“அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை”
‘எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.’—லூக்கா 4:22.
1, 2. (அ) இயேசுவை கைது செய்து வரும்படி அனுப்பப்பட்ட சேவகர்கள் ஏன் வெறுங்கையோடு திரும்பினார்கள்? (ஆ) இயேசுவின் போதனைகளால் கவரப்பட்டது சேவகர்கள் மட்டுமே அல்ல என்பதை எது காட்டுகிறது?
சேவகர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்ட பணியை செய்யாமல் திரும்பிவிட்டார்கள். இயேசு கிறிஸ்துவை கைதுசெய்து வரும்படி இவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களோ வெறுங்கையோடு திரும்பினார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவர்களிடம் காரணம் கேட்டார்கள்: “நீங்கள் அவனை ஏன் கொண்டு வரவில்லை”? எந்த விதத்திலும் எதிர்க்காத ஒரு நபரை அந்த சேவகர்கள் ஏன் பிடித்து வரவில்லை? “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று சேவகர்கள் விளக்கம் அளித்தார்கள். இயேசுவின் போதனைகள் அவர்களுடைய மனதை அந்தளவுக்குக் கவர்ந்துவிட்டதால் சாதுவான அவரைக் கைதுசெய்து அழைத்துவர அவர்களுக்கு மனம் வரவில்லை.a—யோவான் 7:32, 45, 46.
2 இயேசுவின் போதனைகள் அந்த சேவகர்களை மட்டுமே கவரவில்லை. அவர் பேசுவதை கேட்பதற்காகவே திரளான ஜனங்கள் கூடிவந்ததாக பைபிள் சொல்கிறது. அவருடைய சொந்த ஊர்க்காரர்கள், “அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்”பட்டார்கள். (லூக்கா 4:22) கலிலேய கடற்கரைக்கு திரண்டு வந்திருந்த ஜனங்களிடம் படகில் அமர்ந்தவாறு பல தடவை அவர் பேசினார். (மாற்கு 3:10; 4:1; லூக்கா 5:1-3) ஒரு சமயம், திரளான கூட்டத்தார் சாப்பிடக்கூட போகாமல் மூன்று நாட்கள் அவரோடு கூடவே தங்கியிருந்தார்கள்.—மாற்கு 8:1, 2.
3. இயேசு மனங்கவரும் போதகராக இருந்ததற்கு முக்கிய காரணம் என்ன?
3 இயேசு மனங்கவரும் போதகராக விளங்கக் காரணம் என்ன? அன்புதான் முக்கிய காரணம்.b இயேசு தாம் கற்பித்த சத்தியங்களை நேசித்தார், தாம் கற்பித்த மக்களையும் நேசித்தார். ஆனால் பயனுள்ள போதிக்கும் முறைகளை உபயோகிப்பதற்கு இயேசு அசாதாரணமான திறமை பெற்றவராகவும் இருந்தார். இந்த இதழிலுள்ள படிப்பு கட்டுரைகளில், அவர் பயன்படுத்திய பயனளிக்கும் சில போதிக்கும் முறைகளையும் அவற்றை நாம் எவ்வாறு பின்பற்றலாம் என்பதையும் ஆராயலாம்.
எளிமையும் தெளிவும்
4, 5. (அ) இயேசு ஏன் எளிய மொழிநடையில் போதித்தார், அவர் அவ்வாறு போதித்தது ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) இயேசுவின் எளிய போதனைக்கு மலைப்பிரசங்கம் எவ்வாறு சான்றளிக்கிறது?
4 மெத்தப் படித்த மேதாவிகள் பிறர் புரிந்துகொள்ள முடியாத கடினமான மொழிநடையை பயன்படுத்துவது சகஜம். ஆனால் நாம் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டால் நம்முடைய அறிவிலிருந்து அவர்கள் எப்படி பயனடைவார்கள்? மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியா வார்த்தைகளை ஒரு போதகராக இயேசு ஒருகாலும் உபயோகிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் அவருக்கு தெரிந்திருந்த என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருக்க முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். ஆனாலும், அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்த அவர் தம்மைப் பற்றி நினைக்காமல் தம் பேச்சைக் கேட்க வந்தவர்களைப் பற்றியே நினைத்தார். அவர்களில் அநேகர் “கல்வியறியாத சாமான்ய மனிதரென்று” அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 4:13, தி.மொ.) அவர்களுடைய இருதயத்தை எட்டுவதற்கு அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழிநடையில் பேசினார். அவை எளிய வார்த்தைகளாக இருந்திருக்கலாம், ஆனால் அவற்றில் பொதிந்திருந்த சத்தியங்களோ ஆழமானவை.
