மேசியாவின் முன்னோடி அவர்
அகலமான வார்க்கச்சை, வெயிலால் கருகிய அவருடைய சருமத்தை உயர்வாக்கி காட்டியது. ஒட்டகமயிராலான உடையணிந்து, நிச்சயமாகவே ஒரு தீர்க்கதரிசியைப் போல் காணப்பட்டார். யோர்தான் நதியில் அவரிடமாக அநேகர் இழுக்கப்பட்டார்கள். அங்கே இந்த ஆர்வத்தைத் தூண்டும் மனிதர், மனந்திரும்பும் பாவிகளை முழுக்காட்டுவதற்கு தான் தயாராக இருப்பதை தைரியத்தோடு அறிவித்தார்.
ஜனங்கள் பிரமித்துப்போனார்களே! இந்த மனிதர் யார்? அவருடைய நோக்கம் என்ன?
இந்த நபரைப்பற்றி இயேசு கிறிஸ்து சொன்னார்: “எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். . . . ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை.” (மத்தேயு 11:9-11) ஏன் யோவான் அத்தகைய விதிவிலக்கான ஒரு மனிதர்? ஏனென்றால் அவர் மேசியாவின் முன்னோடியாக இருந்தார்.
அவருடைய பணி முன்னறிவிக்கப்பட்டது
யோவான் பிறப்பதற்கு 700-க்கும் அதிகமான வருடங்களுக்குமுன், இவர் வனாந்தரத்தில் கூவியழைக்கிறவராய் இருப்பார் என்று யெகோவா அறிவித்தார்: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்.” (ஏசாயா 40:3; மத்தேயு 3:3) யோவானின் பிறப்பிற்கு 400-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குமுன் சர்வவல்லவரான கடவுள் அறிவித்ததாவது: “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) எனவே, இயேசு கிறிஸ்துவுக்குச் சுமார் ஆறுமாதங்களுக்கு முன் யோவான்ஸ்நானன் பிறந்தது தற்செயலாக அல்லது இயற்கையான பிறப்பின் மூலம் நிகழவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட குழந்தை ஈசாக்கின் பிறப்பைப்போன்றே யோவானின் பிறப்பும் ஓர் அற்புதம் ஆகும். ஏனென்றால், அவருடைய பெற்றோர் சகரியா, எலிசபெத்து இருவரும் பிள்ளைகளைப் பிறப்பிக்கும் இயல்பான வயதை கடந்துவிட்டிருந்தார்கள்.—லூக்கா 1:18.
யோவான் கர்ப்பத்தில் உருவாவதற்கும் முன்பே, அவருடைய பொறுப்பு, வேலை, வாழும்விதம் ஆகியவை காபிரியேல் தேவதூதனால் தெரிவிக்கப்பட்டது. எலியாவிற்கிருந்த விறுவிறுப்புடனும் உத்வேகத்துடனும் யோவான், கீழ்ப்படியாதவர்களை மரணப்பாதையிலிருந்து திருப்பி, இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்கு இசைவாக அவர்களை ஆயத்தம் செய்வார். பிறப்பிலிருந்தே யோவான் நசரேயனாக, முழுவதுமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, திராட்சரசத்தையோ மதுபானத்தையோ தொடாமல் இருக்கவேண்டும். பார்க்கப்போனால், வனாந்தரத்தில் “வெட்டுக்கிளிகளும் காட்டுத் தேனும்” அவருடைய உணவாக இருந்தது. (மாற்கு 1:6; எண்ணாகமம் 6:2, 3; லூக்கா 1:13-17) சாமுவேலைப் போல் யோவானும் மகா உன்னதமானவரின் மகிமையான சேவைக்காக சிறுபிராயத்திலிருந்தே அர்ப்பணிக்கப்பட்டவர்.—1 சாமுவேல் 1:11, 24-28.
யோவான் என்னும் பெயருங்கூட கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டது. “யோவான்” என்று வழங்கப்படும் எபிரெய பெயரின் அர்த்தம் “யெகோவா தயை காண்பித்திருக்கிறார்; யெகோவா கருணை நிறைந்தவராய் இருந்திருக்கிறார்.”
எட்டாம் நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டபோது, அவருடைய தந்தை சகரியா தெய்வீக ஏவுதலினால் ஏவப்பட்டு அறிவித்தார்: ‘நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.’ (லூக்கா 1:76-79) யோவானின் வெளிப்படையான ஊழியமே, அவரின் வாழ்க்கையில் முதன்மையானதாகும். இதனுடன் மற்ற காரியங்களை ஒப்பிடுகையில், அவை மதிப்பற்றவையே. “அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.” இவ்விதம் யோவானின் முப்பது வருட வாழ்க்கையை வேதாகமங்கள் ஒரே வசனத்தில் எழுதிவிடுகின்றன.—லூக்கா 1:80.
