யெகோவாவுடைய வசனம் மேற்கொள்கிறது!
“பலமாய்க் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.”—அப்போஸ்தலர் 19:20.
1. பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் நடபடிகளின் இந்தப் படிப்பில் எது சிந்திக்கப்படும்?
யெகோவா செயல்நடவடிக்கையின் கதவைத் திறந்துகொண்டிருந்தார். விசேஷமாக “புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய” பவுல் அந்த வேலையை முன்நின்று வழிநடத்துவான். (ரோமர் 11:13) ஆம், அப்போஸ்தலர் நடபடிகளை நாம் தொடர்ந்து படிக்கையில், அவன் கிளர்ச்சியூட்டும் மிஷனரிப் பிரயாணங்களில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்.—அப்போஸ்தலர் 16:6–19:41.
2. (எ) அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதமாக பொ.ச. 50-லிருந்து பொ.ச. 56 வரையாக ஆவியால் ஏவப்பட்ட எழுத்தாளனாக சேவித்தான்? (பி) பவுலினுடைய ஊழியத்தையும் மற்றவர்களுடையதையும் கடவுள் ஆசீர்வதிக்கையில் என்ன சம்பவித்தது?
2 பவுல் ஆவியால் ஏவப்பட்ட எழுத்தாளனாகவும்கூட இருந்தான். பொ.ச. 50-லிருந்து பொ.ச. 56 வரையிலாக, கொரிந்துவிலிருந்து 1 மற்றும் 2 தெசலோனிக்கேயரையும், அந்த நகரத்திலிருந்து அல்லது சீரிய அந்தியோகியாவிலிருந்து கலாத்தியரையும், எபேசுவிலிருந்து 1 கொரிந்தியரையும் மக்கெதோனியாவிலிருந்து 2 கொரிந்தியரையும், கொரிந்துவிலிருந்து ரோமர் புத்தகத்தையும் எழுதினான். மேலும் கடவுள் பவுலுடைய ஊழியத்தையும் மற்றவர்களுடையதையும் ஆசீர்வதிக்கையில் “பலமாய்க் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.”—அப்போஸ்தலர் 19:20.
ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு
3. பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்தலின் சம்பந்தமாக எவ்விதமாக பவுலும் அவனுடைய தோழர்களும் சிறந்த ஒரு முன்மாதிரியை வைத்தார்கள்?
3 பரிசுத்த ஆவியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்வதில் பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் நல்ல ஒரு முன்மாதிரியை வைத்தனர். (16:6–10) ஒருவேளை கேட்கப்படத்தக்க வகையில் வெளிப்படுத்தப்பட்ட செய்திகள், சொப்பனங்கள் அல்லது தரிசனங்களின் மூலமாக, ஆசியாவிலும் பித்தினியா நாட்டிலும் பிரசங்கிக்காதபடி ஆவி அவர்களைத் தடைசெய்தது. பின்னால் நற்செய்தி இவ்விடங்களை சென்றெட்டின. (அப்போஸ்தலர் 18:18–21; 1 பேதுரு 1:1, 2) முன்னதாக அதில் பிரவேசிப்பதை ஆவி ஏன் தடை செய்தது? வேலையாட்கள் குறைவாக இருக்க, ஆவி அவர்களை ஐரோப்பாவில் அதிக பலன்தரும் இடங்களுக்கு வழிநடத்திக்கொண்டிருந்தது. ஆகவே இன்று ஒரு பிராந்தியத்திற்குள் போகும் வழி தடைசெய்யப்பட்டிருக்குமேயானால், கடவுளுடைய ஆவி செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களிடமாகத் தங்களை வழிநடத்திச் செல்லும் என்ற நம்பிக்கையில் யெகோவாவின் சாட்சிகள் வேறு இடங்களில் பிரசங்கிக்கிறார்கள்.
4. தரிசனத்தில் உதவிக்காக மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் பவுலிடமாக வேண்டிக்கொண்டதற்குப் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது?
4 பிற்பாடு பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் மிஷனரி நிலமாக சிறிய ஆசியாவிலுள்ள ஒரு தேசமாகிய மீசியா ‘பக்கமாய்ப் போனார்கள்.’ என்றபோதிலும் ஒரு தரிசனத்தில் பவுல் மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்து உதவிக் கேட்பதைப் பார்த்தான். ஆகவே மிஷனரிமார்கள் பால்க்கன் தீபகற்பத்திலுள்ள ஒரு தேசமாகிய மக்கெதோனியாவுக்கு உடனடியாகப் புறப்பட்டுப்போனார்கள். அதேவிதமாக, இப்பொழுது ராஜ்ய அறிவிப்பாளர்களுக்கான தேவை அதிகமாயிருக்கும் இடங்களில் சேவை செய்வதற்காக அநேக சாட்சிகள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்கள்.
