கடவுளுடைய அரசாங்கம் பூமியை எப்போது ஆட்சி செய்யும்?
இயேசுவை உண்மையாகப் பின்பற்றியவர்களில் சிலர், கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். அதை அவர்களால் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியாது என்று அப்போது இயேசு அவர்களிடம் சொன்னார். (அப்போஸ்தலர் 1:6, 7) ஆனால் முன்பு ஒருமுறை, சில சம்பவங்கள் ஒரே சமயத்தில் நடப்பதை வைத்து ‘கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று தெரிந்துகொள்வீர்கள்’ என்று அவர்களிடம் சொல்லியிருந்தார். சீக்கிரத்தில், அது இந்தப் பூமியை ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்றும் அவர்களுக்குப் புரிய வைத்தார்.—லூக்கா 21:31.
என்னென்ன சம்பவங்கள் நடக்குமென்று இயேசு சொன்னார்?
“ஜனத்துக்கு எதிராக ஜனமும், நாட்டுக்கு எதிராக நாடும் சண்டைபோடும். பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 21:10, 11) எப்படி விரலில் இருக்கும் சின்னச் சின்ன கோடுகளெல்லாம் சேர்ந்து கைரேகை ஆகிறதோ, அதேபோல் இந்த எல்லா சம்பவங்களும் சேர்ந்து ஒரு தெளிவான அடையாளமாக ஆகிறது. அதோடு, கைரேகை எப்படி ஒரு நபருக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல் இந்த எல்லா சம்பவங்களும் ஒரே சமயத்தில் நடப்பது “கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் ஒரே சமயத்தில் நடந்திருக்கின்றனவா? இவை உலகளவில் நடக்கின்றனவா? ஆதாரங்களை அலசலாம்.
1. போர்கள்
மனித சரித்திரத்தையே புரட்டிப்போட்ட வருஷமாக 1914-ஐ சரித்திர ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அந்த வருஷத்தில், மனித சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய போர் ஒன்று வெடித்தது! அதுதான் முதல் உலகப் போர். அந்தப் போரில்தான் பீரங்கிகள், வான் குண்டுகள், எந்திர துப்பாக்கிகள், விஷவாயு போன்ற பல பயங்கரமான போர் ஆயுதங்களைப் பெரிய அளவில் பயன்படுத்தினார்கள். சில வருஷங்களில், இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்தது. அந்தப் போரில் முதல் முறையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். 1914-லிருந்து எங்காவது ஓர் இடத்தில் போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் போர்களால் பலியானவர்கள் கோடிக்கணக்கானவர்கள்!
2. நிலநடுக்கங்கள்
வருஷத்துக்குச் சுமார் 100 நிலநடுக்கங்கள் “பெரிய பாதிப்புகளை” ஏற்படுத்துவதாக பிரிட்டானிக்கா அக்கடெமிக் சொல்கிறது. “சுமார் 1900-களிலிருந்து இதுவரை எடுத்துவைக்கப்பட்ட பதிவுகளின்படி பார்த்தால், வருஷத்துக்கு ஏறக்குறைய 16 பயங்கரமான நிலநடுக்கங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சொல்கிறது. இன்றைக்கு நிலநடுக்கங்களைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிவதால்தான் அதன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது என்று சிலர் சொல்லலாம். அவர்கள் சொல்வது உண்மையோ இல்லையோ, உலகம் முழுக்க நடக்கிற இதுபோன்ற பெரிய பெரிய நிலநடுக்கங்களால் இதுவரை இல்லாத அளவுக்குப் பாதிப்புகளும், உயிர் சேதமும் ஏற்படுகின்றன.
3. உணவுத் தட்டுப்பாடு
உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள் போர், ஊழல், பொருளாதாரச் சரிவு, விவசாயத்தை முறையாகச் செய்யாமல் இருப்பது, மோசமான சீதோஷ்ண நிலையைச் சமாளிக்க முன்னேற்பாடு செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களே. “உலகம் முழுக்க 82 கோடியே 10 லட்சம் பேர் போதுமான சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதுவும், அதில் 12 கோடியே 40 லட்சம் பேர் பட்டினியாக இருக்கிறார்கள்” என்று உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பின் அறிக்கை (“2018 ஒரு பின்னோக்கிய பார்வை”) சொல்கிறது. ஒவ்வொரு வருஷமும் ஊட்டச்சத்து குறைவினால் கிட்டத்தட்ட 31 லட்சம் குழந்தைகள் இறந்துபோகிறார்கள். 2011-ல், உலகம் முழுவதும் இறந்துபோன குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால்தான் இறந்துபோயிருக்கிறார்கள்.
4. நோய்களும் கொள்ளைநோய்களும்
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு பிரசுரம் இப்படிச் சொல்கிறது: “21-வது நூற்றாண்டு பெரிய பெரிய கொள்ளைநோய்களுக்குப் பேர்போனதாக இருக்கிறது. காலரா, பிளேக், மஞ்சள் காமாலை ஆகிய பழைய நோய்களோடு, இப்போது புதிதாக சார்ஸ், ஃப்ளூ, மெர்ஸ், எபோலா, ஜிகா ஆகிய நோய்களும் வந்திருக்கின்றன.” சமீபத்தில் உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றை மறந்துவிட முடியுமா? விஞ்ஞானிகளும் டாக்டர்களும் நோய்களைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்தாலும், எல்லா நோய்களையும் அவர்களால் குணப்படுத்த முடிவதில்லை.
5. உலகம் முழுவதும் பிரசங்க வேலை
இன்னொரு விஷயத்தையும் இயேசு அடையாளமாகச் சொன்னார். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:14) உலகத்தில் பயங்கரமான பிரச்சினைகள் நடக்கிற இந்தச் சமயத்தில்கூட, உலகம் முழுவதும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். அதுவும், 240 நாடுகளில் 1,000-கும் அதிகமான மொழிகளில்! இந்தளவு பிரமாண்டமாக இதுவரை மனித சரித்திரத்தில் நடந்ததே இல்லை!
நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
இயேசு அடையாளமாகச் சொன்ன விஷயங்கள் இன்றைக்கு அப்படியே நடந்து வருகின்றன. இதைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்.”—லூக்கா 21:31.
இயேசு கொடுத்த அடையாளங்களையும் பைபிளின் காலக்கணக்கையும் அலசி ஆராயும்போது, கடவுள் தன்னுடைய அரசாங்கத்தை 1914-ல்a பரலோகத்தில் ஏற்படுத்தினார் என்பது தெரிகிறது. அந்தச் சமயத்தில் அவர் தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்துவை அரசராக அமர்த்தினார். (சங்கீதம் 2:2, 4, 6-9) சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும். அப்போது, மற்ற எல்லா அரசாங்கங்களையும் அது அழித்துவிடும். பிறகு, மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்காக இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும்.
அப்போது, இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் இருக்கும் இந்த வார்த்தைகள் நிறைவேறியிருக்கும்: “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.” (மத்தேயு 6:10) ஆனால், கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் அதன் ஆட்சியை ஆரம்பித்ததிலிருந்து என்ன செய்துகொண்டிருக்கிறது? இந்த அரசாங்கம் மனிதர்களை முழு அதிகாரத்தோடு ஆட்சி செய்யும்போது அவர்களுக்காக என்ன செய்யும்?
a 1914-ஐப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 32-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.