மிகுந்த உபத்திரவத்தினூடே உயிரோடு பாதுகாக்கப்படுதல்
“இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” —வெளிப்படுத்துதல் 7:14.
1. பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுந்து வருகிறவர்களை யார் வரவேற்பர்?
எண்ணிக்கைச் சொல்லப்படாத லட்சக்கணக்கானோர் ‘நீதிமான்கள் மற்றும் அநீதிமான்களின் உயிர்த்தெழுதலில்’ எழுப்பப்படுகையில், அவர்கள் காலியான ஒரு பூமிக்குள் மறுபடியும் உயிரடைய செய்யப்படுவதில்லை. (அப்போஸ்தலர் 24:15) மிகவும் அழகாக மேம்படுத்தப்பட்ட சூழ்நிலைமைகளில் அவர்கள் விழித்தெழுந்து, தங்களுக்காக வசிப்பதற்கு இடம், உடை, ஏராளமான உணவு போன்றவை தயாரித்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் காண்பர். இந்த எல்லா தயாரிப்புகளையும் யார் செய்வர்? பூமிக்குரிய உயிர்த்தெழுதல் ஆரம்பிப்பதற்கு முன், புதிய உலகில் மக்கள் வசித்துக்கொண்டிருப்பர் என்பது தெளிவாகத் தெரிகிறது. யார் அவர்கள்? வரப்போகிற மகா உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்பதாக பைபிள் சுட்டிக்காண்பிக்கிறது. பைபிள் போதனைகள் அனைத்திலும், இதுவே அதிக ஆவலைத் தூண்டும் ஒன்றாக இருக்கிறது—உண்மையுள்ள சிலர் மிகுந்த உபத்திரவத்தினூடே உயிரோடு பாதுகாக்கப்படுவர், அவர்கள் ஒருபோதும் மரிக்க வேண்டியிராது. இந்த நம்பிக்கை பரிசுத்த வேதாகமத்தில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
நோவாவின் நாட்களைப் போல
2, 3. (அ) நோவாவின் நாட்களுக்கும் நம்முடைய காலத்துக்குமிடையே என்ன ஒப்புவமைகள் காணப்படுகின்றன? (ஆ) ஜலப்பிரளயத்தினூடாக நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாரின் தப்பிப்பிழைத்தலின் மூலமாக குறிப்பிட்டுக் காண்பிக்கப்படுவது என்ன?
2 மத்தேயு 24:37-39-ல், இயேசு கிறிஸ்து நோவாவின் நாட்களையும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் கடைசி நாட்களையும் ஒப்பிட்டுப் பேசினார். அவர் சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”
3 கடவுளின் எச்சரிப்பு செய்திக்கு எந்தக் கவனமும் செலுத்தாத ஆட்கள் எல்லாரையும் பூகோள ஜலப்பிரளயம் அழித்துச் சென்றது. என்றாலும், நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் அது அழிக்கவில்லை. இயேசு சொன்னபடி, அவர்கள் “பேழைக்குள் பிரவேசித்தார்கள்.” அவர்களுடைய தேவபக்தியின் காரணமாக, தப்பித்துக் கொள்வதற்கான வழியை யெகோவா அவர்களுக்காக ஏற்பாடு செய்தார். இரண்டு பேதுரு 2:5, 9 பின்வருமாறு சொல்லும்போது, நோவாவும் அவருடைய குடும்பமும் தப்பிப்பிழைத்ததைக் குறிப்பிடுகிறது: “[தேவன்] நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி, கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க . . . அறிந்திருக்கிறார்.” கடவுளின் எச்சரிப்பு செய்திக்கு ஜனங்கள் பொதுவாக செவிகொடுக்க மாட்டார்கள் என்பதைக் காண்பிக்கவே நோவாவின் நாளோடு கடைசி நாட்களை இயேசு ஒப்பிட்டுப் பேசினார். என்றபோதிலும், அவ்விதமாகச் செய்கையில், நோவாவும் அவருடைய குடும்பமும் யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பேழைக்குள் பிரவேசித்து, பெரும் ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தனர் என்பதையும்கூட அவர் உறுதிசெய்தார். நோவாவும் அவருடைய குடும்பமும் தப்பிப்பிழைத்தது இந்த உலகின் முடிவில் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் தப்பிப்பிழைப்பதைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது.
