அதிகாரம் 9
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர்”
விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்குக் கதவு திறக்கிறது
அப்போஸ்தலர் 10:1–11:30-ன் அடிப்படையில்
1-3. பேதுரு என்ன தரிசனத்தைப் பார்த்தார், அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
கி.பி. 36 இலையுதிர் காலம். கதிரவன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருக்க ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பேதுரு ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். யோப்பா துறைமுக நகரத்தில், கடலோர காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறது அந்த வீடு. கடந்த சில நாட்களாக இந்த வீட்டில்தான் பேதுரு ஒரு விருந்தாளியாக இருக்கிறார். இங்கே போய் தங்கியிருக்கிறார் என்றால் அவரிடம் பாரபட்சம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த வீட்டின் சொந்தக்காரர் சீமோன், தோல் பதனிடுபவர்; இப்படிப்பட்ட வேலை செய்கிறவருடைய வீட்டில் யூதர்கள் சாமானியமாக கால்வைக்க மாட்டார்கள்.a இருந்தாலும், இன்னும் கொஞ்ச நேரத்தில் யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தை பற்றி முக்கியமான ஒரு பாடத்தை பேதுரு கற்றுக்கொள்ளப்போகிறார்.
2 பேதுரு ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு தரிசனத்தைப் பார்க்கிறார். அந்தத் தரிசனத்தைப் பார்க்கும் எந்தவொரு யூதரும் அதிர்ச்சி அடைவார். திருச்சட்டத்தின்படி அசுத்தமாகக் கருதப்பட்ட மிருகங்கள் ஒரு நாரிழை விரிப்பில் வானத்திலிருந்து இறங்குகின்றன. அவற்றை அடித்துச் சாப்பிடும்படி ஒரு குரல் கட்டளையிடுகிறது. அப்போது பேதுரு, “தீட்டானதையும் அசுத்தமானதையும் நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை” என்று சொல்கிறார். “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்று அந்தக் குரல் சொல்கிறது—ஒரு முறை அல்ல, மூன்று முறை. (அப். 10:14-16) இந்தத் தரிசனத்தைப் பார்த்து பேதுரு மிகவும் குழம்பிப்போகிறார்; ஆனால், கொஞ்ச நேரத்துக்குள் அவருக்குத் தெளிவு கிடைக்கிறது.
3 பேதுரு பார்த்த தரிசனத்தின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது மிக முக்கியம்; ஏனென்றால், மக்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை இந்தத் தரிசனம் காட்டுகிறது. மக்களைப் பற்றிய கடவுளுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நம்மால் முழுமையாகச் சாட்சி கொடுக்க முடியாது. இப்போது, பேதுரு பார்த்த தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அன்று நடந்த சம்பவங்கள் சிலவற்றை யோசித்துப் பார்க்கலாம்.
“எப்போதும் கடவுளிடம் மன்றாடிவந்தார்” (அப். 10:1-8)
4, 5. கொர்நேலியு யார், அவர் ஜெபித்துக் கொண்டிருந்தபோது என்ன நடந்தது?
4 யோப்பாவுக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற செசரியா நகரத்தில் பேதுரு தரிசனம் பார்ப்பதற்கு முந்தின நாள் கொர்நேலியு என்பவருக்கும் ஒரு தரிசனம் கிடைத்தது. ஆனால், அது பேதுருவுக்குத் தெரியாது. ரோம படையில் நூறு வீரர்களுக்கு அதிபதியாக இருந்த இந்த கொர்நேலியு “கடவுள்பக்தி உள்ளவர்.”b இவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவரும்கூட; ஏனென்றால், “தன் வீட்டிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து கடவுளுக்குப் பயந்து நடந்தார்.” இவர் யூத மதத்துக்கு மாறியவர் அல்ல, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும், ஏழ்மையில் வாடிய யூதர்களுக்கு இரக்கம் காட்டி, பொருளுதவி செய்துவந்தார். உத்தமமான இந்த நபர், “எப்போதும் கடவுளிடம் மன்றாடிவந்தார்.”—அப். 10:2.
