படிப்புக் கட்டுரை 43
யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுங்கள்!
“அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.”—யாத். 34:14.
பாட்டு 59 நாம் தேவனுக்கே அர்ப்பணித்தவர்கள்!
இந்தக் கட்டுரையில்...a
1. முழு பக்தியையும் பெற்றுக்கொள்வதற்கு ஏன் யெகோவாவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது?
யெகோவா நம்மைப் படைத்தவர்! நமக்கு உயிர் கொடுத்தவர்! அப்படியென்றால், நம்முடைய முழு பக்தியையும் பெற்றுக்கொள்வதற்கு அவருக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. (வெளி. 4:11) ஆனால், அவருக்கு முழு பக்தி காட்டுவதில் சில சவால்கள் இருக்கின்றன. யெகோவாவை நாம் நேசிக்கிறோம், மதிக்கிறோம். இருந்தாலும், நமக்கே தெரியாமல் அவருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை மற்ற விஷயங்களுக்குக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. அது எப்படி நடக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு, முழு பக்தியைக் காட்டுவதில் எவையெல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
2. யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்டினால், யாத்திராகமம் 34:14 சொல்வது போல் நாம் என்ன செய்வோம்?
2 பைபிளைப் பொறுத்தவரை, யெகோவாவை வணங்குவது என்றால், அவரை ஆழமாக நேசிப்பது என்று அர்த்தம். நாம் அவருக்கு முழு பக்தியை காட்டுகிறோம் என்றால், அவரை மட்டும்தான் வணங்குவோம். நம் இதயத்தில் அவருக்குக் கொடுத்திருக்கிற இடத்தை வேறு யாருக்கும், வேறு எதற்கும் கொடுக்க மாட்டோம்!—யாத்திராகமம் 34:14-ஐ வாசியுங்கள்.
3. யெகோவாமேல் நாம் காட்டுகிற பக்தி குருட்டுத்தனமானது கிடையாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
3 யெகோவாமேல் நாம் காட்டுகிற பக்தி குருட்டுத்தனமானதா? கிடையவே கிடையாது! அவரைப் பற்றிக் கற்றுக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில்தான் நாம் அவர்மீது பக்தி காட்டுகிறோம். அவருடைய தங்கமான குணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டபோது நாம் மனம் நெகிழ்ந்து போனோம். அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டோம், அவற்றை மனதார ஏற்றுக்கொண்டோம். என்றென்றும் சந்தோஷமாக நாம் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம் என்பதை புரிந்துகொண்டோம். அதனால், அவருடைய தராதரங்களின்படி வாழ்கிறோம். அவருடைய நண்பர்களாக ஆவதற்கு அவர் கொடுத்திருக்கிற வாய்ப்பையும் உயர்வாக மதிக்கிறோம். (சங். 25:14) இப்படி, நாம் தெரிந்துகொண்ட ஒவ்வொரு விஷயமும் அவரிடம் நெருங்கிப்போக நம்மைத் தூண்டியது.—யாக். 4:8.
4. (அ) யெகோவாமீது நமக்கு இருக்கும் பக்தியைக் குறைப்பதற்கு சாத்தான் என்ன செய்வான்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 இந்த உலகம் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனிதர்களுக்கு இருக்கிற இயல்பான ஆசைகளையும் பலவீனங்களையும் தூண்டிவிடுவதற்கு அவன் அதைப் பயன்படுத்துகிறான். (எபே. 2:1-3; 1 யோ. 5:19) நம் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலம் யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்ட விடாமல் நம்மைத் தடுப்பதுதான் அவனுடைய குறிக்கோள்! ஆனால் அதை அவன் எப்படிச் செய்கிறான்? அவன் பயன்படுத்தும் இரண்டு வழிகளைப் பற்றிப் பார்க்கலாம். முதல் வழி, பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவது. இரண்டாவது வழி, மோசமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்படி நம்மைத் தூண்டுவது. இவற்றைப் பற்றி விவரமாக இந்தக் கட்டுரையில் படிப்போம்.
