“கேட்டின் மகனாகிய பாவமனுஷனை”வெளிப்படுத்துதல்
“என் ஜனங்களே நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4.
1, 2. (எ) கேட்டின் மகனாகிய பாவமனுஷனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்? (பி) கடவுளுக்குச் சேவை செய்வதாக உரிமை பாராட்டி அதே சமயத்தில் இரத்தப்பழி உடைய ஆட்களைப் பற்றிய கடவுளின் நோக்குநிலை என்ன? (மத்தேயு 7:21–23)
கடவுளுடைய வார்த்தை “கேட்டின் மகனாகிய பாவமனுஷ”னின் வருகையைப் பற்றி முன்னுரைத்தது. மேலும் இந்த அக்கிரம அம்சம் கடவுளின் பரலோக அதிகாரியான இயேசு கிறிஸ்துவினால் நாசம் பண்ண’ப்படும் என்று முன்னுரைக்கப்பட்டது. (2 தெசலோனிக்கேயர் 2:3–8) முந்தைய கட்டுரைகள் காண்பித்தவிதமாகவே கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கிறிஸ்தவமண்டல குருவர்க்கமாகும். வெகு காலத்திற்கு முன்பாகவே அவர்கள் கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்தைக் கைவிட்டு திரித்துவம், நரகஅக்கினி, ஆத்துமா அழியாமை போன்ற புறமத போதனைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். அதோடுகூட கடவுளுடைய சட்டங்களுக்கு எதிரான செயல்களைச் செய்தனர். அவர்களைப் போன்றவர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி பவுல் தீத்துவிடம் “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும் எந்த நற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்” என்று சொன்னான்.—தீத்து 1:16.
2 இயேசு “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று சொன்னார். கள்ளத்தீர்க்கதரிசிகள் “கெட்ட கனி”களை உண்டாக்குவார்கள். (மத்தேயு 7:15–17) குருவர்க்கத்தினரின் கெட்ட கனிகளுக்கான ஆதாரம் அவர்களுடைய அதிகமான இரத்தப்பழியே ஆகும். பல நூற்றாண்டுகளாக அவர்கள் சிலுவைப் போர்களையும் மரணத்தை விளைவிக்கும் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வழக்காராய்ச்சிகளையும் கோடிக்கணக்கான ஆட்களின் இரத்தத்தை சிந்தியப் போர்களையும் ஆதரித்திருக்கிறார்கள். தங்களுடைய சொந்த மதத்தினரே ஒருவரை ஒருவர் கொல்லுவதற்கு இருபக்கங்களிலும் இருந்து ஜெபித்து, ஆசீர்வதித்து யுத்தங்களுக்கு அனுப்பியிருக்கின்றனர். இதற்கு மாறாக அப்போஸ்தலனாகிய பவுலால் “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்” என்று சொல்ல முடிந்தது. (அப்போஸ்தலர் 20:27) குருவர்க்கத்தினரால் அப்படிச் சொல்ல முடியாது. இப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது,” என்று அறிவிக்கிறார்.—ஏசாயா 1:15.
3. உலகளாவிய முக்கியத்துவமுடைய என்ன சம்பவங்கள் வேகமாக நெருங்கி வருகின்றன?
3 கேட்டின் மகனாகிய பாவமனுஷனுக்கெதிராகக் கடவுள் நியாயத்தீர்ப்பு செய்யும் வேளை வெகுசீக்கிரத்தில் நெருங்குகிறது. “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” இயேசு முன்னறிவித்த விதமாக சீக்கிரத்தில் உண்டாகும். (மத்தேயு 24:21) ஈடுஇணையற்ற இத்துன்பத்தின் காலம் கிறிஸ்தவமண்டலத்தை உள்ளடக்கிய மகா பாபிலோனாகிய பொய் மத உலகப் பேரரசு அழிக்கப்படுகையில் ஆரம்பமாகும். அரசியல் அம்சங்கள் “அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16) “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்த”மாகிய அர்மகெதோனில் சாத்தானுடைய மீதி உலகமும் அழிக்கப்பட்ட உடன் மகா உபத்திரவம் முடிவடையும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11–21.
