பாதுகாப்பான எதிர்காலத்தையுடைய—இளைஞர்
“எந்தளவு திகிலூட்டுவதாயும் அருவருப்பானதாயும் ஒரு [கற்பழிப்பு சம்பவம்] இருக்கமுடியுமோ அந்தளவு அது இருந்தது”—சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி இப்படித்தான் அந்தக் குற்றச்செயலை விவரித்தார். 14 முதல் 18 வயதுக்குட்பட்ட எட்டு பருவவயதினர் அடங்கிய ஒரு கும்பல் லண்டனிலுள்ள முக்கிய நகரில் பதுங்கியிருந்து ஒரு பெண் சுற்றுலா பயணியின்மீது பாய்ந்து, திரும்பத் திரும்ப அவளைக் கற்பழித்துவிட்டு, தனக்கு நீந்தத் தெரியாது என்பதாக அந்தப் பெண் சொன்னபோதும் அருகிலிருந்த ஒரு வாய்க்காலுக்குள் அவளைத் தூக்கியெறிந்தது. அந்தப் பருவவயதினரில் ஒருவனுடைய அம்மா தன் மகன் செய்திருப்பதைப் பற்றிய டிவி செய்தி அறிக்கையை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்து மயங்கிவிழும்நிலையில் இருந்ததாக சொன்னது புரிந்துகொள்ளத்தக்கதே.
விசனகரமாக, இந்த நிகழ்ச்சி இன்று சமுதாயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. குற்றச் செயலாக, குடும்ப சண்டையாக இருந்தாலும் சரி அல்லது பால்கன்ஸ், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா அல்லது மற்ற இடங்களில் நடக்கும் இன கலவரங்களாக இருந்தாலும் சரி, கொடூரமான நடத்தை சாதாரணமாக காணப்படுகிறது. இளைஞர் இப்படிப்பட்ட நிலைமைகளின் மத்தியில் வளருகின்றனர் அல்லது அவற்றைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகின்றனர். அப்படியானால் அநேகர் முரட்டுத்தனமான ஒரு தோற்றத்தை வளர்த்துக்கொண்டு, “சுபாவ அன்பில்லாதவர்களாயும்” “இச்சையடக்கமில்லாதவர்களாயும்” இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—2 தீமோத்தேயு 3:3.
‘கொடுமையுள்ளவர்களாய்’
கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் உடன் மூப்பனாகிய தீமோத்தேயுவுக்கு தன்னுடைய இரண்டாவது கடிதத்தை எழுதியபோது, ரோமாபுரி ஒரு பெரிய உலக வல்லரசாக இருந்தது. ரோம விளையாட்டு அரங்கங்களில் கொடூரமும் மூர்க்கத்தனமும் வியாபித்திருந்தன. இருந்தபோதிலும், எதிர்காலத்தில் ‘கையாளுவதற்கு கடினமாக’ இருக்கும் என்பதாக பவுல் எச்சரித்தார். (2 தீமோத்தேயு 3:1, NW) இந்தக் காலங்களைக் ‘கையாளுவதற்கு கடினமான’ என்பதாக விவரிக்கும் கிரேக்க வார்த்தை, அவை ‘கொடுமையானவையாக’ இருக்கும் என்ற கருத்தையும் உட்படுத்துவது அக்கறைக்குரியதாக இருக்கிறது. அவருடைய காலத்தில் இருந்த கொடுஞ்செயல்களுக்கான காரணத்தை, 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால், இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது நடந்த ஒரு சம்பவம் காட்டுகிறது. 30-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால், இயேசுவின் பூமிக்குரிய ஊழிய காலத்தின்போது சம்பவித்த ஒரு நிகழ்ச்சி, அவருடைய காலத்திலிருந்த ஒரு சில இரக்கமற்ற கொடுஞ்செயல்களுக்கு பொறுப்பாயிருந்தது என்ன என்பதைக் காட்டுகிறது.
