தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடவுங்கள்!
“நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.”—2 கொரிந்தியர் 5:6.
1. அப்போஸ்தலன் பவுல் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடந்தார் என்பதை எது காட்டுகிறது?
வருடம் பொ.ச. 55. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த சவுல் என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி சுமார் 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இத்தனை வருடங்கள் உருண்டோடிய போதிலும் கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை சற்றும் தணியவில்லை, தளரவில்லை. பரலோகத்திலுள்ள காரியங்களை அவர் கண்கூடாகப் பார்த்திராதபோதிலும், தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார். எனவே, பரலோக நம்பிக்கையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.”—2 கொரிந்தியர் 5:6.
2, 3. (அ) விசுவாசித்து நடக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காண்பிக்கிறோம்? (ஆ) தரிசித்து நடப்பது எதைக் குறிக்கிறது?
2 நம்முடைய வாழ்க்கையை வழிநடத்த கடவுளுக்கு ஆற்றல் உண்டென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது விசுவாசித்து நடப்பதற்கு அவசியம். அதோடு, நமக்கு எது மிகச் சிறந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியுமென்ற முழு நிச்சயத்துடன் இருப்பதும் அவசியம். (சங்கீதம் 119:66) வாழ்க்கையில் சில தீர்மானங்களை எடுக்கையிலும், அதன்படி நடக்கையிலும் ‘காணப்படாத நிஜங்களை’ நாம் கருத்தில்கொள்ள வேண்டும். (எபிரெயர் 11:1, த நியு இங்கிலிஷ் பைபிள்) அதாவது, “புதிய வானங்களும் புதிய பூமியும்” பற்றிய வாக்குறுதியைக் கருத்தில்கொள்ள வேண்டும். (2 பேதுரு 3:13) இதற்கு நேர்மாறாக, தரிசித்து நடப்பதென்பது நம்முடைய ஐம்புலன்களால் உணருகிறவற்றின் அடிப்படையில் மட்டுமே வாழ்வதைக் குறிக்கிறது. அது ஆபத்தானது, ஏனென்றால் கடவுளுடைய சித்தத்தை நாம் அறவே ஒதுக்கிவிடும்படி அது செய்யலாம்.—சங்கீதம் 81:12; பிரசங்கி 11:9.
3 பரலோக நம்பிக்கையுள்ள ‘சிறுமந்தையானாலும்’ சரி, பூமிக்குரிய நம்பிக்கையுள்ள ‘வேறே ஆடுகளானாலும்’ சரி, நாம் ஒவ்வொருவருமே தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதற்கான அறிவுரையை மனதார ஏற்க வேண்டும். (லூக்கா 12:32; யோவான் 10:16) கடவுளால் ஏவப்பட்ட இந்த அறிவுரையைப் பின்பற்றுவது, தற்காலிக பாவ சந்தோஷத்திற்கு அடிபணிந்துவிடாதவாறும், பொருளாசை எனும் கண்ணியில் சிக்கிக்கொள்ளாதவாறும், இந்தப் பொல்லாத உலகின் முடிவு சமீபமென்பதை மறந்துவிடாதவாறும் நம்மை எப்படிப் பாதுகாக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். அதோடு, தரிசித்து நடப்பதால் வரும் ஆபத்துகளைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கலாம்.—எபிரெயர் 11:25.
‘தற்காலிக பாவ சந்தோஷத்தை’ ஒதுக்கித்தள்ளுதல்
4. மோசே என்ன தெரிவுசெய்தார், ஏன்?