5 உதாரணமாக, மத்தேயு 5:3–7:27-ல் பதிவு செய்யப்பட்டுள்ள மலைப்பிரசங்கத்தை கவனியுங்கள். அந்தப் பிரசங்கத்தைக் கொடுத்து முடிக்க 20 நிமிடம் மட்டுமே ஆகியிருக்கலாம். ஆனால் அதில் காணப்படும் போதனைகளோ அர்த்தம் நிறைந்தவை. அவை வேசித்தனம், விபச்சாரம், பொருளாசை ஆகியவற்றின் பிறப்பிடத்தை சுட்டிக்காட்டின. (மத்தேயு 5:27-32; 6:19-34) ஆனால் அவற்றில் புதிரான வார்த்தைகளோ டாம்பீகமான வார்த்தைகளோ இல்லை. சொல்லப்போனால், ஒரு சிறு பிள்ளைக்கூட சட்டென புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் எதுவுமே அதில் இல்லை! அவர் பேசி முடித்ததும் விவசாயிகளும் மேய்ப்பர்களும் மீனவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தார் “அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.—மத்தேயு 7:29.
6. இயேசு எளிய ஆனால் அர்த்தம் பொதிந்த விஷயங்களைப் பேசியதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
6 தெளிவான, சிறுசிறு சொற்றொடர்களை பயன்படுத்தி, எளிய ஆனால் அர்த்தம் பொதிந்த விஷயங்களைப் பற்றி இயேசு பேசினார். அச்சிடப்பட்ட புத்தகங்கள் புழக்கத்தில் இல்லாத அக்காலத்தில், தமது செய்தியை கேட்டவர்களுடைய மனதிலும் இருதயத்திலும் அதை அழிக்க முடியாத வண்ணம் அச்சாக பதிய வைத்தார். சில உதாரணங்களை கவனியுங்கள்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; . . . தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.” “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.” “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.” “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.”c (மத்தேயு 6:24; 7:1, 20; 9:12; 26:52; மாற்கு 12:17; அப்போஸ்தலர் 20:35) வலிமை வாய்ந்த இந்த வார்த்தைகளை இயேசு சொல்லி சுமார் 2,000 ஆண்டுகள் உருண்டோடியும் இன்று வரை அவை மறக்கப்படவே இல்லை.
கேள்விகளைப் பயன்படுத்தி
7. இயேசு ஏன் கேள்விகளைக் கேட்டார்?
7 இயேசு சிறந்த விதத்தில் கேள்விகளைப் பயன்படுத்தினார். செவிசாய்ப்பவர்களிடம் நேரடியாக குறிப்பை சொல்ல அவருக்கு அதிக நேரம் எடுத்திருக்காது; ஆனால் அப்படிப்பட்ட சமயங்களிலும்கூட அவர் கேள்விகளைப் பயன்படுத்தினார். ஏன்? சில சமயங்களில் தம் எதிரிகளின் உள்நோக்கங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் அவர்கள் வாயை அடைக்க சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைப் பயன்படுத்தினார். (மத்தேயு 12:24-30; 21:23-27; 22:41-46) ஆனால் பல சமயங்களில் சத்தியங்களை போதிப்பதற்கும், செவிசாய்ப்பவர்களின் இருதயத்தில் இருப்பதை வெளிக்கொணருவதற்கும், சீஷர்களின் சிந்திக்கும் திறமையை தூண்டி எழுப்பி பயிற்றுவிப்பதற்கும் கேள்விகளைக் கேட்க இயேசு நேரமெடுத்துக் கொண்டார். அப்போஸ்தலன் பேதுரு சம்பந்தப்பட்ட இரண்டு உதாரணங்களை நாம் ஆராயலாம்.
