“விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”
“விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் . . . பலமடையுங்கள்.”—1 கொ. 16:13.
1. (அ) கலிலேயாக் கடலில் புயல்காற்று வீசியபோது பேதுருவுக்கு என்ன ஆனது? (ஆரம்பப் படம்) (ஆ) பேதுரு ஏன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார்?
ஒருநாள் ராத்திரி, கலிலேயாக் கடலில் பேதுருவும் சில சீடர்களும் படகில் போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது, பலமான புயல்காற்று வீசியது. அந்த சமயத்தில் இயேசு கடல்மீது நடந்துவருவதை அவர்கள் பார்த்தார்கள். அப்போது பேதுரு இயேசுவிடம், “நானும் இந்தத் தண்ணீர்மீது நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று கேட்டார். உடனே, இயேசு அவரை “வா” என்று சொன்னார். பேதுருவும் தண்ணீர்மீது நடந்து இயேசுவை நோக்கி சென்றார். திடீரென்று, பேதுரு தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். ஏனென்றால், பெரிய அலைகளையும் புயல்காற்றையும் பார்த்து அவர் பயந்துபோனார். “எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று பேதுரு அலறினார். உடனே இயேசு கையை நீட்டி பேதுருவைப் பிடித்துக்கொண்டு, “விசுவாசமில்லாதவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்று சொன்னார்.—மத். 14:24-32.
2. நாம் எதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?
2 பேதுருவுடைய உதாரணத்திலிருந்து விசுவாசத்தைப் பற்றி 3 விஷயங்களைப் பார்க்கப் போகிறோம். (1) யெகோவா உதவி செய்வார் என்று பேதுரு எப்படி ஆரம்பத்தில் விசுவாசம் வைத்தார்? (2) பேதுருவுக்கு ஏன் விசுவாசம் குறைய ஆரம்பித்தது? (3) மறுபடியும் விசுவாசம் வைக்க பேதுருவுக்கு எது உதவியது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டால் நம்மால் ‘விசுவாசத்தில் உறுதியாக நிற்க’ முடியும்.—1 கொ. 16:13.
கடவுள்மீது விசுவாசம் வையுங்கள்
3. பேதுரு ஏன் படகிலிருந்து இறங்கி தண்ணீர்மீது நடந்தார், அதேபோல் நாமும் என்ன செய்திருக்கிறோம்?
3 பேதுருவுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. அது நமக்கு எப்படித் தெரியும்? இயேசு பேதுருவை அழைத்தபோது, அவர் உடனே படகிலிருந்து இறங்கி தண்ணீர்மீது நடந்தார். தண்ணீர்மீது நடக்க கடவுளுடைய சக்தி இயேசுவுக்கு உதவி செய்தது போல அவருக்கும் உதவி செய்யும் என்று பேதுரு நம்பினார். இயேசு அவரைப் பின்பற்றி வரும்படி நம்மையும் அழைத்திருக்கிறார். யெகோவா மீதும் இயேசு மீதும் விசுவாசம் இருந்ததால்தான் நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஞானஸ்நானம் எடுத்தோம். அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்றும் நம்பினோம்.—யோவா. 14:1; 1 பேதுரு 2:21-ஐ வாசியுங்கள்.
4, 5. விசுவாசம் எப்படி விலைமதிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது?
4 விசுவாசம் விலைமதிக்க முடியாத ஒன்று! மனிதர்களால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை பேதுரு செய்தார்; அவர் தண்ணீர்மீது நடந்தார். விசுவாசம் இருந்தால், மனிதர்களால் செய்ய முடியாத விஷயத்தை நாமும் செய்வோம். (மத். 21:21, 22) உதாரணத்துக்கு, நம்மை நன்றாகத் தெரிந்தவர்களால்கூட நம்மை யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் செய்திருக்கிறோம்; நம்முடைய குணங்களையும் நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றியிருக்கிறோம். யெகோவா நமக்கு உதவி செய்ததாலும் அவர்மீது நமக்கு அன்பு இருந்ததாலும்தான் நாம் இந்த மாற்றங்களை எல்லாம் செய்திருக்கிறோம். (கொலோசெயர் 3:5-10-ஐ வாசியுங்கள்.) விசுவாசம் இருந்ததால்தான் யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தோம், அவருடைய நண்பர்களாகவும் ஆனோம். யெகோவாவுடைய உதவி இல்லாமல் இது எதையுமே நம்மால் செய்திருக்க முடியாது.—எபே. 2:8.
