தொடர்ந்து யெகோவாவின் வழியில் நடவுங்கள்
“யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவருடைய வழியில் நட; அப்பொழுது நீ பூமியை சொந்தமாக்கிக்கொள்ள அவர் உன்னை உயர்த்துவார்.”—சங்கீதம் 37:34, NW.
1, 2. யெகோவாவின் வழியில் நடப்பது தாவீது ராஜாவுக்கு எதை அர்த்தப்படுத்தியது, இன்று நமக்கு அது எதை தேவைப்படுத்துகிறது?
“நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.” (சங்கீதம் 143:8) தாவீது ராஜாவின் இந்த வார்த்தைகளை இன்று கிறிஸ்தவர்கள் இதயப்பூர்வமாக எதிரொலிக்கின்றனர். யெகோவாவை பிரியப்படுத்தவும் அவருடைய வழியில் நடக்கவும் அவர்கள் உளமார விரும்புகின்றனர். இது எதை உட்படுத்துகிறது? தாவீதுக்கோ கடவுளுடைய சட்டத்தைப் பின்பற்றுவதை இது அர்த்தப்படுத்தியது. புறதேசத்தாரோடு கூட்டுச் சேராமல் யெகோவாவில் நம்பிக்கை வைப்பதையும், அண்டை ஜனத்தாருடைய கடவுட்களை அல்ல, யெகோவாவையே உண்மைப் பற்றுறுதியோடு சேவிப்பதையும் உட்படுத்துகிறது. கிறிஸ்தவர்களுக்கோ யெகோவாவின் வழியில் நடப்பதில் இதைவிட அதிகம் உட்பட்டுள்ளது.
2 ஒரு விஷயம் என்னவென்றால், இன்று யெகோவாவின் வழியில் நடப்பது என்பது இயேசு கிறிஸ்துவின் கிரயபலியில் விசுவாசம் வைப்பதையும், அவரே ‘வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்’ என்பதை ஏற்றுக்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 3:16; 14:6; எபிரெயர் 5:9) இது, “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை” நிறைவேற்றுவதையும் அர்த்தப்படுத்துகிறது; ஒருவரிலொருவர் அன்புகூருவதை, முக்கியமாக இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களிடம் அன்புகூருவதை இது உட்படுத்துகிறது. (கலாத்தியர் 6:2; மத்தேயு 25:34-40) யெகோவாவின் வழியில் நடப்பவர்கள் அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் நேசிக்கிறார்கள். (சங்கீதம் 119:97; நீதிமொழிகள் 4:5, 6) கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்ளும் அருமையான சிலாக்கியத்தை அவர்கள் நெஞ்சார நேசிக்கிறார்கள். (கொலோசெயர் 4:17; 2 தீமோத்தேயு 4:5) ஜெபம் அவர்களுடைய வாழ்க்கையில் தவறாமல் இடம்பெறும் ஒரு பாகம். (ரோமர் 12:12) அவர்கள் “ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்[கிறார்கள்].” (எபேசியர் 5:15) தற்காலிக பொருளாதார வசதிகளுக்காகவோ அல்லது தவறான சரீர இன்பங்களுக்காகவோ ஆவிக்குரிய செல்வத்தை நிச்சயமாகவே அவர்கள் தியாகம்செய்ய மாட்டார்கள். (மத்தேயு 6:19, 20; 1 யோவான் 2:15-17) மேலும், யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியாக இருப்பதும் அவரில் நம்பிக்கை வைப்பதும் இன்றியமையாதவை. (2 கொரிந்தியர் 1:9; 10:5; எபேசியர் 4:24) ஏன்? ஏனெனில் பூர்வ இஸ்ரவேலருடைய சூழ்நிலையைப் போலவே நம்முடைய சூழ்நிலையும் இருக்கிறது.
நம்பிக்கை மற்றும் உண்மைப் பற்றுறுதிக்கான தேவை
3. உண்மைப் பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை ஆகியவை யெகோவாவின் வழியில் நிலைத்திருப்பதற்கு ஏன் உதவும்?