மற்றவர்களிடம் அன்பு காட்ட கடமைப்பட்டிருத்தல்
4. “தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”பவர்கள் மனதில் எதை வைத்திருக்க வேண்டும்?
4 உலகத்தை அசைவிக்கும் சம்பவங்கள் குடியிருக்கப்பட்ட பூமியின் மீது வெகுசீக்கிரத்தில் வர இருப்பதால் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”பவர்களின் மேல் என்ன கடமை உள்ளது? (யோவான் 4:23) முதலாவதாக அவர்கள் இயேசு சொன்னதை மனதில் வைத்திருக்க வேண்டும்: “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். . . . நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.”—யோவான் 15:10–14; 1 யோவான் 5:3.
5, 6. (எ) தங்களை அடையாளங்காண அவருடைய சீஷர்களுக்கு இயேசு என்ன செய்ய கட்டளையைக் கொடுத்தார்? (பி) எந்தவிதத்தில் இது ஒரு புதிய கட்டளை?
5 எனவே மெய்க் கிறிஸ்தவர்கள் மற்ற ஜனங்களை, முக்கியமாக எல்லாத் தேசத்திலுமுள்ள அவர்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு காட்ட கடமைப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:34; கலாத்தியர் 6:10; 1 யோவான் 4:20, 21) உண்மையிலேயே, உடன் கிறிஸ்தவர்களும் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பை”க் கொண்டிருக்க வேண்டும். (1 பேதுரு 4:8) இப்படிப்பட்ட வகையான அன்பு உலகளாவிய விதமாக அவர்களை மெய்வணக்கத்தினர் என்று அடையாளப்படுத்தும். இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.”—யோவான் 13:34, 35.
6 அந்தக் கட்டளையில் புதியது என்னவாக இருந்தது? “உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ்தானே யூதர்களும் இருக்கவில்லையா? (லேவியராகமம் 19:18) ஆம், ஆனால் “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” என்று இயேசு சொன்னது வேறு சிலவற்றையும் உட்படுத்தியது. அவருடைய அன்பு தன்னுடைய ஜீவனையே மற்றவர்களுக்காக கொடுப்பதையும் உட்படுத்தியிருந்தது. அவருடைய சீஷர்களும் அவ்வாறே செய்ய மனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். (யோவான் 15:13) அது ஒரு சிறந்த அன்பாக இருந்தது. ஏனென்றால் இப்படிப்பட்ட தியாகம் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டப்படி அவசியமற்றதாக இருந்தது.
7. இந்நூற்றாண்டிலே எந்த மதம் அன்பின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறது?
7 நம்முடைய நூற்றாண்டிலே எந்த மதம் இந்த அன்பின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறது? இரண்டு உலக மகா யுத்தங்களிலும் மற்ற சண்டைகளிலும் பத்தாயிரக்கணக்கான ஆட்களை கொலைசெய்திருப்பதன் காரணமாக கிறிஸ்தவமண்டல மதங்களாக அவை நிச்சயமாக இருக்கமுடியாது. யெகோவாவின் சாட்சிகளே அன்பின் சட்டத்திற்கு உலகளாவிய விதத்தில் கீழ்ப்படிந்திருக்கின்றனர். “அவர்களும் உலகத்தாரல்ல” என்று இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பற்றி சொன்னவிதமாகவே அவர்கள் தேசத்தின் யுத்தங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமல் நடுநிலைமை வகிக்கின்றனர். (யோவான் 17:16) இவ்வாறு, இவர்களும் பவுல் சொன்னவிதமாக “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறே”னென்று சொல்லலாம். உதாரணமாக, வாஷிங்டன் டி.சி. மாநாட்டிலே நவம்பர் 27, 1921-ல் யெகோவாவின் ஊழியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் துவக்கப்பகுதி குறிப்பிடுவதாவது:
“கிறிஸ்தவர்களாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் போதனைகளை மெய்யார்வத்தோடு பின்பற்ற முயற்சி செய்பவர்களாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்: யுத்தம் நாகரிகமற்றவர்களின் சின்னம், நல்ல ஒழுக்கங்களை அழிக்கக்கூடியது, கிறிஸ்தவ மக்களுக்கு அவகீர்த்தியைக் கொடுக்கக்கூடியது; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நியமங்கள் கடவுளுக்கென்று தங்களை ஒப்புவித்திருக்கும் கிறிஸ்தவர்கள் யுத்தத்தில் ஈடுபடுவது, இரத்தம் சிந்துதல் அல்லது எந்தவகையான வன்முறையிலிருந்தும் விலகி இருக்கும்படி கற்பிக்கிறது.”
8. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சரித்திரப் பதிவு என்ன சொல்லுகிறது?
8 இந்த நோக்குநிலை எவ்வாறு இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருத்தப்பட்டது? மனித சரித்திரத்திலேயே அதிக மோசமான அந்த யுத்தத்தில் ஏறக்குறைய 50 இலட்சம் ஆட்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர்கூட யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரால் கொல்லப்படவில்லை! உதாரணமாக, ஏறக்குறைய எல்லா ஜெர்மானிய குருமார்களும் நாசிக் கொள்கையை தீவிரமாகவோ அல்லது எதிர்க்காமலோ ஆதரித்தனர். அதற்குமாறாக, யெகோவாவின் சாட்சிகள் நாசி ஆட்சியின் கீழ் கண்டிப்பான நடுநிலைமையைக் கடைப்பிடித்தனர். அவர்கள் ஹிட்லரை வாழ்த்தவும் அல்லது அவனுடைய இராணுவ மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பின் பாகமாக இருக்கவும் மறுத்துவிட்டனர். எனவே அந்தக் காரணத்திற்காக எவரையும் அவர்கள் கொல்லவில்லை, மேலும் அவர்கள் மற்ற நாடுகளிலுள்ள தங்கள் ஆவிக்குரிய சகோதரர்களில் ஒருவரைக்கூட கொல்லவில்லை. மற்ற நாடுகளில் இருந்த யெகோவாவின் சாட்சிகளும்கூட நடுநிலைமையைக் காத்துக் கொண்டனர்.
9. நாசி ஆட்சியின் கீழ் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஜெர்மனியிலும் ஆஸ்டிரியாவிலும் என்ன ஏற்பட்டது?
9 அன்பின் சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களாக அநேக யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஆத்துமாக்களைத் தங்களுடைய நண்பர்களுக்காக இழந்திருக்கின்றனர். ஜெர்மனியின் சர்ச்சுகளின் யுத்தம் என்ற புத்தகத்தின் மதிப்பாய்வுரையில் அதன் எழுத்தாளர் ஃபிரெட்டிரிக் சிப்வெல் சாட்சிகளைப் பற்றிச் சொல்கிறார்: “இந்தச் சிறிய மதத்தொகுதியில் அதன் தொண்ணூற்றி ஏழு சதவிகித அங்கத்தினர்கள் தேசிய சமதருமக் கொள்கை [நாசி] யினரின் துன்புறுத்தலுக்குப் பலியாகியிருந்தார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தூக்கிலிடப்பட்டோ, அல்லது மற்ற கொடுமையான செயலினாலோ, பசியினாலோ, வியாதியினாலோ அல்லது அடிமைத்தொழிலினாலோ கொல்லப்பட்டனர். அதுபோன்ற கடுமையான கீழ்ப்படுத்துதலுக்கு எந்த முன்மாதிரியும் இல்லை. தேசிய சமதருமக் கொள்கை கருத்துப்பாங்கிற்கு தங்கள் விசுவாசத்தை ஒத்துப்போகச் செய்யாததால் இவை ஏற்பட்டன.” ஆஸ்டிரியாவில் 25 சதவிகித யெகோவாவின் சாட்சிகள் தூக்கிலிடப்பட்டனர், மரணத்தில் விழும்வரை அடிக்கப்பட்டனர் அல்லது வியாதியால், முழுச்சோர்வினால் நாசி கான்ஸ்சன்ட்ரேஷன் முகாம்களில் மரித்தனர்.