5 ஒருநாள் மதியம் சுமார் 3 மணியளவில், கொர்நேலியு ஜெபம் செய்துகொண்டிருந்தார்; அப்போது ஒரு தேவதூதர் தரிசனத்தில் தோன்றி, “உன்னுடைய ஜெபங்களும் தானதர்மங்களும் கடவுளுடைய சன்னிதியை எட்டியிருக்கின்றன, அவற்றை அவர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்” என்று சொன்னார். (அப். 10:4) பிறகு, அப்போஸ்தலன் பேதுருவை அழைத்துவரும்படி கொர்நேலியுவிடம் தேவதூதர் சொன்னார். அதனால் கொர்நேலியு, ஆட்களை அனுப்பி பேதுருவை வரவழைத்தார். விருத்தசேதனம் செய்யப்படாத, யூதராக இல்லாத இந்த நபருக்கு, அதுவரை பூட்டப்பட்டிருந்த கதவு இப்போது திறக்கிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் மீட்பின் செய்தியை அவர் கேட்கப்போகிறார்.
6, 7. (அ) தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்களின் வேண்டுதல்களுக்குக் கடவுள் பதில் தருகிறார் என்பதற்கு ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள். (ஆ) இதுபோன்ற அனுபவங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
6 இன்று, தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பவர்களின் வேண்டுதல்களைக் கடவுள் கேட்கிறாரா? ஒரு அனுபவத்தைக் கவனியுங்கள். அல்பேனியாவில் இருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்து பிள்ளை வளர்ப்பைப் பற்றிய கட்டுரை இருந்த ஒரு காவற்கோபுரத்தை சாட்சி ஒருவர் கொடுத்தார்.c வீட்டிற்கு வந்திருந்த சாட்சியிடம் அந்தப் பெண் இப்படிச் சொன்னார்: “சொன்னால் நம்ப மாட்டீர்கள், ‘என் பிள்ளைகளை வளர்க்க உதவி செய்யுங்கள் கடவுளே’ என்று சொல்லி இப்போதுதான் வேண்டினேன். அதற்குள் அவர் உங்களை அனுப்பிவிட்டார்! நான் எதை ஆசைப்பட்டேனோ அதையே நீங்கள் கொண்டு வந்து கொடுத்துவிட்டீர்கள்.” உடனே, அவரும் அவருடைய மகள்களும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள்; பிற்பாடு அவருடைய கணவரும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்.
7 இது எதேச்சையாக நடந்ததா? இல்லவே இல்லை! ஏனென்றால், இதுபோல எத்தனையோ அனுபவங்களை உலகெங்கும் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? முதலாவதாக, தன்னைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களின் வேண்டுதல்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார். (1 ரா. 8:41-43; சங். 65:2) இரண்டாவதாக, நம் பிரசங்க வேலைக்கு தேவதூதர்கள் துணையாக இருக்கிறார்கள்.—வெளி. 14:6, 7.
‘பேதுரு . . . குழம்பிப்போயிருந்தார்’ (அப். 10:9-23அ)
8, 9. கடவுளுடைய சக்தி பேதுருவுக்கு எதைத் தெரியப்படுத்தியது, அவர் எப்படிப் பிரதிபலித்தார்?
8 பேதுரு இன்னும் மாடியில்தான் இருந்தார்; தான் கண்ட தரிசனத்தின் அர்த்தம் புரியாமல் “குழம்பி” போயிருந்தார். அப்போது, கொர்நேலியு அனுப்பிய ஆட்கள் அவர் தங்கியிருந்த வீட்டு வாசலில் வந்து நின்றார்கள். (அப். 10:17) அசுத்தமென்று திருச்சட்டம் சொன்னவற்றை சாப்பிட முடியாதென்று மூன்று முறை மறுத்த பேதுரு, இப்போது இந்த மனிதர்களோடு, மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குப் போவாரா? இந்த விஷயத்தில், யெகோவாவின் விருப்பம் என்னவென்பதை கடவுளுடைய சக்தி ஏதோவொரு விதத்தில் பேதுருவுக்குத் தெரியப்படுத்தியது. “இதோ! மூன்று பேர் உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். நீ எழுந்து கீழே போய், எதைப் பற்றியும் சந்தேகப்படாமல் அவர்களோடு புறப்பட்டுப் போ, நான்தான் அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று பேதுருவுக்குச் சொல்லப்பட்டது. (அப். 10:19, 20) பேதுரு கண்ட அந்தத் தரிசனம் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய அவர் மனதைப் பக்குவப்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை.