3 இஸ்ரவேல் ஒரு சிறிய தேசம். அவர்களை சுற்றிலும் விரோதிகள் சூழ்ந்திருந்தனர்; இவர்கள் விக்கிரக வழிபாட்டில் ஒழுக்கக்கேடான சடங்குகளில் ஈடுபட்டார்கள். (1 நாளாகமம் 16:26) இஸ்ரவேலர் மாத்திரமே காணக்கூடாத ஒரே கடவுளாகிய யெகோவாவை வணங்கினர். உயர்ந்த ஒழுக்க தராதரங்களை காத்துக்கொள்ளும்படி அவர்களிடம் கடவுள் வலியுறுத்தினார். (உபாகமம் 6:4) இன்று அதைப் போலவே, சில லட்சம் மனிதர்களே யெகோவாவை வணங்குகின்றனர்; மிகவும் மாறுபட்ட தராதரங்களையும் மத நோக்குநிலையையும் கொண்ட சுமார் 600 கோடி மக்கள் வாழும் உலகில் இவர்கள் வாழ்கின்றனர். இந்த லட்சங்களில் ஒருவராக நாம் இருந்தால், தவறான வழியில் செல்வாக்கு செலுத்தப்படுவதற்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள வேண்டும். எப்படி? யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருப்பதும், அவரில் விசுவாசம் வைத்திருப்பதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் உறுதியான நம்பிக்கை வைப்பதும் உதவிசெய்யும். (எபிரெயர் 11:6) இந்த உலகம் நம்பிக்கை வைக்கும் காரியங்களில் நம்முடைய நம்பிக்கையை வைப்பதிலிருந்து இது நம்மை காக்கும்.—நீதிமொழிகள் 20:22; 1 தீமோத்தேயு 6:17.
4. ஏன் தேசங்கள் ‘புத்தியில் அந்தகாரப்பட்டிருக்கின்றன’?
4 உலகிலிருந்து கிறிஸ்தவர்கள் எவ்வளவு வித்தியாசமானவர்களாய் இருக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலன் பவுல் காட்டினார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், புறதேசத்தார் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தேவனுக்குரிய ஜீவனுக்கு அந்நியராயிருக்கிறார்கள். தங்களுடைய வீணான சிந்தையினாலே மனதின் பிரகாரமாக இருளில் இருக்கிறார்கள்.” (எபேசியர் 4:17, 18, NW) இயேசுவே “மெய்யான ஒளி.” (யோவான் 1:9) அவரை புறக்கணிக்கிற எவரும் அல்லது அவரில் விசுவாசம் வைப்பதாக உரிமை பாராட்டிக்கொண்டு ஆனால் “கிறிஸ்துவினுடைய பிரமாண[த்திற்குக்]” கீழ்ப்படியாதவர்கள் எவரும் ‘மனதின் பிரகாரம் இருளில் இருக்கிறார்கள்.’ யெகோவாவின் வழியில் நடக்காமல், அவர்கள் ‘தேவனுக்குரிய ஜீவனுக்கு அந்நியராயிருக்கிறார்கள்.’ உலகியல் ரீதியாக அவர்கள் எவ்வளவு ஞானிகளாய் திகழ்ந்தாலும், ஜீவனுக்கு வழிநடத்தும் ஒரே அறிவாகிய யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை பொருத்தவரையில் ‘அறியாமையில்’ இருக்கிறார்கள்.—யோவான் 17:3; 1 கொரிந்தியர் 3:19.
5. இந்த உலகில் சத்தியத்தின் ஒளி பிரகாசிக்கிறபோதிலும், ஏன் அநேகர் செவிசாய்ப்பதில்லை?
