கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வீர்களா?
“சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்.”—2 கொ. 9:7.
1. அநேகர் என்ன தியாகங்களைச் செய்கிறார்கள், ஏன்?
மக்கள் எதை முக்கியமென நினைக்கிறார்களோ அதற்காக எந்தவொரு தியாகமும் செய்வார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பெற்றோர் தங்களுடைய நேரத்தை, பணத்தை, சக்தியை செலவிடுகிறார்கள். இளைஞர்கள் சிலர், தங்களுடைய நண்பர்களைப் போல ஜாலியாகப் பொழுதுபோக்குவதை தியாகம் செய்துவிட்டு, ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காக மணிக்கணக்கில் பயிற்சி செய்கிறார்கள். இயேசுவும் தமக்கு முக்கியமாக இருந்த காரியங்களுக்காகத் தியாகங்கள் செய்தார். சொகுசாக வாழ்வதோ மனைவி-பிள்ளைகளுடன் வாழ்வதோ அவருடைய லட்சியமாக இருக்கவில்லை. மாறாக, தம்முடைய சக்தியையெல்லாம் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கே கொடுத்தார். (மத். 4:17; லூக். 9:58) அவருடைய சீடர்களும் அவரைப் போலவே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதை மிக முக்கியமானதாகக் கருதியதால் பல தியாகங்களைச் செய்தார்கள். (மத். 4:18-22; 19:27) ஆக, நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: ‘வாழ்க்கையில் எனக்கு முக்கியமாயிருப்பது என்ன?’
2. (அ) உண்மைக் கிறிஸ்தவர்கள் என்னென்ன தியாகங்கள் செய்வது அவசியம்? (ஆ) சிலர் வேறு என்ன தியாகங்களைச் செய்கிறார்கள்?
2 யெகோவாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கும் அதை விட்டுவிடாமல் இருப்பதற்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லோருமே சில தியாகங்கள் செய்வது அவசியம். ஜெபம், பைபிள் வாசிப்பு, குடும்ப வழிபாடு, கூட்டங்கள், ஊழியம் ஆகியவற்றிற்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்வதும் அவற்றில் அடங்கும்.a (யோசு. 1:8; மத். 28:19, 20; எபி. 10:24, 25) நம்முடைய முயற்சியாலும் யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் இன்று பிரசங்க வேலை வீறுநடை போடுகிறது. அதனால், ‘கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதத்தை’ நோக்கி அநேகர் வந்துகொண்டே இருக்கிறார்கள். (ஏசா. 2:2) கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக அநேகர் வேறு சில தியாகங்களையும் செய்கிறார்கள். உதாரணத்திற்கு, பெத்தேலில் சேவை செய்கிறார்கள், ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள், மாநாடுகளை ஒழுங்கமைக்கிறார்கள், பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த வேலைகளில் ஈடுபட்டால்தான் மீட்பு பெற முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதற்கு இவை பெரிதும் கைகொடுக்கின்றன.
3. (அ) கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்யும்போது நாம் எப்படி நன்மை அடைகிறோம்? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
3 இன்று கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிக்கும் வேலைகளில் ஈடுபடுவது மிக மிக முக்கியம். அநேகர் யெகோவாவுக்காக மனப்பூர்வமாய் தியாகங்கள் செய்வதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவை அவருக்குச் செலுத்தும் பலிகளைப்போல் இருக்கின்றன. (சங்கீதம் 54:6-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்திற்காகக் காத்திருக்கிற நாமும் இப்படிப்பட்ட தியாகங்கள் செய்யும்போது மிகுந்த மகிழ்ச்சி அடையலாம். (உபா. 16:15; அப். 20:35) அதே சமயத்தில், நாம் எல்லோருமே நம்மை நன்றாக ஆராய்ந்து பார்ப்பது அவசியம். கடவுளுடைய அரசாங்கத்திற்காக வேறு ஏதாவது தியாகங்கள் செய்ய முடியுமா? நம்முடைய நேரம், பணம், சக்தி, திறமைகள் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம்? என்னென்ன விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? உற்சாக மனதோடு தியாகங்கள் செய்து அதன் மூலம் பெருமகிழ்ச்சி அடைவதற்கு இஸ்ரவேலர்கள் செலுத்திய பலிகள் சிறந்த எடுத்துக்காட்டு. அதைப் பற்றி இப்போது ஆராயலாம்.
