நற்செய்தியை ஊக்கத்துடன் அறிவியுங்கள்
“ஆவியால் உற்சாகமாய் இருங்கள். யெகோவாவுக்காக ஊழியம் செய்யுங்கள்.”—ரோமர் 12:11, NW.
1, 2. கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன மனநிலையோடு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்?
புதிதாக தனக்குக் கிடைத்துள்ள வேலையை நினைக்கையிலேயே அந்த இளைஞனின் மனம் குதூகலத்தில் துள்ளுகிறது. வேலைக்குச் சென்ற முதல் நாள், தன் முதலாளி என்ன சொல்லப்போகிறார் என ஆவலுடன் காத்திருக்கிறான் அவன். தன்னிடம் முதலில் ஒப்படைக்கப் போகிற வேலையை கண்ணும் கருத்துமாய் செய்ய காத்திருக்கிறான். தன்னால் முடிந்தளவு நன்கு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவன் கண்களில் பளிச்சிடுகிறது.
2 கிறிஸ்தவர்களாகிய நாமும் ஒருவிதத்தில் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள்தான். நித்தியமாய் வாழப்போகிறோம் என்று நாம் நம்புவதால், யெகோவாவுக்காக வேலை செய்ய இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம் என்றே சொல்லலாம். நித்திய காலமும் நாம் செய்வதற்கு ஏராளமான வேலைகளை நம் சிருஷ்டிகர் தயாராக வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் முதல் வேலை, அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதே. (1 தெசலோனிக்கேயர் 2:4) கடவுள் கொடுத்திருக்கும் இந்த வேலையை நாம் எவ்வாறு கருதுகிறோம்? அந்த இளைஞனைப் போல நம்மால் முடிந்தளவுக்கு வைராக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், சொல்லப்போனால், ஊக்கத்தோடும் செய்ய விரும்புகிறோம்!
3. நற்செய்தியின் ஊழியராய் நிலைத்திருக்க என்ன தேவை?
3 அத்தகைய நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வது கஷ்டம்தான். ஏனெனில் ஊழியம் செய்வதோடுகூட, நமக்கு மற்ற பொறுப்புகளும் உள்ளன; அவற்றில் சில நம்மை உடல் சம்பந்தமாகவும் உணர்ச்சி சம்பந்தமாகவும் வாட்டி வதைக்கலாம். பெரும்பாலும், ஊழியத்திற்குப் போதுமானளவு கவனம் செலுத்திக்கொண்டே இவற்றையும் சமாளிக்கிறோம். இருப்பினும், அது நித்தம் தொடரும் போராட்டம்தான். (மாற்கு 8:34) கிறிஸ்தவர்களாக நிலைத்திருக்க மும்முரமான முயற்சி தேவை என்று இயேசு வலியுறுத்தினார்.—லூக்கா 13:24.
4. நம் ஆவிக்குரிய நோக்குநிலையை அன்றாட கவலைகள் எப்படி பாதிக்கலாம்?
4 இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கையில், எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று மலைக்கலாம்; மனம் பாரமடையலாம். தேவராஜ்ய வேலைகளிடம் நமக்குள்ள ஆர்வத்தையும் போற்றுதலையும் ‘லௌகீக கவலைகள்’ குன்றச் செய்யலாம். (லூக்கா 21:34, 35; மாற்கு 4:18, 19) மனித அபூரணத்தின் காரணமாக “ஆதியில் கொண்டிருந்த அன்பை” நாம் இழந்திருக்கலாம். (வெளிப்படுத்துதல் 2:1-4) ஊழியத்தின் சில அம்சங்களை ஏதோ கடமைக்கு செய்துவரலாம். இந்த சூழ்நிலையில், ஊழியத்தில் நம் ஆர்வம் தணிந்துவிடாமல் இருக்க தேவைப்படும் ஊக்குவிப்பை பைபிள் எவ்வாறு அளிக்கிறது?