5 இருப்பினும், சத்தியத்தின் ஒளி இந்த உலகில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது! (சங்கீதம் 43:3; பிலிப்பியர் 2:15) “[“மெய்,” NW] ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.” (நீதிமொழிகள் 1:20) யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி தங்களுடைய அயலகத்தாருக்கு சொல்வதில், கடந்த வருடத்தில் நூறுகோடிக்கும் அதிகமான மணிநேரத்தை யெகோவாவின் சாட்சிகள் செலவழித்தார்கள். லட்சக்கணக்கானோர் செவிசாய்த்தார்கள். ஆனால் மற்ற அநேகர் செவிசாய்க்காதது நமக்கு ஆச்சரியமளிக்க வேண்டுமா? இல்லை. அவர்களுடைய ‘இருதயத்தின் உணர்வற்ற நிலையை’ பற்றி பவுல் பேசினார். சுயநலம் அல்லது பண ஆசை காரணமாக சிலர் செவிசாய்ப்பதில்லை. வேறுசிலர் பொய் மத போதனையால் அல்லது இன்று பரவலாக காணப்படும் உலகப்பிரகாரமான எண்ணங்களால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றனர். வாழ்க்கையில் விழுந்த இடிபோன்ற துன்பங்கள் அநேகர் கடவுளை விட்டு விலகும்படி செய்திருக்கிறது. வேறுசிலர் யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை ஒதுக்கிவிடுகின்றனர். (யோவான் 3:20) யெகோவாவின் வழியில் நடக்கும் ஒருவருடைய இதயம் இப்படிப்பட்ட விஷயங்களில் உணர்வற்று போய்விடக் கூடுமா?
6, 7. அவர்கள் யெகோவா தேவனை வணங்குபவர்களாக இருந்தபோதிலும், இஸ்ரவேலர் எந்த சந்தர்ப்பங்களில் பாவத்திற்குள் வீழ்ந்தனர், ஏன்?
6 பவுல் காட்டியபடி, இது பூர்வ இஸ்ரவேலுக்கு சம்பவித்தது. அவர் எழுதினார்: “அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட [“பொழுதுபோக்க,” NW] எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.”—1 கொரிந்தியர் 10:6-8.
7 சீனாய் மலை அடிவாரத்தில் பொன் கன்றுக்குட்டியை இஸ்ரவேலர் வணங்கிய சமயத்தை பவுல் முதலில் குறிப்பிடுகிறார். (யாத்திராகமம் 32:5, 6) சில வாரங்களுக்கு முன்பு தாங்கள் கீழ்ப்படிவதாக ஒப்புக்கொண்டிருந்த தெய்வீக கட்டளையை நேரடியாக மீறியதாக இது இருந்தது. (யாத்திராகமம் 20:4-6; 24:3) பின்பு, மோவாபிய பெண்களுடன் பாகாலுக்கு முன்பு இஸ்ரவேலர் தலைவணங்கிய சமயத்தை பவுல் குறிப்பிடுகிறார். (எண்ணாகமம் 25:1-9) இன்பத்திலேயே மூழ்கியிருக்கும் செயலால், அதாவது, ‘பொழுதுபோக்கும்’ a செயலால் கன்றுக் குட்டி வணக்கம் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. பாகால் வணக்கம் என்றாலே, அப்பட்டமான பாலின ஒழுக்கக்கேடும் சேர்ந்ததுதான். (வெளிப்படுத்துதல் 2:14) இஸ்ரவேலர் ஏன் இந்தப் பாவங்களைச் செய்தார்கள்? ஏனெனில் தங்களுடைய இதயம் ‘பொல்லாங்கானவைகளை இச்சிப்பதற்கு’ அனுமதித்தார்கள்—அது விக்கிரகாராதனையாக இருந்தாலும்சரி அதோடு நடப்பித்த பாலின ஒழுக்கக்கேடாக இருந்தாலும்சரி.
8. இஸ்ரவேலருடைய அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பவுல் சுட்டிக்காட்டினார். எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? பொன் கன்றுக்குட்டி அல்லது பூர்வ மோவாபிய தெய்வத்திற்கு முன்பு தலைவணங்குவது ஒரு கிறிஸ்தவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. ஆனால் ஒழுக்கயீனத்தை அல்லது கட்டுப்பாடின்றி சுயநல செயல்களில் ஈடுபடுவதைப் பற்றியென்ன? இவையெல்லாம் இன்று சர்வசாதாரணமாக இருக்கின்றன. நம்முடைய இதயத்தில் இவற்றுக்கான ஆசை வளர நாம் அனுமதித்தால், இவை நமக்கும் யெகோவாவுக்கும் இடையே குறுக்கிட்டு நம்மை அவரிடமிருந்து விலக்கிவிடும். அதன் விளைவு நாம் விக்கிரகாராதனை நடப்பித்ததைப் போலவே, அதாவது கடவுளிடமிருந்து விலகியதைப் போலவே இருக்கும். (ஒப்பிடுக: கொலோசெயர் 3:5; பிலிப்பியர் 3:19.) சொல்லப்போனால், “விக்கிரகாராதனைக்கு விலகியோடுங்கள்” என்று உடன் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலம் அந்தச் சம்பவங்களைப் பற்றிய தன்னுடைய பேச்சை பவுல் முடிக்கிறார்.—1 கொரிந்தியர் 10:14.