பண ஆசை—ஜாக்கிரதை!
5. பண ஆசையைப் பற்றி ஜாக்கிரதையாக இருப்பது ஏன் முக்கியம்?
5 சாப்பிடுவதற்கு போதுமான சாப்பாடு... போடுவதற்கு நல்ல ஆடைகள்... வாழ்வதற்கு நேர்த்தியான ஓர் இடம்... இவையெல்லாம் நியாயமான ஆசைகள். இருந்தாலும், ஜாக்கிரதை! ஏனென்றால், இவற்றை அடைவதற்கு பணத்தின் பின்னால் நாம் ஓட ஆரம்பித்துவிடலாம். சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தில், நிறைய பேர் “பண ஆசைபிடித்தவர்களாக” இருக்கிறார்கள்; பொருள்களை வாங்கிக் குவிப்பதுதான் அவர்களுடைய குறியாக இருக்கிறது. (2 தீ. 3:2) தன்னுடைய சீஷர்களும் இந்த வலையில் விழுந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று சொன்னார். (மத். 6:24) ஒருவர் யெகோவாவையும் வணங்கிக்கொண்டு, பணத்தின் பின்னால் ஓடுவதற்கும் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்தால், அதற்கு என்ன அர்த்தம்? இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முயற்சி செய்கிறார் என்றுதானே அர்த்தம்! அப்படிச் செய்கிற ஒருவர், யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்டுகிறார் என்று சொல்ல முடியுமா?
6. லவோதிக்கேயா சபைக்கு இயேசு கொடுத்த அறிவுரைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 லவோதிக்கேயா சபையில் இருந்தவர்கள், ‘நாங்கள் பணக்காரர்கள், செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கிறோம், இனி எங்களுக்கு எதுவும் தேவையில்லை’ என்று பெருமையடித்துக்கொண்டார்கள். ஆனால், யெகோவாவின் பார்வையிலும் இயேசுவின் பார்வையிலும் அவர்கள் எப்படி இருந்தார்கள்? ‘இழிவானவர்களாகவும், பரிதாபமானவர்களாகவும், ஏழ்மையானவர்களாகவும், பார்வையில்லாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும்’ இருந்தார்கள். அவர்கள் பணக்காரர்களாக இருந்ததால் அல்ல, பண ஆசை பிடித்தவர்களாக இருந்ததால்தான் இயேசு அவர்களைக் கண்டித்தார். ஏனென்றால், யெகோவாவுக்கும் அவர்களுக்கும் இடையில் அது விரிசலை ஏற்படுத்தியது. (வெளி. 3:14-17) நம்முடைய இதயத்தில் பண ஆசை என்ற நச்சு வேர் முளைத்துக்கொண்டிருக்கிறதா? அப்படியென்றால், உடனடியாக அதைப் பிடுங்கி எறிய வேண்டும்; நம்முடைய யோசனைகளைச் சரி செய்ய வேண்டும். (1 தீ. 6:7, 8) இல்லையென்றால், நம்முடைய இதயம் பிளவுபடும்; யெகோவா நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார். “தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று” யெகோவா எதிர்பார்க்கிறார். (உபா. 4:24) பணம் எப்படி நம் வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடித்துவிடலாம் என்று இப்போது பார்க்கலாம்.
7-9. டேவிட் என்ற மூப்பரின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
7 அமெரிக்காவில் வாழும் டேவிட் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். கடினமாக உழைக்கும் ஒரு மூப்பராக அவர் இருந்தார். வேலை செய்த இடத்திலும் ஓயாமல் உழைத்ததாக அவர் சொல்கிறார். அதனால், அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அவருடைய துறையில், தேசிய அளவில் அவருக்கு அங்கீகாரமும் கிடைத்தது. “யெகோவா ஆசீர்வதிச்சதனாலதான் எனக்கு இந்த வெற்றி கிடைச்சுதுனு நினைச்சேன்” என்கிறார் டேவிட். ஆனால் அது உண்மையா?
