நம் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நடப்போம்
‘நாங்களோ எங்கள் கடவுளாகிய யெகோவாவின் நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’—மீகா 4:5, Nw.
1. நோவாவின் நாளில் எப்படிப்பட்ட ஒழுக்க சூழல் நிலவியது, நோவா எவ்வாறு வித்தியாசமானவராக இருந்தார்?
கடவுளோடு நடந்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மனிதன் ஏனோக்கு. இரண்டாவது மனிதன் நோவா. பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது: “தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.” (ஆதியாகமம் [தொடக்க நூல்] 6:9, பொது மொழிபெயர்ப்பு) நோவாவின் காலத்திற்குள், மனிதகுலம் தூய வணக்கத்தை விட்டுவிட்டு வழிவிலகிப் போயிருந்தது. உண்மையற்ற தேவதூதர்களால் நிலைமை இன்னும் தறிகெட்டுப் போயிருந்தது, இவர்கள் தங்களுடைய இயல்புக்கு மாறாக பெண்களுடன் உறவுகொண்டு நெஃபிலிம் என்ற சந்ததியினரைப் பிறப்பித்தார்கள்; இவர்கள் அந்நாட்களில், “பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” அப்படியானால், இந்தப் பூமி வன்முறையால் நிறைந்திருந்ததில் ஆச்சரியமே இல்லை! (ஆதியாகமம் 6:2, 4, 11) என்றாலும், நோவா குற்றமற்றவராகவும் ‘நீதியைப் பிரசங்கித்தவராகவும்’ இருந்தார். (2 பேதுரு 2:5) உயிரைப் பாதுகாக்க ஒரு பேழையைக் கட்டும்படி கடவுள் அவரிடம் கட்டளையிட்டபோது, நோவா கீழ்ப்படிந்து, ‘அப்படியே செய்தார்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செய்து முடித்தார்.’ (ஆதியாகமம் 6:22) உண்மையிலேயே கடவுளோடு நோவா நடந்தார்.
2, 3. இன்று நமக்கு நோவா வைத்திருக்கும் சிறந்த முன்மாதிரி என்ன?
2 விசுவாசமுள்ள சாட்சிகளின் பட்டியலில் நோவாவின் பெயரையும் பவுல் சேர்த்திருந்தார், அவர் இவ்வாறு எழுதினார்: ‘விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவராகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினார்; அதினாலே அவர் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானார்.’ (எபிரெயர் 11:7) எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! யெகோவாவின் வார்த்தைகள் நிறைவேறும் என்ற உறுதி நோவாவுக்கு இருந்ததால், அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற தனது நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் செலவிட்டார். அதே விதமாகவே இன்றும் அநேகர் இவ்வுலகம் வாரிவழங்கும் வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் செலவிடுகிறார்கள். அத்தகைய விசுவாசம் பாராட்டுக்குரியது, இதனால் அவர்களும் மற்றவர்களும் இரட்சிக்கப்படுவார்கள்.—லூக்கா 16:9; 1 தீமோத்தேயு 4:16.
3 முந்தைய கட்டுரையில், நோவாவின் பாட்டனாரான ஏனோக்கைப் பற்றி நாம் சிந்தித்தோம்; அவரைப் போலவே, நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் விசுவாசத்தை காண்பிப்பது கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். ஏனோக்கின் நாளைப் போலவே, நோவாவின் நாளில் மெய் வணக்கத்தார் சிறுபான்மையினராக இருந்தார்கள்—எட்டுப் பேர் மாத்திரமே விசுவாசமுள்ளவர்களாய் இருந்து, ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தார்கள். வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த உலகில் நோவா நீதியைப் பிரசங்கித்தார். அதோடு, அவரும் அவருடைய குடும்பத்தாரும் உலகளாவிய ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைக்க மரத்தால் ஒரு பிரமாண்டமான பேழையை கட்டிக்கொண்டிருந்தார்கள், அத்தகைய ஜலப்பிரளயத்தை அதுவரை எவருமே பார்த்திராதபோதிலும் அவர்கள் அதைச் செய்தார்கள். அவர்கள் செய்த காரியம் மற்றவர்களுக்கு மிகவும் விசித்திரமாக தோன்றியிருக்க வேண்டும்.
