படிப்புக் கட்டுரை 49
உயிர்த்தெழுதல்—நிச்சயம் நடக்கும்!
“நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.”—அப். 24: 15.
பாட்டு 111 அவர் அழைப்பார்
இந்தக் கட்டுரையில்...a
1-2. கடவுளுடைய ஊழியர்கள் என்ன நம்பினார்கள்?
நம்பிக்கை உயிர்நாடி போன்றது! தங்களுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் என்றும், குழந்தை குட்டிகளை நல்லபடியாக வளர்க்க முடியும் என்றும் சிலர் நம்புகிறார்கள். வேறுசிலர், தங்களுடைய நோய் சரியாகும் என்று நம்புகிறார்கள். இப்படி வாழ வேண்டுமென்று நாமும் ஆசைப்படலாம். ஆனால், நம்முடைய நம்பிக்கை இதோடு நின்றுவிடுவதில்லை. என்றென்றும் வாழ முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அதோடு, நமக்கு நெருக்கமானவர்கள் யாரெல்லாம் இறந்துபோனார்களோ அவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது.
2 இதே நம்பிக்கை பவுலுக்கும் இருந்தது. ‘நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று . . . கடவுளிடம் . . . நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னார். (அப். 24:15) அப்போஸ்தலன் பவுல்தான் முதன்முதலில் உயிர்த்தெழுதலைப் பற்றி சொன்னாரா? இல்லை! ரொம்பக் காலத்துக்கு முன்பே யோபுவும் அதைப் பற்றி சொல்லியிருக்கிறார். கடவுள் தன்னை மறக்க மாட்டார் என்றும், மறுபடியும் தன்னை உயிரோடு எழுப்புவார் என்றும் யோபு உறுதியாக நம்பினார்.—யோபு 14:7-10, 12-15.
3. ஒன்று கொரிந்தியர் 15-ம் அதிகாரம் நமக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?
3 உயிர்த்தெழுதல் என்பது, கிறிஸ்தவ போதனைகளின் “அஸ்திவாரமாக,” அதாவது ‘அடிப்படை போதனையாக’ இருக்கிறது. (எபி. 6:1, 2) ஒன்று கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொல்லி இருக்கிறார். அவர் எழுதியது அன்றிருந்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. இன்று நம்முடைய விசுவாசத்தையும் அது பலப்படுத்துகிறது. எவ்வளவு நாட்களாக உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு இருந்தாலும் அந்த நம்பிக்கையை இன்னும் பலப்படுத்துகிறது.
4. உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்புகிறோம்?
4 நமக்கு நெருக்கமானவர்களை யெகோவா உயிரோடு எழுப்புவார் என்று நம்புவதற்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆதாரமாக இருக்கிறது. கொரிந்தியர்களுக்கு பவுல் சொன்ன ‘நல்ல செய்தியில்’ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் ஒன்று! (1 கொ. 15:1, 2) சொல்லப்போனால், இயேசுவின் உயிர்த்தெழுதலில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அவர்களுடைய விசுவாசமே வீண் என்று பவுல் சொன்னார். (1 கொ. 15:17) உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கான அஸ்திவாரமே இயேசுவின் உயிர்த்தெழுதல்தான்!
5-6. ஒன்று கொரிந்தியர் 15:3, 4 நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?
5 உயிர்த்தெழுதலைப் பற்றி பவுல் பேச ஆரம்பித்தபோது, இந்த மூன்று விஷயங்களைச் சொன்னார்: (1) “கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.” (2) அவர் “அடக்கம் செய்யப்பட்டார்.” (3) “வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார்.”—1 கொரிந்தியர் 15:3, 4-ஐ வாசியுங்கள்.
6 மேசியா ‘இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்படுவார்’ என்றும், ‘பொல்லாதவர்கள் நடுவில் அவருக்குக் கல்லறை கொடுக்கப்படும்’ என்றும் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். மேசியா “பலருடைய பாவங்களைச் சுமப்பார்” என்றும் அவர் சொன்னார். தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்ததன் மூலம் இயேசு இதை நிறைவேற்றினார். (ஏசா. 53:8, 9, 12; மத். 20:28; ரோ. 5:8) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும் என்றும் நமக்கு நெருக்கமானவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியும் என்றும் நாம் நம்புவதற்கு, இயேசு கிறிஸ்து இறந்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததுதான் அடிப்படையாக இருக்கிறது.
