“விழிப்புள்ளவர்களாய் இருங்கள்”
“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் . . . ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் [“விழிப்புள்ளவர்களாய் இருங்கள்,” NW].”—1 பே. 4:7.
1. இயேசு எதை மையப்பொருளாக வைத்து மக்களுக்குக் கற்பித்தார்?
இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, கடவுளுடைய ராஜ்யத்தை மையப்பொருளாக வைத்தே மக்களுக்குக் கற்பித்தார். யெகோவா தம்முடைய சர்வலோக பேரரசாட்சியே சரியானது என்பதை இந்த ராஜ்யத்தின் மூலமாக நிரூபித்து தம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார். ஆகவே, கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்கும்படி தம் சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத். 4:17; 6:9, 10) இந்த ராஜ்யம் சீக்கிரத்தில் சாத்தானுடைய உலகத்திற்கு முடிவுகட்டப் போகிறது; அதன் பிறகு பூமி முழுவதும் கடவுளுடைய சித்தம் செய்யப்படும்படி பார்த்துக்கொள்ளும். தானியேல் முன்னறிவித்த விதமாக, கடவுளுடைய ராஜ்யம் இன்றுள்ள “ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானி. 2:44.
2. (அ) இயேசு ஆட்சிசெய்வதை அவருடைய சீஷர்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்? (ஆ) அந்த அடையாளம் வேறு எதையும் சுட்டிக்காட்டும்?
2 கடவுளுடைய ராஜ்யம் வருவது இயேசுவின் சீஷர்களுக்கு மிக முக்கியமானதாய் இருந்ததால், “உம்முடைய வருகைக்கும் [“பிரசன்னத்திற்கும்,” NW], உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று அவரிடம் கேட்டார்கள். (மத். 24:3) கிறிஸ்துவின் பிரசன்னத்தை, அதாவது அவர் ராஜாவாக ஆட்சி செய்வதை, பூமியிலுள்ளவர்கள் பார்க்க முடியாது என்பதால், காணக்கூடிய அடையாளம் கொடுக்கப்படும். பைபிள் முன்னறிவிக்கும் பல்வேறு அம்சங்கள் அந்த அடையாளத்தில் உட்பட்டிருக்கும். ஆகவே, இயேசு பரலோகத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டதை அந்தச் சமயத்தில் உயிரோடிருக்கிற சீஷர்கள் புரிந்துகொள்வார்கள். இன்றைய பொல்லாத உலகத்தின் ‘கடைசி நாட்கள்’ என பைபிள் அழைக்கிற காலப்பகுதியின் ஆரம்பமாகவும் அது இருக்கும்.—2 தீ. 3:1-5, 13; மத். 24:7-14.
கடைசி நாட்களில் விழிப்புள்ளவர்களாய் இருங்கள்
3. கிறிஸ்தவர்கள் ஏன் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
3 “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் [“விழிப்புள்ளவர்களாய் இருங்கள்,” NW]” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 4:7) இயேசுவின் சீஷர்கள் விழிப்புடன் இருந்து, அவர் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டதைச் சுட்டிக்காட்டும் உலக சம்பவங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதோடு, இந்தப் பொல்லாத உலகின் முடிவு நெருங்க நெருங்க அவர்கள் இன்னும் அதிகமாய் விழிப்புடன் இருக்க வேண்டும். ‘விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் [சாத்தானுடைய உலகத்தை நியாயந்தீர்க்க] எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்’ என இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார்.—மாற். 13:35, 36.
4. சாத்தானுடைய உலகத்தைச் சேர்ந்தவர்களுடைய மனப்பான்மைக்கும் யெகோவாவின் ஊழியர்களுடைய மனப்பான்மைக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? (பெட்டியிலுள்ள குறிப்புகளையும் சொல்லுங்கள்.)