4. நோவாவின் காலத்தவருடைய என்ன தவறை இயேசு எடுத்துக் காட்டினார்?
4 நோவாவின் நாட்களைப் பற்றி இயேசு குறிப்பிட்டபோது, வன்முறை, பொய் மதம், ஒழுக்கக்கேடு ஆகியவற்றைப் பற்றி அவர் பேசவில்லை—இவை தீங்கான காரியங்களாக இருந்தபோதிலும் அவற்றைப் பற்றி அவர் பேசவில்லை என்பது அக்கறைக்குரிய விஷயம். எச்சரிக்கைக்கு ஜனங்கள் கவனம் செலுத்த மறுத்ததையே தவறென இயேசு சிறப்பித்துக் காட்டினார். “நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும்” இருந்தார்கள் என்று அவர் சொன்னார். புசிப்பது, குடிப்பது, பெண் கொள்வது, பெண் கொடுப்பது—இவற்றில் என்ன தவறு இருந்தது? அவர்கள் வெறுமனே “இயல்பான” வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்! ஆனால் ஜலப்பிரளயம் வரவிருந்தது, நோவா நீதியைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகளும் அவருடைய நடத்தையும் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். என்றாலும், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.”—மத்தேயு 24:38, 39.
5. நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்ன பண்புகள் தேவைப்பட்டன?
5 அந்தக் காலங்களைப் பின்னோக்கிப் பார்க்கையில், ஞானமான வாழ்க்கைப் போக்கை நோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். என்றாலும், ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாட்களில், மற்ற எல்லாரிலுமிருந்து வேறுபட்டிருப்பதற்கு தைரியம் தேவையாக இருந்தது. ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டவும் அதை பல்வகை மிருகங்களால் நிரப்பவும் நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறுதியான நம்பிக்கை தேவைப்பட்டது. விசுவாசத்தோடிருந்த அந்தச் சிலரில் யாராவது மற்றவர்கள் பார்வையில் படாமலிருப்பதற்கும், “இயல்பான” வாழ்க்கை வாழ்வதற்கும் சிலசமயங்களில் விரும்பியிருப்பார்களா? அத்தகைய சிந்தனைகள் சில சமயங்களில் அவர்களுடைய மனதில் வந்துபோயிருந்தாலும், அவர்களுடைய உத்தமத்தை அவை பலவீனப்படுத்தவில்லை. ஏராளமான ஆண்டுகளுக்குப்பின்—இந்த உலக ஒழுங்குமுறையில் நாம் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருக்கும் காலத்தைவிட மிக அதிக காலத்திற்குப்பின்—நோவாவின் விசுவாசம் ஜலப்பிரளயத்திலிருந்து அவரைக் காப்பாற்றியது. ஆனால், தாங்கள் வாழ்ந்துவந்த காலத்தின் முக்கியத்துவத்திற்குக் கவனம் செலுத்தாமல் “இயல்பான” வாழ்க்கை வாழ்ந்துவந்த ஆட்கள் மீதோ யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார்.
வன்முறை மீண்டும் மனிதகுலத்தைத் தொற்றுகிறது
6. ஜலப்பிரளயத்திற்குப்பின், தொடர்ந்து எத்தகைய சூழ்நிலை நிலவியது?
6 ஜலப்பிரளயத்தின் தண்ணீர் வற்றியதும் பூமியில் வாழ்க்கை மீண்டும் ஆரம்பமானது. என்றாலும், மனிதர்கள் இன்னும் அபூரணர்களாகவே இருந்தார்கள், ‘மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருந்தது.’ (ஆதியாகமம் 8:21) இது தவிர, பேய்கள் இனிமேல் மனித உருவெடுக்க முடியாதபோதிலும் அவை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தன. உலகம் ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்பதை அன்றிருந்த தேவபக்தியற்ற மக்கள் சீக்கிரத்திலேயே வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள். உண்மை வணக்கத்தாரோ இன்றைய கிறிஸ்தவர்களைப் போல, “பிசாசின் தந்திரங்களோடு” போராட வேண்டியிருந்தது.—1 யோவான் 5:19; எபேசியர் 6:11, 12.
