வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள்!
“வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.”—யோவா. 7:24.
1. இயேசுவைப் பற்றிய என்ன தீர்க்கதரிசனத்தை ஏசாயா சொன்னார், இது ஏன் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது?
இயேசுவைப் பற்றி ஏசாயா இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “கண்ணால் பார்ப்பதை வைத்து [அவர்] தீர்ப்பு சொல்ல மாட்டார். காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார். . . . ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.” (ஏசா. 11:3, 4) இந்தத் தீர்க்கதரிசனத்தைப் படிக்கும்போது நம் இதயத்துக்கு இதமாக இருக்கிறது; நம் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. ஏனென்றால், தப்பெண்ணம் நிறைந்த ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம்; கண்ணால் பார்ப்பதை வைத்துதான் மக்கள் மற்றவர்களை எடைபோடுகிறார்கள். அதனால், வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாத பரிபூரண நீதிபதியாகிய இயேசுவுக்காக நாம் காத்திருக்கிறோம்.
2. நாம் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார், இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களைப் பற்றி சில அபிப்பிராயங்களை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், இயேசுவைப் போல் நாம் பரிபூரணமானவர்களாக இல்லாததால், நம்முடைய அபிப்பிராயங்கள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கண்ணால் பார்ப்பதை வைத்து நாம் சுலபமாக மற்றவர்களைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், “வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 7:24) தன்னைப் போலவே நாம் நடந்துகொள்ள வேண்டுமென்றும், வெளித்தோற்றத்தை வைத்து நாம் யாரையும் எடைபோடக் கூடாதென்றும் இயேசு விரும்புகிறார். நிறைய விஷயங்களின் அடிப்படையில் மக்கள் மற்றவர்களை எடைபோடுகிறார்கள். அவற்றில் மூன்று விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். (1) இனம் அல்லது நாடு (2) பணம் (3) வயது. இந்த ஒவ்வொன்றையும் வைத்து மற்றவர்களை எடைபோடாமல் இருப்பது எப்படி என்றும், அதன் மூலம் இயேசுவுக்கு எப்படிக் கீழ்ப்படியலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இனத்தையோ நாட்டையோ வைத்து மற்றவர்களை எடைபோடாதீர்கள்
3, 4. (அ) மற்ற தேசத்தாரைப் பற்றிய அபிப்பிராயத்தை பேதுரு ஏன் மாற்றிக்கொண்டார்? (ஆரம்பப் படம்) (ஆ) பேதுருவுக்கு யெகோவா கற்றுக்கொடுத்த புதிய விஷயம் என்ன?
3 செசரியாவில் இருந்த கொர்நேலியுவின் வீட்டுக்குப் போகும்படி அப்போஸ்தலன் பேதுருவிடம் சொல்லப்பட்டபோது, அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! (அப். 10:17-29) மற்ற தேசத்து மக்களைத் தீட்டானவர்களாகப் பார்க்கிற யூத சமுதாயத்தில்தான் பேதுரு வளர்ந்தார். ஆனால், சில சம்பவங்கள், அவர் யோசிக்கும் விதத்தை மாற்றின. அதில் ஒன்றுதான், கடவுளிடமிருந்து வந்த ஒரு தரிசனம்! (அப். 10:9-16) விரிப்பு போன்ற ஒரு பொருள் வானத்திலிருந்து கீழே வந்ததை பேதுரு அந்தத் தரிசனத்தில் பார்த்தார். அந்த விரிப்பில், அசுத்தமாகக் கருதப்பட்ட மிருகங்கள் இருந்தன. பிறகு, “பேதுருவே, நீ எழுந்து இவற்றை அடித்துச் சாப்பிடு!” என்று ஒரு குரல் சொன்னது. ஆனால், பேதுரு உறுதியாக மறுத்துவிட்டார். அப்போது, “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்று அந்தக் குரல் சொன்னது. அந்தத் தரிசனத்தின் மூலம், அந்தக் குரல் என்ன சொல்லவருகிறது என்பது பேதுருவுக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரத்தில், கொர்நேலியு அனுப்பிய ஆட்கள் அங்கே வந்தார்கள். அவர்களோடு போகும்படி கடவுளுடைய சக்தி பேதுருவைத் தூண்டியது. அதனால், அந்த ஆட்களோடு கொர்நேலியுவின் வீட்டுக்கு அவர் போனார்.