9 தெய்வீக கட்டளைப்படிதான் கொர்நேலியு அந்த மனிதர்களை அனுப்பியிருக்கிறார் என்பதை பேதுரு புரிந்துகொண்டு அவர்களை வீட்டுக்குள் அழைத்து “விருந்தாளிகளாகத் தங்க வைத்தார்.” (அப். 10:23அ) கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை படிப்படியாகத் தெரிந்துகொண்ட பேதுரு அதற்கேற்றபடி தன் மனதை ஏற்கெனவே மாற்றியிருந்தார்.
10. யெகோவா தன்னுடைய மக்களை எப்படி வழிநடத்துகிறார், என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
10 இன்றுவரை யெகோவா தன்னுடைய மக்களுக்கு எல்லாவற்றையும் படிப்படியாக வெளிப்படுத்தி வருகிறார். (நீதி. 4:18) ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ தன்னுடைய சக்தியின் மூலம் வழிநடத்துகிறார். (மத். 24:45) சில நேரங்களில், பைபிளிலுள்ள சில விஷயங்களைக் கடவுளுடைய அமைப்பு நமக்குத் தெளிவுபடுத்தலாம் அல்லது அமைப்பு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இப்படிப்பட்ட மாற்றங்களை நான் எப்படி எடுத்துக்கொள்கிறேன்? இந்த விஷயங்களில் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு நான் அடிபணிகிறேனா?’
பேதுரு “ஞானஸ்நானம் எடுக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்” (அப். 10:23ஆ-48)
11, 12. செசரியாவுக்குப் போனதும் பேதுரு என்ன செய்தார், அவர் என்ன கற்றுக்கொண்டார்?
11 தரிசனத்தைப் பெற்ற அடுத்த நாள், பேதுருவும் அவருடன் சேர்ந்து ஒன்பது பேரும்—கொர்நேலியு அனுப்பிய மூன்று பேரும், யோப்பாவைச் சேர்ந்த “ஆறு [யூத] சகோதரர்களும்”—செசரியாவுக்குப் போனார்கள். (அப். 11:12) பேதுருவின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த கொர்நேலியு “தன்னுடைய சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும்” வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார்; அவர்களும் யூதர் கிடையாது. (அப். 10:24) பேதுரு செசரியாவுக்கு வந்து சேர்ந்ததும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்றைச் செய்தார்; விருத்தசேதனம் செய்யப்படாத ஒருவரின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்! “ஒரு யூதன் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதோ அவரோடு பழகுவதோ யூத சட்டத்துக்கு எதிரானது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், யாரையும் தீட்டானவர் என்றும், அசுத்தமானவர் என்றும் சொல்லக் கூடாது என்பதைக் கடவுள் எனக்குக் காட்டியிருக்கிறார்” என்று சொன்னார். (அப். 10:28) தீட்டான மிருகங்களைச் சாப்பிடலாம் என்பதைச் சுட்டிக்காட்ட மட்டுமல்ல, தனக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கவே அந்தத் தரிசனம் கிடைத்தது என்பதை இப்போது பேதுரு புரிந்துகொண்டார். ‘யாரையும் [மற்ற தேசத்தை சேர்ந்த ஒருவரையும்] தீட்டானவர் என்று சொல்லக் கூடாது’ என்பதை அவர் புரிந்துகொண்டார்.
12 பேதுரு சொல்லப்போவதைக் கேட்க அவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு ஆர்வத்தோடு இருந்தார்கள். “எங்களுக்குச் சொல்லச் சொல்லி யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் கேட்பதற்கு நாங்கள் எல்லாரும் இப்போது அவர் முன்னால் கூடியிருக்கிறோம்” என்று கொர்நேலியு சொன்னார். (அப். 10:33) ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் ஒருவர் இப்படிச் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்” என்ற வலிமையான வார்த்தைகளைச் சொல்லி பேதுரு பேச ஆரம்பித்தார். (அப். 10:34, 35) இனத்தையோ தேசத்தையோ அல்லது வேறெந்த வெளிப்புற அம்சங்களையோ வைத்து மக்களைக் கடவுள் எடைபோடுவதில்லை என்பதை பேதுரு கற்றுக்கொண்டார். பிறகு, இயேசுவின் ஊழியம்... மரணம்... உயிர்த்தெழுதல்... பற்றியெல்லாம் அவர்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.