10. அன்பின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்திருந்து மரித்த ஆட்களுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
10 அன்பின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்ததன் காரணமாக தியாகிகளாக மரித்த ஆட்கள் பின்வரும் நம்பிக்கையுடன் இருந்தனர். “(அவர்களுடைய) கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் [அவர்கள்] காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) “உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். (1 யோவான் 2:17) நித்திய ஜீவனின் நோக்குடன் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருந்தனர்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
11. எந்த விதத்தில் யெகோவாவின் ஊழியர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்? எந்தத் தீர்க்கதரிசனமும் அவர்களில் நிறைவேறி இருக்கிறது?
11 “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் உயர்நீதிமன்றத்தில் பேசியது போல இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில் யெகோவாவின் சாட்சிகள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். (அப்போஸ்தலர் 5:29) யெகோவாவின் சாட்சிகள் இதைச் செய்வதால், “தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவி”யினால் அவர்கள் உதவப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 5:32) இந்தச் சக்திதானே அவர்கள் ஏசாயா 2:2–4-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற உதவி செய்கிறது. நம்முடைய நாட்களில் மெய்வணக்கம் ஸ்தாபிக்கப்படும் என்றும் எல்லாத் தேசத்திலிருந்தும் மதத்திலிருந்தும் ஜனங்கள் அதற்குள் ஓடிவருவார்கள் என்றும் முன்னுரைக்கப்பட்டது. ஒரு விளைவு இவ்வாறிருக்கும்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” அவர்கள் இனி யுத்தத்தை ஒருபோதும் கற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை சமாதானமுள்ள புதிய பூமியில் வாழ ஆயத்தம் செய்கின்றனர். அவர்கள் அன்பின் சட்டத்தைக் கற்கின்றனர்.—யோவான் 13:34, 35.
12. அன்பின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் அனைவரும் மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
12 “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பதையும் கிறிஸ்தவ அன்பு உட்படுத்துவதால் கடவுளுடைய ஊழியர்கள் அவர்கள் அறிந்ததைக் குறித்து தன்னலமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். (மத்தேயு 22:39) அவருடைய புதிய பூமியில் வாழவும் கடவுளுக்குச் சேவை செய்யவும் விரும்பும் ஆட்கள் இன்னும் அநேகர் இருக்கின்றனர். இன்னும் காலம் இருக்கும்போதே இவர்களும் அன்பின் சட்டத்தைக் கற்றுக்கொள்ளவும், சர்வலோகப் பேரரசராக யெகோவா தேவன் சம்பந்தப்பட்ட மற்ற உண்மைகளையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. யெகோவா மட்டுமே நம் வணக்கத்திற்கு தகுதியுள்ளவர் என்றும் அந்த வணக்கம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். (மத்தேயு 4:10; வெளிப்படுத்துதல் 4:11) இந்தக் காரியங்களை ஏற்கெனவே கற்றுக்கொண்டிருப்பவர்கள் அவைகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களும்கூட யெகோவாவின் தயவிற்குள் வரசெய்ய வேண்டிய கடமையை உடையவர்களாக இருக்கிறார்கள்.—எசேக்கியேல் 33:7–9, 14–16.
கேட்டின் மகனாகிய பாவமனுஷனை வெளிப்படுத்துதல்
13. உலகளாவிய சாட்சி கொடுத்தலின் பாகமாக நாம் எதை அறிவிக்க வேண்டும்? ஏன்?