4 அம்ராமின் மகனான மோசே எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம் என்பதைச் சற்றுக் கற்பனை செய்துபாருங்கள். பூர்வ எகிப்தின் ராஜ குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவருக்கு அதிகாரம், செல்வம், செல்வாக்கு எனச் சகலமும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. அதனால் மோசே தனக்குத் தானே நியாயப்படுத்தி, ‘எகிப்தின் சகல சாஸ்திரங்களிலும் நான் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேன், என் வார்த்தைக்கும் செயலுக்கும் அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்த ராஜ குடும்பத்திலேயே நான் இருந்துவிட்டால், என் பதவியைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட என் எபிரெய சகோதரர்களுக்கு உதவ முடியுமே!’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். (அப்போஸ்தலர் 7:22) ஆனால் அப்படிச் செய்வதற்குப் பதிலாக, “தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே” அவர் தெரிவுசெய்தார். ஏன்? எகிப்தில் தனக்கு கிடைக்கவிருந்த எல்லாவற்றையும் உதறித்தள்ள மோசேயை எது தூண்டியது? பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “விசுவாசத்தினாலே அவன் [மோசே] அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல, உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.” (எபிரெயர் 11:24-27) நீதி நியாயத்திற்கு யெகோவாவிடமிருந்து நிச்சயம் பலன் கிடைக்குமென்ற விசுவாசமே, பாவங்களையும் சிற்றின்பங்களையும் அதன் தற்காலிக சந்தோஷத்தையும் ஒதுக்கித்தள்ள அவருக்கு உதவின.
5. மோசேயின் உதாரணம் நம்மை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறது?
5 கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையை நாமும்கூட அடிக்கடி எதிர்ப்படுகிறோம். உதாரணத்திற்கு, ‘பைபிள் நியமங்களோடு ஓரளவு முரண்படுகிற சில பழக்கவழக்கங்களை நான் விட்டுவிட வேண்டுமா? பொருளாதார ரீதியில் நிறைய நன்மைகளைத் தருகிற, ஆனால் என் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற வேலையில் நான் சேர வேண்டுமா?’ போன்ற தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த உலகின் குறுகிய கண்ணோட்டத்தின்படி நாம் தீர்மானங்களை எடுக்காமல், ‘அதரிசனமானவரான’ யெகோவா தேவனுடைய பரந்த ஞானத்தின்மீது விசுவாசம் வைத்து தீர்மானங்களை எடுக்க வேண்டும், இதைச் செய்யவே மோசேயின் உதாரணம் நம்மை ஊக்கப்படுத்துகிறது. மோசேயைப் போல நாமும், இந்த உலகம் அளிக்கிற எந்தவொரு காரியத்தையும்விட யெகோவாவின் நட்பையே நெஞ்சார நேசிப்போமாக.
6, 7. (அ) ஏசா, தரிசித்து நடப்பதையே விரும்பினான் என்பதை எப்படிக் காட்டினான்? (ஆ) ஏசாவின் உதாரணம் நமக்கு என்ன எச்சரிப்பை அளிக்கிறது?
6 முற்பிதாவாகிய ஈசாக்கின் மகனான ஏசாவுக்கும் மோசேக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பாருங்கள். ஏசா தன்னுடைய ஆசைகளையெல்லாம் உடனுக்குடன் திருப்திபடுத்திக்கொள்ளவே துடித்தான். (ஆதியாகமம் 25:30-34) “சீர்கெட்டவனாக,” அதாவது புனிதமான காரியங்களுக்குப் போற்றுதல் காட்டாதவனாக, “ஒருவேளைப் போஜனத்துக்காக” தன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தையே விற்றுப்போட்டான். (எபிரெயர் 12:16) அதை விற்றுப் போடுவதற்கான தன்னுடைய தீர்மானம் யெகோவாவுடன் உள்ள தன் பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என்பதையும், தன்னுடைய செயல் தன் சந்ததிக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவன் எண்ணிப் பார்க்க தவறினான். அவனுக்கு ஆன்மீகக் கண்ணோட்டம் இருக்கவில்லை. கடவுளுடைய அருமையான வாக்குறுதிகளை அற்பமானவையாகக் கருதி, அசட்டை செய்தான். அவன் விசுவாசித்து நடக்கவில்லை, தரிசித்தே நடந்தான்.