5. (எ) யெகோவாவின் வசனம் பிலிப்பியில் மேற்கொண்டது என்று ஏன் சொல்லப்படலாம்? (பி) இன்றைய நாளைய சாட்சிகள் அநேகர் எவ்வகையில் லீதியாளைப் போல இருக்கிறார்கள்?
5 மக்கெதோனியாவில் யெகோவாவின் வார்த்தை மேற்கொண்டது. (16:11–15) பெரும்பாலும் ரோம குடிமக்கள் குடியிருந்த பிலிப்பி பட்டணத்தில் வெகுசில யூதர்களே இருந்தார்கள். அங்கு ஜெப ஆலயம் இருக்கவில்லை. ஆகவே சகோதரர்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றினருகே “ஜெபம் பண்ணுகிற இடத்துக்குப்” போனார்கள். அங்கே காணப்பட்டவர்களில் லீதியாள் இருந்தாள். இவள் சிறிய ஆசியாவில் சாயத்தொழிலுக்குப் பேர்போன ஓர் ஊராகிய தியத்தீராவிலிருந்து வந்த யூத மதத்துக்கு மதம் மாறியவளாக இருக்க வேண்டும். அவள் இரத்தாம்பரம் விற்கிறவளாக அல்லது அதில் தோய்த்த துணிமணிகளையும் ஆடைகளையும் விற்கிறவளாக இருந்தாள். லீதியாளும் அவளுடைய வீட்டாரும் முழுக்காட்டப்பட்ட பிறகு அவள் அத்தனை மனமார உபசரித்ததன் காரணமாக லூக்கா இவ்விதமாக எழுதினான்: “என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” இன்று அது போன்ற சகோதரிகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
சிறைச்சாலைக்காரன் விசுவாசியாகிறான்
6. பிசாசுகளின் கிரியைகள் எவ்விதம் பிலிப்பியில் பவுலும் சீலாவும் சிறையிலடைக்கப்படுவதற்கு வழிநடத்தியது?
6 பிலிப்பியில் ஏற்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி குறித்து சாத்தான் எரிச்சலடைந்திருக்க வேண்டும், ஏனென்றால் அங்கேயிருந்த பிசாசின் கிரியைகள் பவுலும் சீலாவும் சிறையிலடைக்கப்படுவதற்கு வழிநடத்தியது. (16:16–24) பலநாட்களாக “குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்த” (சொல்லர்த்தமாகவே “ஒரு பேய் ஆவி”) ஒரு பெண் அவர்களை பின்தொடர்ந்து வந்தாள். இந்தப் பிசாசு, பைத்தன் (python) என்ற பெயருள்ள ஒரு சர்ப்பத்தைக் கொன்றதாகச் சொல்லப்படும் ஒரு கடவுளாகிய பைத்தியன் அப்பலோவின் உருவை ஏற்று வந்திருக்கக்கூடும். குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு அந்தப் பெண் மிகுந்த ஆதாயத்தைக் கொண்டுவந்தாள். ஏன், அவள் விவசாயிகளுக்கு எப்போது நடவு செய்ய வேண்டும் என்றும் கன்னிப்பெண்களுக்கு எப்போது விவாகம் செய்ய வேண்டும் என்றும் சுரங்கத் தொழிலாளிகளுக்கு எங்கே தங்கத்திற்காகத் தேடவேண்டும் என்றும் முன்னறிவித்திருக்கக்கூடும்! அவள் சகோதரர்களைப் பின்தொடர்ந்து வந்து பின்வருமாறு சத்தமிட்டாள்: “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்.” தான் குறிசொல்வது தேவ ஆவியால் ஏவப்பட்டதாக தோன்றும்படிச் செய்வதற்காக பிசாசு அவளை இவ்விதமாக சொல்ல வைத்திருக்கலாம். ஆனால் பிசாசுகளுக்கு யெகோவாவைப் பற்றியும் இரட்சிப்புக்கான அவருடைய ஏற்பாட்டைப் பற்றியும் அறிவிப்புகளைச் செய்ய எந்த உரிமையும் இல்லை. பவுல் இவளுடைய நச்சரிப்பினால் சலிப்படைந்த போது, அவன் இயேசுவின் நாமத்தில் பிசாசைத் துரத்தினான். அவர்களுடைய வியாபாரம் பாழாகிவிட, அந்தப் பெண்ணின் எஜமானர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து சந்தைவெளிக்கு இழுத்துக்கொண்டுப் போனார்கள். அங்கே இவர்கள் மிலாறுவினால் அடிக்கப்பட்டார்கள். (2 கொரிந்தியர் 11:25) பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு அவர்களுடைய கால்கள் தொழுமரத்தில் மாட்டி வைக்கப்பட்டன. அதிகமான வேதனையை உண்டுபண்ணும் வகையில் கால்களை விரித்துவைக்க கட்டாயப்படுத்துவதற்கு இப்படிப்பட்டக் கருவிகள் தக்கவாறு அமைக்கப்பட முடியும்.