நம் இருதயத்தில் “எரிகிற அக்கினியைப்போல்”
5, 6. பிரசங்கிக்கும் பாக்கியத்தை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு கருதினார்?
5 யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற ஊழியம், லேசுப்பட்ட ஒரு வேலையல்ல, அரும்பெரும் பொக்கிஷம் போன்றது. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தன்னைத் தகுதியற்றவராக கருதிய அப்போஸ்தலன் பவுல் அதைத் தனக்குக் கிடைத்த பாக்கியம் என நினைத்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்துவின் ஆராயமுடியாத ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடம் சுவிசேஷமாய் அறிவிக்கிறதாகிய இந்தக் கிருபை பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய எனக்கு அருளப்பட்டிருக்கிறது. . . . எல்லாவற்றையும் சிருஷ்டித்த கடவுளுக்குள்ளே அநாதிகாலமாய் மறைபட்டிருந்த இரகசியத்தின் உக்கிராண ஊழியம் இன்னதென்று தெளிவாய்க் காட்டுவதற்கு இந்தக் கிருபை எனக்கு அருளப்பட்டிருக்கிறது.”—எபேசியர் 3:8, 11, தி.மொ.
6 தான் செய்யும் ஊழியத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையான மனநிலையுடன் இருக்கும் விஷயத்தில் பவுல் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.” நற்செய்தியைக் குறித்து அவர் வெட்கப்படவில்லை. (ரோமர் 1:15, 16) ஊழியத்தைப் பொறுத்தமட்டில் அவருக்குச் சரியான மனநிலையும் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஊக்கமும் இருந்தது.
7. ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எவ்வாறு அறிவுரை கூறினார்?
7 தொடர்ந்து ஆர்வத்துடன் நிலைத்திருக்க வேண்டும் என அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்தார். ஆகையால் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஊழியஞ்செய்யுங்கள்.” (ரோமர் 12:11) ‘அசதி’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல்லுக்கு, “மந்தமாக, சோம்பலாக” இருத்தல் என்ற அர்த்தம். ஊழியத்தில் உண்மையிலேயே அசதியாக இராவிட்டாலும், ஆவிக்குரிய மந்தத்திற்கான அறிகுறிகள் தென்படுகையில் அனைவரும் அதற்குக் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை அத்தகைய அறிகுறிகள் நம்மிடம் தென்பட்டால்? உடனடியாக நம் மனநிலையை சரிப்படுத்த வேண்டும்.—நீதிமொழிகள் 22:3.
8. (அ) எரேமியாவின் இருதயத்தில் “எரிகிற அக்கினியைப்போல்” இருந்தது எது, ஏன்? (ஆ) எரேமியாவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்கிறோம்?
8 நாம் மனமுடைந்து போகையில், கடவுளுடைய ஆவி நமக்கு உதவலாம். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் தீர்க்கதரிசியாகிய எரேமியா சோர்ந்து போனார். இனியும் தீர்க்கதரிசியாக சேவிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார். “நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டார். அப்படியானால், எரேமியா ஆன்மீகத்தில் பெருமளவு குறைவுபட்டார் என்று அர்த்தமா? இல்லை. ஏனெனில் அவர் ஆன்மீக விஷயத்தில் திடமானவராக இருந்தார்; அவருக்கு யெகோவாவிடம் அளவுகடந்த அன்பு இருந்தது; சத்தியத்தில் ஆர்வமும் இருந்தது. எனவேதான் தீர்க்கதரிசியாக தொடர்ந்து அவரால் சேவிக்க முடிந்தது. “ஆனாலும் அவருடைய [யெகோவாவினுடைய] வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று” என அவர் விளக்குகிறார். (எரேமியா 20:9) கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் அவ்வப்போது சோர்ந்து போவது சகஜம்தான். ஆனால் உதவிக்காக அவர்கள் யெகோவாவிடம் ஜெபிக்கையில், அவர்களுடைய இருதயத்தைப் பார்க்கிறார்; எரேமியாவைப்போல் அவருடைய வார்த்தை அவர்களின் இருதயத்தில் பதிந்திருக்கையில் தம் பரிசுத்த ஆவியை தாராளமாய் தந்து உதவுகிறார்.—லூக்கா 11:9-13; அப்போஸ்தலர் 15:8.
