“தைரியங்கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்”
இயேசு மரித்த அந்த நாள்—யூத நாள்காட்டியில் நிசான் மாதம் 14-ம் நாள்—பொ.ச. 33 மார்ச் 31, வியாழக்கிழமை சூரியன் அஸ்தமித்த சமயத்தில் ஆரம்பமானது. அன்று மாலை, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் மேல் அறையில் பஸ்காவை ஆசரிப்பதற்காக கூடிவந்தனர். ‘இவ்வுலகைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போவதற்கு’ ஆயத்தமாக இருந்த அந்த கடைசி நேரத்திலும்கூட தம் அப்போஸ்தலர்கள் மீது அன்பு வைத்திருந்ததை இயேசு காட்டினார். (யோவான் 13:1) எப்படி? மிகச் சிறந்த பாடங்களை அவர்களுக்கு கற்பித்து, சீக்கிரத்தில் நேரிடப்போகிற காரியங்களுக்கு அவர்களை தயார்படுத்துவதன் மூலமே.
இருள் கவிய ஆரம்பித்தபோது, “தைரியங்கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 16:33, NW) இப்படி அவர் துணிவோடு சொன்னதன் அர்த்தம் என்ன? ஒரு கருத்தில், ‘இந்தத் தீய உலகம் எனக்குள் மனவெறுப்பை ஏற்படுத்தவுமில்லை, பழிவாங்க என்னைத் தூண்டவுமில்லை. இந்த உலகம் அதன் அச்சுக்குள் என்னைத் திணிக்க நான் அனுமதிக்கவில்லை. நீங்களும் இவ்வாறு இருக்க முடியும்’ என்றே அவர் அர்த்தப்படுத்தினார். பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இயேசு கற்பித்த காரியங்கள் அவரை போலவே இவ்வுலகத்தை ஜெயிக்க அந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு உதவும்.
இன்று உலகில் துன்மார்க்கம் தலைவிரித்தாடுவதை யார்தான் மறுப்பர்? அநியாயங்களையும் அர்த்தமற்ற வன்முறைகளையும் பார்க்கும்போது நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்? அவை எரிச்சலூட்டுகின்றனவா அல்லது பழிக்குப் பழி வாங்க தூண்டுகின்றனவா? சுற்றி முற்றி வாழும் மக்களின் ஒழுக்கத்தில் சீரழிந்துபோன வாழ்க்கை நம்மை எப்படி பாதிக்கிறது? அதைத் தவிர, நம்முடைய சொந்த அபூரணங்களும் பாவமுள்ள மனப்பான்மைகளும் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அதனால் நமக்கு இரண்டு போராட்டங்கள் உள்ளன: ஒன்று வெளியே இந்தப் பொல்லாத உலகத்திற்கு எதிரான போராட்டம், மற்றொன்று நமக்குள்ளே தீய மனப்பான்மைகளுக்கு எதிரான போராட்டம். கடவுளுடைய உதவியின்றி இந்தப் போராட்டங்களில் ஜெயிக்க முடியும் என நாம் நினைக்கலாமா? அவருடைய உதவியை நாம் எப்படி பெறலாம்? நம்முடைய பாவ மனச்சாய்வுகளை எதிர்த்து போராட என்னென்ன பண்புகளை வளர்க்க வேண்டும்? இதற்கு பதிலை கண்டுபிடிக்க, பூமியில் தம் கடைசி நாளில் இயேசு தாம் நேசித்த சீஷர்களுக்கு என்ன கற்பித்தார் என்பதற்கு கவனம் செலுத்தலாம்.
அகந்தையை தாழ்மையால் வெல்லுங்கள்
உதாரணமாக, அகந்தையை அல்லது மனமேட்டிமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்று பைபிள் இதைப் பற்றி குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 16:18) “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்” என்றும் பைபிள் அறிவுரை கூறுகிறது. (கலாத்தியர் 6:3) அகந்தை உண்மையிலேயே அழிவுக்குரியது, வஞ்சனையானது. ஆகவே, “பெருமையையும், அகந்தையையும்” வெறுப்பதன் மூலம் நாம் ஞானவான்களாகிறோம்.—நீதிமொழிகள் 8:13.
இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு பெருமையும் அகந்தையும் இருந்ததா? ஆம், குறைந்தது ஒரு சமயத்திலாவது அவர்கள் தங்களில் யார் பெரியவன் என வாக்குவாதம் பண்ணினார்கள். (மாற்கு 9:33-37) மற்றொரு சந்தர்ப்பத்தில், ராஜ்யத்தில் தங்களுக்கு முக்கிய ஸ்தானம் வேண்டுமென யாக்கோபும் யோவானும் கேட்டனர். (மாற்கு 10:35-45) இந்த மனப்பான்மை சீஷர்களின் மனதில் வேர்விடாமல் இருப்பதற்கு இயேசு உதவிசெய்ய விரும்பினார். ஆகவே, பஸ்கா உணவை அருந்துகையில் அவர் எழுந்து ஒரு துண்டை கட்டிக்கொண்டு தம் சீஷர்களின் கால்களைக் கழுவ ஆரம்பித்தார். அவர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினாரோ அதை மிகத் தெளிவாக கற்பித்தார். “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று சொன்னார். (யோவான் 13:14) அகந்தையை அகற்றி அதற்கு நேரெதிரான குணமாகிய மனத்தாழ்மையை காட்ட வேண்டும்.
என்றாலும், அகந்தையை வெல்வது சாமானியமல்ல. தம்மை காட்டிக் கொடுக்கவிருந்த யூதாஸ்காரியோத்தை இயேசு வெளியே அனுப்பிய பின்பு, அந்த 11 அப்போஸ்தலர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் மூண்டது. அவர்கள் எதைக் குறித்து வாக்குவாதம் பண்ணினார்கள்? யார் தங்களில் பெரியவன்! அவர்களிடம் கோபப்படுவதற்கு பதிலாக மற்றவர்களுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் பொறுமையாக எடுத்துரைத்தார். “புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக்கடவன்” என்று அவர் சொன்னார். அதோடு, “நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்” என தாம் வைத்த முன்மாதிரியையும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்.—லூக்கா 22:24-27.
அப்போஸ்தலர்கள் அதன் கருத்தை புரிந்துகொண்டார்களா? புரிந்துகொண்டார்கள் என்றே அத்தாட்சிகள் காட்டுகின்றன. பல வருடங்களுக்குப் பிறகு அப்போஸ்தலனாகிய பேதுரு, “நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்” என எழுதினார். (1 பேதுரு 3:8, பொது மொழிபெயர்ப்பு) நாமும்கூட அகந்தையை தாழ்மையால் வெல்வது எவ்வளவு முக்கியம்! புகழ், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை நாடித் தேடுவதில் மூழ்கிவிடாமலிருந்தால் நாமும் ஞானமுள்ளவர்களாய் இருப்போம். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று” பைபிள் குறிப்பிடுகிறது. (யாக்கோபு 4:6) அவ்வாறே “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என ஒரு பூர்வகாலத்து பொன்மொழியும் குறிப்பிடுகிறது.—நீதிமொழிகள் 22:4.
பகைமையை வெல்வது எப்படி?
இந்த உலகில் சர்வசாதாரணமாக காணப்படும் மற்றொரு குணத்தையும் கவனியுங்கள். அதுதான் பகைமை. பயம், அறியாமை, தப்பெண்ணம், ஒடுக்குதல், அநியாயம், தேசப்பற்று, இனப்பற்று அல்லது வகுப்பு வேறுபாடுகள் என பகைமை எனும் தீய்க்கு எண்ணெய் வார்க்கும் இப்படிப்பட்ட காரியங்கள் நம்மைச் சுற்றி நாலாபுறமும் காணப்படுகின்றன. (2 தீமோத்தேயு 3:1-4) இயேசுவின் நாளிலும் இந்தப் பகைமை கொளுந்துவிட்டு எரிந்தது. வரி வசூலிப்பவர்களை யூதர்கள் பகைத்து ஒதுக்கினர். சமாரியர்களுடன் அவர்கள் எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளவில்லை. (யோவான் 4:9) புறஜாதியார்களையும், அதாவது யூதரல்லாதவர்களையும் அவர்கள் இழிவாக கருதினர். என்றாலும், காலப்போக்கில் இயேசு தொடங்கி வைத்த வணக்க முறை எல்லா ஜாதி ஜனங்களுக்கும் உரியதாயிற்று. (அப்போஸ்தலர் 10:34, 35; கலாத்தியர் 3:28) ஆகவே, இயேசு அன்போடு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொடுத்தார்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என இயேசு சொன்னார். அவர்கள் அன்புகாட்ட கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; ஏனெனில், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றும் அவர் கூறினார். (யோவான் 13:34, 35) இதை புதிய கட்டளை என்று சொல்வதற்கு காரணம், “உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளைக்கு இது ஒருபடி மேல் செல்கிறது. (லேவியராகமம் 19:18) எந்த விதத்தில்? “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என சொல்வதன் மூலம் இயேசு இதைத் தெளிவுபடுத்தினார். (யோவான் 15:12, 13) ஒருவருக்கொருவரும், பிறருக்காகவும் அவர்கள் உயிரை கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டியிருந்தது.
அபூரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் குடிகொண்டிருக்கும் குரோதத்தை எப்படி பெயர்த்தெடுக்க முடியும்? சுயதியாக அன்பை குடிகொள்ளச் செய்வதன் மூலம் அதை பெயர்த்தெடுக்கலாம். இனம், குலம், கலாச்சாரம், மதம், அரசியல் என எல்லா விதமான பின்னணிகளிலிருந்து வரும் லட்சோபலட்ச உண்மையுள்ள ஜனங்கள் இதையே செய்கிறார்கள். அவர்கள் இப்போது பகையில்லா ஒன்றுபட்ட சமுதாயமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய சகோதரத்துவம். அப்போஸ்தலனாகிய யோவான் கடவுளுடைய ஏவுதலால் சொன்ன வார்த்தைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்” என அவர் சொன்னார். (1 யோவான் 3:15) உண்மை கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட மறுப்பதோடு ஒருவருக்கொருவர் அன்பு காட்டவும் அயராது உழைக்கிறார்கள்.
ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்களாக இல்லாத அதே சமயத்தில் நம்மைப் பகைக்கிறவர்களிடம் என்ன மனப்பான்மையைக் காட்ட வேண்டும்? கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று சொல்லி தம்மை கொலை செய்வோர் சார்பாக ஜெபம் செய்தார். (லூக்கா 23:34) பகைவெறி பிடித்த மனிதர் சீஷனாகிய ஸ்தேவானை கொல்லும்படி கல்லெறிந்தபோது அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்.” (அப்போஸ்தலர் 7:60) தங்களை பகைத்தவர்களுக்கு நன்மை செய்யவே இயேசுவும் ஸ்தேவானும் விரும்பினார்கள். அவர்களுடைய மனங்களில் கசப்பான எண்ணங்கள் துளிகூட இருக்கவில்லை. பைபிள் நமக்கு தரும் அறிவுரையின்படி, ‘யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்.’—கலாத்தியர் 6:10.
‘என்றும் இருக்கும் உதவியாளர்’
உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, சீக்கிரத்தில் தாம் இனிமேலும் மனித உருவில் அவர்களுடன் இருக்க மாட்டார் என இயேசு சொன்னார். (யோவான் 14:28; 16:28) ஆனால், “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு . . . வேறொரு தேற்றரவாளனை [“உதவியாளரை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்று அவர்களுக்கு உறுதி கூறினார். (யோவான் 14:16) கடவுளுடைய பரிசுத்த ஆவியே வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்த உதவியாளர். வேத வசனங்களைப் பற்றிய ஆழமான விஷயங்களை அது அவர்களுக்கு கற்பிக்கும், பூமிக்குரிய ஊழியத்தின்போது இயேசு கற்பித்த காரியங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கும் அது உதவும்.—யோவான் 14:26.
இன்று பரிசுத்த ஆவி நமக்கு எப்படி உதவி செய்கிறது? பைபிள் கடவுளால் ஏவப்பட்ட வார்த்தை. தீர்க்கதரிசனங்களை உரைப்பதற்கும், பைபிளை எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்ட மனிதர், ‘பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டார்கள்.’ (2 பேதுரு 1:20, 21; 2 தீமோத்தேயு 3:16) பைபிளை படித்து, கற்றுக்கொண்டதை கைக்கொள்வது நமக்கு அறிவு, ஞானம், புரிந்துகொள்ளுதல், உட்பார்வை, பகுத்துணர்வு, யோசனைத் திறன் ஆகியவற்றைத் தருகிறது. இந்த பொல்லாத உலகிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்ப்பட இவையெல்லாம் நம்மை நன்கு தயார்படுத்துகிறது அல்லவா?
மற்றொரு வழியிலும் பரிசுத்த ஆவி நமக்கு உதவி புரிகிறது. கடவுளுடைய பரிசுத்த ஆவி நன்மை செய்வதற்கு தூண்டுகிற வல்லமை வாய்ந்த ஒரு சக்தியாகும்; அதன் செல்வாக்கின் கீழ் இருப்பவர்கள் தெய்வீக குணாதிசயங்களை வெளிக்காட்ட அது உதவுகிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என பைபிள் கூறுகிறது. ஒழுக்கக்கேடு, விரோதம், வைராக்கியம், கோபம் போன்ற மனச்சாய்வுகளை வெல்வதற்கு இந்த குணங்களே நமக்கு அவசியம் அல்லவா?—கலாத்தியர் 5:19-23.
