மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!
‘என்னிடமிருந்து நீ கேட்டறிந்த விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்.’—2 தீ. 2:2.
1. (அ) கடவுளுடைய மக்கள் எதை நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள், இது ஏன் இன்றும் முக்கியம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்?
எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு பயிற்சி ரொம்ப முக்கியம். அன்றைக்கு வாழ்ந்த கடவுளுடைய மக்கள் இதை நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். உதாரணத்திற்கு ஆபிரகாம், “பயிற்சி பெற்ற வீரர்களை” வைத்து லோத்துவை காப்பாற்றினார். (ஆதி. 14:14-16, NW) தாவீதுடைய நாட்களில் யெகோவாவை புகழ்ந்து பாடுவதற்காக ‘பயிற்சி பெற்ற’ பாடகர்கள் இருந்தார்கள். (1 நா. 25:7, NW) இன்று, நாம் எல்லாரும் சாத்தானோடும் இந்த பொல்லாத உலகத்தோடும் “மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.” (எபே. 6:11-13) அதுமட்டும் இல்லாமல், யெகோவாவை பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நாம் எல்லாருமே ரொம்ப முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. (எபி. 13:15, 16) இதில் வெற்றி பெற வேண்டும் என்றால், நமக்கும் பயிற்சி ரொம்ப முக்கியம். சபையில் இருக்கிற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்கு கொடுத்திருக்கிறார். (2 தீ. 2:2) அப்படியென்றால், மூப்பர்கள் என்னென்ன விதங்களில் பயிற்சி கொடுக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க உதவி செய்யுங்கள்
2. பயிற்சி கொடுப்பதற்கு முன்பு ஒரு மூப்பர் என்ன செய்ய வேண்டும், ஏன்?
2 மூப்பர்களை ஒரு தோட்டக்காரருக்கு ஒப்பிடலாம். நிலத்தில் விதை விதைப்பதற்கு முன்பு ஒரு தோட்டக்காரர் அதற்கு தேவையான உரத்தைப் போட வேண்டும். அப்போதுதான் செடி நன்றாக வளரும். அதேமாதிரி ஒரு சகோதரருக்கு பயிற்சி கொடுப்பதற்கு முன்பு அவருக்கு உற்சாகத்தைத் தரும் சில பைபிள் விஷயங்களை ஒரு மூப்பர் எடுத்து காட்ட வேண்டும். அப்போதுதான், அந்த மூப்பர் கொடுக்கிற பயிற்சியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருப்பார்.—1 தீ. 4:6.
3. (அ) மாற்கு 12:29, 30-ல் இருக்கிற வார்த்தைகள், பயிற்சி பெறும் சகோதரருக்கு எப்படி உதவியாக இருக்கும்? (ஆ) பயிற்சி பெறும் சகோதரரோடு சேர்ந்து ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?
3 பயிற்சி பெறும் சகோதரர் தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று ஒரு மூப்பர் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரிடம், ‘யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிச்சதுக்கு அப்புறம் வாழ்க்கையில என்ன மாற்றம் செஞ்சிருக்கீங்க?’ என்று கேட்கலாம். அவர் சொல்கிற பதிலை வைத்து, யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அவரிடம் பேசுங்கள். (மாற்கு 12:29, 30-ஐ வாசியுங்கள்.) நீங்கள் சொல்லிக் கொடுக்கிற விஷயத்தை அந்த சகோதரர் நன்றாக செய்வதற்கு யெகோவாவுடைய சக்தி தேவை. அதற்காக அவரோடு சேர்ந்து ஜெபம் செய்யுங்கள். நீங்கள் அவருக்காக ஜெபம் செய்வதைப் பார்க்கும்போது, அந்த சகோதரருக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும்.
4. (அ) ஒரு சகோதரர் வேகமாக முன்னேற்றம் செய்ய என்னென்ன பைபிள் பதிவுகள் உதவும்? (ஆ) மூப்பர்கள் என்ன குறிக்கோளோடு மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்?