7. பிலிப்பியில் பவுலும் சீலாவும் சிறையிலடைக்கப்பட்டது யாருக்கு மற்றும் எவ்விதமாக ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தியது?
7 இந்தச் சிறையிருப்பு சிறைச்சாலைக்காரனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தியது. (16:25–40) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் கடவுள் தங்களோடிருப்பதைக் குறித்து நிச்சயமுள்ளவர்களாய் ஜெபம் பண்ணிக்கொண்டும், தேவனைத் துதித்துப் பாடிக்கொண்டுமிருந்தார்கள். (சங்கீதம் 42:8) திடீரென்று ஒரு பூமியதிர்ச்சி கதவுகளை திறக்கும்படிச் செய்து, கால் விலங்குகள் உத்தரம் அல்லது சுவர்களிலிருந்து அறுபட எல்லாக் கட்டுகளும் கழன்றுபோயின. சிறைச்சாலைக்காரன் தன் கைதிகள் தப்பித்துவிட்டபடியால், மரணதண்டனை அனுபவிப்பதைக் குறித்து மிகவும் பயந்துபோனான். அவன் தற்கொலைசெய்துகொள்ள இருந்தபோது பவுல் மிகுந்த சத்தமிட்டு: “நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்து கொள்ளதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்.” பவுலையும் சீலாவையும் அவன் வெளியே அழைத்துவந்து, தான் எவ்விதமாக இரட்சிக்கப்படக்கூடும் என்பதாகக் கேட்டான். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி” என்பதே பதிலாக இருந்தது. யெகோவாவுடைய வசனத்தைக் கேட்டபோது “அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல், NW) பெற்றார்கள்.” அது என்னே சந்தோஷத்தைக் கொண்டுவந்தது!
8. பிலிப்பியின் குற்றவியல் நடுவர்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்கள் தங்கள் தவறை யாவரறிய ஒப்புக்கொண்டார்களேயானால் என்ன சாதிக்கப்படலாம்?
8 மறுநாள் பொதுத்துறை குற்றவியல் நடுவர்கள் பவுலையும் சீலாவையும் விடுதலையாக்கும்படி சொல்லியனுப்பினார்கள். ஆனால் பவுல் சொன்னான்: ‘ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து சிறைச்சாலையிலே போட்டார்கள். இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும்.’ குற்றவியல் நடுவர்கள் தங்கள் தவறை யாவரறிய ஒப்புக்கொண்டார்களேயானால், மற்ற கிறிஸ்தவர்களை அடிக்கவும் சிறையிலடைக்கவும் தயங்கக்கூடும். ரோம குடிமக்களை வெளியேற்ற முடியாதவர்களாய், குற்றவியல் நடுவர்கள் வந்து சகோதரர்களை புறப்பட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இவர்கள் உடன்விசுவாசிகளைக் கண்டு உற்சாகப்படுத்திய பின்னரே அவ்விதமாகச் செய்தார்கள். இப்படிப்பட்ட அக்கறையே இப்பொழுது ஆளும் குழுவின் அங்கத்தினர்களையும் மற்றப் பிரயாணப் பிரதிநிதிகளையும் பூமி முழுவதிலுமுள்ள கடவுளுடைய மக்களைச் சந்திக்கவும் உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.
தெசலோனிக்கேயாவிலும் பெரோயாவிலும் யெகோவாவுடைய வசனம் மேற்கொள்கிறது
9. யெகோவாவின் சாட்சிகளால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் எந்த முறையின் மூலமாக, மேசியா பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டும் என்பதைப் பவுல் ‘விவரிக்கவும் நிரூபிக்கவும்’ செய்தான்?
9 கடவுளுடைய வார்த்தை அடுத்து, மக்கெதோனியாவின் தலைநகரமும் முக்கிய துறைமுகமுமான தெசலோனிக்கேயாவில் மேற்கொண்டது. (17:1–9) அங்கே பவுல், மேசியா பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டும் என்பதை “விவரித்தும் நிரூபித்தும்” யூதர்களிடம் நியாயங்களை எடுத்துக் காண்பித்தான். (யெகோவாவின் சாட்சிகள் செய்வது போல தீர்க்கதரிசனங்களை, நிறைவேறிக்கொண்டிருந்த சம்பவங்களோடு ஒப்பிடுவதன் மூலம் அதை செய்தான்.) இதன் காரணமாக சில யூதர்களும் மதம் மாறிய அநேகரும் இன்னும் மற்றவர்களும் விசுவாசிகளானார்கள். பொறாமைக் கொண்ட ஒருசில யூதர்கள் கூட்டங்கூடி, ஆனால் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அவர்கள் யாசோனையும் மற்ற சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து அவர்கள் மீது இராஜ துரோகக் குற்றத்தைச் சுமத்தினார்கள். யெகோவாவின் மக்களுக்கு எதிராக இன்னும் சுமத்தப்படும் ஒரு பொய் குற்றச்சாட்டு. என்றபோதிலும் சகோதரர்களிடத்தில் “ஜாமீன் வாங்கிக்கொண்டு” அவர்களைவிட்டுவிட்டார்கள்.