13, 14. (அ) கி.பி. 36-ல் கொர்நேலியுவும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களும் மதம் மாறியபோது எது முடிவுக்கு வந்தது? (ஆ) வெளிப்புற அம்சங்களை வைத்து மக்களை எடைபோடுவது ஏன் தவறு?
13 அப்போது, வரலாறு காணாத ஒன்று நடந்தது: “பேதுரு இந்த விஷயங்களைப் பேசப் பேசவே” யூதர்களாக இல்லாத மக்கள் மேலும் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது. (அப். 10:44, 45) ஞானஸ்நானத்துக்கு முன்பே கடவுளின் சக்தி பொழியப்பட்டதாக பைபிளில் இருக்கும் ஒரே பதிவு இதுதான். அவர்களைக் கடவுள் ஏற்றுக்கொண்டார் என்பதை பேதுரு உணர்ந்துகொண்டு, “ஞானஸ்நானம் எடுக்கும்படி அவர்களுக்குக் [கூடிவந்திருந்த மற்ற தேசத்து மக்களுக்கு] கட்டளையிட்டார்.” (அப். 10:48) கி.பி. 36-ல் மற்ற தேசத்து மக்களான இவர்கள் மதம் மாறிய சமயத்தோடு யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுக்கிரக காலம் முடிவுக்கு வந்தது. (தானி. 9:24-27) இந்தச் சந்தர்ப்பத்தில், பேதுரு கடவுளுடைய ‘அரசாங்கத்தின் சாவியை,’ அதாவது மூன்றாவது, கடைசி சாவியைப் பயன்படுத்தினார். (மத். 16:19) விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக ஆவதற்கு இந்தச் சாவி வழியைத் திறந்து வைத்தது.
14 “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்பதை இன்று கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிக்கும் நாம் புரிந்துகொள்கிறோம். (ரோ. 2:11) ‘எல்லா விதமான மக்களும் . . . மீட்புப் பெற வேண்டும்’ என்பதே அவருடைய விருப்பம். (1 தீ. 2:4) அதனால், மக்களின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை நாம் ஒருபோதும் எடைபோட்டுவிடக் கூடாது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுப்பதே நம்முடைய வேலை; அதனால் இனம், தேசம், நிறம், மதம் என்று எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எல்லா மக்களுக்கும் நாம் சாட்சி கொடுக்க வேண்டும்.
“எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு . . . கடவுளை மகிமைப்படுத்தினார்கள்” (அப். 11:1-18)
15, 16. யூதக் கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் பேதுருவைக் குறை சொன்னார்கள், நடந்ததை பேதுரு எப்படி விளக்கினார்?
15 நடந்ததையெல்லாம் சொல்ல பேதுரு ஆவலோடு எருசலேமுக்கு வேக வேகமாக வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள் “கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள்” என்ற செய்தி அவர் போய் சேருவதற்கு முன்பே எருசலேமை எட்டியதென தெரிகிறது. பேதுரு அங்கே போய் சேர்ந்தவுடனே, “விருத்தசேதனத்தை ஆதரித்தவர்கள் . . . அவரைக் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.” ‘விருத்தசேதனம் செய்யாதவர்களுடைய வீட்டுக்குப் போய், அவர்களோடு சேர்ந்து [பேதுரு] சாப்பிட்டதை’ அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. (அப். 11:1-3) யூதராக இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாக ஆக முடியுமா முடியாதா என்பது அந்த யூதர்களின் வாதம் இல்லை. ஆனால், அவர்களுடைய வழிபாட்டைக் கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் திருச்சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், விருத்தசேதனமும் செய்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய வாதம். ஏனென்றால், மோசேயின் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை ஏற்றுக்கொள்வது சில யூதர்களுக்குக் கஷ்டமாக இருந்தது.