8 கொஞ்ச நாளில், யெகோவாவோடு தனக்கு இருந்த நட்பு பலவீனமாகிக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார். தன்னுடைய வேலைதான் அதற்குக் காரணம் என்பது அவருக்குப் புரிந்தது. “கூட்டங்கள்லயும் ஊழியத்துலயும் என்னோட வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன். என்கிட்ட பணத்துக்கு பஞ்சமே இல்ல. அதேசமயத்துல மனஅழுத்தமும் அதிகமாயிட்டே போச்சு. எனக்கும் என் மனைவிக்கும் இடையில நிறைய பிரச்சினை வந்துச்சு” என்று அவர் சொல்கிறார்.
9 எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று யோசித்துப்பார்ப்பதற்கான சமயம் வந்துவிட்டதை டேவிட் புரிந்துகொண்டார். “என்னோட நிலைமைய சரி செய்ய உறுதியான ஒரு முடிவு எடுத்தேன்” என்கிறார் டேவிட். வேலை செய்யும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அவருடைய முதலாளியிடம் இதைப் பற்றிப் பேசினார். விளைவு? அவருடைய வேலை பறிபோனது! டேவிட் என்ன செய்தார்? இடிந்துபோய்விட்டாரா? அவரே சொல்கிறார் கேளுங்கள்: “கொஞ்ச மாசத்துக்கு தொடர்ந்து துணை பயனியர் ஊழியம் செய்யலாம்னு முடிவு எடுத்தேன். அடுத்த நாளே விண்ணப்பத்த கொடுத்தேன்.” வாழ்க்கையை ஓட்டுவதற்கு டேவிடும் அவருடைய மனைவியும் என்ன செய்தார்கள்? பெரிய பெரிய கட்டிடங்களைச் சுத்தம் செய்யும் வேலையைத் தேர்ந்தெடுத்தார்கள். கொஞ்ச நாளில், டேவிட் ஒரு ஒழுங்கான பயனியராக ஆனார். சீக்கிரத்தில், அவருடைய மனைவியும் பயனியராக ஆனார். நிறைய பேர் தாழ்வாக பார்க்கிற ஒரு வேலையை அந்தத் தம்பதி தேர்ந்தெடுத்தார்கள். அது எப்படிப்பட்ட வேலை என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. சொல்லப்போனால், அவர்கள் முன்பு வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தில் பத்தில் ஒரு பங்குதான் இப்போது கிடைக்கிறது. ஆனால், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதுவே போதுமானதாக இருக்கிறது. யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அந்தத் தம்பதி நினைக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்களின் தேவைகளை கடவுள் கவனித்துக்கொள்வார் என்ற உண்மையை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.—மத். 6:31-33.
10. இதயத்தைப் பாதுகாப்பது எப்படி?
10 நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்தாலும் சரி நிறைய பணம் இருந்தாலும் சரி, நம்முடைய இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். இதை எப்படிச் செய்வது? பணத்தை நேசிக்காதீர்கள்! யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்குப் பதிலாக உங்கள் வேலைக்கு முன்னுரிமை கொடுத்துவிடாதீர்கள். இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் உங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள்: ‘கூட்டங்கள்லயும் ஊழியத்துலயும் என்னோட வேலைய பத்தி அடிக்கடி யோசிக்கிறேனா? எதிர்காலத்துக்காக பணம் சேர்த்து வைக்குறத பத்தியே யோசிச்சிட்டு இருக்கிறேனா? நானும் என் மனைவியும் பணத்த பத்தியும் பொருள பத்தியும் அடிக்கடி சண்ட போட்டுக்குறோமா? யெகோவாவுக்கு நிறைய நேரம் கொடுக்குற மாதிரி ஒரு வேலைய தேர்ந்தெடுக்க எனக்கு மனசு இருக்கா? அதுவும், அந்த வேலைய மத்தவங்க தாழ்வா பார்த்தாலும் பரவாலனு நினைச்சு அத தேர்ந்தெடுக்கறேனா?’ (1 தீ. 6:9-12) இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்ளும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். அதாவது, யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்ற வாக்குறுதியை அவர் கொடுத்திருக்கிறார். அதனால்தான், “பண ஆசையில்லாமல் வாழுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—எபி. 13:5, 6.