10. என்ன அர்த்தத்தில் பெரோயாவிலிருந்து யூதர்கள், ‘வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்து’ பார்த்தார்கள்?
10 அடுத்து பவுலும் சீலாவும் பெரோயா பட்டணத்துக்குச் சென்றார்கள். (17:10–15) யெகோவாவின் சாட்சிகள் இன்று மக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே, அங்கே யூதர்கள் வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள். அந்தப் பெரோயாப் பட்டணத்தார் பவுலை சந்தேகிக்கவில்லை, ஆனால் இயேசுவே மேசியா என்பதை நிரூபிக்க ஆராய்ச்சி செய்தார்கள். விளைவு? அநேக யூதர்களும் சில கிரேக்கர்களும் (ஒருவேளை மதம் மாறியவர்கள்) விசுவாசிகளானார்கள். தெசலோனிக்கேயாவிலிருந்து வந்த யூதர்கள் ஜனங்களை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்ட போது, சகோதரர்கள் பவுலை கரை வரையிலும் பாதுகாப்புடன் கூட்டிவந்து சமுத்திர வழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். அங்கிருந்து அவனுடைய குழுவிலுள்ள சிலர் அத்தேனே பட்டணத்தின் துறைமுகப்பட்டணமாகிய பிரியஸுக்கு (நவீன நாளைய ப்ரேவ்ஸ்) கப்பலேறிச் சென்றிருக்கக்கூடும்.
அத்தேனேவில் யெகோவாவுடைய வசனம் மேற்கொள்கிறது
11. (எ) அத்தேனே பட்டணத்தில் பவுல் எவ்விதமாக தைரியமாகச் சாட்சி கொடுத்தான்? யார் அவனோடு வாக்குவாதம் பண்ணினார்கள்? (பி) பவுலைப் பற்றி “வாயாடி” என்று சொன்னபோது சிலர் எதை அர்த்தப்படுத்தினார்கள்?
11 அத்தேனே பட்டணத்தில் தைரியமான சாட்சி ஒன்று கொடுக்கப்பட்டது. (17:16–21) இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய பவுலின் வார்த்தைகளின் காரணமாக தத்துவஞானிகள் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர் சிற்றின்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த எப்பிக்கூரராக இருந்தனர். மற்றவர்கள், சுய-கட்டுப்பாட்டை வலியுறுத்திய ஸ்தோயிக்கராக இருந்தனர். ‘இந்த வாயாடி என்ன பேசப் போகிறான்?’ என்று சிலர் கேட்டனர். “வாயாடி” (சொல்லர்த்தமாக “விதை கொத்தியெடுப்பவன்”) என்பதால் பவுல் விதைகளை கொத்தியெடுக்கும் ஒரு பறவை போல அறிவு துணுக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பங்கிட்டுக் கொடுத்தான், ஆனால் ஞானத்தில் குறைவுபட்டவனாக இருந்தான் என்பதாக குறிப்பிடப்படுகிறது. மற்றவர்கள், “இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது” என்று சொன்னார்கள். இது வினைமையானதாக இருந்தது, ஏனென்றால் சாக்ரட்டீஸ் இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டில்தான் தன் உயிரை இழந்தான். விரைவில் பவுல் மார்ஸ் மேடைக்கு (ஏரியோபாகஸ்) அழைத்துச் செல்லப்பட்டான். இதுதானே அக்ரோப்போலீஸ் அருகில் திறந்தவெளி உச்சநீதிமன்றம் கூடிய இடமாக இருந்திருக்க வேண்டும்.
12. (எ) மார்ஸ் மேடையில் பவுலினுடைய சொற்பொழிவில் ஒரு நல்ல பொதுப் பேச்சின் என்ன அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன? (பி) கடவுளைப் பற்றி பவுல் என்ன குறிப்புகளைச் சொன்னான்? என்ன விளைவோடு?
