அதிகாரம் 122
மாடி அறையில் இயேசுவின் முடிவான ஜெபம்
கடவுளையும் அவருடைய மகனையும் பற்றித் தெரிந்துகொள்வதால் கிடைக்கும் நன்மை
யெகோவாவும் இயேசுவும் சீஷர்களும் ஒன்றாயிருக்கிறார்கள்
இயேசு தன் அப்போஸ்தலர்கள்மீது உயிரையே வைத்திருக்கிறார். சீக்கிரத்தில் அவர்களைவிட்டு அவர் போகப் போவதால் அவர்களுடைய மனதைத் தயார்படுத்த நிறைய விஷயங்களை இவ்வளவு நேரமாகப் பேசியிருந்தார். இப்போது அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து தகப்பனிடம் இப்படி ஜெபிக்கிறார்: “உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும் அவர் முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பதற்காக அவர்கள் எல்லார்மேலும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள்.”—யோவான் 17:1, 2.
கடவுளுக்கு மகிமை சேர்ப்பதுதான் மிக முக்கியம் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அதேசமயத்தில், முடிவில்லாத வாழ்வைப் பற்றியும் சொல்கிறார். இயேசுவுக்குக் கடவுள் ‘எல்லார்மேலும் அதிகாரத்தை’ கொடுத்திருப்பதால், மீட்புவிலையின் நன்மைகளை எல்லாருக்கும் அவரால் கொடுக்க முடியும். அதைப் பெற்றுக்கொள்ள ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு குறிப்பிடுகிறார். (யோவான் 17:3) இதைச் செய்கிறவர்களுக்கு மட்டும்தான் மீட்புவிலையின் நன்மைகளை இயேசு கொடுப்பார்.
தகப்பனைப் பற்றியும் மகனைப் பற்றியும் ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டு, அவர்களோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்களோ, அதேபோல் அவரும் உணர வேண்டும். அவர்களுடைய அருமையான குணங்களை அவர் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களிடம் பழகும்போது அவற்றைக் காட்ட வேண்டும். முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்வதைவிட கடவுளுக்கு மகிமை சேர்ப்பதுதான் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது கடவுளுக்கு மகிமை சேர்ப்பதைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்ல ஆரம்பிக்கிறார்.
“நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்” என்கிறார். (யோவான் 17:4, 5) தன்னை உயிர்த்தெழுப்பி, பரலோகத்தில் முன்பு தனக்கு இருந்த அதே மகிமையைத் தரும்படி இயேசு கேட்கிறார்.
ஆனால், ஊழியத்தில் தான் செய்து முடித்த காரியங்களை இயேசு மறக்கவில்லை. “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள்” என்று ஜெபம் செய்கிறார். (யோவான் 17:6) இயேசு ஊழியம் செய்த சமயத்தில், கடவுளுடைய பெயரைச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. கடவுளுடைய குணங்களைத் தெரிந்துகொள்ளவும், அவர் எப்படி மனிதர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்தார்.
யெகோவாவைப் பற்றியும், அவருடைய மகனுக்கு இருக்கிற பொறுப்பைப் பற்றியும், இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் அப்போஸ்தலர்கள் இப்போது தெரிந்துகொண்டார்கள். பிறகு இயேசு மனத்தாழ்மையோடு இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் உங்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை நம்புகிறார்கள்.”—யோவான் 17:8.
தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இந்த உலகத்துக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். . . . பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள். நான் . . . இவர்களைப் பாதுகாத்தும் காப்பாற்றியும் வந்தேன். . . . அழிவின் மகனைத் தவிர இவர்களில் ஒருவர்கூட அழிந்துபோகவில்லை.” அவரைக் காட்டிக்கொடுப்பதற்காகப் போன யூதாஸ்தான் அந்த அழிவின் மகன்.—யோவான் 17:9-12.
“இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; . . . நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்று இயேசு ஜெபிக்கிறார். (யோவான் 17:14-16) அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் இந்த உலகத்தில்தான், அதாவது சாத்தானால் ஆளப்படுகிற ஒரு சமுதாயத்தில்தான், வாழ்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இந்த உலகத்திலிருந்தும் அதன் கெட்ட வழியிலிருந்தும் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?
எபிரெய வேதாகமத்தில் உள்ள சத்தியங்களையும் இயேசு கற்பித்த விஷயங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் அதைச் செய்யலாம். இதன் மூலம், கடவுளுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளலாம். “சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று இயேசு ஜெபிக்கிறார். (யோவான் 17:17) அப்போஸ்தலர்களில் சிலர் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு சில புத்தகங்களைப் பிற்பாடு எழுதுவார்கள். அவையும் ‘சத்தியத்தின்’ பாகமாகி, ஒரு நபரைப் புனிதப்படுத்த உதவும்.
காலப்போக்கில், மற்றவர்களும் அந்த ‘சத்தியத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். அதனால் இயேசு ‘இவர்களுக்காக [11 அப்போஸ்தலர்களுக்காக] மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு [தன்மேல்] விசுவாசம் வைப்பவர்களுக்காகவும்’ வேண்டிக்கொள்கிறார். “இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெபிக்கிறார். (யோவான் 17:20, 21) இயேசுவும் அவருடைய தகப்பனும் ஒரே நபராக இல்லை, எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் தகப்பனோடு ஒன்றுபட்டிருப்பதாக இயேசு சொல்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்களும் அப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் ஜெபம் செய்கிறார்.
சற்று முன்புதான், பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும் பரலோகத்தில் அவர்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்தப் போவதாக இயேசு சொல்லியிருந்தார். (யோவான் 14:2, 3) அதைப் பற்றி இயேசு இப்போது ஜெபிக்கிறார். “தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் எனக்கு மகிமை தந்தீர்கள்; நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்கிறார். (யோவான் 17:24) பல காலத்துக்கு முன்பே, அதாவது ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே, கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் அன்பு காட்டியிருந்தார் என்பதை அவர் இங்கே உறுதிப்படுத்துகிறார். அந்த ஒரே மகன்தான் இயேசு கிறிஸ்துவாக ஆனார்.
இயேசு தன்னுடைய ஜெபத்தை முடிக்கும்போது, மறுபடியும் தன்னுடைய தகப்பனின் பெயரைப் பற்றிச் சொல்கிறார். அதோடு, அப்போஸ்தலர்கள்மீதும் ‘சத்தியத்தை’ இனிமேல் ஏற்றுக்கொள்ளப்போகிறவர்கள்மீதும் கடவுள் அன்பு வைத்திருப்பதைப் பற்றியும் சொல்கிறார். “நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று சொல்கிறார்.—யோவான் 17:26.