7. ஜலப்பிரளயத்திற்குப்பின் உலகில் எவ்வாறு வன்முறை பெருகத் தொடங்கியது?
7 ஜலப்பிரளயத்திற்குப்பின் கிட்டத்தட்ட நிம்ரோதின் காலம் முதற்கொண்டு, இவ்வுலகில் மீண்டும் வன்முறை தலைவிரித்தாட ஆரம்பித்தது என சொல்லலாம். ஜனத்தொகை பெருகப்பெருக, தொழில்நுட்பம் வளரவளர, காலங்கள் செல்லச்செல்ல அந்த வன்முறை மளமளவென அதிகரித்தது. ஆரம்ப காலங்களில், பட்டயமும் ஈட்டியும், வில்லும் அம்பும், ரதமும் இருந்தன. சமீப காலங்களில், தோளில் சுமக்கும் துப்பாக்கியும் பீரங்கியும் சுழல் துப்பாக்கியும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களும் உருவெடுத்துள்ளன. விமானம், பீரங்கி, நீர்மூழ்கிக் கப்பல், நச்சுப் புகை போன்ற வன்முறையைத் தூண்டும் புதிய போராயுதங்கள் முதல் உலகப் போரில் அறிமுகமாயின. அந்தப் போரில் இந்த நவீன ஆயுதங்கள் லட்சக்கணக்கானோருடைய உயிரைக் குடித்தன. அது எதிர்பாராத ஒன்றா? இல்லை.
8. வெளிப்படுத்துதல் 6:1-4 எப்படி நிறைவேற்றம் அடைந்துள்ளது?
8 1914-ல் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார், அதுமுதல் ‘கர்த்தருடைய நாள்’ ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 1:10) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தரிசனத்தில், வெள்ளைக் குதிரையில் இயேசு சவாரி செய்வது போல் சித்தரிக்கப்படுகிறார். அவருக்குப்பின் மற்ற குதிரை வீரர்கள் வருகிறார்கள், ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் மீது வரப்போகும் பல்வேறு வாதையை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் சிவப்புக் குதிரையில் சவாரி செய்கிறான். இந்தச் சவாரியாளனுக்கு “பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 6:1-4) இந்தக் குதிரையும் அதன் சவாரியாளனும் யுத்தத்திற்குப் படமாக இருக்கிறார்கள்; அந்தப் பெரிய பட்டயமோ ஆற்றல்மிக்க ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் நவீன போரினால் உண்டாகிற சரித்திரம் காணாத அழிவை குறிக்கிறது. லட்சோபலட்ச உயிர்களைக் குடிக்கும் திறன்மிக்க அணு ஆயுத கருவிகளும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள இடங்களைத் தாக்கவல்ல கருவிகளை ஏவும் ராக்கெட்டுகளும், எல்லாவற்றையும் அடியோடு அழிக்கும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களும் அவற்றில் அடங்கும்.
யெகோவாவின் எச்சரிக்கைகளுக்கு நாம் கவனம் செலுத்துகிறோம்
9. இன்றைய உலகம் எவ்வாறு ஜலப்பிரளயத்திற்கு முந்தைய உலகத்தோடு ஒத்திருக்கிறது?
9 நோவாவின் நாட்களில், நெபிலிம்கள் துணைபோனதால் துன்மார்க்கருடைய வன்முறை பெருகியது, அதனால் மனிதர்களை யெகோவா அழித்தார். நம்முடைய நாளைப் பற்றியென்ன? அப்போதைவிட இப்போது பூமியில் வன்முறை குறைந்துவிட்டதா? இல்லவே இல்லை! அதோடு, நோவாவின் நாளைப் போலவே, இன்றைக்கும் ஜனங்கள் தங்களுடைய அன்றாட காரியங்களிலேயே மூழ்கியிருக்கிறார்கள், அறிவிக்கப்படும் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல் “இயல்பான” வாழ்க்கை வாழவே முயலுகிறார்கள். (லூக்கா 17:26, 27) அப்படியானால், மனிதகுலத்தை யெகோவா மீண்டும் அழிப்பார் என்பதை சந்தேகிப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இல்லை.