பூர்வ இஸ்ரவேலில் செலுத்தப்பட்ட பலிகள்
4. பலிகளைச் செலுத்துவதன் மூலம் இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்தார்கள்?
4 பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காக பூர்வ இஸ்ரவேலில் பலிகள் செலுத்தப்பட்டன. யெகோவாவின் தயவைப் பெற அவை அவசியமாக இருந்தன. அவற்றில் சில கட்டாயமாக செலுத்த வேண்டியவை, மற்றவையோ மனப்பூர்வமாகவும் உற்சாக மனதோடும் செலுத்த வேண்டியவை. (லேவி. 23:37, 38) சர்வாங்க தகனபலிகள் மனப்பூர்வமான பலிகளாக, அதாவது காணிக்கைகளாக, யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்டன. சாலொமோனின் காலத்தில், ஆலய பிரதிஷ்டையின்போது செலுத்தப்பட்ட பலிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.—2 நா. 7:4-6.
5. வசதிவாய்ப்பற்றோருக்கு என்ன சலுகை அளிக்கப்பட்டது?
5 எல்லோராலும் ஒரே மாதிரியான பலிகளைச் செலுத்த முடியாது என்பதை யெகோவா அறிந்திருந்தார்; அதனால் அவரவருடைய சக்திக்கு ஏற்றவாறு கொடுக்கும்படியே அவர் கேட்டார். பலி செலுத்தப்படும் மிருகத்தின் இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பது யெகோவாவின் சட்டம்; ஏனென்றால், அது தமது மகன் இயேசுவின் மூலம் ‘வரப்போகிற நன்மைகளின் ... நிழலாக’ இருந்தது. (எபி. 10:1-4) அதற்காக, மிருகபலிகளைத்தான் செலுத்த வேண்டும் என்பதில் யெகோவா கறாராக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, ஒருவரால் காளையையோ, ஆட்டையோ செலுத்த முடியாவிட்டால், காட்டுப்புறாக்களைச் செலுத்தலாம். இதனால், வசதிவாய்ப்பில்லாத ஒருவரால்கூட யெகோவாவுக்குச் சந்தோஷமாக பலிசெலுத்த முடிந்தது. (லேவி. 1:3, 10, 14; 5:7) எதைப் பலியாகச் செலுத்தினாலும் சரி, அதைச் செலுத்தியவரிடமிருந்து இரண்டு விஷயங்களை யெகோவா எதிர்பார்த்தார்.
6. பலிகளைச் செலுத்திய ஒவ்வொருவரிடமிருந்தும் யெகோவா என்ன எதிர்பார்த்தார், அது ஏன் மிக முக்கியமாக இருந்தது?
6 முதலாவதாக, ஒருவர் செலுத்தும் பலி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். அது பழுதுள்ளதாக இருந்தால் தம்முடைய ‘அங்கீகாரத்தை’ பெற முடியாது என இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னார். (லேவி. 22:18-20) இரண்டாவதாக, பலி கொடுப்பவர் சுத்தமானவராக, தீட்டுப்படாதவராக இருக்க வேண்டும். அவர் அசுத்தமானவராக இருந்தால், மனப்பூர்வமான பலியைச் செலுத்துவதற்கு முன் பாவநிவாரண பலியை அல்லது குற்றநிவாரண பலியை செலுத்த வேண்டும்; அப்போதுதான், யெகோவாவுடன் மீண்டும் நல்லுறவை வைத்துக்கொள்ள முடியும். (லேவி. 5:5, 6, 15) இது மிக முக்கியமான விஷயம். ஏனென்றால், அசுத்தமாக இருக்கும் ஒருவர் மனப்பூர்வமாகக் கொடுக்கப்படும் பலிகளில் ஒன்றான சமாதான பலியின் மாம்சத்தைப் புசித்தால், அவர் கொல்லப்படுவார். (லேவி. 7:20, 21) பலி செலுத்துபவர் யெகோவாவுக்கு முன் குற்றமற்றவராகவும் செலுத்தப்படும் பலி பழுதற்றதாகவும் இருந்தால்தான் அந்த நபர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.—1 நாளாகமம் 29:9-ஐ வாசியுங்கள்.
இன்று செலுத்தப்படும் பலிகள்
7, 8. (அ) கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வதால் அநேகர் எவ்விதத்தில் மகிழ்ச்சி அடைகிறார்கள்? (ஆ) என்னென்ன வளங்களை யெகோவாவின் சேவையில் பயன்படுத்தலாம்?