13 “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) இந்த உலகளாவிய சாட்சி கொடுத்தலின் பாகமாக, கடவுளுடைய ஊழியர்கள் பொய் மதத்திற்கு முக்கியமாக கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினருக்கு எதிரான நியாயத்தீர்ப்பை அறிவிக்க வேண்டிய கடமையின் கீழ் இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டுவதால் இவர்கள் கடவுளுடைய பார்வையில் அதிக கணக்குக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றனர். கடவுளைச் சேவிக்க விரும்புகிறவர்கள் அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து வெளிவரவும், தேவையானால் தப்பிப்பிழைத்தலுக்கான சரியான படியை எடுப்பதற்கும் அவர்கள் கட்டாயமாகவே வெளிப்படுத்தப்பட வேண்டும். இயேசு சொன்னவிதமாக: “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
14. பொய் மதத்தைப் பற்றிய எந்த செய்தி தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்?
14 இவ்வாறு ஏவப்பட்ட பொய் மதத்தைப் பற்றிய இந்தச் செய்தியை யெகோவாவின் சாட்சிகள் கட்டாயமாக மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். . . . ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:4–8.
15. யெகோவாவின் கால அட்டவணையில் 1914-ம் வருடம் என்ன பாகத்தை வகித்தது? முதல் உலக மகா யுத்தத்திற்குப் பின் என்ன ஏற்பட்டது?
15 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்கள்” நெருக்கடியான வருடமாகிய 1914-ல் ஆரம்பித்துவிட்டது என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1–5, 13; மத்தேயு 24:3–13) அந்த வருடம் முதற்கொண்டு நாம் “முடிவு காலத்தில்” இருக்கிறோம். (தானியேல் 12:4) முதல் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு உடனடியாக, யெகோவாவின் கால அட்டவணைக்கு இசைவாக, மத்தேயு 24:14-ல் முன்னுரைக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அறிவிப்பை தீவிரமாக அவருடைய ஊழியர்கள் விரிவுபடுத்த ஆரம்பித்தனர். அதோடுகூட அவர்கள் பொய் மதத்தை குறிப்பாக விசுவாச துரோக கிறிஸ்தவமண்டலத்தின் அக்கிரமக்கார குருவர்க்க வகுப்பை மிகக் கடுமையாக வெளிப்படுத்திவர ஆரம்பித்தனர்.
16. கேட்டின் மகனாகிய பாவமனுஷனை வெளிப்படுத்துபவர்கள் எவ்வாறு 70 வருடங்களுக்கும் மேலாக தங்களுடைய வல்லமையைக் கூட்டியிருக்கின்றனர்?
16 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக இப்பொழுது எப்பொழுதும் இருந்ததைவிட அதிக வல்லமையோடு, கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் தந்திர நடவடிக்கைகளைக் குறித்து கடவுளுடைய ஊழியர்கள் மக்களை எச்சரித்து வருகிறார்கள். முதல் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு ஒருசில ஆயிரக்கணக்கான சாட்சிகளே இதைச் செய்து வந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் “ஒரு பலத்த ஜாதியாக” 35 இலட்சத்திற்கும் அதிகமான சுறுசுறுப்புள்ள ஊழியர்களாக, உலகம் முழுவதிலும் 60,000-க்கும் மேலான சபைகளில் இருக்கிறார்கள். (ஏசாயா 60:22) பெரிய அளவிலே கடவுளுடைய ஊழியர்கள் கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை என்றும் அதே சமயத்தில் குருவர்க்கத்தினரை அவர்கள் இருக்கும் வண்ணமாக—தந்திரமான கேட்டின் மகனாகிய பாவமனுஷனாக வைராக்கியத்தோடு பிரசங்கித்து வருகின்றனர்.
ஏன் இவ்வளவு கடுமை?