4 பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கும்போது, பைபிளில் இருக்கிற சில பதிவுகளை அந்த சகோதரருக்கு எடுத்துக் காட்டலாம். மற்றவர்களுக்கு உதவி செய்ய... மனத்தாழ்மையாக இருக்க... நம்பகமானவராக இருக்க... இந்த பதிவுகள் அவருக்கு உதவும். (1 இரா. 19:19-21; நெ. 7:2; 13:13; அப். 18:24-26) ஒரு செடி நன்றாக வளருவதற்கு உரம் எவ்வளவு முக்கியமோ அதேமாதிரி, சொல்லிக் கொடுக்கிற விஷயங்களை நன்றாகக் கற்றுக்கொள்வதற்கு இந்த குணங்கள் ரொம்ப முக்கியம். இந்த குணங்களை அந்த சகோதரர் வளர்க்கும்போது அவரால் வேகமாக முன்னேற முடியும். ஒரு சகோதரர் பைபிள் அடிப்படையில் ஞானமான தீர்மானங்கள் எடுக்க உதவி செய்வதுதான் தன்னுடைய முக்கிய குறிக்கோள் என்று பிரான்சில் இருக்கும் ஜீன்-க்ளாட் என்ற மூப்பர் சொல்கிறார். ‘வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், அவரோட சேர்ந்து பைபிள்ல இருக்கிற ஒரு வசனத்தை வாசிப்பேன். பைபிள்ல இருக்கிற அற்புதமான விஷயங்களை பார்க்கிறதுக்கு நான் அவருக்கு உதவி செய்வேன்’ என்றும் அவர் சொல்கிறார். (சங். 119:18) யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க ஒரு சகோதரருக்கு வேறு எப்படி உதவி செய்யலாம்?
குறிக்கோள் வைக்க உதவி செய்யுங்கள்
5. (அ) நீங்கள் பயிற்சி கொடுக்கும் சகோதரரிடம் யெகோவாவுக்கு சேவை செய்வதைப் பற்றி பேசுவது ஏன் ரொம்ப முக்கியம்? (ஆ) டீன்-ஏஜில் இருந்தே ஒரு சகோதரருக்கு ஏன் பயிற்சி கொடுக்க வேண்டும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
5 நீங்கள் பயிற்சி கொடுக்கும் சகோதரரிடம், ‘யெகோவாவோட சேவையில என்ன குறிக்கோள் வைச்சிருக்கீங்க?’ என்று கேளுங்கள். ஒருவேளை அவர் அதைப் பற்றி எதுவும் யோசித்து பார்க்கவில்லை என்றால், குறிக்கோள் வைக்க அவருக்கு உதவி செய்யுங்கள். யெகோவாவுடைய சேவையில் நீங்கள் என்ன குறிக்கோள் வைத்திருந்தீர்கள் என்று சொல்லுங்கள். அதை அடைந்தபோது நீங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டீர்கள் என்றும் சொல்லுங்கள். இதெல்லாம் ஒரு சின்ன விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பயிற்சி பெறும் சகோதரருக்கு இது ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்யும் விக்டர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். ‘நான் டீன்-ஏஜ்ல இருந்தப்பவே, யெகோவாவோட சேவையில நான் என்ன குறிக்கோள் வைச்சிருக்கேனு ஒரு மூப்பர் கேட்டார். அவர் அப்படி கேட்டதுனாலதான் ஊழியம் செய்றத பத்தி ஆழமா யோசிக்க ஆரம்பிச்சேன்.’ டீன்-ஏஜில் இருந்தே சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது ரொம்ப முக்கியம் என்று அனுபவமுள்ள மூப்பர்களும் சொல்கிறார்கள். அதனால், அவர்களுடைய வயதிற்கு ஏற்ற மாதிரி சபையில் சில வேலைகளை அவர்களுக்கு கொடுங்கள். அப்போதுதான், அவர்கள் பெரியவர்களான பிறகும் யெகோவாவுக்கு சேவை செய்வதைப் பற்றியே யோசிப்பார்கள். அவர்களுடைய கவனம் வேறு எங்கேயும் போகாது.—சங்கீதம் 71:5, 17-ஐ வாசியுங்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
6. இயேசு மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்தபோது என்ன செய்தார்?