4 உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறார்கள்; அவர்கள் விழிப்புடன் இல்லாததால் உலக சம்பவங்களின் அர்த்தத்தை உணர்ந்துகொள்வதில்லை. கிறிஸ்து ஆட்சிசெய்வதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால், கிறிஸ்துவின் உண்மை சீஷர்கள் விழிப்புள்ளவர்களாய் இருந்து, கடந்த நூற்றாண்டில் நடந்த சம்பவங்களின் நிஜ அர்த்தத்தைப் புரிந்திருக்கிறார்கள். முதல் உலகப் போரும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் 1914-ல் கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டதற்குப் பலமான அத்தாட்சிகள் என்பதை 1925 முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். 1914-ல்தான் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்கள் ஆரம்பமாயின. உலக சம்பவங்களைக் கவனிக்கிற அநேகருக்கு அவற்றின் அர்த்தம் பிடிபடாவிட்டாலும், முதல் உலகப் போருக்கு முன்னிருந்த காலப்பகுதிக்கும் அதற்குப் பின்வந்த காலப்பகுதிக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை நன்றாக அறிந்திருக்கிறார்கள்.—“கொந்தளிப்பான காலம் ஆரம்பமானது” என்ற பெட்டியைப் பாருங்கள்.
5. நாம் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாய் இருப்பது ஏன் முக்கியம்?
5 கிட்டத்தட்ட நூறு வருடங்களாக, அதிரவைக்கும் சம்பவங்கள் உலகெங்கும் நடந்து வருவது, நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. வலிமை வாய்ந்த தேவதூதரின் சேனையைக்கொண்டு சாத்தானுடைய உலகத்தை அழிக்க கிறிஸ்துவுக்கு யெகோவா உத்தரவு கொடுப்பதற்கான காலம் மிக அருகில் வந்துவிட்டது. (வெளி. 19:11-21) விழிப்புடன் இருக்கும்படி உண்மைக் கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த உலகின் முடிவை எதிர்பார்த்திருக்கிற நாம், தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம். (மத். 24:42) நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாய் இருந்து, கிறிஸ்துவின் தலைமையில் பூமியெங்கும் ஒரு முக்கியமான வேலையைச் செய்ய வேண்டும்.
உலகெங்கும் நடக்கும் வேலை
6, 7. கடைசி நாட்களில் நற்செய்தியை அறிவிக்கும் வேலை எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது?
6 யெகோவாவின் ஊழியர்கள் செய்ய வேண்டிய இவ்வேலை, இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டும் கூட்டு அடையாளத்தின் ஓர் அம்சமாக முன்னறிவிக்கப்பட்டது. முடிவு காலத்தில் நடக்கவிருக்கும் பற்பல சம்பவங்களை இயேசு குறிப்பிட்டபோது, உலகெங்கும் நடைபெறுகிற இந்த வேலையைப் பற்றியும் விவரித்தார். கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் முக்கியமான இந்தத் தீர்க்கதரிசனத்தையும் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத். 24:14.
7 இயேசு சொன்ன இந்தத் தீர்க்கதரிசனத்தோடு தொடர்புடைய சில உண்மைகளைச் சிந்தித்துப் பாருங்கள். 1914-ல் கடைசி நாட்கள் ஆரம்பமானபோது கொஞ்சம் பேரே நற்செய்தியை அறிவித்தார்கள். இப்போதோ ஏராளமானோர் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். 70,00,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் பிரசங்கித்து வருகிறார்கள்; இவர்கள் 1,00,000-க்கும் மேற்பட்ட சபைகளில் கூடிவருகிறார்கள். 2008-ல் கிறிஸ்துவின் நினைவுநாள் ஆசரிப்புக்கு யெகோவாவின் சாட்சிகளோடுகூட இன்னும் 1,00,00,000 பேர் கூடிவந்திருந்தார்கள். கடந்த வருடத்தைவிட ஏராளமானோர் வந்திருந்தார்கள்.
8. எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்க வேலை வெற்றி கண்டிருப்பது ஏன்?
8 இந்த உலகின் முடிவுக்கு முன்பாக எல்லாத் தேசத்தாருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கும் வேலை எந்தளவுக்கு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது! சாத்தான் ‘இப்பிரபஞ்சத்தின் தேவனாக’ இருக்கிறபோதிலும் அது அவ்வாறு நடைபெற்று வருகிறது. (2 கொ. 4:4) இந்த உலகின் அரசியல், மத, வணிக அமைப்புகள் அனைத்தும் அவற்றின் பிரச்சாரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படியென்றால், பிரசங்க வேலையின் வியக்கத்தக்க வெற்றிக்குக் காரணம் என்ன? யெகோவாவின் ஆதரவு இருப்பதே. ஆகவே, சாத்தான் எத்தனை தடைகளைக் கொண்டுவந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி அற்புதமாய் இந்தப் பிரசங்க வேலை நடைபெறுகிறது.
