அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
இயேசு பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கினார்
இயேசுவின் மூன்றரை வருட ஊழியம் முடியும் தறுவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில் அவர் எருசலேமுக்குப் போய், அங்கே வேதனைக்குரிய மரணத்தை அனுபவிக்க இருந்தார். நடக்கப்போவதை நன்கு அறிந்தவராக, அவருடைய சீஷர்களிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: ‘மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள்.’—மாற்கு 9:31.
நிச்சயமாகவே, மீதி இருந்த ஒவ்வொரு நாளையும், மணிநேரத்தையும், நொடிப்பொழுதையும் மிகச் சிறந்த வகையில் செலவழிக்க இயேசு விரும்பியிருப்பார். அவருடைய சீஷர்களுக்கோ இன்னும் போதனை தேவையாய் இருந்தது. மனத்தாழ்மையின் அவசியம், எப்பொழுதும் எதிர்ப்படவேண்டிய இடறல்கள் ஆகியவற்றைக் குறித்து வலுவான புத்திமதி அவர்களுக்கு தேவை என்பதை இயேசு உணர்ந்தார். (மாற்கு 9:35-37, 42-48) திருமணம், விவாகரத்து, விவாகமின்றி இருத்தல் ஆகியவற்றின்பேரிலும் சீஷர்களுக்கு அறிவுரை கொடுக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 19:3-12) தாம் சீக்கிரத்தில் மரிக்கப்போவதை அறிந்தவராக இயேசு, தம்முடைய சீஷர்களிடம் ரத்தினச்சுருக்கமாகப் பேசினார்; மேலும், அவர்களுடைய உடனடி கவனத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் அறிவுரை கூறினார். மீதமிருந்த ஒவ்வொரு நிமிடமும் பொன்னானதாய் இருந்தது. இதனால் இயேசு செய்த அடுத்த காரியம் நினைவிலிருந்து நீக்கமுடியாதது.
இயேசு சிறு பிள்ளைகளைப் பிரியமாக ஏற்கிறார்
பைபிள் பதிவு கூறுகிறது: “சிறுபிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.” சீஷர்கள் இதைப் பார்த்ததும் உடனே தடுத்தனர். பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க முடியாத அளவுக்கு இயேசு மிகவும் ‘பிஸியாக’ இருப்பதாக ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம்; அல்லது பிள்ளைகளோடு காலங்கடத்த அவர் சாமானியமானவரல்ல என்பதாகவோ கருதி இருக்கலாம். ஆனால், இயேசு அவர்கள்மேல் கடுங்கோபம் அடைந்தபோது சீஷர்கள் அடைந்த அதிர்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் சொன்னார். “அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.” இயேசு மேலும் சொன்னார்: “எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 10:13-15.
மெச்சத்தக்க குணங்களை இயேசு பிள்ளைகளிடத்தில் கண்டார். பிள்ளைகள், காரியங்களை அறிய ஆவலுள்ளவர்களாய் துருவித்துருவிக் கேட்பவர்கள்; நம்பத்தகுந்தவர்களும்கூட. பெற்றோர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். மற்ற பிள்ளைகளுக்குமுன் தங்கள் பெற்றோரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். புத்திமதிகளை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்பும் அனைவரும் பின்பற்றத்தகுந்த இயல்புகள் இவை. இயேசு சொன்னதுபோல், “தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.”—மத்தேயு 18:1-5-ஐ ஒப்பிடுக.
ஆனால் இயேசு ஏதோ ஓர் உதாரணத்துக்காக மட்டுமே பிள்ளைகளைப் பற்றி சொல்லிக்கொண்டில்லை. பிள்ளைகளோடு இருப்பதை இயேசு மனதார நேசித்தார். இதைப் பதிவு மிகத் தெளிவாக காண்பிக்கிறது. மாற்கு இவ்வாறு அறிவிக்கிறார்: இயேசு “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.” (மாற்கு 10:16) இயேசு ‘பிள்ளைகளை அணைத்துக்கொண்டது’a அவரது பாசத்தைக் காட்டுகிறது. இந்தக் குறிப்பு மாற்குவின் பதிவில் மாத்திரமே இருக்கிறது. பிள்ளைகளைக் கூட்டிவந்தவர்கள் இயேசு அவர்களை வெறுமனே “தொடும்படி” எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சிவிட்டார்.