கண்கண்ட சாட்சிகள்
7-8. இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
7 நம்முடைய உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு அடிப்படையே இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்தான்! அதனால், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. அப்படியென்றால், அவரை யெகோவா உயிரோடு எழுப்பினார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
8 இயேசு உயிரோடு எழுப்பப்பட்டதற்கு கண்கண்ட சாட்சிகள் நிறைய பேர் இருந்தார்கள். (1 கொ. 15:5-7) அவர்களைப் பற்றி பவுல் சொன்னபோது, முதலில் பேதுருவை (கேபாவை) பற்றி குறிப்பிட்டார். உயிர்த்தெழுந்த இயேசுவை பேதுரு பார்த்த விஷயத்தை மற்ற சீஷர்களும் உறுதிப்படுத்தினார்கள். (லூக். 24:33, 34) அதோடு, “பன்னிரண்டு பேருக்கும்,” அதாவது அப்போஸ்தலர்களுக்கும், இயேசு தோன்றினார். பிறகு, “ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்.” சீஷர்கள் எல்லாரும் கலிலேயாவில் ஒன்றுகூடி வந்த சந்தோஷமான சமயத்தில் இது நடந்திருக்கலாம். அப்படி அவர்கள் ஒன்றுகூடி வந்ததைப் பற்றி மத்தேயு 28:16-20 சொல்கிறது. பிறகு, “யாக்கோபுக்கும் . . . தோன்றினார்.” இவர் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரராக இருந்திருக்க வேண்டும். இயேசுதான் மேசியா என்பதில் ஆரம்பத்தில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. (யோவா. 7:5) ஆனால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பார்த்த பிறகு அவருக்கு நம்பிக்கை வந்தது. கிட்டத்தட்ட கி.பி. 55-ல் கொரிந்தியர்களுக்கு பவுல் கடிதம் எழுதியபோது, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை கண்கூடாக பார்த்த நிறைய பேர் உயிரோடு இருந்தார்கள். ஒருவேளை சந்தேகவாதிகள் யாராவது இருந்திருந்தால், அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.
9. இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதற்கான என்ன கூடுதலான அத்தாட்சி அப்போஸ்தலர் 9:3-5-ல் இருக்கிறது?
9 பிற்பாடு, பவுலுக்கும் இயேசு தோன்றினார். (1 கொ. 15:8) தமஸ்குவுக்கு பவுல் (சவுல்) போய்க்கொண்டிருந்தபோது, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவின் குரலைக் கேட்டார். இயேசு பரலோகத்தில் இருக்கிற அந்தக் காட்சியைப் பார்த்தார். (அப்போஸ்தலர் 9:3-5-ஐ வாசியுங்கள்.) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டது கட்டுக்கதை அல்ல என்பதற்கு, அவர் பார்த்த காட்சியும் கூடுதலான ஓர் அத்தாட்சியாக இருந்தது.—அப். 26:12-15.
10. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நம்பியதால் பவுல் என்ன செய்தார்?
10 ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களை பவுல் கொடுமையாகத் துன்புறுத்திக்கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர், இயேசு உயிரோடு எழுப்பப்பட்டதைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னபோது நிச்சயம் அவர்கள் யோசித்துப்பார்த்திருப்பார்கள்! இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதில் பவுலுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அந்த நம்பிக்கையை மற்றவர்களுடைய மனதிலும் விதைப்பதற்காக அவர் கடினமாக உழைத்தார். அதற்காக அவர் நிறைய அடிகள் வாங்கினார், சிறைத் தண்டனை அனுபவித்தார், கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டார். (1 கொ. 15:9-11; 2 கொ. 11:23-27) தன்னுடைய உயிரையே பணயம் வைப்பதற்கு அவர் தயாராக இருந்தார். அந்தளவுக்கு அந்த விஷயத்தை அவர் உறுதியாக நம்பினார்! இப்படி, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதற்கு ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் கண்கண்ட சாட்சிகளாக இருந்தார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நாமும் உறுதியாக நம்பலாம், இல்லையா? அதோடு, எதிர்காலத்தில் நிச்சயம் உயிர்த்தெழுதல் நடக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, இல்லையா?
