கடவுளுக்கு மகிமை சேர்க்கும் கிறிஸ்தவ ஒற்றுமை
“கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு . . . ஊக்கமாய் முயற்சி செய்யுங்கள்.”—எபே. 4:3.
1. முதல் நூற்றாண்டு எபேசிய கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு எவ்வாறு மகிமை சேர்த்தார்கள்?
பூர்வ எபேசு சபையில் நிலவிய ஒற்றுமை, உண்மைக் கடவுளான யெகோவாவுக்கு மகிமை சேர்த்தது. பணத்தில் புரண்ட அந்த வணிக மையத்தில், கிறிஸ்தவ சகோதரர்கள் சிலர் அடிமைகளை வைத்திருந்த வசதிபடைத்த எஜமான்களாகவும் மற்றவர்களோ, அடிமைகளாகவும் இருந்தார்கள்; அவர்கள் பரம ஏழைகளாகக்கூட இருந்திருக்கலாம். (எபே. 6:5, 9) சிலர், யூதர்களாக இருந்தார்கள்; இவர்கள் தங்களுடைய ஜெபக்கூடத்தில் அப்போஸ்தலன் பவுல் மூன்று மாதங்கள் பேசியபோது சத்தியத்தைத் தெரிந்துகொண்டவர்கள். இன்னும் சிலர் முன்பு அர்த்தமி எனும் தேவதையை வழிபட்டவர்களாகவும் மாய வித்தைகளைச் செய்தவர்களாகவும் இருந்தார்கள். (அப். 19:8, 19, 26) தெளிவாகவே உண்மை வழிபாடு, இப்படிப் பல பின்னணியிலிருந்து வந்தவர்களை ஒன்றுபடுத்தியது. சபையில் நிலவிய ஒற்றுமையால் யெகோவா மகிமைப்படுத்தப்பட்டார் என்பதை பவுல் அறிந்திருந்தார். அதனால்தான், அவர் இவ்வாறு எழுதினார்: ‘சபையின் மூலம் . . . [அவருக்கு] என்றென்றும் மகிமை சேருவதாக.”—எபே. 3:21.
2. எபேசு சபையில் நிலவிய ஒற்றுமைக்கு என்ன ஆபத்து ஏற்பட்டது?
2 என்றாலும், எபேசு சபையில் நிலவிய ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டது. அந்தச் சபையின் மூப்பர்களை பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்.” (அப். 20:30) மேலும், ‘கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற’ பிரிவினை ஏற்படுத்தும் மனப்பான்மை சகோதரர்கள் சிலரிடம் இன்னும் இருந்ததாகவும் அவர் எச்சரித்தார்.—எபே. 2:2; 4:22.
ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு கடிதம்
3, 4. எபேசியர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் ஒற்றுமையை எவ்வாறு வலியுறுத்துகிறது?
3 கிறிஸ்தவர்கள் எப்போதும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் ஒற்றுமையைக் கட்டிக்காக்க ஊக்கமான முயற்சி எடுக்க வேண்டும் என்பதை பவுல் உணர்ந்தார். அதனால், எபேசியர்களுக்கு ஒரு கடிதத்தை எழுத கடவுள் தமது சக்தியினால் பவுலைத் தூண்டினார்; அதன், மையப்பொருள் ஒற்றுமை. உதாரணமாக, “பரலோகத்தில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் மீண்டும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்பட” கடவுள் நோக்கம் கொண்டிருப்பதைப் பற்றி பவுல் எழுதினார். (எபே. 1:10) அவர் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ஒரு கட்டிடத்தின் வெவ்வேறு கற்களுக்கு ஒப்பிட்டும் எழுதினார். “முழு கட்டிடமும் இசைவாக இணைக்கப்பட்டு, யெகோவாவுக்கென்று பரிசுத்த ஆலயமாக எழும்பி வருகிறது” என்று அவர் எழுதினார். (எபே. 2:20, 21) கூடுதலாக, யூதர்களுக்கும் புறதேசத்து கிறிஸ்தவர்களுக்கும் இடையே இருக்க வேண்டிய ஒற்றுமையை வலியுறுத்தினார்; அதோடு, எல்லாருமே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் சகோதரர்களுக்கு நினைப்பூட்டினார். யெகோவாவை எல்லாருக்கும் ‘தகப்பன்’ என அவர் குறிப்பிட்டார்; “பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவராலேயே உருவாகியிருக்கிறது.”—எபே. 3:5, 6, 14, 15.