6 பயிற்சி கொடுக்கும் விஷயத்தில் இயேசு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவர் எப்படிப் பயிற்சி கொடுத்தார் என்று கவனியுங்கள்: தன்னுடைய சீடர்களிடம் ஒரு விஷயத்தை செய்யுங்கள் என்று சொல்வதற்கு முன்பு அதை ஏன் செய்ய வேண்டும் என்ற காரணத்தை சொன்னார். உதாரணத்திற்கு சீடர்களிடம் இயேசு, ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்று சொல்வதற்கு முன்பு அந்த வேலையை ஏன் செய்ய வேண்டும் என்ற காரணத்தை சொன்னார். அதாவது, “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். (மத். 28:18, 19) அதேமாதிரி, மூப்பர்களும் ஒரு சகோதரருக்கு பயிற்சி கொடுக்கும்போது அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது. அதை ஏன் செய்ய வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். அப்போதுதான் கொடுக்கப்படும் வேலையை அவர் ஆர்வமாக செய்வார். மூப்பர்கள் எப்படி இயேசுவை போல பயிற்சி கொடுக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.
7, 8. (அ) மூப்பர்கள் எப்படி இயேசுவை போல பயிற்சி கொடுக்கலாம்? (ஆ) ஒரு சகோதரரைப் பாராட்டுவது ஏன் ரொம்ப முக்கியம்? (இ) மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்க மூப்பர்களுக்கு என்ன ஆலோசனைகள் உதவியாக இருக்கும்? (“மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்க...” என்ற பெட்டியை பாருங்கள்.)
7 ஒரு சகோதரரிடம் ஒரு வேலையை கொடுப்பதற்கு முன்பு அதை ஏன் செய்ய வேண்டும் என்று அவருக்கு பைபிளில் இருந்து விளக்குங்கள். அப்போதுதான், அந்த வேலையை ஏன் செய்ய வேண்டும் என்ற காரணத்தை பைபிளிலிருந்து புரிந்துகொள்வார். உதாரணத்திற்கு, ராஜ்ய மன்றத்தின் வாசலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க சொல்லி ஒரு சகோதரரிடம் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையை ஏன் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தீத்து 2:10-ஐ வாசித்துக் காட்டுங்கள். அந்த வேலை, கடவுளுடைய போதனைகளை எப்படி ‘அலங்கரிக்கிறது’ என்று விளக்குங்கள். அதோடு, அவர் செய்கிற வேலை சபையில் இருக்கிற வயதானவர்களுக்கு எப்படி உதவியாக இருக்குமென்று யோசித்துப் பார்க்க சொல்லுங்கள். இந்த மாதிரி அவருக்கு பயிற்சி கொடுக்கும்போது சபையில் இருக்கிறவர்களுடைய நன்மையை மனதில் வைத்து அவர் வேலை செய்வார். அவர் செய்யும் வேலை சகோதர சகோதரிகளுக்கு பிரயோஜனமாக இருப்பதைப் பார்க்கும்போது அவரும் சந்தோஷப்படுவார்.
8 நீங்கள் சொல்லி கொடுத்தது போலவே அந்த சகோதரர் செய்யும்போது அவரை மனதார பாராட்டுங்கள். ஒரு செடி செழிப்பாக வளர வேண்டுமென்றால் அதற்கு தண்ணீர் ஊற்றுவது ரொம்ப முக்கியம். அதேபோல, யெகோவாவுடைய சேவையில் ஒரு சகோதரர் முன்னேற வேண்டுமென்றால் அவரைப் பாராட்டுவது ரொம்ப முக்கியம்.—மத்தேயு 3:17-ஐ ஒப்பிடுங்கள்.
பயிற்சி கொடுப்பது ஏன் கஷ்டம்?
9. (அ) பணக்கார நாடுகளில் இருக்கும் மூப்பர்களுக்கு எந்த விஷயம் கஷ்டமாக இருக்கிறது? (ஆ) யெகோவாவுடைய சேவைக்கு இளம் சகோதரர்கள் ஏன் முதலிடம் கொடுப்பது கிடையாது?
9 பணக்கார நாடுகளில் இருக்கிற இளம் சகோதரர்களை (20 அல்லது 30 வயதுகளில் இருக்கும் சகோதரர்களை) சபை வேலையை செய்வதற்கு உற்சாகப்படுத்துவது மூப்பர்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் ஏன் சபை வேலையை செய்வதற்கு யோசிக்கிறார்கள் என்று 20 நாடுகளில் இருக்கிற அனுபவமுள்ள மூப்பர்களிடம் கேட்டோம். அவர்களில் நிறைய பேர் ஒரே மாதிரிதான் பதில் சொன்னார்கள். அதாவது, பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்ய அவர்களுடைய அப்பா-அம்மா உற்சாகப்படுத்துவது இல்லை. அப்படியே யெகோவாவை சேவிக்க வேண்டும் என்று பிள்ளைகள் நினைத்தால்கூட அப்பா-அம்மா விடுவது கிடையாது. அவர்கள் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றுதான் உற்சாகப்படுத்துகிறார்கள். அதனால் அந்த பிள்ளைகள் யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பது கிடையாது.—மத். 10:24.
