அபூரணமான ஓர் உலகில் நம்பிக்கை
“நான்விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” இது உங்களுடைய விஷயத்தில் உண்மையாய் இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அதே பிரச்சினை இருந்ததை அறிந்து தைரியங்கொள்ளுங்கள்; இருந்தபோதிலும் அவர் குறிப்பிடத்தக்கவிதமாக கிறிஸ்தவ உத்தமத்தைக் காத்துக்கொண்ட ஒரு மனிதனாக இருந்தார். இது முன்னுக்குப்பின் முரணாக இல்லையா? ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய தன்னுடைய கடிதத்தில் இந்தப் பிரச்சினையை அவர் பகுத்து ஆராய்ந்தார்: “அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” அவர் என்ன பாவத்தைக் குறிப்பிட்டு பேசுகிறார், உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் ஒரு மனிதனாகும் பொருட்டு அதை அவர் எவ்விதமாக மேற்கொண்டார்?—ரோமர் 7:19, 20.
இதற்கு முன்னால் பவுல் தன்னுடைய கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” அந்த ‘ஒரே மனுஷன்’ ஆதாம். (ரோமர் 5:12, 14) ஆதாமிய பாவம்—முதல் மனிதனாகிய ஆதாமின் பாவம்—மனித குலத்தின் சுதந்தரிக்கப்பட்ட அபூரணங்களுக்கு காரணமாயும், உத்தமத்தைக் காத்துக்கொள்வது ஏன் உண்மையான ஒரு சவாலாக இருக்கிறது என்பதற்கு முக்கிய காரணமாயும் உள்ளது.
“ஆதி பாவம்” என்பதாக வழக்கமாக அழைக்கப்பட்டதைப் பற்றிய பவுலின் கருத்து இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, ஏனென்றால் இறையியல் வட்டாரங்களில் பரிணாமக் கோட்பாடுகள் ஆதரிக்கப்பட்டு படைப்பைப் பற்றிய பைபிளின் பதிவு நிராகரிக்கப்பட்டுள்ளது. “கல்விமான்கள் அந்த முழு பகுதியையும் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டிருக்கிறார்கள்” என்பதே ரோமர் 5:12-14-க்கு நவீன விளக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இருந்தபோதிலும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, “ஆதாம் பாவம் செய்தபோது . . . தன்னுடைய எல்லா சந்ததியையும் அந்தப் பாவத்தாலும் அதன் விளைவுகளாலும் கறைப்படுத்தினான்” என்பதாகவே எப்போதும் பைபிள் விளக்கவுரைகள் விளக்கமளித்திருக்கின்றன.a
ஆதியில் உத்தமம் இழக்கப்பட்டது
முதல் மனிதனாகிய ஆதாம் இருந்ததை இன்று அநேகர் மறுதலிப்பதைப் போலவே, பிசாசாகிய சாத்தானும், ஒரு கட்டுக்கதையின் கற்பனையாகவே இருப்பதாக அலட்சியம் செய்யப்படுகிறான்.b குறிப்பிடத்தக்க அதிகாரமுள்ளவரான இயேசு கிறிஸ்து, இவன் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை,” வேறு வார்த்தைகளில் சொன்னால், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவனானான் என்பதாக நமக்குச் சொல்கிறார். (யோவான் 8:44) சாத்தானின் தூண்டுதலினால்தானே, ஆதாமும் அவனுடைய மனைவி ஏவாளும் யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்து சோதனையின்கீழ் தங்கள் உத்தமத்தை காத்துக்கொள்ள தவறினார்கள்.—ஆதியாகமம் 3:1-19.
