மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 2
“உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உங்கள் தகப்பனாகிய கடவுள் அறிந்திருக்கிறார்.”—மத். 6:8.
1-3. தன்னுடைய தேவைகளை யெகோவா அறிந்து வைத்திருக்கிறார் என்பதை ஒரு சகோதரியால் எப்படி நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது?
லானா என்ற சகோதரி 2012-ல் ஜெர்மனிக்குப் போய்க்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தை அவரால் மறக்கவே முடியாது. அவர் விமான நிலையத்திற்கு ரயிலில் போய்க்கொண்டு இருந்தபோது, யாரிடமாவது சாட்சி கொடுக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவர் விமான நிலையத்திற்கு வந்த பிறகுதான் தன் விமானம் தாமதமானதும், அதற்காக மறுநாள்வரை காத்திருக்க வேண்டுமென்பதும் லானாவுக்குத் தெரிய வந்தது. அவர் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி இருந்ததால் தங்குவதற்கு ஏதாவது உதவி செய்யும்படியும் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.
2 அவர் ஜெபம் செய்து முடித்த உடனேயே, “லானா, இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?” என்று ஒருவர் அவரிடம் கேட்டார். அவர் லானாவோடு பள்ளியில் படித்த நண்பர். அவர் தென் ஆப்பிரிக்காவுக்குப் போவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரை வழியனுப்புவதற்காக அவருடைய அம்மாவும் பாட்டியும் அவரோடு வந்திருந்தார்கள். லானா தன் சூழ்நிலையைப் பற்றி அவர்களிடம் சொன்னார். உடனே, அவர்கள் லானாவை தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். லானாவின் மத நம்பிக்கைகளைப் பற்றியும் பயனியர் ஊழியத்தைப் பற்றியும் அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.
3 அடுத்த நாள் காலையிலும், பைபிளிலிருந்து அவர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு லானா பதில் சொன்னார். சாட்சிகள் அவர்களை சந்திப்பதற்காக அவர்களைப் பற்றிய தகவல்களை லானா வாங்கிக்கொண்டார். லானா தன்னுடைய பயணத்தை முடித்துவிட்டு பத்திரமாக வீடு திரும்பினார். தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்கிறார். லானா கேட்ட 2 விஷயங்களுக்கும் யெகோவா எப்படிப் பதிலளித்தார் என்று பார்த்தீர்களா! தன்னுடைய தேவைகளை அறிந்து யெகோவா தனக்கு உதவி செய்ததை லானாவால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.—சங். 65:2.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
4 நமக்கு திடீரென ஏதாவது ஒரு பிரச்சினை வரும்போது, உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வோம். நாம் அப்படி ஜெபம் செய்யும்போது அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார். (சங். 34:15; நீதி. 15:8) ஆனால், நாம் ஜெபம் செய்ய வேண்டிய இன்னும் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை இயேசுவின் மாதிரி ஜெபத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். என்ன நான்கு விஷயங்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அது நமக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.—மத்தேயு 6:11-13-ஐ வாசியுங்கள்.
“இன்றைக்குத் தேவையான ஆகாரத்தை எங்களுக்குக் கொடுங்கள்”
5, 6. நமக்கு சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு இருந்தாலும், “எங்களுக்கு” ஆகாரம் கொடுங்கள் என்று இயேசு ஏன் கேட்க சொன்னார்?
5 “எனக்கு கொடுங்கள்” என்று கேட்பதற்குப் பதிலாக, “எங்களுக்குக் கொடுங்கள்” என்று கேட்கும்படி இயேசு நமக்கு சொல்லிக்கொடுத்தார். ஆப்பிரிக்காவில் இருக்கும் விக்டர் என்ற ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார், “என்ன சாப்பிடுவோம், எங்க தங்குவோம்னு எல்லாம் நானும் என் மனைவியும் கவலைப்படுறதே இல்ல. அதுக்காக, நான் யெகோவாவுக்கு எப்பவும் நன்றி சொல்வேன். ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் எங்களை நல்லா பார்த்துக்கிறாங்க. இருந்தாலும், எங்களை கவனிச்சுக்கிறவங்க பண நெருக்கடியினால கஷ்டப்படும்போது அதை சமாளிக்க அவங்களுக்கு உதவி செய்யுங்கனு நான் யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன்.”
