‘வேரூன்றப்பட்டவர்களாக, அஸ்திவாரமிடப்பட்டவர்களாக’ இருக்கிறீர்களா?
இந்தக் காட்சியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? பயங்கரமான புயல்காற்று சுழற்றிச் சுழற்றி வீசுகிறது. பெரிய மரம் ஒன்று இப்படியும் அப்படியுமாகச் சாய்கிறது. பலத்த காற்றின் கோரப் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது. என்றாலும், அது அடியோடு சாய்ந்துவிடாமல் அந்தப் புயலைத் தாக்குப்பிடித்து நிற்கிறது. அதற்குக் காரணம் என்ன? அதன் உறுதியான வேர்கள் நிலத்தில் ஆழமாக ஊடுருவியிருப்பதே. நாமும்கூட அந்த மரத்தைப் போல் இருக்கலாம். புயல்போன்ற பிரச்சினைகள் நம் வாழ்க்கையில் சுழற்றிச் சுழற்றி வீசினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் அவற்றைத் தாக்குப்பிடித்து உறுதியாக நிற்பதற்கு “வேரூன்றப்பட்டவர்களாகவும் அஸ்திவாரமிடப்பட்டவர்களாகவும்” இருக்க வேண்டும். (எபே. 3:14-17) அந்த அஸ்திவாரம் என்ன?
கிறிஸ்தவ சபையின் “அந்த அஸ்திவாரம் இயேசு கிறிஸ்துவே” எனக் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 கொ. 3:11; எபே. 2:20) அந்தச் சபையின் பாகமான நாம், ‘அவரோடு ஒன்றுபட்டவர்களாக நடந்து, அவரில் வேரூன்றப்பட்டவர்களாக, அவர்மீது கட்டப்படுகிறவர்களாக, விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாக’ இருப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். நாம் அப்படி இருந்தால், நம் விசுவாசத்திற்கு எதிராக வருகிற எல்லாத் தாக்குதல்களையும் சமாளித்து உறுதியாக நிற்போம்; ‘வஞ்சனையான வீண் கருத்துகளை’ யாராவது ‘சாமர்த்தியமாகப் பேசி’ நமக்குக் கற்பித்தாலும் சரி வேறு எந்தத் தாக்குதல் வந்தாலும் சரி, அவற்றையெல்லாம் உறுதியாக எதிர்த்துநிற்போம்.—கொலோ. 2:4-8.
“அகலமும் நீளமும் உயரமும் ஆழமும்”
நாம் எப்படி “வேரூன்றப்பட்டவர்களாகவும்” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” ஆக முடியும்? நாம் ஆழமாய் வேரூன்றப்பட்டவர்களாக ஆவதற்கு ஒரு முக்கிய வழி, கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றிப் படிப்பதாகும். சத்தியத்தின் “அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று [நாம்] நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என யெகோவா விரும்புகிறார். (எபே. 3:18) எனவே, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய மேலோட்டமான அறிவு மட்டுமே போதுமென்று நாம் நினைக்கக் கூடாது; அதிலுள்ள “அடிப்படைக் காரியங்களை” மட்டுமே தெரிந்துகொண்டு அத்துடன் திருப்தியடைந்துவிடக் கூடாது. (எபி. 5:12; 6:1) மாறாக, பைபிள் சத்தியங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு நாம் ஒவ்வொருவருமே ஆவலாய் இருக்க வேண்டும்.—நீதி. 2:1-5.
ஆனாலும், எக்கச்சக்கமான அறிவிருந்தால் போதும் சத்தியத்தில் நாம் “வேரூன்றப்பட்டவர்களாகவும் அஸ்திவாரமிடப்பட்டவர்களாகவும்” ஆகிவிடுவோமென நினைத்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால், சாத்தானுக்கும்கூட பைபிளைப் பற்றிய அறிவு இருக்கிறதே! ஆகையால், அறிவைப் பெற்றுக்கொள்வதோடு நாம் வேறொன்றையும் செய்ய வேண்டியிருக்கிறது. ஆம், ‘கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளவும்’ வேண்டியிருக்கிறது. (எபே. 3:19) என்றாலும், யெகோவாவின் மீதும் சத்தியத்தின் மீதும் நமக்குள்ள அன்பின் காரணமாக அவருடைய வார்த்தையைப் படித்தோமென்றால், அதைப் பற்றிய திருத்தமான அறிவு நமக்குக் கிடைக்கும், இதனால் நம் விசுவாசம் பலப்படும்.—கொலோ. 2:2.