9. நம்முடைய ஆன்மீக செழுமையை ஏன் ஓர் அற்புதம் என்று சொல்லலாம்?
9 பிரசங்க வேலை வெற்றி கண்டிருப்பதையும் யெகோவாவின் மக்கள் எண்ணிக்கையிலும் ஆன்மீக அறிவிலும் பெருகி வருவதையும் ஓர் அற்புதம் என்றே சொல்லலாம். கடவுளுடைய ஆதரவு இல்லாமல், அதாவது அவருடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் இல்லாமல், இந்தப் பிரசங்க வேலை நடைபெற வாய்ப்பே இல்லை. (மத்தேயு 19:26-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்குச் சேவைசெய்ய விரும்புகிற விழிப்புள்ள மக்களின் இருதயத்தில் அவருடைய சக்தி செயல்படுவதால், இந்தப் பிரசங்க வேலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்; அதன் பிறகு, “முடிவு வரும்.” அந்தக் காலம் அதிவேகமாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
“மிகுந்த உபத்திரவம்”
10. வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தை இயேசு எப்படி விவரித்தார்?
10 இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு “மிகுந்த உபத்திரவம்” என அழைக்கப்படுகிற காலப்பகுதியில் வரும். (வெளி. 7:14) அந்த உபத்திரவம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று பைபிள் சொல்வதில்லை; ஆனால், “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:21) இந்த உலகம் இதுவரை அனுபவித்திருக்கிற உபத்திரவத்தை வைத்துப் பார்க்கையில், உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் ஐந்து முதல் ஆறு கோடி பேர் பலியானதை வைத்துப் பார்க்கையில், வரவிருக்கும் மிகுந்த உபத்திரவம் மிகப் பயங்கரமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் உச்சக்கட்டமாக அர்மகெதோன் யுத்தம் நடக்கும். அச்சமயத்தில், சாத்தானுடைய உலகத்தைச் சுவடுதெரியாதபடி அழித்துப் போடுவதற்கு யெகோவா தம்முடைய சேனைகளைப் பயன்படுத்துவார்.—வெளி. 16:14, 16.
11, 12. எந்தச் சம்பவம் மிகுந்த உபத்திரவத்தின் துவக்கமாயிருக்கும்?
11 மிகுந்த உபத்திரவத்தின் முதல்கட்டம் எந்தத் தேதியில் துவங்கும் என்பதை பைபிள் தீர்க்கதரிசனம் தெரிவிப்பதில்லை; ஆனால், குறிப்பிடத்தக்க எந்தச் சம்பவம் அதன் துவக்கமாக இருக்கும் என்பதை அது தெரிவிக்கிறது. அரசியல் அமைப்புகள் எல்லாப் பொய் மதங்களையும் அழித்துப்போடும் சம்பவமே அது. வெளிப்படுத்துதல் 17, 18 அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில், பொய் மதம் பூமியிலுள்ள அரசியல் அமைப்புகளோடு தகாத உறவுகொள்ளும் ஒரு வேசிக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த அரசியல் அமைப்புகள் ‘அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடும்’ காலம் நெருங்கிவிட்டதை வெளிப்படுத்துதல் 17:16 காட்டுகிறது.
12 அந்தச் சமயம் வரும்போது, கடவுள் எல்லாப் பொய் மதங்களையும் அழிப்பதற்கான ‘தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கு . . . அவர்களுடைய [அரசியல் ஆட்சியாளர்களுடைய] இருதயங்களை ஏவுவார்.’ (வெளி. 17:17) ஆகவே, இந்த அழிவு கடவுளால் கொண்டுவரப்படுகிறது என்று சொல்ல முடியும். நீண்ட காலமாக, கடவுளுடைய சித்தத்திற்கு முரணான கோட்பாடுகளைக் கற்பித்ததோடு அவருடைய ஊழியர்களைத் துன்புறுத்திய போலி மதங்களுக்குக் கடவுள் கொடுக்கிற நியாயத்தீர்ப்பே அது. உலகிலுள்ள பெரும்பாலோர் பொய் மதங்களுக்கு வரவிருக்கும் இந்த அழிவை எதிர்பார்ப்பது இல்லை. ஆனால், யெகோவாவின் உண்மை ஊழியர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். அதோடு, இந்தக் கடைசிக் காலம் முழுவதிலும் அதைக் குறித்து மக்களிடம் சொல்லி வந்திருக்கிறார்கள்.