“ஆவியை அணைத்துப்போடாதிருங்கள்”
9. பரிசுத்த ஆவி நம் சார்பாக செயல்படுவதை எது தடைசெய்யலாம்?
9 “ஆவியை அணைத்துப்போடாதிருங்கள்” என தெசலோனிக்கேயருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறினார். (1 தெசலோனிக்கேயர் 5:19, NW) கடவுளுடைய நியமங்களுக்கு எதிரான நம் சிந்தைகளும் செயல்களும் பரிசுத்த ஆவி நம் சார்பாக செயல்படுவதை தடைசெய்யலாம். (எபேசியர் 4:30) நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பு இன்று கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் இந்த சிலாக்கியத்தை பெரும் மதிப்பு வாய்ந்ததாக கருதி செயல்படுகிறோம். கடவுளை அறியாதவர்கள் நம்முடைய ஊழியத்தை ஏளனம் செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனினும், ஒரு கிறிஸ்தவன் தன் ஊழியத்தை வேண்டுமென்றே அசட்டை செய்தால், கடவுளுடைய ஆவி தன்னை தூண்ட அனுமதிக்காமல் தானே முட்டுக்கட்டை வைக்கலாம்.
10. (அ) மற்றவர்களின் கருத்துக்கள் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்? (ஆ) நம் ஊழியத்தைப் பற்றி 2 கொரிந்தியர் 2:17-ல் என்ன உயர்ந்த நோக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?
10 நாம் வெறுமனே புத்தகங்களை விநியோகித்து வருவதாக சிலர் நினைக்கலாம். இன்னும் சிலர், நன்கொடைகளை வசூலிப்பதற்காகவே நாம் வீடுவீடாக செல்வதாக தவறான முடிவுக்கு வரலாம். இதுபோன்ற வேண்டாத விஷயங்கள் மனதை குடைந்தால் பயனளிக்கும் விதத்தில் நம்மால் ஊழியத்தில் ஈடுபட முடியாது. இப்படிப்பட்ட சிந்தனை நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது. மாறாக, யெகோவாவும் இயேசுவும் நம் ஊழியத்தை கருதும் விதமாகவே நாமும் கருத வேண்டும். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது அந்த உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார்: “அநேகரைப்போல நாங்கள் கடவுளின் வார்த்தையை லாபத்திற்கென்று கலப்பாக்காமல் களங்கமற்றதாகவுங் கடவுளிடமிருந்து வந்ததாகவுங் காணப்படும்படி கிறிஸ்துவுக்குள் தெய்வ சந்நிதியில் பேசுகிறோம்.”—2 கொரிந்தியர் 2:17, தி.மொ.
11. துன்புறுத்துதலை எதிர்ப்பட்டபோதிலும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் ஆர்வம் குன்றாமல் இருக்க எது உதவியது?
11 இயேசுவின் மரணத்திற்குப் பின் வெகு சீக்கிரத்திலேயே எருசலேமிலிருந்த அவருடைய சீஷர்கள் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டனர். அவர்கள் பிரசங்கிக்கக் கூடாது என மிரட்டப்பட்டனர். எனினும், அவர்கள் “பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு கடவுளின் வார்த்தையைத் தைரியத்தோடு கூறிவந்தார்கள்” என்று பைபிள் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 4:17, 21, 31, தி.மொ.) சில ஆண்டுகளுக்குப் பின் பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்ன வார்த்தைகள், கிறிஸ்தவர்களிடம் இருக்க வேண்டிய நம்பிக்கையான மனநிலையை வெளிப்படுத்தின. பவுல் சொன்னதாவது: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக் குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.”—2 தீமோத்தேயு 1:7, 8.