7 ஏசாவின் உதாரணம் இன்று நமக்கு எச்சரிப்பூட்டுகிறது. (1 கொரிந்தியர் 10:11) சிறிய அல்லது பெரிய தீர்மானங்களை நாம் எடுக்கையில், சாத்தானுடைய உலகிலிருந்து வருகிற விளம்பரங்களால்—‘உங்களுக்குத் தேவையானதை இன்றே பெற்றிடுங்கள், இப்போதே பெற்றிடுங்கள்’ போன்ற விளம்பரங்களால்—மோசம்போய்விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்காக, பின்வரும் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னுடைய தீர்மானங்களில், ஏசாவின் மனப்பான்மை தலைக்காட்டுகிறதா? நான் விரும்பும் காரியங்களை இப்போதே அடைய வேண்டுமென்பதற்காக, ஆன்மீகக் காரியங்களை இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிடுகிறேனா? என்னுடைய தீர்மானங்கள் கடவுளுடன் உள்ள என் நட்பையும் என் எதிர்கால ஆசீர்வாதத்தையும் கெடுத்துப்போடுமா? மற்றவர்களுக்கு நான் எப்படிப்பட்ட முன்மாதிரியாக இருக்கிறேன்?’ புனிதமான காரியங்களுக்குப் போற்றுதல் காண்பிக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுத்தோமானால், யெகோவா நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.—நீதிமொழிகள் 10:22.
பொருளாசை எனும் கண்ணியைத் தவிர்த்தல்
8. லவோதிக்கேய கிறிஸ்தவர்கள் என்ன எச்சரிப்பைப் பெற்றார்கள், அது நமக்கு ஏன் அக்கறையூட்டுவதாய் இருக்கிறது?
8 மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து, முதல் நூற்றாண்டின் இறுதியில் ஆசியா மைனரிலிருந்த லவோதிக்கேய சபைக்கு அப்போஸ்தலன் யோவான் மூலம் தரிசனத்தில் ஒரு செய்தியை வெளிப்படுத்தினார். அது பொருளாசையைக் குறித்த எச்சரிப்பின் செய்தியாகும். லவோதிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் செல்வச் சீமான்களாக இருந்தபோதிலும், ஆன்மீக ரீதியில் திவாலான நிலையில் இருந்தார்கள். தொடர்ந்து விசுவாசித்து நடவாமல், பொருளாதார உடைமைகள் தங்களுடைய ஆன்மீகக் கண்ணோட்டத்தை மறைத்துப்போட அனுமதித்தார்கள். (வெளிப்படுத்துதல் 3:14-18) பொருளாசை, இன்றும் அதேபோன்ற ஒரு பாதிப்பைத்தான் உண்டாக்குகிறது. அது நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்துகிறது, அதோடு ஜீவனுக்கான ‘ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவதை’ நிறுத்தும்படி செய்துவிடுகிறது. (எபிரெயர் 12:1) நாம் கவனமாக இல்லாவிட்டால், ‘இப்பிரபஞ்சத்திற்குரிய கவலைகள்’ நம்முடைய ஆன்மீகக் காரியங்களை முழுமையாக ‘நெருக்கிப் போட்டுவிடலாம்.’—லூக்கா 8:14.
9. திருப்தியுள்ள மனப்பான்மையையும் ஆன்மீக உணவுக்கான நன்றியையும் காட்டுவது நம்மை எப்படிப் பாதுகாக்கும்?
9 திருப்தியுள்ள மனப்பான்மையே ஆன்மீகப் பாதுகாப்புக்கான முக்கிய வழியாகும், இவ்வுலகை முழுமையாக அனுபவிப்பதோ, செல்வச்செழிப்புடன் வாழ்வதோ அல்ல. (1 கொரிந்தியர் 7:31; 1 தீமோத்தேயு 6:6-8) நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கும்போது, இன்றுள்ள ஆன்மீகப் பரதீஸில் திருப்தியையும் சந்தோஷத்தையும் கண்டடைவோம். அத்தகைய பரதீஸில், ஊட்டமுள்ள ஆன்மீக உணவை ரசித்து ருசிக்கையில், ‘மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிக்க’ நாம் தூண்டப்படுகிறோம், அல்லவா? (ஏசாயா 65:13, 14) அதோடு, கடவுளுடைய ஆவியின் கனியை வெளிக்காட்டுபவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்கையிலும் நாம் மனமகிழ்கிறோம். (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், யெகோவா அளிக்கும் ஆன்மீகக் காரியங்களில் நாம் திருப்தியையும் புத்துணர்ச்சியையும் பெறுவது எவ்வளவு அவசியம்!
10. நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் யாவை?
10 நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் பின்வருமாறு: ‘பொருளாதார உடைமைகளுக்கு நான் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன்? அந்த உடைமைகளையெல்லாம் சொகுசாய் வாழ்வதற்காக உபயோகிக்கிறேனா அல்லது மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க உபயோகிக்கிறேனா? எது எனக்கு மாபெரும் திருப்தியை அளிக்கிறது? பைபிளைப் படிப்பதும், கிறிஸ்தவக் கூட்டங்களில் தோழமையை அனுபவிப்பதுமா, அல்லது கிறிஸ்தவப் பொறுப்புகள் ஏதுமில்லாமல் வார இறுதி நாட்களில் பொழுதைக் கழிப்பதா? அநேக சனி, ஞாயிறுகளில் வெளி ஊழியத்திலும் மெய் வணக்கம் சம்பந்தப்பட்ட மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்குப் பதிலாக, பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபடுகிறேனா?’ விசுவாசித்து நடப்பதென்பது யெகோவாவின் வாக்குறுதிகளில் முழு நம்பிக்கை வைத்து ராஜ்ய வேலையில் மும்முரமாய் ஈடுபடுவதையே அர்த்தப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 15:58.
உலக முடிவைக் கண்ணெதிரே வைத்தல்
11. விசுவாசித்து நடப்பது, உலக முடிவு வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை மனதில் வைக்க எப்படி நமக்கு உதவும்?
11 விசுவாசித்து நடப்பது, உலக முடிவு இப்போதைக்கு வராது அல்லது வரவே வராது என்ற மாம்சப்பிரகாரமான கண்ணோட்டத்தைத் தவிர்க்க நமக்கு உதவும். பைபிள் தீர்க்கதரிசனங்களை அவமதிக்கிற சந்தேகவாதிகளைப் போல் இல்லாமல், நம் நாளைக் குறித்து கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்துள்ள உலகச் சம்பவங்கள் எப்படி நிறைவேறி வருகின்றன என்பதை நாம் தெளிவாகப் புரிந்திருக்கிறோம். (2 பேதுரு 3:3, 4) உதாரணத்திற்கு, ஜனங்களின் மனப்பான்மையும் நடத்தையும் நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கவில்லையா? (2 தீமோத்தேயு 3:1-5) தற்போதைய உலக சம்பவங்களெல்லாம் வெறுமனே மீண்டும் மீண்டும் நடைபெறும் சம்பவங்கள் அல்ல, மாறாக அவை ‘கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கும் இந்தப் பொல்லாத உலகின் முடிவுக்கும் அடையாளமாக’ இருக்கின்றன என்பதை நம்முடைய விசுவாசக் கண்களால் நாம் காண்கிறோம்.—மத்தேயு 24:1-14; NW.
12. லூக்கா 21:20, 21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் எவ்வாறு நிறைவேறின?
12 பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், அதற்கு இணையான ஒன்று நவீன நாளில் நடக்கவிருக்கிறது. இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது தம் சீஷர்களுக்கு இவ்வாறு எச்சரிப்பூட்டினார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும் . . . கடவர்கள்.” (லூக்கா 21:20, 21) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, செஸ்டியஸ் காலஸின் தலைமையில் ரோமப் படைகள் பொ.ச. 66-ல் எருசலேமை முற்றுகையிட்டன. ஆனால், அந்தப் படைகள் திடுதிப்பென்று பின்வாங்கிச் சென்றன; இப்படி அவை பின்வாங்கிச் சென்றது, கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து ‘மலைகளுக்கு ஓடிப்போவதற்கு’ ஒரு சமிக்கையாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது. பொ.ச. 70-ல், ரோமப் படைகள் திரும்பி வந்து, எருசலேமைத் தாக்கி, அதன் ஆலயத்தை அழித்துப்போட்டன. அப்போது பத்து லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், 97,000 பேர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றும் ஜொசிஃபஸ் அறிக்கையிடுகிறார். அந்த யூத ஒழுங்குமுறையின் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு நடந்தேறியது. இயேசுவின் எச்சரிப்புக்குச் செவிசாய்த்து, விசுவாசித்து நடந்தவர்கள் அந்தப் பேரழிவிலிருந்து உயிர் தப்பினார்கள்.