ஒரு முதல் நூற்றாண்டு மாதிரி
4. இயேசுவின் வார்த்தைகளின் நிறைவேற்றமாக, பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவுக்கு வழிநடத்திய சம்பவங்கள் யாவை?
4 இயேசு இந்த உலகத்தின் முடிவில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப்பற்றியும்கூட பேசினார். மத்தேயு 24:21, 22-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.” நம்முடைய பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் இந்தத் தீர்க்கதரிசனம் முதல் நிறைவேற்றத்தை அடைந்தது. பொ.ச. 66-ல், செஸ்டியஸ் காலஸ் தலைமையில் ரோம சேனைகள் எருசலேம் பட்டணத்தை முற்றுகையிட்டன. ரோம சேனைகள் ஆலய மதிலின் அஸ்திவாரத்தை அழித்துவிடும் கட்டத்துக்குச் சென்றன, அநேக யூதர்கள் சரணடைய ஆயத்தமாயிருந்தனர். இருப்பினும், எதிர்பாராத விதத்தில் எந்தத் தெளிவான காரணமுமின்றி, செஸ்டியஸ் காலஸ் தன் படைகளுடன் பின்வாங்கிக்கொண்டான். ரோமர்கள் பின்வாங்கிச் செல்வதைக் கண்ட கிறிஸ்தவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு பேசியிருந்த வார்த்தைகளின்பேரில் செயல்பட்டனர்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.” (லூக்கா 21:20, 21) கிறிஸ்தவர்களாக்கப்பட்ட யூதர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அழிவுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த எருசலேம் பட்டணத்தை விட்டு உடனே வெளியேறினர். இவ்வாறு விரைவில் அதன்மீது வந்த பயங்கரமான அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். பொ.ச. 70-ல், தளபதி டைட்டஸ் தலைமையில், ரோமப் படைகள் திரும்பி வந்தன. அந்தப் படைகள் எருசலேமைச் சுற்றி முற்றுகையிட்டன, பட்டணத்தை சூழ்ந்து வளைத்துக் கொண்டன, அதை அழித்தன.
5. எருசலேமின்மீது உபத்திரவம் பொ.ச. 70-ல் என்ன கருத்தில் குறைக்கப்பட்டது?
5 யூத சரித்திர ஆசிரியர் ஜொஸிஃபஸ், 11,00,000 யூதர்கள் மாண்டனர், 97,000 பேர்கள் தப்பிப்பிழைத்து கைதிகளாக கொண்டு போகப்பட்டனர் என்று கூறுகிறார். தப்பிப்பிழைத்த கிறிஸ்தவர்களல்லாத யூதர்கள் நிச்சயமாகவே இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்த ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ அல்லர். கலகத்தனமான யூத தேசத்தை நோக்கி பேசுகையில், இயேசு இவ்விதமாக சொல்லியிருந்தார்: “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 23:38, 39) எருசலேமில் அடைபட்டிருந்த யூதர்கள் கடைசி நிமிடத்தில் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவர்களாக மாறி, யெகோவாவின் தயவைப் பெற்றுக்கொண்டனர் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. இருப்பினும், பொ.ச. 70-ல் எருசலேமின்மீது வந்த உபத்திரவம் குறைக்கப்பட்டது. ரோம சேனையின் கடைசி முற்றுகை நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை. இது சில யூதர்கள் தப்பிப்பிழைப்பதற்கு அனுமதித்தது. அப்படி தப்பிப்பிழைத்தும்கூட, ரோமப் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கு அடிமைகளாக அவர்கள் அனுப்பப்பட்டனர்.
தப்பிப்பிழைக்கும் ஒரு திரள்கூட்டம்
6, 7. (அ) எந்தப் பெரிய மத சம்பந்தமான நகரம், ஈடிணையற்ற எந்த உபத்திரவத்தின் பாகமாக இன்னும் அழிக்கப்பட வேண்டியதாக உள்ளது? (ஆ) இந்த உலகத்தின்மீது வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி யோவான் என்ன தீர்க்கதரிசனமுரைத்தார்?