7 இன்றும் அநேகர் யெகோவாவின் சேவையில் தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணிக்கிறார்கள்; அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். நம் சகோதரர்களுக்காக உழைக்கும்போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ராஜ்ய மன்ற கட்டுமான பணியில் ஈடுபடும்போதும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும்போதும் கிடைக்கிற திருப்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார் ஒரு சகோதரர். “சகோதர சகோதரிகள் புதிய ராஜ்ய மன்றத்துல கால் வைக்கும்போதும், இயற்கை சேதத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யும்போதும் அவங்க முகத்தில சந்தோஷமும் நன்றியும் பெருக்கெடுக்கிறத பார்க்க முடியுது. என்னோட உழைப்பும் முயற்சியும் வீண் போகல என்ற திருப்தியும் கிடைக்குது” என்று அவர் சொல்கிறார்.
8 இன்று யெகோவாவின் அமைப்பு அவருடைய வேலையை எல்லா விதங்களிலும் ஆதரித்து வருகிறது. சகோதரர் சி. டி. ரஸல் 1904-ல் இப்படி எழுதினார்: “நேரம், செல்வாக்கு, பணம் போன்றவற்றிற்கு நிர்வாகியான கர்த்தர்தான் நம்மை நியமித்திருக்கிறார் என்று ஒவ்வொருவரும் கருத வேண்டும். இவற்றை நம்மால் முடிந்தவரை மிகச் சிறப்பாகவும் எஜமானருக்கு மகிமை சேர்க்கும் விதத்திலும் பயன்படுத்துவதற்கு முயல வேண்டும்.” யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தும்போது நம் பங்கில் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். (2 சா. 24:21-24) நம்முடைய நேரம், பணம், சக்தி, திறமைகள் போன்ற வளங்களை நாம் சிறந்த விதத்தில் பயன்படுத்த முடியுமா?
9. நேரத்தைச் செலவிடுவதில் லூக்கா 10:2-4-லுள்ள என்ன நியமத்தை நாம் பின்பற்றலாம்?
9 நம்முடைய நேரம். நம்முடைய பிரசுரங்களை மொழிபெயர்த்து அச்சிட... ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்ட... மாநாடுகளை ஒழுங்குபடுத்த... நிவாரண பணிக்கு உதவ... முக்கியமான இன்னும் பல பணிகளில் ஈடுபட... அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படுகின்றன. நம் எல்லோருக்குமே ஒருநாளில் 24 மணிநேரம்தான் இருக்கிறது. இதை ஞானமாக பயன்படுத்திக்கொள்ள, இயேசு சொன்ன ஒரு விஷயத்திலுள்ள நியமம் நமக்கு உதவும். ஊழியத்திற்காக தம்முடைய சீடர்களை அனுப்பும்போது “வழியில் எவரையும் அரவணைத்துக்கொண்டும் நலம் விசாரித்துக்கொண்டும் நிற்காதீர்கள்” என்று அவர் சொன்னார். (லூக். 10:2-4) ஏன் அப்படிச் சொன்னார்? “கிழக்கத்திய மக்கள் வாழ்த்துச் சொல்லும்போது நம்மைப் போல் வெறுமனே லேசாக தலைகுனியவோ கைகுலுக்கவோ மாட்டார்கள். ஆனால், பலமுறை அரவணைத்துக்கொள்வார்கள், கீழே குனிந்து, பணிந்து வாழ்த்துச் சொல்வார்கள்; சில சமயங்களில், தரையில் சாஷ்டாங்கமாய் விழுவார்கள். இவை எல்லாவற்றுக்கும் நிறைய நேரம் எடுக்கும்” என்று பைபிள் அறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். அப்படியென்றால், மற்றவர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்ளும்படி இயேசு சொன்னாரா? இல்லை. நேரம் குறைவாக இருப்பதால், அதிமுக்கியமான காரியங்களுக்காக அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே அவர் சொன்னார். (எபே. 5:16) இந்த நியமத்தைப் பின்பற்றி, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக உங்களால் அதிக நேரம் செலவிட முடியுமா?
10, 11. (அ) உலகளாவிய வேலைக்காக கொடுக்கப்படும் நன்கொடைகள் எவ்விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன? (ஆ) 1 கொரிந்தியர் 16:1, 2-லுள்ள என்ன நியமம் நமக்கு உதவுகிறது?