8, 9. ஆலய வரிப்பணம் செலுத்தும் விஷயத்தில் பேதுரு சரியான முடிவுக்கு வர அவருக்கு உதவும் விதத்தில் இயேசு எவ்வாறு கேள்விகளைப் பயன்படுத்தினார்?
8 முதலாவதாக, இயேசு ஆலய வரிப்பணத்தை செலுத்தினாரா என வரிப்பணம் வசூலித்தவர்கள் பேதுருவிடம் கேட்ட அந்தச் சமயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.d சில சமயங்களில் முந்திக்கொண்டு பதில் சொன்ன பேதுரு, “செலுத்துகிறார்” என பதிலளித்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து, இயேசு அவரிடம் காரண காரியத்தோடு இவ்வாறு விளக்கினார்: “சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே.” (மத்தேயு 17:24-27) அந்த கேள்விகள் மூலம் இயேசு சொல்லவந்த குறிப்பு பேதுருவுக்கு புரிந்திருக்கும். ஏன்?
9 இயேசுவின் நாளில், அரசர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆகவே அந்த ஆலயத்தில் வணங்கப்படும் பரலோக அரசரின் ஒரேபேறான குமாரனாக அவர் இருந்ததால் இயேசுவை வரிப்பணம் செலுத்தும்படி கேட்க வேண்டியதில்லை. சரியான பதிலை நேரடியாக பேதுருவிடம் சொல்வதற்கு பதிலாக, சரியான முடிவுக்கு வர அவருக்கு உதவும் கேள்விகளை திறமையாகவும் அதே சமயத்தில் மென்மையாகவும் பயன்படுத்தினார். யோசித்துப் பேச வேண்டியதன் அவசியத்தை பேதுருவுக்கு உணர்த்தவும் இயேசு அவ்வாறு கேள்விகளை கேட்டிருக்கலாம்.
10, 11. பொ.ச. 33-ன் பஸ்கா பண்டிகையின் இரவில் பேதுரு ஒரு நபரின் காதை வெட்டியபோது இயேசு என்ன செய்தார், கேள்விகள் கேட்பதன் பயனை இயேசு புரிந்துகொண்டிருந்ததை இது எவ்வாறு காட்டுகிறது?
10 இரண்டாவது சம்பவம், பொ.ச. 33-ல் பஸ்கா பண்டிகையின் இரவில் நடந்தது. இயேசுவை கைது செய்ய ஒரு கும்பல் வந்திருந்தது. இயேசுவின் சார்பாக அவர்களுடன் பட்டயத்தால் போராடலாமா என சீஷர்கள் கேட்டார்கள். (லூக்கா 22:49) பதிலுக்கு காத்திராமல், பேதுரு ஒரு நபரின் காதை பட்டயத்தால் வெட்டினார் (பேதுரு ஒருவேளை அவனை இன்னுமதிகம் காயப்படுத்த நினைத்திருக்கலாம்). பேதுரு தன் எஜமானரின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டார், ஏனென்றால் இயேசு கைது செய்யப்படுவதற்கு முற்றிலும் தயாராக இருந்தார். இயேசு என்ன செய்தார்? பொறுமையாகவே பேதுருவிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார்: “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?”—யோவான் 18:11; மத்தேயு 26:52-54.
11 நடந்த சம்பவத்தை சற்று யோசித்துப் பாருங்கள். கோபத்தில் வெகுண்டெழும் ஒரு கூட்டம் இயேசுவை சுற்றி வளைத்திருந்தது, மரணம் தமக்கு நிச்சயம் என்பதை அவர் அறிந்திருந்தார்; தம் தகப்பனின் பெயருக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை நீக்கும் பொறுப்பும், மனித குடும்பத்தின் இரட்சிப்பும் இப்போதும் தம் கையில் இருப்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இந்தச் சமயத்திலும்கூட, கேள்விகளைக் கேட்பதன் மூலம் பேதுருவின் மனதில் முக்கியமான சத்தியங்களைப் பதிய வைக்க நேரத்தை செலவழித்தார். கேள்விகள் கேட்பதன் பயனை இயேசு புரிந்து வைத்திருந்ததை இது தெளிவாக காட்டவில்லையா?