13, 14. (அ) சீக்கிரத்தில் என்னவெல்லாம் சம்பவிக்கப் போகின்றன? (ஆ) பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்து நாம் ஏன் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
13 அதேபோன்ற ஒன்று நம் நாளில்கூட விரைவில் நடக்கவிருக்கிறது. தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில், ஐக்கிய நாட்டுச் சங்கத்திலுள்ள சக்திகள் பங்குவகிக்கும். பாக்ஸ் ரோமானாவை (ரோம சமாதானத்தை) காத்துக்கொள்வதற்காகவே முதல் நூற்றாண்டு ரோமப் படைகள் திட்டமைக்கப்பட்டிருந்தன; அதேபோல், இன்றைய ஐக்கிய நாட்டுச் சங்கமும் சமாதானத்தைக் கட்டிக்காக்கிற ஒரு கருவியாய் இருப்பதற்காகவே திட்டமைக்கப்பட்டிருக்கிறது. ரோமப் படைகள் அன்றிருந்த உலகம் முழுவதற்கும் ஓரளவு பாதுகாப்பளிக்க முயற்சிகள் எடுத்தபோதிலும், அவைதானே எருசலேம் நகரைப் பாழாக்கிப்போட்டன. அவ்வாறே இன்றும், ஐக்கிய நாட்டுச் சங்கத்திலுள்ள படைபலம்மிக்க நாடுகள் மதத்தை தொல்லைதரும் ஒன்றாகக் கருதி, நவீன நாளைய எருசலேமான கிறிஸ்தவமண்டலத்தையும் மகா பாபிலோனின் மீதமுள்ள பாகங்களையும் அழித்துப்போட நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (வெளிப்படுத்துதல் 17:12-17) ஆம், பொய் மத உலகப் பேரரசு அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.
14 பொய் மதங்களின் அழிவு மகா உபத்திரவத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும். மகா உபத்திரவத்தின் இறுதியில், இந்தப் பொல்லாத உலகில் எஞ்சியிருக்கும் அமைப்புகள் அழிக்கப்படும். (மத்தேயு 24:29, 30; வெளிப்படுத்துதல் 16:14, 16) விசுவாசித்து நடப்பது பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்து நம்மை விழிப்புள்ளவர்களாக ஆக்குகிறது. எனவே, உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதற்காக ஐக்கிய நாட்டுச் சங்கம் போன்ற ஏதோவொரு மனித அமைப்பைக் கடவுள் பயன்படுத்துவார் என்ற கருத்தை நம்பி நாம் ஏமாறுவதில்லை. அப்படியானால், நம் வாழ்க்கைப் பாணி “கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது” என்ற நம்முடைய நம்பிக்கையை வெளிக்காட்ட வேண்டும்தானே?—செப்பனியா 1:14.
தரிசித்து நடப்பது—எந்தளவு ஆபத்தானது?
15. இஸ்ரவேல் தேசம் கடவுளுடைய ஆசீர்வாதத்தை அனுபவித்திருந்தபோதிலும், என்ன கண்ணிக்குள் விழுந்தது?