4 எபேசியர் 4-ஆம் அதிகாரத்தை நாம் ஆராய்கையில், பின்வரும் கேள்விகளுக்கு பதில்களைப் பார்ப்போம்: ஒற்றுமைக்கு முயற்சி ஏன் அவசியம்? இதற்கு யெகோவா எப்படி உதவுகிறார்? ஒன்றுபட்டிருக்க எப்படிப்பட்ட பண்புகள் நமக்கு உதவும்? இந்தப் படிப்பிலிருந்து நீங்கள் இன்னும் அதிகமாகப் பயனடைய இந்த முழு அதிகாரத்தையும் வாசிப்பது நல்லது.
ஒன்றுபட்டிருக்க ஊக்கமான முயற்சி அவசியம்
5. தேவதூதர்கள் ஏன் ஒற்றுமையுடன் சேவிக்க முடிகிறது, ஆனால் ஒற்றுமையைக் காப்பது நமக்கு ஏன் சவாலாக இருக்கலாம்?
5 ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு ஊக்கமாய் முயற்சி செய்யுங்கள்’ என எபேசிய சகோதரர்களிடம் பவுல் வருந்திக் கேட்டுக்கொண்டார். (எபே. 4:3) இந்த விஷயத்தில் முயற்சி செய்வதன் அவசியத்தைப் புரிந்துக்கொள்ள தேவதூதர்களைப் பற்றிச் சிந்திக்கலாம். பூமியிலுள்ள எந்த இரண்டு உயிரினமும் அச்சில் வார்த்தார்போல் இருக்கவே இருக்காது; ஆகவே, லட்சக்கணக்கான தேவதூதர்கள் ஒவ்வொருவரையும்கூட யெகோவா தனித்தன்மைகளுடன் படைத்திருக்கிறார் என்று நம்மால் சொல்ல முடியும். (தானி. 7:10) இருந்தாலும், அவர்கள் எல்லாரும் யெகோவாவின் சொல் கேட்டு நடந்து, அவருடைய சித்தத்தைச் செய்வதால் அவரை ஒற்றுமையுடன் சேவிக்க முடிகிறது. (சங்கீதம் 103:20, 21-ஐ வாசியுங்கள்.) உண்மையுள்ள தூதர்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்பட்ட இயல்புகள் இருப்பதுபோல, கிறிஸ்தவர்களுக்கு வித்தியாசப்பட்ட இயல்புகள் மட்டுமல்ல பல குறைபாடுகளும் இருக்கின்றன. இதனால், ஒற்றுமையைக் காப்பது இன்னும் சவாலாகிவிடுகிறது.
6. வித்தியாசப்பட்ட குறைபாடுகளை உடைய நாம் ஒவ்வொருவரும் மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து சேவை செய்ய எப்படிப்பட்ட பண்புகள் உதவும்?
6 அபூரண மனிதர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து சேவை செய்கையில் பிரச்சினைகள் தலைதூக்குவது சுலபம். உதாரணமாக, எளிதில் கோபப்படாத ஆனால் எப்போதும் தாமதமாக வருகிற ஒரு சகோதரர், எளிதில் கோபப்படுகிற ஆனால் நேரத்தோடு வருகிற ஒரு சகோதரருடன் சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது என்ன நடக்கலாம்? ஒவ்வொருவரும் மற்றவருடைய நடத்தையைக் குறைச் சொல்வார்களே ஒழிய தங்களுக்கும் இப்படிப்பட்ட குறைபாடுகள் உள்ளதை மறந்துவிடலாம். இப்படிப்பட்ட இரண்டு சகோதரர்கள் எவ்வாறு ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்? பவுல் அடுத்ததாகப் பரிந்துரைக்கும் பண்புகள் அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பாருங்கள். பிறகு, இத்தகைய பண்புகளை வளர்ப்பதால் ஒற்றுமையை எப்படிக் கட்டிக்காக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். “உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், . . . தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்; எப்போதும் மனத்தாழ்மையோடும் சாந்தத்தோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்யுங்கள்” என்று பவுல் எழுதினார்.—எபே. 4:1-3.