கடவுளுடைய ஆவியை சார்ந்திருப்பதன் மூலம் எந்தவித பிரச்சினையையும் வேதனையையும் சமாளிப்பதற்கு ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை’ நாம் பெற்றுக்கொள்ள முடியும். (2 கொரிந்தியர் 4:7, NW) பரீட்சைகளை அல்லது சோதனைகளை பரிசுத்த ஆவி நீக்காவிடினும் அவற்றை சகிப்பதற்கு நிச்சயமாகவே நமக்கு உதவும். (1 கொரிந்தியர் 10:13) “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:13, பொ.மொ.) கடவுள் தமது பரிசுத்த ஆவியின் வாயிலாக அத்தகைய பலத்தை அளிக்கிறார். அந்தப் பரிசுத்த ஆவிக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! ‘இயேசுவை நேசித்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கே’ இந்த வாக்குறுதி அளிக்கப்படுகிறது.—யோவான் 14:15.
“என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்”
ஒரு மனிதனாக பூமியில் தமது கடைசி இரவின்போது, “என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்” என அப்போஸ்தலர்களிடத்தில் இயேசு சொன்னார். (யோவான் 14:21) “என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” என்றும் அவர் ஊக்குவித்தார். (யோவான் 15:9) பிதாவின் அன்பிலும் குமாரனின் அன்பிலும் நிலைத்திருப்பது நமக்குள் இருக்கும் பாவ மனச்சாய்வுகளுக்கு எதிராகவும், வெளியில் இந்தப் பொல்லாத உலகுக்கு எதிராகவும் போராட எப்படி உதவுகிறது?
நமக்குள்ளேயே ஒரு பலமான தூண்டுதல் இல்லையென்றால் தீய மனப்பான்மைகளை நம்மால் உண்மையிலேயே கட்டுப்படுத்த முடியுமா? யெகோவா தேவனோடும் அவருடைய குமாரனோடும் ஒரு நல்ல உறவு வைப்பதற்கான வாஞ்சையைவிட வேறு என்ன பெரிய தூண்டுதல் நமக்குள் இருக்க முடியும்? தன்னுடைய டீனேஜ் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை கடுமையாக எதிர்த்துப் போராடிய ஏனேஸ்டேa இவ்வாறு கூறுகிறார்: “நான் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினேன். அவர் ஏற்றுக்கொள்ளாத வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதையும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன். ஆகவே, கடவுளுடைய வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு வித்தியாசமான ஆளாக இருக்க தீர்மானித்தேன். ஒவ்வொரு நாளும் என் மனதுக்குள் பொங்கி எழுந்த தீய, கெட்ட எண்ணங்களை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என உறுதிபூண்டேன். ஆகவே உதவிகேட்டு கடவுளிடம் இடைவிடாமல் ஜெபித்தேன். இரண்டு வருஷத்திற்குப்பின் இப்போது அந்தத் தொல்லை ஒழிந்தது, என்றாலும் இன்னமும் என்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்.”
வெளியே இந்த உலகத்தோடு போராடுவதைக் குறித்ததில், இயேசு எருசலேமில் அந்த மேல் அறையிலிருந்து கிளம்புவதற்கு முன்பு கடைசியாக செய்த ஜெபத்தை கவனியுங்கள்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல” என தம்முடைய சீஷர்கள் சார்பாக பிதாவிடம் வேண்டினார். (யோவான் 17:15, 16) எத்தகைய நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்! யெகோவா தாம் நேசிக்கிற ஜனங்களை கண்ணும் கருத்துமாக கவனிக்கிறார், இந்த உலகத்திலிருந்து தங்களையே பிரித்து வைக்கும்போது அவர்களை யெகோவா பலப்படுத்துகிறார்.
‘விசுவாசம் வையுங்கள்’
இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வது, இந்தப் பொல்லாத உலகுக்கும் நமது பாவமுள்ள மனப்பான்மைகளுக்கும் எதிரான போராட்டத்தில் வெற்றிபெற உண்மையிலேயே நமக்கு உதவும். அவற்றை எதிர்த்து வெற்றிபெறுவது முக்கியம்; என்றாலும், அந்த வெற்றி இவ்வுலகையும் பரம்பரை பரம்பரையாக வந்த பாவத்தையும் அறவே ஒழித்துக்கட்ட முடியாது. ஆனால் நாம் நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை.
“உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என பைபிள் அறிவிக்கிறது. (1 யோவான் 2:17) தம்மில் ‘விசுவாசம் வைக்கிற’ எல்லாரையும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக இயேசு ஜீவனைக் கொடுத்தார். (யோவான் 3:16) கடவுளுடைய சித்தத்தையும் நோக்கங்களையும் பற்றிய அறிவை அதிகமாக பெற்று வருகையில் “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்ற இயேசுவின் அறிவுரையை நாம் மனதில் கொள்வோமாக.—யோவான் 14:1.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 6, 7-ன் படம்]
“என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” என்று இயேசு தம் அப்போஸ்தலர்களை ஊக்குவித்தார்
[பக்கம் 7-ன் படம்]
பாவத்திலிருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் விரைவில் விடுதலை