கடவுளுடைய வழியில் நடப்பதற்கு உதவி
9. (அ) யெகோவாவின் வழியில் தொடர்ந்து நடப்பதற்கு நமக்கு என்ன உதவி கிடைக்கிறது? (ஆ) ‘நமக்கு பின்னால் சொல்லும் வார்த்தையை’ கேட்பதற்கு ஒரு வழி என்ன?
9 யெகோவாவின் வழியில் தொடர்ந்து நடப்பதற்கு நாம் திடதீர்மானமாய் இருந்தால், திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டவர்களாக இருக்க மாட்டோம். ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) ‘நமக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை’ எப்படி ‘நம்முடைய காதுகள் கேட்கும்?’ இன்றைக்கு ஒருவரும் சொல்லர்த்தமாக சத்தத்தை கேட்பதுமில்லை, கடவுளிடமிருந்து தனிப்பட்ட விதமாய் செய்திகளைப் பெறுவதுமில்லை. கேட்கும் “வார்த்தை” ஒரே முறையில் நம் அனைவருக்கும் வருகிறது. மிக முக்கியமாக, அது ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளிலிருந்து வருகிறது. அதில் கடவுளுடைய எண்ணங்களும் மனிதர்களுடன் அவருடைய செயல்தொடர்புகளைப் பற்றிய பதிவும் உள்ளன. ‘தேவனுக்குரிய ஜீவனுக்கு அந்நியமாயிருக்கிற’ ஊற்றுமூலங்களிலிருந்து வரும் பிரச்சாரங்களை நாம் தினமும் எதிர்ப்படுவதால், ஆவிக்குரிய விதத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நாம் தினமும் பைபிளை வாசித்து அதை தவறாமல் தியானிக்க வேண்டும். ‘வீணான காரியங்களை’ தவிர்ப்பதற்கும் ‘தேறினவர்களாகவும் எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ இருப்பதற்கும் இது நமக்கு உதவிசெய்யும். (அப்போஸ்தலர் 14:14, 15; 2 தீமோத்தேயு 3:16, 17) அது நம்மை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும், ‘நம்முடைய வழியை வெற்றிகரமாக்கவும்’ உதவும். (யோசுவா 1:7, 8) ஆகவே, யெகோவாவின் வார்த்தை இவ்வாறு உந்துவிக்கிறது: “பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.”—நீதிமொழிகள் 8:32, 33.
10. ‘நமக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை’ நாம் கேட்பதற்கு இருக்கும் இரண்டாவது வழி என்ன?
10 ‘நமக்கு பின்னாலே சொல்லும் வார்த்தை’ ‘ஏற்றவேளையில் உணவை’ தரும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாகவும் வருகிறது. (மத்தேயு 24:45-47, NW) இந்த உணவு கொடுக்கப்படும் ஒரு வழியானது அச்சிடப்பட்ட பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களின் வாயிலாகும்; சமீப வருடங்களில் இந்த உணவு அபரிமிதமாக வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, காவற்கோபுர பத்திரிகையின் வாயிலாக, தீர்க்கதரிசனத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதல் முன்னேற்றமடைந்துள்ளது. இன்று அநேகர் அசட்டை மனப்பான்மையுடன் இருந்தாலும், பிரசங்கிக்கும் மற்றும் சீஷராக்கும் வேலையில் நிலைத்திருக்க இந்தப் பத்திரிகையின் வாயிலாகவே நாம் உற்சாகத்தைப் பெற்றிருக்கிறோம். ஆம், படுகுழிகளைத் தவிர்க்க உதவி கிடைத்திருக்கிறது. சிறந்த கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள உந்துதலும் கிடைத்திருக்கிறது. ஏற்றவேளையில் கிடைக்கும் இப்படிப்பட்ட உணவு நமக்கு எப்பேர்ப்பட்ட ஓர் பொக்கிஷம்!