15 தரிசித்து நடப்பதன் மூலம் ஒருவருடைய விசுவாசம் பலவீனமடையும்போது என்னென்ன ஆபத்துகள் நேரிடலாம் என்பதை பூர்வ இஸ்ரவேலரின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எகிப்தின் பொய்க் கடவுட்களை அவமானப்படுத்திய பத்து வாதைகளை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள், பிறகு தங்களை மீட்பதற்காகக் கடவுள் செங்கடலை அற்புதகரமாய்ப் பிளந்ததையும் கண்ணாரக் கண்டார்கள். அப்படியிருந்தும் அவர்கள் கீழ்ப்படியாமல் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி, அதை வணங்க ஆரம்பித்தார்கள். ‘மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்த’ மோசேக்காகக் காத்திருந்து காத்திருந்து கடைசியில் பொறுமை இழந்து, சலித்துப்போனார்கள். (யாத்திராகமம் 32:1-4) இப்படிப் பொறுமை இழந்ததன் காரணமாகவே, கண்களால் பார்க்க முடிந்த ஒரு விக்கிரகத்தை வணங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தரிசித்து நடந்தது யெகோவாவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது, அதனால், ‘ஏறக்குறைய மூவாயிரம் பேர்’ மரண தண்டனை பெற்றார்கள். (யாத்திராகமம் 32:25-29) இன்று யெகோவாவை வணங்கும் ஒருவர், யெகோவாமீதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அவரது திறன்மீதும் நம்பிக்கையே இல்லாமல் தீர்மானங்கள் எடுப்பது எவ்வளவு வருத்தகரமானது!
16. வெளித்தோற்றங்களால் இஸ்ரவேலர் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டார்கள்?
16 வெளித்தோற்றங்களைப் பார்த்தது இஸ்ரவேலரை வேறு விதங்களிலும் தவறாக வழிநடத்தியது. அப்படித் தரிசித்து நடந்தது எதிரிகளுக்கு முன் அவர்களை நடுநடுங்க வைத்தது. (எண்ணாகமம் 13:28, 32; உபாகமம் 1:28) மோசேக்குக் கடவுள் கொடுத்த அதிகாரத்தை எதிர்த்து சவால்விடும்படி தூண்டியது; அதோடு, தங்கள் வாழ்க்கை சூழலைக் குறித்து முறுமுறுக்கவும் வைத்தது. இத்தகைய அவிசுவாசத்தால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் பதிலாக, பிசாசின் அதிகாரத்திலிருந்த எகிப்துக்குத் திரும்பிப் போவதையே அவர்கள் விரும்பினார்கள். (எண்ணாகமம் 14:1-4; சங்கீதம் 106:24) அவர்களுடைய காணக்கூடாத ராஜாவான தம்மை அந்த ஜனங்கள் வெகுவாக அவமதித்ததைப் பார்க்கப் பார்க்க யெகோவாவின் மனம் எந்தளவு புண்பட்டிருக்கும்!
17. சாமுவேலின் நாட்களில் யெகோவாவின் வழிநடத்துதலை இஸ்ரவேலர் ஏன் ஒதுக்கித் தள்ளினார்கள்?
17 விசேஷித்த ஜனமாயிருந்த அந்த இஸ்ரவேலர் தரிசித்து நடந்ததால், தீர்க்கதரிசியான சாமுவேலின் நாட்களில் மீண்டும் ஒரு கண்ணிக்குள் விழுந்தார்கள். நேரில் பார்க்க முடிகிற ஒரு ராஜா தங்களுக்கு வேண்டும் என்ற ஆசை அந்த ஜனங்களுடைய மனதில் துளிர்விட்டது. தாமே அவர்களுடைய ராஜா என்பதை யெகோவா வெளிப்படுத்தியிருந்த போதிலும், விசுவாசித்து நடக்க அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. (1 சாமுவேல் 8:4-9) தங்களுக்கே கேடுண்டாக, யெகோவாவின் மாசற்ற வழிநடத்துதலை முட்டாள்தனமாக ஒதுக்கித்தள்ளினார்கள்; தங்களைச் சுற்றியிருந்த தேசத்தாரைப் போலிருக்க ஆசைப்பட்டார்கள்.—1 சாமுவேல் 8:19, 20.