4 “வெளித்தோற்றத்தைப் பார்த்து” பேதுரு எடைபோட்டிருந்தால், கொர்நேலியுவின் வீட்டுக்கு அவர் போயிருக்கவே மாட்டார். ஏனென்றால், யூதர்கள் மற்ற தேசத்து மக்களுடைய வீடுகளுக்குப் போகவே மாட்டார்கள்! அப்படியிருக்கும்போது, பேதுரு ஏன் அங்கே போனார்? மற்ற தேசத்து மக்களைப் பற்றிய தப்பெண்ணம் பேதுருவுக்கு இருந்தது உண்மைதான்! இருந்தாலும், அவர் பார்த்த தரிசனமும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலும், அவர் யோசிக்கும் விதத்தை மாற்றின. கொர்நேலியுவிடம் பேசிய பிறகு, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்” என்று பேதுரு சொன்னார். (அப். 10:34, 35) இந்தப் புதிய விஷயத்தைப் புரிந்துகொண்டபோது பேதுரு பூரித்துப்போயிருப்பார்! இந்தப் புரிந்துகொள்ளுதல், எல்லா கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தவிருந்தது. எப்படி?
5. (அ) எல்லா கிறிஸ்தவர்களும் எதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்? (ஆ) கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும், எப்படிப்பட்ட எண்ணங்கள் நம் மனதில் இருக்கலாம்?
5 தான் பாரபட்சமுள்ள கடவுள் கிடையாது என்பதை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் புரியவைக்க, பேதுருவை யெகோவா பயன்படுத்தினார். யெகோவாவைப் பொறுத்தவரை, இனம்... நாடு... குலம்... மொழி... என எந்த வித்தியாசமும் இல்லை! நாம் அவருக்குப் பயந்து நடந்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்தால் போதும்; அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். (கலா. 3:26-28; வெளி. 7:9, 10) இந்த விஷயம் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடுகிற ஒரு குடும்பத்திலோ நாட்டிலோ நீங்கள் வளர்ந்திருந்தால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? ‘நான் பாரபட்சமெல்லாம் பார்க்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும், உங்கள் மனதின் ஓரத்தில் அப்படிப்பட்ட எண்ணங்கள் எட்டிப்பார்க்க வாய்ப்பிருக்கிறதா? பேதுருவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதைப் புரிந்துகொள்ள அவர் மற்றவர்களுக்கு உதவினார்; இருந்தாலும், பிற்பாடு அவரே பாரபட்சமாக நடந்துகொண்டார். (கலா. 2:11-14) அதனால், நாம் எப்படி இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, வெளித்தோற்றத்தை வைத்து மற்றவர்களை எடைபோடாமல் இருக்கலாம்?
6. (அ) தப்பெண்ணத்தை விட்டுவிட எது நமக்கு உதவும்? (ஆ) பொறுப்பிலிருந்த ஒரு சகோதரர் அனுப்பிய அறிக்கை, அவரைப் பற்றி எதைக் காட்டுகிறது?