12 மார்ஸ் மேடையில் பவுல் கொடுத்த பேச்சு, திறம்பட்ட அறிமுகத்தையும், தகவலைத் தர்க்கரீதியாக முன்னேற்றுவித்தலையும், நம்பவைக்கும் விவாதத்தையும் கொண்ட ஒரு பேச்சுக்கு மிகச் சிறந்த மாதிரியாக—இது யெகோவாவின் சாட்சிகளுடைய தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் கற்பிக்கப்படுகிறதைப் போன்று இருந்தது. (17:22–34) அத்தேனே பட்டணத்தார் மற்றவர்களைக் காட்டிலும் அதிக தேவபக்தியுள்ளவர்கள் என்பதாக அவன் சொன்னான். எந்த ஒரு கடவுளையும் புறக்கணிப்பதைத் தவிர்ப்பதற்காக “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதப்பட்ட ஒரு பலிபீடத்தையும்கூட அவர்கள் கொண்டிருந்தார்கள்! “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி”னவரும், கானானியரை வேறோடு அழிப்பதற்கான சமயம் போன்று, “முன்தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும்” குறித்திருப்பவருமான சிருஷ்டிகரைக் குறித்து பவுல் பேசினான். (ஆதியாகமம் 15:13–21; தானியேல் 2:21; 7:12) இந்தக் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும், ஏனென்றால் “நாம் தேவனுடைய சந்ததியாரா”யிருக்கிறோம்; யெகோவா மனிதனை சிருஷ்டித்திருப்பதை குறிப்பிட்டு அவர்களுடைய புலவர்களாகிய அராட்டஸ் மற்றும் க்ளீன்தஸ்-ஐ மேற்கோள் காண்பிக்கிறான். கடவுளுடைய சந்ததியாராக இருப்பதால், பரிபூரணமான சிருஷ்டிகர் அபூரணமான மனிதனால் செய்யப்பட்ட விக்கிரகத்துக்கு ஒப்பாக இருப்பார் என்று நாம் நினைக்கக்கூடாது. ஒருசமயம் கடவுள் இப்படிப்பட்ட அறியாமையைக் காணாதவர் போலிருந்தார், ஆனால் இப்போதோ மனிதவர்க்கத்தை மனந்திரும்ப வேண்டுமென்று சொல்லுகிறார். ஏனென்றால் தம்மால் நியமிக்கப்பட்ட ஒருவரால் மக்களை நியாயந்தீர்க்க ஒரு நாளைக் குறித்திருக்கிறார். பவுல் ‘இயேசுவின் சுவிசேஷத்தைப் பிரசங்கி’த்தபடியால், அவையோர் கிறிஸ்துவே அந்த நியாயாதிபதியாக இருப்பார் என்பதை அவர் அர்த்தப்படுத்தியதை அறிந்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 17:18; யோவான் 5:22, 30) மனந்திரும்புதலைப் பற்றிய பேச்சு எப்பிக்கூரருக்கு வெறுப்பாயிருந்தது. கிரேக்க தத்துவஞானிகள் அழியாமையைப் பற்றிய குறிப்புகளை ஏற்றுக்கொள்வர், ஆனால் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றியதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது நற்செய்தியை அசட்டை செய்யும் அநேகரைப் போலவே சிலர் ‘நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம்’ என்றார்கள். ஆனால் நியாயாதிபதியான தியொனீசியுவும் மற்றவர்களும் விசுவாசிகளானார்கள்.
கடவுளுடைய வசனம் கொரிந்துவில் மேற்கொள்கிறது
13. பவுல் தன்னை ஊழியத்தில் எவ்விதமாக ஆதரித்துக்கொண்டான்? நாம் என்ன நவீன–நாளைய இணைப்பொருத்தத்தைக் காண்கிறோம்?
13 பவுல் அகாயா நாட்டின் தலைநகரமாகிய கொரிந்துவுக்குப் போனான். (18:1–11) கிலவுதியுராயன், ரோம குடிமக்களாக இல்லாத யூதரெல்லாரையும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கட்டளையிட்டபோது அங்கு வந்திருந்த ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் கண்டான். ஊழியத்தில் தொடர்ந்திருக்க தன் பிழைப்புக்காக, பவுல் இந்தக் கிறிஸ்தவ தம்பதியோடு கூடாரத் தொழிலைச் செய்தான். (1 கொரிந்தியர் 16:19; 2 கொரிந்தியர் 11:9) விறைப்பான வெள்ளாட்டு மயிர் ஆடையை கத்தரிப்பதும் தைப்பதும் கடினமான வேலையாக இருந்தது. அதேவிதமாக யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக உலகப்பிரகாரமான ஒரு வேலையின் மூலமாகத் தங்களை ஆதரித்துக் கொள்கிறார்கள், ஆனால் ஊழியமே அவர்களுடைய வாழ்க்கைப் பணியாகும்.
14. (எ) கொரிந்துவிலிருந்த யூதர்களின் பிடிவாதமான எதிர்ப்பைச் சந்திக்கையில் பவுல் என்ன செய்தான்? (பி) அவன் கொரிந்துவில் தங்கியிருக்க வேண்டும் என்பதாக பவுல் எவ்விதமாக நம்பிக்கையளிக்கப்பட்டான்? ஆனால் யெகோவாவின் மக்கள் இன்று எவ்விதமாக வழிநடத்தப்படுகிறார்கள்?