இயேசு அப்போதுதான் கலிலேயக் கடலின் கிழக்குக் கரைக்கு படகில் வந்துசேர்ந்திருந்தார். அவர் கரையேறும்போது, இரண்டு மனிதர்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். அவர்களுடைய பயங்கரமான தோற்றத்திலிருந்தும் அவர்கள் போட்ட கூச்சலிலிருந்தும் ஏதோ படுமோசமான கோளாறு அவர்களுக்கு இருப்பது தெளிவாகியது. அவர்கள் ‘மிகவும் கொடுமையுள்ளவர்களாய்’ இருந்தார்கள், உண்மையில் பிசாசு பிடித்தவர்களாயிருந்தார்கள்.a அவர்களுடைய கொடுமையான செயல்களுக்கு காரணமாயிருந்த பொல்லாத ஆவிகளே அவர்களை கூச்சலிட வைத்தன. “தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன?” என்று உரத்த சத்தமாய் அந்த மனிதர்கள் கூப்பிட்டனர். “காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ”? அந்த இரண்டு மனிதர்களைப் பிடித்திருந்த பொல்லாத ஆவிகள், கடவுள் பேய்களின்மீது தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற ஏற்கெனவே காலத்தை குறித்திருப்பதை நன்றாகவே அறிந்திருந்தன. அவை நித்தியமாக அழிக்கப்படும் என்பதை இது அர்த்தப்படுத்தும். ஆனால் அந்தச் சமயம் வரையாக கொடுமையான வன்முறையைத் தூண்டுவதற்கு அவை தங்களுக்கிருக்கும் மீமானிட சக்தியைப் பயன்படுத்திக்கொள்ளவிருந்தன. இந்தப் பிசாசுகளை விரட்டுவதற்கு இயேசு செய்த அற்புதமான செயலே அந்த இரண்டு மனிதர்களுக்கும் விடுதலையைத் தந்தது.—மத்தேயு 8:28-32; யூதா 6.
இளைஞர் உட்பட இன்று மக்கள் கிறுக்குத்தனமாக நடந்துகொள்ளும்போது நமக்கு அந்தச் சம்பவமே நினைவுக்கு வருகிறது. ஏன்? ஏனென்றால் இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதல் விளக்குவதைப்போல நாம் இதுபோன்ற ஒரு ஆபத்தையே நாம் எதிர்ப்படுகின்றோம். “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தான் இப்படியாக தாழ்த்தப்பட்டதால் ‘மிகுந்த கோபம்’ பின்தொடருவதை தயவுசெய்து கவனியுங்கள், ஏனென்றால் அவனுக்குக் கொஞ்ச காலம் மாத்திரமே இருப்பதை அவன் அறிந்திருக்கிறான்.
தாக்குதலின்கீழ்
இந்தப் பத்திரிகை அடிக்கடி குறிப்பிடுவது போல, பரலோகத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக கிறிஸ்து இயேசு 1914-ல் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். இயேசு உடனடியாக கடவுளின் பிரதான சத்துருவாகிய சாத்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக பிசாசும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள், இப்பொழுது அவர்களுடைய கவனம் இந்தப் பூமியின்மீதே ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 12:7-9) அவனுடைய செல்வாக்கு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளபடியால் சாத்தான் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) அவனுக்கு யார் எளிதில் இரையாகிறார்கள்? குறிப்பாக வாழ்க்கையிலும் மனித உறவுகளிலும் அனுபவமற்றவர்களாக இருப்பவர்களே என்பது புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லையா? இதன் காரணமாக இன்று இளைஞர் பிசாசின் முக்கிய இலக்காகியிருக்கிறார்கள். அவர்களுடைய இசையின் மூலமாகவும் ஓய்வுநேர விருப்பார்வ வேலைகளின் மூலமாகவும் அவர்கள் பிசாசின் கைப்பாவைகளாக ஆகிவிடுகிறார்கள்.—எபேசியர் 6:11, 12.
இளைஞர் தங்கள் வாழ்க்கையில் பிரயோஜனமாக எதையாவது செய்ய முற்பட்டாலும்கூட, முன்னேற்றத்திற்குத் தடைகள் இருப்பதை காண்கின்றனர். இரண்டாம் உலக போர் முடிவுற்ற சமயத்திலிருந்து, போரில் ஈடுபட்டிருந்த அநேக நாடுகளில் வாழ்ந்த பெற்றோர் தங்கள் குடும்பங்களுக்கு வளமான வாழ்க்கை முறையை அமைத்துத்தருவதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். பொருளாதார உடைமைகளும் கட்டுப்பாடற்ற ஓய்வுநேரங்களும் பொழுதுபோக்கும் முக்கிய குறிக்கோள்களாகியிருக்கின்றன. இதன் விளைவாக அநேகர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் . . . மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எச்சரித்தார். (1 தீமோத்தேயு 6:9, 10) பொதுவில் இன்றைய பொருளாசை மிக்க சமுதாயத்திலுள்ள மக்கள் பொருளாதார, பணம் சம்பந்தமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வேதனைகளால் தங்களை உருவக்குத்திக் கொள்வதை நாம் காண்கிறோம். இவர்கள் மத்தியில் கடவுளுடைய பிரதான சத்துருவின் இந்தத் தந்திரத்துக்கு இரையாகியிருக்கும் அநேக இளைஞர் இருக்கின்றனர்.