நாமனைவரும் ஆதாமிலிருந்து வருவதால், நாமனைவரும் பாவம் செய்யும் மனச்சாய்வை சுதந்தரித்துக்கொள்கிறோம். ஞானியாகிய சாலொமோன் சொன்னார்: “ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.” (பிரசங்கி 7:20) இருந்தாலும், எந்த ஒரு மனிதனும் நம்பத்தகுந்தவனாக இருக்கமுடியும். இது எவ்வாறு சாத்தியமாகும்? ஏனென்றால் உத்தமத்தைக் காத்துக்கொள்ள ஒருவன் பரிபூரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உத்தமத்துக்கு அடிப்படை
இஸ்ரவேலின் தாவீது ராஜா, உண்மை சம்பவமாக இருந்த பத்சேபாளுடன் கொண்ட விபசார உறவு உட்பட அநேக தவறுகளைச் செய்தவராக இருந்தார். (2 சாமுவேல் 11:1-27) தாவீதின் அநேக தவறுதல்கள் அவர் பரிபூரணமாக இல்லை என்பதை உயர்த்திக் காண்பித்தன. ஆனால் யெகோவா இந்த மனிதனில் எதைக் கண்டார்? தாவீதின் மகன் சாலொமோனைப் பார்த்து யெகோவா சொன்னதாவது: “என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நட.” (1 இராஜாக்கள் 9:4) அவருடைய அநேக தவறுதல்கள் மத்தியிலும், அடிப்படையில் தாவீது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்பதை யெகோவா கண்டார். ஏன்?
சாலொமோனிடம் பின்வருமாறு சொன்னபோது, தாவீது இதற்கு பதிலளித்தார்: “கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.” (1 நாளாகமம் 28:9) தாவீது தவறுகள் செய்தார், ஆனால் மனத்தாழ்மையுள்ளவராக, சரியானதைச் செய்யவே விரும்பினார். அவர் எப்போதும் கடிந்துரைகளையும் திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டார்—ஆம், அதற்காக அவர் கேட்டு பெற்றுக்கொண்டார். “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்” என்பதே அவருடைய வேண்டுதலாக இருந்தது. (சங்கீதம் 26:2) தாவீது நிச்சயமாகவே புடமிடப்பட்டார். உதாரணமாக, பத்சேபாளுடன் அவர் செய்த பாவத்தால் ஏற்பட்ட சங்கடமான உணர்வு அவருடைய வாழ்க்கையின் முடிவு வரையாக இருந்தது. இருந்தபோதிலும், தாவீது ஒருபோதும் தான் செய்த தவற்றை நியாயப்படுத்த முயற்சிசெய்யவில்லை. (2 சாமுவேல் 12:1-12) அதிமுக்கியமாக, அவர் உண்மை வணக்கத்திலிருந்து ஒருபோதும் விலகிவிடவும் இல்லை. இந்தக் காரணத்துக்காகவும் தாவீதின் உண்மையான, இருதயப்பூர்வமான உறுத்துதல் மற்றும் மனந்திரும்புதலின் காரணமாகவும் யெகோவா அவருடைய பாவங்களை மன்னிக்கவும் உத்தமத்தைக் காத்த ஒரு மனிதனாக அவரை ஏற்றுக்கொள்ளவும் மனமுள்ளவராக இருந்தார்.—சங்கீதம் 51-ஐயும் காண்க.
சோதனையின்கீழ் நம்பிக்கைக்கு உரியவராயிருத்தல்
உத்தமத்தை முறித்துப்போடும்படி செய்விக்கும் முயற்சியில் பிசாசாகிய சாத்தானால் இயேசு சோதிக்கப்பட்டார். அவர் கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் தம்முடைய உத்தமத்தை காத்துக் கொள்ள வேண்டும். இது வெறுமனே ஒரு தெய்வீக சட்டத்திற்கு கீழ்ப்படியும்படியாக அறிவுறுத்தப்பட்ட போது பரிபூரண மனிதனான ஆதாம் சோதிக்கப்பட்டதற்கு எதிர்மாறாக இருந்தது. மேலுமாக, மனித குடும்பம் மீட்கப்படுவது இவர் தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் பேரில் சார்ந்துள்ளது என்பதை அறிந்திருந்ததால் அவர் அழுத்தத்தையும் உணர்ந்தார்.—எபிரெயர் 5:8, 9.
