களாலான எல்லா முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதைப் பார்க்கும்போது அவர் எவ்வளவாய் சந்தோஷப்படுவார்!
10. சபை மூப்பர்களை கிறிஸ்து வழிநடத்துவது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் எதை அறிந்திருக்க வேண்டும்?
10 கிறிஸ்து, பூமியிலுள்ள தம்முடைய சபைகளை நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மூலமாக அன்புடன் கண்காணிக்கிறார். (எபே. 4:8, 11, 12) முதல் நூற்றாண்டிலிருந்த கண்காணிகள் எல்லாருமே கடவுளுடைய சக்தியால் பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இவர்கள், கிறிஸ்துவின் வலது கையில் இருக்கிற நட்சத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளி. 1:16, 20) இன்று, சபைகளிலுள்ள பெரும்பாலான மூப்பர்கள் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜெபத்தோடும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடும் நியமிக்கப்படுகிறார்கள்; ஆகவே இவர்களும்கூட கிறிஸ்துவால் வழிநடத்தப்படுகிறார்கள் அல்லது அவருடைய வழிநடத்தும் கைக்குள் இருக்கிறார்கள் என சொல்லமுடியும். (அப். 20:28) என்றாலும், கிறிஸ்து பூமியிலுள்ள தம்முடைய சீடர்களை முன்நின்று வழிநடத்துவதற்கு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாலான ஒரு சிறிய தொகுதியை ஆளும் குழுவாகப் பயன்படுத்துகிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 15:6, 28-30-ஐ வாசியுங்கள்.
“எஜமானராகிய இயேசுவே, வாரும்”
11. நம் தலைவர் சீக்கிரமாய் வருவதைப் பார்க்க நாம் ஏன் ஆவலாய் இருக்கிறோம்?
11 அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்துதலில், இயேசு தாம் சீக்கிரமாக வருவதைப் பற்றி அநேக முறை சொன்னார். (வெளி. 2:16; 3:11; 22:7, 20) மகா பாபிலோனையும் சாத்தானுடைய பொல்லாத உலகத்தையும் நியாயந்தீர்க்க வருவதைப் பற்றியே அவர் குறிப்பிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (2 தெ. 1:7, 8) முன்னுரைக்கப்பட்ட வியத்தகு சம்பவங்கள் எல்லாம் நிறைவேறுவதைப் பார்க்கும் ஆவலில் வயதான அப்போஸ்தலன் யோவான் உணர்ச்சிபொங்க இவ்வாறு சொன்னார்: “அப்படியே ஆகட்டும்! எஜமானராகிய இயேசுவே, வாரும்.” இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நாமும்கூட நம் தலைவரும் ராஜாவுமான இயேசு கடவுளுடைய அரசாங்கத்தின் ஆட்சியாளராக வந்து தம் தகப்பனின் பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் அவருடைய பேரரசாட்சியே சரியானதென நிரூபிக்கவும் போவதைப் பார்க்க ஆவலோடு இருக்கிறோம்.
12. அழிவின் காற்றுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு முன் கிறிஸ்து என்ன வேலையைச் செய்து முடிப்பார்?
12 இயேசு, சாத்தானின் காணக்கூடிய அமைப்பை அழிக்க வருவதற்கு முன், அடையாளப்பூர்வ இஸ்ரவேலரான 1,44,000 பேரில் மீதியானோர் கடைசி முத்திரையைப் பெறுவார்கள். அவர்கள் முத்திரையிடப்படுவது முடிந்த பிறகே, சாத்தானுடைய உலகத்தின் மீது அழிவின் காற்றுகள் கட்டவிழ்த்துவிடப்படும் என பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது.—வெளி. 7:1-4.
13. ‘மிகுந்த உபத்திரவத்தின்’ முதல் கட்டத்தின்போது கிறிஸ்து தம் பிரசன்னத்தை எவ்வாறு வெளிப்படுத்துவார்?