10. (அ) பைபிள் தீர்க்கதரிசனத்தில் என்ன எச்சரிக்கை மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது? (ஆ) இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய ஞானமான ஒரே காரியம் என்ன?
10 ஜலப்பிரளயத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய நாளில் வரும் அழிவைப் பற்றி ஏனோக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார். (யூதா 14, 15) வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தைப்’ பற்றி இயேசுவும்கூட பேசினார். (மத்தேயு 24:21) அந்தக் காலத்தைப் பற்றி மற்ற தீர்க்கதரிசிகளும் எச்சரித்தார்கள். (எசேக்கியேல் 38:18-23; தானியேல் 12:1; யோவேல் 2:31, 32) வெளிப்படுத்துதல் புத்தகத்தில், அந்த இறுதிகட்ட அழிவு தத்ரூபமாய் விவரிக்கப்பட்டிருப்பதை நாம் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 19:11-21) தனிப்பட்ட நபர்களாக, நாம் நோவாவைப் பின்பற்றுகிறோம், நீதியைப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறோம். யெகோவாவின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துகிறோம், நம்முடைய அயலகத்தாரும் இதையே செய்ய அன்புடன் உதவுகிறோம். ஆகவே, நோவாவைப் போல, நாம் கடவுளோடு நடக்கிறோம். சொல்லப்போனால், உயிர்மீது ஆசையுள்ள எவரும் கடவுளோடு நடப்பது இன்றியமையாதது. ஒவ்வொரு நாளும் நாம் அழுத்தங்களை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும்போது இதை எப்படி செய்யலாம்? கடவுளுடைய நோக்கம் நிறைவேறி வருவதில் நாம் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம்.—எபிரெயர் 11:6.
கொந்தளிப்பான காலங்களில் தொடர்ந்து கடவுளோடு நடவுங்கள்
11. எந்த விதத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை நாம் பின்பற்றுகிறோம்?
11 முதல் நூற்றாண்டில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘இந்த மார்க்கத்தார்’ என அழைக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 9:2) அவர்களுடைய முழு வாழ்க்கையும் யெகோவாவின் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதுமுள்ள விசுவாசத்தை மையமாக கொண்டிருந்தது. அவர்களுடைய எஜமான் நடந்த பாதையில் அவர்கள் நடந்தார்கள். இன்று உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் அவ்வாறே நடக்கிறார்கள்.
12. ஜனக் கூட்டத்தாருக்கு இயேசு அற்புதமாய் உணவளித்த பிறகு என்ன நடந்தது?
12 இயேசுவின் ஊழிய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விசுவாசத்தின் முக்கியத்துவத்தை காணலாம். ஒரு சந்தர்ப்பத்தில், சுமார் 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாய் உணவளித்தார். ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள், அகமகிழ்ந்தார்கள். ஆனால் அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின் மேல் ஏறினார்.” (யோவான் 6:10-15) அந்த ராத்திரியிலே அவர் வேறொரு இடத்திற்குச் சென்றார். ராஜாவாக பதவியேற்க இயேசு மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். சொல்லப்போனால், ராஜாவாக இருப்பதற்கு ஏற்ற ஞானமும் மக்களுடைய சரீர தேவைகளைத் திருப்திப்படுத்துவதற்கு வல்லமையும் இருப்பதை அவர் காண்பித்திருந்தாரே. என்றாலும், தாம் ராஜாவாக ஆளுவதற்குரிய யெகோவாவின் நேரம் இன்னும் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, இயேசுவின் ராஜ்யம் பரலோகத்திற்குரியது, பூமிக்குரியதல்ல.
13, 14. அநேகர் எத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டினார்கள், அவர்களுடைய விசுவாசம் எப்படி சோதிக்கப்பட்டது?