வனாந்தரத்தில் குரல்
“மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்னும் திடுக்கிடச்செய்யும் செய்தியோடு, திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின 15-ம் வருஷத்திலே, பொந்தியு பிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாக இருந்த சமயத்தில், யோவான்ஸ்நானன் வனாந்தரத்தில் தோன்றினார். (மத்தேயு 3:2, மாற்கு 1:4; லூக்கா 3:1, 2) அப்பிரதேசம் முழுவதிலும் இருந்த ஜனத்தொகையினர் தட்டியெழுப்பப்பட்டார்கள். அந்தத் தைரியமான அறிவிப்பு, அத்தகைய நிச்சயமான நம்பிக்கைக்காக ஏங்கிக் கொண்டிருந்த மக்களின் இருதயங்களைத் தொட்டது. யோவானின் அறிவிப்பு, இருதயப்பூர்வமான மனந்திரும்புதலைத் தேவைப்படுத்தியதால், அது ஒரு நபரின் மனத்தாழ்மைக்கும்கூட சவாலாக இருந்தது. அவருடைய வாய்மையும் உறுதிப்பாடும் அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று நேர்மையும் உண்மையும் உள்ள திரளான ஆட்கள் கருதுவதற்கு தூண்டப்பட்டார்கள்.
புதிய நாளின் விடியலைப்போல் யோவானின் புகழ் பரவியது. யெகோவாவின் தீர்க்கதரிசி என, அவருடைய உடையாலும் பக்தியாலும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். (மாற்கு 1:6) இந்த ஆர்வத்தையெல்லாம் தூண்டுவது எதுவாக இருக்கும் என்பதைக் கண்டுகொள்ள, எருசலேமிலிருந்து பிரயாணம் செய்து ஆசாரியர்களும் லேவியர்களும்கூட வந்தார்கள். மனந்திரும்புங்கள்? ஏன் மற்றும் எதில்? யார் இந்த மனிதர்? அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார்கள். யோவான் விளக்கினார்: “நான் கிறிஸ்து அல்ல . . . அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு உம்மைக்குறித்து என்ன சொல்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.”—யோவான் 1:20-25.
மனந்திரும்புதலும் முழுக்காட்டுதலும், ராஜ்யத்தில் பிரவேசிப்பவர்களுக்குத் தேவையான படிகளாயிருந்தன. எனவே யோவான் பதிலளித்தார்: “நான் ஜலத்தினால் உங்களுக்கு [“மனந்திரும்பிய பாவிகளுக்கு,” NW] ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.” (லூக்கா 3:15-17; அப்போஸ்தலர் 1:5) நிச்சயமாகவே, மேசியாவைப் பின்பற்றுகிறவர்களின்மீது பரிசுத்த ஆவி பொழியப்படும், ஆனால் அவரின் எதிரிகள் அக்கினியினால் அழிவை அனுபவிப்பார்கள்.
“எல்லாரும்” எச்சரிக்கப்பட்டார்கள்
நேர்மையுள்ளம் கொண்ட யூதர்கள் பலர், யோவானின் வார்த்தைகளால் ஆழமாக தூண்டப்பட்டார்கள். நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குத் துரோகம் செய்ததன் பாவங்களை வெளிப்படையாக அறிக்கைச் செய்தார்கள். யோவான் தங்களை யோர்தான் நதியில் முழுக்காட்ட அனுமதிப்பதன் மூலம், மனந்திரும்புதலை வெளிப்படையாக காட்டினார்கள். (மத்தேயு 3:5, 6) அதன் விளைவாக, அவர்களின் இருதயங்கள் மேசியாவை ஏற்றுக்கொள்வதற்குச் சரியான நிலையில் இருந்தன. கடவுளுடைய நீதியான தேவைகளைப்பற்றிய அவர்களின் அறிவின் வேட்கையைத் தீர்க்க, தன் சீஷர்களாக அவர்களுக்கு யோவான் மகிழ்ச்சியுடன் போதித்தார், ஜெபிப்பதற்குங்கூட கற்றுக்கொடுத்தார்.—லூக்கா 11:1.
மேசியாவின் முன்னோடியைக் குறித்து, அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்கச் சாட்சியாக வந்தான்.” (யோவான் 1:7) “மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்,” எனவே எல்லாவிதமான ஆட்களும் கேட்பதற்காக முழுக்காட்டுபவராகிய யோவானிடத்திற்கு வந்தார்கள். (அப்போஸ்தலர் 13:24) வரி வசூலிப்போர் அச்சுறுத்தி அதிகமாகப் பணம் பறிப்பதற்கு எதிராக எச்சரித்தார். ஒருவருக்கு இடுக்கண்செய்வதற்கோ பொய்யாய்க் குற்றஞ்சாட்டுவதற்கோ எதிராகப் போர்ச்சேவகரை எச்சரித்தார். வஞ்சிக்கும், மாய்மால பரிசேயரிடமும் சதுசேயரிடமும் கூறினார்: “விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 3:7-9; லூக்கா 3:7-14.