தவறான நம்பிக்கைகளை பவுல் தவிடுபொடியாக்கினார்
11. கொரிந்திய கிறிஸ்தவர்கள் சிலருக்கு உயிர்த்தெழுதலைப் பற்றிய தவறான கருத்துகள் இருந்ததற்கு என்ன காரணம்?
11 கிரேக்க நகரமான கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலருக்கு உயிர்த்தெழுதலைப் பற்றி தவறான எண்ணம் இருந்தது. “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள்” என்றுகூட சிலர் சொன்னார்கள். (1 கொ. 15:12) ஏன்? ஏதன்ஸ் நகரத்தில் இருந்த தத்துவஞானிகள், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட விஷயத்தை கேலி கிண்டல் செய்தார்கள். அதனால், உயிர்த்தெழுதல் நடக்காது என்ற எண்ணம் கிறிஸ்தவர்களுக்கும் வந்திருக்கலாம். (அப். 17:18, 31, 32) வேறுசிலர், உயிர்த்தெழுதல் என்று எதுவும் இல்லை என சொல்லியிருக்கலாம். உயிர்த்தெழுதலுக்கு அவர்கள் இன்னொரு விளக்கம் கொடுத்திருக்கலாம். அதாவது, மனிதர்கள் எல்லாரும் பாவிகளாக இருப்பதால் அவர்கள் “இறந்தவர்களை” போல் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களாக ஆனதற்குப் பிறகு “உயிர்த்தெழுப்பப்பட்டவர்களை” போல இருப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் சரி, உயிர்த்தெழுதலை அவர்கள் நம்பாமல் இருந்திருந்தால் அவர்களுடைய விசுவாசம் வீணாகத்தான் போயிருக்கும். இயேசுவை கடவுள் உயிரோடு எழுப்பாமல் இருந்திருந்தால், இயேசுவால் மீட்புவிலையும் கொடுத்திருக்க முடியாது, நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்காது. அதனால், உயிர்த்தெழுதலை நம்பாதவர்களுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லை.—1 கொ. 15:13-19; எபி. 9:12, 14.
12. ஒன்று பேதுரு 3:18, 22-ன்படி, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய காலத்துக்கு முன்பு நடந்த உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?
12 ‘கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டதற்கு’ பவுல் கண்கண்ட சாட்சியாக இருந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதல், இயேசுவின் காலத்துக்கு முன்பு நடந்த உயிர்த்தெழுதலைவிட சிறந்தது! ஏனென்றால், இயேசுவுக்கு முன்பு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் மறுபடியும் இறந்துபோனார்கள். அதோடு, “இறந்தவர்களில் முதல் நபராக” கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதற்கு என்ன அர்த்தம்? இயேசுதான் ஆவி உடலில் உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் நபர்! பூமியிலிருந்து பரலோகத்துக்குப் போன முதல் நபர்!—1 கொ. 15:20; அப். 26:23; 1 பேதுரு 3:18, 22-ஐ வாசியுங்கள்.
“உயிரோடு எழுப்பப்படுவார்கள்”
13. ஆதாமுக்கும் இயேசுவுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக பவுல் சொன்னார்?
13 ஒரே மனிதனுடைய இறப்பினால் லட்சக்கணக்கானவர்களுக்கு எப்படி உயிர் கிடைக்கும்? அதைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். ஆதாமால் நமக்கு என்ன நடந்தது என்றும் கிறிஸ்துவால் நமக்கு என்ன நடக்கப்போகிறது என்றும் அவர் சொல்கிறார். ஆதாமைப் பற்றி சொன்னபோது “ஒரே மனிதனால் மரணம் வந்தது” என்றார். ஆதாம் செய்த பாவத்தால் அவன் மட்டும் சாகவில்லை. அவன் சந்ததியில் வந்த நாம் எல்லாரும் சாகிறோம். அவன் செய்த தவறால் இன்றுவரை நாம் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறோம். ஆனால், கிறிஸ்துவைப் பற்றி சொன்னபோது ‘ஒரே மனிதனால் உயிர்த்தெழுதல் வருகிறது’ என்றார் பவுல். அதோடு, “ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று சொன்னார். (1 கொ. 15:21, 22) இப்படி, இயேசுவை உயிரோடு எழுப்பியதன் மூலம் யெகோவா நமக்குப் பிரகாசமான எதிர்காலத்தைத் தந்திருக்கிறார்.