13 இருந்தாலும், யோவான் சொல்வது போல, ஜனங்கள் விடாமல் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்று, “அக்கரையிலே” அவரைக் கண்டுபிடித்தார்கள். ராஜாவாக்குவதற்கு அவர்கள் செய்த முயற்சியை அவர் தவிர்த்தும் ஏன் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்? அவர்களில் பலர், மோசேயின் நாளிலே வனாந்தரத்தில் யெகோவா உணவளித்ததைச் சுட்டிக்காட்டியதன் மூலம் தங்கள் மனித கண்ணோட்டத்தை வெளிக்காட்டினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு இயேசு உணவளிக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக தெரிவித்தார்கள். அவர்களுடைய தவறான நோக்கங்களை உணர்ந்து, அவர்களுடைய எண்ணத்தை சரிசெய்ய ஆவிக்குரிய சத்தியங்களை அவர் போதிக்க ஆரம்பித்தார். (யோவான் 6:17, 24, 25, 30, 31, 35-40) அதனால் சிலர் முறுமுறுத்தார்கள், முக்கியமாக பின்வரும் உவமையை சொன்னபோது முறுமுறுத்தார்கள்: “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.”—யோவான் 6:53, 54.
14 பெரும்பாலும் இயேசுவின் உவமைகள், ஜனங்கள் உண்மையிலேயே கடவுளோடு நடக்க விரும்புகிறார்களா என்பதை வெளிக்காட்டத் தூண்டின. இந்த உவமையும் அதற்கு விதிவிலக்கல்ல. இது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கிளறியது. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.” தாம் சொன்ன வார்த்தைகளில் புதைந்துள்ள ஆவிக்குரிய அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென இயேசு விளக்கினார். “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” என்று அவர் கூறினார். (யோவான் 6:63) இருந்தாலும், அநேகர் செவிசாய்க்கவில்லை. அந்தப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.”—யோவான் 6:60, 63, 66.
15. இயேசுவின் சீஷர்களில் சிலர் காண்பித்த சரியான கண்ணோட்டம் என்ன?
15 என்றாலும், இயேசுவின் சீஷர்களில் எல்லாருமே அப்படி பிரதிபலிக்கவில்லை. உண்மையுள்ள சீஷர்கள் இயேசு சொன்னதை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். என்றாலும், இயேசுவின் மீது அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. உண்மையுள்ள அப்போஸ்தலர்களில் ஒருவரான பேதுரு பின்வருமாறு சொன்னபோது உண்மையுடன் நிலைத்திருந்தவர்களுடைய உணர்ச்சிகளை தெரியப்படுத்தினார்: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” (யோவான் 6:68) எப்பேர்ப்பட்ட சிறந்த மனப்பான்மை, எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
16. நாம் எவ்வாறு சோதிக்கப்படலாம், நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய சரியான கண்ணோட்டம் என்ன?
16 இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் சோதிக்கப்பட்டதைப் போலவே நாமும் இன்று சோதிக்கப்படலாம். நம்முடைய விஷயத்தில், நாம் ஆசைப்படுகிறபடி யெகோவாவின் வாக்குறுதிகள் சீக்கிரத்தில் நிறைவேறாததைக் கண்டு நாமும் ஏமாற்றமடையலாம். நம் பைபிள் பிரசுரங்களில் வசனங்களுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருப்பதாக நாம் நினைக்கலாம். சக கிறிஸ்தவர் ஒருவருடைய நடத்தை நமக்கு ஏமாற்றமளிக்கலாம். இத்தகைய காரணங்களுக்காகவோ இதுபோன்ற பிற காரணங்களுக்காகவோ கடவுளோடு நடப்பதை நிறுத்திவிடுவது சரியாக இருக்குமா? நிச்சயமாகவே இருக்காது! இயேசுவை கைவிட்டுவிட்ட சீஷர்கள் மனித கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். அதை நாம் தவிர்க்க வேண்டும்.
‘நாம் பின்வாங்குகிறவர்கள் அல்ல’
17. தொடர்ந்து கடவுளோடு நடக்க நமக்கு எப்படி உதவி கிடைக்கிறது?