10 நம்முடைய பணம். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பயணக் கண்காணிகள், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள் ஆகியோரின் தேவைகளுக்காக ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. 1999 முதற்கொண்டு, ஏழை நாடுகளில் 24,500-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் கிட்டத்தட்ட 6,400 ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் பத்து கோடி காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன. இவையெல்லாம் நீங்கள் கொடுக்கிற மனமுவந்த நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
11 நன்கொடை கொடுக்கும் விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த நியமத்தைப் பின்பற்றலாம். (1 கொரிந்தியர் 16:1, 2-ஐ வாசியுங்கள்.) வாரத்தின் இறுதியில் கையில் மீந்திருக்கிற பணத்தைக் கொடுக்கலாமென காத்திருக்காமல் வாரத்தின் ஆரம்பத்திலேயே தாங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தைத் தனியாக எடுத்து வைக்கும்படி கொரிந்துவிலுள்ள சகோதரர்களை அவர் உற்சாகப்படுத்தினார். அவர்களைப் போலவே, இன்றுள்ள சகோதர சகோதரிகளும் தங்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தாராளமாகக் கொடுக்க முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். (லூக். 21:1-4; அப். 4:32-35) இப்படிப்பட்ட தாராள குணத்தை யெகோவா உயர்வாக மதிக்கிறார்.
12, 13. என்னென்ன விஷயங்கள் நேரத்தையும் திறமைகளையும் பயன்படுத்த விடாமல் சிலரை முடக்கிவிடலாம், ஆனால் அவர்களுக்கு யெகோவா எப்படி உதவுவார்?
12 நம்முடைய சக்தியும் திறமைகளும். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக நம்முடைய சக்தியையும் திறமைகளையும் பயன்படுத்துவதற்கு நாம் எடுக்கிற முயற்சியை யெகோவா ஆசீர்வதிக்கிறார். நாம் சோர்ந்துபோகும்போது நமக்குத் தெம்பளிப்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். (ஏசா. 40:29-31) கடவுளுடைய வேலையைச் செய்யுமளவுக்கு திறமை இல்லை என நாம் நினைக்கிறோமா? நம்மைவிட தகுதியுள்ள வேறு சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என காரணம் காட்டுகிறோமா? பெசலெயேலுக்கும் அகோலியாபுக்கும் இருந்த இயல்பான திறமைகளை மெருகேற்ற யெகோவா உதவியதைப் போல நமக்கும் உதவுவார்.—யாத். 31:1-6; கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.
13 தயங்காமல் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்படி யெகோவா நம்மை உற்சாகப்படுத்துகிறார். (நீதி. 3:27) எருசலேம் ஆலயத்தைத் திரும்ப கட்டுகிற வேலையில் ஈடுபட்டிருந்த யூதர்களிடம், அந்த வேலையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும்படி யெகோவா சொன்னார். (ஆகா. 1:2-5) ஏனென்றால், அவர்களுடைய கவனம் வேறு பக்கமாய் திரும்பியிருந்தது. யெகோவா முக்கியமாக நினைக்கும் காரியங்களைத்தான் நாம் முக்கியமானதாக நினைக்கிறோமா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் அதிகமாக ஈடுபடுவதைப் பற்றி நம்மால் ‘சிந்தித்துப் பார்க்க’ முடியுமா?
தகுதிக்கேற்ப தியாகங்கள்
14, 15. (அ) வசதிவாய்ப்பில்லாத நம் சகோதரர்களின் உதாரணம் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது? (ஆ) நம்முடைய விருப்பம் என்னவாக இருக்க வேண்டும்?
14 வறுமையும் பண நெருக்கடியும் வாட்டியெடுக்கும் பகுதிகளில்தான் மக்கள் பலரும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில் வாழ்கிற நம் சகோதரர்களின் குறைகளை ‘ஈடுகட்ட’ நம் அமைப்பு முயற்சி செய்கிறது. (2 கொ. 8:14) அப்படி வறுமையில் வாடும் சகோதரர்கள்கூட மனமுவந்து கொடுப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள். பண வசதியில்லாதவர்கள் இன்முகத்தோடு நன்கொடை அளிப்பதைப் பார்க்கும்போது யெகோவா பூரிப்படைகிறார்.—2 கொ. 9:7.