16 தான் மற்ற தேசத்து மக்களின் வீட்டுக்குப் போனதற்கான காரணத்தை பேதுரு எப்படி விளக்கினார்? அப்போஸ்தலர் 11:4-16-ல் சொல்லியிருக்கிறபடி, தனக்குத் தெய்வீக வழிநடத்துதல் இருந்தது என்பதற்கு நான்கு ஆதாரங்களை அவர்களுக்கு முன் வைத்தார்: (1) அவருக்குக் கிடைத்த தரிசனம் (வசனம் 4-10); (2) கடவுளுடைய சக்தி கொடுத்த கட்டளை (வசனம் 11, 12); (3) கொர்நேலியுவுக்குக் கிடைத்த தரிசனம் (வசனம் 13, 14); (4) மற்ற தேசத்தார்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்ட சம்பவம். (வசனம் 15, 16) கடைசியில், சிந்திக்க வைக்கும் இந்தக் கேள்வியுடன் பேதுரு தன் பேச்சை முடித்தார்: “எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் நம்பிக்கை வைத்திருக்கிற நமக்குக் கொடுக்கப்பட்ட அதே இலவச அன்பளிப்பைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால், கடவுளைத் தடுக்க நான் யார்?”—அப். 11:17.
17, 18. (அ) பேதுரு சொன்ன ஆதாரங்களைக் கேட்ட யூதக் கிறிஸ்தவர்கள் என்ன சவாலை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) சபையில் ஒற்றுமை காப்பது ஏன் சவாலாக இருக்கலாம், நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
17 பேதுரு சொன்ன ஆதாரங்களைக் கேட்ட யூதக் கிறிஸ்தவர்கள் ஒரு சவாலை எதிர்ப்பட்டார்கள். தங்கள் இரத்தத்தில் கலந்திருந்த தப்பெண்ணத்தைக் களைந்துவிட்டு புதிதாக ஞானஸ்நானம் எடுத்த மற்ற தேசத்து மக்களை சக கிறிஸ்தவர்களாக ஏற்றுக்கொள்வார்களா? பைபிளிலேயே பார்க்கலாம்: “அவர்கள் [அதாவது, அப்போஸ்தலர்களும் மற்ற யூதக் கிறிஸ்தவர்களும்] இதையெல்லாம் கேட்டபோது எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, ‘அப்படியென்றால், மற்ற தேசத்து மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக மனம் திருந்துகிற வாய்ப்பைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.” (அப். 11:18) இவர்களுடைய மனமாற்றம் சபையின் ஒற்றுமையைக் காத்தது.
18 இன்று கிறிஸ்தவ சபையில் ஒற்றுமை காப்பது சவாலாக இருக்கலாம்; ஏனென்றால், “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்” அங்கே வருகிறார்கள். (வெளி. 7:9) அதனால்தான், பல சபைகளில் வித்தியாசப்பட்ட இனங்களை, கலாச்சாரங்களை, பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னிடம் கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிற பாரபட்சம் என்ற சுபாவத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டேனா? சக கிறிஸ்தவர்களை நடத்தும் விஷயத்தில், இந்த உலகத்தின் மனப்பான்மை எனக்குள் எட்டிப்பார்க்க விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறேனா? உதாரணத்துக்கு தேசப்பற்று, இனப்பற்று, கலாச்சார வெறி, சாதி வெறி என்னை ஆட்டிப்படைக்க அனுமதிக்காமல் இருக்கிறேனா?’ மற்ற தேசத்து மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி சில வருஷங்களுக்கு பின்பு பேதுரு (கேபா) என்ன செய்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். பாரபட்சம் காட்டிய யூதர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு மற்ற தேசத்து மக்களை “விட்டுவிலகி, ஒதுங்கியே இருந்துவிட்டார்;” இதனால், பவுல் அவரைக் கண்டிக்க வேண்டியிருந்தது. (கலா. 2:11-14) அதனால், பாரபட்சம் என்ற வலையில் மாட்டிக்கொள்ளாதபடி எப்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
“ஏராளமான மக்கள் எஜமானின் சீஷர்களானார்கள்” (அப். 11:19-26அ)
19. அந்தியோகியாவிலிருந்த யூதக் கிறிஸ்தவர்கள் யாருக்கு பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், அதனால் என்ன பலன் கிடைத்தது?