5 நமக்கு விசுவாசம் இருந்தால் நாம் பலமுள்ளவர்களாக இருப்போம். உதாரணத்துக்கு, சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்து நிற்போம். (எபே. 6:16) பிரச்சினைகள் வரும்போது நாம் அதிகமாக கவலைப்பட மாட்டோம். நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவருடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்தால் நம் தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:30-34) அவர்மீது நாம் விசுவாசம் வைத்திருப்பதால், முடிவில்லா வாழ்க்கையைக் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—யோவா. 3:16.
விசுவாசம் குறைய காரணங்கள்
6, 7. (அ) புயல்காற்றையும் அலைகளையும் எதற்கு ஒப்பிடலாம்? (ஆ) நம்முடைய விசுவாசமும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?
6 கலிலேயாக் கடல்மீது பேதுரு நடந்தபோது, அவர் அலைகளையும் புயல்காற்றையும் பார்த்துப் பயந்துபோனார். நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களும் பிரச்சினைகளும் அந்த அலைகளையும் புயல்காற்றையும் போல இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் யெகோவாவுடைய உதவியால் இதையெல்லாம் சமாளிக்க முடியும்; விசுவாசத்தில் உறுதியாக நிற்க முடியும். பேதுருவுக்கு என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். புயல்காற்று அடித்ததாலோ பெரிய அலைகள் வந்ததாலோ பேதுரு தண்ணீரில் மூழ்கவில்லை. அதைப் பார்த்து பயந்துபோனதால்தான் அவர் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார் என்று பைபிள் சொல்கிறது. (மத். 14:30) பேதுரு தண்ணீரில் நடக்கும்போது, இயேசுவைப் பார்ப்பதற்குப் பதிலாகப் புயல்காற்று எவ்வளவு பலமாக அடிக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார். அதனால்தான், அவருடைய விசுவாசம் குறைய ஆரம்பித்தது. நாமும் நம்முடைய பிரச்சினைகளையே யோசித்துக்கொண்டு இருந்தால் யெகோவா நமக்கு உதவி செய்வாரா மாட்டாரா என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவோம்.
7 நம்முடைய விசுவாசம் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விசுவாசம் குறைய ஆரம்பிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அது ‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவம்’ என்று சொல்கிறது. (எபி. 12:1) பேதுருவைப் போல, நாமும் பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் நம்முடைய விசுவாசமும் குறைய ஆரம்பித்துவிடும். நம்முடைய விசுவாசம் குறைய ஆரம்பித்துவிட்டதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
8. கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற நம் நம்பிக்கை எப்படிக் குறைய ஆரம்பிக்கலாம்?
8 கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்று நான் ஆரம்பத்தில் நம்பியது போலவே இப்போதும் நம்புகிறேனா? ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். சாத்தானுடைய உலகத்தை அழிக்கப்போவதாக கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற வித்தியாசமான பொழுதுபோக்குகளைப் பார்த்து நம்முடைய கவனம் சிதறலாம், கடவுளுடைய வாக்குறுதிமீது நமக்கு இருக்கும் விசுவாசம் குறைந்துவிடலாம். அதனால், முடிவு சீக்கிரம் வராது என்று நாம் நினைக்க ஆரம்பிக்கலாம். (ஆப. 2:3) இன்னொரு உதாரணத்தையும் கவனியுங்கள். யெகோவா நமக்கு மீட்பு பலியைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நம்முடைய பாவங்களை மன்னிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், முன்பு செய்த பாவங்களைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருந்தால் யெகோவா நம்மை மன்னித்துவிட்டாரா இல்லையா என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவோம். (அப். 3:19) கடைசியில், யெகோவாவுக்கு சேவை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை இழந்துவிடுவோம்; பிரசங்கிப்பதையும் நிறுத்திவிடுவோம்.
9. சொந்த விஷயங்களிலேயே நாம் கவனம் செலுத்த ஆரம்பித்தால் என்ன ஆகலாம்?
9 இப்போதும் யெகோவாவுக்கு என்னுடைய மிகச் சிறந்ததைக் கொடுக்கிறேனா? யெகோவாவுக்காக நாம் கடினமாக உழைக்கும்போது, நமக்கு இருக்கிற எதிர்கால நம்பிக்கை நிறைவேறும் என்று உறுதியாக இருப்போம். ஒருவேளை, நம்முடைய சொந்த விஷயங்கள்மீது நாம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகலாம்? உதாரணத்துக்கு, கைநிறைய சம்பளம் கிடைக்கிற ஒரு வேலையில் சேர்ந்தால் நம்மால் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியாமல் போய்விடலாம். அதனால் நம்முடைய விசுவாசம் குறைய ஆரம்பித்துவிடலாம், நாம் ‘மந்தமானவர்களாக’ ஆகிவிடலாம். யெகோவாவுக்கு நம்மால் அதிகம் செய்ய முடிந்தாலும் நாம் குறைவாகவே செய்வோம்.—எபி. 6:10-12.