இயேசு பிள்ளைகள்மேல் ‘கைகளை வைத்ததின்’ கருத்து என்ன? முழுக்காட்டுதல் போன்ற மதச்சடங்கு எதையும் இது அர்த்தப்படுத்தவில்லை. சில சமயங்களில், ஒரு நியமிப்பு அளிக்கப்படுவதை கைகளை வைத்தல் அர்த்தப்படுத்தியது. மற்ற சந்தர்ப்பங்களில், இது ஆசீர்வாதம் அளிப்பதை குறித்தது. (ஆதியாகமம் 48:14; அப்போஸ்தலர் 6:6) எனவே, இயேசு இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகளை வெறுமனே ஆசீர்வதித்திருக்கலாம்.
எப்படியிருப்பினும், பேரார்வம் பொங்க என்ற அர்த்தமுடைய பதத்தை (கா.ட்யூ.லா.ஜீயோ) ‘ஆசீர்வாதம்’ என்பதற்கு மாற்கு பயன்படுத்துகிறார். இயேசு இருதயத்திலிருந்து ஆர்வம் பொங்க, கனிவோடு, மனதார பிள்ளைகளை ஆசீர்வதித்தார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. நேரத்தை வீணடிக்கும் பெரும்தொல்லையாக பிள்ளைகளை அவர் ஒருபோதும் கருதவில்லை.
நல்ல படிப்பினை
இயேசு பிள்ளைகளையும் பெரியவர்களையும் கொடுமையாகவோ அல்லது இழிவாகவோ நடத்தவில்லை. “அவர் மிக சர்வசாதாரணமாக சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்பார்” என்று ஒரு குறிப்பேடு சொல்லுகிறது. எல்லா வயதினரும் அவரை எளிதாக அணுகமுடிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இயேசுவின் முன்மாதிரியை மனதில்கொண்டு நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘மற்றவர்கள் என்னை சுலபமாக அணுகமுடிகிறதா?’ ‘மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்கமுடியாத அளவிற்கு நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேனா?’ மற்றவர்களுடைய நலன்களில் உண்மையான ஆர்வம் காட்டுங்கள். இது, மற்றவர்களுக்காக நம்மையே கொடுக்க நம்மை உந்துவிக்கும். இயேசு இவ்வாறே செய்தார். நாம் உண்மையாகவே கரிசனை காட்டுவதை மற்றவர்கள் புரிந்துகொண்டு நம்மிடம் தாராளமாகப் பழகுவர்.—நீதிமொழிகள் 11:25.
மாற்குவின் பதிவு காண்பிக்கிறபடி, பிள்ளைகளோடு இருப்பதை இயேசு மகிழ்ந்து அனுபவித்தார். அவர்கள் விளையாடும்போது அவர் கூர்ந்து கவனித்து இருந்திருக்கவேண்டும். அதனாலேயே, அவருடைய உவமைகள் ஒன்றில் பிள்ளைகளுடைய விளையாட்டுகளைக் குறிப்பிடுகிறார். (மத்தேயு 11:16-19) இயேசு ஆசீர்வதித்த பிள்ளைகளில் சிலர் சிறு குழந்தைகளாக இருந்தனர். அதனால் இயேசு யார் என்பதையோ அவர் என்ன கற்பித்தார் என்பதையோ அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது இயேசுவை எந்தவிதத்திலும் தடைசெய்யவில்லை. நேரத்தை வீணாக்குவதாக அவர் நினைக்கவில்லை. அவர் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கினார்; ஏனென்றால், பிள்ளைகளை அவர் நேசித்தார். அவருடைய ஊழியத்தின்போது, இயேசு சந்தித்த பிள்ளைகளில் பலர், அவருடைய அன்பினால் ஈர்க்கப்பட்டு பிற்பாடு அவருடைய சீஷர்களானார்கள்.
இயேசு தம் வாழ்க்கையின் இக்கட்டான கடைசி வாரங்களின்போதும் பிள்ளைகளோடு நேரம் செலவழித்தார். அப்படியென்றால், எவ்வளவு வேலை இருந்தாலும் நம்மாலும் பிள்ளைகளுக்காக நிச்சயமாகவே நேரம் ஒதுக்கமுடியும். தகப்பனில்லாத சிறுவர், சிறுமியர்களின் விசேஷித்த தேவைகளை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் கவனம் கொடுக்கப்பட்டால் எல்லா பிள்ளைகளும் நன்கு செழித்தோங்குவர். நம்மால் முடிந்த எல்லா உதவியையும் செய்து எல்லையற்ற அன்பு காட்டவேண்டும் என்பதே யெகோவாவின் விருப்பம்.—சங்கீதம் 10:14.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு “அவர்களை அரவணைத்துக்கொண்டார்” என்பதாக ஒரு மொழிபெயர்ப்பு சொல்லுகிறது. மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்லுகிறது: அவர் “கைகளால் அவர்களை அணைத்துக்கொண்டார்.”