6 பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவு உண்மையில் அந்த மத சம்பந்தமான நகரத்தின் மீது ‘மிகுந்த உபத்திரவத்தைக்’ கொண்டுவந்த போதிலும், இயேசுவின் வார்த்தைகள் பெரிய அளவில் நிறைவேற்றமடைவது இன்னும் நடந்தேற வேண்டியிருந்தது. அதைவிட பெரிய ஒரு மத சம்பந்தமான நகரமான மகா பாபிலோன், பொய் மத உலகப் பேரரசு, சாவுக்கேதுவான ஒரு மிகுந்த உபத்திரவத்தை அனுபவிக்கவேண்டும். மீந்திருக்கும் சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறையின்மீது உடனடியாக அதைத் தொடர்ந்து ஈடிணையற்ற உபத்திரவம் வரவேண்டும். (மத்தேயு 24:29, 30; வெளிப்படுத்துதல் 18:21) எருசலேம் அழிக்கப்பட்டு சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின், அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் 7:9-14-ல் உலகம் முழுவதையும் தழுவிக்கொள்ளும் இந்த மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி எழுதினார். திரள்கூட்டமான ஜனங்கள் அதைத் தப்பிப்பிழைப்பர் என்று அவர் காண்பித்தார்.
7 தப்பிப்பிழைக்கும் இவர்கள், இந்தத் ‘திரள்கூட்டத்தார்’ என்றழைக்கப்படுகிறவர்கள், தாங்கள் எடுக்கும் ஒரு குறிப்பிட்ட தீர்மானமான நடவடிக்கையின் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றனர். வெளிப்படுத்துதல் 7:14-ன்படி, பரலோகத்திலுள்ள 24 மூப்பர்களில் ஒருவர் யோவானிடம் பின்வருமாறு சொன்னார்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” ஆம், திரள்கூட்டத்தார் யெகோவாவைத் தங்கள் இரட்சிப்புக்கு ஊற்றுமூலராக ஏற்று ஆரவாரிக்கின்றனர். இயேசு சிந்திய இரத்தத்தின் பேரில் அவர்கள் விசுவாசத்தைக் காண்பித்து, தங்கள் படைப்பாளருக்கு முன்பாகவும் அவருடைய நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும் நீதியான ஒரு நிலைநிற்கையைக் கொண்டிருக்கின்றனர்.
8. ‘திரள் கூட்டத்தாருக்கும்’ இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களின் மீதியானோருக்கும் இடையே என்ன நேர்த்தியான உறவு நிலவிவருகிறது?
8 சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரலோக ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ், இன்று திரள்கூட்டத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 50 லட்சம் அங்கத்தினர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டு, பூமியில் இன்னும் உயிரோடிருக்கும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களோடு நெருக்கமாகக் கூட்டுறவு கொண்டிருக்கின்றனர். இந்த அபிஷேகம் செய்யப்பட்டோரை திரள்கூட்டத்தார் நடத்தும் விதத்தைக் குறித்து, இயேசு சொல்கிறார்: “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 25:40) கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்குச் சுயநலமற்ற விதத்தில் உதவி செய்வதன் மூலம், திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவுக்கே நன்மை செய்வதாக நியாயந்தீர்க்கப்படுகின்றனர். இது அவர்களை இயேசு கிறிஸ்துவோடும் யெகோவா தேவனோடும் ஒரு பாதுகாப்பான உறவுக்குள் வழிநடத்திச் செல்கிறது. கடவுளுக்குச் சாட்சிகளாகவும் அவருடைய பெயரைத் தாங்கியவர்களாகவும் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரோடு சேர்ந்துகொள்வதற்கு அவர்கள் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர்.—ஏசாயா 43:10, 11; யோவேல் 2:31, 32.
விழிப்பாய் நிலைத்திருப்பது
9, 10. (அ) மனுஷகுமாரனுக்கு முன்பு நம்முடைய நீதியான நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? (ஆ) ‘விழித்திருப்பதற்கு’ நாம் எவ்விதமாக செயல்படவேண்டும்?
9 திரள்கூட்டத்தார் இடைவிடாமல் தங்கள் நீதியான நிலைநிற்கையை மனுஷகுமாரனுக்கு முன்பு காத்துக்கொள்ள வேண்டும். இது முடிவு வரை கவனமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதைத் தேவைப்படுத்துகிறது. இயேசு பின்வருமாறு சொன்னபோது இதைத் தெளிவாகக் கூறினார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:34-36.