11. ‘நமக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை’ கேட்பதற்கான மூன்றாவது வழியை விளக்குங்கள்.
11 கூட்டங்களின் வாயிலாகவும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை நமக்கு தவறாமல் உணவை வழங்கி வருகிறது. இதில் உள்ளூர் சபை கூட்டங்களும், வட்டார அளவில் நடத்தப்படும் இரண்டு மாநாடுகளும், மாவட்ட மாநாடுகளும் அடங்கும். உண்மையுள்ள எந்த கிறிஸ்தவர் இப்படிப்பட்ட கூட்டங்களை மதிப்புடையதாக கருதாமல் இருப்பார்? அவை யெகோவாவின் வழியில் நடக்க நமக்கு உதவும் இன்றியமையா கருவிகள். பெரும்பாலானோர் வேலையில் அநேக மணிநேரத்தை செலவழிக்க வேண்டியிருப்பதால் அல்லது நம்முடைய மதத்தை சாராதவர்களுடன் பள்ளியில் கூட்டுறவுகொள்ள வேண்டியிருப்பதால், தவறாமல் கிறிஸ்தவ கூட்டுறவுகொள்வது நிஜமாகவே உயிரை காக்கிறது. ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்கு’ கூட்டங்கள் நமக்கு சிறந்த வாய்ப்பளிக்கின்றன. (எபிரெயர் 10:24) நம்முடைய சகோதரர்களை நேசிக்கிறோம், அவர்களுடன் கூட்டுறவுகொள்ள விரும்புகிறோம்.—சங்கீதம் 133:1.
12. யெகோவாவின் சாட்சிகள் என்ன திடதீர்மானம் எடுத்திருக்கிறார்கள், அதை அவர்கள் எவ்வாறு சமீபத்தில் தெரியப்படுத்தினார்கள்?
12 இப்படிப்பட்ட ஆவிக்குரிய உணவால் பலப்படுத்தப்பட்டு, சுமார் 60 லட்சம் பேர் யெகோவாவின் வழியில் நடக்கிறார்கள், எவ்வாறு பலப்படுத்தப்படுவது என்பதை கற்றுக்கொள்ள இன்னும் லட்சோப லட்சம் பேர் பைபிள் படிக்கிறார்கள். பூமியில் வாழும் கோடிக்கணக்கான ஜனத்தொகையோடு ஒப்பிடுகையில் சிறு எண்ணிக்கையாக இருப்பதால் இவர்கள் சோர்வடைந்து விடுகிறார்களா அல்லது பலவீனமடைந்து விடுகிறார்களா? இல்லவே இல்லை. யெகோவாவின் சித்தத்தை உண்மைப் பற்றுறுதியுடன் செய்து ‘தங்களுக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை’ தொடர்ந்து செவிசாய்த்து கேட்பதற்கு திடதீர்மானமாய் இருக்கிறார்கள். இந்தத் திடதீர்மானத்தை வெளிப்படையாக அறிவிக்கும் வண்ணமாக, 1998/99 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மற்றும் சர்வதேச மாநாடுகளில், தங்களுடைய இதயப்பூர்வமான நிலைநிற்கையை தெரிவிக்கும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள். அந்த உறுதிமொழி பின்வருமாறு.
உறுதிமொழி
13, 14. உலக நிலைமையைப் பற்றி என்ன யதார்த்தமான நோக்குநிலையை யெகோவாவின் சாட்சிகள் கொண்டிருக்கின்றனர்?