6 சாப்பிடுவதற்கு நமக்கு ஏராளமான உணவு இருக்கலாம். ஆனால், நம் சகோதர சகோதரிகள் நிறையப் பேர் ஏழைகளாக இருக்கிறார்கள், சிலர் பேரழிவுகளினால் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபம் செய்தால் மட்டும் போதாது; அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் நடக்கிற வேலைக்காகவும் நாம் தவறாமல் நன்கொடை கொடுக்கலாம். நாம் கொடுக்கும் நன்கொடை நிறைய சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருக்கிறது.—1 யோ. 3:17.
7. ‘நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாமல் இருக்க’ வேண்டும் என்பதைப் புரியவைக்க இயேசு என்ன உதாரணத்தை சொன்னார்?
7 மாதிரி ஜெபத்தை சொல்லிக்கொடுத்த பிறகு, பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது என்று இயேசு சொன்னார். அதற்குக் காட்டுப் பூக்களின் உதாரணத்தை சொன்னார். காட்டுப் பூக்களுக்கே யெகோவா அழகாக உடுத்துவிக்கிறார் என்றால், ‘உங்களுக்கு உடுத்துவிப்பது எவ்வளவு நிச்சயம்! அதனால், “எதை உடுத்துவோம்?” என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள்’ என்று சொன்னார். பிறகு, “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்று மறுபடியும் சொன்னார். (மத். 6:30-34) அதனால், நாளைக்காகக் கவலைப்படுவதற்குப் பதிலாக, அன்றாட தேவைகள் கிடைத்தால் போதும் என்ற திருப்தியோடு நாம் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, தங்குவதற்கு ஒரு இடத்தை... குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு வேலையை... உடல்நலம் சம்பந்தமாக சரியான தீர்மானம் எடுக்க ஞானத்தை... தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட நாம் ஜெபம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
8. அந்தந்த நாளுக்குத் தேவையான ஆகாரத்தைப் பற்றி இயேசு சொன்னபோது, வேறென்ன விஷயமும் நம் ஞாபகத்திற்கு வருகிறது? (ஆரம்பப் படம்)
8 அந்தந்த நாளுக்குத் தேவையான ஆகாரத்தைப் பற்றி இயேசு சொன்னபோது, அவர் சொன்ன மற்றொரு விஷயமும் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது, “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்ற விஷயமும் நம் ஞாபகத்திற்கு வருகிறது. (மத். 4:4) அதனால், காலத்திற்கு ஏற்ற பைபிள் போதனைகளைத் தரும்படி நாம் யெகோவாவிடம் எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும்.
“எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்”
9. நம் பாவங்கள் எப்படிக் கடன்களைப் போல் இருக்கின்றன?
9 “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்” என்று இயேசு சொன்னார். இன்னொரு சமயத்தில், “எங்கள் பாவங்களை மன்னியுங்கள்” என்று சொன்னார். (மத். 6:12; லூக். 11:4) நம்முடைய பாவங்கள், கடன்களைப் போல் இருப்பதால் இயேசு அப்படி சொன்னார். 1951-ல் வெளிவந்த காவற்கோபுரம் இப்படி சொன்னது: ‘நாம் பாவம் செய்யும்போது, யெகோவாவுக்கு கடன்பட்டவர்கள் போல் இருப்போம். யெகோவாமீது அன்பு காட்டுவதும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும் நம் கடமை. நாம் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்யும்போது அவருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், அவருக்குக் கடன்பட்டவர்களாக ஆகி விடுகிறோம். அப்போது, யெகோவா நினைத்தால் நம்மிடம் உள்ள நட்பை அவரால் துண்டித்துக்கொள்ள முடியும். ஏனென்றால், பாவம் செய்வது யெகோவாவுக்குப் பிடிக்காது.’—1 யோ. 5:3.