பொழுதுபோக்கு—ஜாக்கிரதை!
11. பொழுதுபோக்கைப் பொறுத்தவரை நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
11 வாழ்க்கையை நாம் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்றுதான் யெகோவா நினைக்கிறார். பொழுதுபோக்கு நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. “சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை” என்று பைபிளும் சொல்கிறது. (பிர. 2:24) ஆனால், ஜாக்கிரதை! ஏனென்றால், இன்றிருக்கும் நிறைய பொழுதுபோக்குகள் ஆபத்தானவை. ஒழுக்க விஷயத்தில் அவை மக்களைக் கறைபடுத்துகின்றன. பைபிள் கண்டனம் செய்கிற விஷயங்களை ஏற்றுக்கொள்ளவும், ஏன், அவற்றை நேசிக்கவும்கூட அவை தூண்டுகின்றன.
12. ஒன்று கொரிந்தியர் 10:21, 22 சொல்கிறபடி, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
12 யெகோவாவுக்கு முழு பக்தியைக் கொடுக்க நாம் ஆசைப்படுகிறோம். அதனால், “யெகோவாவின் மேஜையிலும்” “பேய்களின் மேஜையிலும்” நம்மால் சாப்பிட முடியாது. (1 கொரிந்தியர் 10:21, 22-ஐ வாசியுங்கள்.) நீங்கள் யாரோடு உட்கார்ந்து சந்தோஷமாக விருந்து சாப்பிடுவீர்கள்? நண்பர்களோடுதானே? அப்படியென்றால், வன்முறை, ஆவியுலகத்தொடர்பு, ஒழுக்கக்கேடு, அல்லது பாவ ஆசைகள் மற்றும் மனப்பான்மைகள் ஆகியவற்றைத் தூண்டுகிற பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தால், கடவுளுடைய எதிரிகள் தயாரித்த உணவைச் சாப்பிடுகிறோம் என்றுதானே அர்த்தம்! நாம் அப்படிச் செய்தால், அது நம்மையும் பாதிக்கும்; யெகோவாவோடு நமக்கு இருக்கிற நட்பையும் பாதிக்கும்.
13-14. (அ) பொழுதுபோக்கை அனுபவிப்பது ஒருவிதத்தில் உணவு சாப்பிடுவதுபோல் இருக்கிறது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) யாக்கோபு 1:14, 15 சொல்கிறபடி, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
13 ஒருவிதத்தில், பொழுதுபோக்கை அனுபவிப்பது உணவு சாப்பிடுவதுபோல் இருக்கிறது. எப்படி என்று கவனியுங்கள். சாப்பிடும்போது, எதைச் சாப்பிடலாம் என்று தேர்ந்தெடுப்பது நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது, வாய்க்குள் எதை போடுவது என்பது நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அந்த உணவை வாயில் போட்டு விழுங்கிய பிறகு, அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால், செரிமான வேலைகள் தானாகவே ஆரம்பித்துவிடும். அந்த உணவுப் பொருளிலிருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து பிரித்து எடுக்கப்படும். அதனால், சத்தான உணவைச் சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது; சத்தில்லாத உணவைச் சாப்பிட்டால் நம் உடலுக்குக் கேடு. ஒருவேளை, ஒரே நாளில் நமக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்கலாம்; ஆனால், நாட்கள் போகப் போக அதன் விளைவுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
14 அதேபோல், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது, நம் மனதுக்குள் எப்படிப்பட்ட விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் மனதுக்குள் போன பிறகு, அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால், அது மனதுக்குள் போய் தானாகவே செயல்பட ஆரம்பித்துவிடும். அதன் விளைவாக நம் யோசனைகளும் உணர்வுகளும் பாதிக்கப்படும். அதனால், நல்ல பொழுதுபோக்கு நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது; மோசமான பொழுதுபோக்கு கெடுதலை உண்டாக்குகிறது. (யாக்கோபு 1:14, 15-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, ஒரே நாளில் நமக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருக்கலாம். ஆனால், நாட்கள் போகப் போக அதன் பாதிப்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அதனால்தான் பைபிள் இப்படி எச்சரிக்கிறது: “ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான். பாவத்துக்காக விதைக்கிறவன் தன் பாவத்தால் அழிவை அறுவடை செய்வான்.” (கலா. 6:7, 8) யெகோவா வெறுக்கிற விஷயங்களைச் செய்யத் தூண்டுகிற பொழுதுபோக்கைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம்!—சங். 97:10.
