எபிரெயருக்குக் கடிதம்
9 முந்தின ஒப்பந்தத்தின்படி, பரிசுத்த சேவை சம்பந்தமாகவும் பூமியிலிருக்கிற பரிசுத்த அறை சம்பந்தமாகவும் சட்டங்கள் இருந்தன.+ 2 எப்படியென்றால், ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; அதனுடைய முதல் அறையில் குத்துவிளக்கும்+ மேஜையும் படையல் ரொட்டிகளும்+ இருந்தன; அது பரிசுத்த அறை+ என்று அழைக்கப்பட்டது. 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது. 4 அங்கே தங்கத் தூபக்கரண்டியும்,+ முழுவதும் தங்கத் தகடு அடிக்கப்பட்ட+ ஒப்பந்தப் பெட்டியும்+ இருந்தன. அந்தப் பெட்டிக்குள் மன்னா+ வைக்கப்பட்ட தங்க ஜாடியும், ஆரோனின் துளிர்விட்ட கோலும்,+ ஒப்பந்தம் எழுதப்பட்ட கற்பலகைகளும்+ இருந்தன. 5 அந்தப் பெட்டியின் மேலிருந்த பிராயச்சித்த மூடிமீது*+ மகிமையுள்ள கேருபீன்களின் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நிழல் அந்த மூடிமேல் விழுந்தது; ஆனால், இவற்றைப் பற்றி விவரமாகப் பேச இது நேரம் இல்லை.
6 இவையெல்லாம் இப்படி அமைக்கப்பட்ட பிறகு, குருமார்கள் பரிசுத்த சேவைகளைச் செய்வதற்காகக் கூடாரத்தின் முதல் அறைக்குள் வழக்கமாகப் போவார்கள்.+ 7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார். 8 அதனால், கடவுளுடைய சக்தி தெளிவுபடுத்தியிருப்பது இதுதான்: முதலாவது கூடாரம் இருந்தவரை மகா பரிசுத்த அறைக்குள் போகிற வழி திறக்கப்படவில்லை.+ 9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+ 10 அவை வெறுமனே உணவுகளோடும் பானங்களோடும் பலவிதமான தூய்மைச் சடங்குகளோடும்தான்*+ சம்பந்தப்பட்டிருக்கின்றன; உடல் சம்பந்தப்பட்ட சட்டங்களாகத்தான் இருக்கின்றன;+ எல்லாவற்றையும் சரிப்படுத்துவதற்கான காலம் வரும்வரை மட்டுமே அவை நீடித்திருக்கும்.
11 ஆனாலும், நிறைய நன்மைகளைச் செய்திருக்கிற தலைமைக் குருவான கிறிஸ்து, கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள் போயிருக்கிறார். 12 வெள்ளாடுகள், இளம் காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த இரத்தத்தை+ எடுத்துக்கொண்டு எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக மகா பரிசுத்த அறைக்குள் போய், நமக்காக நிரந்தர விடுதலை* வாங்கித் தந்திருக்கிறார்.+ 13 வெள்ளாடுகளின் இரத்தமும் காளைகளின் இரத்தமும்+ தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்படுகிற இளம் பசுவின் சாம்பலுமே அவர்களுடைய உடலைத் தூய்மையாக்குகிறது+ என்றால், 14 கிறிஸ்துவின் இரத்தம்+ நம்முடைய மனசாட்சியை இன்னும் எந்தளவு தூய்மையாக்கும்! செத்த செயல்களைவிட்டு மனம் திருந்தி உயிருள்ள கடவுளுக்கு நாம் பரிசுத்த சேவை செய்வதற்காக+ அதை எந்தளவு தூய்மையாக்கும்!+ கடவுளுடைய நிரந்தரச் சக்தியின் மூலம் கிறிஸ்து தன்னையே குறையில்லாத பலியாக அவருக்கு அர்ப்பணித்தார்.
15 அதனால்தான், கிறிஸ்து ஒரு புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக+ ஆகியிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் வாக்குறுதி கொடுக்கப்பட்ட முடிவில்லாத வாழ்வை* பெறுவதற்காக+ அப்படி மத்தியஸ்தராக ஆகியிருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம்தான் இது சாத்தியமாகி இருக்கிறது; அவருடைய மரணத்தின் மூலம்தான் முந்தின ஒப்பந்தத்தின்கீழ் செய்த குற்றங்களிலிருந்து ஒரு மீட்புவிலையால்+ அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 16 ஓர் ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்றால், அந்த ஒப்பந்தத்தைச் செய்த மனிதர்* சாக வேண்டியது அவசியம். 17 ஏனென்றால், சாவு ஏற்பட்ட பின்புதான் ஓர் ஒப்பந்தம் செல்லுபடியாகும்; அதைச் செய்த மனிதர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது. 18 அதனால்தான், முந்தின ஒப்பந்தமும் இரத்தமில்லாமல் அமலுக்கு வரவில்லை. 19 திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் மோசே எல்லா மக்களுக்கும் சொன்ன பின்பு, இளம் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீரில் கலந்து, கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டப்பட்ட மருவுக்கொத்தால் புத்தகத்தின்* மீதும் மக்கள் மீதும் அதைத் தெளித்து, 20 “நீங்கள் கடைப்பிடிக்கும்படி கடவுள் உங்களுக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தம் இதுதான்” என்று சொன்னார்.+ 21 அதைப் போலவே, கூடாரத்தின் மீதும் பரிசுத்த வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா பாத்திரங்களின் மீதும் அந்த இரத்தத்தைத் தெளித்தார்.+ 22 திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தால் சுத்தமாக்கப்படுகின்றன;+ இரத்தம் சிந்தப்படவில்லை என்றால், மன்னிப்பு இல்லை.+
23 அதனால், பரலோகக் காரியங்களின் பூமிக்குரிய மாதிரிப் படிவங்கள்+ இப்படி மிருக பலிகளால் சுத்தமாக்கப்படுவது அவசியமாக இருந்தது;+ பரலோகக் காரியங்களுக்கோ அவற்றைவிட மேலான பலிகள் அவசியமாக இருக்கின்றன. 24 அதனால்தான் கிறிஸ்து, நிஜத்தின் சாயலாகவும்+ கையால் செய்யப்பட்டதாகவும் இருக்கிற மகா பரிசுத்த அறைக்குள் போகாமல்,+ கடவுளுக்கு* முன்னால் இப்போது நமக்காகத் தோன்றும்படி+ பரலோகத்துக்குள் போயிருக்கிறார்.+ 25 தலைமைக் குரு வருஷா வருஷம் மகா பரிசுத்த அறைக்குள் போய் மிருக இரத்தத்தைக் கொடுத்தது போல,+ கிறிஸ்து தன்னையே திரும்பத் திரும்பப் பலி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+ 27 மனிதர்களுக்கு ஒரேவொரு தடவை மரணம் வருகிறது, பின்பு நியாயத்தீர்ப்பு வருகிறது. 28 கிறிஸ்துவும் பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுக்கப்பட்டார்.+ ஆனாலும், அவர் இரண்டாவது தடவை தோன்றும்போது, பாவத்தைப் போக்குவதற்காக இல்லாமல், தன்னை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களை மீட்பதற்காகத் தோன்றுவார்.+