அதிகாரம் 115
இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்குகிறது
மத்தேயு 26:1-5, 14-19 மாற்கு 14:1, 2, 10-16 லூக்கா 22:1-13
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் இஸ்காரியோத்துக்குக் கூலி
அப்போஸ்தலர்கள் இரண்டு பேர் பஸ்காவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்
ஒலிவ மலையில் உட்கார்ந்திருக்கும்போது, தன்னுடைய பிரசன்னத்தைப் பற்றியும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தைப் பற்றியும் அப்போஸ்தலர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் சொல்லி முடித்துவிட்டார்.
நிசான் 11 உண்மையிலேயே விறுவிறுப்பான நாளாக இருந்தது. ராத்திரியில் அவர்கள் பெத்தானியாவுக்குத் திரும்பி வருகிறார்கள். இயேசு அவர்களிடம், “உங்களுக்குத் தெரிந்தபடி, இன்னும் இரண்டு நாட்களில் பஸ்கா பண்டிகை வரப்போகிறது, அப்போது மனிதகுமாரன் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படுவதற்கு ஒப்படைக்கப்படுவார்” என்று சொல்கிறார்; ஒருவேளை, பெத்தானியாவுக்குத் திரும்பி வரும் வழியில் இயேசு இதைச் சொல்லியிருக்கலாம்.—மத்தேயு 26:2.
நிசான் 11, செவ்வாய்க்கிழமை அன்று, இயேசு மதத் தலைவர்களைக் கண்டித்து அவர்கள் செய்கிற அக்கிரமங்களை வெட்டவெளிச்சமாக்கியிருந்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்கள் இயேசுவைக் கொல்ல வழிதேடுகிறார்கள். அதனால், அடுத்த நாளான நிசான் 12 புதன்கிழமை அன்று அவர் வெளிப்படையாக எங்கும் போகாமல் தன் அப்போஸ்தலர்களோடு தனியாக நேரம் செலவிட்டிருக்கலாம். அதற்கு அடுத்த நாள் மாலையில் சூரியன் மறைந்த பிறகு நிசான் 14 ஆரம்பமாகிவிடும். தன்னுடைய அப்போஸ்தலர்களோடு பஸ்காவைக் கொண்டாட இயேசு விரும்புவதால், அதற்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொள்கிறார்.
ஆனால், பஸ்காவுக்கு முந்தின நாட்களில் முதன்மை குருமார்களும் பெரியோர்களும் இயேசுவுக்கு எதிராக மும்முரமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்கிற தவறுகளை இயேசு வெட்டவெளிச்சமாக்கியதால் அவர்மீது பயங்கர கோபமாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் தலைமைக் குருவாகிய காய்பாவின் வீட்டு முற்றத்தில் கூடிவந்து, “இயேசுவைத் தந்திரமாகப் பிடித்து கொன்றுபோட” திட்டம் போடுகிறார்கள். ஆனால், அவரை எப்போது, எப்படிப் பிடிப்பார்கள்? “பண்டிகையின்போது வேண்டாம், மக்கள் மத்தியில் ஒருவேளை கலவரம் ஏற்படலாம்” என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். (மத்தேயு 26:4, 5) நிறைய பேருடைய ஆதரவு இயேசுவுக்கு இருப்பதால் அவரைப் பிடிக்க அவர்கள் பயப்படுகிறார்கள்.
இதற்கிடையில், அந்த மதத் தலைவர்களைப் பார்க்க ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமல்ல, இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்துதான். அவனைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். தன்னுடைய எஜமானைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை யூதாசின் மனதில் சாத்தான் விதைத்திருந்தான். “அவரைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று யூதாஸ் கேட்கிறான். (மத்தேயு 26:15) அவர்கள் மனம் குளிர்ந்துபோய், “அவனுக்கு வெள்ளிக் காசுகள் தருவதாக” சொல்கிறார்கள். (லூக்கா 22:5) எத்தனை காசுகள்? 30 வெள்ளிக் காசுகள் தருவதாக அவர்கள் சொல்கிறார்கள். இது ஒருவேளை 30 சேக்கலாக இருக்கலாம். ஒரு அடிமையின் விலையும் அதுதான். (யாத்திராகமம் 21:32) இயேசுவுக்கு இவ்வளவுதான் மதிப்பு என்பதுபோல அந்த மதத் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்மேல் இருக்கிற வெறுப்பைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். அதற்குப் பிறகு யூதாஸ், “கூட்டம் இல்லாத சமயத்தில் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தைத் தேட” ஆரம்பிக்கிறான்.—லூக்கா 22:6.
புதன்கிழமை அன்று சூரியன் மறைந்த பிறகு நிசான் 13 ஆரம்பமாகிறது. ஆறாவது நாளாக இயேசு அன்று ராத்திரி பெத்தானியாவில் தங்குகிறார். இயேசு அங்கே தங்குகிற கடைசி ராத்திரியும் அதுதான். அடுத்தநாள், பஸ்காவுக்குத் தேவையான கடைசிக் கட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்க வேண்டும். அப்போதுதான் நிசான் 14 ஆரம்பமானதும், அதை வெட்டி, முழுவதுமாகச் சுட முடியும். பஸ்கா உணவை அவர்கள் எங்கே சாப்பிடுவார்கள்? அதை யார் தயார் செய்வார்கள்? இதுவரை, இந்த விவரங்கள் எதையும் இயேசு சொல்லவில்லை. அதனால், யூதாசினால் முதன்மை குருமார்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்க முடியவில்லை.
பிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் கூப்பிட்டு, “நாம் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லி பெத்தானியாவிலிருந்து அவர்களை அனுப்புகிறார். அநேகமாக இது வியாழக்கிழமை மத்தியானம் நடந்திருக்கலாம். அப்போது அவர்கள், “நாங்கள் அதை எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “நீங்கள் நகரத்துக்குள் போகும்போது, மண்ஜாடியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிற ஒருவன் உங்களைச் சந்திப்பான். அவன் பின்னால் போய் அவன் நுழையும் வீட்டுக்குள் நுழையுங்கள். அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், ‘“என் சீஷர்களோடு நான் பஸ்கா உணவு சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே?” என்று போதகர் கேட்கிறார்’ எனச் சொல்லுங்கள். அப்போது, மாடியில் தேவையான வசதிகள் செய்யப்பட்ட ஒரு பெரிய அறையை அவர் உங்களுக்குக் காட்டுவார். அங்கே பஸ்காவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்கிறார்.—லூக்கா 22:8-12.
அந்த வீட்டின் சொந்தக்காரர் இயேசுவின் சீஷர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பஸ்கா கொண்டாடுவதற்காக இயேசு தன்னுடைய வீட்டைக் கேட்பார் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். அப்போஸ்தலர்கள் இரண்டு பேரும் எருசலேமுக்குப் போனதும், இயேசு சொன்னபடியே எல்லாம் நடக்கிறது. இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களோடு பஸ்காவைக் கொண்டாடுவதற்காக, ஆட்டுக்குட்டியையும் மற்ற விஷயங்களையும் அவர்கள் இரண்டு பேரும் ஏற்பாடு செய்கிறார்கள்.