14. ஆதாம் உயிர்த்தெழுப்பப்படுவானா? விளக்குங்கள்.
14 ‘ஆதாமினால் எல்லாரும் சாகிறார்கள்’ என்று எழுதியபோது, அவனுடைய சந்ததியில் வந்த எல்லாரையும் மனதில் வைத்துதான் பவுல் எழுதினார். பாவத்தையும் தவறு செய்கிற இயல்பையும் ஆதாமிடமிருந்து அவர்கள் சொத்தாகப் பெற்றுக்கொண்டதால் எல்லாரும் சாகிறார்கள். (ரோ. 5:12) ‘உயிரோடு எழுப்பப்படுபவர்களின்’ பட்டியலில் நிச்சயம் ஆதாம் இல்லை. கிறிஸ்துவின் மீட்புவிலையிலிருந்து அவனால் நன்மையடைய முடியாது. ஏனென்றால், பரிபூரண மனிதனாக இருந்த அவன், வேண்டுமென்றே கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்தான். அவனுக்கு நடந்த அதே கதிதான் ‘வெள்ளாடுகளாக’ “மனிதகுமாரன்” யாரை நியாயந்தீர்க்கிறாரோ அவர்களுக்கும் நடக்கும். அதாவது, அவர்கள் “நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.”—மத். 25:31-33, 46; எபி. 5:9.
15. “எல்லாரும்” “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று சொன்னபோது பவுல் யாரை குறிப்பிட்டார்?
15 “கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பவுல் சொன்னதைக் கவனியுங்கள். (1 கொ. 15:22) கொரிந்துவிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார். அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட இருந்தார்கள். அந்த கிறிஸ்தவர்கள் “இயேசுவின் சீஷர்களாக பரிசுத்தமாக்கப்பட்டு . . . பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டு” இருந்தார்கள். அவர்கள் ‘கிறிஸ்துவின் சீஷர்களாயிருந்து இறந்தவர்கள்’ என்று பவுல் சொன்னார். (1 கொ. 1:3; 15:18; 2 கொ. 5:17) அவர் எழுதிய இன்னொரு கடிதத்தில் ‘[இயேசுவை] போல இறந்து அவரோடு ஒன்றுபட்டவர்கள், அவரைப்போல உயிருடன் எழுந்து அவரோடு ஒன்றுபடுவார்கள்’ என்று சொன்னார். (ரோ. 6:3-5) இயேசு ஆவி உடலில் உயிரோடு எழுப்பப்பட்டு பரலோகத்துக்குப் போனார். அதேபோல், கிறிஸ்துவின் சீஷர்கள், அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போவார்கள்.
16. இயேசுவை ‘முதல் நபர்’ என்று பவுல் ஏன் சொன்னார்?
16 “இறந்தவர்களில் முதல் நபராக கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று பவுல் எழுதினார். லாசருவும் வேறு சிலரும் இந்தப் பூமியில் உயிரோடு எழுப்பப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆவி உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டு, அழிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொண்ட முதல் நபர் இயேசுதான். இயேசுவை ‘முதல் நபர்’ என்று சொன்னதன் மூலம் வேறு சிலரும் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை பவுல் குறிப்பிட்டார். அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற சீஷர்களும் சரியான சமயத்தில் இயேசுவைப் போலவே பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
17. அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட வேறுசில கிறிஸ்தவர்களும் எப்போது பரலோகப் பரிசைப் பெற்றுக்கொள்வார்கள்?
17 கொரிந்தியர்களுக்கு பவுல் கடிதம் எழுதிய சமயத்தில், அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட வேறு சீஷர்களும் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படவில்லை. அவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; முதல் நபராக உயிரோடு எழுப்பப்பட்டவர் கிறிஸ்து; பின்பு, கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்.” (1 கொ. 15:23; 1 தெ. 4:15, 16) அந்த “பிரசன்னத்தின்” காலத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்துவருகிறோம். அப்போஸ்தலர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட வேறுசில கிறிஸ்தவர்களும் பரலோகப் பரிசைப் பெற்றுக்கொள்வதற்கும் ‘[இயேசுவை] போல உயிருடன் எழுந்து அவரோடு ஒன்றுபடுவதற்கும்’ இந்தப் பிரசன்னத்தின் காலம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
நம்பிக்கை நிறைவேறும்!