10, 11. (அ) சபை வேலைகளை செய்ய ஆர்வம் இல்லாத ஒருவருக்கு மூப்பர் எப்படி உதவி செய்யலாம்? (ஆ) என்ன பைபிள் வசனங்களை அந்த சகோதரருக்கு காட்டலாம், ஏன்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
10 சபை வேலைகளை செய்ய ஒரு சகோதரருக்கு ஆர்வம் இல்லாத மாதிரி தெரியலாம். ஆனால், அவர் ஆர்வமே காட்ட மாட்டார் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவருடைய ஆர்வத்தை வளர்ப்பதற்கு உங்களால் உதவி செய்ய முடியும். அதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு செடி வளையாமல் நேராக வளருவதற்கு அந்த தோட்டக்காரர் படிப்படியாகத்தான் முயற்சி செய்வார். அதேமாதிரி, அந்த சகோதரர் சபையில் இருக்கிற வேலைகளை செய்வதற்கு மூப்பர் படிப்படியாக உதவி செய்ய வேண்டும். அதை எப்படி செய்யலாம்?
11 அந்த சகோதரரோடு நன்றாகப் பழகுவதற்கு நேரம் செலவு செய்யுங்கள், அவருடைய நண்பராக ஆகுங்கள். அவருடைய சேவை சபைக்கு எவ்வளவு முக்கியம் என்று புரிய வையுங்கள். அதற்கு பிறகு, யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணித்து இருக்கிற விஷயத்தைப் பற்றி யோசித்து பார்க்க அவருக்கு உதவி செய்யுங்கள். அதற்கு பொருத்தமான பைபிள் வசனங்களை காட்டுங்கள். (பிர. 5:4; ஏசா. 6:8; மத். 6:24, 33; லூக். 9:57-62; 1 கொ. 15:58; 2 கொ. 5:15; 13:5) இந்த மாதிரி சில கேள்விகளை அவரிடம் கேளுங்கள்: ‘யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்கும்போது அவர்கிட்ட என்ன வாக்கு கொடுத்தீங்க? நீங்க ஞானஸ்நானம் எடுத்ததை பார்த்தப்போ யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும்?’ (நீதி. 27:11) ‘அதே சமயத்துல சாத்தானுக்கு எப்படி இருந்திருக்கும்?’ (1 பே. 5:8) பொருத்தமான பைபிள் வசனங்களை வாசித்து காட்டுவது அந்த சகோதரருடைய மனதை தொடும்; முன்னேற்றம் செய்வதற்கும் அவரை நிச்சயம் தூண்டும்.—எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
பயிற்சி பெறுகிறவர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்
12, 13. (அ) எலியா கொடுத்த வேலைகளை எலிசா எப்படி செய்தார்? (ஆ) எலிசாவை எப்படி யெகோவா ஆசீர்வதித்தார்?
12 இளம் சகோதரர்களே, உங்களுடைய சேவை சபைக்கு ரொம்ப தேவை! ஆனால், யெகோவாவுக்கு நன்றாக சேவை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதற்கு எலிசா தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைப் பார்க்கலாம்.
13 கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன்பு எலியா தீர்க்கதரிசி வாழ்ந்தார். தனக்கு வேலை செய்வதற்காக இளைஞராக இருந்த எலிசாவை அவர் தன்னோடு வரச் சொன்னார். எலிசா உடனே வந்தார். எலியா கொடுத்த சின்ன சின்ன வேலைகளைக்கூட உண்மையாக செய்தார். (2 இரா. 3:11) எலியா ஆறு வருடம் எலிசாவுக்குப் பயிற்சி கொடுத்தார். அதற்கு பின்பு, இஸ்ரவேலில் எலியா செய்துவந்த சேவை முடியப்போகிற சமயம் வந்தது. அதனால், இனிமேல் தன்னோடு வர வேண்டாம் என்று எலிசாவிடம் சொன்னார். அதற்கு எலிசா, ‘உங்களை விட்டு போக மாட்டேன்’ என்று மூன்று தடவை சொன்னார். எலியாவோடு எவ்வளவு நாள் இருக்க முடியுமோ அவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்று எலிசா தீர்மானமாக இருந்தார். எலியாவுக்கு இப்படி உண்மையோடு இருந்ததால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். ‘எலியா சுழல்காற்றில் பரலோகத்துக்கு ஏறிப்போவதை’ பார்க்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார்.—2 இரா. 2:1-12.