அயலாருக்கு எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கிறோம்?
12. நாம் நற்செய்தியை பிரசங்கிப்பதன் முக்கிய காரணம் என்ன?
12 ஊழியத்தின்பேரில் சரியான மனநிலை வேண்டுமென்றால், நமக்கு சரியான உள்நோக்கம் தேவை. நாம் ஏன் பிரசங்கிக்கிறோம்? சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளில் அந்த முக்கிய காரணம் குறிப்பிடப்படுகிறது: “[யெகோவாவே], உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.” (சங்கீதம் 145:10-12) யெகோவாவை வெளிப்படையாக துதிக்க வேண்டும்; எல்லாருக்கும் முன்பு அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்; இதுவே நாம் பிரசங்கிப்பதன் நோக்கம். சிலரே நமக்குச் செவிசாய்த்தாலும், இரட்சிப்பின் செய்தியை நாம் உண்மையுடன் அறிவிக்கையில் யெகோவாவுக்குத் துதிமேல் துதி சேர்க்கிறோம்.
13. இரட்சிப்பின் நம்பிக்கையை மற்றவர்களுக்கு அறிவிக்க எது நம்மை தூண்டுவிக்கும்?
13 ஜனங்களிடமுள்ள அன்பினாலும் இரத்தப்பழியைத் தவிர்க்க விரும்புவதாலும்கூட நாம் பிரசங்கிக்கிறோம். (எசேக்கியேல் 33:8; மாற்கு 6:34) கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருப்பவர்களைக் குறித்து பவுல் சொன்ன வார்த்தைகள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன: “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.” (ரோமர் 1:14) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பமாக இருப்பதால், நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவிக்க பவுல் கடன்பட்டிருப்பதாக உணர்ந்தார். (1 தீமோத்தேயு 2:4) இன்று நாமும் அயலாரிடமாக அதே விதமாக கடன்பட்டிருக்கிறோம், அவர்களை நேசிக்கவும் செய்கிறோம். யெகோவாவுக்கு மனிதரிடம் அன்பு உள்ளது; அதுவே தம்முடைய குமாரனை அவர்களுக்காக மரிக்கும்படிக்கு பூமிக்கு அனுப்ப அவரைத் தூண்டியது. (யோவான் 3:16) அது மிகப் பெரிய தியாகம். இயேசுவின் பலியை அடிப்படையாக கொண்ட இரட்சிப்பின் நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதில் அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்கையில் நாம் யெகோவாவின் அன்பைப் பின்பற்றுகிறோம்.
14. கிறிஸ்தவ சபைக்கு வெளியே உள்ளவர்களை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
14 யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் சகமனிதரை, வருங்கால கிறிஸ்தவ சகோதர சகோதரிகளாகவே கருதுகிறோம். நாம் தைரியத்துடன் பிரசங்கிக்க வேண்டும், ஆனால், நம்மிடம் முரட்டு தைரியம் இருக்கக்கூடாது. பொதுவில் உலகத்தைப் பற்றி பேசுகையில், பைபிள் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது உண்மைதான். “இவ்வுலகத்தின் ஞானம்” என்றும் “லௌகிக [உலக] இச்சை” என்றும் பவுல் பேசுகையில், “உலகம்” என்ற இந்த வார்த்தையை நல்ல கருத்தில் பயன்படுத்தவில்லை. (1 கொரிந்தியர் 3:19; தீத்து 2:12) மேலும் எபேசிய கிறிஸ்தவர்கள், “இந்த உலகக் காரிய ஒழுங்குமுறையின்படி” நடந்தபோது, அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் “மரித்தவர்களாக” இருந்தனர் என்றும் பவுல் நினைப்பூட்டினார். (எபேசியர் 2:1-3, NW) இந்தச் சொற்றொடர்களும் இது போன்றவையும் அப்போஸ்தலனாகிய யோவானின் இவ்வார்த்தைகளுடன் ஒத்திருக்கின்றன: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—1 யோவான் 5:19.