19 விருத்தசேதனம் செய்யப்படாத மக்களுக்கு இயேசுவின் சீஷர்கள் நல்ல செய்தியை அறிவித்தார்களா? கொஞ்ச காலத்தில், சீரியாவிலிருந்த அந்தியோகியாவில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்.d அந்த நகரத்தில் யூதர்கள் நிறைய பேர் இருந்தார்கள். என்றாலும், யூதருக்கும் யூதர்களாக இல்லாதவர்களுக்கும் அந்த ஊரில் பகைமை இல்லை. அதனால், யூதராக இல்லாதவர்களிடம் நல்ல செய்தியை சொல்வதற்கு அங்கே சாதகமான சூழல் இருந்தது. இங்கேதான் யூதக் கிறிஸ்தவர்கள் சிலர் “கிரேக்க மொழி பேசிய மக்களுக்கு” நல்ல செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள். (அப். 11:20) அந்த ஊரில், கிரேக்கு மொழி பேசிய யூதர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தி சொல்லப்பட்டது. யெகோவா இந்த வேலையை ஆசீர்வதித்தார், அதனால் “ஏராளமான மக்கள் எஜமானின் சீஷர்களானார்கள்.”—அப். 11:21.
20, 21. பர்னபா எப்படி மனத்தாழ்மை காட்டினார், அவரைப் போலவே நாமும் எவ்வாறு மனத்தாழ்மையைக் காட்டலாம்?
20 அந்தியோகியாவில் வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருந்ததால் எருசலேமிலிருந்த சபை பர்னபாவை அங்கே அனுப்பி வைத்தது. விளைச்சல் அமோகமாக இருந்ததால் பர்னபாவுக்குத் தனியாகச் சமாளிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாக நியமிக்கப்படவிருந்த சவுலைத் தவிர வேறு யார் பர்னபாவுக்குக் கைகொடுக்க முடியும்? (அப். 9:15; ரோ. 1:5) இப்போது சவுலை தனக்குப் போட்டியாக பர்னபா நினைப்பாரா? இல்லை, அப்படியெல்லாம் நினைக்க மாட்டார். அவர் தாழ்மையுடன் நடந்துகொண்டார். சவுலைத் தேடி அவரே தர்சுவுக்குப் போய் தனக்கு உதவி செய்ய அவரை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தார். பிறகு, அவர்கள் இருவரும் ஒரு வருஷம் அங்கேயே தங்கியிருந்து சபையாரைப் பலப்படுத்தினார்கள்.—அப். 11:22-26அ.
21 இன்று ஊழியத்தில் நாம் எப்படி மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளலாம்? மனத்தாழ்மையோடு நடந்துகொள்வது என்பது நம் வரம்புகளை புரிந்து நடந்துகொள்வதைக் குறிக்கிறது. நம் எல்லாருக்குமே ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவருக்கு வீட்டுக்காரரிடம் பக்குவமாகப் பேசி பத்திரிகையைக் கொடுப்பது கைவந்த கலையாக இருக்கலாம், ஆனால் மறுசந்திப்பு செய்வது... பைபிள் படிப்பு ஆரம்பிப்பது... என்றால் கஷ்டமாக இருக்கலாம். ஊழியத்தின் சில அம்சங்களில் நீங்கள் முன்னேற விரும்பினால் மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். அப்படிச் செய்தால், ஊழியத்தில் அமோக அறுவடை செய்வீர்கள், அளவில்லா ஆனந்தத்தையும் பெறுவீர்கள்.—1 கொ. 9:26.
“நிவாரண உதவிகளை” அனுப்புவது (அப். 11:26ஆ-30)
22, 23. அந்தியோகியா சகோதரர்கள் தங்கள் சகோதர அன்பை எப்படிக் காட்டினார்கள், இன்றும் கடவுளுடைய மக்கள் எப்படி அவர்களைப் பின்பற்றுகிறார்கள்?
