அதிகாரம் 38
இயேசுவைப் பற்றி யோவான் விசாரிக்கிறார்
மத்தேயு 11:2-15 லூக்கா 7:18-30
இயேசுவுக்கு இருக்கிற பொறுப்பை பற்றி யோவான் ஸ்நானகர் விசாரிக்கிறார்
யோவானை இயேசு புகழ்கிறார்
யோவான் ஸ்நானகர் கிட்டத்தட்ட ஒரு வருஷமாக சிறையில் இருக்கிறார். ஆனாலும், இயேசு செய்கிற அற்புதங்களைப் பற்றிய செய்திகள் அவருடைய காதுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. நாயீனில் ஒரு விதவையின் மகனை இயேசு உயிர்த்தெழுப்பியதைப் பற்றி யோவானின் சீஷர்கள் அவரிடம் சொல்கிறார்கள். அதைக் கேட்டபோது யோவானுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஆனாலும், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பதை இயேசுவின் வாயிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டும் என்று யோவான் நினைக்கிறார். அதனால், தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரைக் கூப்பிட்டு, “வர வேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?” என்று இயேசுவிடம் கேட்கச் சொல்கிறார்.—லூக்கா 7:19.
யோவான் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? யோவான் கடவுள்பக்தி உள்ளவர். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது கடவுளுடைய சக்தி அவர்மேல் இறங்குவதை யோவான் நேரில் பார்த்திருந்தார்; இயேசுவை ஏற்றுக்கொள்வதாகக் கடவுள் சொன்னதைக் கேட்டிருந்தார். ஆனால், இப்போது யோவானுக்கு விசுவாசம் குறைந்துவிட்டது என்று நாம் தவறாக நினைத்துவிடக் கூடாது. அப்படியிருந்தால், யோவானைப் பற்றி இயேசு பெருமையாகப் பேசியிருக்க மாட்டாரே! சரி, யோவானுக்கு எந்தச் சந்தேகமும் இல்லையென்றால், இயேசுவைப் பற்றி ஏன் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்?
இயேசுதான் மேசியா என்பதை அவர் வாயிலிருந்தே கேட்க வேண்டும் என்று யோவான் நினைத்திருக்கலாம். சிறையில் வாடுகிற யோவானுக்கு இந்தச் செய்தி பலத்தைத் தரும். அநேகமாக, யோவான் அந்தக் கேள்வியைக் கேட்டதற்கு வேறு காரணமும் இருந்திருக்கலாம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு ராஜாவாக இருப்பார், மக்களை விடுதலை செய்வார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இயேசு ஞானஸ்நானம் எடுத்து இத்தனை மாதங்கள் ஆகியும் யோவான் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அதனால், ‘இயேசுவுக்கு அடுத்தபடியாக வேறொரு மேசியா வருவாரா? மேசியா என்னவெல்லாம் செய்வார் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர்தான் நிறைவேற்றி முடிப்பாரா?’ என்று தெரிந்துகொள்ளத்தான் யோவான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
யோவானின் சீஷர்களிடம், ‘வரவேண்டியவர் நான்தான்!’ என்று இயேசு நேரடியாகச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, பலவிதமான நோய்களாலும் வலிகளாலும் கஷ்டப்படுகிற மக்களைக் குணமாக்குவதன் மூலம் கடவுளுடைய ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை இயேசு அவர்களுக்குப் புரிய வைக்கிறார். பிறகு அவர்களிடம், “நீங்கள் கேட்பதையும் பார்ப்பதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது” என்கிறார்.—மத்தேயு 11:4, 5.
இப்போது செய்துகொண்டிருப்பதைவிட இன்னும் அதிகமான காரியங்களை இயேசு செய்வார்... ஒருவேளை, தன்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்வார்... என்றெல்லாம் யோவான் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், தான் இப்போது செய்கிற அற்புதங்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதை யோவானுக்கு இயேசு தெரியப்படுத்துகிறார்.
யோவானின் சீஷர்கள் அங்கிருந்து போனதும், யோவான் ஒரு தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவர் என்று மக்களிடம் இயேசு சொல்கிறார். யோவான்தான் மல்கியா 3:1-ல் சொல்லப்பட்ட யெகோவாவின் ‘தூதுவர்’. மல்கியா 4:5, 6-ல் சொல்லப்பட்ட எலியா தீர்க்கதரிசியும் அவர்தான். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷராகப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், பரலோக அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 11:11.
பரலோக அரசாங்கத்தில் தாழ்ந்தவர் யோவானைவிட உயர்ந்தவராக இருக்கிறார் என்று சொல்வதன் மூலம், யோவான் பரலோக அரசாங்கத்தில் இருக்க மாட்டார் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். யோவான், இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்தினார். ஆனால், பரலோகத்துக்குப் போகிற வழியை கிறிஸ்து திறப்பதற்கு முன்பே யோவான் இறந்துவிடுகிறார். (எபிரெயர் 10:19, 20) ஆனாலும், அவர் கடவுளுக்கு உண்மையாக இருந்த தீர்க்கதரிசி. அதனால், பூஞ்சோலை பூமியில் அவர் உயிரோடு எழுந்து வருவார்.