6 நம் மனதில் தப்பெண்ணம் எட்டிப்பார்க்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு, நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். நம்முடைய மனப்பான்மையையும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். (சங். 119:105) அதோடு, ‘வெளித்தோற்றத்த வைச்சு நான் மத்தவங்கள எடை போடுறத நீங்க கவனிச்சிருக்கீங்களா?’ என்று நம் நண்பரிடம் கேட்டுப் பார்க்கலாம்; ஏனென்றால், நமக்குள் ஒளிந்திருக்கும் சில எண்ணங்கள் நமக்கே தெரியாமல் இருக்கலாம். (கலா. 2:11, 14) அப்படிப்பட்ட எண்ணங்கள் நம் மனதில் ரொம்பக் காலமாக இருந்திருக்கலாம்; அதனால், அந்த எண்ணங்கள் தவறு என்ற உணர்வே நமக்கு இல்லாமல் போயிருக்கலாம். பொறுப்புள்ள ஸ்தானத்திலிருந்த ஒரு சகோதரருடைய விஷயத்தில் இதுதான் நடந்தது. ஒருசமயம், முழுநேர சேவையை முழுமூச்சோடு செய்துகொண்டிருந்த ஒரு கணவன் மனைவியைப் பற்றி, கிளை அலுவலகத்துக்கு அவர் ஓர் அறிக்கையை அனுப்ப வேண்டியிருந்தது. அந்தக் கணவர், பெரும்பாலானவர்களால் மட்டமாகப் பார்க்கப்படும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர். அந்தக் கணவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களை அந்தச் சகோதரர் எழுதினார். ஆனால், இதையும் சேர்த்துக்கொண்டார்: “இவர் [இந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்], இவருடைய பழக்கவழக்கங்களும் வாழும் விதமும், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுகிறது. அதாவது, [இந்த இனத்தைச் சேர்ந்த] நிறைய பேர் சுத்தமாக இருக்க மாட்டார்கள், அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் நன்றாக இருக்காது என்பதற்காக, [இந்த] இனத்தைச் சேர்ந்த எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற அவசியம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுகிறது.” இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? யெகோவாவின் அமைப்பில் நமக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும், நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்; மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் மனதின் ஓரத்தில் தப்பெண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். நாம் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் என்ன?
7. ‘நம்முடைய இதயக் கதவை நாம் அகலமாகத் திறந்திருக்கிறோம்’ என்பதை எப்படிக் காட்டலாம்?
7 ‘நம்முடைய இதயக் கதவை நாம் அகலமாகத் திறந்தால்,’ தப்பெண்ணம் நம்மைவிட்டுப் பறந்துவிடும்; அன்பு நம் மனதில் ஊற்றெடுக்கும். (2 கொ. 6:11-13) உங்கள் இனம், தேசம், குலம் அல்லது மொழியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளோடு மட்டுமே நேரம் செலவு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், மற்றவர்களோடும் நேரம் செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கு, பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை நீங்கள் அழைக்கலாம். அல்லது உங்களோடு சேர்ந்து சாப்பிடவோ, எல்லாரும் ஒன்றுசேர்ந்து நேரம் செலவு செய்யவோ உங்கள் வீட்டுக்குக் கூப்பிடலாம். (அப். 16:14, 15) இப்படியெல்லாம் செய்தால், உங்களுக்குள் இருக்கும் தப்பெண்ணம் சுவடு தெரியாமல் போய்விடும்; உங்கள் மனதில் அன்புதான் நிறைந்திருக்கும். இப்போது, “வெளித்தோற்றத்தைப் பார்த்து” மற்றவர்களை எடைபோடுவதற்குக் காரணமாக இருக்கும் இன்னொரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
பணம் பொருளை வைத்து மற்றவர்களை எடைபோடாதீர்கள்
8. லேவியராகமம் 19:15-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 நம்முடைய சகோதரர்கள் பணக்காரர்களா ஏழைகளா என்பதை வைத்துகூட நாம் அவர்களை எடைபோட வாய்ப்பிருக்கிறது. ஆனால், “ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது. எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்” என்று லேவியராகமம் 19:15 சொல்கிறது. ஒருவர் பணக்காரரா ஏழையா என்பதை வைத்து நாம் எப்படி அவரை எடைபோட ஆரம்பித்துவிடலாம்?