18. (அ) பரலோக உயிர்த்தெழுதலைத் தவிர இன்னொரு உயிர்த்தெழுதலும் நடக்கும் என்று எப்படிச் சொல்கிறோம்? (ஆ) 1 கொரிந்தியர் 15:24-26-ன்படி, பரலோகத்தில் என்ன நடக்கும்?
18 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் வாழ்வார்கள் என்று இதுவரை பார்த்தோம். அப்படியென்றால், மற்றவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! பவுலும் பரலோகத்துக்குப் போகிற மற்றவர்களும் “முந்தின உயிர்த்தெழுதலை” அடைவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 3:11) அப்படியென்றால், இன்னொரு விதமான உயிர்த்தெழுதலும் இருக்கிறது என்று தெரிகிறது இல்லையா? இந்த உயிர்த்தெழுதல் தனக்கும் கிடைக்கும் என்று யோபு நம்பினார். (யோபு 14:15) எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் இயேசு ஒழிக்கும்போது, “[அவருக்கு] சொந்தமானவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது” அவரோடு பரலோகத்தில் இருப்பார்கள். ‘கடைசி எதிரியான மரணத்தையும்’ அவர் ஒழித்துவிடுவார். பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுக்கு சாவு என்பதே கிடையாது.—1 கொரிந்தியர் 15:24-26-ஐ வாசியுங்கள்.
19. பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் எதை எதிர்பார்க்கலாம்?
19 அப்போஸ்தலன் பவுல் சொன்ன விஷயம் நடக்கும் என்று பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் எதிர்பார்க்கலாம். ‘நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று . . . நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னார். (அப். 24:15) அநீதிமான்கள் நிச்சயம் பரலோகத்துக்குப் போக முடியாது. அப்படியென்றால், எதிர்காலத்தில் பூமியில் நடக்கும் உயிர்த்தெழுதலைப் பற்றிதான் இந்த வசனம் சொல்கிறது.
20. உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுக்கு எப்படிப் பலமாகியிருக்கிறது?
20 கடவுளுக்கு உண்மையோடு இருப்பவர்கள் “உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தப் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுபவர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கை வாழ்கிற வாய்ப்பு இருக்கிறது. உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது இறந்துபோனால் இந்த நம்பிக்கை உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். கிறிஸ்துவும் 1,44,000 பேரும் “1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி” செய்யும்போது, உங்களுடைய பாசத்துக்குரியவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (வெளி. 20:6) ஒருவேளை ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டால், கடவுள் மறுபடியும் உங்களை உயிரோடு கொண்டுவருவார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். “அந்த நம்பிக்கை ஏமாற்றம் தராது.” (ரோ. 5:5) அது உங்களைத் தாங்கிப்பிடிக்கும். கடவுளுடைய சேவையை சந்தோஷமாக செய்ய உதவும். 1 கொரிந்தியர் 15-வது அதிகாரத்திலிருந்து இன்னும் சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாட்டு 12 முடிவில்லா வாழ்வு—தேவன் வாக்கு
a 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரம் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்கிறது. உயிர்த்தெழுதலைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதை நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? இந்தக் கேள்விகளுக்கும் உயிர்த்தெழுதல் சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரை பதில் சொல்லும்.
b படவிளக்கம்: இயேசுதான் முதன்முதலில் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டார். (அப். 1:9) தோமா, யாக்கோபு, லீதியாள், யோவான், மரியாள், பவுல் போன்றவர்கள் அவருக்குப் பிறகு பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட இருந்தார்கள்.
c படவிளக்கம்: ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் ரொம்ப வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்துகொண்டிருந்தார்கள். இப்போது, அவருடைய மனைவி இறந்துவிட்டார். அவர் மறுபடியும் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையோடு, அந்தச் சகோதரர் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறார்.