இயேசு மிகவும் பலவீனமாக இருந்த சமயம் பார்த்து—தியானத்திலும் உபவாசத்திலும் அவர் 40 நாட்கள் செலவிட்டபின்பு—சாத்தான் அவருடைய உத்தமத்தை முறித்துப்போட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவரை நெருங்கிவந்தான். மூன்று தடவை அவன் இயேசுவை சோதித்தான்—கற்களை அப்பங்களாக மாற்றும்படியும்; தேவதூதர்கள் குறுக்கிட்டு அவரைக் காப்பாற்றி இப்படியாக அவருடைய மேசியானியத்துவத்துக்கு அற்புதமான ஒரு அடையாளத்தைக் காணமுடியும் என்ற ஊகத்தின்பேரில் தேவாலயத்து உப்பரிகையிலிருந்து குதிக்கும்படியும்; சாத்தானை நோக்கி செய்யும் ஒரு ‘வணக்கச் செயலுக்கு’ பரிமாற்றமாக இந்த உலகின் அனைத்து ராஜ்யங்களின் ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளும்படியும்; ஆனால் சாத்தானின் ஒவ்வொரு சோதனையையும் இயேசு தள்ளிவிட்டு, யெகோவாவிடமாக தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டார்.—மத்தேயு 4:1-11; லூக்கா 4:1-13.
யோபுவின் உத்தமம்
சோதனையின்கீழ் தன் உத்தமத்தைக் காத்துக்கொண்ட யோபுவின் நிலைநிற்கை நன்கு அறியப்பட்டதே. விபரீத சம்பவங்கள் ஏன் தனக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை யோபு புரிந்துகொள்ளாமல் இருந்ததே அக்கறைக்குரிய விஷயமாக இருந்தது. யோபு கடவுளை சுயநலமான காரணங்களுக்காகவே சேவித்துக்கொண்டிருக்கிறார் என்றும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தன் உத்தமத்தை தாராளமாக முறித்துக்கொள்வார் என்றும் சாத்தான் கூறின தவறான உள்நோக்கங்களைப்பற்றி அவருக்கு தெரிந்திருக்கவில்லை. சாத்தான் கூறினது தவறு என்பதைக் காட்டுவதற்கு, யோபு கடுஞ்சோதனைகளை அனுபவிக்கும்படி கடவுள் அனுமதித்தார்.—யோபு 1:6-12; 2:1-8.
மூன்று போலி நண்பர்கள் காட்சியில் பிரவேசித்தார்கள். அவர்கள் வேண்டுமென்றே கடவுளுடைய தராதரங்களையும் நோக்கங்களையும் தவறாக எடுத்துக்கூறினார்கள். விவாதத்தைப் புரிந்துகொள்ள முடியாதவளாய் யோபுவின் மனைவியும்கூட, அவருக்கு அந்த சமயத்தில் வெகுவாக தேவைப்பட்ட உற்சாகத்தை அளிக்க தவறினாள். (யோபு 2:9-13) ஆனால் யோபு உறுதியாக இருந்தார். “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன். என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.”—யோபு 27:5, 6.
பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, யோபுவின் மிகச் சிறந்த முன்மாதிரியும் அதோடுகூட மற்ற அநேக உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் உத்தமமும் சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபித்தது.
உத்தமமும் கிறிஸ்தவ ஊழியமும்
உத்தமம் என்பது யெகோவா தம்முடைய சொந்த திருப்திக்காக மட்டுமே உயர்வாக மதிக்கும் ஒரு பண்பாக இருக்கிறதா? இல்லை. மனிதர்களாகிய நமக்கும்கூட உத்தமம் உண்மையான மதிப்புள்ள ஒன்றாக உள்ளது. நம்முடைய நன்மைக்காகவே ‘நம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் நம் முழு இருதயத்தோடும் நம் முழு ஆத்துமாவோடும் நம் முழு மனதோடும் அன்புகூரும்படியாக’ இயேசு நமக்கு அறிவுரைக் கூறினார். உண்மையிலேயே இதுவே “முதலாம் பிரதான கற்பனை.” உத்தமமாக இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அல்லது பிள்ளையும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். (மத்தேயு 22:36-38) இதில் உட்பட்டிருப்பது என்ன, இதற்கான வெகுமதிகள் யாவை?