10. எதன் அடிப்படையில் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார், அதைப் பற்றி நாம் எப்படி உணர வேண்டும்?
10 நம்முடைய பாவங்களுக்கு ஒவ்வொரு நாளும் மன்னிப்பு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் யெகோவா மீட்பு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு இயேசு தம் உயிரை பலியாகக் கொடுத்தாலும் அதன் நன்மைகளை நாம் இன்றும் அனுபவிக்கிறோம். விலைமதிப்புள்ள இந்தப் பரிசுக்காக நாம் யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும்! நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்கிற இப்படிப்பட்ட மீட்புவிலையை எந்த மனிதனாலும் கொடுத்திருக்க முடியாது. (சங்கீதம் 49:7-9-ஐயும் 1 பேதுரு 1:18, 19-ஐயும் வாசியுங்கள்.) “எங்கள் பாவங்களை மன்னியுங்கள்” என்று இயேசு சொன்னது நமக்கு இன்னொரு விஷயத்தையும் ஞாபகப்படுத்துகிறது. அதாவது, மீட்புவிலை நமக்கு எப்படி தேவைப்படுகிறதோ அதேபோல் நம் சகோதர சகோதரிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதை ஞாபகப்படுத்துகிறது. சகோதர சகோதரிகளைப் பற்றியும் அவர்களுக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்தைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அப்படி நினைத்துப் பார்த்தால்தான், அவர்கள் நமக்கு விரோதமாக ஏதாவது பாவம் செய்யும்போது நாம் அவர்களை உடனே மன்னிப்போம். பொதுவாக, அவர்கள் நமக்கு விரோதமாக பெரிய பாவங்களை செய்வதில்லை, சின்ன சின்ன தவறுகளைத்தான் செய்கிறார்கள். அந்தத் தவறுகளை நாம் மன்னிக்கும்போது, அவர்கள்மீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதையும் யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதற்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும் காட்டுவோம்.—கொலோ. 3:13.
11. நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்?
11 நாம் பாவிகளாக இருப்பதால், மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது அவர்களை மன்னிப்பது சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். (லேவி. 19:18) நம்மைப் புண்படுத்தியவர்களைப் பற்றி சபையில் இருப்பவர்களிடம் பேசும்போது, அவர்கள் நமக்கு சாதகமாகப் பேசலாம். இதனால் சபையில் பிரிவினை ஏற்படலாம். ஒருவேளை நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் பரிசை, அதாவது மீட்பு பலியை, நாம் மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அதோடு, மீட்பு பலியின் நன்மைகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். (மத். 18:35) நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால் யெகோவாவும் நம்மை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 6:14, 15-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு பிடிக்காத விஷயத்தை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாலும் அவர் நம்மை மன்னிக்க மாட்டார்.—1 யோ. 3:4, 6.
“சோதனைக்கு இணங்கிவிட எங்களை அனுமதிக்காதீர்கள்”
12, 13. (அ) இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, என்ன நடந்தது? (ஆ) சோதனைக்கு இணங்கிவிடும்போது நாம் ஏன் மற்றவர்களை குறை சொல்லக் கூடாது? (இ) மரணம்வரை உண்மையோடு இருந்ததன் மூலம் இயேசு எதை நிரூபித்துக் காட்டினார்?