14 பவுல் இயேசுவின் மேசியானிய வேலையைக் குறித்து அறிவித்து வருகையில் கொரிந்துவிலிருந்த யூதர்கள் எதிர்த்து நின்று தூஷித்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே அவன் அவர்களிடமாக உத்தரவாதத்தை துறந்துவிடும் வகையில் தன் வஸ்திரங்களை உதறி, அநேகமாக ஒரு ரோமனாக இருந்த யுஸ்துவின் வீட்டில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தான். அநேகர் (முன்னாள் ஜெபஆலயத் தலைவனாகிய கிறிஸ்புவும் அவன் வீட்டார் அனைவரும் உட்பட) முழுக்காட்டப்பட்ட விசுவாசிகளானார்கள். யூதர்களுடைய எதிர்ப்பு, கொரிந்துவில் அவன் தங்கியிருப்பதைக் குறித்து யோசிக்கும்படி செய்திருக்குமானால், தரிசனத்தில் கர்த்தர், அவனிடமாக பின்வருமாறு சொன்னபோது சந்தேகம் மறைந்தது: ‘பயப்படாதே, நீ பேசிக்கொண்டேயிரு, நான் உன்னுடனேகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்கு செய்யமாட்டான். இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு.’ ஆகவே பவுல் அங்கே மொத்தமாக ஒரு வருஷமும் ஆறு மாதமும் தங்கி தேவவசனத்தை உபதேசம் பண்ணிக்கொண்டே இருந்தான். யெகோவாவின் மக்கள் இன்று தரிசனங்களைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், ஜெபமும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலும் இதுபோன்ற ராஜ்ய அக்கறைகளைப் பாதிக்கும் ஞானமானத் தீர்மானங்களைச் செய்ய அவர்களுக்கு உதவிசெய்கிறது.
15. பவுல் அதிபதியான கல்லியோனுக்கு முன்பாகக் கொண்டுபோகப்பட்டபோது என்ன சம்பவித்தது?
15 யூதர்கள் பவுலை அதிபதியான யூனியா கல்லியோனிடம் கொண்டு போனார்கள். (18:12–17) பவுல் சட்டவிரோதமாக மதம் மாற்றிக்கொண்டிருந்தான் என்பதாகக் குறிப்பிட்டார்கள்—யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கிரேக்க குருமார் இப்பொழுது சொல்லும் பொய்க் குற்றச்சாட்டு. பவுல் சட்டவிரோதமான குற்றவாளியாக இல்லை என்பதையும் யூதர்கள் ரோமாபுரியின் நலனிலும் அதன் சட்டங்களிலும் அக்கறையற்றவர்களாக இருந்ததையும், கல்லியோன் அறிந்திருந்தபடியால், அவன் அவர்களைத் துரத்திவிட்டான். அப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஜெபஆலயத்தின் புதிய தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து அடித்தபோது, கல்லியோன் குறுக்கிடவில்லை. ஒருவேளை பவுலுக்கு எதிராகச் செயல்பட்ட கும்பலின் தலைவன் அதற்கு தகுதியுடையவனே என்று நினைத்திருக்க வேண்டும்.
16. ஒரு பிரார்த்தனையின் சம்பந்தமாக பவுல் தலைச்சவரம் பண்ணிக்கொள்வது ஏன் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இருந்தது?
16 பவுல் ஏகியனின் கெங்கிரேயா துறைமுகத்திலிருந்து சிறிய ஆசியாவிலுள்ள எபேசு பட்டணத்துக்குக் கப்பலேறிச் சென்றான். (18:18–22) அந்தப் பயணத்துக்கு முன்பாக அவன் ‘தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் தலைச்சவரம் பண்ணிக்கொண்டான்.’ பவுல் இயேசுவை பின்பற்றுகிறவனாக மாறியதற்கு முன்பாக, இந்தப் பிரார்த்தனையைச் செய்து கொண்டானா என்பதோ அல்லது இது பிரார்த்தனைக் காலத்தின் ஆரம்பமாக அல்லது முடிவாக இருந்தது என்பதோ சொல்லப்பட்டில்லை. கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, ஆனால் அது கடவுளால் கொடுக்கப்பட்டதும் பரிசுத்தமானதுமாக இருந்தது, இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனையைக் குறித்ததில் எந்தப் பாவமுமிருக்கவில்லை. (ரோமர் 6:14; 7:6, 12; கலாத்தியர் 5:18) எபேசுவில் பவுல் யூதர்களோடு சம்பாஷித்து, தேவனுக்குச் சித்தமானால், திரும்பி அவர்களிடத்தில் வருவதாக அவர்களுக்கு வாக்களித்தான். (அந்த வாக்கு பின்னால் நிறைவேறியது.) அவன் சீரிய அந்தியோகியாவுக்குத் திரும்பிப் போனதுடன், அவனுடைய இரண்டாவது மிஷனரிப் பிரயாணம் முடிவுக்கு வந்தது.