13 கிறிஸ்து 1914-லிருந்து ராஜாவாக ‘வந்திருப்பதை,’ அதாவது பிரசன்னமாகியிருப்பதை பூமியிலுள்ள பெரும்பாலானோர் காணத் தவறியிருக்கிறார்கள். (2 பே. 3:3, 4) என்றாலும், சீக்கிரத்தில் சாத்தானுடைய உலகத்தின் பாகமான அனைத்தின் மீதும் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர் தம்முடைய பிரசன்னத்தை எல்லாரும் காணும்படிச் செய்வார். கிறிஸ்தவமண்டலத்தின் குருமாரான ‘அக்கிரமக்காரனின்’ அழிவுதானே, தெள்ளத்தெளிவாக ‘அவருடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தும்.’ (2 தெசலோனிக்கேயர் 2:3, 8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் நியமிக்கப்பட்ட நீதிபதியாக கிறிஸ்து செயலில் இறங்கியிருக்கிறார் என்பதற்கு இது ஆணித்தரமான அத்தாட்சி அளிக்கும். (2 தீமோத்தேயு 4:1-ஐ வாசியுங்கள்.) மகா பாபிலோனின் வெறுக்கத்தக்க பாகமான கிறிஸ்தவமண்டலம் துடைத்தழிக்கப்பட்ட பிறகே இந்தப் பொல்லாத பொய் மத உலகப் பேரரசிற்கு ஒட்டுமொத்த அழிவு வரும். யெகோவா, இந்த விலைமகளை அழிப்பதற்கான எண்ணத்தை அரசியல் தலைவர்களின் இருதயத்தில் வைப்பார். (வெளி. 17:15-18) அதுதான் ‘மிகுந்த உபத்திரவத்தின்’ முதல் கட்டம்.—மத். 24:21.
14. (அ) மிகுந்த உபத்திரவத்தின் முதற்கட்ட நாட்கள் குறைக்கப்படுவது ஏன்? (ஆ) “மனிதகுமாரனின் அடையாளம்” யெகோவாவின் மக்களுக்கு எதை அர்த்தப்படுத்தும்?
14 ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முன்னிட்டு,’ அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் பூமியில் மீந்திருப்போரை முன்னிட்டு, அந்த உபத்திரவத்தின் நாட்கள் குறைக்கப்படும் என்று இயேசு குறிப்பிட்டார். (மத். 24:22) அரசியல் தலைவர்கள் பொய் மதத்தை அழிக்கையில், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளையும் துடைத்தழிக்க யெகோவா அனுமதிக்க மாட்டார். “அந்நாட்களின் உபத்திரவத்திற்குப் பின்பு,” சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; “பின்பு, மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும்” என்றும் இயேசு சொன்னார். இதைக் கண்டு பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தாரும் “மாரடித்துப் புலம்புவார்கள்.” ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள அவர்களுடைய தோழர்களும் அவ்வாறு புலம்ப மாட்டார்கள். அவர்கள் ‘நேராக நிமிர்ந்து நின்று, தங்கள் தலைகளை உயர்த்துவார்கள்; ஏனென்றால், அவர்களுடைய விடுதலை நெருங்கிவருகிறது’—மத். 24:29, 30; லூக். 21:25-28.
15. கிறிஸ்து வரும்போது என்ன வேலையைச் செய்வார்?
15 மனிதகுமாரன் ஜெயித்து முடிப்பதற்கு முன் இன்னுமொரு விதத்திலும் வருகிறார். அவர் இதைத் தீர்க்கதரிசனமாக இவ்வாறு சொன்னார்: “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார். செம்மறியாடுகளைத் தம் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தம் இடது பக்கத்தில் நிறுத்துவார்.” (மத். 25:31-33) இது, ‘எல்லாத் தேசத்தாரையும்’ இரண்டு தொகுதிகளாகப் பிரிப்பதற்கு, அதாவது ‘செம்மறியாடுகளாகவும்’ ‘வெள்ளாடுகளாகவும்’ பிரிப்பதற்கு, கிறிஸ்து நீதிபதியாக வருவதைக் குறிக்கிறது; ‘செம்மறியாடுகள்’ அவருடைய ஆன்மீக சகோதரர்களுக்கு (பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் பூமியில் மீந்திருக்கிற கிறிஸ்தவர்களுக்கு) சுறுசுறுப்புடன் ஆதரவளிப்பவர்கள்; ‘வெள்ளாடுகள்’ ‘எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள்.’ (2 தெ. 1:7, 8) ‘நீதிமான்களாக’ விவரிக்கப்படுகிற செம்மறியாடுகள் “நிரந்தர வாழ்வை” பெறுவார்கள்; ஆனால், வெள்ளாடுகள் “நிரந்தர அழிவைப் பெறுவார்கள்.”—மத். 25:34, 40, 41, 45, 46.