22 “தெய்வீக வழிநடத்துதலால், சீஷர்கள் முதன்முதலாக அந்தியோகியாவில்தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.” (அப். 11:26ஆ) கடவுள் கொடுத்த இந்தப் பெயர் இயேசுவின் வழி நடப்போருக்கு பொருத்தமாக இருக்கிறது. சரி, மற்ற தேசத்து மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியபோது அவர்களுக்கும் யூத விசுவாசிகளுக்கும் இடையே சகோதர பந்தம் உருவானதா? சுமார் கி.பி. 46-ல் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்.e பூர்வ காலங்களில் ஏழைகளைப் பஞ்சங்கள் பயங்கரமாகத் தாக்கின. ஏனென்றால், அவர்களிடம் அதிகமாக காசோ உணவுப் பொருளோ இருக்காது. அதேபோல், இந்தப் பஞ்சத்திலும் யூதேயாவில் வாழ்ந்துவந்த யூதக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தெரிந்துகொண்ட அந்தியோகியாவில் இருந்த சகோதரர்கள் (கிறிஸ்தவர்களாக மாறிய மற்ற தேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட) யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு “நிவாரண உதவிகளை” செய்தார்கள். (அப். 11:29) இதுதானே சகோதர பாசம்!
23 இன்றும் கடவுளுடைய மக்கள் மத்தியில் சகோதர பாசத்துக்குப் பஞ்சமில்லை. வெளியூரில் அல்லது உள்ளூரில் இருக்கிற சகோதரர்களுக்கு உதவி தேவை என்பதை நாம் கேள்விப்படும்போது அன்புடன் உதவிக்கரம் நீட்டுகிறோம். சூறாவளி, பூமியதிர்ச்சி, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நம் சகோதரர்களைத் தாக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிளை அலுவலகங்கள் உடனடியாக பேரழிவு நிவாரண குழுக்களை அமைக்கின்றன. இத்தகைய உதவிகள் அனைத்தும் நம் சகோதர அன்புக்கு அத்தாட்சி.—யோவா. 13:34, 35; 1 யோ. 3:17.
24. பேதுரு கண்ட தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து நடக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
24 முதல் நூற்றாண்டில்... யோப்பா நகரத்தில்... ஒரு வீட்டின் மாடியில்... பேதுரு பார்த்த தரிசனத்தின் அர்த்தத்தை உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம் புரிந்து நடக்கிறோம். பாரபட்சம் பார்க்காத கடவுளை நாம் வணங்குகிறோம். அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை நாம் முழுமையாக அறிவிக்க வேண்டும், அதாவது இனம், தேசம், அந்தஸ்து என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் அறிவிக்க வேண்டும், என்பதே கடவுளுடைய விருப்பம். அதனால், நல்ல செய்திக்கு காது கொடுக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பை கொடுக்க உறுதியாக இருக்கிறோம்!—ரோ. 10:11-13.
a தோல் பதனிடுகிறவர்களை யூதர்கள் சிலர் தரக்குறைவாக நினைத்தார்கள்; ஏனென்றால், செத்துப்போன விலங்குகளையும் அவற்றின் தோல்களையும் அருவருப்பான மற்ற பொருள்களையும் தொட்டு அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதனால், ஆலயத்துக்குள் வர அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டார்கள்; இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வேலை செய்யும் இடமும்கூட நகரத்தைவிட்டு 70 அடி தூரத்துக்கும் மேல் தள்ளியிருக்க வேண்டும். சீமோனின் வீடு ‘கடலோரத்தில் இருந்ததற்கு’ இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.—அப். 10:6.
b “கொர்நேலியுவும் ரோம படையும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
c “பிள்ளை வளர்ப்புக்கு நம்பகமான ஆலோசனை” என்ற கட்டுரையை நவம்பர் 1, 2006 இதழில், பக்கங்கள் 4-7-ல் பார்க்கலாம்.
d பக்கம் 73-ல், “சீரியாவிலிருந்த அந்தியோகியா” என்ற பெட்டியைப் பாருங்கள்.
e பேரரசர் கிலவுதியுவின் ஆட்சி காலத்தில் (கி.பி. 41-54) இந்த “கொடிய பஞ்சம்” வந்ததாக யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் சொல்கிறார்.