14. (அ) பயிற்சி பெறுகிறவர்கள் எலிசாவை போல எப்படி நடந்துகொள்ளலாம்? (ஆ) பயிற்சி பெறுகிறவர்கள் உண்மையாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
14 இன்று, நீங்கள் எப்படி எலிசாவை போல நடந்துகொள்ளலாம்? பயிற்சி கொடுக்கும் மூப்பர் உங்களுக்கு என்ன வேலை கொடுத்தாலும், ஒருவேளை சின்ன சின்ன வேலையாக இருந்தாலும் அதை உடனே செய்யுங்கள். அவரை ஒரு கண்டிப்பான ஆளாக பார்க்காமல், நல்ல நண்பராக பாருங்கள். உங்களுக்காக அவர் எடுக்கிற முயற்சிக்கு நன்றி சொல்லுங்கள், அவரிடம் இருந்து நீங்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கொடுக்கிற எந்தவொரு வேலையையும் உண்மையோடு செய்யுங்கள். இது ஏன் ரொம்ப முக்கியம்? உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை நீங்கள் உண்மையாக செய்யுங்கள். அப்படி செய்யும்போது, சபையில் உங்களுக்கு பொறுப்புகளைக் கொடுக்க யெகோவா விரும்புகிறார் என்று மூப்பர்கள் புரிந்துகொள்வார்கள். உங்களை நம்பி இன்னும் நிறைய பொறுப்புகளையும் கொடுப்பார்கள்.—சங். 101:6; 2 தீமோத்தேயு 2:2-ஐ வாசியுங்கள்.
மூப்பர்களுக்கு மரியாதை கொடுங்கள்
15, 16. (அ) எலிசா எப்படி எலியாவிடம் மரியாதையாக நடந்துகொண்டார்? (ஆரம்பப் படம்) (ஆ) மற்ற தீர்க்கதரிசிகள் ஏன் எலிசாவை நம்பினார்கள்?
15 பயிற்சி பெறும் சகோதரர்கள் எலிசா தீர்க்கதரிசியிடம் இருந்து இன்னொரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். எலிசா தனக்கு பயிற்சி கொடுத்த எலியாவுக்கு மரியாதை கொடுத்தார். எரிகோவில் இருந்த சில தீர்க்கதரிசிகளை சந்தித்து பேசியதற்கு பின்பு, எலியாவும் எலிசாவும் யோர்தான் நதிக்கு போனார்கள். அங்கே எலியா, ‘தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தார்; அது இருபக்கமாகப் பிரிந்தது.’ நதியை கடந்ததற்கு பின்பு இரண்டு பேரும் பேசிக்கொண்டே போனார்கள். எலியா சொன்ன எல்லா விஷயத்தையும் எலிசா கவனமாக கேட்டார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். ஆனால், தனக்கு எல்லாமே தெரியும் என்று எலிசா நினைக்கவில்லை. எலியா சுழல்காற்றில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு பின்பு, எலிசா யோர்தானுக்கு போனார். அங்கே, எலியாவுடைய சால்வையை எடுத்து தண்ணீரை அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொன்னார். தண்ணீர் மறுபடியும் இரண்டாகப் பிரிந்தது.—2 இரா. 2:8-14.
16 எலிசா செய்த முதல் அற்புதத்தைக் கவனித்தீர்களா? எலியா கடைசியாக செய்த அற்புதத்தை போலவேதான் எலிசாவும் செய்தார். எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு பின்பு, அவர் செய்த வேலையை இப்போது எலிசா செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்த வேலையை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக, எலியா சொல்லிக் கொடுத்த மாதிரியே செய்தார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? எலிசாவுக்கு எலியாமீது ரொம்ப மரியாதை இருந்தது என்று தெரிந்துகொள்கிறோம். எலிசா அப்படி செய்ததால், மற்ற தீர்க்கதரிசிகளும் அவரை நம்பினார்கள். (2 இரா. 2:15) எலிசா 60 வருடங்கள் ஒரு தீர்க்கதரிசியாக சேவை செய்தார். அப்போது, எலியாவைவிட நிறைய அற்புதங்களை செய்ய யெகோவா அவருக்கு உதவி செய்தார். பயிற்சி பெறும் சகோதரர்கள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
17. (அ) பயிற்சி பெறுகிறவர்கள் எலிசாவை மாதிரி எப்படி நடந்துகொள்ளலாம்? (ஆ) பயிற்சி பெறுகிறவர்களை யெகோவா எப்படிப் பயன்படுத்துவார்?