9. சாலொமோன் எழுதிய கசப்பான உண்மை என்ன, இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
9 “ஏழையை அக்கம்பக்கத்தார்கூட வெறுக்கிறார்கள். ஆனால், பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்” என்ற கசப்பான உண்மையை எழுதும்படி கடவுளுடைய சக்தியால் சாலொமோன் தூண்டப்பட்டார். (நீதி. 14:20) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ஜாக்கிரதையாக இல்லையென்றால், பணக்காரர்களாக இருக்கும் சகோதரர்களிடம் ஒட்டிக்கொண்டு, ஏழையாக இருக்கும் சகோதரர்களை நாம் ஒதுக்கிவிடுவோம். பணம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து மற்றவர்களை எடைபோடுவது ஆபத்தானது. ஏன் அப்படிச் சொல்லலாம்?
10. எந்தப் பிரச்சினையைப் பற்றி கிறிஸ்தவர்களை யாக்கோபு எச்சரித்தார்?
10 நம் சகோதரர்கள் பணக்காரர்களா ஏழைகளா என்பதை வைத்து நாம் அவர்களை எடைபோட்டால், சபையில் பிரிவினைகளை ஏற்படுத்திவிடுவோம்; முதல் நூற்றாண்டில் இருந்த சில சபைகளில் இப்படித்தான் நடந்தது. அதைப் பற்றி கிறிஸ்தவர்களை யாக்கோபு எச்சரித்தார். (யாக்கோபு 2:1-4-ஐ வாசியுங்கள்.) சபையில் பிரிவினைகள் ஏற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. அப்படியென்றால், பணக்காரர்களா ஏழைகளா என்பதை வைத்து நம் சகோதரர்களை எடைபோடுவதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
11. பணம் பொருளுக்கும் யெகோவாவோடு இருக்கும் பந்தத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? விளக்குங்கள்.
11 நம் சகோதரர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல்தான் நாமும் பார்க்க வேண்டும். ஒருவர் பணக்காரரா ஏழையா என்பதை வைத்து யெகோவா அவரை மதிப்பிடுவதில்லை. நம்மிடம் எவ்வளவு பணம் பொருள் இருக்கிறது என்பதற்கும், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “பணக்காரர்கள் பரலோக அரசாங்கத்துக்குள் நுழைவது கஷ்டம்” என்று இயேசு சொன்னது உண்மைதான். அதற்காக, பணக்காரர்கள் பரலோக அரசாங்கத்துக்குள் நுழையவே முடியாது என்று அவர் சொன்னாரா? (மத். 19:23) “ஏழைகளாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் கடவுளுடைய அரசாங்கம் உங்களுடையது” என்றும் இயேசு சொன்னார். (லூக். 6:20) அதற்காக, தான் சொல்வதை ஏழைகள் எல்லாரும் கேட்பார்கள் என்றும், அவர்கள் விசேஷமான விதத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னாரா? இயேசுவைப் பின்பற்றாத எத்தனையோ ஏழைகள் அப்போது இருந்தார்களே! இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவரிடம் இருக்கும் பணம் பொருளை வைத்து, அவருக்கு யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிட முடியாது.
12. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பைபிள் என்ன அறிவுரை கொடுக்கிறது?
12 யெகோவாவின் சாட்சிகளில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், ஏழைகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் யெகோவாவை நேசிக்கிறார்கள், முழு இதயத்தோடு அவருக்குச் சேவை செய்கிறார்கள். பணக்காரர்கள், “நிலையில்லாத செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், . . . கடவுள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:17-19-ஐ வாசியுங்கள்.) பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, பணத்தின் மேல் நம்பிக்கை வைப்பது ஆபத்தானது என்று யெகோவாவின் ஊழியர்களான நம் எல்லாரையும் பைபிள் எச்சரிக்கிறது. (1 தீ. 6:9, 10) நம் சகோதரர்களை யெகோவா பார்ப்பது போல் நாம் பார்த்தால், அவர்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க மாட்டோம்; அதை வைத்து அவர்களை எடைபோடவும் மாட்டோம். ஆனால், வயதை வைத்து மற்றவர்களை எடைபோடலாமா? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
வயதை வைத்து மற்றவர்களை எடைபோடாதீர்கள்
13. வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
13 வயதானவர்களை நாம் மதிக்க வேண்டுமென்று பைபிள் அடிக்கடி சொல்கிறது. உதாரணத்துக்கு, “நரைமுடி உள்ளவருக்கு முன்னால் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும், வயதில் மூத்தவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்” என்று லேவியராகமம் 19:32 சொல்கிறது. “நீதியான வழியில் நடப்பவர்களுக்கு நரைமுடி அழகான கிரீடம்” என்று நீதிமொழிகள் 16:31 சொல்கிறது. வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசக் கூடாதென்றும், அவர்களை அப்பாக்களைப் போல நினைக்க வேண்டுமென்றும் தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். (1 தீ. 5:1, 2) வயதான சகோதரர்கள்மீது தீமோத்தேயுவுக்கு ஓரளவு அதிகாரம் இருந்தபோதிலும், அவர்களை எப்போதுமே கரிசனையோடும் மதிப்பு மரியாதையோடும் அவர் நடத்த வேண்டியிருந்தது.
