மத்தேயு எழுதியது
22 இயேசு மறுபடியும் உவமைகளைப் பயன்படுத்திப் பேசினார்; அவர்களிடம், 2 “பரலோக அரசாங்கம், மகனுடைய திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது.+ 3 திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரச் சொல்லி அவர் தன்னுடைய அடிமைகளை அனுப்பினார்; ஆனால், அழைக்கப்பட்டவர்கள் வர விரும்பவில்லை.+ 4 அவர் மறுபடியும் வேறு அடிமைகளைக் கூப்பிட்டு, ‘அழைக்கப்பட்டவர்களிடம் நீங்கள் போய், “இதோ! நான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன், காளைகளையும் கொழுத்த மிருகங்களையும் அடித்துச் சமைத்து வைத்திருக்கிறேன், எல்லாம் தயாராக இருக்கிறது; திருமண விருந்துக்கு வாருங்கள்” என நான் அழைப்பதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். 5 ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டை செய்து, ஒருவன் தன்னுடைய வயலுக்குப் போய்விட்டான், வேறொருவன் தன்னுடைய வியாபாரத்தைக் கவனிக்கப் போய்விட்டான்.+ 6 மற்றவர்களோ, அவருடைய அடிமைகளைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொன்றுபோட்டார்கள்.
7 ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது; அதனால், தன் படைவீரர்களை அனுப்பி அந்தக் கொலைகாரர்களைக் கொன்றுபோட்டார், அவர்களுடைய நகரத்தையும் கொளுத்தினார்.+ 8 பின்பு தன் அடிமைகளிடம், ‘திருமண விருந்து தயாராக இருக்கிறது, ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.+ 9 அதனால், நகரத்துக்கு வெளியே செல்லும் சாலைகளுக்குப் போய், யாரையெல்லாம் பார்க்கிறீர்களோ அவர்களையெல்லாம் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’+ என்று சொன்னார். 10 அதன்படியே, அந்த அடிமைகள் அந்தச் சாலைகளுக்குப் போய், அவர்கள் பார்த்த நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாரையும் அழைத்து வந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பி வழிந்தது.
11 விருந்தாளிகளைப் பார்வையிட ராஜா உள்ளே வந்தபோது, திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாத ஒருவன் அங்கே இருப்பதைப் பார்த்தார். 12 அதனால் அவனிடம், ‘திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாமல் நீ எப்படி உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 13 அப்போது ராஜா தன் வேலையாட்களிடம், ‘அவனுடைய கை கால்களைக் கட்டி, வெளியே இருட்டில் வீசியெறியுங்கள். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்’ என்று சொன்னார்.
14 இப்படியாக, அழைக்கப்படுகிறவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் சிலர்” என்றார்.
15 பின்பு அந்தப் பரிசேயர்கள் அங்கிருந்து போய், அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக ஒன்றுகூடி சதித்திட்டம் போட்டார்கள்.+ 16 அதன்படி, தங்களுடைய சீஷர்களையும் ஏரோதுவின் ஆதரவாளர்களையும் அவரிடம் அனுப்பி,+ “போதகரே, நீங்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர், யாருடைய தயவையும் எதிர்பார்க்காதவர், மனுஷர்களுடைய வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும். 17 அதனால் எங்களுக்குச் சொல்லுங்கள், ரோம அரசனுக்கு வரி கட்டுவது சரியா இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 18 ஆனால் இயேசு அவர்களுடைய கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்டு, “வெளிவேஷக்காரர்களே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19 வரிக் காசு ஒன்றை என்னிடம் காட்டுங்கள்” என்று சொன்னார். அப்போது அவர்கள் ஒரு தினாரியுவை அவரிடம் கொண்டுவந்தார்கள். 20 “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்டார். 21 அப்போது அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்”+ என்று சொன்னார். 22 அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, அவரைவிட்டுப் போனார்கள்.
23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்கள்+ அன்று அவரிடம் வந்து,+ 24 “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே சொன்னார்.+ 25 எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். அதனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டான். 26 இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரை அப்படியே நடந்தது. 27 கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 28 அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அந்த ஏழு பேரில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லாருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள்.
29 அதற்கு இயேசு, “உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது; ஏனென்றால், உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை.+ 30 உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.+ 31 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா? 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”+ என்று சொன்னார். 33 அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் மலைத்துப்போனார்கள்.+
34 அவர் சதுசேயர்களுடைய வாயை அடைத்துவிட்டார் என்பதை பரிசேயர்கள் கேள்விப்பட்டபோது, கூட்டமாக அவரிடம் வந்தார்கள். 35 அவர்களில் திருச்சட்ட அறிஞன் ஒருவன் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம், 36 “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?”+ என்று கேட்டான். 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+ 38 இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை. 39 இதோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டளை இதுதான்: ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.’+ 40 இந்த இரண்டு கட்டளைகள்தான் திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன”+ என்று சொன்னார்.
41 பரிசேயர்கள் ஒன்றுகூடியிருந்தபோது இயேசு அவர்களிடம்,+ 42 “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தாவீதின் மகன்”+ என்று சொன்னார்கள். 43 அப்போது அவர், “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது+ அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? 44 ‘யெகோவா என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ என தாவீது சொன்னாரே. 45 தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று அவர்களிடம் கேட்டார். 46 யாராலும் ஒரு வார்த்தைகூட பதில் சொல்ல முடியவில்லை; அன்றுமுதல் அவரிடம் கேள்வி கேட்பதற்கு யாருக்குமே துணிச்சல் வரவில்லை.