யோவான் நாளின் மத தலைவர்கள் ஒரு தொகுதியாக, அவரை நம்ப மறுத்தார்கள், அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்று குற்றஞ்சாட்டினார்கள். நித்திய வாழ்க்கைக்கு வழிநடத்தும் நீதியின் பாதையை நிராகரித்துவிட்டார்கள். மறுபட்சத்தில், யோவானின் கூற்றுகளை நம்பிய பாவிகளான வரி வசூலிப்போரும் வேசிமார்களும் மனந்திரும்பினார்கள், முழுக்காட்டப்பட்டார்கள். எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்கள்.—மத்தேயு 21:25-32; லூக்கா 7:31-33.
மேசியா அறிமுகப்படுத்தப்பட்டார்
வசந்த காலத்திலிருந்து பொ.ச. 29-ன் துவக்கம் வரை ஆறுமாதங்களாக, கடவுளின் உண்மையுள்ள சாட்சியாகிய யோவான், வரவிருக்கும் மேசியாவிடமாக யூதர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். அது மேசியானிய ராஜா தோன்றக்கூடிய காலமாக இருந்தது. ஆனால் அவர் தோன்றியபோது, அதே யோர்தான் தண்ணீரில் வந்து, தம்மை முழுக்காட்டும்படி கேட்டுக்கொண்டார். முதலில் யோவான் மறுப்புத் தெரிவித்தார், ஆனால் பின்னர் இணங்கிவிட்டார். இயேசுவின்மீது பரிசுத்த ஆவி வந்திறங்கியபோதும், தம்முடைய குமாரனை அங்கீகரிக்கும்போதும் யெகோவாவினுடைய குரலைக் கேட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள்.—மத்தேயு 3.13-17; மாற்கு 1:9-11.
முதன் முதலில் இயேசுவை மேசியாவாக அடையாளம் கண்டுகொண்டவர் யோவான்தான் மற்றும் தன் சொந்த சீஷர்களுக்கும் இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவரை அறிமுகம் செய்து வைத்தார். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி,” என்று யோவான் கூறினார். அவர் மேலும் அறிவித்தார்: “எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.”—யோவான் 1:29-37.
யோவானின் வேலை இயேசுவின் ஊழியத்திற்கு இணையாக ஆறுமாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்திருந்தது. ஒவ்வொருவரும் மற்றவர் செய்து கொண்டிருந்த வேலையை அறிந்து கொண்டார்கள். யோவான் தன்னை மணவாளனின் நண்பனாக கருதினார். கிறிஸ்து பெருகுவதையும் தானும் தன்னுடைய வேலையும் சிறுகுவதை காண்பதில் மகிழ்ச்சியடைந்தார்.—யோவான் 3:22-30.
எலியாவால் சித்தரிக்கப்பட்ட யோவானை தம்முடைய முன்னோடி என்று இயேசு அடையாளம் கண்டுகொண்டார். (மத்தேயு 11:12-15; 17:12) ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு கூறினார்: “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.”—லூக்கா 16:16.
முடிவுவரை உத்தமத்தோடு
யோவான் தைரியமாக உண்மையை அறிவித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஏரோது ராஜாவின் பாவத்தையுங்கூட பகிரங்கப்படுத்தும் தன்னுடைய பொறுப்பிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. கடவுளுடைய சட்டத்தை மீறி, தன்னுடைய சொந்த சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளோடு விபசாரத்தில் அந்த ராஜா வாழ்ந்து கொண்டிருந்தான். ஒருவேளை அந்த மனிதர் மனந்திரும்பி கடவுளுடைய இரக்கத்தைப் பெறலாம் என்பதற்காக யோவான் தைரியமாக எடுத்துரைத்தார்.
விசுவாசத்திற்கும் அன்புக்கும் யோவான் என்னே ஓர் முன்மாதிரி! தன்னுடைய தனிப்பட்ட சுயாதீனத்தையும் தியாகம் செய்து, யெகோவா தேவனிடத்தில் தனக்கிருந்த உத்தமத்தையும் உடன் மனிதர்களிடத்தில் தனக்கிருந்த அன்பையும் நிரூபித்தார். ஏரோதியாள் அவருக்கு எதிராக “சதியை நினைத்து” கொண்டிருந்தாள். ஒருவருட சிறைவாசத்திற்குப்பின், பொல்லாத ஏரோதியாளினால் தீட்டப்பட்ட, பிசாசு ஏவிய சதியின் விளைவாக யோவான் சிரைச்சேதம் செய்யப்பட்டார். (மாற்கு 6:16-19; மத்தேயு 14:3-12) ஆனாலும், மேசியாவின் முன்னோடி, யெகோவாவிற்குத் தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டார், கடவுளுடைய நீதியான புதிய உலகில் வாழ்க்கையை அனுபவிக்க, விரைவிலேயே மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்.—யோவான் 5:28, 29; 2 பேதுரு 3:13.