15. யெகோவா நமக்கு எப்படிப்பட்ட பரிசைக் கொடுத்திருக்கிறார்?
15 நம்முடைய இன்டர்நெட் தொலைக்காட்சி நிலையமான JW பிராட்காஸ்டிங்கில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதென்றாலே யெகோவாவின் மக்களில் நிறைய பேருக்குச் சந்தோஷம்தான்! மெர்லின் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நல்ல விஷயங்கள பத்தி மட்டும் யோசிக்கிறதுக்கு JW பிராட்காஸ்டிங் எனக்கு உதவுது. அதுல இருக்கிற எல்லா விஷயங்களயும் பார்க்கலாம். ஏன்னா, அதுல வர்றது எல்லாமே நல்லதுதான். தனிமை வாட்டுறப்போ இல்லனா மனசு கஷ்டமா இருக்கிறப்போ, அதிலிருந்து உற்சாகமான ஒரு பேச்சை கேட்பேன். இல்லனா, காலை வழிபாடு நிகழ்ச்சிய பார்ப்பேன். அப்போ, யெகோவாகிட்டயும் அவரோட அமைப்புகிட்டயும் ரொம்ப நெருக்கமா இருக்கிற மாதிரி இருக்கும். JW பிராட்காஸ்டிங் வந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு.” யெகோவா கொடுத்திருக்கும் இந்த அருமையான பரிசை நீங்களும் பயன்படுத்துகிறீர்களா? மாதாமாதம் வருகிற நிகழ்ச்சி மட்டுமல்லாமல், நிறைய ஆடியோக்களும் வீடியோக்களும் உற்சாகம் தருகிற பாடல்களும் JW பிராட்காஸ்டிங்கில் இருக்கின்றன.
16-17. பொழுதுபோக்குக்காக செலவிடும் நேரத்தை ஏன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?
16 எப்படிப்பட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை பொழுதுபோக்குக்கு கொடுத்துவிடுவோம். பொழுதுபோக்குக்கு ரொம்ப நேரம் செலவிடாதபடி நமக்கு நாமே கடிவாளம் போடுவது நம்மில் சிலருக்குக் கஷ்டமாக இருக்கிறது. “ஒரு நாள் முழுசும் பிஸியா இருந்துட்டு, கடைசியில கொஞ்ச நேரம் டிவி பார்க்குறது நல்லாதான் இருக்கு. ஆனா கவனமா இல்லனா, டிவிக்கு முன்னாடி மணிக்கணக்கா உட்கார்ந்திடுவேன்” என்று 18 வயது அபிகாயில் சொல்கிறாள். சாம்யெல் என்ற இளம் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “இன்டர்நெட்ல இருக்கிற சின்ன சின்ன வீடியோவ மணிக்கணக்கா பார்ப்பேன். ஒண்ணே ஒண்ணு பார்க்கலாம்னுதான் ஆரம்பிப்பேன். ஆனா, எனக்கே தெரியாம மூணு-நாலு மணிநேரம் பறந்துடும்.”