13 “‘கடவுள் காட்டும் ஜீவ வழி’ மாநாட்டிற்காக கூடிவந்துள்ள யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், கடவுள் காட்டும் வழியே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி என்பதை முழு மனதோடு ஒத்துக்கொள்கிறோம். ஆனால், உலகிலுள்ள பெரும்பான்மையான மக்கள் வேறுவிதமாக நினைக்கின்றனர் என்பதை அறிவோம். வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழியை கண்டுபிடிக்க எண்ணற்ற கொள்கைகளையும் தத்துவங்களையும் மத கருத்துக்களையும் மனித சமுதாயம் பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. மனித சரித்திரத்தையும் இன்றைய உலக நிலைமைகளையும் நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால், ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்று எரேமியா 10:23-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தையின் உண்மை விளங்கும்.
14 “இந்த வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் பல அத்தாட்சிகளை நாம் ஒவ்வொரு நாளும் கண்கூடாக காண்கிறோம். மனித சமுதாயத்தில் பெரும்பாலானோர் கடவுள் காட்டும் ஜீவ வழியை அசட்டை செய்கின்றனர். மக்கள் தங்களுடைய பார்வைக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதையே செய்கின்றனர். அதன் விளைவோ பயங்கரமாயிருக்கிறது—குடும்ப வாழ்க்கை முறிவடைவதால், பிள்ளைகள் வழிநடத்துதல் இல்லாமல் விடப்படுகின்றனர்; பொருளாசை வெறுமையையும் ஏமாற்றத்தையுமே தந்துள்ளது; மதிகெட்டத்தனமாக குற்றச்செயலிலும் வன்முறையிலும் ஈடுபடுவது எண்ணற்ற மக்களை பலிவாங்கியுள்ளது; இனக் கலவரங்களும் போர்களும் மயிர்க்கூச்செரிய வைக்குமளவுக்கு மனித உயிர்களை காவுகொண்டுள்ளது; ஒழுக்கயீனம் தலைவிரித்தாடுவதால் பாலுறவால் கடத்தப்படும் வியாதிகள் பெருவாரியாக பரவியுள்ளன. சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் குலைக்கும் சிக்கலான அநேக பிரச்சினைகளில் இவையெல்லாம் ஒருசில பிரச்சினைகளே.
15, 16. கடவுள் காட்டும் ஜீவ வழியைக் குறித்ததில், எடுக்கப்பட்ட உறுதிமொழியில் என்ன தீர்மானம் தெரிவிக்கப்பட்டது?
15 “மனிதவர்க்கத்தின் துயரமான நிலையையும் அர்மகெதோன் என அழைக்கப்படும் ‘தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தம்’ (வெளிப்படுத்துதல் 16:14, 16) அருகில் இருப்பதையும் பார்க்கையில், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறோம்:
16 “முதலாவது: நம்மை யெகோவா தேவனுக்குரியவர்களாகவும், நிபந்தனையின்றி அவருக்கு தனிப்பட்ட விதமாக ஒப்புக்கொடுத்திருப்பவர்களாகவும் எண்ணுகிறோம். யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஏற்பாடு செய்துள்ள மீட்கும் பொருளில் நம்முடைய அசைக்கமுடியாத விசுவாசத்தைக் காத்துக்கொள்கிறோம். கடவுள் காட்டும் ஜீவ வழியில் நடப்பதற்கும், அவருடைய சாட்சிகளாக சேவைசெய்து இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய அரசாட்சிக்குக் கீழ்ப்படிவதற்கும் நாம் உறுதிபூண்டிருக்கிறோம்.
17, 18. ஒழுக்க தராதரங்கள் மற்றும் கிறிஸ்தவ சகோதரத்துவம் சம்பந்தமாக என்ன நிலைநிற்கையை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து காத்துக்கொள்வார்கள்?
17 “இரண்டாவதாக: நாம் பைபிளின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களையும் ஆவிக்குரிய தராதரங்களையும் தொடர்ந்து பின்பற்றுவோம். தேசத்தார் தங்களுடைய வீணான சிந்தைகளில் நடப்பதுபோல நடக்காமல் அதிலிருந்து விலகியிருக்க தீர்மானித்திருக்கிறோம். (எபேசியர் 4:17-19) யெகோவாவுக்கு முன்பாக சுத்தமாகவும் இந்த உலகத்தால் கறைபடாமலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நம்முடைய உறுதியான தீர்மானம்.—யாக்கோபு 1:27.