ஆனால் சந்தோஷத்திற்குரிய நல்ல செய்தி இருக்கிறது. அது பாதுகாப்பான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் இளைஞரைப் பற்றியது. இது எவ்வாறு சாத்தியம்?
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்
அநேக இளைஞருக்கு உயர்ந்த இலட்சியங்கள் இருக்கின்றன. வயதுவந்தவர்கள் மத்தியில் சாதாரணமாக காணப்படும் மோசமாகிவரும் தராதரங்களை அவர்கள் ஏற்க மறுத்துவிடுகின்றனர். அநீதியும் அதிகார வேட்கையுமுள்ள அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் இரக்கமற்ற மனநிலையும் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது. இளைஞராய் இருந்தால், ஒருவேளை நீங்களும் இவ்வாறே உணருவீர்கள்.
பருவவயதின் பிற்பட்ட ஆண்டுகளில் இருக்கும் செட்ரிக்கை எடுத்துக்கொள்ளுங்கள். இவனுடைய அனுபவம் ஒன்றும் வித்தியாசமான ஒன்றல்ல.b சிறு பிள்ளையாக இருக்கையில் மரணபயம் உட்பட பல்வகை பயங்கள் அவனுக்கிருந்தன. வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன என்பதாக அவன் யோசித்தான். 15 வயதுள்ளவனாகும் வரையிலும் அவனுடைய கேள்விகளுக்கு விடைகாண முடியாமல், அவனைப்போலவே யோசித்த மற்ற இளைஞரோடு சேர்ந்து வாழ்க்கையின் அர்த்தமென்ன என்பதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். “நாங்கள் போதை வஸ்துக்களைப் புகைத்து பல மணிநேரங்கள் பேசிக்கொண்டே இருப்போம்” என்பதாக அவன் நினைவுபடுத்தி சொல்கிறான். “உன்னைப் போலவே ஒவ்வொருவரும் யோசிப்பது தெரிகிறது, ஆனால் யாரிடமும் பதில்கள் இல்லை.”
மற்ற அநேக இளைஞரைப் போலவே, செட்ரிக்குக்கும் கிளர்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்ற தீவிரமான ஆவல் இருந்தது. வெறுமனே போதை வஸ்துக்களை உபயோகிப்பது அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை. அவன் விரைவில் திருடுவதிலும் போதை வஸ்துக்களைக் கள்ளத்தனமாக கடத்துவதிலும் ஈடுபட்டான். இன்னும் புதிய சவால்களை அவன் சந்திக்க விரும்பினான். குறிப்பிட்ட ஒரு பொருளை திருடிக்கொடுக்கும்படி கேட்கும் மற்றவர்களுக்காக அவன் திருட ஆரம்பித்தான். “இது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது,” என்பதாக அவன் ஒப்புக்கொள்கிறான். “ஆனால் நான் சாதாரணமான மனிதனிடமிருந்து ஒருபோதும் திருட மாட்டேன். ஒரு காரைத் திருடினால், அதை நல்ல நிலையில் விட்டுவருவேன். ஒரு வியாபார ஸ்தலத்தில் புகுந்து திருடுவதாக இருந்தால் அது இன்சூர் செய்யப்பட்டிருப்பது தெரிந்திருந்தால் மட்டுமே திருடுவேன். நான் செய்தவை சரிதான் என்று நினைக்க இது எனக்கு உதவியது.” உங்கள் ஊகம் சரியே, செட்ரிக் கடைசியாக சிறை சென்றான்.
செட்ரிக் நினைவுகூருகிறான்: “மார்க் என்ற ஒரு உடன் கைதி என்னோடு பேசினான். கையில் நான் ஒரு பெரிய சிலுவையை பச்சைக் குத்தியிருந்ததைப் பார்த்து, நான் ஏன் அப்படிச் செய்திருந்தேன் என்பதாக அவன் என்னிடம் கேட்டான். மத சம்பந்தமாக அது எனக்கு முக்கியமாக இருக்கவேண்டும் என்பதாக அவன் நினைத்தான்.” ஓரிரு வாரங்களுக்குப்பின் மார்க் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தின் ஒரு பிரதியை செட்ரிக்கிடம் கொடுத்தான்.c “‘நீங்கள் என்றும் வாழலாம்’—அந்த வார்த்தைகள் உடனடியாக என்னைக் கவர்ந்துவிட்டன. அதைப் பற்றித்தான் நாங்கள் எப்போதும் பேசிவந்திருக்கிறோம், ஆனால் என்றுமாக வாழ்வதைப் பற்றிய உண்மையை நாங்கள் கண்டுபிடிக்க முடியாதவர்களாகவே இருந்தோம்.” சிறைச்சாலைக்கு வந்துபோன யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு பல தடவை பேசிய பின்பு, செட்ரிக், தான் ஆவலுடன் விரும்பியதை முயன்று அடைய முடியும்—ஆனால் கடவுளுடைய வழியில் மாத்திரமே—என்பதை உணர்ந்துகொண்டான்.