10. மற்றவர்களை மன்னிப்பது மூலமாக யெகோவாமீது விசுவாசம் இருக்கிறது என்று எப்படிக் காட்டலாம்?
10 மற்றவர்களை மன்னிப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நம்மை கஷ்டப்படுத்துவதுபோல் யாராவது பேசிவிட்டால் அவர்களிடம் கோபப்படுகிறோமா, அவர்களிடம் பேசுவதையே நிறுத்திவிடுகிறோமா? அப்படி செய்தால், நம்முடைய உணர்ச்சிகளுக்கே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று அர்த்தம். நாம் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது நாம் யெகோவாவுக்குக் கடனாளிகளாக ஆகிவிடுகிறோம். அதேபோல், மற்றவர்கள் நமக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது, அவர்கள் நமக்குக் கடனாளிகளாக ஆகிவிடுகிறார்கள். (லூக். 11:4) யெகோவாமீது விசுவாசம் இருந்தால் நாம் மற்றவர்களை மன்னிப்போம்; அதற்காக யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புவோம். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வைப்பதைவிட, அதாவது நாம் அனுபவித்த அதே வலியை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதைவிட, யெகோவாவுடைய ஆசீர்வாதமே நமக்கு ரொம்ப முக்கியம் என்று நினைப்போம். மற்றவர்களை மன்னிப்பதற்கு விசுவாசம் தேவை என்பதை இயேசுவின் சீடர்கள் கற்றுக்கொண்டார்கள். சீடர்களுக்கு எதிராக மற்றவர்கள் எத்தனை முறை பாவம் செய்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். அதற்கு, “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று சீடர்கள் இயேசுவிடம் கெஞ்சி கேட்டார்கள்.—லூக். 17:1-5.
11. மற்றவர்கள் கொடுக்கும் அறிவுரையிலிருந்து நாம் ஏன் பிரயோஜனம் அடையாமல் போய்விடலாம்?
11 யாராவது அறிவுரை சொல்லும்போது நான் வருத்தப்படுகிறேனா? அறிவுரை கொடுத்த நபர் மீதோ அவர் சொன்ன விஷயத்தின் மீதோ நாம் குறை கண்டுபிடிக்கக் கூடாது. (நீதி. 19:20) அந்த அறிவுரை நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது என்றுதான் யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லா சந்தர்ப்பத்திலும் யெகோவாவைப் போல யோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
12. யெகோவா நியமித்த நபர்களைப் பற்றி ஒருவர் எப்போதும் குறை சொன்னால் அவரைப் பற்றி என்ன சொல்லலாம்?
12 சபையை வழிநடத்தும் சகோதரர்களைப் பற்றி நான் ஏதாவது குறை சொல்கிறேனா? பத்து வேவுகாரர்கள் சொன்ன தவறான விஷயத்தைக் கேட்டு இஸ்ரவேலர்கள் மோசேயைப் பற்றியும் ஆரோனைப் பற்றியும் குறை சொன்னார்கள். அவர்கள் “எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?” என்று யெகோவா மோசேயிடம் கேட்டார். (எண். 14:2-4, 11) இஸ்ரவேலர்கள் அவர்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை யெகோவா தெரிந்துகொண்டார். ஏனென்றால், அவர் நியமித்த நபர்களைப் பற்றி இஸ்ரவேலர்கள் குறை சொன்னார்கள். இன்றும் யெகோவா அவருடைய மக்களை வழிநடத்த சிலரை நியமித்திருக்கிறார். அவர்களைப் பற்றி எப்போதும் குறை சொன்னால் யெகோவாமீது நமக்கு இருக்கும் விசுவாசம் குறைந்துவிட்டது என்று அர்த்தம்.
13. நம்முடைய விசுவாசம் குறைந்துவிட்டது போல தெரிந்தால் நாம் ஏன் கவலைப்படக் கூடாது?