உத்தமமுள்ள ஒரு மனிதன் வெறுமனே உடன் மானிடரால் மட்டுமல்லாமல் அதிக முக்கியமாக கடவுளால் நம்பப்பட முடியும். அவனுடைய இருதய சுத்தம் அவனுடைய செயல்களில் காணப்படுகிறது; அவன் பாசாங்கு செய்வதிலிருந்து விலகியிருக்கிறான். அவன் தவறான வழியில் செல்பவனாக அல்லது ஒழுக்கமற்றவனாக இல்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாகச் சொன்னார்: “வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.”—2 கொரிந்தியர் 4:2.
கிறிஸ்தவ ஊழியத்தோடு சம்பந்தமுள்ள மனநிலைகளை பவுல் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். ஒரு கிறிஸ்தவ ஊழியருடைய கைகள் சுத்தமாக இல்லையென்றால், அவர் உத்தமமான மனிதனாக இல்லையென்றால் எப்படி அவர் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்ய முடியும்? ஐயர்லாந்து நாட்டில் ஒரு சமய துறவியர் மடத்தலைவர் அண்மையில் ராஜிநாமா செய்தது, இந்தக் குறிப்பை தெளிவாக விளக்குகிறார். தி இன்டிப்பென்டண்ட் செய்தித்தாளின்படி, “ஒரு பாதிரி பிள்ளைகளைப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்வது தெரிய வந்தப்பின்னும், அவரை பிள்ளைகளோடு தொடர்ந்து பணியாற்ற தாம் அனுமதித்ததை” அவர் ஒப்புக்கொண்டார். பிள்ளைகளை இப்படியாக துர்ப்பிரயோகம் செய்வது 24 ஆண்டுகளாக நீடித்தது என்பதாக பதிவு விளக்குகிறது. பாதிரி நான்காண்டுகளுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் அவருடைய மடத்தின் தலைவர் நடவடிக்கை எடுப்பதற்கு தார்மீக உத்தமத்தில் குறைவுபட்டதால் அந்த ஆண்டுகளின்போது இந்த பாதிரி முரட்டுத்தனமாக அந்தப் பிள்ளைகளைத் தாக்கியபோது அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை எண்ணிப்பாருங்கள்!
உத்தமம்—அதன் வெகுமதிகள்
அப்போஸ்தலன் யோவான் தைரியமுள்ள ஒரு மனிதனாக இருந்தார். அவர்களுடைய துடிப்பான உற்சாகத்தின் காரணமாக இயேசு அவரையும் அவருடைய சகோதரன் யாக்கோபையும் ‘இடிமுழக்க மக்கள்’ என்றழைத்தார். (மாற்கு 3:17) உத்தமத்தில் குறிப்பிடத்தக்க மனிதனான யோவான், இயேசுவோடு இருந்தபோது பார்த்த மற்றும் கேட்ட காரியங்களைக் குறித்து ‘பேசாமலிருக்க’ முடியாது என்பதாக பேதுருவோடுகூட, யூத அதிபதிகளிடம் விளக்கினார். ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,’ என்பதாகச் சொன்ன அப்போஸ்தலரில் ஒருவராகவும்கூட யோவான் இருந்தார்.—அப்போஸ்தலர் 4:19, 20; 5:27-32.