15. கிறிஸ்தவ சபைக்குள் இல்லாதவர்களைப் பொருத்தமட்டில் நாம் என்ன செய்யக்கூடாது, ஏன்?
15 எனினும், இத்தகைய சொற்றொடர்கள் தனிப்பட்டவர்களை அல்ல, கடவுளிடமிருந்து விலகி இருக்கும் அனைவரையும் மொத்தமாக குறிப்பிடுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். பிரசங்கிக்கையில் ஒவ்வொருவரும் எப்படி பிரதிபலிப்பார்கள் என கிறிஸ்தவர்கள் முன்னதாகவே ஊகிப்பதில்லை. எவரையும் வெள்ளாடுகளாக தீர்மானிக்க அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. “செம்மறியாடுகளை” “வெள்ளாடுகளிலிருந்து” பிரிப்பதற்காக இயேசு வருகையில் என்ன நடக்கும் என நம்மால் சொல்ல முடியாது. (மத்தேயு 25:31-46) நியாயந்தீர்க்கப் போகிறவர் இயேசுவே; நாம் அல்ல. மேலும், ஒருகாலத்தில் படுமோசமாக வாழ்ந்துவந்த சிலர் பைபிளின் செய்தியை ஏற்று, மாற்றங்கள் செய்து, சுத்தமான வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்களாக ஆகியிருப்பதாக அனுபவம் காட்டுகிறது. ஆகையால், சிலரோடு நாம் கூட்டுறவு கொள்ள விரும்பாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கையில் அப்படிப்பட்டவர்களிடம் ராஜ்ய நம்பிக்கையை பகிர்ந்துகொள்ள நாம் தயங்கக்கூடாது. இன்னும் விசுவாசிகளாக ஆகாமலிருந்த ஒருசிலரை, ‘நித்திய ஜீவனடைவதற்குரிய சரியான போக்கில் இருந்தவர்களாக’ வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. முடிவில் அவர்கள் விசுவாசிகளானார்கள். (அப்போஸ்தலர் 13:48, NW) யார், எப்போது சாதகமாக பிரதிபலிப்பார் என்பதை நாம் ஒருபோதும் சொல்ல முடியாது; இதற்காக ஒருவேளை அவருக்குப் பல தடவை சாட்சிகொடுக்க வேண்டியிருக்கலாம். இதன் காரணமாகவே இரட்சிப்பின் செய்தியை இன்னும் ஏற்காதவர்களிடம் “சாந்தத்தோடும்” “அதிக மரியாதையோடும்” நாம் நடந்துகொள்கிறோம்; அவர்களில் சிலர் ஜீவனளிக்கும் செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்.—2 தீமோத்தேயு 2:25; 1 பேதுரு 3:15, NW.
16. ‘கற்பிக்கும் கலையை’ நாம் ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும்?
16 கற்பிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டால் நற்செய்தியை அறிவிப்பதில் நம் ஆர்வம் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, ஒரு விளையாட்டோ, போட்டியோ எவ்வளவு விறுவிறுப்பாய் இருந்தாலும், விளையாட தெரியாதவருக்கு அது சலிப்பூட்டும். ஆனால் அதை நன்கு விளையாட தெரிந்தவருக்கோ அது சுவாரஸ்யமாய் இருக்கும். அதைப் போலவே, ‘போதிக்கும் கலையில்’ திறமையை வளர்த்துக் கொள்ள முயலும் கிறிஸ்தவர்கள், ஊழியத்தில் அதிக மகிழ்ச்சி காண்கிறார்கள். (2 தீமோத்தேயு 4:2; தீத்து 1:9) பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” (2 தீமோத்தேயு 2:15) நம்முடைய கற்பிக்கும் திறமைகளை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?