17 “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16) “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என பைபிளில் யெகோவா நமக்குத் தெளிவாக சொல்லியிருக்கிறார். (ஏசாயா 30:21) கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது, ‘நாம் எப்படி நடக்கிறோமென தொடர்ந்து உன்னிப்பாய் கவனிக்க’ நமக்கு உதவுகிறது. (எபேசியர் 5:15, NW) பைபிளைப் படிப்பதும் வாசித்தவற்றை தியானிப்பதும் ‘நாம் தொடர்ந்து சத்தியத்திலே’ நடப்பதற்கு உதவுகின்றன. (3 யோவான் 3, NW) “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” என இயேசு சொன்னது உண்மையே. யெகோவாவின் வார்த்தை, அவருடைய ஆவி, அவருடைய அமைப்பு ஆகியவற்றிலிருந்து வரும் ஆவிக்குரிய வழிகாட்டுதலே நம் நடைகளை நடத்துவதற்கு உதவும் ஒரே நம்பகமான வழிகாட்டுதல்.
18. (அ) சிலர் ஞானமற்ற விதத்தில் என்ன செய்கிறார்கள்? (ஆ) எப்படிப்பட்ட விசுவாசத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
18 இன்று, மாம்ச சிந்தையால் அல்லது நிறைவேறாத எதிர்பார்ப்புகளால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் பெரும்பாலும் இந்த உலகிலிருந்து அதிகத்தைப் பெற முயலுகிறார்கள். அவர்கள் தங்களுடைய அவசர உணர்வை இழந்து, தொடர்ந்து ‘விழித்திருக்க’ அவசியமில்லையென நினைக்கிறார்கள்; ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதற்குப் பதிலாக தன்னல குறிக்கோள்களை நாட முயலுகிறார்கள். (மத்தேயு 24:42, 48) இத்தகைய வழியில் நடப்பது மிகவும் ஞானமற்ற செயல். அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” (எபிரெயர் 10:39) ஏனோக்கையும் நோவாவையும் போல், நாம் கொந்தளிப்பான காலங்களில் வாழ்ந்தாலும், கடவுளோடு நடக்கும் பாக்கியம் நமக்கு இருக்கிறது. அப்படி செய்யும்போது, யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதையும், துன்மார்க்கம் அழிக்கப்படுவதையும், நீதியுள்ள புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதையும் பார்க்கும் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். எப்பேர்ப்பட்ட அற்புதமான எதிர்பார்ப்பு!
19. உண்மை வணக்கத்தாருடைய பாதையை மீகா எவ்வாறு விவரிக்கிறார்?
19 இந்த உலக ஜனங்களைப் பற்றி ஆவியின் ஏவுதலால் மீகா தீர்க்கதரிசி பேசியபோது, அவர்கள் “தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்” என்று கூறினார். பிறகு தன்னையும் உண்மையுள்ள பிற வணக்கத்தாரையும் பற்றி இவ்வாறு சொன்னார்: ‘நாங்களோ எங்கள் கடவுளாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’ (மீகா 4:5; NW) உங்களுடைய தீர்மானமும் மீகாவைப் போல் இருக்குமானால், காலங்கள் எவ்வளவு கொந்தளிப்பாக மாறினாலும் யெகோவாவுடன் நெருங்கியிருங்கள். (யாக்கோபு 4:8) நம் கடவுளாகிய யெகோவாவுடன் இப்போதும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்பது நம் ஒவ்வொருவரின் இருதயப்பூர்வ ஆசையாக இருக்கட்டும்!
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• நோவாவின் நாளுக்கும் இன்றைய நாளுக்கும் என்ன ஒப்புமைகள் இருக்கின்றன?
• நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் என்ன போக்கை பின்பற்றினார்கள், அவர்களுடைய விசுவாசத்தை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
• இயேசுவைப் பின்பற்றியவர்கள் சிலர் எத்தகைய தவறான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினர்?
• என்ன செய்வதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள்?
[பக்கம் 20-ன் படங்கள்]
நோவாவின் நாளைப் போல, இன்றும் ஜனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள்
[பக்கம் 21-ன் படம்]
ராஜ்ய பிரசங்கிகளாக, ‘நாம் பின்வாங்குகிறவர்கள் அல்ல’