“என்னுடைய முந்நாளைய நண்பர்களோடு கூட்டுறவுக் கொள்வதை நிறுத்திய பின்பு நான் வேகமாக முன்னேறினேன்” என்று செட்ரிக் குறிப்பிடுகிறான். புரிந்துகொள்வதற்கும், மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் செய்த முன்னேற்றம் அவனுக்கு சுலபமாக இருக்கவில்லை. “நான் இன்னும் முன்னேறுவதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்று அவன் சொல்லுகிறான். “நான் சிந்திக்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.” ஆம், கிளர்ச்சியை அனுபவிப்பதை மையமாகக் கொண்ட காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மாத்திரமே தன்னுடைய இலட்சியங்களை அடையமுடியும் என்பதாக நினைத்து செயல்பட்டது பிசாசின் கண்ணிக்குள் அவனைச் சிக்கவைத்தது என்பதை இப்பொழுது செட்ரிக் புரிந்துகொண்டிருக்கிறான்.
மகிழ்ச்சிதரும் விதமாக, செட்ரிக் சிறையைவிட்டு வெளியேறி நீண்ட காலமாகிறது, தாங்கள் தேடிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்துவிட்ட மற்றவர்களோடு ஒழுங்காக கூட்டுறவுக்கொள்வதை அவன் மகிழ்ந்து அனுபவிக்கிறான். அவன் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்கிறான், பூமியில் பரதீஸில் வாழும் அவர்களுடைய நம்பிக்கை இவனுக்குமிருக்கிறது. எல்லா மாறுவேடங்களிலும் இருந்து சாத்தான் செல்வாக்கு செலுத்துவது முடிவுக்கு வருவதையும்கூட ஆவலாக எதிர்நோக்கியிருக்கிறான்.
நிச்சயமாகவே பாதுகாப்பான ஒரு எதிர்காலம் செட்ரிக்கைப் போன்ற இளைஞருக்கு மாத்திரமல்ல, பைபிள் சத்தியத்துக்கான அன்பு இருதயத்தில் ஊன்றப்பட்டு, தேவபக்தியுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்கும் உண்டு.
தேவபக்திக்குரிய பயிற்றுவிப்பு பலன்களைத் தருகிறது
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்பதாக பண்டைய காலத்து ஞானவான் சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 22:6) பைபிள் தராதரத்தை முழு இருதயத்தோடு பின்பற்ற தெரிந்துகொண்டிருக்கும் அநேக இளைஞர்களின் விஷயத்தில் இது உண்மையாக நிரூபித்துள்ளது.
ஷீலா, கார்டன், சாரா ஆகியோர் இதைச் செய்தனர். ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் ‘புறப்பட்டுப்போய் சீஷராக்குங்கள்’ என்ற கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு தங்களுடைய பெற்றோர் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தது அவர்கள் நினைவுக்கு வருகிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) “எந்தத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், ‘பிரசங்க வேலையை அது எவ்வாறு பாதிக்கும்?’ என்பதாக நானும் அம்மாவும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்வோம்” என்று ஷீலா நினைவுபடுத்தி சொல்கிறாள். “இப்படி யோசித்ததால் நாங்கள் செய்ய நினைத்தப் பல புராஜெக்ட்டுகளை செய்யாது விட்டுவிட்டோம்” என்பதை அவள் ஒப்புக்கொண்டு, “ஆனால் என்னே ஆசீர்வாதங்கள் எங்களுக்குக் கிடைத்தன!” என்று மேலுமாகச் சொல்கிறாள். நற்செய்தியை ஜனங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில் நீண்ட பகல்நேரங்களை செலவழித்தப் பின்பும்கூட ஷீலாவும் அவளுடைய அம்மாவும் சிரமப்பட்டு நடந்துவரும்போதுகூட பாடிக்கொண்டே வருவார்கள். “என்னுடைய சந்தோஷம் நிறைவாயிருந்தது” என்று அவள் சொல்கிறாள். “இப்பொழுதும் அதை என்னால் மனதில் உணரமுடிகிறது.”