தத்ரூபமான உயர்வு நவிற்சி அணி
12, 13. (அ) உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன? (ஆ) நம் சகோதரனின் சின்னஞ்சிறிய குறைகளை விமர்சிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை வலியுறுத்திக் காட்ட இயேசு உயர்வு நவிற்சி அணியை எவ்வாறு பயன்படுத்தினார்?
12 இயேசு தமது ஊழியத்தில் மற்றொரு திறம்பட்ட போதிக்கும் முறையையும் பயன்படுத்தினார்; அதுவே உயர்வு நவிற்சி அணி. ஒரு விஷயத்தை வலியுறுத்த அதை வேண்டுமென்றே மிகைப்படுத்திக் கூறுவதாகும். உயர்வு நவிற்சி அணியை பயன்படுத்தி, மக்களின் மனதைவிட்டு நீங்கா கற்பனை காட்சிகளை இயேசு உருவாக்கினார். சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்.
13 மலைப்பிரசங்கத்தில், ‘மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது’ என்பதை வலியுறுத்துகையில் இயேசு இவ்வாறு சொன்னார்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத்தேயு 7:1-3) இதைக் கற்பனை செய்ய முடிகிறதா? தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் சுபாவமுள்ள ஒருவன் தன் சகோதரன் “கண்ணிலிருக்கிற” சாதாரண துரும்பை எடுத்துப் போட வருகிறான். காரியங்களை தெளிவாகப் பார்க்க முடியாததால் சரியான தீர்ப்பைக் கூற இந்தச் சகோதரனால் முடியவில்லை என அவன் கூறுகிறான். ஆனால் குறைகூறுபவருடைய நியாயந்தீர்க்கும் திறனை பாதிப்பதோ ஒரு ‘உத்திரம்’—கூரையை தாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பெரிய மரத்துண்டு. நம்மிடம் பெரிய குறைகள் இருக்கையில் நம் சகோதரனின் சின்னஞ்சிறிய குறைகளை விமர்சிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை மறக்க முடியாதபடிக்கு வலியுறுத்த எவ்வளவு சிறந்த வழி!
14. கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குவதைப் பற்றி இயேசு குறிப்பிட்டது ஏன் குறிப்பாக வலிமை வாய்ந்த உயர்வு நவிற்சி அணியாக இருந்தது?
14 மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு பரிசேயர்களை “குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” என வெளிப்படையாக கண்டனம் செய்தார். (மத்தேயு 23:24) குறிப்பாக இது அதிக வலிமை வாய்ந்த உயர்வு நவிற்சி அணியாகும். ஏன்? ஒரு சின்னஞ்சிறிய கொசுவுக்கும் ஒட்டகத்துக்கும்—இது இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நன்கு அறிந்திருந்த மிகப் பெரிய விலங்குகளில் ஒன்று—இடையே உள்ள வித்தியாசம் மனதில் ஆழமாக பதியத்தக்கதாக இருந்தது. ஏழு கோடி கொசுக்களின் எடையே ஒரு சராசரி ஒட்டகத்தின் எடைக்கு சமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது! அதோடு பரிசேயர்கள் திராட்சரசத்தை ஒரு துணியில் வடிகட்டியதை இயேசு அறிந்திருந்தார். சட்டங்களில் இம்மியும் பிசகாதிருப்பதை வற்புறுத்துகிற இவர்கள், ஒரு கொசுவை விழுங்குவதால் சடங்காச்சாரப்படி அசுத்தமாகிவிடக் கூடாது என்பதற்காக இப்படி செய்தார்கள். ஆனால் அடையாள அர்த்தத்தில் அவர்கள் ஒட்டகத்தை விழுங்கிக் கொண்டிருந்தார்கள், இதுவும் அசுத்தமானதே. (லேவியராகமம் 11:4, 21-24) இயேசுவின் குறிப்பு தெளிவாக இருந்தது. பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்திலுள்ள சிறிய விஷயங்களை அதிக கவனமாக பின்பற்றினார்கள், ஆனால் அதிமுக்கியமான விஷயங்களை, அதாவது “நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்” விட்டுவிட்டார்கள். (மத்தேயு 23:23) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இயேசு எவ்வளவு தெளிவாக அம்பலப்படுத்தினார்!
15. உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்தி இயேசு கற்பித்த பாடங்கள் சில யாவை?
15 தமது ஊழியம் முழுவதிலும் இயேசு இந்த உயர்வு நவிற்சி அணியை தாராளமாக பயன்படுத்தினார். சில உதாரணங்களை கவனியுங்கள். சிறிய ‘கடுகு விதையளவு விசுவாசத்தால்’ ஒரு மலையையே அப்புறப்படுத்த முடியும்—சிறிதளவு விசுவாசம் இருந்தாலே நிறைய சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்த இயேசு இதைவிட சிறந்த உதாரணத்தை தந்திருக்க முடியாது. (மத்தேயு 17:20) ஊசியின் காதில் நுழைய முற்படும் ஓர் ஒட்டகம்—பொருள் சம்பந்தமான வாழ்க்கை முறையில் ஈடுபட்டுக் கொண்டு அதே சமயத்தில் கடவுளை சேவிக்க விரும்பும் ஓர் ஐசுவரியவான் எதிர்ப்படும் கஷ்டத்தை இது எவ்வளவு அழகாக சித்தரித்துக் காட்டுகிறது! (மத்தேயு 19:24) இயேசு பயன்படுத்திய தத்ரூபமான அணிகளும் சில வார்த்தைகளிலேயே சிறந்த பலனை பெற்ற அவரது திறமையும் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லையா?
மறுக்கவே முடியாத நியாயமான வாதம்
16. இயேசு தமது கூரிய மனத்திறன்களை எப்போதும் எப்படி பயன்படுத்தினார்?
16 ஜனங்களோடு நியாயவாதம் செய்வதில் பரிபூரண மனதுடைய இயேசு அபார திறமை படைத்தவராக விளங்கினார். ஆனால் அந்தத் திறமையை அவர் ஒருபோதும் தவறாக பயன்படுத்தவில்லை. போதிக்கும்போது, சத்தியத்தை தெளிவுபடுத்த தமது கூரிய மனத்திறன்களை எப்போதும் பயன்படுத்தினார். சில சமயங்களில் அவருடைய மத எதிரிகளின் பொய் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு வலிமை வாய்ந்த வாதங்களை பயன்படுத்தினார். அநேக சந்தர்ப்பங்களில், முக்கிய பாடங்களை தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிப்பதற்கு அவர் நியாயவாதங்களைப் பயன்படுத்தினார். இதை பயன்படுத்துவதில் இயேசுவுக்கு இருந்த அபார திறமையை நாம் பார்க்கலாம்.
17, 18. பரிசேயர்களின் பொய் குற்றச்சாட்டை தவறென நிரூபிக்க இயேசு என்ன நியாய வாதத்தை பயன்படுத்தினார்?
17 குருடும் ஊமையுமான பிசாசு பிடித்தவனை இயேசு குணப்படுத்திய சமயத்தை சிந்தித்துப் பாருங்கள். இதைக் கேள்விப்பட்ட போது பரிசேயர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே [சாத்தானாலே] பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல.” சாத்தானின் பேய்களை விரட்டுவதற்கு மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தி தேவைப்பட்டதை பரிசேயர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்பதை கவனியுங்கள். ஆனால் இயேசுவை மக்கள் விசுவாசிக்காமலிருக்க இந்த வல்லமையை அவர் சாத்தானிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர்கள் கூறினார்கள். அவர்களுடைய இந்த வாதம், எப்படிப்பட்ட நியாயமான முடிவுக்கு வழிநடத்தும் என்பதை அவர்கள் சரியாக யோசிக்காததை சுட்டிக்காட்ட இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்க மாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?” (மத்தேயு 12:22-26) உண்மையில் இயேசு இதையே சொல்லிக்கொண்டிருந்தார்: ‘நீங்கள் சொல்கிறபடி நான் சாத்தானுடைய கைப்பாவையாக இருந்து, சாத்தான் கட்டிப்போட்டதை நான் அவிழ்த்துவிட்டால் சாத்தான் தனக்கு எதிராகவே செயல்பட்டு சீக்கிரத்தில் வீழ்ச்சியடைந்துவிடுவானே.’ வலிமையான வாதம் அல்லவா?