10 மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு நாம் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும். இந்த உலகத்தின் சிந்தனை நம்மீது செல்வாக்குச் செலுத்த நாம் அனுமதிப்போமானால் இதை பெறமுடியாது. உலகப்பிரகாரமான சிந்தனை தீயவழியில் தூண்டும் தன்மையுள்ளது. அது மாம்சத்துக்குரிய இன்பங்களில் அளவுக்கு மீறி ஈடுபடும்படி ஒரு நபரை தூண்டுவிக்கும். அல்லது வாழ்க்கையின் பிரச்சினைகளால் அதிகமாக அழுத்தப்பட்டு, அவர் இனிமேலும் ராஜ்ய அக்கறைகளை முதலில் வைக்காதபடி செய்துவிடும். (மத்தேயு 6:33) இது ஒரு நபரை ஆவிக்குரிய வகையில் பலவீனப்படுத்தி, கடவுளிடமாகவும் மற்றவர்களிடமாகவும் தனக்கிருக்கும் உத்தரவாதங்களைக் குறித்து அவரை அசட்டை மனப்பான்மையுள்ளவராக செய்துவிடுகிறது. அவர் செயலற்றவராக ஆகிவிடக்கூடும் அல்லது வினைமையான பாவம் செய்து மனந்திரும்பாத மனநிலையைக் காண்பிப்பதன் மூலம் அவர் சபையில் தனக்கு இருக்கும் ஸ்தானத்தைக் கஷ்டத்துக்குள் ஆக்கக்கூடும். திரள்கூட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களைக் குறித்து கவனம் செலுத்தவேண்டும். இந்தத் தேவபக்தியற்ற உலகிலிருந்தும் அதன் பழக்கங்களிலிருந்தும் தங்களைத் தனியே விலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.—யோவான் 17:16.
11. என்ன வேதப்பூர்மான நியமங்களைப் பொருத்துவது அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்க நமக்கு உதவிசெய்யும்?
11 அவ்வாறு இருப்பதற்காக, யெகோவா தம்முடைய வார்த்தை, தம்முடைய பரிசுத்த ஆவி, தம்முடைய காணக்கூடிய அமைப்பு ஆகியவற்றின் மூலம் நமக்குத் தேவையானவற்றை அளித்திருக்கிறார். இவற்றை நாம் முழுவதுமாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலுமாக, அவருடைய ஆதரவைக் கொண்டிருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால், ஜெபசிந்தையோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும். ஒரு காரியமானது, கெட்ட காரியங்களைக் குறித்து பலமான வெறுப்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சங்கீதக்காரன் சொன்னார்: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.” (சங்கீதம் 26:4, 5, 9) கிறிஸ்தவ சபையில் இளைஞரும் முதியோரும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திராத ஆட்களோடு தங்கள் கூட்டுறவை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கு, குற்றமற்றவர்களாகவும், உலகத்தால் கறைபடாதவர்களாகவும் இருக்க நாம் கடும் முயற்சி செய்யவேண்டும். (சங்கீதம் 26:1-5; யாக்கோபு 1:27; 4:4) இவ்வாறு செய்தால், அர்மகெதோனில் தேவபக்தியற்றவர்களோடு சேர்ந்து யெகோவா நம்மை மரணத்தில் அழித்துவிட மாட்டார் என்று உறுதியளிக்கப்படுவோம்.
சிலர் ‘என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பார்கள்’
12, 13. (அ) லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பாக, மார்த்தாள் முழுமையாக புரிந்துகொள்ளாத என்ன வார்த்தைகளை இயேசு பேசினார்? (ஆ) சிலர் ‘என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பதைப்’ பற்றிய இயேசுவின் வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தவில்லை?
12 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து, ஒருபோதும் மரிக்க வேண்டியிராத சாத்தியத்தைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பது கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைத்தான் இயேசு நமக்கு அளித்தார். மரித்துப்போன தம் நண்பனாகிய லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு சற்று முன்பு, லாசருவின் சகோதரியாகிய மார்த்தாளிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?” மார்த்தாள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்தாள், ஆனால் இயேசு சொல்லிக்கொண்டிருந்த எல்லாவற்றையும் அவள் புரிந்துகொள்ளவில்லை.—யோவான் 11:25, 26.
13 தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர் தொடர்ந்து மாம்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்றும் மரிக்கவே மாட்டார்கள் என்றும் இயேசு சொல்லவில்லை. அதற்கு மாறாக, தம்முடைய சீஷர்கள் மரித்துப்போவர் என்று அவர் பின்னால் குறிப்பிட்டார். (யோவான் 21:16-23) ஆம், பொ.ச. 33-ல் அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டது, ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் தங்கள் பரலோக சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்கள் மரிக்கவேண்டும் என்பதையே அர்த்தப்படுத்தியது. (வெளிப்படுத்துதல் 20:4, 6) இவ்விதமாக காலம் செல்லச் செல்ல எல்லா முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் மரித்தனர். என்றபோதிலும், இயேசு ஒரு நோக்கத்துடனே அவ்வாறு சொன்னார். மரித்துப் போகாமலேயே வாழ்வதைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகள் நிச்சயமாகவே நிறைவேறும்.