15 ஆப்பிரிக்காவிலுள்ள ஓர் ஏழை நாட்டில் வாழும் சகோதரர்கள் சிலர், தங்களுடைய தோட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து அதில் விளைந்தவற்றை விற்று, அந்தப் பணத்தை கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்காகக் கொடுக்கிறார்கள். அந்த நாட்டில், ஒரு ராஜ்ய மன்றம் சீக்கிரத்தில் கட்ட வேண்டியிருந்தது. அங்குள்ள சகோதர சகோதரிகள் அந்த வேலையில் பங்குகொள்ள விரும்பினார்கள். ஆனால், அது பயிரிட வேண்டிய காலம். இருந்தாலும், பகலில் கட்டுமான வேலையில் ஈடுபட்டார்கள், மாலையில் வயல்களுக்குச் சென்று பயிரிட்டார்கள். அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையை என்னவென்று சொல்வது! இவர்களைப் பார்க்கும்போது மக்கெதோனியாவைச் சேர்ந்த முதல் நூற்றாண்டு சகோதரர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் “கொடிய வறுமையில்” இருந்தார்கள்; ஆனாலும், பரிசுத்தவான்களுக்கு நிவாரண தொகை வழங்கும் பாக்கியத்தைத் தர வேண்டுமென கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். (2 கொ. 8:1-4) அவர்களைப் போல நாமும் யெகோவா ‘நமக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நம் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொடுப்போமாக.’—உபாகமம் 16:17-ஐ வாசியுங்கள்.
16. நாம் செய்யும் தியாகங்கள் யெகோவாவுக்கு ஏற்றதாக இருக்கின்றனவா என எப்படி உறுதிப்படுத்தலாம்?
16 அதே சமயத்தில் நாம் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். பூர்வ கால இஸ்ரவேலர்களைப் போலவே நாம் கொடுக்கும் மனப்பூர்வமான பலிகள், அதாவது நாம் செய்யும் தியாகங்கள், கடவுளுக்கு ஏற்றதாக இருக்கின்றனவா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் சமநிலையாக இருக்கவில்லை என்றால், நம்முடைய குடும்பத்தைச் சரிவர கவனிக்க முடியாமல் போய்விடும், வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களும் பாதிக்கப்படும். மற்றவர்களுக்காக நம்முடைய நேரத்தையும் பிற வளங்களையும் கொடுக்கும்போது, நம்முடைய ஆன்மீக விஷயங்களும் குடும்பப் பொறுப்புகளும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நம்மிடம் இல்லாத நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் யெகோவாவுக்குக் கொடுப்பதுபோல் ஆகிவிடும். (2 கொரிந்தியர் 8:12-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, யெகோவாவோடுள்ள பந்தத்தை நாம் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். (1 கொ. 9:26, 27) பைபிள் நெறிகளின்படி வாழும்போது நாம் செய்யும் தியாகங்கள் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும்; யெகோவாவும் அவற்றை ‘சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்.’
நாம் செய்யும் தியாகங்கள் மதிப்புக்குரியவை
17, 18. கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வோரைப் பற்றி நாம் எப்படி உணருகிறோம், நாம் எல்லோருமே எதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
17 நம் சகோதர சகோதரிகள் பலர், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதன் மூலம், ‘தங்களையே பானபலியாக ஊற்றுகிறார்கள்.’ (பிலி. 2:17) இப்படி தாராள மனப்பான்மையைக் காட்டுபவர்களை நாம் மனதார பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிற சகோதரர்களின் மனைவி பிள்ளைகள்கூட தாராள மனப்பான்மையையும் சுயதியாக மனப்பான்மையையும் காட்டுவதால், அவர்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
18 கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதற்கு கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. ஆகவே, நம்மால் எந்தளவு இன்னுமதிகமாக உழைக்க முடியும் என்பதைப் பற்றி ஜெபத்தோடு சிந்தித்துப் பார்ப்போமாக. அவ்வாறு உழைத்தால், இப்போதும் ஏராளமான பலன்களை அறுவடை செய்வோம், “வரப்போகும் காலத்தில்” அதைவிட ஏராளமான பலன்களைப் பெறுவோம்.—மாற். 10:28-30.
a ஜனவரி 15, 2012 காவற்கோபுரம், பக்கங்கள் 21-25-ல் “யெகோவாவுக்கு முழுமூச்சோடு பலிகள் செலுத்துங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.