18 “மூன்றாவதாக: உலகளாவிய கிறிஸ்தவ சகோதரத்துவமாக நம்முடைய வேதப்பூர்வமான நிலைநிற்கையை உறுதியோடு பற்றிக்கொள்வோம். இனப் பகைமை, தேசிய பகைமை, அல்லது இனப்பிரிவு போன்றவற்றில் சிக்கிக்கொள்ள நம்மை அனுமதிக்காமல் தேசத்தாருக்கு மத்தியில் கிறிஸ்தவ நடுநிலைமையை காத்துக்கொள்வோம்.
19, 20. (அ) கிறிஸ்தவ பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? (ஆ) கிறிஸ்துவின் சீஷர்களாக மெய் கிறிஸ்தவர்கள் அனைவரும் எவ்வாறு தங்களை அடையாளம் காட்டிக்கொள்வார்கள்?
19 “நான்காவது: பெற்றோர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கடவுளின் வழியை மனதில் பதியவைப்போம். கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறந்த முன்மாதிரியை வைப்போம்; அது, தவறாமல் பைபிள் வாசிப்பதையும் குடும்ப படிப்பு நடத்துவதையும் கிறிஸ்தவ சபையிலும் வெளி ஊழியத்திலும் முழு ஆத்துமாவோடு பங்குகொள்வதையும் உட்படுத்துகிறது.
20 “ஐந்தாவது: நம்முடைய சிருஷ்டிகரின் குணங்களை வளர்த்துக்கொள்வதற்கு நாமனைவரும் கடினமாய் உழைப்போம். இயேசு செய்ததுபோலவே, நாம் அவருடைய ஆளுமையையும் வழிகளையும் பின்பற்றுவதற்கு முயற்சிப்போம். (எபேசியர் 5:1) நம்முடைய செயல்கள் அனைத்தும் அன்பினால் தூண்டப்படுவதற்கும் அதன்மூலம் கிறிஸ்துவின் சீஷர்களாக நம்மை அடையாளப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளோம்.—யோவான் 13:35.
21-23. யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து என்ன செய்வார்கள், எதைக் குறித்து அவர்கள் உறுதியோடு இருக்கிறார்கள்?
21 “ஆறாவது: இடைவிடாமல் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்து சீஷராக்குவோம்; கடவுள் காட்டும் ஜீவ வழியை அவர்களுக்குக் கற்பித்து, சபை கூட்டங்களில் கூடுதலான பயிற்சியை பெறுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவோம்.—மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 10:24, 25.
22 “ஏழாவது: தனிப்பட்டவர்களாகவும் ஒரு மத அமைப்பாகவும், தொடர்ந்து கடவுளுடைய சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் முதலாவதாக வைப்போம். அவருடைய வார்த்தையாகிய பைபிளை நம்முடைய வழிகாட்டியாக பயன்படுத்துவதன் மூலம், வலதுபுறமோ இடதுபுறமோ சாயமாட்டோம்; இதன்மூலம் இவ்வுலகத்தின் வழிகளைக் காட்டிலும் கடவுளுடைய வழியே மிக உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்துவோம். கடவுள் காட்டும் ஜீவ வழியை உறுதியுடனும் உண்மைப் பற்றுறுதியுடனும் இப்பொழுதும் எப்பொழுதும் பின்பற்றுவதற்கு தீர்மானித்திருக்கிறோம்!
23 “கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான் என்ற யெகோவாவின் அன்பான வாக்குறுதியில் முழு நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த உறுதிமொழியை எடுக்கிறோம். வேதப்பூர்வ நியமங்களுக்கும் அறிவுரைகளுக்கும் புத்திமதிகளுக்கும் இசைவாக நடப்பதே இன்று வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி என்று நம்புகிறோம்; மெய்யான வாழ்க்கையை உறுதியுடன் பற்றிக்கொள்ளும்படிக்கு, அதுவே எதிர்காலத்திற்கான சிறந்த அஸ்திவாரத்தைப் போடுகிறது என்றும் உறுதியாக நம்புகிறோம்; ஆகவேதான் இந்த உறுதிமொழியை எடுக்கிறோம். (1 தீமோத்தேயு 6:19; 2 தீமோத்தேயு 4:7ஆ, 8) எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் யெகோவா தேவனை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் அன்புகூருவதால் இந்த உறுதிமொழியை எடுக்கிறோம்!