உங்களுக்குப் புரிந்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்
பைபிளிலுள்ள சில முக்கியமான சத்தியங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கிறதா என்று ஏன் இப்போதே நீங்கள் சோதித்துப் பார்க்கக்கூடாது? அப்படிச் செய்தீர்களென்றால், தனிப்பட்ட விதத்தில் பைபிளை இன்னும் ஆழமாகப் படிப்பதற்குத் தூண்டப்படுவீர்கள். உதாரணமாக, எபேசியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தின் முதல் பத்து வசனங்களை வாசியுங்கள். (“எபேசியருக்கு” என்ற பெட்டியைப் பாருங்கள்.) பெட்டியிலுள்ள இந்த வசனங்களை வாசித்தபின், ‘சாய்வெழுத்தில் காணப்படும் சொற்றொடர்களின் அர்த்தம் எனக்குப் புரிகிறதா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இப்போது சிந்திக்கலாம்.
“உலகம் உண்டாவதற்கு முன்பே” முன்தீர்மானித்தார்
பவுல் தன் சக வணக்கத்தாருக்கு இவ்வாறு எழுதினார்: “[கடவுள்] நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்முடைய மகன்களாகத் தத்தெடுப்பதற்கு முன்தீர்மானித்தார்.” ஆம், பரிபூரணமான தம் பரலோகக் குடும்பத்தின் பாகமாக ஆவதற்கு மனிதர்களிலிருந்து சிலரைத் தத்தெடுக்க யெகோவா தீர்மானித்தார். தத்தெடுக்கப்பட்ட அந்த மகன்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள். (ரோ. 8:19-23; வெளி. 5:9, 10) யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியை எதிர்த்துச் சாத்தான் ஆரம்பத்தில் சவால்விட்டபோது, மனிதர்கள் குறைபாடுள்ளவர்கள் என அவன் சொல்லாமல் சொன்னான். ஆனாலும், யெகோவா அந்த மனித குடும்பத்திலிருந்தே சிலரைத் தேர்ந்தெடுத்து, எல்லாத் தீமையையும், அந்தத் தீமையின் ஊற்றுமூலமான பிசாசாகிய சாத்தானையும் ஒழித்துக்கட்டத் தீர்மானித்தது எவ்வளவு பொருத்தமானது! என்றாலும், யார் யார் தம்முடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவார்கள் என்பதை யெகோவா முன்கூட்டியே தீர்மானித்துவிடவில்லை. மாறாக, ஒரு தொகுதியினர் பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றே அவர் தீர்மானித்தார்.—வெளி. 14:3, 4.
தன் சக கிறிஸ்தவர்கள் ஒரு தொகுதியாக “இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே” தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள் என பவுல் குறிப்பிட்டபோது, அவர் எந்த ‘உலகத்தை’ அர்த்தப்படுத்தினார்? இந்தப் பூமியையோ மனிதர்களையோ படைப்பதற்கு முன்னாலிருந்த ஏதோவொரு உலகத்தை அவர் அர்த்தப்படுத்தவில்லை. அப்படி அவர் அர்த்தப்படுத்தியிருந்தால், கடவுள் அநியாயமாகச் செயல்பட்டதாய் ஆகியிருக்கும். ஏனென்றால், ஆதாம் ஏவாள் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் தவறுசெய்ய வேண்டுமென அவர் தீர்மானித்துவிட்டு, அவர்கள் தவறுசெய்த பின்பு அவர்களைத் தண்டிப்பது நியாயமாக இருக்காது, அல்லவா? அப்படியானால், ஆதாம் ஏவாள் சாத்தானோடு சேர்ந்து கலகம் செய்த பின்பு ஏற்பட்ட சூழ்நிலையைச் சரிசெய்ய யெகோவா எப்போது தீர்மானித்தார்? அவர்கள் கலகம் செய்த பின்பு, ஆனால், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு! அப்படியானால், ஆதாம் ஏவாளின் பிள்ளைகளையே, அதாவது மீட்பைப் பெறத் தகுதியுள்ள அபூரண மனிதகுலத்தையே, “உலகம்” என்று பவுல் அர்த்தப்படுத்தினார்.