18 இயேசு இன்னும் விரிவாக இந்த விஷயத்தை நியாயமாக வாதித்தார். பரிசேயர்களுடைய சீஷர்களில் சிலரும் பேய்களை விரட்டியிருப்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் எளிய, ஆனால் நறுக்கென்ற ஒரு கேள்வியைக் கேட்டார்: “நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?” (மத்தேயு 12:27) இயேசுவுடைய தர்க்கத்தின் கருத்து இதுதான்: ‘நான் சாத்தானின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்றால், உங்கள் சீஷர்களும்கூட அதே வல்லமையாலேயே பேய்களை விரட்டியிருக்க வேண்டும்.’ பரிசேயர்களால் என்ன சொல்ல முடியும்? அவர்களுடைய சீஷர்கள் சாத்தானின் வல்லமையால் செயல்பட்டதாக அவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். மறுக்க முடியாத வாதத்தால், தமக்கு எதிராக அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு எவ்வளவு அர்த்தமற்றது என்பதை இயேசு காண்பித்தார்.
19, 20. (அ) உற்சாகமளிக்கும் எந்த விதத்தில் இயேசு நியாயவாதத்தைப் பயன்படுத்தினார்? (ஆ) ஜெபம் பண்ண கற்றுக்கொடுக்கும்படி கேட்ட சீஷர்களுக்கு ‘அதிக நிச்சயமல்லவா’ என்ற சொற்றொடரை பயன்படுத்தும் நியாயவாதத்தின் மூலம் இயேசு எவ்வாறு பதிலளித்தார்?
19 இயேசு நியாய வாதங்களை எதிரிகளின் வாயடைக்க மட்டுமே பயன்படுத்தவில்லை; யெகோவாவைப் பற்றிய உற்சாகமளிக்கும், இருதயத்தை தொடும் சத்தியங்களை போதிப்பதற்கும் நியாயமான, இணங்க வைக்கும் வாதங்களை அவர் பயன்படுத்தினார். பல தடவை ‘அதிக நிச்சயமல்லவா’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தும் நியாயவாதத்தின் மூலம் அவர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்த உண்மையை இன்னும் உறுதிப்படுத்தினார். இதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
20 ஜெபம் செய்ய தங்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி சீஷர்கள் இயேசுவைக் கேட்டார்கள்; கொடுக்க மனமில்லாத ஒரு நண்பனிடமிருந்துகூட “வருந்திக் கேட்”டதினிமித்தம் கேட்டதைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரின் உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார். தங்கள் பிள்ளைகளுக்கு “நல்ல ஈவுகளைக் கொடுக்க” மனமுள்ள பெற்றோரைப் பற்றியும் இயேசு பேசினார். அதன் பிறகு அவர் இவ்வாறு சொல்லி முடித்தார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” (லூக்கா 11:1-13) இங்கே ஒப்புமையைப் பற்றி அல்ல, ஆனால் முரண்பாட்டைப் பற்றிய குறிப்பையே இயேசு சொன்னார். மனமில்லாத நண்பரை தன் அயலகத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இணங்க வைக்க முடியும் என்றால், அபூரண பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தேவைகளை கவனித்துக்கொள்கிறார்கள் என்றால், மனத்தாழ்மையுடன் பரிசுத்த ஆவிக்காக தம்மிடம் ஜெபிக்கும் உண்மை ஊழியர்களுக்கு நம்முடைய அன்புள்ள பரம தந்தை அதைக் கொடுப்பது எவ்வளவு அதிக நிச்சயம்!
21, 22. (அ) பொருளாதார காரியங்களுக்காக கவலைப்படுவதை சமாளிப்பதன் சம்பந்தமாக ஆலோசனை கொடுக்கையில் இயேசு பயன்படுத்திய நியாய வாதம் என்ன? (ஆ) இயேசுவின் போதிக்கும் முறைகள் சிலவற்றை மறுபார்வை செய்த பின்பு, நாம் என்ன முடிவுக்கு வருகிறோம்?