24, 25. முன்மொழியப்பட்ட உறுதிமொழிக்கு எப்படிப்பட்ட பிரதிபலிப்பு இருந்தது, யெகோவாவின் வழியில் நடப்பவர்களுடைய திடதீர்மானம் என்ன?
24 “இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிற இந்த மாவட்ட மாநாட்டில் ஆஜராயிருக்கும் அனைவரும் தயவுசெய்து ஆம் என்று சொல்லுங்கள்!”
25 ஆஜரான அனைவரும் “ஆம்!” என்று பதிலளிக்கையில் உலகமுழுவதிலுமுள்ள நூற்றுக்கணக்கான மன்றங்களும் அரங்குகளும் எதிரொலித்தன. யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து யெகோவாவின் வழியில் நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதிலும் முழு விசுவாசம் வைத்திருக்கிறார்கள். என்ன வந்தாலும்சரி, தொடர்ந்து அவருக்கு உண்மைப் பற்றுறுதியை காண்பித்திருக்கிறார்கள். அவருடைய சித்தத்தைச் செய்ய திடதீர்மானமாய் இருக்கிறார்கள்.
‘தேவன் நம் பட்சத்தில் இருக்கிறார்’
26. யெகோவாவின் வழியில் நடப்போருக்கு இருக்கும் மகிழ்ச்சிகரமான சூழல் என்ன?
26 சங்கீதக்காரன் கொடுத்த புத்திமதியை யெகோவாவின் சாட்சிகள் நினைவுகூருகின்றனர்: “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்.” (சங்கீதம் 37:34) பவுல் கொடுத்த உற்சாகமான வார்த்தைகளை அவர்கள் மறப்பதில்லை: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:31, 32) ஆம், நாம் தொடர்ந்து யெகோவாவின் வழியில் நடந்தால், ‘நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய் கொடுப்பார்.’ (1 தீமோத்தேயு 6:17) நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளுடன் யெகோவாவின் வழியில் நடத்தல்—இதைவிட சிறந்தது நமக்கு என்ன இருக்க முடியும். யெகோவா நம் பட்சத்தில் இருப்பதால், அங்கேயே நிலைத்திருப்பதற்கும் அவர் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் அவர் ஏற்றவேளையில் நிறைவேற்றுவதை நாம் காண்போம் என்பதில் முழு நம்பிக்கையோடு முடிவுவரை சகித்திருப்பதற்கும் திடதீர்மானத்துடன் இருப்போமாக.—தீத்து 1:3.
[அடிக்குறிப்புகள்]
a ‘பொழுதுபோக்குதல்’ என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை, புறமத பண்டிகைகளில் நடக்கும் நடனங்களை குறிப்பதாக ஒரு விளக்கவுரையாளர் கூறுகிறார், அவர் மேலும் சொல்கிறார்: “இந்த நடனங்களில் பெரும்பாலானவை, நன்கு அறியப்பட்டுள்ளபடி, மிக இழிவான காம இச்சையைத் தூண்டும் விதத்தில் இருந்தன.”
ஞாபகமிருக்கிறதா?
◻ யெகோவாவின் வழியில் நடப்பதற்கு ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன தேவை?
◻ நாம் யெகோவாவில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் அவருக்கு உண்மைப் பற்றுறுதியை காண்பிப்பதும் ஏன் அவசியம்?
◻ யெகோவாவின் வழியில் நடக்கையில் நமக்கு என்ன உதவி கிடைக்கிறது?
◻ “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழியின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றை சொல்லுங்கள்.
[பக்கம் 18-ன் படங்கள்]
“கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மற்றும் சர்வதேச மாநாடுகளில் முக்கியமான உறுதிமொழி எடுக்கப்பட்டது