13. பொய் மதத்தின் அழிவு சட்டென நடக்கும் என்பதை எது காட்டுகிறது?
13 பொய் மதம் அழிக்கப்படுவதைப் பார்க்கும் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைவார்கள். பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறபடி, ‘பூமியின் ராஜாக்கள்’ சிலரும்கூட இந்த அழிவைக் குறித்துப் புலம்பி, “ஐயையோ! . . . ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே!” என்பார்கள். (வெளி. 18:9, 10, 16, 19) “ஒரே நாழிகை” என சொல்லப்பட்டிருப்பது, இச்சம்பவம் சட்டென நடக்கும் என்பதைக் காட்டுகிறது.
14. யெகோவாவின் எதிரிகள் கடைசியாக அவருடைய ஊழியர்களைத் தாக்க ஆரம்பிக்கையில் அவர் எப்படி நடவடிக்கை எடுப்பார்?
14 பொய் மதம் அழிக்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகு, யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவித்து வந்திருக்கும் அவருடைய ஊழியர்கள் தாக்கப்படுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (எசே. 38:14-16) யெகோவா தம்முடைய உண்மையுள்ள மக்களைப் பாதுகாப்பதாக வாக்குக் கொடுக்கிறார்; ஆனால் எதிரிகள் அவரது மக்களைத் தாக்க ஆரம்பிக்கையில், அவருடைய கோபத்தை அவர்கள் எதிர்ப்பட வேண்டியிருக்கும். “என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். . . . அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” என யெகோவா அறிவிக்கிறார். (எசேக்கியேல் 38:18-23-ஐ வாசியுங்கள்.) ‘உங்களைத் [உண்மை ஊழியர்களைத்] தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என கடவுள் தம்முடைய வார்த்தையில் குறிப்பிடுகிறார். (சக. 2:8) ஆகவே, அவருடைய எதிரிகள் உலகெங்குமுள்ள அவரது ஊழியர்களைத் தாக்க ஆரம்பிக்கையில் அவர் செயல்படுவார். மிகுந்த உபத்திரவத்தின் கடைசிக் கட்டமான அர்மகெதோன் யுத்தத்திற்கு அது வழிவகுக்கும். கிறிஸ்துவின் கட்டளைப்படி, வலிமை வாய்ந்த தேவதூதரின் சேனைகள் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றி சாத்தானுடைய உலகை அழிக்கும்.
நாம் செய்ய வேண்டியது
15. இந்த உலகின் முடிவு நெருங்கிவிட்டதை நாம் அறிந்திருப்பதால் என்ன செய்ய வேண்டும்?
15 இந்தப் பொல்லாத உலகின் முடிவு அதிவேகமாய் நெருங்கிவருவதை நாம் அறிந்திருப்பதால் என்ன செய்ய வேண்டும்? “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பே. 3:11) நாம் கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் நடப்பதற்கும் அவர்மீதுள்ள அன்பை வெளிக்காட்டும் விதத்தில் தேவபக்திக்குரிய காரியங்களைச் செய்வதற்கும் மிகுந்த கவனமாக இருப்பது அவசியமென இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. முடிவு வருவதற்கு முன்பாக, ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மாலான அனைத்தையும் செய்வது தேவபக்திக்குரிய காரியங்களில் அடங்கும். “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால், . . . ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் [“விழிப்புள்ளவர்களாய் இருங்கள்,” NW]” என்றும் பேதுரு எழுதினார். (1 பே. 4:7) இடைவிடாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்து, அவருடைய சக்தியினாலும் உலகளாவிய அமைப்பினாலும் நம்மை வழிநடத்தும்படி கேட்பதன் மூலம் நாம் அவரிடம் நெருங்கிச் செல்கிறோம், அவர் மீதுள்ள அன்பையும் வெளிக்காட்டுகிறோம்.
16. கடவுளுடைய ஆலோசனையை நாம் ஏன் கவனமாகப் பின்பற்ற வேண்டும்?