7. அபூரணரான மற்ற கிறிஸ்தவர்களோடு ஒற்றுமையாய் இருக்க முயலுவது ஏன் மிக முக்கியம்?
7 அபூரணரான மற்றவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாய் கடவுளுக்குச் சேவை செய்யக் கற்றுக்கொள்வது மிக முக்கியம்; ஏனென்றால், நாம் உண்மைக் கிறிஸ்தவர்களாலான ஒரே உடலாக இருக்கிறோம். “ஒரே நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையைப் பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அதேபோல், ஒரே உடலும் ஒரே சக்தியும் உண்டு; ஒரே எஜமானரும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு; எல்லாருக்கும் ஒரே கடவுளும் தகப்பனும் உண்டு” என பவுல் எழுதினார். (எபே. 4:4-6) கடவுள் பயன்படுத்துகிற சகோதரர்களின் ஒரே கூட்டுறவில்தான் யெகோவாவின் சக்தியும் ஆசீர்வாதங்களும் இருக்கின்றன. சபையில் யாராவது நம்முடைய மனதை நோகடித்தால், நாம் வேறெங்கே செல்ல முடியும்? முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகளை வேறு எங்குமே கேட்க முடியாது.—யோவா. 6:68.
ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் ‘மனிதப் பரிசுகள்’
8. பிரிவினை உண்டாக்கும் மனப்பான்மையிலிருந்து நம்மைப் பாதுகாக்க கிறிஸ்து யாரைப் பயன்படுத்துகிறார்?
8 சபையாரை ஒன்றுசேர்க்க இயேசு “மனிதர்களைப் பரிசுகளாக” அளித்திருக்கிறார்; இதை விளக்க, பண்டைய காலங்களில் படைவீரர்களுக்கு மத்தியிலிருந்த ஒரு பொதுவான பழக்கத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். வெற்றிப்பெற்ற ஒரு படைவீரன், மனைவிக்கு வீட்டு வேலைகளைச் செய்து கொடுப்பதற்காக தான் சிறைபிடித்த ஒருவனை அடிமையாகத் தன் வீட்டிற்குக் கொண்டுவரலாம். (சங். 68:1, 12, 18) அதேபோல, உலகத்தின்மீது வெற்றி பெற்ற இயேசு, மனமார வேலை செய்யும் அநேக அடிமைகளைக் கைப்பற்றினார். (எபேசியர் 4:7, 8-ஐ வாசியுங்கள்.) அப்படிக் கைப்பற்றியவர்களை அவர் எவ்வாறு பயன்படுத்தினார்? “அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும் சபைக்குக் கொடுத்தார்; பரிசுத்தவான்களைச் சரிப்படுத்துவதற்கென்றும், சேவை செய்வதற்கென்றும், கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்கென்றும் அவர்களைக் கொடுத்தார்; நாமெல்லாரும் விசுவாசத்தில் . . . ஒன்றுபடுவதற்காகவும் . . . அவர்களைக் கொடுத்தார்.”—எபே. 4:11-13.
9. (அ) நம் ஒற்றுமையைக் கட்டிக்காக்க ‘மனிதப் பரிசுகள்’ எவ்வாறு உதவுகிறார்கள்? (ஆ) சபையிலுள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையைக் கட்டிக்காக்க ஏன் உதவ வேண்டும்?