14, 15. (அ) சிலர் ‘என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பதைப்’ பற்றிய இயேசுவின் வார்த்தைகள் எவ்விதமாக நிறைவேறும்? (ஆ) இந்த உலகத்தின் நிலைமை என்ன, ஆனால் நீதிமான்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
14 ஒரு காரியமானது, உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நித்திய மரணத்தை ஒருபோதும் அனுபவிக்க மாட்டார்கள். (வெளிப்படுத்துதல் 20:6) மேலும் கடவுள் நோவாவின் நாளில் செய்தது போலவே, மனித விவகாரங்களில் குறுக்கிட்டு பூமியிலிருந்து துன்மார்க்கத்தைத் துடைத்தழிக்கப்போகும் திட்டவட்டமான ஒரு சமயத்தை இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காண்பிக்கின்றன. அந்தச் சமயத்தில் கடவுளின் சித்தத்தைச் செய்கிறவர்களாக காணப்படும் உண்மையுள்ள நபர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செயல்களால் மரிக்க வேண்டியதே இல்லை. மாறாக, நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் போலவே, அவர்கள் ஒரு உலகின் அழிவைத் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பர். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை உறுதியானது, அது பைபிள் போதனைகளின் பேரிலும் உதாரணங்களின் பேரிலும் சார்ந்துள்ளது. (ஒப்பிடுக: எபிரெயர் 6:19; 2 பேதுரு 2:4-9.) வெகு சீக்கிரத்தில் அநீதியான மனித சமுதாயம் அடங்கியிருக்கும் தற்போதைய உலகம், அழிவில் முடிவடையப் போகிறது என்பதை பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் காண்பிக்கிறது. தற்போதைய நிலைமை மாற்றமுடியாததாய் உள்ளது, ஏனென்றால் இவ்வுலகம் திருத்தமுடியாத அளவுக்குப் பொல்லாததாய் இருக்கிறது. நோவாவின் நாளைய உலகைப் பற்றி கடவுள் சொன்னது, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்துக்கும்கூட உண்மையாய் இருக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் இருதயங்கள் பொல்லாப்பால் நிரம்பியிருக்கின்றன. அவர்களுடைய சிந்தனைகள் எல்லா சமயத்திலும் கெட்டவையாக மட்டுமே இருக்கின்றன.—ஆதியாகமம் 6:5.
15 பல நூற்றாண்டுகளாக தெய்வீக குறுக்கிடுதலின்றி பூமியை மனிதர் ஆட்சிசெய்யும்படி யெகோவா அனுமதித்திருக்கிறார். ஆனால் அவர்களுடைய காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. பைபிள் சொல்கிறபடியே, விரைவில் யெகோவா பூமியின் மீதுள்ள துன்மார்க்கர் அனைவரையும் அழித்துவிடுவார். (சங்கீதம் 145:20; நீதிமொழிகள் 2:21, 22) என்றபோதிலும், துன்மார்க்கரோடு சேர்த்து நீதிமான்களையும் அவர் அழித்துவிட மாட்டார். கடவுள் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்போதுமே செய்ததில்லை! (ஒப்பிடுக: ஆதியாகமம் 18:22, 23, 26.) தேவபயத்தோடு அவரை உண்மையுடன் சேவித்துவர முயற்சி செய்பவர்களை அவர் ஏன் அழிக்கவேண்டும்? மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது வாழ்ந்துகொண்டிருக்கும் யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தார் அவருடைய கண்களில் தயவு பெற்று, அழிக்கப்படமாட்டார்கள் என்பது நியாயமானதாய் இருக்கிறது. நோவாவின் நாளில் பொல்லாத உலகம் முடிவுக்கு வந்தபோது நோவாவும் அவருடைய குடும்பமும் அழிக்கப்படாதது போலவே இதுவும் இருக்கும். (ஆதியாகமம் 7:23) அவர்கள் தெய்வீக பாதுகாப்பைப் பெற்று இவ்வுலகத்தின் முடிவை தப்பிப்பிழைப்பார்கள்.