17 பொழுதுபோக்குக்காகச் செலவு செய்யும் நேரத்தை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? முதலாவது, எவ்வளவு நேரம் அதற்காகச் செலவாகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். இதைக் கண்டுபிடிக்க, ஒரு வாரத்துக்கு முதலில் கணக்குப்போட்டுப் பார்க்கலாம், இல்லையா? டிவி பார்ப்பதற்கு... இன்டர்நெட்டை அலசுவதற்கு... மொபைல் ஃபோனில் கேம்ஸ் விளையாடுவதற்கு... ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை காலண்டரில் குறித்து வையுங்கள். ஏகப்பட்ட நேரம் பொழுதுபோக்கிலேயே கரைந்துவிடுகிறதா? அப்படியென்றால், உடனடியாக ஒரு அட்டவணை போடுங்கள். முக்கியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அடுத்ததாக, அட்டவணையை அப்படியே கடைப்பிடிக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். இப்படிச் செய்யும்போது, பைபிளைப் படிப்பதற்கும், குடும்ப வழிபாடு செய்வதற்கும், கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஊழியம் செய்வதற்கும், பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் நேரம் கிடைக்கும். முக்கியமானவற்றை முதலில் முடித்துவிட்டு பிறகு பொழுதுபோக்கை அனுபவித்தால் உங்கள் மனசாட்சி உங்களைக் குத்தாது.
யெகோவாவுக்கு மட்டுமே முழு பக்தியைக் காட்டுங்கள்
18-19. யெகோவாவுக்கு நாம் எப்படி முழு பக்தியைக் காட்டலாம்?
18 சாத்தானின் உலகத்துக்கு வரும் முடிவைப் பற்றியும் புதிய உலகத்தைப் பற்றியும் எழுதிய பிறகு, அப்போஸ்தலன் பேதுரு ஓர் ஆலோசனையைக் கொடுத்தார். “அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பதால், அவர் முன்னால் கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்” என்று எழுதினார். (2 பே. 3:14) இந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படியும்போதும், ஒழுக்க விஷயத்திலும் ஆன்மீக விஷயத்திலும் சுத்தமாக இருக்க கடினமாக முயற்சி செய்யும்போதும் யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்டுகிறோம் என்று அர்த்தம்.
19 யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக சாத்தான் நம் முன்னால் வலை விரித்துக்கொண்டே இருப்பான். இந்த உலகமும் நம்மை எளிதில் விட்டுவிடாது. (லூக். 4:13) ஆனால், என்ன பிரச்சினை வந்தாலும், நம் இதயத்தில் யெகோவாவுக்குக் கொடுத்திருக்கும் இடத்தை வேறு யாருக்கும் எதற்கும் கொடுக்க மாட்டோம்! யெகோவாவுக்கு மட்டும்தான் முழு பக்தியைக் காட்டுவோம். அதைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது!
பாட்டு 91 என் தகப்பன், என் தேவன், என் தோழன்!
a யெகோவாவுக்கு சேவை செய்வதை நாம் நெஞ்சார நேசிக்கிறோம். ஆனால், நாம் அவருக்கு முழு பக்தி காட்டுகிறோமா? நாம் எடுக்கும் முடிவுகள் இந்தக் கேள்விக்கான பதிலைத் தந்துவிடும். நாம் யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்டுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, இரண்டு விஷயங்களைப் பற்றி இப்போது அலசி ஆராயலாம்.
b படங்களின் விளக்கம்: அசுத்தமான சமையலறையில் தயாரிக்கப்பட்ட நச்சுக் கலந்த உணவை நாம் சாப்பிட மாட்டோம். அப்படியிருக்கும்போது, நச்சுக் கலந்த பொழுதுபோக்கை, அதாவது வன்முறை... ஆவியுலகத் தொடர்பு... ஒழுக்கக்கேடு... ஆகியவை நிறைந்த பொழுதுபோக்கை, நாம் அனுபவிக்கலாமா?