13 இந்தக் கேள்விகளை எல்லாம் சிந்தித்த பிறகு, உங்களுடைய விசுவாசம் குறைந்துவிட்டது போல தெரிந்தால், கவலைப்படாதீர்கள். பேதுருகூட பயந்துபோனார், சந்தேகப்பட்டார். “விசுவாசமில்லாதவர்களே” என்று சில நேரங்களில் இயேசு அவருடைய சீடர்களைப் பார்த்து சொன்னார். (மத். 16:8) இருந்தாலும், பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். சந்தேகப்பட்டு, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்த பிறகு பேதுரு என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
இயேசுமீது கண்களை ஒருமுகப்படுத்துங்கள்
14, 15. (அ) தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தபோது பேதுரு என்ன செய்தார்? (ஆ) நாம் எப்படி ‘இயேசுவின்மீது நம் கண்களை ஒருமுகப்படுத்தலாம்’?
14 பேதுருவுக்கு நீச்சல் நன்றாகத் தெரிந்திருந்ததால் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்த உடனே அவர் நீந்தி படகுக்கே போயிருக்கலாம். (யோவா. 21:7) ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஏனென்றால், உதவிக்காக பேதுரு தன்னையே நம்பி இருக்கவில்லை. இயேசுமீது அவருடைய கண்களை மறுபடியும் ஒருமுகப்படுத்தினார், அதாவது, இயேசுவை மறுபடியும் பார்க்க ஆரம்பித்தார். அவர் கொடுத்த உதவியையும் பெற்றுக்கொண்டார். நம்முடைய விசுவாசம் குறைந்துவிட்டது போல தெரிந்தால், நாமும் பேதுருவை போல நடந்துகொள்ள வேண்டும். அதை எப்படி செய்யலாம்?
15 பேதுரு இயேசுமீது மறுபடியும் அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தியது போல, நாமும் ‘இயேசுவின் மீதே நம் கண்களை ஒருமுகப்படுத்த’ வேண்டும். (எபிரெயர் 12:2, 3-ஐ வாசியுங்கள்.) பேதுருவைப் போல நம்மால் இயேசுவைப் பார்க்க முடியாது. அப்படியென்றால், நாம் எப்படி ‘இயேசுவின்மீது நம் கண்களை ஒருமுகப்படுத்தலாம்’? அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களைப் படிக்க வேண்டும், அவர் என்னவெல்லாம் செய்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவரைப் போல நடந்துகொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது, நம்முடைய விசுவாசத்தை நாம் பலப்படுத்திக்கொள்ள முடியும். இயேசுவைப் போல நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
16. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த பைபிள் நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
16 பைபிள்மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள். பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதையும் அது மட்டுமே சிறந்த ஆலோசனைகளைக் கொடுக்க முடியும் என்பதையும் இயேசு நம்பினார். (யோவா. 17:17) நாமும் இயேசுவைப் போல நடந்துகொள்ள வேண்டும் என்றால், பைபிளைத் தினமும் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அதற்கான பதில்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், முடிவு சீக்கிரத்தில் வரும் என்று நம்பவும் கடைசி நாட்களைப் பற்றி பைபிள் சொல்லும் தீர்க்கதரிசனங்களைப் படியுங்கள். கடவுளுடைய வாக்குறுதிகள்மீது உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்த விரும்புகிறீர்களா? அதற்கு, ஏற்கெனவே நிறைவேறி இருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படியுங்கள். பைபிள் ஆலோசனைகள் நம்முடைய காலத்துக்கும் ஒத்துவரும் என்று நம்புகிறீர்களா? நம் சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள பைபிள் ஆலோசனைகள் எப்படி உதவி செய்திருக்கிறது என்பதைப் பற்றி வாசியுங்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—1 தெ. 2:13.
17. கடுமையான சோதனைகளை இயேசு எப்படி சமாளித்தார், நாம் எப்படி அவரைப் போல நடந்துகொள்ளலாம்?
17 யெகோவா கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களையே யோசியுங்கள். எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றியே இயேசு யோசித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு வந்த கடுமையான சோதனைகளை சமாளிக்க இது உதவியாக இருந்தது. (எபி. 12:2) உலகத்தில் இருந்த விஷயங்கள் அவருடைய கவனத்தை சிதறடிக்கவில்லை. (மத். 4:8-10) நீங்கள் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம்? யெகோவா வாக்குக்கொடுத்திருக்கும் அருமையான ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் புதிய உலகத்தில் இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். புதிய உலகத்தில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதைப் பற்றி எழுதி பாருங்கள் அல்லது வரைந்து பாருங்கள். உயிர்த்தெழுந்து வருகிற யாரோடு எல்லாம் பேச ஆசைப்படுகிறீர்கள் என்று ஒரு பட்டியல் போடுங்கள். அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்றும் யோசித்துப் பாருங்கள். யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் எல்லாம் உலகத்தில் இருக்கும் மக்களுக்கு என்று நினைக்காமல் உங்களுக்கே கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.