16. புதிய உலகில் என்ன அதிசயமான காரியங்கள் நடந்தேறும், தப்பிப்பிழைப்பவர்களுக்கு இது எதை அர்த்தப்படுத்தும்?
16 அப்போது என்ன சம்பவிக்கும்? புதிய உலகில், இயேசுவின் மீட்கும் பலியின் நன்மைகள் முழுமையாக பொருத்தப்படுகையில், மனிதவர்க்கத்துக்குச் சுகப்படுத்தும் ஆசீர்வாதங்கள் பெருக்கெடுத்துவரும். பைபிள் அடையாள அர்த்தமுள்ள ‘பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருவதாக’ பேசுகிறது. “நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” (வெளிப்படுத்துதல் 22:1, 2) ‘ஆரோக்கியமடைவது’ ஆதாமிய மரணத்தையே ஜெயங்கொள்வதையும் உட்படுத்துகிறது என்பதைச் சொல்வது ஆச்சரியமாயுள்ளது! “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடை”ப்பார். (ஏசாயா 25:8) இவ்விதமாக மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் ஒருபோதும் மரணத்தை எதிர்ப்பட மாட்டார்கள்!
ஒரு நிச்சயமான நம்பிக்கை
17. சிலர் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து ‘என்றென்றைக்கும் மரியாமலும் இருக்கும்’ நம்பிக்கை எவ்வளவு நிச்சயமானது?
17 இந்த அதிசயமான நம்பிக்கையின்பேரில் நாம் முழு நம்பிக்கை கொண்டிருக்க முடியுமா? நிச்சயமாகவே! மரித்துப்போகாமலேயே ஆட்கள் தொடர்ந்து வாழும் ஒரு காலம் வரும் என்று இயேசு மார்த்தாளிடம் சொன்னார். (யோவான் 11:26) மேலுமாக, இயேசு யோவானுக்குக் கொடுத்த வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரத்தில், மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைத்து திரள்கூட்டமான ஜனங்கள் வெளியே வருவார்கள் என்று வெளிப்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவையும், நோவாவின் நாளில் நடந்த ஜலப்பிரளயத்தைப் பற்றிய சரித்திரப் பதிவையும் நாம் நம்பலாமா? கேள்விக்கிடமின்றி நம்பலாம்! மேலுமாக, நியாயத்தீர்ப்பு காலப்பகுதிகளின் போதும், தேசங்கள் வீழ்ச்சியடைந்த போதும், கடவுள் தம்முடைய ஊழியர்களை உயிரோடே பாதுகாத்த சமயங்களைப் பற்றிய மற்ற பதிவுகளை பைபிள் கொண்டிருக்கிறது. இந்த முடிவின் காலத்தில் அவரிடமிருந்து இதைவிட குறைவானதை நாம் எதிர்பார்க்க வேண்டுமா? படைப்பாளரால் செய்யமுடியாத ஏதேனும் ஒன்று இருக்கிறதா?—மத்தேயு 19:26-ஐ ஒப்பிடுக.
18. யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகில் வாழ்க்கையைக் குறித்து நாம் எவ்வாறு உறுதியாய் இருக்கலாம்?
18 இப்போது யெகோவாவை உண்மையோடு சேவிப்பதன் மூலம், அவருடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையை நாம் கொண்டிருக்கிறோம். சொல்லப்படாத இலட்சக்கணக்கான ஆட்களுக்கு, உயிர்த்தெழுதலின் மூலம் அந்தப் புதிய உலகில் வாழ்க்கைக் கிடைக்கும். என்றாலும், நம்முடைய நாளில், இலட்சக்கணக்கான யெகோவாவின் மக்கள்—ஆம், ஒருவரும் எண்ணக்கூடாததும் அல்லது வரையறை செய்யமுடியாததுமான திரள்கூட்டத்தார்—மிகுந்த உபத்திரவத்தினூடே உயிரோடே பாதுகாக்கப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சிலாக்கியத்தைப் பெற்றிருப்பர். அவர்கள் மரிக்க வேண்டியதே இல்லை.
தயவுசெய்து விளக்கவும்
◻ அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பது, நோவாவின் நாளில் எவ்விதமாக முன்நிழலாக காட்டப்பட்டது?
◻ யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்ற இயேசு வரும்போது நிலைநிற்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
◻ அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் ‘என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பார்கள்’ என்று நாம் ஏன் சொல்லமுடியும்?
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்தவர்கள் எருசலேமின் உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்தனர்.