யோவான் தன்னுடைய 90-களின் பிற்பகுதியில் இருந்தபோது, “தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” பத்மு தீவிலே நாடு கடத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. (வெளிப்படுத்துதல் 1:9) அவருடைய வயதில், அவருடைய ஊழியம் முடிந்துவிட்டதாக ஒருவேளை அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் அத்தகைய உத்தமமான ஒரு மனிதனிடம் மட்டுமே, வெளிப்படுத்துதலின் கிளர்ச்சியூட்டும் தரிசனத்தை எழுதும் வேலை ஒப்படைக்கப்பட முடியும். இந்த வேலையைச் செய்து முடிப்பதில் யோவான் உண்மையுள்ளவராக இருந்தார். இது அவருக்கு என்னே ஒரு சிலாக்கியமாக இருந்தது! இன்னும் அதிக சிலாக்கியங்கள் வரவிருந்தன. பின்னால், எபேசுவுக்கு அருகில் இருக்கையில் அவர் தன்னுடைய சுவிசேஷ பதிவையும் மூன்று கடிதங்களையும் எழுதினார். 70 வருட உண்மையுள்ள, நம்பிக்கைக்குரிய சேவைக்கு இப்படிப்பட்ட மகத்தான சிலாக்கியங்கள் மகுடமாக அமைந்தன.!
பொதுவாக உத்தமமான ஒரு நபராக இருப்பது ஆழ்ந்த திருப்தியைக் கொடுக்கிறது. கடவுளுடைய பார்வையில் நம்பத் தகுந்தவராக இருப்பது நித்திய வெகுமதிகளைக் கொண்டுவருகின்றது. இன்று, உண்மை வணக்கத்தாராலாகிய ஒரு ‘திரள் கூட்டம்’ நித்திய ஜீவனின் எதிர்பார்ப்போடு சமாதானமும் ஒத்திசைவுமுள்ள ஒரு புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. (வெளிப்படுத்துதல் 7:9) இந்தக் காரிய ஒழுங்கு முறையின் சோதனைகளின் மத்தியிலும் சாத்தான் கொண்டுவரக்கூடிய அநேக சவால்களின் மத்தியிலும் ஒழுக்கம் மற்றும் வணக்கம் சம்பந்தப்பட்ட முக்கியமான காரியங்களில் உத்தமத்தைக் காத்துக்கொள்வது அவசியமாகும். யெகோவா அளிக்கும் வல்லமையினால் நீங்கள் வெற்றிபெற முடியும் என்பதில் உறுதியாயிருங்கள்!—பிலிப்பியர் 4:13.
தற்காலத்தையும் எதிர்காலத்தையும்பற்றி பேசுகையில், சங்கீதக்காரனாகிய தாவீது, யெகோவாவுக்கு நன்றி தெரிவித்து செய்யும் ஜெபத்தில் பின்வருமாறு சொன்னார். அதில் அவர் நம் அனைவருக்கும் திரும்பவும் நம்பிக்கையூட்டுகிறார்: “நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர் . . . கர்த்தர் . . . ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.”—சங்கீதம் 41:12, 13.
[அடிக்குறிப்புகள்]
a பல்வேறு ஆசிரியர்களின் சுருக்கமான விளக்கவுரையோடுகூடிய ஆத்தரைஸ்ட் வர்ஷனின்படி, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் ஒரு குறிப்பு.
b சாத்தான் என்ற பெயருக்கு அர்த்தம் “எதிர்ப்பவன்.” பிசாசு என்பதற்கு அர்த்தம் “பழிதூற்றுபவன்.”
[பக்கம் 4-ன் படம்]
தன்னுடைய தவறுதல்களின் மத்தியிலும் தாவீது நம்பத்தகுந்தவராக நிரூபித்தார்
[பக்கம் 5-ன் படம்]
நம்பத்தகுந்தத்தன்மைக்கு இயேசு நமக்கு மிகச்சிறந்த முன்மாதிரியை வைத்துப்போனார்
[பக்கம் 7-ன் படம்]
நம்பத்தகுந்தவராக இருப்பது அதிகமான திருப்தியைக் கொண்டுவருகிறது