“அவருடைய அளவற்ற கருணையின் ஐசுவரியத்தின்படியே”
எபேசியருக்கான கடிதத்தின் ஆரம்ப வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் ‘கடவுளுடைய அளவற்ற கருணையின் ஐசுவரியத்தின்படியே’ செய்யப்பட்டதாக பவுல் ஏன் சொன்னார்? பாவம் செய்த மனிதகுலத்தை மீட்க வேண்டுமென்ற கட்டாயம் யெகோவாவுக்கு இல்லை என்ற குறிப்பை வலியுறுத்துவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார்.
சொந்த முயற்சியால் நம்மில் யாருமே மீட்பைப் பெற முடியாது, அதைப் பெறுவதற்கான தகுதியும் நம்மில் யாருக்குமே கிடையாது. என்றாலும், யெகோவா நம்மீதுள்ள ஆழ்ந்த அன்பினால் நம்மை மீட்பதற்கான விசேஷ ஏற்பாடுகளைச் செய்தார். நம்முடைய அபூரணத்தன்மையையும் பாவத்தன்மையையும் வைத்துப் பார்க்கும்போது, பவுல் சொன்னது போலவே, நம்முடைய மீட்பு கடவுளுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டாகத்தான் இருக்கிறது.
கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியம்
சாத்தானால் ஏற்பட்ட சீர்கேடுகளைத் தாம் எப்படிச் சரிசெய்யப்போகிறார் என்று கடவுள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தவில்லை. அது ஒரு ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்தது. (எபே. 3:4, 5) பிற்பாடு, மனிதகுலத்திற்கும் பூமிக்குமான தம்முடைய ஆரம்ப நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவார் என்ற விவரங்களைக் கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் யெகோவா வெளிப்படுத்தினார். பவுல் விளக்கியபடி, ‘குறித்த காலங்கள் நிறைவேறியபோது’ கடவுள் “ஒரு நிர்வாகத்தை” அமல்படுத்தினார்; அது, புத்திக்கூர்மையுள்ள எல்லாப் படைப்புகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு காரியங்களை நிர்வகிக்கிற ஓர் ஏற்பாடாகும்.
அவ்வாறு ஒன்றிணைப்பது பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று ஆரம்பமானது; கிறிஸ்துவோடு பரலோகத்திலே ஆட்சி செய்யப்போகிறவர்களை யெகோவா அச்சமயத்தில் கூட்டிச்சேர்க்க ஆரம்பித்தது அதன் முதல் கட்டமாகும். (அப். 1:13-15; 2:1-4) கிறிஸ்துவின் மேசியானிய அரசாங்கத்தின்கீழ் பூஞ்சோலை பூமியில் வாழப்போகிறவர்களைக் கூட்டிச்சேர்ப்பது அதன் இரண்டாம் கட்டமாகும். (வெளி. 7:14-17; 21:1-5) மேசியானிய அரசாங்கம் 1914-ல்தான் ஸ்தாபிக்கப்பட்டது என்பதால், “நிர்வாகம்” என்ற வார்த்தை அந்த அரசாங்கத்தைக் குறிக்காது. மாறாக, எல்லாப் படைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டுமென்ற தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் காரியங்களைக் கடவுள் நிர்வகிப்பதையே, அதாவது கையாளுவதையே, அது குறிக்கிறது.