18. விசுவாசத்தைப் பலப்படுத்த ஜெபம் எப்படி உதவி செய்யும்?
18 நிறைய விசுவாசம் வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள். யெகோவாவுடைய சக்திக்காக ஜெபம் செய்யும்படி இயேசு அவருடைய சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூக். 11:9, 13) கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களில் ஒன்றுதான் விசுவாசம். அதனால், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யும்போது, இன்னும் நிறைய விசுவாசம் வேண்டும் என்று யெகோவாவிடம் கேளுங்கள். உங்களுடைய விசுவாசத்தைக் குறைக்கிற விஷயங்களுக்காகக் குறிப்பிட்டு ஜெபம் செய்யுங்கள். உதாரணத்துக்கு, மற்றவர்களை மன்னிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவும் மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்கவும் உதவி செய்யும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.
19. நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
19 பலமான விசுவாசம் இருக்கிற நண்பர்களையே தேர்ந்தெடுங்கள். இயேசு அவருடைய நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். அவருடைய நெருங்கிய நண்பர்கள், அதாவது அப்போஸ்தலர்கள், அவருக்கு உண்மையாக இருந்தார்கள், அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். (யோவான் 15:14, 15-ஐ வாசியுங்கள்.) இயேசுவைப் போல நீங்களும் உங்கள் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கிற நண்பர்களுக்குப் பலமான விசுவாசம் இருக்க வேண்டும், அவர்கள் இயேசுவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நல்ல நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்பார்கள். ஆலோசனை கொடுக்கும்போதும் சரி, அதை பெற்றுக்கொள்ளும்போதும் சரி ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருப்பார்கள்.— நீதி. 27:9.
20. மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த நாம் உதவி செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கும்?
20 மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த உதவி செய்யுங்கள். இயேசு அவருடைய சொல்லாலும் செயலாலும் சீடர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தினார். (மாற். 11:20-24) நாமும் இயேசுவைப் போல நடந்துகொள்ளும்போது, நம்முடைய விசுவாசத்தை மட்டும் அல்ல, மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்துவோம். (நீதி. 11:25) நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள மக்களுக்கு எப்படி உதவி செய்யலாம்? பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது கடவுள் இருக்கிறார்... அவர் நம்மீது அக்கறையாக இருக்கிறார்... பைபிள் கடவுளுடைய வார்த்தை... என்பதற்கு எல்லாம் ஆதாரம் காட்டுங்கள். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம்? நம்மை வழிநடத்தும் சகோதரர்களைப் பற்றி யாராவது குறை சொன்னால் அவர்களை உடனே ஒதுக்கிவிடாதீர்கள். அவர்களுடைய விசுவாசத்தை வளர்க்க உதவி செய்யுங்கள், அதைப் பக்குவமாக செய்யுங்கள். (யூ. 22, 23) உங்கள் பள்ளியில் ஆசிரியர் பரிணாமத்தைப் பற்றி, அதாவது, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதைப் பற்றி சொன்னால் நீங்கள் என்ன செய்யலாம்? படைப்பைப் பற்றி நீங்கள் நம்பும் விஷயத்தை தைரியமாகப் பேசுங்கள். ஒருவேளை உங்கள் ஆசிரியரும் வகுப்பில் இருக்கும் மாணவர்களும் நீங்கள் சொல்லும் விஷயத்தைக் கேட்கலாம்.
21. நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்?
21 பேதுருவுக்கு இருந்த சந்தேகத்தையும் பயத்தையும் போக்க யெகோவாவும் இயேசுவும் உதவி செய்தார்கள். அதனால் பேதுரு, விசுவாசத்தில் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார். அதேபோல், விசுவாசத்தில் உறுதியாக நிற்க யெகோவா நமக்கு உதவி செய்வார். (1 பேதுரு 5:9, 10-ஐ வாசியுங்கள்.) நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய எல்லா முயற்சிகளையும் யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
a உதாரணத்துக்கு, “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடர் கட்டுரைகளை காவற்கோபுர பொது இதழில் பாருங்கள்.