யெகோவாவின் வசனம் எபேசுவில் மேற்கொள்கிறது
17. முழுக்காட்டுதலைப் பற்றி அப்பொல்லோவுக்கும் மற்ற சிலருக்கும் என்ன அறிவுரை தேவைப்பட்டது?
17 பவுல், விரைவில் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பிரயாணத்தை துவங்கினான். (ஏறத்தாழ பொ.ச. 52–56) (18:23–19:7) இதற்கிடையில் எபேசுவில், அப்பொல்லோ இயேசுவைப் பற்றி உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தான், ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு எதிரான பாவங்களுக்கு யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாக இருந்தான். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.” இயேசுவைப் போல முழுக்காட்டப்பட்டிருத்தல், தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு உட்பட்டு, ஊற்றப்படும் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதை உட்படுத்தியதை அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்பட்டதற்குப் பின்பு, யோவானின் ஸ்நானத்தினால் முழுக்காட்டப்பட்ட எவரும் இயேசுவின் நாமத்தில் மீண்டும் முழுக்காட்டப்படுவது அவசியமாக இருந்தது. (மத்தேயு 3:11, 16; அப்போஸ்தலர் 2:38) பின்னால் எபேசுவில், யோவானின் ஸ்நானத்துக்கு உட்பட்டிருந்த சுமார் 12 யூதர்கள் “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல்) பெற்றார்கள்.” இதுவே வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே மறுஞானஸ்நானமாகும். பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியையும் பரலோக அங்கீகாரத்துக்கு இரண்டு அற்புதமான அடையாளங்களையும்—அந்நிய பாஷைகளைப் பேசுவதும் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும்—பெற்றுக்கொண்டார்கள்.
18 பவுல் நிச்சயமாகவே சுமார் 3,00,000 மக்களைக் கொண்ட நகரமாகிய எபேசுவில் சுறுசுறுப்பாக வைக்கப்பட்டிருந்தான். (19:8–10) அதனுடைய தியானாள் என்ற மகா தேவியின் ஆலயம் பூர்வ உலகின் ஏழு அற்புதங்களில் ஒன்றாக இருந்தது. அதன் அரங்கத்தில் 25,000 பேர் உட்கார வசதி இருந்தது. ஜெபஆலயத்தில் பவுல் நம்பவைக்கும் தர்க்கங்களை அளிப்பதன் மூலம் ‘நியாயக்காரணங்களோடு அவர்களை ஏற்கும்படிச் செய்தான்.’ ஆனால் சிலர் கிறிஸ்துவின் மீது விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்த இந்த மார்க்கத்தை அல்லது வாழ்க்கை முறையைக் குறித்து தூஷணமாகப் பேசிய போது அவன் அவர்களை விட்டு விலகிப்போனான். இரண்டு வருடங்களுக்குப் பவுல் திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அனுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான். “வசனம்” ஆசியா நாடு முழுவதிலுமாகப் பரவியது.
19. ‘யெகோவாவின் வசனம் விருத்தியடைந்து மேற்கொள்வதற்கு’ எபேசுவில் என்ன நடந்தது?
19 பவுலுக்கு சுகப்படுத்தவும் பிசாசுகளைத் துரத்தவும் வல்லமையளிப்பதன் மூலம் கடவுள் தாம் அவனுடைய ஊழியத்தை அங்கீகரித்திருப்பதை காண்பித்தார். (19:11–20) ஆனால் ஸ்கேவா என்ற பிரதான ஆசாரியனுடைய ஏழு குமாரர்கள், இயேசுவின் நாமத்தில் ஒரு பிசாசைத் துரத்துவதில் தோல்வியடைந்தார்கள். ஏனென்றால் அவர்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பிசாசு பிடித்த மனிதனால் அவர்கள் காயமுமடைந்தார்கள்! இது ஜனங்களைப் பயங்கொள்ளச் செய்தது, “கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.” விசுவாசிகளானவர்கள் தங்கள் மாயமந்திர பழக்கங்களைக் கைவிட்டு மந்திர வாசகங்களையும் மந்திர வாய்ப்பாடுகளையும் கொண்டிருந்த தங்கள் புத்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள். “இவ்வளவு பலமாய் யெகோவாவுடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது” என்று லூக்கா எழுதினான். இன்றும்கூட கடவுளுடைய ஊழியர்கள் மக்களுக்கு பேய்களின் செல்வாக்கிலிருந்து விடுதலைப் பெற உதவி செய்கிறார்கள்.—உபாகமம் 18:10–12.