‘புரிந்துகொள்ளும் திறனில் முதிர்ச்சி அடையுங்கள்’
சத்தியத்தின் “அகலமும் நீளமும் உயரமும் ஆழமும்” என்னவென்று நன்றாகப் புரிந்துகொள்ள தனிப்பட்ட படிப்புப் பழக்கம் உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இந்த உலகத்தின் அவசர கதியான வாழ்க்கைப் பாணியைச் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நம்முடைய நல்ல படிப்புப் பழக்கங்களைப் படிப்படியாக, ஏன் ஒரேயடியாக, விட்டுவிடச் செய்கிறான் என்பதிலும் சந்தேகமில்லை. அவன் அப்படிச் செய்வதற்கு நீங்கள் இடமளித்துவிடாதீர்கள். ‘புரிந்துகொள்ளும் திறனில் முதிர்ச்சி அடைவதற்காக’ கடவுள் உங்களுக்குத் தந்துள்ள “அறிவுத்திறனை” பயன்படுத்துங்கள். (1 கொ. 14:20; 1 யோ. 5:20) நீங்கள் நம்புகிற விஷயங்களை ஏன் நம்புகிறீர்கள் என்பதை நன்கு புரிந்திருங்கள்; அதோடு, ‘உங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்கு எப்போதும் பதில் சொல்ல’ தயாராயிருங்கள்.—1 பே. 3:15.
பவுல் எழுதிய கடிதம் எபேசு சபையில் முதன்முதலாக வாசிக்கப்பட்டபோது நீங்களும் அங்கு இருந்ததுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவை’ அதிகமதிகமாய்ப் பெற்றுக்கொள்ள அவருடைய கடிதம் உங்களைத் தூண்டியிருக்கும், அல்லவா? (எபே. 4:13, 14) ஆம், நிச்சயம் தூண்டியிருக்கும்! எனவே, கடவுளுடைய தூண்டுதலால் பவுல் எழுதிய வார்த்தைகள் இன்றும்கூட அவ்வாறே உங்களைத் தூண்டட்டும். யெகோவாமீது ஆழ்ந்த அன்பும், அவருடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவும் கிறிஸ்துவில் நீங்கள் ‘வேரூன்றப்பட்டவர்களாக, அஸ்திவாரமிடப்பட்டவர்களாக’ இருக்க உதவும். அப்படி இருந்தீர்களென்றால், இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படுவதற்குமுன் சாத்தான் கொண்டுவரப்போகிற புயல்போன்ற பிரச்சினைகளைச் சமாளித்து உறுதியாக நிற்பீர்கள்.—சங். 1:1-3; எரே. 17:7, 8.
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
“எபேசியருக்கு”
‘நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக; கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்குத் தம்முடைய சக்தியின் மூலம் அவர் எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்து பரலோகத்தில் ஆசீர்வதித்திருக்கிறார்; கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்குமுன் அன்புள்ளவர்களாகவும், பரிசுத்தமானவர்களாகவும், களங்கமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார். அவரது பிரியத்திற்கும் சித்தத்திற்கும் இசைவாக, அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்முடைய மகன்களாகத் தத்தெடுப்பதற்கு முன்தீர்மானித்தார்; தமது அன்பு மகன் மூலம் நமக்கு அருளிய அளவற்ற கருணையின் மகிமையை முன்னிட்டு தமக்குப் புகழ் சேரும்படி அப்படிச் செய்தார். அவருடைய அளவற்ற கருணையின் ஐசுவரியத்தின்படியே, அந்த அன்பு மகன் தமது இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்ததால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது; ஆம், நம்முடைய மீறுதல்களுக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கிறது. எல்லா ஞானத்தோடும் புத்தியோடும்கூட இந்த அளவற்ற கருணையையும் அவர் எங்களுக்கு அபரிமிதமாக வழங்கி, தமது சித்தத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியத்தைத் தெரியப்படுத்தினார்; இந்த ரகசியம், ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற அவரது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் இசைவானது. குறித்த காலங்கள் நிறைவேறும்போது அந்த நிர்வாகம் செயல்பட வேண்டுமென்று அவர் நோக்கம் கொண்டார்; அதாவது பரலோகத்தில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் மீண்டும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டுமென்று நோக்கம் கொண்டார்; அதன்படியே, கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்த்தார்.’—எபே. 1:3-10.