17. நாம் பைபிள் அறிவின்மீது எவ்வாறு ‘ஆர்வத்தை உருவாக்கிக் கொள்ளலாம்,’ அத்தகைய அறிவு நம் ஊழியத்தில் எவ்வாறு பயனளிக்கும்?
17 திருத்தமான அறிவை அதிகமதிகமாய் பெறுவது இதற்கு ஒரு வழி. அப்போஸ்தலன் பேதுரு நம்மை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “நீங்கள் [“இரட்சிப்புக்கென்று,” தி.மொ.] வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் [“வாஞ்சையை வளர்த்துக் கொள்ளுங்கள்,” NW].” (1 பேதுரு 2:3) ஆரோக்கியமான ஒரு குழந்தை இயற்கையாகவே பாலுக்காக ஏங்கும், அல்லது வாஞ்சையைக் காட்டும். ஒரு கிறிஸ்தவனோ, பைபிள் அறிவின்பேரில் “வாஞ்சையை வளர்த்துக்” கொள்ள வேண்டும். வாசிப்பதையும் படிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். (நீதிமொழிகள் 2:1-6) நாம் கடவுளுடைய வார்த்தையின் திறம்பட்ட போதகர்களாவதற்கு, முயற்சியும் சுயகட்டுப்பாடும் தேவை; இத்தகைய முயற்சிகள் வீண்போவதில்லை. கடவுளுடைய வார்த்தையை ஆராய்வது பெருமகிழ்ச்சி தரும்; இது கடவுளுடைய ஆவியால் நம்மை அனலுள்ளவர்களாக்கி, நாம் கற்பவற்றை மற்றவர்களுடன் ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்ள செய்யும்.
18. சத்திய வசனத்தைத் திறம்பட உபயோகிப்பதற்கு கிறிஸ்தவக் கூட்டங்கள் எவ்வாறு நம்மை தகுதியாக்குகின்றன?
18 கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட உபயோகிப்பதில் கிறிஸ்தவக் கூட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுப் பேச்சுகள், பைபிள் கலந்தாலோசிப்புகள் ஆகியவற்றின் போது வசனங்கள் வாசிக்கப்படுகையில், நம் பைபிள்களில் அவற்றை திருப்பிப் பார்க்க வேண்டும். கூட்ட நிகழ்ச்சிநிரலுக்கு, குறிப்பாக நம் ஊழியத்தோடு சம்பந்தப்பட்டவற்றிற்கு கூர்ந்து கவனம் செலுத்துவது ஞானமானது. கூட்டங்களில் நடிப்புகள் இருந்தால், நடிப்புதானே என்று துச்சமாக எண்ணி கவனத்தை சிதறவிட்டு விடக்கூடாது. இந்த சந்தர்ப்பத்திலும் சுயகட்டுப்பாடு தேவை, கவனத்தை ஒருமுகப்படுத்தவும் வேண்டும். (1 தீமோத்தேயு 4:16) ஏனெனில் கிறிஸ்தவக் கூட்டங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தி, கடவுளுடைய வார்த்தையிடம் ஆர்வத்தை உருவாக்கிக் கொள்ள நமக்கு உதவுகின்றன; அத்தோடு நற்செய்தியை ஊக்கத்துடன் அறிவிக்க செய்கின்றன.
யெகோவாவின் ஆதரவில் நம்பிக்கை வைக்கலாம்
19. ஏன் ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்?