9 அன்புள்ள மேய்ப்பர்களாக, இந்த ‘மனிதப் பரிசுகள்’ நம் ஒற்றுமையைக் காப்பதற்கு உதவுகிறார்கள். உதாரணமாக, இரண்டு சகோதரர்கள் ‘ஒருவருக்கொருவர் போட்டி போடுவதை’ சபை மூப்பர் ஒருவர் கவனித்தால், சபையின் ஒற்றுமைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்; ‘சாந்தமாக அப்படிப்பட்டவர்களைச் சரிப்படுத்த முயலலாம்.’ (கலா. 5:26–6:1) போதகர்களாக, இந்த ‘மனிதப் பரிசுகள்’ பைபிள் போதனைகளின் அடிப்படையில் உறுதியான விசுவாசத்தை வளர்க்க நமக்கு உதவுகிறார்கள். இதன்மூலம், ஒற்றுமையை மேம்படுத்தவும் நாம் ஆன்மீக முதிர்ச்சி அடையவும் உதவுகிறார்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “இனி நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாது; மனிதர்களுடைய தந்திரத்தையும் சூழ்ச்சியான ஏமாற்று வழிகளையும் நம்பி, அலைகளினால் அலைக்கழிக்கப்படவோ அவர்களுடைய போதனைகளாகிய பலவித காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படவோ கூடாது.” (எபே. 4:13, 14) நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் மற்ற உறுப்புகளுக்குத் தேவைப்படுகிறவற்றை அளித்து எப்படி உதவுகிறதோ, அப்படியே சபையிலுள்ள ஒவ்வொருவரும் சகோதரர்களுக்கிடையே ஒற்றுமையைக் கட்டிக்காக்க உதவ வேண்டும்.—எபேசியர் 4:15, 16-ஐ வாசியுங்கள்.
நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள்
10. ஒழுக்கங்கெட்ட நடத்தை நம் ஒற்றுமைக்கு எப்படி ஆபத்தை விளைவிக்கலாம்?
10 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஒற்றுமையாய் இருக்க அன்பு காட்டுவது முக்கியம் என எபேசியர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் நான்காம் அதிகாரம் குறிப்பிடுவதை கவனித்தீர்களா? அடுத்து, அன்பு எதை உள்ளடக்குகிறது என அது சொல்கிறது. உதாரணமாக, அன்பின் வழியில் நடப்பதற்கு வேசித்தனத்திலும் வெட்கங்கெட்ட நடத்தையிலும் ஈடுபடக்கூடாது. ‘உலக மக்கள் நடப்பதுபோல் நடக்கக்கூடாது’ என பவுல் தன்னுடைய சகோதரர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த மக்கள் “ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல் . . . வெட்கங்கெட்ட நடத்தைக்குத் தங்களை ஒப்படைத்துவிட்டார்கள்.” (எபே. 4:17-19) நாம் வாழ்கிற இந்த ஒழுக்கங்கெட்ட உலகம் நம் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கிறது. மக்கள் வேசித்தனம் சம்பந்தமாக ஜோக் அடிக்கிறார்கள், அதைப் பற்றி பாடுகிறார்கள், அதைப் பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள், இரகசியமாகவோ வெளிப்படையாகவோ அதில் ஈடுபடுகிறார்கள். சரசமாடுவதும்கூட யெகோவாவிடமிருந்தும் சபையாரிடமிருந்தும் உங்களைப் பிரித்துவிடலாம்; சரசமாடுவது என்பது திருமணம் செய்யும் எண்ணமில்லாமலேயே ஒருவரைக் காதலிப்பது போல் பாவனை செய்வதை அர்த்தப்படுத்துகிறது. இது ஏன் உங்களை பிரித்துவிடலாம்? ஏனென்றால், இது எளிதில் வேசித்தனத்திற்கு வழிவகுக்கும். அதோடு, மணமான ஒருவர் சரசமாடுவது மணத்துணைக்குத் துரோகம் இழைக்க வழிவகுப்பதோடு பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்துவிடும். ஒற்றுமைக்கு உலைவைக்கும் எப்பேர்ப்பட்ட பிரிவினை! “கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் இப்படிக் கற்றுக்கொள்ளவில்லை” என்று பவுல் சரியாகத்தான் எழுதினார்.—எபே. 4:20, 21.
11. என்ன மாற்றத்தைச் செய்யும்படி கிறிஸ்தவர்களை பைபிள் ஊக்குவிக்கிறது?