கார்டன் தான் அனுபவித்து மகிழ்ந்த சனிக்கிழமை மாலைநேரங்களை நினைவில் வைத்திருக்கிறான். “சபை மூப்பர்களுடைய வீடுகளுக்கு நான் அழைக்கப்பட்டேன்; அங்கே நாங்கள் பிரயோஜனமான வினாடிவினாக்களையும் கலந்துரையாடல்களையும் அனுபவித்தோம். பைபிளிலிருந்து வசனங்களை மனப்பாடம் செய்யவும், பைபிள் தலைப்புகளின்பேரில் தாராளமாக பேசவும், பிரசங்கித்தபோது கிடைத்த ஒரு அனுபவத்தைச் சொல்லவும், ராஜ்ய வேலை எவ்வாறு விஸ்தரிக்கப்பட்டுவருகிறது என்பதைக் கற்றுக்கொள்ளவும் நாங்கள் உற்சாகப்படுத்தப்பட்டோம்” என்பதாக கார்டன் நினைவுகூருகிறான். “இந்த எல்லாக் காரியங்களும் ஒரு நல்ல அஸ்திவாரத்தைப் போடவும் யெகோவா தேவனிடமாக அன்பை வளர்த்துக்கொள்ளவும் எனக்கு உதவின.”
சாராவுக்கு தன்னைச் சந்திக்கவரும் சாட்சிகளோடு சேர்ந்து செலவிட்ட மாலைவேளைகளைப் பற்றிய இனிய நினைவுகள் உண்டு. “ஒன்றாகச் சேர்ந்து நாங்கள் சாப்பிடுவோம். சந்திப்பை நிறைவுசெய்யும் வகையில் நாங்கள் கடவுளுடைய ராஜ்யப் பாடல்கள் பாடுகிறவர்களோடு சேர்ந்து பியானோ வாசிப்போம். விசேஷமாக எங்களுடைய பள்ளி வருடங்களின்போது, குடும்பமாக ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்ய இசை எங்களுக்கு அதிகமாக உதவியது.”
நிச்சயமாகவே, யெகோவாவைப் பிரியப்படுத்த நாடும் எல்லா இளைஞருக்கும் குடும்ப சூழ்நிலைமைகள் சிறப்பாக அமைந்துவிடுவது கிடையாது. இருந்தபோதிலும், சபையிலுள்ள மற்ற சாட்சி குடும்பங்களோடு உள்ள நெருக்கமான கூட்டுறவு அவர்களுக்குப் பாதுகாப்பையும் நெருக்கமான பாசவுணர்வையும் அளிக்கிறது.
எதிர்காலத்துக்கு பாதுகாப்பான அஸ்திவாரத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
இன்று இளைஞருக்கு ஒரு தெரிவு இருக்கிறது. இயேசு முன்னுரைத்த வந்துகொண்டிருக்கும் “மிகுந்த உபத்திரவ” அழிவில், விரைவாக மூழ்கிப்போக இருக்கும் இந்தத் துன்மார்க்கமான உலகத்தோடு தொடர்ந்து செல்லலாம்; அல்லது ஆவியினால் ஏவப்பட்டு சங்கீதக்காரன் ஆசாப் பாடினதுபோல ‘தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, . . . அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளலாம்.’ கடவுளுக்குக் கீழ்ப்படிவதானது, “இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததி”யாக ஆவதிலிருந்து அவர்களைத் தடைசெய்வதாக இருக்கும்.—மத்தேயு 24:21; சங்கீதம் 78:6-8.
உலகம் முழுவதிலுமுள்ள 80,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நீங்கள் வியந்துபாராட்டக்கூடிய அநேக இளைஞரைக் காண்பீர்கள். இவர்கள் ‘நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், . . . வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்’ இளம் தீமோத்தேயுவுக்குப் பவுல் கொடுத்த ஆலோசனைக்கு செவிசாய்த்திருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் ‘மெய்யான வாழ்க்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.’ (1 தீமோத்தேயு 6:18, 19, NW) அவர்களுடைய கூட்டங்களில் ஆஜராயிருப்பதன் மூலம் இந்த உண்மை கிறிஸ்தவர்களைப் பற்றி அதிகத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும்கூட பாதுகாப்புள்ள எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a மத்தேயு 8:28-லும் 2 தீமோத்தேயு 3:1-லும் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே கிரேக்க வார்த்தையே “கொடுமை” என்பதாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
b பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டது.
[பக்கம் 7-ன் படம்]
இயேசு குணப்படுத்திய அந்த ‘அசாதாரணமான கொடுமையானவர்களின்’ பின்னால்
பொல்லாத ஆவிகள் இருந்தன
[பக்கம் 8-ன் படம்]
‘வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தைப்’ போடுதல்