17 சபையில் சில பொறுப்புகள் கிடைத்த உடனே எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்ய வேண்டுமென நினைக்காதீர்கள். சபையில் என்ன தேவை இருக்கிறது... நம்முடைய அமைப்பு என்ன சொல்கிறார்கள்... என்பதை வைத்துதான் மாற்றங்கள் செய்ய முடியும். நீங்கள் ஆசைப்படுவதால் எதையும் வித்தியாசமாக செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எலிசா செய்ததை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பயிற்சி கொடுத்த எலியாமீது அவருக்கு ரொம்ப மரியாதை இருந்தது. எலிசா எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டுமென நினைக்கவில்லை. அதனால்தான் மற்ற தீர்க்கதரிசிகள் அவர்மீது நம்பிக்கை வைத்தார்கள். நீங்களும் எலிசா மாதிரி நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு பைபிள் அடிப்படையில் என்ன பயிற்சி கிடைத்திருக்கிறதோ அதன்படி செய்யுங்கள். அப்போதுதான் பயிற்சி கொடுத்த மூப்பருக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியும். அதோடு, மற்ற சகோதர சகோதரிகளும் உங்கள்மீது நம்பிக்கை வைப்பார்கள். (1 கொரிந்தியர் 4:17-ஐ வாசியுங்கள்.) போகப்போக நீங்களும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்; நிறைய அனுபவமும் கிடைக்கும். இன்று நம்முடைய அமைப்பு ரொம்ப வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. நம்முடைய அமைப்பு சொல்கிற மாற்றங்களை சபையில் செய்வதற்கு உங்களுக்கு கிடைத்த அனுபவம் உதவியாக இருக்கும். எலியாவைவிட எலிசா நிறைய வேலைகளை செய்வதற்கு யெகோவா உதவி செய்தார். அதேமாதிரி உங்களுக்கும் உதவி செய்வார். நீங்களும், உங்களுக்கு பயிற்சி கொடுத்தவர்களைவிட நிறைய வேலைகளை செய்வீர்கள்.—யோவா. 14:12.
18. சபையில் இருக்கிற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுப்பது ஏன் ரொம்ப ரொம்ப முக்கியம்?
18 மூப்பர்கள் எப்படி நேரம் ஒதுக்கி மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்பதைப் பற்றி போன கட்டுரையிலும் இந்த கட்டுரையிலும் பார்த்தோம். மூப்பர்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதேமாதிரி, தகுதியுள்ள சகோதரர்கள் மூப்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்... கற்றுக்கொண்ட விஷயங்களை சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும்... என்று நாங்கள் விரும்புகிறோம். இப்படி செய்யும்போது, சபைகள் நிச்சயம் பலப்படும். அதனால், சபையில் இருக்கிற எல்லாரும் வரப்போகிற பிரச்சனைகளை நன்றாக சமாளிக்க முடியும். அதோடு கடவுளுக்கு உண்மையாகவும் இருக்க முடியும்.
a ஒரு சகோதரர் மனத்தாழ்மையாக இருந்தால்... கிறிஸ்தவ முதிர்ச்சியை காட்டினால்... கண்காணிக்கான தகுதிகளை வளர்த்திருந்தால்... அவருக்கு 20 வயது ஆகவில்லை என்றாலும் அவர் உதவி ஊழியராக சேவை செய்வதற்கு மூப்பர்கள் சிபாரிசு செய்யலாம்.—1 தீ. 3:8-10, 12; மே 2000 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ஐ பாருங்கள்.
b ஏப்ரல் 15, 2012 காவற்கோபுரம் பக்கங்கள் 14-16, பாராக்கள் 8-13-ஐயும் ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகத்தில் அதிகாரம் 16, பாராக்கள் 1-3-ஐயும் பாருங்கள். இதில் இருக்கிற விஷயங்களையும் அந்த சகோதரரோடு கலந்துபேசுங்கள்.