16 ஆபத்தான இந்தக் காலத்தில் கடவுளுடைய வார்த்தையிலுள்ள இந்த ஆலோசனையை நாம் கவனமாகப் பின்பற்றுவது அவசியம்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபே. 5:15, 16) இன்று அக்கிரமம் முன்னொருபோதும் இல்லாதளவுக்குப் பெருகியிருக்கிறது. யெகோவாவின் சித்தத்தைச் செய்யாதபடி மக்களைத் தடுப்பதற்கோ அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்கோ சாத்தான் அநேக சூழ்ச்சிமுறைகளைக் கையாண்டிருக்கிறான். கடவுளுடைய ஊழியர்களான நாம் இதை அறிந்திருப்பதால், அவர்மீதுள்ள பற்றுதலைக் குலைத்துப்போட எதையும் அனுமதிக்க விரும்புவதில்லை. வெகு விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் நாம் அறிந்திருப்பதால், யெகோவாமீதும் அவருடைய நோக்கங்கள்மீதும் முழு நம்பிக்கை வைக்கிறோம்.—1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.
17. மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படும்போது, அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்தவர்களுக்கு எப்படி இருக்கும்?
17 மரித்தோர் மீண்டும் உயிரடைவதைக் குறித்து கடவுள் கொடுத்துள்ள அற்புதமான வாக்குறுதி விரைவில் நிறைவேறப் போகிறது; ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு’ என சொல்லப்பட்டிருக்கிறது. (அப். 24:15) ‘மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு’! என ஆணித்தரமாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அது நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை, யெகோவா அல்லவா அந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்! “மரித்த உம்முடையவர்கள் . . . எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; . . . மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்” என்று ஏசாயா 26:19 உறுதி அளிக்கிறது. இந்த வார்த்தைகள் முதலில், கடவுளுடைய பூர்வகால மக்கள் தாயகம் திரும்பியபோது அடையாள அர்த்தத்தில் நிறைவேறியது; வரவிருக்கும் புதிய உலகில் இந்த வாக்குறுதி நிஜமாகவே நிறைவேறும் என்ற நம்பிக்கையை இது நமக்கு அளிக்கிறது. உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் மீண்டும் தங்களுடைய அன்பானவர்களோடு ஒன்றுசேருவது எவ்வளவு பரவசமூட்டுவதாய் இருக்கும்! ஆம், சாத்தானுடைய உலகம் சீக்கிரத்தில் அழியப்போகிறது, கடவுளுடைய உலகம் விரைவில் பிறக்கப்போகிறது. ஆகவே, நாம் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாய் இருப்பது எவ்வளவு முக்கியம்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு எதை மையப்பொருளாக வைத்து மக்களுக்குக் கற்பித்தார்?
• பிரசங்க வேலை இப்போது எந்தளவுக்கு விரிவாக நடைபெறுகிறது?
• விழிப்புள்ளவர்களாய் இருப்பது ஏன் முக்கியம்?
• அப்போஸ்தலர் 24:15-ல் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி உங்களுக்கு எப்படிச் சந்தோஷமளிக்கிறது?
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
கொந்தளிப்பான காலம் ஆரம்பமானது
கொந்தளிப்பான காலம்: புதிய உலகில் சாதனைகள். இது, 2007-ல் ஆலன் கிரீன்ஸ்பான் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பு. அவர் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, அமெரிக்காவின் மத்திய வங்கியியல் அமைப்பைக் கண்காணிக்கிற ஃபெடரல் ரிசர்வ் போர்ட்டின் தலைவராக இருந்தார். உலக நிலைமை 1914-ஆம் ஆண்டிற்குப் பின்பு எப்படித் தலைகீழாக மாறியது என்பதை அவர் இவ்வாறு விளக்குகிறார்:
“அனைத்து அறிக்கைகளையும் வைத்துப் பார்க்கையில், 1914-க்கு முன்பு மக்களுடைய பண்பாடும் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்றத்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருந்தன; மனித சமுதாயம் பரிபூரணத்தை எட்டிவிட்டதுபோல் தோன்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, பரிதாபத்திற்குரிய அடிமை வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மனிதநேயத்தை மழுங்கடித்துவிடும் வன்முறைகள் படிப்படியாகக் குறைந்தன. . . . பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க, உலகெங்கிலும் அடுத்தடுத்து எத்தனை எத்தனையோ காரியங்களை மனிதன் கண்டுபிடித்தான்; ரயில்பாதைகள், தொலைபேசி, மின்விளக்கு, திரைப்படம், மோட்டார் வண்டி, வீட்டு சாதனங்கள் என எத்தனையோ கண்டுபிடித்தான். மருத்துவ முன்னேற்றம், சத்துணவு, குடிநீர் வசதி ஆகியவை மனிதனின் ஆயுளைக் கூட்டின. . . . உலகம் இந்த முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வெற்றிநடை போடும் என்று எல்லாரும் நினைத்தார்கள்.”