இயேசு ஜெயித்து முடிக்கிறார்
16. நம் தலைவரான கிறிஸ்து எவ்வாறு ஜெயித்து முடிப்பார்?
16 கிறிஸ்து தம்முடன் ராஜாக்களாகவும் குருக்களாகவும் இருக்கப்போகிற எல்லாரையும் முத்திரையிட்டு, செம்மறியாடுகளை அடையாளம் கண்டுகொண்டு மீட்புக்காக அவர்களை வலது பக்கத்தில் நிறுத்திய பிறகு, “ஜெயித்து முடிப்பதற்காக” புறப்பட்டுச் செல்வார். (வெளி. 5:9, 10; 6:2) வலிமைவாய்ந்த தேவதூதர்களின் சேனைக்குத் தலைவராக இயேசு தமது உயிர்த்தெழுப்பப்பட்ட சகோதரர்களையும் தம்மோடு சேர்த்துக்கொண்டு பூமியிலுள்ள சாத்தானுடைய அரசியல், இராணுவ, வர்த்தக அமைப்புகள் எல்லாவற்றையும் அழித்துவிடுவார். (வெளி. 2:26, 27; 19:11-21) சாத்தானுடைய பொல்லாத உலகம் அழியும்போது கிறிஸ்துவின் வெற்றி முற்றுப்பெறும். பிறகு, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் ஆயிரம் வருடங்களுக்கு அதலபாதாளத்திற்குள் அடைத்து வைப்பார்.—வெளி. 20:1-3.
17. ஆயிர வருட ஆட்சியின்போது வேறே ஆடுகளைக் கிறிஸ்து எதற்கு வழிநடத்துவார், நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
17 மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கப்போகிற வேறே ஆடுகளாகிய ‘திரள் கூட்டத்தினரை’ பற்றிப் பேசுகையில், “சிம்மாசனத்தின் பக்கத்தில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, வாழ்வளிக்கும் நீரூற்றுகளிடம் வழிநடத்திச் செல்வார்” என அப்போஸ்தலன் யோவான் முன்னறிவித்தார். (வெளி. 7:9, 17) ஆம், தம் குரலுக்கு உண்மையிலேயே செவிகொடுக்கிற வேறே ஆடுகளை ஆயிர வருட ஆட்சி முழுவதிலும் கிறிஸ்து தொடர்ந்து வழிநடத்துவார்; அவர்களை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துவார். (யோவான் 10:16, 26-28-ஐ வாசியுங்கள்.) நம் ராஜாவும் தலைவருமாய் இருப்பவரை உண்மையோடு பின்பற்றுவோமாக! ஆம், இப்போதும் யெகோவா வாக்களித்திருக்கிற புதிய உலகத்திலும் பின்பற்றுவோமாக!
மறுபார்வைக்கு
• கிறிஸ்து அரியணையேறிய பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்?
• சபைகளை வழிநடத்த பூமியில் கிறிஸ்து யாரைப் பயன்படுத்துகிறார்?
• இன்னும் எவ்விதங்களில் நம் தலைவரான கிறிஸ்து வருவார்?
• புதிய உலகம் வரையாக கிறிஸ்து எவ்வாறு நம்மை வழிநடத்துவார்?
[பக்கம் 29-ன் படம்]
சாத்தானுடைய பொல்லாத உலகத்தின் அழிவு கிறிஸ்துவின் பிரசன்னத்தை வெளிப்படுத்தும்