மதசம்பந்தமான சகிப்புத்தன்மையில்லாமை வெற்றிபெறுவதில்லை
20. எபேசுவில் வெள்ளித்தட்டான்கள் ஒரு கலகத்தைத் தூண்ட காரணமென்ன? அது எவ்வாறு முடிவுற்றது?
20 யெகோவாவின் சாட்கிகள் அடிக்கடி கோபாவேசமான கும்பல்களை சந்தித்திருக்கிறார்கள். அதேவிதமாகவே எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களும் சந்தித்தார்கள். (19:21–41) விசுவாசிகள் பெருகினபோது, தெமேத்திரியுவும் மற்ற வெள்ளித் தட்டான்களும் தங்கள் ஆதாயத்தை இழந்துபோனார்கள், ஏனென்றால் வெகு சிலரே அவர்களுடைய பல–மார்புகளுள்ள கருவள தேவதையான தியானாளின் வெள்ளிச் சிலைகளை வாங்கினார்கள். தெமேத்திரியுவினால் தூண்டிவிடப்பட்ட போது, ஜனக்கூட்டத்தார் காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அரங்கசாலைக்குள் இழுத்துக்கொண்டுப் போனார்கள். ஆனால், சீஷர்களோ பவுலை உள்ளே போகவிடவில்லை. விழாக்கள் மற்றும் விளையாட்டுகளின் ஆணையர்களும்கூட அவன் அந்தவிதமாக தன்னை ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளக்கூடாது என்பதாகக் கேட்டுக்கொண்டார்கள். இரண்டு மணிநேரங்களுக்கு அவர்கள் “எபேசியருடைய தியானாளே பெரியவள்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியாக, பட்டணத்துச் சம்பிரதியானவன் (நகராட்சி அரசாங்கத் தலைவன்) தொழிலாளிகள் (கைவினைஞர்கள்) தங்கள் குற்றச்சாட்டுகளை, நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட தீர்மானங்களைச் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிபதியிடம் தெரிவிக்கலாம் அல்லது “நியாயசங்கத்திலே” அவர்களுடைய வழக்கு தீர்க்கப்படலாம் என்று சொன்னான். மற்றபடி, ஒழுங்கற்ற இந்தக் கூட்டத்திலுள்ளவர்களை கலகம் செய்வதாக ரோமாபுரி குற்றஞ்சாட்டக்கூடும். அதோடு அவன் கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
21. என்ன விதத்தில் கடவுள் பவுலின் வேலையை ஆசீர்வதித்தார்? இன்று எவ்விதமாக யெகோவாவின் சாட்சிகளை அவர் ஆசீர்வதிக்கிறார்?
21 கடவுள், பல்வேறு சோதனைகளை எதிர்ப்படுவதற்கு பவுலுக்கு உதவிசெய்தார். மதசம்பந்தமான பிழைகளைத் தள்ளிவிட்டு சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஜனங்களுக்கு உதவிசெய்ய பவுல் மேற்கொண்ட முயற்சிகளை அவர் ஆசீர்வதித்தார். (எரேமியா 1:9, 10-ஐ ஒப்பிடவும்.) அதேவிதமாகவே நம்முடைய வேலையை நம்முடைய பரலோகத் தகப்பன் ஆசீர்வதிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! இதன் காரணமாக இப்பொழுது முதல் நூற்றாண்டிலிருந்தது போலவே ‘யெகோவாவுடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொள்கிறது.’ (w90 6/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதில் பவுல் என்ன முன்மாதிரியை வைத்தான்?
◻ இன்றும் யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் என்ன முறையின் மூலமாக பவுல் காரியங்களை ‘விவரித்து நிரூபித்தான்’?
◻ ஏரியோபாகஸ் மேல் பவுல் கொடுத்த பேச்சுக்கும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்கிப்புக்குமான பிரதிபலிப்புகளுக்கிடையே என்ன இணைப்பொருத்தம் இருக்கிறது?
◻ பவுல் ஊழியம் செய்யும்போது தன் பிழைப்புக்காக என்ன செய்தான்? இதற்கு என்ன நவீன நாளைய இணைபொருத்தம் இருக்கின்றது?
◻ பவுலினுடைய வேலையைக் கடவுள் ஆசீர்வதித்ததுபோல, இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை அவர் எவ்விதமாக ஆசீர்வதித்திருக்கிறார்?
18. எபேசுவிலிருக்கையில் பவுல் எங்கே சாட்சி கொடுத்தான்? என்ன விளைவுகளோடு?
[பக்கம் 16,17-ன் படங்கள்]
யெகோவாவுடைய வசனம் இந்த இடங்களில் மேற்கொண்டது
1. பிலிப்பி
2-ம் 3-ம். ஏதென்ஸ்
4-ம் 6-ம். எபேசு
5. ரோம்
[படத்திற்கான நன்றி]
Photo No. 4: Manley Studios