18. தரிசித்து நடப்பதால் நேரிடும் ஆபத்துகளைப் பற்றி என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
18 யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்களான நாம், கடவுளோடு நமக்குள்ள நல்ல உறவை வெகு உயர்வாகக் கருதுகிறோம். கடந்தகால சம்பவங்களிலிருந்து மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆர்வமாய் இருக்கிறோம். (ரோமர் 15:4) இஸ்ரவேலர் தரிசித்து நடந்தபோது, மோசே மூலம் கடவுளே தங்களை வழிநடத்துகிறார் என்பதை மறந்துபோனார்கள். ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், யெகோவா தேவனும் பெரிய மோசேயான இயேசு கிறிஸ்துவுமே இன்று கிறிஸ்தவ சபையை வழிநடத்தி வருகிறார்கள் என்பதை நாமும்கூட மறந்துபோய்விடுவோம். (வெளிப்படுத்துதல் 1:12-16) யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை மனித கண்ணோட்டத்தில் பார்க்காதவாறு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை நாம் அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், எதற்கெடுத்தாலும் முறுமுறுக்கும் குணம் நமக்கு வந்துவிடும், அதோடு யெகோவாவின் பிரதிநிதிகளுக்கும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் அளிக்கும் ஆன்மீக உணவுக்குமான போற்றுதலையும் நாம் இழந்துவிடுவோம்.—மத்தேயு 24:45, NW.
விசுவாசித்து நடப்பதற்குத் தீர்மானமாயிருங்கள்
19, 20. என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள், ஏன்?
19 “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 6:12) பிசாசாகிய சாத்தானே நம்முடைய பிரதான எதிரி. யெகோவா மீதுள்ள நம் விசுவாசத்தைக் குலைத்துப் போடுவதே அவனுடைய முக்கிய குறிக்கோள். கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்திலிருந்து நம்மை விலக்குவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் அவன் முயன்று பார்ப்பான். (1 பேதுரு 5:8) அப்படியானால், சாத்தானுடைய உலகின் வெளித்தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறாதபடி எது நம்மைப் பாதுகாக்கும்? தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதே நம்மைப் பாதுகாக்கும். யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதும், அவற்றின் மீது உறுதியோடு சார்ந்திருப்பதும் நம்முடைய ‘விசுவாசமாகிய கப்பல் சேதத்திற்குள்ளாகாதபடி’ பாதுகாக்கும். (1 தீமோத்தேயு 1:19) எனவே, யெகோவாவின் ஆசீர்வாதத்தில் முழு நம்பிக்கை வைத்து, தொடர்ந்து விசுவாசமாக நடப்பதற்குத் தீர்மானமாய் இருப்போமாக. அதோடு, சீக்கிரத்தில் சம்பவிக்கப் போகிற எல்லாக் காரியங்களிலிருந்தும் தப்பிப்பிழைக்க தொடர்ந்து ஜெபம் செய்வோமாக.—லூக்கா 21:36.
20 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க நமக்கு மிக அருமையான முன்மாதிரி ஒருவர் இருக்கிறார். ‘கிறிஸ்து உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:21) அவர் நடந்தபடியே நாமும் எப்படித் தொடர்ந்து நடக்கலாம் என்பதை அடுத்த அதிகாரம் கலந்தாலோசிக்கும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பது பற்றி மோசே மற்றும் ஏசாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• பொருளாசையைத் தவிர்ப்பதற்கு முக்கிய வழி என்ன?
• விசுவாசித்து நடப்பது, முடிவு இப்போதைக்கு வராது என்ற எண்ணத்தைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவும்?
• தரிசித்து நடப்பது ஏன் ஆபத்தானது?
[பக்கம் 17-ன் படம்]
மோசே விசுவாசித்து நடந்தார்
[பக்கம் 18-ன் படம்]
தேவராஜ்ய காரியங்களில் ஈடுபடாதவாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அடிக்கடி உங்களைத் தடுக்கின்றனவா?
[பக்கம் 20-ன் படம்]
கடவுளுடைய வார்த்தைக்குச் செவிசாய்ப்பது உங்களை எவ்வாறு பாதுகாக்கும்?