19 ‘ஆவியில் அனலுள்ளவர்களாகவும்,’ நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வம் காட்டுபவர்களாகவும் இருக்கும் கிறிஸ்தவர்கள், ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள பெரும் முயற்சி எடுக்கின்றனர். (எபேசியர் 5:15, 16) சூழ்நிலைமைகள் மாறுபடுவதால் உயிர் காக்கும் இந்த ஊழியத்தில் எல்லாரும் ஒரேயளவு நேரத்தைச் செலவிட முடியாது என்பது உண்மைதான். (கலாத்தியர் 6:4, 5) எனினும், பிரசங்கிப்பதற்கு நாம் எவ்வளவு மணிநேரம் செலவிடுகிறோம் என்பதைப் பார்க்கிலும் மற்றவர்களிடம் அடிக்கடி நம் நம்பிக்கையை பகிர்ந்துகொள்கிறோமா என்பதே அதிக முக்கியம். (2 தீமோத்தேயு 4:1, 2) பிரசங்கிப்பதற்கு அதிக நேரம் செலவிடுகையில் இந்த ஊழியத்தின் முக்கியத்துவத்தை அதிகமாக போற்றுவோம். (ரோமர் 10:14, 15) செய்வதறியாது தவித்துக் கொண்டு பெருமூச்சு விட்டழுகிற உண்மை மனமுள்ளவர்களை நாம் அடிக்கடி சந்திக்கையில், நமக்குள் இரக்க உணர்வு பெருகும்; அவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்து உதவுவோம்.—எசேக்கியேல் 9:4; ரோமர் 8:22.
20, 21. (அ) என்ன வேலை இன்னும் செய்யப்பட உள்ளது? (ஆ) யெகோவா எவ்வாறு நம் முயற்சிகளை ஆதரிக்கிறார்?
20 யெகோவா நம்மிடம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவருடைய ‘உடன்வேலையாட்களாக’ நம்மிடம் அவர் ஒப்படைக்கும் முதல் பொறுப்பு இது. (1 கொரிந்தியர் 3:6-9) கடவுள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்பை, முடிந்த மட்டும் திறமையுடனும் முழு மனதுடனும் செய்து முடிக்க நமக்கு ஆர்வம் வேண்டும். (மாற்கு 12:30; ரோமர் 12:1) சத்தியத்திற்காக ஏங்கும் நல்ல மனம்படைத்த பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். செய்வதற்கு ஏராளமான வேலை இருக்கிறது; ஆனால், நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்கையில், யெகோவாவின் ஆதரவில் நம்பிக்கை வைக்கலாம்.—2 தீமோத்தேயு 4:5.
21 யெகோவா தம்முடைய ஆவியையும் தமது வார்த்தையாகிய “ஆவியின் பட்டயத்”தையும் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய உதவியால் நாம் ‘தைரியமாய்ச் சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கலாம்.’ (எபேசியர் 6:17-20) தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினது, நம் விஷயத்திலும் உண்மையாகட்டும்: “எங்கள் சுவிசேஷம் [நற்செய்தி] உங்களிடம் பேச்சில் மாத்திரமல்ல வல்லமையிலும் பரிசுத்த ஆவியிலும் பூரண நிச்சயத்தோடு வந்ததே.” (1 தெசலோனிக்கேயர் 1:5, தி.மொ.) ஆம், நற்செய்தியை ஊக்கத்துடன் நாம் அறிவிப்போமாக!
சுருக்கமான மறுபார்வை
• வாழ்க்கை கவலைகளின் காரணமாக, ஊழியத்தில் நம் ஆர்வத்திற்கு என்ன நேரிடலாம்?
• நற்செய்தியை அறிவிப்பதற்கான நம் ஆவல், எந்த விதத்தில் நம் இருதயங்களில் “எரிகிற அக்கினியைப்போல்” இருக்க வேண்டும்?
• ஊழியத்தின் சம்பந்தமாக என்ன நம்பிக்கையற்ற மனநிலையை நாம் தவிர்க்க வேண்டும்?
• பொதுவில், நம்முடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• பிரசங்கிப்பதில் நம் ஊக்கத்தை காத்துக்கொள்ள யெகோவா எவ்வாறு நமக்கு உதவுகிறார்?
[பக்கம் 9-ன் படங்கள்]
ஆர்வம் காட்டுவதில் கிறிஸ்தவர்கள் எரேமியாவையும் பவுலையும் பின்பற்றுகிறார்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
கடவுளிலும் அயலாரிலும் உள்ள அன்பினால் ஊக்கத்தோடு போதிக்கிறோம்