12 “சோதனைக்கு இணங்கிவிட எங்களை அனுமதிக்காதீர்கள்” என்ற வார்த்தைகள், இயேசு ஞானஸ்நானம் எடுத்த உடனேயே நடந்த சம்பவத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அப்போது, கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்திற்கு வழிநடத்தியது, அவர் “அங்கு பிசாசினால் சோதிக்கப்பட்டார்.” (மத். 4:1; 6:13) யெகோவா ஏன் இதை அனுமதித்தார்? ஆதாமும் ஏவாளும் யெகோவாவுடைய ஆட்சியை எதிர்த்தபோது ஒரு பெரிய விவாதம் ஏற்பட்டது; அந்த விவாதத்தைத் தீர்ப்பதற்காகவே யெகோவா இயேசுவைப் பூமிக்கு அனுப்பினார். ஆதாம்-ஏவாள் செய்த கலகத்தால் நிறைய கேள்விகளும் எழும்பின. உதாரணத்திற்கு, யெகோவா மனிதர்களைப் படைத்த விதத்தில் ஏதாவது குறை இருக்கிறதா? ‘பொல்லாதவன்’ சோதிக்கும்போது, பாவமே செய்யாத மனிதனால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியுமா? மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொண்டால் நன்றாக இருப்பார்களா? (ஆதி. 3:4, 5) இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க காலம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் திருப்தியான பதில் கிடைக்கும்போது பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாரும் யெகோவாவின் ஆட்சிதான் சிறந்தது என்று புரிந்துகொள்வார்கள்.
13 யெகோவா பரிசுத்தராக இருப்பதால், அவர் யாரையும் கெட்ட காரியங்களால் சோதிப்பது கிடையாது. சாத்தானைத்தான் “சோதனைக்காரன்” என்று பைபிள் சொல்கிறது. (மத். 4:3) அவன் நம்மைப் பல வழிகளில் சோதிக்கிறான். ஆனால், அவனுடைய சோதனைகளை எதிர்த்து நிற்பதும் நிற்காததும் நம் கையில்தான் இருக்கிறது. அதனால், நாம் சோதனைக்கு இணங்கிவிடும்போது மற்றவர்களை குறை சொல்லக் கூடாது. (யாக்கோபு 1:13-15-ஐ வாசியுங்கள்.) சாத்தான் இயேசுவை சோதித்தபோது, கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி இயேசு அவனை உடனே எதிர்த்து நின்றார். கடவுளுக்கு உண்மையாக இருந்தார். இருந்தாலும், சாத்தான் அவரை விடவில்லை, “வேறொரு நல்ல சந்தர்ப்பம்” கிடைக்கும்வரை காத்திருந்தான். (லூக். 4:13) பாவமே செய்யாத மனிதனால், எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலும் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை இயேசு நிரூபித்துக் காட்டினார். இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரையும் சாத்தான் தன் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறான். அவன் உங்களையும் சிக்க வைக்க பார்க்கிறான்!
14. சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
14 யெகோவாவுடைய ஆட்சி சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்பட வேண்டும். அதுவரை, சாத்தான் நம்மை சோதிப்பதற்கு யெகோவா அனுமதிப்பார். யெகோவா ஒருநாளும் நம்மை ‘சோதிப்பதில்லை.’ நாம் அவருக்கு உண்மையாக இருப்போம் என்று அவர் நம்புகிறார், நமக்கு உதவியும் செய்கிறார். அதற்காக, சரியானதை செய்ய சொல்லி அவர் நம்மை கட்டாயப்படுத்துவது இல்லை. மாறாக, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் நம் சுதந்திரத்தை அவர் மதிக்கிறார். அதனால்தான், அவருக்கு உண்மையாக இருப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமையை நம்மிடமே விட்டுவிடுகிறார். சாத்தானுடைய சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க நாம் 2 விஷயங்களை செய்ய வேண்டும். (1) யெகோவாவோடு நெருங்கி இருக்க வேண்டும். (2) அவருடைய உதவிக்காக எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும். அப்படியென்றால், நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார்?
15, 16. (அ) எந்த மாதிரியான சோதனைகளுக்கு நாம் இணங்கிவிடாமல் இருக்க வேண்டும்? (ஆ) சோதனைக்கு இணங்கிவிட்டால் நாம் யாரை காரணம் காட்ட முடியாது?