ஆனால் . . . “இரண்டாம் உலகப் போர் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் அதிகளவில் ஏற்படுத்தியபோதிலும், மக்களுடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை முதல் உலகப் போரே இன்னும் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தியது; ஆம், முதல் உலகப் போர் ஒரு கருத்தைத் தகர்த்தது. மனிதன் எந்தவித தடையோ எல்லையோ இல்லாத வெற்றிப் பாதையில் தொடர்ந்து செல்வான் என்ற அந்தக் கருத்து முதல் உலகப் போருக்குமுன் நிலவியிருந்ததை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிலவிய அந்தக் கருத்துக்கும் இன்று நம்மிடையே நிலவுகிற கருத்துக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது; ஆனால், நம்முடைய கருத்தே நிஜத்தோடு அதிகமாக ஒத்துப்போகிறது. முதல் உலகப் போர் அதற்கு முன்னிருந்த சகாப்தத்தைப் பாதித்ததுபோல் பயங்கரவாதம், பூமி வெப்பமடைதல், ஜனநாயகத்தை ஆதரிக்கும் கட்சிகள் அதிகரித்துவருதல் ஆகியவை, உலகமயமாகியிருக்கும் இன்றைய சகாப்தத்தைப் பாதிக்குமா? இதற்கான பதிலை யாராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.”
கல்லூரியில் படித்த காலத்தில் கிரீன்ஸ்பான் தனது பொருளியல் பேராசிரியரான பென்ஜமின் எம். ஆன்டர்சன் (1886-1949) சொன்ன ஒரு விஷயத்தை இவ்வாறு கூறினார்: “முதல் உலகப் போருக்குமுன் உலகம் எப்படியிருந்தது என்பதை ஞாபகத்தில் வைக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்த வயதிலிருந்தவர்கள் இப்போது அக்காலத்தை ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கிறார்கள். அப்போதிருந்த பாதுகாப்பு உணர்வு அதற்குப் பின் எப்போதும் இருந்ததில்லை.”—பொருளியல் மற்றும் பொது நலன் (ஆங்கிலம்).
2006-ல் வெளியிடப்பட்ட ஜி. ஜே. மேயர் எழுதிய இல்லாமற்போன உலகம் என்ற ஆங்கில புத்தகமும் இதே முடிவுக்கு வருகிறது. அது குறிப்பிடுவதாவது: “சரித்திர சம்பவங்கள், ‘எல்லாவற்றையும் மாற்றிவிட்டன’ என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. மகா யுத்தத்தைப் பொறுத்தவரை [1914-1918] இது முதன்முறையாக உண்மையாகியிருக்கிறது. அந்தப் போர் நிஜமாகவே எல்லாவற்றையும் மாற்றிவிட்டது: எல்லைகளையும், அரசாங்கங்களையும், தேசங்களின் தலையெழுத்தையும் மட்டுமல்ல, மக்கள் இந்த உலகத்தையும் தங்களையும் பார்க்கிற விதத்தையும் அடியோடு மாற்றிவிட்டது. கால ஓட்டத்தில் ஏற்பட்ட ஓர் இடைவெளியாக அது ஆனது; போருக்கு முன்பிருந்த பாதுகாப்பான உலகத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகத்தை உருவாக்கிவிட்டது.”
[பக்கம் 18-ன் படம்]
அர்மகெதோன் யுத்தத்தில் வலிமை வாய்ந்த தேவதூதரின் சேனைகளை யெகோவா பயன்படுத்துவார்