17. யெகோவாவின் ஊழியர்கள் ஏன் இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷனை இவ்வளவு கடுமையான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்கள்?
17 இந்த வருடங்களினூடாக ஏன் யெகோவாவின் ஊழியர்கள் இந்தக் கேட்டின் மகனாகிய பாவமனுஷனை இவ்வளவு கடுமையான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்கள்? ஏனென்றால் இலட்சக்கணக்கான யெகோவாவின் ஆடுகள் ஏற்கெனவே திரள் கூட்டத்தின் பாகமாக இருந்து இரட்சிப்பின் வழியில் சென்றுகொண்டிருக்கிறவர்கள் சாத்தானின் உலகத்திலிருந்தும் அதன் பொய் மதத்திலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9–14) மேலுமாக குருவர்க்கம் வெளிப்படுத்தப்படாவிட்டால் கடவுளுடைய மந்தையில் பாகமாகாத ஆனால் நேர்மை இருதயமுடைய ஆட்கள் தவறான போக்கை எப்படித் தவிர்ப்பது என்று அறியாதவர்களாக இருப்பர். தம்முடைய நாட்களில் இருந்த மாய்மாலமான மதத்தலைவர்களைப் பற்றி இயேசு ஜனங்களிடம் சொன்னவிதமாக அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்: “குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.”—மத்தேயு 15:14; 2 கொரிந்தியர் 4:4; 11:13–15-ஐயும் பார்க்கவும்.
18. உண்மையைத் தேடுபவர்கள் எதைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது?
18 குருவர்க்கத்தினர் சாத்தானின் உலகத்தின் பாகமாக இருக்கிறார்கள். (யோவான் 8:44) ஆனால் இந்த உலகத்தைக் கடவுள் சீக்கிரத்தில் இனிமேலும் இல்லாதபடி அழித்துப்போடுவார். (2 பேதுரு 3:11–13; 1 யோவான் 2:15–17) எனவே கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது: “ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) குருவர்க்கத்தினர் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அரசியல் விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகளின் முயற்சிகளினால் ஒரு நல்ல உலகம் வரும் என்று தங்களைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது பொய்யான நம்பிக்கை, சாத்தானின் கீழ் இருக்கும் இந்த உலகம் அழிவதற்கான வழியில் இருக்கிறது. எனவே இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் ஆட்கள் ஏமாற்றப்படுவார்கள். இந்த உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது, அதன் இடத்தை எது எடுத்துக்கொள்ளும் என்ற சத்தியம் அவர்களுக்குச் சொல்லப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.—நீதிமொழிகள் 14:12; 19:21; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:4, 5.
19. உலகப்பிரகாரமாக இருக்கும் சில குருமார்களின் காரியம் சமீபகாலங்களில் சில செய்தி மூலங்களின் மூலம் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?
19 உலகப்பிரகாரமாக இருக்கும் சில குருமார்களின் செயல்கள் சமீப காலங்களில் சில செய்தி மூலங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக வரம்புமீறிய மற்றும் ஆடம்பர வாழ்க்கைப் பாணியைக் கொண்ட சில டெலிவிஷனில் பிரசங்கிக்கும் குருமார்களின் செயல்களை ஒரு நவீன பாடல் எழுத்தாளன் இந்தத் தலைப்பில் ஒரு பாடலை இயற்றினான். அதில் “இயேசு தம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் [10,000 டாலர் மதிப்புள்ள] ஒரு ரோலெக்ஸ் [கை கடிகாரத்தை] அணிவாரா?” அந்தப் பாடல் தொடர்ந்து சொல்லுகிறது: “இயேசு திரும்ப பூமிக்கு வந்தால் அவர் அரசியலில் ஈடுபடுவாரா? ப்பாம் ஸ்பிரிங்ஸ் என்னும் [ஆடம்பரமான] இடத்தில் தம்முடைய இரண்டாவது வீட்டை கொண்டிருப்பாரா, வரி செலுத்துவதிலிருந்து தப்புவதற்காக தம்மிடம் இருக்கும் பெருமதிப்புள்ள சொத்தை மறைப்பாரா?” அதோடுகூட அதிகமதிகமான குருமார்கள் ஒத்தபாலினப்புணர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் அல்லது அதிகமாக எதிர்ப்பதில்லை. ஐக்கிய மாகாணங்களில் இப்பொழுதும்கூட கத்தோலிக்க திருச்சபை பையன்பால் வேட்கையுள்ள பாதிரிகள் ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவதால் ஏற்படும் குற்றபழியை இழப்பீடு செய்வதற்கு இலட்சக்கணக்கான டாலர்களை செலுத்திக்கொண்டு இருக்கின்றனர்.—ரோமர் 1:24–27; 1 கொரிந்தியர் 6:9, 10.