15 சாத்தானுடைய சோதனைகளை எதிர்த்து நிற்க, யெகோவா தம்முடைய சக்தியை நமக்குக் கொடுக்கிறார். நாம் ஆபத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்கு, பைபிள் மூலமாகவும் கிறிஸ்தவ சபையின் மூலமாகவும் நம்மை எச்சரிக்கிறார். உதாரணத்திற்கு, தேவையில்லாத விஷயங்களுக்காக நம்முடைய நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் செலவு செய்யக் கூடாது என்று எச்சரிக்கிறார். எஸ்பென்-ஜேன் தம்பதி ஐரோப்பாவிலுள்ள ஒரு பணக்கார நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் பல வருடங்களாக, தேவை அதிகமுள்ள இடத்தில் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்தார்கள். அவர்களுக்குக் குழந்தை பிறந்ததால், ஒழுங்கான பயனியர் ஊழியத்தை நிறுத்த வேண்டியிருந்தது. இப்போது அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எஸ்பென் சொல்கிறார்: “முன்னாடி செஞ்ச மாதிரி எல்லாம் இப்போ எங்களால ஊழியத்துல அதிக நேரம் செலவு செய்ய முடியுறது இல்ல. அதனால, சாத்தானோட சோதனைக்கு நாங்க இணங்கிட கூடாதுனு யெகோவாகிட்ட எப்பவும் ஜெபம் செய்வோம். யெகோவாவோடு எங்களுக்கு இருக்கிற பந்தமும் ஊழியத்துல இருக்கிற ஆர்வமும் குறைஞ்சுடாம இருக்கணும்னு யெகோவாகிட்ட ஜெபம் செய்றோம்.”
16 இன்றைக்கு நிறைய பேர் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள். அதனால், இந்த சோதனையையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். ஒருவேளை நாம் ஆபாசத்தைப் பார்த்தால், அதற்கு சாத்தான்தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நாம் எந்தவொரு தவறையும் செய்வதற்கு சாத்தானோ அவனுடைய உலகமோ நம்மை கட்டாயப்படுத்த முடியாது. சிலர், தங்களுடைய கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆபாசமான படங்களைப் பார்க்கிறார்கள். ஆனால், நம் சகோதர சகோதரிகள் நிறைய பேர் இந்த சோதனையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படியென்றால், நம்மாலும் இதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முடியும்.—1 கொ. 10:12, 13.
“பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காத்தருளுங்கள்”
17. (அ) “பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காத்தருளுங்கள்” என்று ஜெபம் செய்வதற்கு இசைய நாம் நடக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (ஆ) சீக்கிரத்தில் என்ன நடக்கப் போகிறது?
17 “பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காத்தருளுங்கள்” என்று ஜெபம் செய்வதற்கு இசைய நாம் நடக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (1) நாம் இந்த “உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது. (2) “இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ அன்பு” வைக்க கூடாது. (யோவா. 15:19; 1 யோ. 2:15-17) சீக்கிரத்தில், சாத்தானையும் இந்தக் கெட்ட உலகத்தையும் யெகோவா அழிக்கும்போது நமக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஆனால் அதுவரைக்கும் சாத்தான் நம்மை “மிகுந்த கோபத்தோடு” தாக்குவான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், “தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று” அவனுக்குத் தெரியும்; நாம் யெகோவாவை சேவிக்காமல் இருப்பதற்கு அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்வான். அதனால், சாத்தானிடமிருந்து நம்மைப் பாதுகாக்க சொல்லி யெகோவாவிடம் எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும்.—வெளி. 12:12, 17.
18. சாத்தான் இல்லாத உலகத்தில் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
18 சாத்தான் இல்லாத உலகத்தில் வாழ ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும், அவருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும், அவருடைய விருப்பம் பூமியில் நிறைவேற வேண்டும் என்று எப்போதும் ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய தேவைகளுக்காக அவரையே நம்பி இருங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவரையே எப்போதும் சார்ந்து இருங்கள். அப்படியென்றால், மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழ உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்!