‘பற்பல இடங்களில் கொள்ளைநோய்கள்’
லூக்காஸ் 21:11-ல் (தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) காணப்படும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த வார்த்தைகளில், கொள்ளைநோய்களின் அதிகரிப்பு, கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் அம்சங்களில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்படுத்துதல் 6:8-ல், அந்தக் கொள்ளைநோய்கள் மங்கின நிறமுள்ள ஒரு குதிரையின், வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரத்தின் நான்காம் குதிரையின், சவாரியினால் முன்படமாகக் காட்டப்பட்டன. நான்காம் குதிரைவீரன்: கொள்ளைநோய்கள், வாதைகள், பஞ்சம் மற்றும் இதர வேதனைகளின் ஒரு சுருக்க வரலாறு (The Fourth Horseman: A Short History of Epidemics, Plagues, Famine and Other Scourges) என்ற தலைப்பையுடைய, ஆன்ரூ நிக்கிஃபாரூக் என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதிய புத்தகத்திலிருந்து, முக்கியக் குறிப்புகளை பத்திரிகையாளர் லாரன்ஸ் ஹால் அளித்தார். அவை நியூ ஜெர்ஸியின் நியூவார்க்கில் வெளியாகும் 1994, பிப்ரவரி 25-ம் தேதியிட்ட ஸ்டார்-லெட்ஜர் என்ற செய்தித்தாளில், ஹாலின் பத்தியில் தோன்றின. அந்தப் பத்தியின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
“இந்த நம்பிக்கையற்ற காலங்களில் வெளிப்பாட்டின் நான்காம் குதிரைவீரன் தீவிரமாக சவாரி செய்துகொண்டிருக்கிறான். மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் வியக்கத்தக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் அனைத்தும் இருந்தபோதிலும்கூட, மனிதவர்க்கம் ஒரு வழியில் மட்டும் அல்ல—பல வழிகளிலும் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அற்புத மருந்துகள் என்று ஒரு காலத்தில் போற்றிப் புகழப்பட்ட நோயுயிர்முறிகள் (antibiotics) அநேகம் இன்றைய சூப்பர் நுண்கிருமிகளுக்கு இணையாகாது. . . .
“‘மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன என்ற ஒரு எண்ணத்தை ஒருவேளை கொடுக்கலாம். ஆனாலும் சிசுவாகிய அறிவியல் இன்னும் டாய்லட்டிற்குப் போகக்கூட கற்றுக்கொள்ளவில்லை என்பதையே கொள்ளைநோய் மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டிருக்கும்’ . . . உங்களைப் பயப்படுத்தவேண்டும் என்பது ஒன்றும் என்னுடைய எண்ணம் அல்ல. ஆனால் அந்த நான்காவது குதிரைவீரனின் உருவகம் அவ்வளவு நிஜமாக இருக்கிறது. காச நோய் மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. எய்ட்ஸ் வைரஸ் உலகமுழுவதும் ஆண்டுதோறும் ஆயிரமாயிரம் ஆட்களைக் கொன்று குவித்துக்கொண்டே இருக்கிறது . . . டைஃபாய்டு, தொண்டை அடைப்பான், காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் மலேரியா ஆகிய மற்ற நோய்களும் அச்சுறுத்தும் வகையில் பயப்படுத்திவருகின்றன. இவையெல்லாம் மருத்துவ பணியாளர்களையும் பொதுமக்களையும் பொதுவாகவே கலக்கமடையச் செய்திருக்கின்றன. . . .
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதவர்க்கம் புதுப்புது நோய்களை உற்பத்தி செய்து வந்திருக்கிறது. . . . மறுமலர்ச்சிக்காலம் மேகப்புண்ணையும் பெரியம்மையையும் கொலம்பஸ் மூலமாக அமெரிக்காக்களுக்குக் கடத்திவிட்டது. இப்போது எய்ட்ஸ் நம்மை மீண்டும் பயப்படுத்துகிறது. . . . இன்னும், நுண்ணுயிர்களுக்கு எதிரான போரில் மனிதவர்க்கம் தோல்வியடைந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகையில், புதிய நோய்களும் கொள்ளைநோய்களும் திடீரென பரவுகின்றன. . . . சக்தி குறைக்கப்பட்ட நோய்த்தடைக்காப்பு அமைப்புகளைக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.” நிக்கிஃபாரூக் இவ்வாறும்கூட சொல்கிறார்: “‘20-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொய்களில் ஒன்று எதுவென்றால், நோயுயிர்முறிகளும் தடுப்பு மருந்துகளும் டாக்டர்களும் கொள்ளைநோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிட்டார்கள் என்று சொல்வதுதான். . . .
“‘எவ்வளவு கடினமாக நாம் முயற்சித்தாலும், சூப்பர் நுண்ணுயிர்களை நம்மால் வெல்லமுடியாது, குதிரைவீரனுக்கு லஞ்சம் கொடுக்கமுடியாது அல்லது நீக்கப்படமுடியாமல் வரலாற்றில் நிலவியிருக்கும் கொள்ளைநோய்களையும் அசட்டை செய்யமுடியாது.’”