11 நாம் பிளவு உண்டாக்குகிற சிந்தைகளைக் களைந்து மற்றவர்களோடு ஒத்து வாழ உதவும் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென பவுல் வலியுறுத்தினார். “உங்களுடைய முந்தின நடத்தைக்குரியதும், வஞ்சிக்கிற ஆசைகளால் சீர்கெட்டுவருகிறதுமான பழைய சுபாவத்தைக் களைந்துபோடுங்கள்; உங்களுடைய மனதை உந்துவிக்கிற சக்தியினால் புதுப்பிக்கப்படுங்கள்; கடவுளுடைய சித்தத்தின்படி, உண்மையான நீதிக்கும் பற்றுறுதிக்கும் இசைவாக உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்” என்று அவர் சொன்னார். (எபே. 4:22-24) ‘நம்முடைய மனதை உந்துவிக்கிற சக்தியினால் [நாம்] புதுப்பிக்கப்படுவது’ எப்படி? கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அனுபவமுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டவற்றை நன்றியுணர்வோடு தியானித்தால், ‘கடவுளுடைய சித்தத்தின்படி உருவாக்கப்பட்ட’ புதிய சுபாவத்தை முயற்சி செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
சிறந்த விதத்தில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்
12. உண்மை பேசுவது ஒற்றுமையை எப்படிக் கட்டிக்காக்கிறது, உண்மை பேசுவது ஏன் சிலருக்குக் கடினமாக இருக்கிறது?
12 குடும்பத்திலும் சரி சபையிலும் சரி நாம் எல்லாரும் ஒரே உடலின் உறுப்புகளைப்போல இருப்பதால் ஒருவருக்கொருவர் உண்மை பேசுவது மிகவும் அவசியம். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் கனிவாகவும் பேசுவது மக்களை ஒன்றுசேர்க்கும். (யோவா. 15:15) ஒருவர் தன் சகோதரரிடம் பொய் சொன்னால் என்ன நடக்கும்? தன் சகோதரருக்கு அது தெரியவந்தால், அவர் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். ஆகவே பவுல் ஏன் பின்வருமாறு எழுதினார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்: “நீங்கள் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்; நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோமே.” (எபே. 4:25) ஒருவருக்கு சிறு வயதிலிருந்தே பொய் பேசுவது பழக்கமாக இருந்தால், உண்மை பேச ஆரம்பிப்பதை அவர் கடினமாக உணரலாம். ஆனால், உண்மை பேச அவர் எடுக்கும் முயற்சியை யெகோவா பாராட்டுவதோடு அவருக்கு உதவியும் செய்வார்.
13. பழிப்பேச்சை நீக்கிப்போடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
13 நாம் எப்படிப் பேச வேண்டுமென்பதில் திட்டவட்டமான சில வரம்புகளை வைப்பதன் மூலம் சபையிலும் குடும்பத்திலும் ஒற்றுமையையும் மரியாதையையும் அதிகரிக்க யெகோவா நமக்குக் கற்பிக்கிறார். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம் . . . எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என பைபிள் சொல்கிறது. (எபே. 4:29, 31) மற்றவர்களிடம் புண்படுத்தும் விதத்தில் பேசாமலிருக்க ஒரு வழி, அவர்கள்மீது அதிக மரியாதையை வளர்த்துக்கொள்வதாகும். உதாரணமாக, தன் மனைவியைக் கன்னாபின்னா என்று திட்டும் ஒரு கணவர், குறிப்பாக பெண்களை யெகோவா எவ்வாறு கனப்படுத்துகிறார் என்பதைத் தெரிந்துகொள்கையில் அவள் மீதுள்ள தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள பெரும் முயற்சி எடுக்க வேண்டும். பெண்கள் சிலர் மீதுகூட கடவுள் தம்முடைய சக்தியைப் பொழிந்து கிறிஸ்துவோடு அரசர்களாக ஆட்சி செய்யும் எதிர்பார்ப்பை அவர்களுக்கு அளிக்கிறார். (கலா. 3:28; 1 பே. 3:7) அதேபோல், தன் கணவனிடம் எப்போதும் காட்டுத்தனமாகக் கத்தும் ஒரு மனைவி, இயேசு கோபமூட்டப்பட்டபோது எவ்வாறு தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டார் என்பதைத் தெரிந்துகொள்கையில் தன்னை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.—1 பே. 2:21-23.
14. கோபத்தை வெளிக்காட்டுவது ஏன் ஆபத்தானது?