21 பொருளாதார காரியங்களுக்காக கவலைப்படுவதை சமாளிப்பதன் பேரில் ஆலோசனை கொடுக்கையிலும் அதேவிதமான நியாய வாதத்தையே இயேசு பயன்படுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: ‘காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, . . . இப்படியிருக்க, அற்ப விசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?’ (லூக்கா 12:24, 27, 28) ஆம், யெகோவா பறவைகளையும் மலர்களையும் கவனித்துக்கொள்கையில் தம்முடைய ஊழியர்களை நன்கு கவனித்துக்கொள்வார் என்பது அதிக நிச்சயம் அல்லவா! இப்படிப்பட்ட மென்மையான, ஆனால் வலிமை வாய்ந்த நியாயவிவாதம் இயேசுவுக்குச் செவிசாய்த்தவர்களின் இருதயத்தை நெகிழ வைத்ததில் சந்தேகமே இல்லை.
22 இயேசு போதித்த முறைகள் சிலவற்றை கவனித்த பின்பு, அவரைக் கைது செய்யச் சென்று வெறுங்கையோடு திரும்பிய சேவகர்கள், “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று சொன்னது மிகையே அல்ல என்ற முடிவுக்கே நாம் வருகிறோம். ஆனால் உவமைகள் அல்லது உதாரணங்களைப் பயன்படுத்தி போதித்ததற்கே இயேசு மிகவும் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார். இந்த முறையை அவர் ஏன் பயன்படுத்தினார்? அவருடைய உதாரணங்களை அந்தளவுக்கு பயனுள்ளதாக்கியது எது? அடுத்த கட்டுரை இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a சேவகர்கள் ஆலோசனை சங்கத்தின் பிரதிநிதிகளாக பிரதான ஆசாரியரின் அதிகாரத்திற்குட்பட்டவர்களாக இருந்திருக்கலாம்.
b ஆகஸ்ட் 15, 2002 காவற்கோபுரம் இதழிலுள்ள ‘நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’ மற்றும் “தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்” ஆகிய கட்டுரைகளை பார்க்கவும்.
c அப்போஸ்தலர் 20:35-ல் காணப்படும் இந்தக் கடைசி வாக்கியத்தின் மூல கருத்து சுவிசேஷங்களில் காணப்பட்டாலும் அப்போஸ்தலன் பவுல் மாத்திரமே அதை மேற்கோள் காட்டுகிறார். பவுல் இந்த வாக்கியத்தை வாய்மொழியாக கேட்டிருக்கலாம் (இயேசுவின் போதனையைக் கேட்ட ஒரு சீஷனிடமிருந்து அல்லது உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவிடமிருந்து) அல்லது தெய்வீக வெளிப்படுத்துதலின் மூலம் பெற்றிருக்கலாம்.—அப்போஸ்தலர் 22:6-15; 1 கொரிந்தியர் 15:6, 8.
d யூதர்கள் இரண்டு வெள்ளிக்காசுகளை (சுமார் இரண்டு நாட்கூலியை) வருடந்தோறும் ஆலய வரிப்பணமாக செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிப்பணம், ஆலயத்தை பராமரிப்பதற்கும், அங்கு செய்யப்பட்ட சேவைக்கும், தேசத்தின் சார்பாக தினந்தோறும் செலுத்தப்பட்டு வந்த பலிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு எளிமையாகவும் தெளிவாகவும் போதித்ததை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
• இயேசு போதிக்கும்போது கேள்விகளை ஏன் பயன்படுத்தினார்?
• உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன, இந்தப் போதிக்கும் முறையை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார்?
• யெகோவாவைப் பற்றிய இருதயத்தை தொடும் சத்தியங்களை போதிக்க இயேசு எவ்வாறு நியாயவாதத்தை பயன்படுத்தினார்?
[பக்கம் 9-ன் படம்]
பாமரரும் புரிந்துகொள்ளும் எளிய மொழிநடையை இயேசு பயன்படுத்தினார்
[பக்கம் 10-ன் படம்]
பரிசேயர்கள் ‘கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கினார்கள்’