20. கடவுளுடைய ஊழியர்கள் ஏன் தொடர்ந்து கேட்டின் மகனாகிய பாவமனுஷனை வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?
20 இப்படிப்பட்ட குற்றச் செயல்கள் கடவுளுடைய ஜனங்களால் பொருட்படுத்தாமல் விடப்படாமல் ஆனால் மற்றவர்களின் நன்மைக்காக வெளிப்படுத்தப்படுகிறது. இவர்கள் திரள்கூட்டத்தின் வேறே ஆடுகளை கடவுளுடைய சட்டத்தை மீறும்படி வற்புறுத்தக்கூடும், அதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற” ஜனங்களை தேடிக்கண்டுபிடித்து பெரிய மேய்ப்பராகிய யெகோவா தேவன் மற்றும் நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பான வழிநடத்துதலுக்குள் கூட்டிச் சேர்க்கப்பட வேண்டும்.—எசேக்கியேல் 9:4; யோவான் 10:11; நீதிமொழிகள் 18:10.
21. யெகோவாவின் சாட்சிகள் எதைத் தொடர்ந்து அறிவித்து வருவார்கள்?
21 எனவே, கடவுளுடைய ஜனங்கள் கேட்டின் மகனாகிய பாவமனுஷனாகிய கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினர் உட்பட, எல்லாச் சாத்தானின் உலகத்திற்கெதிராகவும், வரும் கோபாக்கினையை அறிவிப்பதில் தயங்க மாட்டார்கள். வெளிப்படுத்துதல் 14:7-ல் உள்ள தேவதூதனின் செய்தியை அவர்கள் உறுதியாக அறிவிப்பார்கள்: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது.” இவ்விதமான அறிவிப்பில் பொய் மதத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் 18:4-ல் சொல்லப்பட்ட அவசரமான எச்சரிப்பையும் சேர்த்துக்கொள்வர்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” (w90 2/1)
கலந்தாராய்வதற்கான கேள்விகள்:
◻ கேட்டின் மகனாகிய பாவமனுஷனின் முடிவு என்ன? ஏன்?
◻ மற்றவர்களைக் குறித்ததில் யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன கடமை இருக்கிறது?
◻ எல்லா மனிதரின் இரத்தத்திலிருந்தும் எப்படி யெகோவாவின் ஜனங்கள் நீங்கியிருக்கிறார்கள்?
◻ மகா பாபிலோனைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?
◻ கேட்டின் மகனாகிய பாவமனுஷனைப் பற்றிய கடுமையான செய்தியை நாம் ஏன் தொடர்ந்து அறிவித்துவர வேண்டும்?
[பக்கம் 25-ன் படம்]
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று அப்போஸ்தலர்கள் உயர்நீதிமன்றத்தில் சொன்னார்கள்
[பக்கம் 26-ன் படம்]
நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இந்த உலகமும் அதன் மதங்களும் எதைநோக்கி போய்கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளவேண்டிய தேவையிலிருக்கிறார்கள்