14. நம்மைவிட வயதில் மூத்தவர்களை நாம் எப்போது சரிப்படுத்த வேண்டியிருக்கலாம்?
14 வயதான ஒருவர், வேண்டுமென்றே பாவம் செய்தாலோ யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யும்படி மற்றவர்களைத் தூண்டினாலோ என்ன செய்வது? வேண்டுமென்றே பாவம் செய்யும் ஒருவரை யெகோவா மன்னிக்க மாட்டார்; அவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் சரி, எவ்வளவு மதிப்பு மரியாதையைச் சம்பாதித்திருந்தாலும் சரி! சொல்லப்போனால், “பாவம் செய்கிறவன் நூறு வயதுள்ளவனாக இருந்தாலும் சபிக்கப்படுவான்” என்று ஏசாயா 65:20 சொல்கிறது. இதேபோன்ற நியமம் எசேக்கியேல் புத்தகத்திலும் இருக்கிறது. (எசே. 9:5-7) யுகம் யுகமாக வாழ்கிற யெகோவாவுக்கு மதிப்புக் கொடுப்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியம்! (தானி. 7:9, 10, 13, 14) அப்படி நாம் யெகோவாவுக்கு மதிப்புக் கொடுக்கும்போது, தவறு செய்தவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் சரி, அவரைச் சரிப்படுத்தத் தேவையான தைரியம் நமக்குப் பிறக்கும்.—கலா. 6:1.
15. இளம் சகோதரர்களுக்கு மதிப்புக் கொடுக்கிற விஷயத்தில், அப்போஸ்தலன் பவுல் எழுதியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 நம்மைவிட வயதில் குறைந்த சகோதரர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்கள் இளைஞர்களாக இருப்பதால், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதில்லை என்று அர்த்தமா? இல்லை! “நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னை அற்பமாக நினைக்காதபடி பார்த்துக்கொள். பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு” என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். (1 தீ. 4:12) பவுல் இதை எழுதியபோது, தீமோத்தேயுவுக்கு கிட்டத்தட்ட 30 வயதுதான் இருந்திருக்கும். இருந்தாலும், மிக முக்கியமான பொறுப்புகளை பவுல் அவருக்குக் கொடுத்தார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? வயதை வைத்து இளம் சகோதரர்களை எடைபோடக் கூடாது. வெறும் 33 வயதில் இயேசு எதையெல்லாம் சாதித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்!
16, 17. (அ) உதவி ஊழியராக அல்லது மூப்பராக ஆவதற்கு ஒரு சகோதரருக்குத் தகுதி இருக்கிறதா என்பதை மூப்பர்கள் எப்படி முடிவு செய்ய வேண்டும்? (ஆ) சொந்த அபிப்பிராயங்களும், உள்ளூர் கலாச்சாரமும் எப்படி பைபிளோடு முரண்படலாம்?