14 பழிப்பேச்சைப் போன்றதுதான் கட்டுப்படுத்தப்படாத கோபமும்கூட. இதுவும், ஒரே உடலின் உறுப்புகளைப் போல் இருக்கிற நம்மைப் பிரித்துவிடும். இது நெருப்புக்குச் சமமானது. இது எளிதில் கட்டுப்பாட்டை இழந்து, ஆபத்தை விளைவிக்கும். (நீதி. 29:22) தான் கோபங்கொள்வதை நியாயப்படுத்தும் ஒருவர், மற்றவர்களோடு உள்ள பொக்கிஷம் போன்ற பந்தத்திற்குப் பங்கம் ஏற்படாமலிருக்க, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் வன்மத்தை மனதில் வைக்காமல், அதைப் பற்றி திரும்பவும் பேசாமல் மன்னிப்பவர்களாய் இருப்பதற்கு உழைக்க வேண்டும். (சங். 37:8; 103:8, 9; நீதி. 17:9) எபேசிய கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” (எபே. 4:26, 27) ஒருவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், சபையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்ல சண்டையை முடுக்கிவிடவும் பிசாசுக்கு இடமளித்துவிடுவார்.
15. நமக்குச் சொந்தமல்லாத பொருளை எடுப்பதன்மூலம் என்ன விளைவடையலாம்?
15 மற்றவர்களின் உடமைகளுக்கு மதிப்பு கொடுப்பது சபையின் ஒற்றுமைக்குப் பங்களிக்கிறது. “திருடன் இனி திருடாமல்” இருக்கட்டும் என பைபிள் சொல்கிறது. (எபே. 4:28) பொதுவான கருத்தில், யெகோவாவின் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையை வளர்த்திருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவர் தனக்குச் சொந்தமல்லாத பொருளை எடுப்பதன்மூலம் அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்தால், அவர் அந்த இனிய ஒற்றுமையைக் குலைத்துவிடுவார்.
கடவுள்மீதுள்ள அன்பு நம்மைப் பிணைக்கிறது
16. நம் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒருவரையொருவர் பலப்படுத்தும் விதத்தில் எவ்வாறு பேசலாம்?
16 கிறிஸ்தவச் சபையில் எல்லாரும் கடவுள்மீதுள்ள அன்பால் தூண்டப்பட்டு மற்றவர்களிடம் அன்பு காட்டுவதால்தான் அங்கு ஒற்றுமை நிலவுகிறது. யெகோவாவின் கருணைமீது நமக்கு இருக்கும் நன்றியுணர்வு, பின்வரும் ஆலோசனையைக் கடைப்பிடிப்பதற்கு ஊக்கமாய் முயல நம்மைத் தூண்டும்: “கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள் . . . ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.” (எபே. 4:29, 32) நம்மைப் போன்ற அபூரண மக்களை யெகோவா அன்புடன் மன்னிக்கிறார். மற்றவர்களுடைய தப்புத்தவறுகளைப் பார்க்கும்போது நாமும் அவ்வாறே மன்னிக்க வேண்டும், அல்லவா?
17. ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஏன் ஊக்கமாய் முயல வேண்டும்?
17 கடவுளுடைய மக்கள் மத்தியில் நிலவுகிற ஒற்றுமை யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. ஒற்றுமையை வெவ்வேறு வழிகளில் ஏற்படுத்த அவருடைய சக்தி நம்மைத் தூண்டுகிறது. அந்தச் சக்தியின் வழிநடத்துதலுக்கு எதிராக எதையும் செய்ய நாம் விரும்ப மாட்டோம். “கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்” என பவுல் எழுதினார். (எபே. 4:30) ஒற்றுமை என்பது பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒற்றுமையாய் இருப்போருக்கு இது சந்தோஷத்தை அளிக்கிறது, யெகோவாவுக்கு மகிமையையும் சேர்க்கிறது. “ஆகவே, அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் . . . தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.”—எபே. 5:1, 2.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• எப்படிப்பட்ட பண்புகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டிக்காக்கின்றன?
• நம் நடத்தை எவ்வாறு சபையில் ஒற்றுமையை மேம்படுத்துகிறது?
• நம் பேச்சு எவ்வாறு மற்றவர்களோடு சேர்ந்து ஒத்துழைக்க உதவுகிறது?
[பக்கம் 17-ன் படம்]
வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
சரசமாடுவதால் வரும் ஆபத்துகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?