16 சில கலாச்சாரங்களில், இளம் ஆண்களை மற்றவர்கள் மதிப்பு மரியாதையோடு நடத்துவதில்லை. உதவி ஊழியர்களாகவோ மூப்பர்களாகவோ சேவை செய்யும் தகுதி இளம் சகோதரர்களுக்கு இருந்தால்கூட, சில மூப்பர்கள் அவர்களை சிபாரிசு செய்வதில்லை. ஆனால், உதவி ஊழியராகவோ மூப்பராகவோ நியமிக்கப்படுவதற்கு பைபிள் எந்த வயது வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. (1 தீ. 3:1-10, 12, 13; தீத். 1:5-9) இந்த விஷயத்தில், உள்ளூர் கலாச்சாரத்தைக் காரணங்காட்டி ஒரு மூப்பர் சில சட்டங்களைப் போட்டால், பைபிளின்படி அவர் நடக்கவில்லை என்றுதான் அர்த்தம்! அதனால், தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களையோ உள்ளூர் கலாச்சாரத்தையோ வைத்து மூப்பர்கள் இளம் சகோதரர்களை எடைபோடக் கூடாது; பைபிளில் இருக்கிற தராதரங்களின்படி அவர்களை நடத்த வேண்டும்.—2 தீ. 3:16, 17.
17 சகோதரர்களை உதவி ஊழியர்களாகவோ மூப்பர்களாகவோ சிபாரிசு செய்வதற்கு, பைபிள் தராதரங்களை மூப்பர்கள் பின்பற்றவில்லை என்றால் என்ன நடக்கலாம்? தகுதியுள்ள சகோதரர்களைக்கூட அவர்கள் சிபாரிசு செய்யாமல் போய்விடலாம்! ஒரு நாட்டில், முக்கியமான பொறுப்புகளையெல்லாம் ஓர் உதவி ஊழியர் நன்றாகச் செய்துவந்தார். மூப்பராவதற்கான தகுதிகள் அவருக்கு இருப்பதாக மூப்பர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், அவர் பார்ப்பதற்குச் சின்னப் பையனைப் போல இருப்பதாக வயதான மூப்பர்கள் சிலர் சொன்னார்கள். அதனால், அவரை அவர்கள் சிபாரிசு செய்யவில்லை. அவர்கள் அந்தச் சகோதரரைப் பார்த்த விதம் தவறாக இருந்ததால், அவர் மூப்பராக நியமிக்கப்படவில்லை. உலகத்தின் பல பகுதிகளில் இதுபோல் நடப்பதாகத் தெரிகிறது! சொந்த அபிப்பிராயத்தையோ உள்ளூர் கலாச்சாரத்தையோ அல்ல, எப்போதுமே பைபிள் சொல்வதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால், நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிவோம்; வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட மாட்டோம்.
மற்றவர்களை நீதியோடு நடத்துங்கள்
18, 19. யெகோவா பார்ப்பதைப் போல் நாம் எப்படி நம் சகோதரர்களைப் பார்க்கலாம்?
18 நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், யெகோவாவைப் போலவே மற்றவர்கள்மேல் எந்தத் தப்பெண்ணத்தையும் வளர்த்துக்கொள்ளாமல் இருக்க நம்மால் முடியும். (அப். 10:34, 35) அதற்கு, பைபிளில் இருக்கிற அறிவுரைகளுக்கு நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், ‘வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்துங்கள்’ என்று இயேசு சொன்ன கட்டளைக்கு நம்மால் கீழ்ப்படிய முடியும்.—யோவா. 7:24.
19 நம்முடைய ராஜாவான இயேசு, எல்லா மக்களுக்கும் சீக்கிரத்தில் தீர்ப்பு கொடுப்பார். ஆனால், கண்ணால் பார்ப்பதையோ காதால் கேட்பதையோ வைத்து அவர் தீர்ப்பு கொடுக்க மாட்டார்; கடவுளுடைய நீதியான தராதரங்களின்படி தீர்ப்பு கொடுப்பார். (ஏசா. 11:3, 4) அந்த அருமையான காலத்துக்காக நாம் ஆவலாகக் காத்திருக்கிறோம்!